பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்
[ 1 ]
மார்த்திகாவதியை ஆண்ட குந்திபோஜனுக்கு உரிய கௌந்தவனம் என்ற பெயர்கொண்ட மலையடிவாரக் குறுங்காடு பர்ணஸா நதியின் கரையில் இருந்தது. சுற்றிலும் வெட்டப்பட்ட பெரிய அகழியால் உள்ளே வனமிருகங்கள் வரமுடியாதபடி செய்யப்பட்டு தவநிலையாக மாற்றப்பட்டிருந்தது. பதினைந்துநாட்களுக்கும் மேலாக பெய்துகொண்டிருந்த மழையால் அகழியில் சிவந்த மழைநீர் நிறைந்து இலைகள் சொட்டும் துளிகளாலும் சிற்றோடைகள் கொட்டும் நீராலும் கொப்பளித்துக் கொண்டிருந்தது. அகழிக்குமேல் போடப்பட்டிருந்த ஒற்றைமரம் வழியாக குந்திபோஜனின் அறப்புதல்வி பிருதையின் சேடியான அனகை வயதான மருத்துவச்சியை அந்தி இருளில் கொட்டும் மழைத்திரைக்குள் அழைத்துவந்துகொண்டிருந்தாள்.
கௌந்தவனத்தின் வலப்பக்கமாக ஓடி மலையிடுக்குவழியாகச் செல்லும் பெருங்குடிப்பாதையிலிருந்து பிரியும் கால்வழிகளின் முடிவில் ஏராளமான சிறிய ஆயர்குடிகள் இருந்தன. அவற்றில் ஒன்றைச்சேர்ந்த சுருதை என்ற கிழ மருத்துவச்சியை அனகை ஒரேஒருமுறைதான் கண்டிருந்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது சேடியான சூதப்பெண் ஒருத்திக்காக அவளைக் கூட்டிவந்திருந்தனர். அவள் இடைநாழிவழியாக தோலாடை அணிந்து, கையில் விளக்குடன் குனிந்து நடந்து செல்லும் காட்சியை கதவிடுக்குவழியாக அரைக்கணநேரம்தான் அனகை அப்போது பார்த்தாள். ஆனால் அவளுடைய ஊரின் பெயர் சாலவனம் என்பது அப்போது அவள் நினைவில்பதிந்திருந்தது என்பதை தேவை ஏற்பட்டபோது அது நினைவில் வந்தபோதுதான் அவள் அறிந்தாள்.
சாலவனம் மந்தைகள் நடந்து உருவாக்கிய காட்டுப்பாதையின் இறுதியில் இருந்தது. மதியம் சென்றால் அந்த இடையர்குடியில் எவருமிருக்கமாட்டார்கள் என்று அனகை அறிந்திருந்தாள். பதினைந்துநாட்களாக சரடறாமல் பொழிந்துகொண்டிருந்த மழை அன்றுகாலையில்தான் சற்று ஓய்ந்திருந்தது. மேயாமல் அடைந்திருந்த பசுக்களை காட்டுக்குள் கொண்டுசென்றே ஆகவேண்டும். அவள் வரும்போதே உள்காடுகளில்கூட மாடுகளின் கழுத்துமணி ஓசையைக் கேட்டாள்.
வானில் மேகக்கூட்டங்கள் பட்டி திறந்து வெளியேறும் ஆநிரைகளென ஒன்றை ஒன்று முட்டித்தள்ளிக்கொண்டு வடகிழக்காக நகர்ந்துகொண்டிருந்தபோதிலும் ஆங்காங்கே அவற்றில் விழுந்திருந்த இடைவெளிகள் வழியாக ஒளி கசிந்து காற்றில் பரவியிருந்தது. ஈரமான இலைப்பரப்புகள் ஒளியுடன் மென்காற்றில் அசைந்தன. மழைநீர் ஓடிய மணல்தடம் முறுக்கி விரித்த சேலைபோலத் தெரிந்த பாதை வழியாக அவள் பனையோலையாலான குடைமறையால் தன்னை மறைத்துக்கொண்டு நடந்தாள்.
சாலவனம் என்பது ஓங்கிய பெரிய மரங்கள் சூழ்ந்த ஒரு சோலைக்கு அப்பாலிருந்த ஐம்பது புல்வேய்ந்த குடில்கள்தான் என்பது அனகைக்கு ஆறுதலளித்தது. அந்த ஊரிலிருந்து எவரும் வெளியுலகைக் கண்டிருக்கப்போவதில்லை. அவளைக் கண்டாலும் அறிந்துகொள்ள மாட்டார்கள். ஊரைச்சுற்றி உயரமில்லாத புங்கமரங்களை நட்டு அவற்றை இணைத்து மூங்கிலால் வேலிபோட்டிருந்தார்கள். ஊருக்குள் நுழைவதற்கான பாதையை ஒரு பெரிய மூங்கில் தடுத்திருந்தது. அவள் அங்கே நின்று உள்ளே எட்டிப்பார்த்தாள்.
