எல்லோராவில் உள்ள அழகிய சிலைகளில் முக்கியமானது சிவனும் பார்வதியும் அமர்ந்து பகடை விளையாடும் புடைப்புச்சிற்பம். செந்நிற மணற்பாறையில் செதுக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தின் ஏழெட்டு மாதிரிகள் எல்லோராவில் உள்ளன. இந்தக் கரு அக்காலகட்டத்தில் முக்கியமான ஒரு காவியத்தருணமாக இருந்திருக்கலாம். பல்வேறு புராணங்களில் இக்காட்சி வருகிறது. பிரபஞ்சம் என்பது அம்மையும் அப்பனும் ஆடும் ஒரு பகடைக்களம். ஒருபக்கம் ஒழுங்கும் மறுபக்கம் அழகும். ஒருபக்கம் கடமையும் மறுபக்கம் கருணையும். அந்த முடிவில்லாத விளையாடலைச் சித்தரிக்கும் பல்வேறு தருணங்களை புராணங்கள் சொல்கின்றன.
ஆனால் சிற்பம் அளிக்கும் பரவசமே வேறு. அதை ஓர் அழகிய குடும்பக்காட்சியாக காட்டுகிறான் சிற்பி. அம்மை தாயத்தை உருட்டிவிட்டு அலட்சியமாக கையைப்பின்னால் ஊன்றி அமர்ந்து கேலியாக ‘என்ன ஆச்சு?’ என்று சிரிக்கிறாள். திரண்டபுஜங்கள் புடைக்க கையூன்றி அமர்ந்து ‘என்னடா இது?’ என திகைக்கிறான் அப்பன். சூழ தேவதேவியர் திகைத்தும் சிரித்தும் நிற்கிறார்கள். பிரபஞ்ச நிகழ்வெனும் பகடையாட்டத்தை அம்மையன்றி எவரும் புரிந்துகொள்ளவேயில்லை! எப்படி முடியும்? பெற்றால் அல்லவா தெரியும்?