எம்.எஸ்.மீண்டும் கடிதங்கள்

எப்போதும் இல்லாத ஒரு உணர்வெழுச்சியை தந்த ஒரு கட்டுரை இது. எம்.எஸ்.என்ற ஒரு மாபெரும் உருவகத்தை அதன் திரைகளை விலக்கி பார்க்கவைத்த ஒரு உணர்வை தந்தது. நீங்கள் இப்புத்தகத்தை படிக்கக்கூடும் என்றோ இது குறித்து எழுதுவீர்கள் என்றோ சற்றும் எதிர்பார்க்கவில்லை

.இதில் எனக்கு பிம்பங்கள் உடையும் நிகழ்வுகள் ஏதும் இல்லை ஏனெனில், எம்.எஸ்.குறித்து நான் முன்பு அறிந்த விஷயங்கள்தான் இப்புத்தகத்தில் இருப்பவை.
சிறுவயது முதல் எம்.எஸ்.ஸின் இசையை கேட்டு வளரும் ஒரு சூழ்நிலையிலேயே நான் இருந்திருக்கிறேன். அவரைக்குறித்து முதலில் அறியவந்தபோதும், அது ஒரு பெரிய விஷயமாகத்தோன்றவில்லை. “சரி, இப்போ என்ன அதுக்கு” என்ற கேள்வியே எழுந்தது. லோகிததாஸின் கட்டுரைகளில் நீங்கள் உரையாடியபோது எழுதிய வரிகள் தான் என்னுடைய தரப்பும். இருவருக்கும் இடையில் ஒரு மாபெரும் இசை உருவத்தை கண்டுகொள்ளும் சாத்தியம் வந்தபின் மற்றவிஷயங்கள் இரண்டாம் பட்சமாக கூட இல்லாமல் போய்விடுகின்றன.

எம்.எஸ். என்ற ஒரு உருவகத்தின் மீது எனக்கு மட்டற்ற மரியாதை உண்டெங்கிலும், அவரது இசையிலும், பல செயல்பாடுகளிலும் எனக்கு ஒப்புதல் இருந்ததில்லை. இப்போதும் அப்படியே. தன் வாழ்நாள் முழுவதும் அவர் தன்னை ஒரு அதீத தமிழ் பிராமணப்பெண்ணாக காட்டிக்கொள்வதிலேயே சிக்கியிருந்தார். அவரது அந்த பிம்பத்தை உதற அவர் ஒருபோதும் தயாராக இல்லை. சமூகரீதியில் இழிவானதென்று கட்டமைக்கப்பட்ட ஒரு குலத்தில் பிறந்து இன்று திருப்பதியில் சிலையாக இருக்கும் ஒரு பேறு பெற்றமைக்கு அவரது உழைப்பும் அதற்காக முழுமுயற்சியுடன் பின்னனியில் அசுரத்தனமாக உழைத்த சதாசிவம் என்ற ஒரு ப்ரொபகாண்டிஸ்டின் பெருமுயற்சியுமே காரணம்.

ஜன்மனா ஜாயதே சூத்ர: சம்ஸ்காராத் பாவேத் த்விஜா என்று என் ஆசான் சொல்வார். பிறக்கும்போது எவனுமே சூத்திரனாகத்தான் (சூத்திரனைப்போலத்தான் – இப்படியும் சொல்கிறார்கள்) பிறக்கிறான். எந்த குலத்தில் பிறந்திருந்தாலும், அவரது சம்ஸ்காரங்களைக்கொண்டுதான் அவர் பிராமணனன் ஆகிறான் என்று. எம்.எஸ். தற்காலத்தில் இதற்கு ஒரு மிகச்சிறந்த உதாரணம். எனவே அவரை ஒரு பிராமணராக கட்டமைத்துக்கொள்வதில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனாலும், தற்காலத்து ஒரு இழிவாக பார்க்கப்பட்ட ஒரு குலத்தைச் சார்ந்தவர் தன்னை மேல்நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால், ஒரு பிராமணராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவேண்டியதுதான் வழி என்றால் அதை நான் வெறுக்கிறேன். ஏன் பிராமணர் அல்லாத ஒருவர் மேன்மை அடைய இயலாது என்ற ஒரு சமூகக்கட்டமைப்புத்தானே இதற்குக்காரணம். இதன் காரணமாக எம்.எஸ்.ஸை நான் சமூகட்டமைப்பை உடைத்து வெளியேறாத ஒரு பெண்ணாகத்தான் பார்க்கிறேன். தன்வரையில் தன்னை காப்பாற்றிக்கொள்ளவும், மேன்மை படுத்திக்கொள்ளவும் மட்டுமே சிந்திக்கத்தெரிந்த ஒரு சிறிய மனமாகத்தான் தோன்றுகிறது. அதுவும், சதாசிவம்,கல்கி, ராஜாஜி போன்றவர்களின் பேராதரவு இல்லையென்றால் ஐக்கிய நாடுகள் சபைவரை செல்வதென்பது நிச்சயம் சாத்தியமில்லாதது.