சுரைக்காய்க்கொடி படர்ந்த கூரைகொண்ட புற்குடில்களில் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. வட்டமாக அமைந்திருந்த குடில்களுக்கு நடுவே இருந்த முற்றத்தின் மையத்தில் நின்ற பெரிய அரசமரத்தடியில் கல்லாலான மேடையும் அருகே இருந்த பெரிய மரத்தொட்டிகளும் அமைதியில் மூழ்கிக்கிடந்தன. நூற்றுக்கணக்கான கட்டுத்தறிகள் அறையப்பட்டு அவற்றைச்சுற்றி மாடுகள் சுற்றிநடந்த வட்டத்தடங்கள் ஒன்றையொன்று வெட்டிக்கலந்து பரவியிருந்த முற்றத்தில் உடைந்த வண்டிச்சக்கரங்களும் நுகங்களும் ஓரமாகக் குவிக்கப்பட்டிருந்தன.
உள்ளே செல்வதா, அழைப்பதா என்று அவள் தயங்கிக் கொண்டிருந்தபோது அவளை நோக்கி ஒரு கிழவி குனிந்தபடி வறுமுலைகள் ஊசலாட வந்தாள். நரைத்த பெரிய கூந்தலை கொண்டையாக முடிந்து காதுகளில் மரத்தாலான குழைகள் அணிந்திருந்தாள். கழுத்தில் செந்நிறக் கற்களாலான மாலை. இடையில் ஆட்டுத்தோல் பின்னிய குறுகிய ஆடை. மூங்கிலுக்கு அப்பால் நின்றுகொண்டு கண்களுக்குமேல் கையை வைத்து அவளை நோக்கி “நீ யார்?” என்று கேட்டாள்.
அனகை “நான்…” என தயக்கமாகத் தொடங்குவதற்குள் “மருத்துவச்சியைத் தேடிவந்தாயா?” என்றாள். அனகை “ஆம்” என்றாள். “யாருக்காக?” என்றாள் கிழவி. “என் தோழிக்காக” என்றபோது அனகை தன் குரல் தடுக்குவதை உணர்ந்தாள். கிழவி தலையை ஆட்டினாள். “வேறு எதற்காக இங்கே தேடிவரப்போகிறாய்? வாசலில் இருந்து எட்டிப்பார்ப்பதைக் கண்டாலே தெரிகிறதே…” என தனக்குத்தானே முனகிக்கொண்டு “எங்கே இருக்கிறாள் அவள்?” என்றாள் கிழவி.
“இங்கிருந்து நான்குகாதம் தொலைவில்…” என அனகை சொல்வதற்குள் கிழவி “இந்தமழையில் அத்தனைதூரம் என்னால் வரமுடியாது. அவளை இங்கே கொண்டுவாருங்கள்” என்றபின் திரும்பிவிட்டாள். அனகை பதறி மூங்கிலைப்பிடித்தபடி “அய்யோ…இருங்கள்…நான் சொல்கிறேன்” என்றாள். “அவர்கள் இங்கெல்லாம் வரமுடியாது…”
கிழவியின் கண்கள் மாறுபட்டன. “அவர்கள் என்றால்?” என்றபடி மேலும் அருகே வந்தாள். அவளுடைய உடற்தோலில் இருந்து முடியுள்ள மிருகங்கள் படுக்குமிடத்தில் எழும் மட்கிய வாடை வந்தது. “யாரவள்? அரசகுலமா?” அனகை தலையை அசைத்தாள். கிழவி “அரசகுலமென்றால் இக்கட்டுகளும் அதிகம்… நாளை என்னை அரசன் கூட்டிக்கொண்டுசென்று கழுவில் ஏற்றிவிடுவான்” என்றாள்.
அனகை கைகூப்பி “என் தலைவி அரசிளங்குமரி… தங்களை எப்படியாவது அழைத்துவருகிறேன் என்று சொல்லி தேடிவந்தேன். வந்து உதவவேண்டும்” என்றாள். “இந்தமழையில் நான் அவ்வளவு தொலைவு வருவதென்றால்…” என கிழவி தொடங்கியதுமே “அதற்கு என்ன தேவையோ அதை இளவரசி அளிப்பார்கள்” என்றாள் அனகை. கிழவியின் கருகிய உதடுகள் புன்னகையில் மெல்ல வளைந்தன. “இரு, நான் சென்று என்னுடைய பெட்டியை எடுத்துவருகிறேன்” என்று திரும்பி ஊருக்குள் சென்றாள்.
கிழவி மான்தோலால் ஆன ஒரு சால்வையை எடுத்து தன்மேல் போர்த்தி, கையில் சிறிய மரப்பெட்டியுடன் வந்து மூங்கிலில் காய்வதற்காக மாட்டியிருந்த பனையோலையாலான குடைமறையை எடுத்து மடித்து தோளில் மாட்டிக்கொண்டு “போவோம்” என்றாள். அனகை அவளை பின் தொடர்ந்தாள். அந்த ஊரில் கிழவியைத்தவிர வேறு எவரும் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு பெரிய கருவண்டு ரீங்கரித்தபடி மூங்கிலில் முட்டிக்கொண்டிருந்த ஒலியன்றி அமைதி நிறைந்திருந்தது.
