நீராட்டறையில் பிருதை நீராடிக்கொண்டிருக்கையிலேயே அரசி தேவவதி வந்து அந்தப்புரத்து முகப்பறையில் காத்திருந்தாள். பிருதை சேடியரால் வெந்நீராட்டப்பட்டு அகிற்புகையிட்டு கூந்தலை உலர்த்தி கொண்டையிட்டு இளஞ்செந்நிறப்பட்டு உடுத்தி கழுத்தில் செம்மணியாரமும் காதுகளில் செம்மணித்துளிக்குழைகளும் செவ்வண்ணக் கற்களால் ஆன தலைச்சரமும் அணிந்து வருவது வரை அவள் அங்கேயே கைகளால் தன் மேலாடையைச் சுழற்றியபடி அமர்ந்திருந்தாள்.
பிருதை உள்ளே வருவதற்குள்ளேயே தேவவதி காத்திருப்பதை அறிந்திருந்தாள். நிமிர்ந்த தலையுடன் பிருதை அறைக்குள் நுழைந்தபோது தேவவதி எழுந்து நின்றுவிட்டாள். ஒருகணம் தன் மார்பை நோக்கிச்சரிந்த அவள் பார்வையை பிருதை கண்டாள். தேவவதியின் உதடுகள் ஒரு சொல்லுக்காகப் பிரிந்த மெல்லிய ஒலியைக்கூட கேட்கமுடியுமெனத் தோன்றியது. அக்கணம் வரை இல்லாதிருந்த எடையை தன் எண்ணங்கள் மேல் பிருதை உணர்ந்தாள். ஆனால் அரைக்கணத்தில் அதை விலக்கி திடமான விழிகளுடன் அரசியை நோக்கினாள்.
பிருதையின் கண்களைச் சந்தித்ததும் அரசி முகத்தை செயற்கையாக மலரச்செய்தபடி “உன் வருகைக்காக அரண்மனையே காத்திருக்கிறது” என்றாள். “ஆம், நான் அறிந்தேன்” என்று பிருதை சொன்னாள். அவள் அடுத்து வசுதேவனைப்பற்றி வினவப்போகிறாள் என்று நினைத்தாள். தேவவதி “உன் தமையன்…” எனத் தொடங்கியதுமே இயல்பாக “அவர் நாளை வருவார். அங்கிருந்து நான் சற்று விரைவாகப் புறப்படும்படி ஆயிற்று” என்று பிருதை சொன்னாள்.
அத்துடன் தேவவதியின் வினாக்கள் முடிந்தன என்பது அவளுடைய திணறலில் இருந்து தெரிந்தது. பிருதை அவளுடைய கைகளில் கசங்கிய மேலாடைநுனியை நோக்கினாள். அவள் மேலாடையை கீழே விட்டாள். அச்செயல்வழியாகவே அவள் பிருதைமுன் எளியவளாக ஆனதை அறிந்து சினம் கொண்டாலும் தேவவதியால் மேலே ஏதும் சிந்திக்கமுடியவில்லை.
“நான் விரைவாக அரசரை சந்திக்கவேண்டும் அன்னையே” என்றாள் பிருதை. விரிந்த புன்னகையுடன் “நான் தங்கள் அந்தப்புரத்துக்கு வந்து சந்திக்கிறேன்… தங்களிடம் பேசவேண்டியவை ஏராளமாகவே உள்ளன” என்றாள். அரசியும் புன்னகைசெய்தாள். அந்தப்புன்னகை பிருதையை சக்ரவர்த்தினியாகவும் தன்னை எளிய யாதவப்பெண்ணாகவும் ஆக்கும் விந்தையை எண்ணியபடி தேவவதி பெருமூச்சுவிட்டாள்.
முந்தையநாள் மழைபெய்த ஈரம் விரிந்த அரண்மனைமுற்றத்தில் ரதசக்கரத்தடங்கள் சுழன்று சுழன்று ஒன்றையொன்று வெட்டிக்கிடந்தன. தெற்கு வானில் கருமேகங்கள் ஒன்றை ஒன்று முட்டி மேலெழும்பிக்கொண்டிருக்க மழைக்காலத்து பசுமையின் ஒளியுடன் மரங்களின் இலைகள் காற்றிலாடின. அரண்மனையைச் சுற்றி ஒடிய நீர்ப்பாதைகளுக்குள் தவளைகளின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது.