இசையுலகில் பெரும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பலர் பிராமணர் அல்லாதோரே. இந்த விதத்தில் யேசுதாஸ் சற்றே எனக்கு ஆறுதலளிக்கிறார். அவர் தொடக்கத்தில் தன்னை ஒரு ஹிந்துவாக அடையாளப்படுத்திக்கொள்ள முயன்றாலும், அவர் கடைசியில் யேசுதாஸாகவே தொடர்வது எனக்கு மிகவும் சந்தோஷமானவிஷயமாகவே இருக்கிறது. ஏனெனில், ஜாதியோ, மதமோ, உண்மையில் இசைஅறிந்தவருக்கு ஒரு பெரிய விஷயமே இல்லை.

லோகித்தாஸ்-ஜெ உரையாடலில் வரும் ஹிஸ்ஹைனஸ் அப்துல்லாவில் வரும் காட்சி காட்டும் உண்மை அதுதான். இல்லையென்றால், உஸ்தாத்களும், பண்டிட்களும் அடித்துக்கொண்டல்லவா இருக்கவேண்டும்?
நமக்குள் இருக்கும் மிருகத்திற்குத்தான் ஜாதிகளும், மதங்களும் தேவை. நமக்குள் இருக்கும் கடவுளுக்கல்ல. எந்த இசை நமக்குள்ளிருக்கும் கடவுளோடு உரையாட வருகிறதோ அதுவே சிறந்த இசை என்று சொல்வேன். அப்போது சமூக கற்பிதங்கள் அதை கட்டுப்படுத்துவதில்லை. இதுவும் லோகிததாஸ் கூறியதுபோல “ஒரு ரசிகனின் பலவீனங்களை பயன்படுத்திக்கொள்ளாத ஒரு கலையாக இருந்தால்” அது சரி. இல்லையென்றால் தவறு. மிகவும் எளிய வாய்ப்பாடு மட்டுமே. என்வரையில் லோகியை எனக்கு மிகவும் ..மிகவும் ..நெருக்கமாக உணர்கிறேன். அவரது பல கருத்துக்களை நான் என்னோடு மிக எளிதில் பொருத்திக்கொள்ள முடிகிறது. அவரது படங்களை விரட்டிப்பிடித்தாவது பார்த்துவிடுவேன். என்ன ஒரு மனிதன் சார்.

எம்.எஸ்.க்கும் ஜி.என்.பி க்கும் இடையிலான உறவு குறித்தும், எம்.எல்.வி யுடன் ஜி.என்.பி. யின் உறவு குறித்தும் நீங்கள் எழுதிய சில விமரிசனங்கள் மீது எனக்கு சில வகையில் ஒப்புதல் இல்லை. எம்.எஸ். தனது சமூக கட்டமைப்புகளை உடைத்து வந்தபோதும், அவரது சமூகக்கட்டமைப்பில் அக்காலத்தில் இருந்த ஒரு வழக்கமாக, ஒரு பெரிய மனிதரோடு தன்னை இணைத்துக்கொள்ளும், தன் வாழ்வை கெட்டிப்படுத்திக்கொள்ளும் ஒரு செயலை செய்திருக்கிறார். இது அக்காலத்தில் அந்த குலத்தவருக்கு விதிக்கப்பட்ட சாபம். அதை தாண்ட சற்றும் அவர் முயற்சிக்கவில்லை. முதலில் ஜி.என்.பி யுடன் காதலில் இருந்தவர், பின் சதாசிவம் என்ற தந்தை-கணவரின் சிறகுகளடியில் தஞ்சம் புகுந்தார். அப்போதும் ஜி.என்.பி யுடனான அவரது உறவு அவருக்கு மிகவும் பலவீனமானதாகவே இருந்திருக்கிறது. ஆனால், இந்த உறவை ஜி.என்.பி பயன்படுத்திக்கொண்டார் என்ற சொல் மிகவும் கடுமையானது என்றே கருதுகிறேன்.