கிழவி தொங்கிய தாடையைச் சுழற்றி இரண்டு பற்கள் மட்டுமே இருந்த வாயை மென்றபடி கூர்ந்த கண்களுடன் வேகமாக நடந்தாள். பசுவைப்போல கூனியபடி அவள் நடந்தபோது அனகை கூடவே ஓடவேண்டியிருந்தது. மையப்பாதைக்கு வந்ததும் “இந்தவழியாக சிறு வணிகர்கள் சிலர் வருவது வழக்கம்… நாம் காட்டுப்பாதையிலேயே செல்வோம்” என்று சொல்லி அவளே புதர்களுக்குள் சிவந்த மாணைக்கொடி போல மறைந்துகிடந்த ஒற்றையடிப்பாதைக்குள் நுழைந்தாள்.
காட்டுக்குள் சென்றதும் கிழவி சற்று நிதானமடைந்தாள். அனகையைப் பார்க்காமலேயே “இளவரசியின் பெயர் என்ன?” என்று கேட்டாள். “பிருதை…” என்று மெல்லியகுரலில் சொன்னாள் அனகை. “அவளா… குந்திபோஜர் தெற்கே மதுவனத்து விருஷ்ணிகளின் குலத்தில் இருந்து மகள்கொடை கொண்டு வந்த பெண், இல்லையா?” அனகை தலையை அசைத்தாள். “இளவரசி குந்தி… அவளை நான் முன்பொருமுறை பார்த்திருக்கிறேன். அவளுக்கென்ன?”
அனகை மெல்லியகுரலில் “நாட்கள் பிந்திவிட்டன” என்றாள். “ஆண் யார்?” என்றாள் கிழவி. அனகை ஒன்றும் சொல்லவில்லை. கிழவி திரும்பி மோவாயை முன்னால் நீட்டி உள்நோக்கி மடிந்து குவிந்திருந்த வாயால் புன்னகை செய்தாள். “யாதவப்பெண்களுக்கு எவ்வகை உறவும் ஒப்பளிக்கப்பட்டுள்ளதே” என்றாள். அனகை “இளவரசி இக்கருவை அஞ்சுகிறார்கள்” என்றாள்.
“ஆம், அஞ்சவேண்டிய இடத்தில் ஐம்புலன்களும் மயங்கும். அந்த லீலையால்தான் எங்கள் பிழைப்பு செல்கிறது” என உதடுகள் வாய்க்குழிக்குள் சென்று துடிக்க கிழவி சிரித்தாள். “வா…இன்னும் சற்று நேரத்தில் மழை வரும். அதன்பின் இக்காட்டில் நடக்கமுடியாது.” அனகை கிழவியின் உடலில் ஏறியபடியே வந்த விரைவைக் கண்டாள். அவளுக்கு கிழவியுடன் அந்தக்காட்டில் தனியாகச் செல்வதே அச்சமூட்டுவதாக இருந்தது.
காட்டுக்குள் நீராவி நிறைந்திருந்தது. களைப்பில் குளிர்ந்தெழுந்த வியர்வை காதோரத்திலும் முதுகிலும் வழிந்தது. காட்டுப்பசுமை அவள் மேல் ஈரமான பச்சைப் போர்வைகளை மேலும் மேலும் போர்த்தியடுக்கி மூடியது போல மூச்சுத்திணறலை அளித்தது. நனைந்த புதர்களுக்குள் பறவைகள் ஒலிஎழுப்பியபடி எழுந்து எழுந்து அமர்ந்தன. பிறகு மெல்லிய குளிர்காற்று வீசி வியர்வையை பனி போல உணரச்செய்தது. இலைகளெல்லாம் மடிந்து பின் நிமிர்ந்து காற்றில் படபடத்தன. தொலைவில் இலைகளில் நீர் பொழியும் ஒலி கேட்டது. சற்று நேரத்தில் மழை இறங்கத் தொடங்கியது.
கிழவி தன் தோளில் மடித்துப் போட்டிருந்த குடைமறையை விரித்து தலையில் அணிந்துகொண்டு பெட்டியை அனகையிடம் அளித்தாள். “இதை வைத்துக்கொள்… கீழே போட்டுவிடாதே. மரங்களில் முட்டவும்கூடாது” என்றபின் இருகைகளாலும் புதர்களை விலக்கிக்கொண்டு நடந்தாள். அனகை தன் குடைமறையை தலைமேல் போட்டுக்கொண்டு பெட்டியை மார்பில் சேர்த்து வைத்துக்கொண்டு நடந்தாள்.