மந்திரசாலையில் மழைக்கால இருள் நிறைந்திருக்க நெய்விளக்குகள் எரிந்தன. செம்பட்டு விரித்த பீடத்தில் தன் கனத்த உடல்மேல் வெண்சால்வையைப் போர்த்தியபடி குந்திபோஜன் அவளுக்காகக் காத்திருந்தார். சந்திரசன்மரும் ரிஷபரும் அருகே இருந்தனர். அவர்கள் அவருக்கு ஓலைகளை வாசித்துக்காட்டிக்கொண்டிருந்தனர். அவர் அவற்றை கருத்தூன்றாமல் கேட்டுக்கொண்டிருந்தார். அவள் காலடி கேட்டு கண்களைத் திருப்பினார்.
பிருதை உள்ளே நுழைந்து தலைவணங்கியதும் அத்தனை விழிகளும் தன் உடலையே பார்க்கின்றன என உடல்வழியாகவே பிருதை உணர்ந்தாள். குந்திபோஜன் அவளை நோக்கி புன்னகைத்தபடி முகமன்களைச் சொன்னபோது அவள் மற்ற இருவரின் நோக்குகளையே தன் உடலில் உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் பீடத்தில் அமர்ந்துகொண்டதும் சந்திரசன்மர் “இளவரசி களைத்திருப்பீர்கள்… நீண்ட பயணம். இன்னல்கள்கொண்ட பயணம்” என்றார். பிருதை இருக்கட்டும் என கையை அசைத்தபின் குந்திபோஜனைப்பார்த்தாள்.
“மகளே, நீ அனைத்தையும் அறிந்திருப்பாய் அல்லவா?” என்றார் குந்திபோஜன். “அஸ்தினபுரியில் இருந்து தூது வந்தது. பலபத்ரர் என்னும் அவர்களின் அமைச்சரே நேரில் வந்தார். அதுவே நமக்கு பெரும் மதிப்பு. அஸ்தினபுரியின் மருமகளாக உன்னை அனுப்பமுடியுமா என்று கேட்டார். அக்கணமே அது என் குலத்துக்கு பீஷ்மபிதாமகர் அளிக்கும் வாழ்த்து என்று சொல்லிவிட்டேன். இன்னொரு எண்ணமே என் நெஞ்சில் எழவில்லை.”
பிருதை பேசாமல் தலையசைத்தாள். “ஆனால் நம் குடியில் பெண்களின் விருப்பமே முதன்மையானது என்று கொள்ளப்படுகிறது. இந்த ஒருநாளுக்குள் எனக்கு வேறு ஐயங்கள் வந்தன. ஆறு மாதங்களுக்கும் மேலாக நீ இங்கே இல்லை. நீ உன் தமையனுடன் மதுவனத்தில் இருப்பதாக எண்ணியிருந்தோம். அங்கும் இல்லை என்ற செய்தி வந்தபோது சற்று அகமயக்கம் ஏற்பட்டது. நீ அங்கே உனக்குரிய ஆண்மகனைக் கண்டிருக்கலாமோ என்று…” என்றார் குந்திபோஜன்.
பிருதை “அரசகுலத்துப்பெண்ணின் மணம் என்பது ஓர் அரசியல்நிகழ்வே என நன்றாகவே அறிவேன் தந்தையே” என்றாள். குந்திபோஜன் முகம் மலர்ந்து “ஆம், அதை நான் நன்கறிவேன்… ஆனாலும் எனக்கு சற்று ஐயமிருந்தது. அஸ்தினபுரி நம்மிடம் எதை எதிர்நோக்குகிறது என்று அறியேன். எதுவாக இருப்பினும் அது நமக்கு உகந்ததே. அஸ்தினபுரி மாவீரர் பீஷ்மரால் காக்கப்படும் பேரரசு… நமக்கு அதைவிடப்பாதுகாப்பு வேறென்ன உண்டு. யானைமீதேறி வனம்புகுவதல்லவா அது?” என்றார்.
“ஆம், ஆனால் நாம் யானைசெல்லும் வழியில்தான் செல்லமுடியும்” என்று பிருதை புன்னகையுடன் சொன்னாள். “யானை எங்கும் குனிந்துகொள்ளாது. நாம்தான் வழியெங்கும் வளைந்து நெளியவேண்டும்” என்றாள். “செய்வோமே… ஒருதலைமுறைக்காலம் அப்படிச் செல்வோம்… நம்முடைய அரசு மார்த்திகாவதியில் வேரூன்றட்டும். மூன்று பெரும் யாதவர்குலங்களையும் ஒன்றாக்குவோம். அதன்பின் நம் வழித்தோன்றல்கள் தங்கள் வழிகளைக் கண்டடையட்டும்” என்று குந்திபோஜன் சொன்னார்.
