எம்.எஸ்.மேலும் கடிதங்கள்

அக்னிப்ரவேசம் அல்லது தீயிடப்பட்ட வாழ்க்கை

திரு ஜெயமோகன் அவர்களே !

மேலேகாணும்வாறுதானே அந்தக் காலத்திலெல்லாம் திரைப்படங்களுக்குப் பெயர் இரண்டு பெயர் வைப்பார்கள்.

அந்தப்பாணியிலேயே உங்களது “அக்னிப்ரவேச”த்திற்கும் தலைப்பு வைக்கலாம். உங்கள் எழுத்துக்கு அல்லது T.J.S. ஜார்ஜின் எழுத்திற்குப் பொருத்தமாக இருக்கும்.

உங்கள் பாட்டி – வேண்டாம் என் பாட்டி என்றே வைத்துக்கொள்வோம்; கிழவி ஒரு முழு வாழ்க்கை வாழ்ந்து இறந்து போய்விட்டாள்; எங்கள் குடும்பத்தினர் கூடி என்ன செய்வோம் ? செய்ய வேண்டிய சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டு கடைசீ நாளில் சரம ஸ்லோகம் – இரங்கற்பா படிப்போம்; அப்போது அந்த பெரிய மனுஷி எங்கள் குடும்பத்தின் மேன்மைக்காகப் பட்ட பாடுகள், தியாகங்கள் அவளுடைய சிறப்பான குணங்கள் இவை பற்றியெல்லாம் சொல்லி வாழும் சந்ததியினர்க்கு ஒரு ஊக்கம் கொடுக்கும் வகையில் அந்த நிகழ்ச்சி இருக்கும். இது முறை; இதுதான் முறை.

மாறாக எங்கள் பாட்டியின் வாழ்க்கையில் 18 வது வயதில் ஏற்பட்டதாக ஒரு அவலத்தை அல்லது ஒரு தோல்வியை எடுத்து வைத்துக்கொண்டு எழவு கொண்டாட மாட்டோம். அது எந்த விதத்திலும் அந்தக் கிழவிக்கோ எங்களுக்கோ பெருமை சேர்க்காது.

ஒரு இசைக்கலைஞரை(எந்தக் கலைஞரையும்) ரசிப்பதற்கு நமக்கு மூன்று கோணங்கள்தான் உள்ளது;

  1. குரலின் அழகை, காதில் வந்து பாயும் அந்த ‘இன்பத் தேனை’, பாடலின் பாவங்களை – அந்தக் குரல் வேளிப்படுத்தும் ரஸங்களை ஒரு எளிய ரசிகனாக இருந்து ரசிக்கலாம்.
  1. ஒரு விமர்சக ரஸிகனாக, மேல்பஞ்சமத்தில் சருக்கிவிட்டது, கீழ் ஷட்ஜமத்தில் வழுக்கிவிட்டது இப்படியாக நம்முடைய சாஸ்த்ரீய ஞானத்தையோ அல்லது பாடகரின் அந்த ஞானத்தின் குறைபாடுகளையோ சுட்டிக்காட்டி ரசிக்கலாம்.

3. ஒரு நிகழ் கலையாகவும் இது இருப்பதால் மேடையில் பாடகர் அமரும் விதம், உடையலங்காரம், அங்க அசைவுகள்(சுப்புடு, பாடகர் சேஷகோபாலனை சேஷ்டைகோபாலன் என்பார்) இவை பற்றியும் நாம் கருத்து சொல்லலாம். இவை தாண்டி, மேடையிலேய டம்ப்ளரில் ஏதோ எடுத்துச் சாப்பிடுகிறாரே அது சுக்கு வெந்நீரா, மிளகு, மஞ்சள் தூள் போட்ட பாலா அல்லது காப்பியா இந்த ஆராய்ச்சி செய்யக்கூட நமக்கு உரிமையில்லை.

ஆனால் நீங்கள் – ஜார்ஜ் இருவரும் ரொம்பப்பெரிய சிந்தந்த, ததுவ ஆராய்ச்சி செய்வது போல் ஒரு தோற்றத்தைக் காண்பித்துக் கொண்டு நிறை வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெரிய மனுஷியை அவருடைய மறைவிற்குப் பிறகு சிறுமைப்படுத்தியிருக்கிறீர்கள்.

பிரபலங்களைப் பற்றி கிசுகிசு எழுதுபவர்க்கும் உங்களுக்கும் ஒரே ஒரு வித்யாசம்தான்; தாங்கள் இலக்கண, இலக்கிய செரிவுள்ள ஆடம்பரமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி எழுதியிருக்கிறீர்கள்.

அரை நூற்றாண்டுகாலத்திற்கு மேல் அந்தப்பெண்மணியுடன் வாழ்ந்து அவரது மேன்மைகளுக்கெல்லாம் கூடுதல் காரணமாயிருந்த அவர் கணவனைவிட உங்களுக்கு அந்தப் பெண்மணி மீது அதிக அக்கரை உள்ளதாகக் காண்பித்துக் கொள்ள முயல்கிறீர்கள்( “More loyal than the King” என்று சொல்வார்களே அப்படி).

அந்தரங்கம் புனிதமானது மட்டுமல்ல பிரத்யேகமானதும்கூட. அது அழகானதோ, அழுக்கானதோ சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி மூன்றாமவர் மூக்கை நுழைக்கக்கூடாது – அதுவும் அவர் இறந்த பிறகு.

தன் மனைவி வெகு லக்ஷங்களை சம்பாதித்தும் அதயெல்லாம் தம் பெண்களுக்கு மட்டுமே சேர்த்து வைக்க வேண்டும் என்று எண்ணாமல்(அதற்கு உரிமை இருந்தும்) அவற்றையெல்லாம் தர்மம் செய்ய ஊக்கப்படுத்தினாரே அந்தக் கணவர் அதைப் பாராட்ட மனமில்லாவிட்டலும் பரவாயில்லை; நீங்கள் அதை ஜாதி ரீதியாகப் பார்த்துக் கேவலப்படுத்த முயற்சிக்கிறீர்களே – உத்தம நோக்கம்தான்.