ஜி.என்.பி என்ற ஒரு மனிதரின் ஆழ அகலங்களை சரியாக புரிந்துகொள்ள நாம் எப்போதுமே முயற்சிக்கவில்லை. ஜி.என்.பி யின் காரணமாக மேடைகளை விட்டு ஓடிப்போனவர்கள், பிழைப்பை மாற்றிக்கொண்டவர்கள் அதிகம். ஒரு சூராவளிபோல இசையுலகை ஆக்ரமித்த பெரும் சக்தி அவர். அவர் சரீரம், சாரீரம் இரண்டும் கண்டு கவரப்படாதவர்கள் மிக மிக குறைவு. அவரை சதாசிவம் போன்றவர்கள், மட்டம்தட்ட எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஏராளம். ஜி.என்.பி யால் புகழ் குறைந்த மாற்றுக்குழுவால் (செம்மங்குடி முதலானோர்) பெரிதும் முன்னெடுக்கப்பட்ட ஆயுதமாக எம்.எஸ். இருந்திருக்கிறார். அவருக்கும் அது மிகவும் தேவைப்பட்டிருக்கலாம்.

ஆனாலும், ஜி.என்.பி தாந்த்ரீக முறைகளை கற்று, சாக்த வழிபாட்டு முறைகளை பெரிதும் கடைபிடித்த ஒருவர். தன்னுடலையே கண்ணாடியில் உற்று நோக்கி வழிபடுபவர். பெண்கள் அவரது பலவீனம் அல்ல, அவர்தான் பெண்களின் பலவீனம். இதை நான் தவறாக பார்க்கவில்லை. அவரது மனசாட்சிக்குத் நிச்சயம் தெரியும் அவர் என்ன செய்கிறார் என்று, இல்லையா? ஒரு ஸ்த்ரீ லோலன் என்பதுபோல அவரை சித்தரிப்பது ஒருதலை பட்சமானது மற்றும் எம்.எஸ். தரப்பை நியாயப்படுத்துவதற்காக கூறப்படுவது என்று நினைக்கிறேன். ஜி.என்.பி பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும், எனது நண்பர் அவர் குறித்து மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அதுகுறித்து உரையாடி பல விஷயங்களை அறிந்திருக்கிறேன்.

(எனக்கு ஜி.என்.பி மிகவும் பிடித்த இசைக்கலைஞர். ஆனால் அந்த காரணத்தால் அவரை நான் உயர்த்திப்பிடிக்க முயற்சிக்கவில்லை. அவர் இசையை அறிய முற்பட்டபோது, அவரது பிரம்மாண்டம் கண்டு திகைத்து நிற்கிறேன். வெறும், இசைக்காரணங்களால் மட்டுமே. முதல்முறை அவர் சிறப்பாக பாடிய ஒரு பாடலை நானும் பாட நேர்ந்தபோது, யானை நடந்த கால்தடத்தில் சிறு எறும்பு ஊர்வதுபோல உணர்ந்தேன். இது ஜி.என்.பி. குறித்த எனது பிம்பம் உடைந்ததால் வரும் மறுப்புக்கடிதம் என்று எண்ணவேண்டாம். நீங்கள் குறிப்பிடாத அவரது மற்றபல பலவீனங்களும் அறிந்தும் ரசிக்க முடிகிறது)