மரங்களின் அடர்ந்த இலைக்கூரைக்குமேல் மழை ஓலமிட்டது. அடிமரங்கள் வழியாக நீர் வழிந்திறங்கியபோது அவை ஊர்ந்து செல்லும் பாம்புகளின் உடல்போலத் தோன்றின. நாகங்களாலான காடு வழியாக சென்றுகொண்டிருந்தாள். புதர்களுக்கு அடியில் கனத்த நாகங்கள் ஓடுவதுபோல மழைநீரோடைகள் சலசலத்தோடின. நூற்றுக்கணக்கான சிற்றருவிகள் காடெங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. புதர்களுக்கு அப்பால் இருள்கருமைக்குள் நிற்கும் யானைத் தந்தங்கள் என அவ்வருவிகளைக் கண்டாள். கால்கள் நீரில் விரைத்து நீலநரம்புகள் தெரியத்தொடங்கின. அவளுக்கு ஒரு மங்கலான தன்னுணர்வு உருவானது, அவளை ஒரு நாகம் பார்த்துக்கொண்டிருப்பதுபோல. ஓசையில்லாமல் புதர்கள் வழியாகப் பின்தொடர்வதுபோல.
மழை நல்லதுதான் என அனகை எண்ணிக்கொண்டாள். மழையின் திரை அவர்களை முழுமையாகவே மூடி கண்ணுக்குத்தெரியாத மாயாவிகளாக ஆக்கியது. கௌந்தவனத்தின் அகழிக்கரையை அடைந்தபோதுதான் அவளுக்கு மனம் படபடக்கத் தொடங்கியது. தவநிலையின் முகப்பில் ரதங்கள் செல்லக்கூடிய பெரிய மரப்பாலம் உண்டு. பின்பக்கம் ஒற்றைமரம் ஒன்று அகழிக்குக் குறுக்காக விழுந்து கிடப்பதை ஆறுமாதங்களுக்கு முன்பு பிருதைதான் கண்டுபிடித்தாள். அதை சரியாக உருட்டிப்போட்டு ஒரு பாலமாக ஆக்கியவள் அவள்தான். அதன் வழியாகவே அவள் தவநிலையில் இருந்து காட்டுக்குள் சென்று வந்தாள்.
கிழவி “இதன் வழியாகவா?” என்று தயங்கினாள். “நான் பிடித்துக்கொள்கிறேன்” என்றாள் அனகை. கிழவி ஒன்றும் சொல்லாமல் வேகமாக நடந்து மறுபக்கம் சென்றுவிட்டாள். கையில் பெட்டியுடன் அனகைதான் சற்று தடுமாறினாள். அப்பால் கௌந்தவனத்தின் மரங்களெல்லாம் மழைநீராடி ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. மான்கூட்டங்கள் மழையில் உடலைக் குறுக்கி பெரிய பலாசமரத்தின் அடியில் கூடிநின்றிருந்தன. காலடியோசை கேட்டு அவை திரும்பி காதுகளை விடைத்து பெரிய கண்களால் பார்த்தன. அனகையை அடையாளம் கண்டுகொண்டதும் நாலைந்து மான்கள் ஆர்வமிழந்து உடலை நடுக்கி காதுகளை அடித்துக்கொண்டபடி விலகி நின்றன.
அவர்கள் கடந்துசென்றபோது பின்பக்கம் மான்கள் மருண்டு ஓசையிட்டபடி கலைவதை அனகை கவனித்தாள். “என்ன?” என்றாள் கிழவி. அனகை தலையசைத்தாள். “காட்டுப்பூனையாக இருக்கும்” என்று கிழவி சொன்னாள். “அவை மழையில் பொதுவாக வெளியே வருவதில்லை. ஆனால் இப்படி நாட்கணக்கில் மழைபெய்தால் என்ன செய்யமுடியும்? பட்டினி கிடக்கமுடியாதல்லவா?”
தவநிலையின் குடில்கள் அனைத்தும் இருண்டு கிடந்தன. பிருதை இருந்த குடில் வாயிலில் மட்டும் மரவுரியாலான கனத்த திரை தொங்கியது. வாசலில் காலடியோசை கேட்டதும் உள்ளிருந்து பிருதை எட்டிப்பார்த்தாள். அனகை “கூட்டிவந்துவிட்டேன் இளவரசி” என்றாள். பிருதை அகல்விளக்கைக் கொளுத்தி கையில் எடுத்துக்கொண்டு வந்து கதவைத் திறந்தாள். வெளியே இருந்து வந்த பாவனையில் பார்க்கையில் பிருதையை முற்றிலும் புதியவளாகக் காணமுடிந்தது. வெளிறிய சிறியமுகத்தின் இருபக்கமும் கூந்தல் கலைந்து நின்றிருந்தது. வீங்கியதுபோன்றிருந்த முகத்தில் மெல்லிய சிறிய பருக்கள். கண்ணிமைகள் கனத்து சற்று சிவந்திருந்தன.
கிழவி வாசலில் நின்று தன் தோலாடைகள் இரண்டையும் களைந்தாள். அவளுடைய வற்றிச்சுருங்கி வளைந்த உடலை ஆடையின்றிப்பார்த்தபோது எழுந்து நிற்கும் பல்லி எனத்தெரிந்தாள். பிருதை சற்றே சுருங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டு நின்றாள். ஆடைகளை நன்றாக உதறி கூரைக்குக் கீழே தொங்கவிட்டபின் கிழவி “எனக்கு ஈரமில்லாத ஓர் ஆடை வேண்டும்” என்றாள்.