சில ஆண்டுகளுக்குமுன் ஒரு கட்டுரை படித்த ஞாபகம். அதில் புதுமை பித்தனின் பல கதைகளில் பாலியல் அணுகுமுறை இருந்ததற்குக் காரணம் என்று அவர் சொந்த வாழ்க்கையத் தோண்டி ஏதேதோ விஷயங்களையெல்லாம் சொல்லியிருந்தார்; அவையெல்லாம் இவருடைய அனுமானம். ஆனால் அவர் ஏதோ உன்னதாமான, தீர்மானமான ஆராய்ச்சி போல் எழுதியிருந்தார். புதுமைப்பித்தனையும் பெருமைப்படுத்தவில்லை; எழுதியவரும் பெருமை கொள்ளும்படியாக இல்லை அந்தக் கட்டுரை.

பிம்பங்களை உடைப்பது ஏதோ திருப்பணிபோல் பேசுகிறீர்கள். நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எல்லா விஷயங்களுமே கர்பனை கலந்ததுதான் என்பது சிந்திக்கத் தெரிந்த எழுத்தாளரான உங்களுக்குத்தெரியாததா என்ன ? உங்களுக்குப்பின் உங்கள் குழந்தைகள் உங்கள் பெருமைகள் பற்றி மற்றவரிடம் பேசும்போது உள்ளது உள்ளபடியா சொல்வார்கள். நிச்சயம் இருக்காது. இதில் குறைகாண எதுவுமில்லை. இது இயல்பு.

எங்கள் உறவினர் வீட்டில் எம்.எஸ் தம்பதியினர் இரு நாட்கள் தங்கியிருந்த போது அருகிருந்து கவனிக்கும் வாய்ப்புப் பெற்றவன் என்ற முரையில் சொல்கிறேன், அந்த தம்பதியினர் உங்கள் கட்டுரை உணர்த்துவது போல் நிர்பந்த வாழ்க்கை வாழவில்லை; ஆத்மார்த்த வாழ்க்கையே வாழ்ந்தார்கள் என்பதே நான் பெற்ற உணர்வு. எம்.எஸ். மேடயில் அமர்ந்து படும்போது எதிரே கீழே அமர்ந்து திரு.சதாசிவம் அவர்கள் எந்தவித Ego பிரச்சினையும் இன்றி ஒன்றி ரசித்ததையும் அருகே அமர்ந்து பார்த்திருக்கிறேன். நம்மை மேம்பட்டவராகக் காட்டிக்கொள்ள பெரியவர்களை சிறுமைப்படுத்த முயலக்கூடாது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு சினிமாவில்,போலீஸ் வண்டியில் ஏறிக்கொண்டு “ எல்லோரும் பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போரேன் ! ஜெயிலுக்கு போரேன்! நானும் ரௌடிதான்!” என்று அலம்பல் செய்துகொண்டே போவார். அதுபோல் நீங்களும் உங்களுக்கு ஏற்கெனவே அமைந்துள்ள பிம்பத்தை உடைக்கும் கடுமையான முயற்சியில் இப்படியெல்லாம் எழுதுகிறிர்களோ!

கண்ணன்

அன்புள்ள கண்ணன்,

உங்கள் கடிதம் கண்டேன். டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் அவர்களின் நூலிலும்சரி, அதை ஒட்டிய என்னுடைய கட்டுரையிலும் சரி, நானெ ந்தவகையான இழிவுபடுத்தும் அல்லது சிறுமைப்படுத்தும் தன்மையையும் காணவில்லை. மிக மன ஆரோக்கியமான நிலையில் நின்று எழுதப்பட்ட நூலாகவே நான் அதைக் காண்கிறேன். எம்.எஸ். அவர்களின் எந்த அந்தரங்கத்திலும் ஜார்ஜ் கடந்துசெல்லவில்லை. அப்படிச்செல்லக்கூடிய நூற்றுக்கணக்கான அந்தரங்கங்கள் எந்த ஒரு தனிமனிதரின் வாழ்க்கையிலும் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும்.

எம்.எஸ். குறித்த பல வகையான வதந்திகள் கிசுகிசுக்கள் உலவுவதை நாம் அறிவோம். எந்த ஆதாரமில்லாத கிசுகிசுவையும் ஜார்ஜ் பொருட்படுத்தவில்லை. ஆதாரமுள்ளதாகவே சொல்லப்படும் இரு தகவல்களைக்கூட, பரவலாக தமிழகமெங்கும் பேசப்படுபவை அவை, அவர் நிராகரித்து விட்டிருக்கிறார். காரணம் அவை எம்.எஸ். என்ற ஆளுமையை புரிந்துகொள்ள உதவுவதில்லை, அத்தகைய அந்தரங்களுக்குள் செல்வது நாகரீகமில்லை என.

அவர் அத்து மீறியதாக நீங்கள் சொல்வது இரண்டு விஷயங்களினால்தான். ஒன்று, அவர் பிறந்த சாதியை அவர் சொல்லிவிட்டார் என்பது. இரண்டு, அவரது இளமைப்பருவத்துக் காதலை வெளிப்படுத்திவிட்டார் என்பது. இரண்டையும் ஜார்ஜ் பெரிய பாவம் அல்லது கறை என்று நினைக்கவில்லை. நானும் நினைக்கவில்லை. அவை அவரது அவலம் மிக்க தொடக்க கால வாழ்க்கையைச் சித்தரிக்க தேவையான தகவல்கள் மட்டுமே.

ஓர் ஆரோக்கியமான மனதுக்கு இவ்விரு விஷயங்களும் ஒருபோதும் கீழாக தெரியாது. சிக்கல் இருப்பது உங்களிடத்திலேயே. அதை நீங்கள்தான் பரிசீலிக்க வேண்டும்.