இசைக்காரணிகளால் எம்.எஸ்.ஸை அளவிட முற்ப்பட்டால், அவரது ஞானம் அப்படி ஒன்றும் விசேஷமானதல்ல. ஆனால் அவரது குரல் மிக மிக அருமையானது. மிகவும் ரசிக்கக்கூடியது. இசையில் ஞானம், குரல் இரண்டும் அலகுகள் என்று எடுத்துக்கொண்டால், சாஸ்திரீய இசையில் மனோதர்மம் என்றழைக்கக்கூடிய ஞானத்திற்கு முதலிடம். அதுதான் முதலில் மதிப்பிடப்படும். குரலுக்கு இரண்டாமிடம்தான். இதனால், எம்.எஸ்.க்கு ஞானமில்லை என்று சொல்லவரவில்லை. அவரது ஞானத்தைவிட அவரது குரல்தான் மெலெழுந்து நிற்கிறது. அவரது மனோதர்மமும், கணக்கு வழக்குகளும், அதேசமயத்தில் வாழ்ந்த எம்.எல்.வி, டி.கே.பி,வசந்த கோகிலம் போன்றவர்களோடு ஒப்பிட்டால் சற்று குறைவே. அதை அவரது குரல் ஈடு கட்டியது.
பக்தியை பரப்புவது சாஸ்திரீய இசையின் பணியல்லை. அதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளது. கர்னாடக இசை முற்றிலும் மேலான வேறு தளத்தில் இயங்குவது. பக்தி கீதம் அல்ல அது. அதை பக்தியின் பரிணாமத்தில் இயங்கவைத்த பெரும்பணி எம்.எஸ். ஆல் சாத்தியமானது.

ஆனாலும் அது தேவையில்லாதது மட்டுமல்ல, தவறானதும் கூட. எம்.எஸ். எப்போதுமே, பக்தி பாவத்தை முன்னெடுத்துவந்தவர். ஒரு எளிய ஆத்மசமர்ப்பண பாவத்தை எம்.எஸ். முன்வைத்தவர். இசை என்னைப்பொருத்தவரை ஒரு முடிவிலி. இசையை இசையாக அல்லாமல் வேறு பாவங்களில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் திணிக்கும் பணியை பக்தி கீதங்கள் செய்யும்.எனவே, சாஸ்திரீய இசைக்காரணங்களுக்காக இவரை நான் பெரிய அளவில் எடுத்துக்கொள்வதில்லை. இது பலருக்கு கோபமூட்டுவதாக இருக்கலாம். ஆனால் என்வரையில் இதுதான் எனது மதிப்பீடு. இதில் மாற்றிக்கொள்ள எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

சாஸ்திரீய இசையில் குரலுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டிய அவசியமும் இல்லை. மனோதர்மத்தை வெளிப்படுத்தும் குரல் இருந்தாலே போதுமானது. நல்ல குரல்வளம் இருப்பது ஒரு மேலதிக நன்மை. அவ்வளவே. குரல் அதிமுக்கியம் என்று சொன்னால் , மதுரை மணி,சோமு, எம்.டி, ராமநாதன், முசிறி போன்றவர்கள் பாட்டையெல்லாம் காதுகொடுத்து கேட்கமுடியுமா?

எம்.எஸ். ஒரு சாதாரண பெரிய இசையறிவில்லாத மனிதனை இசைக்குள் கொண்டுவர செய்த தொண்டு மிக அதிகம். இதைவிட அதிகமாக யேசுதாஸ் செய்திருக்கிறார். அவரது பங்களிப்பு மிக மிக அதிகம். கர்நாடக இசைக்குள் யேசுதாஸ் வழியாக வந்தவர்கள் மிக மிக அதிகம். எம்.எஸ் ஸை விட. இருவரின் தாக்கமும் இந்த சமூகத்தில் கிட்டத்தட்ட ஒன்று என்று நினைக்கிறேன். நிச்சயம் எம்.எஸ். இசையுலகில் புரட்சி செய்த ஒரு பினாமினன் அல்ல. ஒரு அழகான கனவு. சமூக ரீதியிலும், அவரது சமூகம் விதித்த கட்டுக்களை உடைத்தவரும் அல்ல. இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட்ட ஒரு சராசரி வாழ்க்கைத்தான். இவர் பிரபலமானதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் பிரபலம் என்பது வேறு நிஜம் என்பது வேறுதானே? பாப்கார்ன் இந்தியாவில் அதிகம் விற்பதால் அது அரிசியை, கோதுமையை விட சிறந்ததாகிவிடுமா என்ன?

