ஸெபாஸ்டின் கவிதைகள்

மறு அடி

  

சின்ன விஷயத்தைப்

பெரிதாக்கி

அவளை

அடித்தேன்.

கெட்டவார்த்தை சொன்னேன்.

அவள் சாப்பிடவில்லை,

தூங்கவில்லை.

 

இரவு

இருட்டில்வந்து

பக்கத்தில்படுத்துக்கொண்டு

சொன்னாள்,

”சும்மாதான் என்னை அடித்தீர்கள்

இனிமேல் அடித்தால்

நானும் அடிப்பேன்”

 

 

தூக்கத்தில்

ஒரு கனவு கண்டேன்.

ஒற்றையடிப்பாதையில்

நடந்துகொண்டிருக்கிறேன்.

சட்டென்று

பாதை அசைந்தது

அது ஒரு மலைப்பாம்பு!

 

அவள்

பெரிய ஒரு கம்புடன்

ஓடிவந்து

அதை அடித்துக்கொண்டே இருந்தாள்

சாகும்வரை

   

 

 

உளவியலாளன்

 

  

ஆள்கூட்டத்தில்

எத்தனைபேர்

கிறுக்கர்கள் என்றறிய

ஒரு செம்பருத்திப்பூவை

தூக்கிக்காட்டினேன்

 

சிலர் பார்த்துக்கொண்டு சென்றார்கள்

சிலர் பார்க்கவேயில்லை

ஆள்கூட்டம் சுருங்கியது

தனியனானேன்

 

மனிதர்களை நினைத்து

ஊறிவந்த புன்னகை

உரத்த சிரிப்பாகியது

தூக்கிக்காட்டிய பூவை

செவியில் செருகி

ஆள்கூட்டத்தைத்தேடி

அடுத்த தெருவுக்கு ஓடினேன்

 

  

 

 

 

இருட்டைப்பிழிந்து

 

 

இரவு முழுக்க

பழைய துணியை முக்கி

இருட்டை கொஞ்சம் கொஞ்சமாக

பிழித்து எடுத்து விட்டுக்கொண்டிருந்தேன்.

வீட்டுக்குப் பின்னால் இருந்த

நீர்த்தொட்டியில்

 

கடும் உழைப்பு.

மெல்ல வெளுத்து வந்தன

வானமும் பூமியும்.

தயக்கத்துடன் உதித்துவந்த சூரியன்

மரக்கிளைகள் நடுவே இருந்து

எரிச்சலுடன் என்னைப்பார்த்தது

 

வெளுத்து எடுத்த பூமியைப்பார்த்து

என்னை மறந்திருந்தேன் நான்.

ஒன்றுமே தெரியவில்லை

வீட்டுக்குப்பின்னால் உள்ள தொட்டியில் மூடிவைத்திருந்த

இருட்டு மெல்ல

வெளியே ஒழுகிவந்தது

 

அது என் இருகண்களுக்குள்ளும் ஏறிவந்தது

கை வீசி துழாவியலைந்தேன்

அந்தப் பழந்துணியை

 

 

 

 

 

 

 

 

உள்ளங்கைநெல்லிக்கனி

 

 

 

நேநோ தொழில்நுட்பத்தால்

பூமியை

ஆயிரம் கோடிப்பங்கு சிறிதாக்கி

ஒரு நெல்லிக்காயளவாக்கி

உள்ளங்கையில் வைத்தேன்

இனிமேல் துல்லியமாக ஆராயலாம்

 

இப்போதும் முக்காற்பங்கு தண்ணீர்தான்

சுட்டு பழுத்த உலோகம் போல குன்றுகள்

இருட்டும் பசுமையும் குறைந்த

காடுகளின் தடங்கள்

ஆங்காங்கே நதியோடிய வடுக்கள்

ஒரே பார்வையில் இத்தனையும் தெரிந்தன

 

இனி பூமியை பழையதுபோல ஆக்கவேண்டும்

அதற்கு நான் முயன்றபோது

முக்காற்பங்கு நிரம்பிய நீர் தளும்பியோடியது.

உள்ளங்கை கவிந்து.

அதனால் என்னை மன்னியுங்கள்.

நேநோ தொழில்நுட்பத்தால்

மறுபடியும் பழையவடிவுக்கு மாறாத

பூமியில்தான் நாமெல்லாம் இருக்கிறோம்

இது ஒரு உண்மை

ரகசியமும் கூட.

     

 

 

 

ஒருவேளை இழந்தது….

 

 

 

குப்பைக்கூடையில்

பாலிதீன் பையில்போட்டு

வீசினேன்

பிசுபிசுப்பான

குப்பைகள் நடுவெ

கிடந்து அதிரும் அதை

நாய்களோ காகங்களோ

தின்னக்கூடும்.

மூக்கு செலுத்தி துழாவும்

தெருநாய்கள்

அதைக்கண்டு அஞ்சலாம்.

அழுகிய குடல்களும்

துர்நாற்றமும்

அதற்கு துணையாகும்.

ஆனால்

காலியான நெஞ்சுக்கூடு

வெம்பிக்கொண்டேயிருக்கும்

பொருந்தாமல்போன

ஓர் இதயத்தை எண்ணி

 

 மலையாள நவீனக்கவிஞர்களில் முக்கியமானவரான ஸெபாஸ்டின் கேரளத்தில் கொடுங்கல்லூர் கோட்டைப்புறத்தில் பிறந்தார். எட்டு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன

முந்தைய கட்டுரைசு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாவல்கோட்டம் 5