“இதோ” என்று அனகை தன் ஆடையின் ஈரத்தைப் பிழிந்துகொண்டு உள்ளே சென்று ஒரு மரவுரியாடையைக் கொண்டுவந்து தந்தாள். கிழவி அதை அணிந்துகொண்டு பிருதையை நோக்கி “இவள்தான் இளவரசியா?” என்று கேட்டபின் உதடுகள் கோண சிரித்தாள். பிருதை கிழவியை வெறுப்பது அவள் புருவச்சுளிப்பில் இருந்தே தெரிந்தது. “அரசிக்குரிய அழகுடன் இருக்கிறாள். அரசிகளுக்குரிய ரகசியங்களும் கொண்டிருக்கிறாள்” என்று சொல்லி கிழவி மாடுகள் இருமுவதுபோலச் சிரித்தாள். “வா, உன்னை சோதனையிடுகிறேன்.”
பிருதை கண்களில் கூர்மையுடன் “உன் பெயரென்ன?” என்றாள். “சாலவனத்தின் யாதவர்களின் மருத்துவச்சி நான். என்பெயர் சுருதை” என்றாள் கிழவி. “உன்னை நான் அரண்மனையில் பார்த்திருக்கிறேன்…. உன்னை குந்தியாக தத்தெடுத்துக் கொண்டுவந்தபோது. அப்போது நீ சிறுமி…”
பிருதை “என்னிடம் பேசும்போது இன்னும் சற்று சொற்களை எண்ணிப்பேசவேண்டும் நீ” என்றாள். “இளவரசிக்குரிய மதிப்பு உன் சொற்களில் தெரிந்தாகவேண்டும்.” கிழவி கண்களில் நகைப்புடன் “என்னிடம் ரகசியங்கள் இல்லை… ரகசியங்கள் இருப்பது உன்னிடம்” என்றாள். பிருதை தணிந்த குரலில் “ஆம், என் ரகசியத்தை நீ அறிந்துகொண்டுவிட்டாய். அதுவே நீயும் உன் குலமும் ஆபத்தில் இருப்பதற்கான காரணம். நீ உயிர்வாழ்வதைப்பற்றி இனிமேல் நான்தான் முடிவெடுக்கவேண்டும்” என்றாள்.
கிழவி திகைத்துப்போனவளாக தாடை விழுந்து குகைபோலத்திறந்த வாயுடன் பார்த்துக்கொண்டு சிலகணங்கள் நின்றாள். பின்பு “ஆணை இளவரசி” என்றாள். கைகளை மெல்லக் கூப்பி “நாங்கள் எளிய இடையர்கள்” என்றாள். “அந்நினைப்பை எப்போதும் நெஞ்சில் வைத்துக்கொள்” என்றாள் பிருதை திரும்பி உள்ளே சென்றபடி. கைகளை மாட்டின் கால்கள் போல முன்பக்கம் வீசி வைத்து கிழவி பின்னால் சென்றாள்.
புலித்தோலிட்ட மஞ்சத்தில் பிருதை அமர்ந்துகொண்டாள். “எனக்கு விலக்கு ஆகி மூன்றுமாதங்களாகின்றன. அது கருவா என்று நீ பார்த்துச் சொல்லவேண்டும்” என்றாள். கிழவி “ஆணை” என்றபின் பிருதையின் இடக்கையைப் பிடித்து நாடியில் தன் நான்கு விரல்களையும் வைத்தாள். “கண்களைக் காட்டுங்கள் இளவரசி… இமைகளை மூடவேண்டாம்” என்றாள். அவள் கண்களுக்குள் உற்று நோக்கியபடி வாயைமெல்வதுபோல அசைத்துக்கொண்டு நாடியைக் கணித்தாள். பெருமூச்சுடன் கையை விட்டுவிட்டு “கரு என்றுதான் எண்ணுகிறேன்” என்றாள். “ஆனால் சோதனையிட்டுத்தான் உறுதியாகச் சொல்லமுடியும்.”
அனகை படபடப்புடன் பிருதையைப் பார்த்தாள். அவளிடம் பெரிய முகமாற்றம் ஏதும் தெரியவில்லை. உதடுகள் மட்டும் இறுகி கன்னங்களில் குழிவிழுந்திருந்தது. கிழவி “கொதிக்கவைத்த வெந்நீர் தேவை” என்றாள். அனகை உள்ளே சென்று பின்பக்கம் உபசாலையில் விறகடுப்பின்மீது சிவந்து அனல்விட்டுக்கொண்டிருந்த செம்புப்பாத்திரத்தில் இருந்து நீரை அள்ளிக் கொண்டுவந்தாள். கிழவி தன் பெட்டியைத் தூக்கி அருகே வைத்து அதைத்திறந்து உள்ளிருந்து சிறிய உலோகப்புட்டிகளை எடுத்துப்பரப்பினாள். படிகக்கல்லால் ஆன பலவகைக் கத்திகளும் தங்கத்தாலான சிறிய ஊசிகளும் குதிரைவால் முடிச்சுருள்களும் பச்சிலைமருந்துகள் கலந்த படிகாரக்கட்டியும் அதனுள் இருந்தன. அனகை நிற்பதைக் கண்டு வெளியே செல்லும்படி கிழவி சைகை காட்டினாள்.