ராமச்சந்திர ஷர்மா

அன்புள்ள ராம்,

உங்கள் கடிதம் ஆறுதலாக இருக்கிறது. என்னுடைய மனநிலைகள் பலவற்றை எதிரொலிக்கிறீர்கள். ஆனால் நான் இசை படித்தவன் அல்ல. ஆகவே என்னால் எம்.எஸ்ஸின் இசையைப்பற்றி எந்தக்கருத்தையும் சொல்லிவிட முடியாது. நான் குறைவாகவே எம்.எஸ் கீர்த்தனைகளைக் கேட்டிருக்கிறேன். நான் கேட்ட பாடல்களில் எல்லாம் குரலில் முதுமை கூடிவிட்டிருந்கது. ஆகவே பெரிதாக என்னை கவரவில்லை.

என்னை கவர்ந்தத் ஜார்ஜின் நூலில் உள்ள அந்த சமூக அலசல்தான். அதையே என் கட்டுரையில் எழுதியிருக்கிறேன்

தினம் பத்து பிராமணர்கள் கடிதத்தில் கோபம் வருத்தம் எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். சென்ற காலங்களில் படித்த பிராமணர்கள் இத்தனை சாதி உணர்ச்சியுடன் இருக்கவில்லை. அவர்கள் விமரிசனம் செய்யவும் செய்யப்படவும் தயாராக இருந்தார்கள். ஆகவேதான் அவர்களால் ஜெயகாந்தனை ரசிக்க முடிந்தது

இப்போது பிராமணர்கள் சிறு சிறு சமூகக் குழுக்களாகச் சுருங்கி தங்களுக்குள் மட்டுமே உறவாடிக்கொண்டு மீண்டும் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குச் சென்றுவிட்டார்கள் என்று படுகிறது. அதுதான் வருத்தமாக இருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ,

//எம்.எஸ்ஸின் சாதியை மிக இழிந்தது என எண்ணும் ஓர் ஆழ்மனநிலையே அது சொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைகிறது. அது எம்.எஸ்ஸின் பிம்பத்தை தகர்க்கிறதென எண்ணுகிறது. அந்த எரியும் வாழ்வில் இருந்து மீள அவர் ஒருவருக்கு இளமையில் ஒருசில கடிதங்களை எழுதினார் என்பதை அவரது பிழையாக எண்ணும் மனநிலையே அது சொல்லப்படுகையில் கொதிப்படைகிறது//

என் கொதிப்பு அவரது பிழையாக அது காட்டப்படும் போது தான்.
நான் பிராமண குடும்பத்தில் பிறந்தவள் என்று படித்த பின்னர் நீங்கள் என் கடிதத்தை முழுமையாக படிக்கவில்லை ஆக இருக்கும். “ஜி.என்.பி. பற்றி அம்மாவுக்குக் காதல் இருந்திருந்தால் உங்களுக்கு என்ன போகிறது? உங்கள் சமக் கால (முறையற்ற, முறை-மஹா-அற்ற) காதல்கள் பற்றி, சினிமாக்காரர்கள் பற்றி எழுதி விடுவீர்களா?” என்றே கேட்டிருந்தேன்.