டி.ஜெ.எஸ் ஜார்ஜ் சதாசிவத்தைப் பற்றி அவதூறாக ஏதும் சொல்லவில்லை. ஆனால் எம்.எஸ் மீது முழுமையான கட்டுபபட்டை அவர் வைத்திருந்தார் என்று மட்டுமே சொல்கிறார். அது உண்மை என்பது உலகறிந்தது. அவர் பிராமணார்களுக்கு மட்டுமே உதவிசெய்வேன் என்று சொன்னதும் மிக வெளிப்படையான விஷயம். ஒரு வரலாற்றாசிரியர் அதைச் சொல்வது மட்டும் எப்படி தவறாக ஆகிறது?

கடைசியாக, இறந்துபோனவர்களைப் பற்றி அல்லது இறந்த காலத்தைப் பற்றி பொய்களை உருவாக்கி அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துப்போவதில் பொருள் இல்லை. அத்தகைய பொய்யான புகழ்மாலைகள் அதற்கு மறுபக்கமாக கிசுகிசுக்களை உருவாக்கும். உண்மை அதற்கே உரிய அழகுள்ளது. எம்.எஸ் வாழ்நாளெல்லாம் தன்னை காந்தியவாதியாக உணர்ந்தவர். காந்தி சொன்ன அவ்வரி அவருக்கும் ஏற்புடையதாகவே இருக்கும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

எம்.எஸ்.குரலை மட்டுமே கேட்டு வளர்ந்த மிக இளைய இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானால் அவரது சமூகப் பின்னணி, வாழ்க்கை விவரங்கள் தெரியாமல் இருந்திருக்கலாம், அது தெரிந்ததும் ஒரு பிம்பம் உடைபடும் அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர் புகழடைந்த சமகாலத்திலும் சரி, இப்போதைக்கு ஒரு 20 வருடங்கள் முன்பு வரையிலும் கூட, அந்த விவரங்களை நன்கறிந்தவர்கள் எம்.எஸ் அம்மாவின் கலையையும், பக்தி உணர்வையும் மதித்திருக்கிறார்கள், அவர்கள் எந்த அதிர்ச்சிக்கும் ஆளாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். இப்போது 85 வயதாகும் என் பாட்டி சங்கீதத்தில் நல்ல ஞானமுள்ளவர். நீங்கள் குறிப்பிடும் வம்புகள், அவதூறுகள் எல்லாம் புழங்கிய காலத்தில் வாழ்ந்தவர், அவை பற்றி அறிந்தவர். எம்.எஸ். ஒரு தெய்வீகப் பெண், அவரது சங்கீதம் தெய்வ சங்கீதம் என்றே எப்போதும் கருதி வந்திருக்கிறார். எம்.எஸ். மறைவின் போது கண்ணீர் விட்டு அழுதார். சமூக அடையாளங்களையும் தாண்டி கலையையும், பக்தியையும் மதித்துப் போற்றும் நமது கலாசாரத்தின் தொடர்ச்சியே அது.

// மேலும் ஜார்ஜுக்கு இசையைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியும் என்றும் படவில்லை, அதை அவரே சொல்லிக்கொள்ளவும் இல்லை//

ஆனால் தலைப்பு மட்டும் ஏன் “A life in Music”? உள்ளுக்குள் எம்.எஸ் அம்மாவின் இசை மேதைமை, அவர் பாடிய ராகங்கள், கீர்த்தனங்கள், அவரது இசைப் பாணி இதெல்லாம் பற்றி எதுவுமே, எதுவுமே சொல்லப் படவில்லை. இது ஒரு ஏமாற்றுவேலை இல்லையா? “MS: A social study of her life” என்று ஏன் தலைப்பு வைக்கவில்லை??

// கொஞ்சம் இரக்கமில்லாத ஆராய்ச்சி நோக்கு கொண்டது. அதேசமயம் வம்புகளை நோக்கிச்செல்லும் இதழியல் துடிப்பும் இல்லாதது. ஆகவே குறிப்பிடத்தக்க ஒரு நூல் இது. //

முழுக்க முழுக்க வதந்திகளையும், வம்புகளையுமே கொண்ட நூல் இது என்று பல ரசிகர்கள் கருதுகிறார்கள். இசை விமர்சகர் லலிதா வரலாறு.காம் இதழில் எழுதியுள்ள இந்த விமர்சனத்தைப் பார்க்க வேண்டுகிறேன் – http://www.varalaaru.com/Default.asp?articleid=30

// கிட்டத்தட்ட நூறுவருடம் முன்பிருந்த பிராமண சமூகத்தின் மனநிலை, அவர்களின் சமூக நிலை, அன்றைய இசைவேளாளர்களின் சமூக நிலை ஆகியவற்றைப் பற்றி இந்நூல் இன்றைய சமூகவியல் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் ஒரு மேலோட்டமான சித்திரத்தையே அளிக்கிறது. //

ஆரிய, திராவிட இனவாதக் கோட்பாடை தொடர்பே இல்லாத விஷயங்களில் கூடக் கொண்டு வருவது, பிராமண வெறுப்பை எல்லா இடங்களிலும் திணிப்பது, பிறந்தது முதல் இந்தியாவில் வாழும் ஜார்ஜ் இந்து கலாசாரம் பற்றி மூடிய கண்ணோட்டத்துடன் எழுதப் பட்ட மேற்கத்திய ஆய்வாளர் கருத்துக்களை மேற்கோள் தருவது .. சாதிகளின் வளர்ச்சி மற்றும் இயக்கம் பற்றிய ஒற்றைப் படையான காலனியப் பார்வை – தேவதாசிகளை பிராமணர்களே கேவலமாக நடத்தினார்கள் என்று விலாவாரியாக எழுதிவிட்டு, மற்ற உயர்சாதிகளின் பங்கு பற்றி எதுவுமே குறிப்பிடாமல் இருப்பது – இதெல்லாம் சாதாரண “மேலோட்டமான” சித்திரம் என்று எப்படி கருதுகிறீர்கள்? அதுவும் ஒன்றிரண்டு அல்ல, புத்தகம் முழுவதுமே இப்படி இருக்கும்போது? ஜார்ஜ் எழுதி வரும் அரசியல் வாரக் கட்டுரைகளும் இதே வெறுப்பியல் பார்வையைத் தாங்கியவையாகவே இருந்தன என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.. எம்.எஸ் குடும்பத்தினரிடமிருந்து அந்தக் கடிதங்களைப் பெற்று, அதை வெளிக் கொணர்ந்த விதத்தில் அடிப்படை பத்திரிகை தார்மீகத்தைக் கூட கடாசியிருக்கிறார் ஜார்ஜ்.