கிழவி திரும்ப அழைத்தபோது அனகை உள்ளே சென்றாள். கிழவி கைகளைக் கழுவியபடி “கருதான்” என்றாள். அனகை கால்கள் தளர்ந்து மெல்ல பின்னால் நகர்ந்து தூணைப்பற்றிக்கொண்டாள். அதை அவளும் கிட்டத்தட்ட உறுதியாகவே அறிந்திருந்தாள் என்றாலும் அதுவரைக்கும் அவ்வெண்ணத்தை சொற்களாக மாற்றாமல் இருந்தாள். காதில் அச்சொற்கள் விழுந்ததும் உடல்பதறி கால்கள் தள்ளாடத் தொடங்கின. ஓரக்கண்ணால் பிருதையைப் பார்த்தாள். சற்று சரிந்த இமைகளுடன் அவள் ஏதோ எண்ணத்தில் மூழ்கி அமர்ந்திருந்தாள். கிழவி “கரு தொண்ணூறுநாள் தாண்டியிருக்கிறது” என்றாள்.
“என்னசெய்வது இளவரசி?” என்று தொண்டை அடைத்து கிசுகிசுப்பாக மாறிய குரலில் அனகை கேட்டாள். “நாம் பேசாமல் திரும்பி அரண்மனைக்கே சென்றுவிடுவோம். எனக்கு இங்கே மிகவும் அச்சமாக இருக்கிறது… இங்கே…” அவளை பேசாமலிருக்க கைகாட்டியபின் பிருதை “இந்தக்கருவை அழித்துவிடமுடியுமா?” என்றாள். கிழவி “அழிப்பதுண்டு…ஆனால் அது சாஸ்திரவிதிப்படி பெரிய பாவம்” என்றாள். பிருதை “ஆம்….ஆனால் போரிலும் வேட்டையிலும் கொலைசெய்கிறோமே” என்றாள். கிழவி பணிந்து “தாங்கள் ஆணையிட்டால் செய்கிறேன்…ஆனால்…”
பிருதை தன் விழிகளைத் தூக்கி கிழவியைப் பார்த்தாள். “அரசகுலத்தில் நான் இதைச்செய்தேன் என வெளியே தெரிந்தால் என் உயிருக்கும் ஆபத்து நிகழலாம்” என்றாள் கிழவி. பிருதை கண்களைத் திருப்பி “நூறு பொற்காசுகளைப் பெற்றுக்கொள்” என்றாள். கிழவி பதற்றத்தில் “நூறு…” என தொடங்கி உடனே புரிந்துகொண்டு “…ஆம் இளவரசி… அவ்வண்ணமே செய்கிறேன். என்னிடம் மிகச்சிறந்த மருந்துகள் உள்ளன. கரு இன்னும்கூட மிக இளமையான நிலையிலேயே உள்ளது. என்னிடம் உயர்ந்த சிட்டுக்குருவி இறகாலான பஞ்சு உள்ளது. அதில் இந்த நாக ரசாயனத்தை வைத்து…” என்று ஆரம்பித்தாள். “செய்!” என்று பிருதை சுருக்கமாக ஆணையிட்டாள்.
“படுத்துக்கொள்ளுங்கள் இளவரசி” என்றாள் கிழவி. அனகை தன் அதிரும் மார்பைப் பற்றிக்கொண்டு பற்களைக் கிட்டித்தபடி நின்றாள். கீழே விழுந்துவிடுவோமா என்ற அச்சம் அவளுக்கு ஏற்பட்டது. கிழவி தன் கைகளை நீரால் மீண்டும் கழுவிக்கொண்டாள். பெட்டிக்குள் இருந்து நீளமான மெல்லிய வெண்கலக்கம்பி ஒன்றை எடுத்து அதை சிறு வெண்கலப்புட்டியில் இருந்து எடுத்த இளஞ்செந்நிறமான திரவத்தில் முக்கிய துணிச்சுருளால் துடைத்தாள்.
“இளவரசி… இது சற்றே வலிமிக்கது. தாங்கள் விரும்பினால் அஹிபீனாவின் புகையை அளிக்கிறேன். அது வலியை முழுமையாகவே இல்லாமலாக்கிவிடும்” என்றாள் கிழவி. பிருதை “இல்லை… நான் வலிக்கு அஞ்சவில்லை” என்றாள். “அத்துடன் நான் இந்த வலியை அடையவும் வேண்டும். அதுதான் முறை” என்றாள். கிழவி தயங்கி “மிகவும் வலிக்கும்…” என்றாள். “வலிக்கட்டும்” என்றாள் பிருதை. கிழவி அனகையிடம் “நீ இளவரசியின் இரு கைகளையும் தோள்களையும் மஞ்சத்துடன் சேர்த்துப் பற்றிக்கொள்ளவேண்டும். வலியில் அவர்கள் தன்னையறியாமல் கையை வைத்து தட்டிவிட்டால் ஆபத்து.”