//அந்த எரியும் வாழ்வில் இருந்து மீள அவர் ஒருவருக்கு இளமையில் ஒருசில கடிதங்களை எழுதினார் என்பதை அவரது பிழையாக எண்ணும் மனநிலையே அது சொல்லப்படுகையில் கொதிப்படைகிறது//

என்னைப் பொறுத்த வரை, எதிலிருந்தோ மீளத் தான் எங்கேயோ எல்லாரும் போகிறோம். என் முந்தைய கடிதத்திலும் சரி, இதிலும் சரி, அம்மா யாருக்கும் கடிதம் எழுதியது பிழையில்லை. அவர் காதல்(கள்) பற்றி “உங்களுக்கு என்ன போகிறது” என்று தான் கேட்டிருந்தேன். இதோ போல சமகால சினிமாக்காரர்களின் காதல் பற்றி எழுதி விடுவீர்களா என்று கேட்டிருந்தேன்.
மீண்டும் மூன்றாம் முறை: அவ‌ர் ம‌னதில் அன்பு தோன்றியிருந்தால், அவ‌ருக்கு அது காத‌ல் / க‌டித‌ம். எனவே எனக்கு அது(வும்) புனிதம் தான்.
உங்களூக்கு: அதை எழுதி விட்டீர்க‌ள். இன்னும் பிற‌ சினிமாக்கார‌ர்க‌ளின் காத‌ல்க‌ள் ப‌ற்றியும் எழுத‌லாம். ஆனால், அவ‌ர்க‌ள் பிராம‌ண‌ர்க‌ளாக‌ இருந்தால் ம‌ட்டுமே அந்த‌ எழுத்தைக் காசாக்க‌ முடியும் போல‌!
என்னையும் என்போன்றோரையும் (என்போன்றோருக்கு என்ன சாதி என்று கண்டுபிடிப்பது உங்கள் வேலை) பொறுத்த வரை, எம்.எஸ். அம்மா இப்போது இருந்திருந்தால், அவர் காதல் பற்றி எழுதப்படுவது தரக்குறைவாக இருக்குமா இருக்காதா? அவ்வ‌ள‌வே. எங்க‌ளுக்கு அவ‌ர் புனிதர். அவ‌ருக்கு என்ன‌ சாதி அடையாள‌ம் தேவையாயிருந்த‌து என்ப‌து அவ‌ருடைய‌ புரித‌ல்.

//எம்.எஸ்ஸின் சாதியை மிக இழிந்தது என எண்ணும் ஓர் ஆழ்மனநிலையே //

சுருட்டை முடியும், ஆப்பிரிக்க‌ முக‌ அமைப்பும் கொண்ட‌ நான் இன்றைக்கு பிராம‌ண‌ சாதியில் பிற‌ந்திருக்க‌லாம். என் மூதாதைய‌ர் யாரோ ஆப்பிரிக்க‌ர் தாம். உங்களை விட என் மூதாதையர் தாழ்ந்த சாதியில் பிறந்திருக்கலாம் என்ற நினைப்பு எனக்குண்டு. அது நிகழ்ந்திருக்கக் கூடாது என்ற தவிப்பையே உங்கள் எழுத்துக்களில் காண்கிறேன். பிராமணர்கள் இன்றைக்கும் சாதிவெறி கொண்டே இருக்க வேண்டும் அல்லவா, இல்லையென்றால், பிழைப்பு கெட்டு விடுமே!

கெ. பி.

http://kekkepikkuni.blogspot.com

அன்புள்ள கே.பி,

நல்லது, உங்கள் கோபத்தை புரிந்துகொள்கிறேன். ஒரே ஒரு விஷயம் மட்டுமே சொல்ல விரும்புகிறேன். நான் என் சாதியைப்பற்றி எந்த ஒரு கடும் விமரிசனத்தை யார் வைத்தாலும் அது என்னைப்பற்றிய விமரிசனம் என்று எடுத்துக்கொள்ள மாட்டேன். அதற்காக ஆத்திரப்பட்டு எழுதியவன் பிழைப்புக்காக எழுதுகிறான் என்றெல்லாம் வசைபாடவும் மாட்டேன்.