பிருதை மெல்ல தன் உடலை அசைத்தாள். அவள் புதிய ஒன்றுக்குச் செல்லவிருக்கிறாள் என்பதற்கான குறி அது என்றுணர்ந்த குந்திபோஜன் கூர்ந்து முன்னால் சரிந்து தன் கைகளை கன்னங்களில் வைத்துக்கொண்டார். “நம்மிடம் அஸ்தினபுரியின் மணத்தூது வந்திருப்பதை மதுராபுரியின் மன்னர் அறிவாரா?” என்றாள். “மதுராபுரியில் இருந்து கிளம்புவதற்கு முன்பு வரை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்…” என்று அதற்கு ரிஷபர் பதில் சொன்னார்.
“அப்படியென்றால் ஏன் என்னைச் சிறையெடுக்க அவர் முயன்றார்?” என்றாள் பிருதை. அச்செய்தியை அறிந்திருந்தாலும் அந்தக்கோணத்தில் சிந்திக்காமல் இருந்த குந்திபோஜன் தன் முகவாயை கையால் வருடியபடி அமைச்சர்களைப் பார்த்தார். “அவருக்குத் தெரியும்” என்று பிருதை சொன்னாள். “என் தமையனிடம் அவர் என்னை மணம்கொள்வதைப்பற்றி பேசினார். அப்போது அவருக்கு அஸ்தினபுரியின் தூதைப்பற்றித் தெரியாது. ஆனால் அங்கிருந்து என் தமையன் கிளம்பியதுமே அவருக்கு உளவுசென்றிருக்கிறது. நான் மார்த்திகாவதிக்குத் திரும்பினால் என்னை அடையமுடியாதென்று அவர் எண்ணியிருக்கலாம்.”
“ஆம், அதுதான் நடந்திருக்கிறது” என்றார் ரிஷபர். “இங்கே பலபத்ரர் வந்தது எளிதில் மறைக்கக்கூடிய செய்தி அல்ல. இங்கே மதுராபுரிக்கு ஒற்றர்கள் இருப்பதும் இயல்பானதே.” பிருதை கண்களைச் சரித்தபடி சிலகணங்கள் சிந்தனைசெய்தபின் “அரசே, மதுராபுரியின் இளவரசரின் எண்ணம் மிகவெளிப்படையானது. இந்த அரசையும் நம் குலத்தையும் உண்டு அனலாக்கிக் கொள்ளும் பசி கொண்டிருக்கிறார் கம்சர். அவரை நாம் வெல்வதுதான் இத்தருணத்தில் நமக்கிருக்கும் முதன்மையான அறைகூவல்.”
“அஸ்தினபுரியுடன் நாம் மணவுறவு கொள்ளப்போகும் செய்தியே அவனை அஞ்சச்செய்யுமென நினைக்கிறேன்” என்றார் குந்திபோஜன். “அப்படியென்றால் என்னைச் சிறையெடுக்க அவர் முனைந்திருக்கமாட்டார். அஸ்தினபுரியின் சினத்தை எதிர்கொள்ள அவர் துணிவுகொண்டிருக்கிறார். அது மகதம் அளிக்கும் துணிவாக இருக்கலாம்…” என்றாள் பிருதை. “அரசே, இன்றுமாலைக்குள் நம்மை நோக்கி மதுராபுரியின் படைகள் வரக்கூடும்.”
குந்திபோஜன் திகைத்து இரு அமைச்சர்களையும் பார்த்தார். “அதெப்படி?” என ரிஷபர் தொடங்கியதும் பிருதை “அவ்வகையான எந்தக் கேள்விகளையும் கம்சரைப்பற்றி எழுப்பிக்கொள்ள முடியாது. அவருக்கு அமைச்சர்கள் இருக்கிறார்களா, அவ்வமைச்சர்கள் சொல்வதை அவர் கேட்கிறாரா என்றுகூடத் தெரியவில்லை… நான் அவரிடமிருந்து தப்பிவந்தது அவருக்கு பெரும் அவமதிப்பாகவே இருக்கும். அஸ்தினபுரியுடன் நாம் உறவுகொள்வதற்குள் நம்மைத் தாக்கிவெல்வது குறித்தே அவரது எண்ணம் எழும்” என்றாள்.