இந்த எல்லா வெறுப்பியல் பார்வைகளையும் பற்றித் தொடர்ந்து தீவிரமாக எழுதி வரும் நீங்கள், டி.ஜே.எஸ். ஜார்ஜ் எழுதிய புத்தகம் பற்றி விதந்தோதுவது அதிர்ச்சியளிக்கிறது. காந்திஜி drain inspection என்று கருதிப் புறக்கணித்த தன்மை கொண்ட ஒரு நூலை இப்படிப் பாராட்ட வேறு செய்கிறீர்கள். கூரிய திறனாய்வுப் பார்வை கொண்ட நீங்கள் இந்தப் புத்தகத்தை மதிப்பீடு செய்வதில் தவறிவிட்டீர்கள்.

அன்புடன்,
ஜடாயு


My blog: http://jataayu.blogspot.com/

அன்புள்ள ஜடாயு

நல்லது, கொஞ்ச முன்னால் வந்த ஒரு கடிதத்துக்கான பதில் உங்கள் கடிதத்தில் இருக்கிறது. எம்.எஸ்ஸின் சாதி முதலியவற்றை வெளிப்படையாகப் பேசியது தவறு என்று கண்ணன் என்பவர் எழுதியிருந்தார். உங்கள் கடிதத்தில் அது மிக வெளிப்படையாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்கிறீர்கள். அப்படியானால் ஜார்ஜ் என்ன தவறு செய்துவிட்டார், எல்லாருக்கும் தெரிந்த ஒன்றை அவர் பதிவுசெய்தார் அவ்வளவுதானே?

நீங்கள் எழுதியிருப்பதில் பெரும்பகுதி உங்கள் முன் தீர்மானங்கள் மட்டுமே. ஜார்ஜ் ஆங்கில மொழிசார்ந்த மேட்டிமைவாதமும், மேற்கத்திய தாராளவாத நோக்கும் கொண்டவர். ஆனால் அவரது எழுத்துக்களை வாசிக்கும் எவரும் அவரை இன , மத வெறுப்பை வளார்ப்பவர் என்று சொல்ல முடியாது. கடந்த காலங்களில் அவர் எழுதிய எழுத்துக்கள் அனைத்துமே அவற்றுக்கு எதிரானவையாகவே இருந்துள்ளன. அக்காரணத்தாலேயே அவரை இதழியல் வட்டாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.அச்சாயன் [ அச்சாயன் என்பது கேரளக் கிறித்தவர்களைக் குறிக்கும்] என்று கிண்டலடிக்கவும் விமரிசிக்கவும்பட்டவர்.

 

ஜார்ஜ் அவரது நூலில் அவர் ஏற்றுக்கொண்ட எம்.எஸ்.ஸ்ரீனிவாசின் சமூகவியல் கோட்பாடான சம்ஸ்கிருதமயமாக்கம் சார்ந்து ஆய்வுகளை மேற்கொள்கிறார். ஆரிய திராவிட வாதத்தை அவர் ஏற்றுக்கொள்கிறார். அவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய எத்தனையோ சிந்தனையாளர்கள் இதழாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் விவாதிக்கலாம். ஆனால் அனைவரையும் ‘வெறுப்பியல்’ பரப்புவர்கள் என்று சொல்வதென்பதுதான் மூடிய மனநிலை.

தேவதாசிகளை பிராமணர் மட்டுமே மோசமாக நடத்தினார்கள் என்று ஜார்ஜின் நூல் சொல்கிறது என நான் நினைக்கவில்லை. கோவைச் செட்டியாருக்கு ஆசைநாயகியாகச் சென்ற அவரது அக்கா வடிவாம்பாளின் வாழ்க்கையைப் பற்றி சொல்லுமிடத்திலும் இன்னும் பற்பல இடங்களிலும் பிற உயர்சாதிகளின் பங்கையும் ஜார்ஜ் வலுவாகக் குறிப்பிடத்தான் செய்கிறார்.

எம்.எஸ் குடும்பத்தில் இருந்து ஜார்ஜ் கடிதங்களைப் பெறவில்லை. அவற்றை ஜி.என்பியின் குடும்ப வழக்கறிஞர்களிடம் இருந்தே பெற்றிருக்கிறார். அதில் எந்த தர்மமும் மீறப்படவில்லை. அவை சென்ற காலகட்டம் சார்ந்த தகவல்கள் மட்டுமே.

உங்கள் பாட்டிக்கு எம்.எஸ் குறித்து இருந்த அதே மனநிலையே ஜார்ஜுக்கு இருக்கிறது. நூலில் இழையோடும் மனநிலையும் அதுவே.மென் இதழியல் நண்பரிடம் பேசும் போது கடும் நாத்திகரும் எள்ளல்நோக்கு மேலோங்கியவருமான ஜார்ஜ் ‘எம்.எஸ்ஸின் காலில் விழுந்து வணங்கத்தோன்றியது’ என்று சொன்னார்.