நான் பிற சாதியினரைப்பற்றி எழுதியிருக்கிறேனா இல்லையா என்றெல்லாம் வாசித்த பின்னர் எழுதுவதே ஆத்திரம் இல்லாத நிலையில் நீங்கள் செய்யக்கூடியதாக இருந்திருக்கும். எம்.எஸ்ஸின் வாழ்க்கையை அல்லது காதலை ஜார்ஜ் தன் நூலில் இழிவுசெய்திருக்கிறாரா என்று ஆராய்வதே சமநிலையில் செய்திருக்கக் கூடியதாக இருக்கும். ஏன், அப்போது ஜார்ஜின் நூலும் சரி என் கட்டுரையும் சரி அன்றைய,இன்றைய பிராமண சமூக மனநிலையின் ஒரு பகுதி குறித்த ஒரு சித்திரத்தை மட்டுமே அளிக்கின்றன, எந்தக்குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்று புரிந்திருக்கும்

நீங்கள் எழுதிய வரிகளால் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. சென்ற பல வருடங்களாகவே ‘பார்ப்பன அடிவருடி’என்று சொல்லப்படுபவன் நான். பிராமணர்கள் மீதான வெறுப்புப்பரப்பலை நான் ஏற்பதில்லை, கடுமையாகவே எதிர்ப்பேன் என்பதனால். உங்கள் கடிதம் ஒரு நல்ல சமநிலையை அளிக்கிறது. பொதுவாக ஒருவன் நேர்மையாக இருந்தால் எல்லா தரப்புக்கும் எதிர்யாக ஆவான் என்பதே என் கொள்கை.

ஜெ

 

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

அம்பேத்கார் காந்தி குறித்த கட்டுரைகளுக்கு நன்றி. அத்துடன் எம்.எஸ்.சுப்புலட்சுமி குறித்த கட்டுரைகளுக்கும். நான் இப்போது நவீ£ன இந்தியாவுக்கு காந்தி எப்படி பொருள்படுகிறார் என்பதை புரிந்துகொள்கிறேன்

 

 

டிஜெஎஸ் ஜார்ஜ் நூலை ஒட்டி எம்.எஸ்.சுப்புலட்சுமியைப்பற்றி நீங்கள் எழுதியகட்டுரை ஆர்வமூட்டியது, எம்.எஸ் தேவதை என்ற தோற்றத்தில் இருந்து சாதாரண மனிதப்பெண்ணாக நம் முன் வருகிறார். நான் எம்.எஸ் மீது மிக அதிகமான பற்று கொண்டவன். ஆனால் ஒரு பெண்ணாக அவர்களைப்பற்றி ஏதும் தெரியாது. இப்போது ஒரு பெண்ணாக அவர்களைப்பற்றி மேலும் பிரியமும் மதிப்பும் கொள்கிறேன்

 

பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் நாவலை 80 சதவீதம் வாசித்திருக்கிறேன். தேவதாசி வாழ்க்கையைப்பற்றிய ஒரு சித்திரத்தை அவரும் அளிக்கிறார். ஆனாலும் அந்த உலகம் குறித்து அதிகமான ஆய்வுகள் நடத்தப்பட்டதாக தகவல் இல்லை.

 

அன்புடன்

பரத்

 

அன்புள்ள பரத்,

 

மனத்தடைகளை அகற்றிவிட்டுப் பார்த்தால் மட்டுமே சென்றகாலத்தை நம்மால் சரியாகப் பார்க்க முடியும். சரிதவறுகளை அறியவும் முடியும். அதற்கான ஒரு வழி என்ற அளவிலேயே எம்.எஸ் குறித்த நூல் முக்கியமானது என்று படுகிறது

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

 

எம்.எஸ் குறித்த உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. ஜார்ஜ் ஓர் உண்மையான வாழ்க்கையை உணர்ச்சிகரமாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார், பல வருடங்களுக்கு முன்னர்ந் ஆன் மூவர் என்ற ஒரு கதையை எழுதினேன். மணமான பெண்ணுக்கும் ஒருவனுக்கும் இடையேயான உறவைப்பற்றிய கதை அது. [பிராமண பின்புலம்] அப்போது ஓர் எதிர்ப்பலை கிளம்பியது  பலர் என்னை விமரிசனம் செய்தார்கள். ஆனால் இ.பா என்னை ஆதரித்தார். அந்த மனிதனின் பத்மா என்ற குழந்தை பிறந்ததை நான் பத்மசம்பவம் என்று சொல்லியிருந்தேன் அதுதான் விமரிசனத்துக்கு ஆளாகியது

 