“தேவையில்லை” என்றாள் பிருதை. கிழவி இமைக்காமல் சிலகணங்கள் பார்த்துவிட்டு “பொறுத்தருளவேண்டும் அரசியே, நாங்கள் அஹிபீனா அளித்தபிறகும்கூட கைகால்களை இறுக்கமாகக் கட்டியபின்னரே இதைச்செய்வது வழக்கம்” என்றாள். “அஞ்சவேண்டியதில்லை…செய்!” என்று பிருதை சொல்லிவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். அங்கிருந்து விலகிச்சென்றால்போதும் என்று அனகை எண்ணினாள். தொண்டை வறண்டு வாய் தோலால் ஆனதுபோலத் தோன்றியது.
கிழவி சிறிய வெண்கலப்புட்டியைத் திறந்தாள். அதற்குள் நீலநிறமான நாகரசாயனம் இருந்தது. இன்னொரு மரச்சம்புடத்திலிருந்து மெல்லிய சுருளாக இருந்த சாம்பல்நிறமான சிட்டுக்குருவியின் இறகுச்சுருளை எடுத்து அதை அந்தப் புட்டியில் இருந்த ரசாயனத்தில் நனைத்தாள். சாதாரணமாக உதறிக்கொண்டிருக்கும் கிழவியின் மெலிந்துசுருங்கிய கைகள் அப்போது நடுங்கவில்லை என்பதை அனகை கவனித்தாள். அதைச்செய்யும்போது கிழவியின் அனைத்துப் புலன்களும் சித்தமும் ஒன்றுகுவிகின்றன என்றும் அப்போதுதான் அவள் தன்னுடைய உச்சநிலையில் இருக்கிறாள் என்றும் தோன்றியது.
கிழவி அந்தச் சுருளை கம்பியின் நுனியில் வைத்து கவனமாகச் சுருட்டினாள். அது ஒரு சிறு எரியம்பு போல ஆகியது. அதன் நுனி ஓவியத்தூரிகைபோல கூர்ந்திருந்தது. அந்த நுனியில் மேலும் நாகரசாயனத்தைத் தொட்டாள். அதை முகத்தருகே கொண்டுவந்து கவனித்தாள். அப்போது அவள்முகத்தில் ஒரு தியானபாவனை கூடியது. உதடுகள் உள்ளே மடிந்து மெல்ல அதிர வாய் சேற்றுக்குழிபோலத் தெரிந்தது. வளைந்த நாசி நுனி மேலுதட்டுக்குமேல் நிழலை வீழ்த்தியது. அவள் கண்களில் தெரிவது ஒரு வெறுப்பு என அனகை எண்ணிக்கொண்டாள். யாரிடம்? ஆனால் யாரிடமென்று இல்லாமல் விரியும் வெறுப்புக்குத்தான் அத்தனை அழுத்தம் இருக்கமுடியும்.
கிழவியின் வாய் புன்னகை போல் கோணலாகியது. கம்பியை கையிலெடுத்துக்கொண்டு அவள் முன்னால் நகர்ந்தாள். தன் முழங்காலை மெத்தென ஊன்றுவதற்காக மஞ்சத்துக்குக் கீழே கிடந்த பழைய மரவுரியை இடதுகையால் அவள் இழுத்தபோது அதற்குள் இருந்து சுருள் மூங்கில் புரியவிழ்ந்தது போல மிகப்பெரிய பாம்பு ஒன்று சீறி எழுந்து தலைசொடுக்கி அவள் கன்னத்தைத் தீண்டியது. அவள் திடுக்கிட்டு கம்பியை உதறி கன்னத்தைப்பற்றியபடி அலறிக்கொண்டு பின்னால் சரிந்தாள். பாம்பு நிழல்நெளிந்தோடும் வேகத்தில் அவளுடைய கால்கள் மேலேறி வளைந்தோடி அறையின் மூலையிலிருந்த மரப்பெட்டியை அணுகி அதன் இடுக்கில் தலை வைத்து வால் நெளிய உடலை சுருட்டி உள்ளே இழுத்து பதுங்கிக்கொண்டது.
பிருதை மஞ்சத்தில் எழுந்தமர்ந்து உடைகளை சீர்திருத்திக்கொண்டு பாம்பைப்பார்த்தாள். நாகம் இரண்டரை வாரை நீளமிருந்தது. கருமையான பசுஞ்சாணியின் நிறம். அதன் பத்தியில் மஞ்சள்நிறமான வரிகள் பத்தி விரிவதற்கு ஏற்ப அசைந்தன. பத்தியின் அடிப்பகுதி வெண்பழுப்பு கூழாங்கல்மணிகளை நெருக்கமாகக் கோர்த்ததுபோல திரிசூல வடிவத்துடன் நெளிந்தது. குட்டியானையின் துதிக்கையளவுக்கு கனமிருந்தது அது.
பிருதை அப்போதும் நிதானமிழக்கவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தபின் பாம்பின் மீதிருந்த விழிகளை விலக்காமலேயே மெல்ல கையை நீட்டி அறைமூலையில் இருந்த கழியைக் கையிலெடுத்தபடி எழுந்தாள். அவளுடைய அசைவைக் கண்டு அதற்கேற்ப தலையை அசைத்துப்பார்த்துக்கொண்டிருந்த நாகம் சிவந்த நாக்கு பறக்க தலையை தரையில் வைத்தது. அதன் மணிக்கண்களில் சுடரொளி மின்னுவதுபோலிருந்தது.