ஜார்ஜின் கோணத்தில் தன் பிறப்பு தனக்கு உருவாக்கிய இழிவையும், சூழ்ந்த சமூகம் உருவாக்கிய புறக்கணிப்பையும் மீறி தன் கலையால் எழுந்த ஒரு மாமனிதராகவே எம்.எஸ் தென்படுகிறார். அதற்காகவே அவர் எம்.எஸ்ஸின் பிறப்பையும் அவர் ஜி.என்.பிக்கு எழுதிய கடிதத்தையும் குறிப்பிடுகிறார். அது மிக முக்கியமான ஒரு பார்வை

ஜெ

பிகு: வெறுப்பியல் என்ற சொல்லாட்சி பொருளற்றது. கலைச்சொல்லாக விதிகளின்படி ‘இயல்’ என்பது ஒரு குறிப்பிட்ட அறிவுத்துறைக்கான பின்னொட்டு. tics, ology என முடியும் சொற்களுடன் சேர்க்கவேண்டியது. உதா மொழியியல் [Linguistics ] குறியியல் [ semiology] ஆகவே வெறுப்பியல் வாழ்வியல் கலையியல் என்றெல்லாம் பயன்படுத்துவது சரியல்ல

அன்புள்ள ஜெயமோஹன்,
உண்மைக்கு வெளிச்சம்போட வேண்டிய அவசியமில்லை என்பார்கள். ஆனால் அந்தச் சொலவடை தமிழ்நாட்டில் பலிப்பது இல்லை என்பது கண்கூடு. இங்கு பொய்க்கும் முகமூடி உண்டு; உண்மையை முகமூடிபோட்டுக் காட்டுவதும் உண்டு. தங்கள் பதிவு எம்.எஸ். அம்மாவை மென்மை, மெய்மை இவற்றோடு உன்னத நிலையில் வைத்துப் பார்க்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. எம்.எஸ்ஸின் இன்னொரு கோணம் இருக்கிறது. அவர் ராதா-விஜயா இருவரையும் எப்படி வளர்த்தார் என்பதை ஜார்ஜும் விவரிக்கவில்லை; தாங்களும்தான். தாயினும் சாலப் பரிந்து அவர்கள் இருவரையும் வளர்ட்து ஆளாக்கினார் என்பதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தாய்க்குச் சாதி ஏது?
அன்புடன்
கிருஷ்ணமூர்த்தி

அன்புள்ள கிருஷ்ணமூர்த்தி,

உண்மை. ஆனால் அந்த விஷயத்தையும் ஜார்ஜ் சொல்லியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்

ஜெ

அன்புமிக்க ஜெயமோகன்,

எம்ஜியார், சிவாஜி போன்ற பிரபலங்களைப் பற்றிய
உங்கள் முந்தைய பதிவுகளைப் போலவே இதுவும்
இருந்து விடுமோ என்ற மனக்கிலேசத்தோடே எம். எஸ்
குறித்த உங்களின் ‘அக்கினிபிரவேசத்தை’ படிக்கத் தொடங்கினேன்.

ஆனால்,

 

பாலசரஸ்வதி தன் அடையாளத்தை முன்வைத்து போராடினார் என்கிறார் ஜார்ஜ். அவர் அந்த அடையாளம் மூலமே ஒரு சிறந்த கௌரவநிலையை அடைந்தார். ஆனால் தன் அடையாளத்தை அழித்ததன்மூலமே எம்.எஸ் விடுதலை பெறமுடிந்தது.”  

என்ற உங்களின் வரிகளின் மூலம் எம். எஸ் குறித்த இந்த
பதிவிற்கு உரிய நியாயம் கொடுத்திருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.

இதுவரை அறிந்து வந்த (பிராமணப் பெண்ணல்ல) செய்திகளைப்
புரட்டிப் போட்ட வகையில் இது ஒரு முக்கியமான பதிவு..

வணக்கங்களுடன்,
செல்வராஜ் ஜெகதீசன்
அபுதாபி

www.selvarajjegadheesan.blogspot.com

அன்புள்ள செல்வேந்திரன்

ஜார்ஜ் எம் எஸ்ஸின் தனிவாழ்வின் சாதனையாகவே அதைச் சொல்கிறார். பாலசரஸ்வதிக்கும் எம்.எஸ்ஸ¤க்கும் அவர் எந்த வேறுபாட்டையும் காணவில்லை . இருவரும் இரு வகையில் தங்கள் வாழ்க்கை உருவாக்கிய எல்லைகளை தாண்டிச் சென்றவர்கள். மேதைகளின் பாதை அது

ஜெ

எம்.எஸ் குறித்த உங்கள் பார்வை :

வாசிப்பு அனுபவம் என்னைப் பொறுத்தவரை அன்னபட்சி பால் அருந்துவது போலே தான். ஆனால் என்ன, சில சமயங்களில் அன்னங்களால் பசுக்களுக்கு நன்றி சொல்ல முடிகிறது, சில சமயங்களில், ‘பால் சகிக்கவில்லை’ என்றும். உங்களின் பல கருத்துக்களோடு எனக்கு ஒப்ப முடியவில்லை என்றாலும், உங்கள் கருத்தாழம், வாதத் திறமை குறித்தே படித்து வந்திருக்கிறேன். நேரம் இல்லை என்று நான் உங்களுக்கு மறுமொழி எழுதவில்லை என்றால், நீங்கள் வரலாற்றில் பெயரில்லாமல் போய் விடப் போவதில்லை.

எனினும். எம்.எஸ். அம்மாவை இசைத் தட்டு வாணி என்று அந்தக் காலத்தில் மன‌நோயாளிகள் பெயரிட்டார்கள். அதையும் நீங்கள் குறிப்பிட்டிருந்திருக்கலாம். என் அப்பா தான் அதைப் பற்றி எனக்குச் சொன்னார். இந்த வாக்கியத்துடன் என் கடிதத்தை முடித்தால் நீங்கள் தன்யராவீர்கள்.