அவளே வழிமுறையையும் சொல்லட்டும் என அவர்கள் காத்திருந்தனர். பிருதை “ரிஷபரே இப்போது மதுராபுரியில் படைநகர்வு நிகழ்கிறதா என உங்கள் ஒற்றர்கள் மூலம் நாமறிந்தாகவேண்டும்…” என்றாள். “உடனே அறிவதென்றால்…” என ரிஷபர் இழுத்தார். “படைநகர்வை வெளிப்படையாகச் செய்யமாட்டார்கள். நம் ஒற்றர்கள் அங்கிருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்தியனுப்பி…” என அவர் சொல்லத்தொடங்க பிருதை கையமர்த்தி “யமுனையில் விரைவாகச் செல்லும் படகில் இருவரை அனுப்பி இரண்டு செய்திகளைக் கண்டு உறுதிசெய்யும்படிச் சொல்லுங்கள்” என்றாள்.
ரிஷபர் தலையசைத்தார். “படைநீக்கம் இருக்குமென்றால் மதுராபுரி தன் கலத்துறையை மேலும் அதிகப் படைகளை அனுப்பி வலிமைப்படுத்தும். உத்தரமதுராபுரிக்கும் மதுராபுரிக்கும் நடுவே உள்ள பகுதியில் ஒரு புதியபடைப்பிரிவைக் கொண்டுவந்து நிறுத்தும்” என்று பிருதை சொன்னாள். “அந்த எச்சரிக்கை நடவடிக்கைகளே கம்சரின் நோக்கத்தை அறிவித்துவிடும்.” சந்திரசன்மர் எழுந்து “நான் இன்னும் இரண்டே நாழிகையில் உங்களுக்குச் செய்தியை அறிவிக்கிறேன் இளவரசி” என்றார்.
பிருதை “அரசே, உடனே நீங்கள் எனக்கு சுயம்வரம் நிகழவிருப்பதை அறிவியுங்கள். செய்தி விரைவிலேயே மதுராபுரிக்கும் செல்லட்டும்” என்றாள். சற்று தயக்கத்துடன் உடலை அசைத்தபின் “இளவரசி, விதுரர் சூதர்குலத்தவர். அவர்கள் நம் சுயம்வரத்தில் கலந்துகொள்வதை மூதாதையர் ஏற்கமாட்டார்கள்” என்றார் ரிஷபர். “யாதவர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் மட்டுமே அனுமதி இருக்கும்.”
“ஆம், அதை நாமறிவதுபோலவே கம்சரும் அறிவார். ஆகவே அவர் சுயம்வரத்தில் கலந்துகொண்டு என்னை அடைவதைப்பற்றி எண்ணுவார். அவர் படைகொண்டுவருவதைத் தடுக்க வேறு வழியில்லை” என்றாள் பிருதை. “ஆனால்…” என குந்திபோஜன் தொடங்கியதுமே “சுயம்வரத்தில் விதுரர் கலந்துகொள்ளமுடியாதென்பது உண்மை. ஆனால் பீஷ்மர் கலந்துகொள்ளலாம். அவர் ஷத்ரியர். அவர் தன் வில்வல்லமையால் என்னைக் கவர்ந்துகொண்டு சென்று தன் தம்பியின் மைந்தனுக்கு மணமுடிக்கட்டும். அதை குலமூதாதையர் மறுக்கமுடியாது” என்றாள் பிருதை. “ஆம், அது முறைதான்” என்று ரிஷபர் சொன்னார்.
“சுயம்வரத்துக்கு பதினெட்டு யாதவர்குலங்களின் மூதாதையரும் ஒப்புதல் அளித்தாகவேண்டும். அனைத்து யாதவர்குடிகளுக்கும் ஷத்ரிய அரசுகளுக்கும் ஓலை செல்லவேண்டும்” என்றார் ரிஷபர். பிருதை “நாம் அஸ்தினபுரியின் மணவுறவை ஏற்றபின்னரும் சுயம்வரம் ஏன் என்பதை அவர்களுக்கு விளக்கியாகவேண்டும் அதற்கு தாங்களே நேரில்செல்வதே முறையாக இருக்கும்…” என்றாள். ரிஷபர் “ஆணை இளவரசி” என்றார்.