பிருதை ஓரடி எடுத்துவைத்ததும் சட்டென்று அவள் இடுப்பளவு உயரத்துக்கு எழுந்து பத்தியை விரித்து உடல் வீங்கி புடைத்து சீறியது நாகம். அனல்கதி செந்நாக்கு துடிக்க தலையை அசையாமல் நிறுத்தி அவளைப் பார்த்தது. கழியின் நுனி சற்றே அசைந்தபோது அவ்வசைவை அந்த நாகத்தின் தலையும் பிரதிபலித்தது. அதன்பின்பக்கம் கரிய உடலின் சுருள்கள் வெவ்வேறு திசையிலான அசைவுகளின் குவியலாகத் தெரிந்தன. இருண்ட ஒரு நீர்ச்சுனையின் சுழிப்புபோல.
“ராஜநாகம்” என்று பிருதை சொன்னாள். “இங்கே உள்ளது அல்ல. இங்கே இவ்வளவு மயில்கள் இருக்கின்றன. இது அங்கே காட்டிலிருந்து வந்திருக்கிறது…” அனகை கிசுகிசுப்பான குரலில் “எப்படி?” என்றாள். “நீ வரும்போது உன் பின்னால் வந்திருக்கிறது…” அனகை மெதுவாக பின்னால்நகர்ந்தாள். பிருதை கழியை நாகத்தின் முன்னால் தரையில் நாலைந்துமுறை தட்டினாள். நாகம் தலையை பின்னுக்கிழுத்துக்கொண்டு சட்டென்று ஒருமுறை நிலத்தைக் கொத்தியது. அந்த தட் ஒலியை அனகை தன் நெஞ்சுக்குள் கேட்டாள்.
பிருதை கழியை பின்னால் இழுத்துக்கொண்டு “அது நம்மை ஒன்றும் செய்யவிரும்பவில்லை” என்றாள். நாகம் மெல்ல பத்தியைச் சுருக்கி தரையில் தலையை அசையாமல் வைத்துக்கொண்டு உடலை மட்டும் சுருள்களாகச் சுழற்றி இழுத்துக்கொண்டது. நெளியும் வால் மரப்பெட்டியின் இடுக்கிலிருந்து வெளிவந்ததும் எய்யப்பட்ட அம்புபோல சீறி கதவுவழியாக வெளியே பாய்ந்தது. வெளியே முற்றத்தில் பரவியிருந்த சேற்றில் சிதறிக்கிடந்த அறைவெளிச்சத்தைக் கலைத்தபடி வளைந்து ஓடி இருளுக்குள் மறைந்தது. அது சென்ற தடம் சேற்றில் சிறிய அலைவடிவம்போலத் தெரிந்தது.
கீழே கிழவி மல்லாந்து நெளிந்துகொண்டிருந்தாள். வாயைத்திறந்து நாக்கு வெளியே நீள கையை வேகமாக அசைத்தபடி ஏதோ சொல்லமுயன்றாள். அவளுடைய வலதுகாலும் வலது தோளும் வலிப்புவந்தவைபோல அசைந்தன. பிருதை குனிந்து கிழவியின் முகத்தைப்பார்த்தாள். “முகத்திலேயே கொத்திவிட்டது. ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள். கிழவியின் கழுத்தில் தசைநார்கள் அதிர்ந்தன. வாய் ஒருபக்கமாகக் கோணி இழுத்துக்கொள்ள எச்சில் நுரை கன்னம் வழியாக வழிந்தது. குருதிக்குழாய்கள் நீலநிறமாக உடலெங்கும் புடைத்தெழத் தொடங்கியிருந்தன.
பிருதை அவள் கையைப்பிடித்துக்கொண்டாள். “அந்தக் குழந்தை…அதற்கு நாகம் துணை” என்றாள் கிழவி. அவள் கண்கள் புறாமுட்டைகள் போல வெண்மையாக பிதுங்கி நின்றன. “நாகவிஷத்தை நான் எடுத்தபோது அந்தக் குழந்தை சிரித்தது… நான் அதைக்கேட்டேன்…” அவள் கைகள் பிருதையின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டன. நீரில் நீந்துபவள் போல வலதுகாலை இருமுறை அடித்து மார்பை மேலேதூக்கினாள். பின்பு கைப்பிடி தளர கண்கள் மேலே செருகிக்கொண்டன. மார்பும் மெதுவாகக் கீழிறங்கி முதுகு நிலத்தில் படிந்தது.
பிருதை எழுந்து “வீரர்களைக் கூப்பிட்டு இவளை அகற்று… உடனே நீயே மதுராவுக்குச் சென்று என் மூத்தவரை வரச்சொல்!” என்று ஆணையிட்டாள். அவளிடம் மேலும் தற்சமன் கைகூடியிருப்பதைப்போல அனகை எண்ணிக்கொண்டாள்.