என் அப்பா, பூணூல் ஒரு கடமை, கிரீடம் அல்ல என்று நினைத்தவர். அதே சமயம், சாதி மறுத்தவர். பக்கத்து வீட்டு மாமி, ‘அந்த பொண்ணையா ஆத்துக்குள்ள விடறேள்?’ என்று என் அம்மாவிடம் கேட்க, அதே பெண்(என் அக்காளின் தோழி)ணை அதே மாமியின் முன்னால், ‘சமையலுள்ளே போய் எனக்கு இட்லி கொண்டு வந்து போடு’ என்றவர். பிராமண அடையாளமாக, ஸ்ரீதனமாக அவரால் எங்களுக்குக் கொடுக்க முடிந்தது, ‘படித்து சமுதாயத்தில் முன்னேற்றிக் கொள்ள வேண்டிய’ கட்டாயக் கடமை ஒன்றே என்று சொல்லிக் கொடுத்தவர். அதனால் உங்களுக்கு என்ன? அவர் எம்.எஸ்.ஐப் போற்றினவர்

என் புகுந்த வீட்டாரும் எம்.எஸ்.ஸின் பரம பக்தர்கள் தாம். அவர்களுக்கும் எம்.எஸ்.ஸின் பிறந்த வரலாறு தெரியாமலில்லை. அவரின் பக்திபாவம் எம்.எல்.வி.யின் ஸ்வரசுத்தத்தை விட மேல் என்று எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது, எங்கள் குடும்ப விழாக்களில் பேசப்பட்டிருக்கிறது. அம்மாவின் குடும்ப வரலாற்றைப் பற்றி தரக்குறைவாக எதுவுமே என் காதில் விழுந்ததில்லை (என் காதில் விழுந்தவை, இயலாமையின் உச்சக்கட்டமான சில தூய‌ தமிழ்ச் சொற்கள்:-) ஆனால், எம்.எஸ். அம்மாவை பாராட்டும் “பிராமண” குடும்பங்கள் பற்றிய செய்தி உங்கள் எழுத்துக்களின் நேர்மைக்குத் தேவையில்லாத ஒன்று என்றே தோன்றுகிறது:-( எனக்கு சாதி இல்லை, உங்களுக்கு இன்னும் இருப்பதால் குறிப்பிட்டுச் சொல்கிறேன். சாதி மனப்பான்மை ஒழிய இன்னும் பல வருடங்கள் ஆகும். அதை இல்லாமல் ஆக்க வேண்டியது உணர்வாளர்களின் (அறிவாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா என்ன!) கடமை. நீங்களுமா?!

எனக்குத் தெரிந்து இன்னும் பல புராதன (108 திவ்யதேசங்களில் சிலவற்றையும் சேர்த்து) கோவில்களில் இன்னமும் அம்மாவின் ஸ்லோகங்களும், ‘ஸ்ரீரங்க புர விஹாரா’வும், ‘விஷ்ணு சஹஸ்ரநாம’மும். எங்கள் இதயங்களிலும், வீடுகளிலும். திருப்பதி போகும்போது அம்மாவையும் சேர்த்து தரிசிப்பேன் என்ற நம்பிக்கையுடன். ‘ஹரி தும ஹரோ’ என்று அம்மா கரையும் போது அந்த பக்தியில் ஒரு துளிக்கரைசலாக நான் கரைய மாட்டேனா என்ற நம்பிக்கையுடன். உங்களைப் போன்றவர்களின் அவச்சொற்கள் என் குழந்தைகளின் (இவர் என் தெய்வத்துக்கு சமானம் என்றல்லவா அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன்!) காதுகளில் விழாமல் போகட்டும் என்ற இன்றைய கூடுதல் நம்பிக்கையுடன்.

ஜி.என்.பி. பற்றி அம்மாவுக்குக் காதல் இருந்திருந்தால் உங்களுக்கு என்ன போகிறது? உங்கள் சமக் கால (முறையற்ற, முறை-மஹா-அற்ற) காதல்கள் பற்றி, சினிமாக்காரர்கள் பற்றி எழுதி விடுவீர்களா?

//பிராமணர்களின் அறநிறுவனங்களுக்கு பெரும் தொகையை அவர் வசூல் செய்து கொடுத்தார். சதாசிவம் பிராமணப்பையன்களுக்கு தவிர பிறருக்கு அறக்கொடைகள் அளிப்பதில்லை என்று ஜார்ஜ் பதிவுசெய்கிறார். ‍‍‍‍‍‍‍‍‍……………பிராமண நிறுவனங்களுக்கு அவரளித்த மாபெரும் அறக்கொடைத் தொகைகள்தான் காரணம். அந்த மதஅந்தஸ்து வெங்கடேச சுப்ரபாதம் மூலம் உறுதிப்பட்டது
மிகுந்த மனத் தளர்ச்சி அடைய வைக்கும் வாசகங்கள். இதனால் வரலாறு மாறி விடாது என்ற மன உறுதியுடன்.


கெ. பி.

http://kekkepikkuni.blogspot.com

அன்புள்ள கெ. பி.

என்னை ஒருவர் சாதி மனநிலை கொண்டவர் என்று சொன்னால் நான் சீண்டபப்டுவதில்லை. அதைக் கூர்ந்து பார்ப்பேன். தங்கள் குற்றச்சாட்டுக்குப்பின்னரும் அதைச் செய்ய முயல்கிறேன். சாதி நமக்கு நம் முன்னோர்களால் நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்போதே நம் ஆழ்மனதை அதற்காக வார்த்துவிட்டிருக்கிறார்கள். நம் வாழ்நாள் முழுக்க நம்மை நாமே கூர்ந்து ஆராய்ந்து உள்ளே இருப்பதை எல்லாம் வெளிப்படையாக வெளியே கொண்டுவந்து அலசி நம்மபி பிரக்ஞை பூர்வமாக மாற்றிக்கொள்வதன் மூலமே கொஞ்சம் கொஞ்சமாக் சாதிய மனநிலையில் இருந்து வெளிவர முடியும். அது எளிய வழிமுறை அல்ல. காந்தி அதற்காக தன் வாழ்நாள் முழுக்க போராடினார்

நாம் சாதாரணமாக எனக்கெல்லாம் சாதி இல்லை என்று சொல்லி ஒரு போர்வையை போர்த்திக்கொள்கிறோம். உள்ளே பார்ப்பதில்லை. பார்க்கப்பட்டால் தாங்கிக்கொள்வதுமில்லை.

உண்மையிலேயே எனக்குப் புரியாத விஷயம் இதுதான், அப்படி என்னதான் எம்.எஸ் குறித்து தரக்குறைவாக அந்நூலில் உள்ளது? ஆங்கிலத்தில் வெளிவந்து உலகம் முழுக்க வாசிக்கபப்டும் அந்நூலில் ஒருபகுதியை தமிழில் குறிப்பிடுவதனால் எம் எஸ்ஸ¤க்கு என்ன ஆகிவிடுகிறது?