சபைவிட்டெழும்போது குந்திபோஜன் மீண்டும் எதையோ வினவப்போகும் முகத்துடன் அவளை நோக்கினார். அவளுடைய நேர்கொண்ட பார்வையைக் கண்டபின் பார்வையைத் திருப்பிக்கொண்டார். பிருதை நடந்தபடி “தமையனார் மதுராபுரியில் எந்நிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது புறாக்கள் ஏதும் இன்னமும் இடைமறிக்கப்பட்டிருக்காதென்றே எண்ணுகிறேன்…” என்றாள். “உன் உள்ளம் எனக்கு விளங்குகிறது பிருதை. ஆனால் மதுராபுரியின் இளவரசன் காட்டெருமைக்கு நிகரானவன் என்கிறார்கள். அவனுடைய சினத்துடன் நீ விளையாடுகிறாய்” என்றார். பிருதை புன்னகைசெய்தாள்.
பிருதை தன் அறைக்குச்சென்று புறாக்கள் செய்திகொண்டு வந்துள்ளனவா என்று பார்த்தாள். கூண்டில் புறா ஏதும் இல்லை. அவள் சாளரம் வழியாக மழைகனத்து நின்றிருந்த சாம்பல்நிற வானத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். மேகங்கள் மெதுவாக நகர்ந்து ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டன. வெளியே பரவியிருந்த வெளிச்சம் அடங்கிக்கொண்டே சென்றது. சற்று நேரத்தில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத்தொடங்கியது.
மழைக்குள்ளேயே வெண்புறா பறந்துவந்து கூண்டில் அமர்ந்துகொண்டு சிறகுகளை கலைத்து கழுத்தைச் சிலிர்த்து ஈரத்தை உதறியது. அவள் ஓடிச்சென்று அதைப்பற்றி அதன் உடலில் இருந்த ஓலையை எடுத்துப்பார்த்தாள். எங்கும் குழந்தை என எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்றும், கம்சருக்குத்தெரியாமல் தேடவேண்டியிருப்பதனால் தனிப்பட்ட ஒற்றர்களை மட்டுமே அதற்காக அனுப்பியிருப்பதாகவும் வசுதேவன் எழுதியிருந்தான். அவள் பெருமூச்சுடன் சென்று தன் மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள்.
சற்றுநேரத்திலேயே அவளைக்காண சந்திரசன்மர் வந்திருப்பதாக சேடி வந்து சொன்னாள். அவள் முகப்பறைக்கு வந்ததும் சந்திரசன்மர் பரபரப்புடன் எழுந்து “தாங்கள் உய்த்துணர்ந்ததே சரி இளவரசி. கம்சன் படைநீக்கம் செய்கிறானென்பது உறுதி. எல்லைகள் அனைத்திலும் காவல் உறுதியாக்கப்பட்டுள்ளது” என்றார். பிருதை தலையசைத்தாள். “நாம் நம் படைகளை யமுனைக்கரைமுழுக்க நிறுத்தும்படிச் சொல்லிவிட்டேன்.”
“தேவையில்லை” என்றாள் பிருதை. “நாம் அவரது படைநீக்கத்தை அறிந்துவிட்டோமென அவர் உணரலாகாது. இங்கே சுயம்வரம் ஒன்று நிகழவிருக்கிறது. அதற்கான அனைத்து விழவுக்களியாட்டங்களும் நிகழட்டும். அரண்மனை முகப்பில் விழவுக்கொடி ஏறட்டும். மங்கலத் தூதுவர் எல்லா நாடுகளுக்கும் முறைப்படி கிளம்பட்டும்!” சந்திரசேனர் அவளுடைய அகம் நிகழும் வழிகளை அறியாதவராக சிலகணங்கள் நோக்கிவிட்டு பின்பு “அவ்வண்ணமே” என்று தலைவணங்கினார்.
சிறிது நேரத்திலேயே அரண்மனையின் முகப்பில் முரசுமேடையில் இருந்த விழவுமுரசு இடியோசைபோல ஒலிக்கத்தொடங்கியது. மார்த்திகாவதியே அதைக்கேட்டு ஓசையடங்கி அமைதிகொள்வதை தன் அந்தப்புரத்தில் இருந்தபடி பிருதை அறிந்தாள். சற்றுநேரத்தில் முரசொலி மட்டுமே ஒலித்தது. ஆங்காங்கே கோல்காரர்கள் அரச அறிவிப்பைக் கூவுவது மெல்லிய ஓசைகளாகக் கேட்டது. சிறிது நேரத்தில் மார்த்திகாவதி நகரமே சுழற்புயல் தாக்கியதுபோல ஓசையிடத் தொடங்கியது.
இளமழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தாலும் மார்த்திகாவதியின் விழவுக்களியாட்டம் கூடியபடியே வந்தது. மாலையானதும் மழையோசைக்கு நிகராக தெருக்களில் மக்களின் ஓசைகளும் எழுந்தன. பிருதை உப்பரிகைக்குச் சென்று பார்த்தாள். தொலைவில் நகரத்துச் சாலைகளிலெல்லாம் மக்கள் தென்பட்டனர். பனையோலை குடைமறைகளும் தலைக்குடைகளும் அணிந்தபடி கூச்சலிட்டு பேசிக்கொண்டு முட்டிமோதிச் சென்றனர். பெரியகுடைகளுக்குக் கீழே வணிகர்கள் கடை விரித்திருந்தனர்.
மக்கள் கொண்டாட விரும்புகிறார்கள் என பிருதை நினைத்துக்கொண்டாள். அவர்களின் நிகழ்வுகளற்ற வாழ்க்கையில் விழாக்கள் மட்டுமே பொருளுள்ளவையாகின்றன. ஆனால் மக்களில் ஒருவராக தன்னை உணராதவரை விழாவின் இன்பம் இல்லை. அரசகுலத்தவர்கள் அறியாத கொண்டாட்டம் அது. வெற்றிதோல்விகள் இல்லாத வாழ்க்கையின் இன்பத்தை எப்போதைக்குமாக இழந்துவிட்டதாக அவளுக்குத் தோன்றியது.
அந்தியில் அனகை வந்துசேர்ந்தாள். உத்தரமதுராபுரியில் இருந்து அவள் யமுனைவழியாக சிறு படகில் தானே துடுப்பிட்டு வந்திருந்தாள். மழையில் அவள் உடல் நனைந்து உடைகள் ஒட்டியிருந்தன. நடுங்கியபடி அவள் வந்து நின்றதும் பிருதை “உடை மாற்றிவா” என்று சொன்னாள். “ஆணை இளவரசி” என்றாள் அனகை. பிருதை தன் மஞ்சத்தில் படுத்தபடி ஓலை ஒன்றை எழுதத் தொடங்கினாள்.
உடைமாற்றி சூடான பானம் அருந்தி அனகை திரும்பிவந்தாள். மஞ்சத்தில் படுத்திருந்த பிருதை எழுந்து அமர்ந்தாள். “நீ உடனே மதுராபுரிக்குச் செல்லவேண்டும். என் முத்திரை மோதிரத்தை அளிக்கிறேன்” என்றாள். அனகை தலை தாழ்த்தினாள். “கம்சரை நீ நேரில் சந்திக்கவேண்டும். அவரிடம் என்னுடைய தூதைச் சொல்” என்றபடி ஓலையை நீட்டினாள். “அவர் சுயம்வரத்தில் பங்குகொள்ளவேண்டுமென நான் விழைகிறேன் என்று சொல்!”
சிறுமணியில் தெரியும் நிழலாட்டம் போல அனகையின் விழிகளில் மெல்லிய அசைவு ஒன்று உருவாகி மறைந்தது. “என்னிடம் அஸ்தினபுரியின் மணத்தூது என்றுதான் சொல்லப்பட்டது. நான் மதுராபுரியின் படைகளிடமிருந்து தப்பி வந்தது அதை எண்ணித்தான். சூதனான அமைச்சனுக்கு மனைவியாவேன் என்று இங்குவந்தபின்னரே அறிந்தேன்” என்றாள் பிருதை. அவள் சொல்வதை அனகை முழுமையாகவே புரிந்துகொண்டாள். அவள் விழிகள் அசைவற்றிருந்தன.
“நீ இன்றே கிளம்பலாம். இன்றிரவே மதுராபுரியில் உன் தூது சென்று சேருமெனில் நன்று” என்று பிருதை சொன்னாள். “ஆணை” என்று அனகை தலைதாழ்த்தினாள். பிருதை அவள் போகலாமென கையை அசைத்துவிட்டு மஞ்சத்தில் மீண்டும் படுத்துக்கொண்டாள். அனகை தலைவணங்கி வெளியேறினாள். வெளியே மழை பேரோசையுடன் வந்து மாளிகையை அறைந்து மூடிக்கொண்டது.