மெட்றாஸ் லதாங்கி வசந்தகுமாரியும் இதைப்போலவே போராடி தன் இடத்தை அடைந்தவர். கிட்டப்பாவுக்குச் சுந்தராம்பாளின் கடிதங்கள் நெஞ்சை உருக்குபவை. பெங்களுர் நாகரத்தினம்மாவின் கதையை வாசிக்க ஸ்ரீராமின் தேவதாசியும் ஞானியும் என்ற  நூலை வாசிக்க வேண்டும். அது அவரது மகத்தான வாழ்க்கையைச் சொல்கிறது. அப்போதே அவர் வருமானவரி கட்டினார். அவர் இல்லையேல் தியாகராஜருக்கு சமாதி அமைந்திருக்காது

 

அழகான பதிவு.

 

நரசய்யா

 

 

அன்புள்ள நரசய்யா அவர்களுக்கு,

 

நான் நாகரத்தினம்மாள் குறித்து வாசித்திருக்கிறேன். அந்த வரலாற்று நூலை வாசித்ததில்லை

 

பெரும்பாலான உணர்ச்சிகர எதிர்ப்புகள் தங்களை எதுவோ ஒன்று சீண்டுவதாக எண்ணிக்கொள்பவர்களால் எழுப்பப்படுபவை. இப்போது எம்.எஸ்ஸின் அந்தரங்கம் குறித்து எழும் இதே குரல்கள் ஏன் கெ.பி.சுந்தராம்பாள்  பற்றிய நூல் [கொடுமுடிகோகிலம் கெ.பி.சுந்தராம்பாள்] வெளிவந்தபோது எழவில்லை?

 

நம் வாழ்க்கையின், நமது கடந்தகாலத்தின் ஓர் ஏடு. அதை நாம் வெளிப்படையாக அணுகுவதே சரியானது. வரலாறு என்பது அவ்வப்போது குழி எடுத்து மூடியபடியே முன்னால்செல்வதற்குரிய ஒன்றல்ல

 

ஜெ

 

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,வணக்கம்.தாங்கள் எம்.எஸ் பற்றி எழுதியது உணர்வுகளைப்பற்றிக்கொண்டு  ஆராயவைத்தது.உயிரின்மீதுமட்டுமான ஆழாமான தெளிவிலும் நிறுத்தியது. அன்புடன்-திருமதி ரஜினி பெத்துராஜா.  

அன்புள்ள ரஜினி பெத்துராஜா

எம்.எஸ் குறித்த கட்டுரையின் உணர்வை புரிந்துகொண்டமைக்கு நன்றி
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

எம்.எஸ் குறித்த உங்கள் கட்டுரை சிந்தனையைத்தூண்டுவதாக இருந்தது. அவரது வாழ்க்கையின் பலதளங்களை அறியச்செய்தது. அதை வாசித்தபின் எம்.எஸ்சின் வெங்கடேச சுப்ரபாதத்தை கேட்கும்போது மனம் ஒன்ற முடிந்தது. தனி வாழ்க்கைக்கு அப்பால் இருக்கிறது கலை.

ஆனால் நாம் தமிழர்கள். நமக்கு ஒவ்வொன்றையும் பிரித்துக்கொள்வதற்கு திறமை குறைவு. ராதிகா சரத் குமாரை சித்தி என்று கூப்பிடுபவர்கள் நாம்.  இருபதாம் நூற்றாண்டு இசை நட்சத்திரங்களை பற்றி புதிய ஒளியில் நல்ல வாசிப்பனுபவம் அளித்த கட்டுரைகளுக்கு நன்றி “.
ஸ்ரீகாந்த்
திருவனந்தபுரம்
அன்புள்ள ஸ்ரீகாந்த்

பிரித்துக்கொள்வதை விட முக்கியமானது எது தவறு எது சரி என புரிந்துகொள்வது. ஒரு சாதியில் பிறப்பதோ அல்லது அதை உதற முயல்வதோ அல்லது காதலோ ஒன்றும் இழிவான ரகசியங்கள் இல்லை அல்லவா?

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் பிற்படுத்தபட்டோரும்
அடுத்த கட்டுரைவ.கௌதமனும் ‘தலைமுறைக’ளும்