எம்.எஸ்ஸின் சாதியை மிக இழிந்தது என எண்ணும் ஓர் ஆழ்மனநிலையே அது சொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைகிறது. அது எம்.எஸ்ஸின் பிம்பத்தை தகர்க்கிறதென எண்ணுகிறது. அந்த எரியும் வாழ்வில் இருந்து மீள அவர் ஒருவருக்கு இளமையில் ஒருசில கடிதங்களை எழுதினார் என்பதை அவரது பிழையாக எண்ணும் மனநிலையே அது சொல்லப்படுகையில் கொதிப்படைகிறது

சமநிலையும் முதிர்ச்சியும் கொண்ட ஒரு மனம் எம்.எஸ் எந்த ஆழத்தில் இருந்து எந்த உயரத்துக்கு தன் கலை மூலம் ஏறி வந்தார் என்றே அதை எடுத்துக்கொள்ளும். அவரது அன்றைய வாழ்க்கையின் சித்திரமாகவே அந்தக் கடிதங்களை எடுத்துக்கொள்ளும். அதில் தெரியும் எம்.எஸ்ஸின் மன்றாடும் குரல் அவனுக்கு நம் சமூகம் ஒரு மேதையை எங்கே வைத்திருந்தது என்பதைக் காட்டும், அவன் மனசாட்சியை உலுக்கும். என்னை உலுக்கியது.

ஆகவேதான் இதை எழுதினேன். அதற்காகவே நான் ஜார்ஜுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் . உங்கள் பிள்ளைகளுக்கு தாராளமாகவே இந்நூலைக் கொடுங்கள். அவர்கள் அடுத்த காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே இன்னும் ஆரோக்கியமான மனம் கோன்டவர்கள் .அவர்கள் புரிந்துகொள்வார்கள். இது என் அனுபவமும் கூட

ஜெ

ஜெயமோகன்,

இது எந்த விதத்தில் நியாயம்?? எம்.எஸ். ஜி.என்.பியைக் காதலித்தது எல்லாம் பழைய சமாசாரங்கள் தான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எம்.எஸ். இறந்த பின்னரும் இதை அலசுவதால் என்ன லாபம்?? அவருடைய காதல் என்பது அவரின் அந்தரங்கம் அல்லவோ? அவர் ஒரு சங்கீத வித்வாம்சினி என்பதால் அவரின் வாழ்க்கையை இப்படி அக்கக்காக அலசலாமா? எங்கேயும், எப்போதும், தான் மதுரை சண்முகவடிவின் மகள் என்பதை அவர் ஒளித்ததில்லை அல்லவோ?

//இத்தகைய ஒரு நூல் அக்காலத்து சமூக, பண்பாட்டுப் பின்புலத்தை மேலும் விரிவாக ஆராய்ந்து நல்ல சித்திரம் ஒன்றை அளித்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக முதல் நூறு பக்கங்களை ஒதுக்கியுள்ள இந்நூல் அதற்குத் தவறிவிடுகிறது என்றே படுகிறது.//

நீங்களே சொல்லி இருக்கிறாப்போல் இத்தகைய சமூக பண்பாட்டுப் பின்புலத்தை ஆராய்ந்து அளித்திருந்தால் ஓரளவு இப்புத்தகத்தின் ஆசிரியரின் நோக்கை ஒப்புக் கொள்ளலாமோ? ஆனால் அவரோ எம்.எஸ்ஸின் வாழ்க்கையின் அந்தரங்கத்திற்குள் எளிதாக இறங்கிச் செல்வதோடு அதை ஒரு பொது விஷயமாகவும் ஆக்கி உள்ளாரே? ஒரு பெண்ணின், அதுவும் இறந்துவிட்ட ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை இவ்விதம் அலசலாம் என்ற உரிமை அளித்தது அவர் பொதுவாழ்வின் அங்கமாக இருந்ததால் அல்லவோ? இவ்விதம் எம் எஸ்ஸின் வாழ்க்கையை விமரிசித்து அவருக்குப் பெரும் அநீதியையே செய்திருக்கிறார்.

//ஆனால் தன் அடையாளத்தை அழித்ததன்மூலமே எம்.எஸ் விடுதலை பெறமுடிந்தது. அந்த அடையாளத்தை மேம்படுத்துவதன் மூலம் அல்ல. 1940ல் மதுரை சண்முக வடிவின் மகள் இறந்தாள், சதாசிவத்தின் மனைவி பிறந்தார் கிட்டத்தட்ட சீதை தீக்குளித்ததுபோன ஒரு மீட்பு அது. //

அடையாளத்தை அவர் அழிக்க நினைத்திருந்தால் தனது இனிஷியல்களை மாற்றிக் கொண்டிருக்கவேண்டும் அல்லவோ? எக்காலத்திலும் தான் மதுரை சண்முகவடிவின் மகள் என்ற உண்மையை அவர் மறைத்ததோ, மறுத்ததோ அல்ல. ஒரு பெண் என்ற முறையில் இப்போது இந்தப் புத்தகம் வந்ததும், அதற்கான இந்த விமரிசனமும் தேவையில்லாத ஒன்று என்றே எனக்குத் தோன்றுகிறது. இது எம்.எஸ். அவர்களுக்குச் செய்யும் அநீதியோ என்றும் நினைக்கிறேன். ரொம்ப வருத்தமாய் இருக்கிறது

கீதா சாம்பசிவம்,

அன்புள்ள கீதா சாம்பசிவம்,

உங்கள் கடிதத்தின் கோபம் எனக்கு புரியவில்லை. எம்.எஸ்ஸின் ‘இழிந்த’ ஆழம் எதையும் ஜார்ஜ் சொல்லிவிடவில்லை. அவர் போராடி வந்த வாழ்க்கையின் ஒரு சித்திரத்தை அளிக்கிறார்

எம்.எஸ் ஒரு தனிமனிதர் அல்ல. ஒரு பொது மனிதர். ஒரு குறியீடு. ஆகவே அக்குறியீட்டை ஆராயும் பொறுப்பும் உரிமையும் சமூகவியலாளர்களுக்கு உள்ளது. உயிருடன் இருக்கும்போது ஆராய்வதே சங்கடமானது. இறந்தவர்கள் காலத்தின் பகுதிகள். நமது சொந்த முற்காலகட்டம்.றதை கறாராக ஆய்வது நம்மை அறிவது போல.