மழையின் ஓசை அந்தப்புரத்தின் அறைகளிலெல்லாம் நிறைந்திருந்தது. மரச்சுவர்களிலும் மரவுரித்திரைகளிலும் நீர்த்துருவல்கள் படர்ந்திருந்தன. வெறிகொண்ட நாயின் குரைப்பு போல மெல்லத் தணிந்து உறுமலாகியும் நினைத்துக்கொண்டு மீண்டும் எழுந்தும் மழை ஒலித்துக்கொண்டே இருந்தது. சேடி வந்து இரவுணவு பற்றிக் கேட்டாள். பழங்களும் பாலும் மட்டும் கொண்டுவரச்சொல்லி உண்டுவிட்டு மஞ்சத்தில் படுத்துக்கொண்டாள். சேடி சாளரங்களை மூடப்போனபோது தேவையில்லை என்று கையை ஆட்டி தடுத்து அவளை விலக்கினாள்.
மழை மெல்ல ஓய்ந்து வானம் மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. பின்பு பலநூறு கைகளின் ஒழுங்கில்லாத தாளமாக மழைத்துளிகள் சொட்டும் ஒலி கேட்கத்தொடங்கியது. சுழன்றடித்த காற்று இலைகளில் எஞ்சிய மழைத்துளிகளை விசிறி முடித்தபின்னர் கூரைத்துளிகள் மண்ணில் விழும் மெல்லியதாளம் மட்டும் எஞ்சியிருந்தது. அந்தப்புரத்தில் சேடிகளின் மெல்லிய பேச்சொலிகளும் மரத்தரையில் கால்கள் செல்லும் ஓசையும் உலோக ஒலிகளும் கேட்டுக்கொண்டிருந்தன.
பிருதை எழுந்து அறைக்கதவை உள்ளே மூடித் தாழிட்டாள். பெருமூச்சுடன் அகல்விளக்கை ஊதி அணைத்தாள். சாளரத்தின் அருகே சென்று நின்று முலைக்கச்சை அவிழ்த்தாள். முலைகள் சீழ் ஏறிய இரு கட்டிகள் போல நீலநரம்போடி கனத்து வெம்மைகொண்டிருந்தன. முலைநுனி கட்டியின் முனை போலத் திரண்டு கருமைகொண்டு நின்றது. அவள் கைகளால் முலைகளை மெல்லத் தொட்டாள். வலியுடன் பற்களை இறுகக்கடித்தபடி பாலை பீய்ச்சி வெளியே விட்டாள்.
சாளரத்துக்கு வெளியே மழை கூரைநுனியில் இருந்து கனத்த துளிகளாகச் சொட்டிக்கொண்டிருந்தது. இருளின் கருமைக்குள் அவளுடைய பால் சிறிய வெண்ணிற ஊசிகளாக பீரிட்டுச் சென்று மறைந்தது. முலைகளின் அடியில் அடிபட்ட வீக்கம்போல சூடாக இறுகிக் கனத்திருந்த தசை நெகிழ்ந்து மென்மையாகியது. மேலே புடைத்து கிளைவிட்டிருந்த நரம்பு மீது நீவிக்கொண்டாள். முலைக்கண்களில் இருந்து வெண்நீலநிறமாக பால் கசிந்தது. கள்ளிச்செடியின் தண்டு ஒடிந்ததுபோல. இரு கைகளையும் தூக்கினாள். அதுவரை கைகளை அசைத்தபோது முலையில் இருந்து கைகளை நோக்கி வந்து இறுக்கியிருந்த தசைச்சரடு ஒன்று தளர்ந்துவிட்டதை உணர்ந்தாள்.
பெருமூச்சுடன் திரும்பியபோது இருட்டுக்குள் இருந்து எவரோ பார்க்கும் உணர்வு எற்பட்டது. திரும்பி இருளைப்பார்த்தாள். பசைபோன்ற இருட்டு. யானைபோன்ற இருட்டு. அவளுடைய முலைப்பாலை சுவைத்தபின் அவளை அது நோக்கி நின்றது. அவள் நடுங்கும் கைகளால் சாளரத்தைப் பிடித்துக்கொண்டாள். கைகள்மேல் தலைசாய்த்து அழத்தொடங்கினாள்.