ஜி.என்பியிடம் இருந்த ‘காதல்’ அல்ல பிரச்சினை. வெறும் காதல் என்றால் அதில் வரலாறு ஒன்றுமில்லை. அதில் இருந்த மன்றாடல், அந்த மன்றாடல் குரூரமாக புறக்கணிக்கப்பட்ட முறை, அதுவே இங்கே பிரச்சினை. எனக்கு வந்த ஒரு கடிதத்தில்கூட ஜி.என்பியின் அந்த மனநிலையைப்பற்றி ஒரு சொல்கூட இல்லை. இத்தனைக்கும் நான் அதையே கெ.பி.சுந்தராம்பாளின் வாழ்வுடன் ஒப்பிட்டு முக்கியமாகப் பேசியிருந்தேன். இதுவே ஒரு சான்று. இன்றும் நம் பெரும்பாலானவர்களின் மனநிலை ஜி.என்பியை சார்ந்தே உள்ளது. இழிந்த மன ஆழம் இருப்பது நமக்குத்தான்.

இந்த நூல் மூலம் நம்முடைய பண்பாட்டின் ஒரு ஆழத்து இருளை நமக்குக் காட்டித்தருகிறார் ஜார்ஜ். அந்த இருளால் ஒரு மேதை தன் கலையுடன் எப்படி பரிதவித்தார் என்பதை அக்கடிதங்கள் காட்டுகின்றன. மனசாட்சி உள்ளவர்களின் நோக்கில் அதுதான் சங்கடத்தையும் தார்மீகக் கோபத்தையும் அளிக்கும்

பிற எல்லா கோபங்களும் வேறு ஒரு இருளில் இருந்தே வருகின்றன

ஜெ

 

 

 

Jeyamohan,

 

//ஜி.என்பியின் அந்த மனநிலையைப்பற்றி ஒரு சொல்கூட இல்லை. இத்தனைக்கும் நான் அதையே கெ.பி.சுந்தராம்பாளின் வாழ்வுடன் ஒப்பிட்டு முக்கியமாகப் பேசியிருந்தேன். இதுவே ஒரு சான்று. இன்றும் நம் பெரும்பாலானவர்களின் மனநிலை ஜி.என்பியை சார்ந்தே உள்ளது. இழிந்த மன ஆழம் இருப்பது நமக்குத்தான்.//

ஜிஎன்பியை எந்த இடத்திலும், அல்லது எந்தவிதத்திலும் நான் நியாயப் படுத்திப் பேசவும் இல்லை, எழுதவும் இல்லை. ஒரு சமூகவியல் ஆய்வு என்பது மற்றவரின் அந்தரங்க வாழ்க்கையை, அதுவும் அவர் பொதுமனிதராகவும், ஒரு தாசிகுலத்தைச் சேர்ந்த பெண்ணாகவும் இருந்தார் என்பதால் ஆய்வு செய்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.இது என் தனிப்பட்ட கருத்து. இதுவும் ஒரு வகையில் ஆணாதிக்கமே எனத் தோன்றுகிறது. இந்த ஆய்வினால் அவர் எம்.எஸ். பட்ட வேதனையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார் என்பதில் உங்களுக்கு வேண்டுமானால் திருப்தியாக இருக்கலாம்.

ஆனால் இறந்து,  போஸ்ட் மார்ட்டம் செய்து, புதைக்கப் பட்ட உடலை மீண்டும் வெளியே எடுத்துப் போஸ்ட் மார்ட்டம் செய்வதை ஒத்ததே இது.  எம்.எஸ். அவர்களின்  மன்றாடலையும், அவர் கெஞ்சியதை வெளிச்சம் போட்டுக் காட்டியதால் பண்பாடு இருளுக்குப் போய்விட்டதா?  அவர் இருக்கும்போது இந்த ஆய்வைச் செய்ய தைரியம் இல்லை தானே! இறந்ததும் செய்வதால் அவருக்கு மாபெரும் நீதி கிடைத்துவிட்டதா? அல்லது பண்பாடுதான் வெளிச்சம் அடைந்துவிட்டதா?

//பிற எல்லா கோபங்களும் வேறு ஒரு இருளில் இருந்தே வருகின்றன//

 

கலை உலகைச் சார்ந்திருந்தார் என்ற காரணத்தாலேயே மாபெரும் பெண்மணி ஒருத்திக்கு இழைக்கப் பட்ட அநீதியாகவே இதை நான் கருதுகிறேன். என் கோபம் தார்மீகக் கோபம். ஒரு பெண்ணுக்கு இழைக்கப் பட்ட அநீதியை எதிர்க்கும் இன்னொரு பெண்ணின் கோபம் என்ற அளவிலேயே பாருங்கள். தங்கள் தனிப்பட்ட பதிலுக்கு மிகவும் நன்றி. வணக்கம்.

 

கீதா சாம்பசிவம்.

 

 

 

அன்புள்ள கீதா சாம்பசிவம்,

உங்கள் அறச்சீற்றம் எம்.எஸ்ஸின் அந்தரங்கம் சம்பந்தமானது மட்டும் என்றால் நல்லது, அது உங்கள் கோணம். அதையே  அனைவரும் கொள்ளவேண்டும் என்று இல்லை. உங்கள் கோணம் சமூக நோக்கு இல்லாதது என்று மட்டுமே சொல்லவிரும்புகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைக்ரியா சொல்வங்கி
அடுத்த கட்டுரைகாந்தியும் பிற்படுத்தபட்டோரும்