ஒருநண்பர், அடிக்கடி அவர் கடிதங்கள் இந்தத் தளத்தில் பிரசுரமாகியிருக்கின்றன, நீண்ட கடிதம் எழுதியிருந்தார். வெள்ளையானை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ளவேண்டிய தகவல்பிழைகளைப் பட்டியலிட்டிருந்தார். அப்பிழைகளை அவர் கண்டுபிடிக்கவில்லை. இணையவிவாதங்களில் இருந்து பொதுவாகத் திரட்டியிருந்தார். அடிக்கடி இத்தகைய கடிதங்கள் எனக்கு வருவதுண்டு. பெரும்பாலும் அவை சோர்வையே எழுப்புகின்றன. அரைவேக்காட்டு எதிர்வினைகளை உலகம் முழுக்க உள்ள எழுத்தாளர்கள் சந்திப்பது வழக்கம். அரைக்கால்வேக்காட்டு எதிர்வினைகளைச் சந்திப்பது தமிழிலக்கியவாதியின் தனிப்பட்ட தலையெழுத்து.
நண்பர் சுட்டிக்காட்டிய பிழைகள், ஒன்று வெள்ளையானை நாவலில் இறுதியில் ஒரு விவாதத்தில் ஒரு வெள்ளையானையை பற்றிய குறிப்புவருகிறது. ‘அந்தவெள்ளையானை ஓரு அல்பினோ, அதற்கு உயிரணுக்கள் இருக்காது’ என ஒரு டாக்டர் சொல்வதுபோல. அல்பினோ என்றால் நிறமிக்குறைவு, அது மரபணுப்பிரச்சினையே ஒழிய உயிரணுப்பிரச்சினை அல்ல என்று நண்பர் சொல்லியிருந்தார்.
அல்பினோ என்பது விலங்குகளிலும் மனிதர்களிலும் பறவைகளிலும் காணப்படும் ஒரு மரபுக்குறைபாடு. வெள்ளைப்புலி, வெள்ளையானை போன்றவை இவ்வகைப்பட்டவை இக்குறைபாடுள்ள பெரிய விலங்குகள் சாதாரணமாக குட்டிகளை உருவாக்குவதில்லை. அப்படிப்பட்ட ஓரு வெள்ளையானை திருவிதாங்கூரில் காட்டில் பிடிபட்ட செய்தி பதிவாக்கியிருக்கிறது. அது ஆண்மையற்றதாக இருந்தது.முதலியார் ஆவணங்களிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. ஐரோப்பியர் பதிவுசெய்திருக்கிறார்கள்.அச்செய்தியே நாவலில் பேசப்படுகிறது. அன்று மரபணு என்ற கருதுகோள் இல்லை என்பதனால் விந்துவில் உயிரணு இல்லை என்று அக்கால அறிவியலை டாக்டர் சொல்கிறார். நாவலின் குறியீடாக முக்கியமான வரி இது. மிகக் கவனமாக அமைக்கப்பட்டிருப்பது
நண்பர் சொன்ன இரண்டாம் பிழை. எய்டன் இந்தியாவுக்கு வந்த சிலமாதங்களே ஆன சூழலில் அவன் எப்படி காத்தவராயனைப் பார்த்ததும் ”வைணவராகிய நீங்கள் எப்படி சைவப்பெயருடன் இருக்கிறீர்கள்?’ என்று கேட்கமுடியும், அந்த நுட்பங்கள் எப்படி அவனுக்குத்தெரியும் என்பது.
வெள்ளையரைப்பற்றிய நுட்பமான அவதானிப்பு அந்நாவலில் ஏய்டன் கேட்கும் வினாவில் உள்ளது. இந்தியாவந்ததுமே இந்தியர்களைப்புரிந்துகொள்ள முயலும் வெள்ளையர் முதலில் சென்றுவிழும் இக்கட்டே அதுதான். அவர்கள் சைவத்தையும் வைணவத்தையும் இரு வெவ்வேறு மதங்கள் என புரிந்துகொள்வார்கள். ஒரு சைவத் தந்தைக்கு வைணவப்பெயருள்ள மகன் எப்படி இருக்கமுடியும் என்று புரியவே புரியாது.இந்தியாவில் மிகச்சில சாதிகள் மட்டுமே தெளிவான சைவ வைணவ வேறுபாடு பேணுபவை என்பதை நம் அவர்களுக்குச் சொல்லிப்புரியவைக்கவும் கடினம்.
இன்றுகூட இச்சிக்கலை இங்கு வரும் வெள்ளையர் அடைவதைக் காணலாம். ஒருசில வருடங்களில் அவர்களே தெளிவடைந்துவிடுவார்கள். ஏய்டன் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னரும் இந்தியர்களை அறிந்தவன். தொடர்ந்து அறிந்துகொள்ள விவாதித்தபடியே இருப்பவன். ஆனாலும் ஏய்டனுக்கு இந்தியாவைப்பற்றி மேலோட்டமான ஆரம்ப அறிமுகம் மட்டுமே உள்ளது என்பதை காட்டும் நுட்பமான பகுதி அவன் கேட்கும் அந்த பொத்தாம்பொதுவான கேள்வி..
மூன்றாவது பிழையாக நண்பர் சுட்டிக்காட்டியது, ஏய்டன் ‘வெடிகுண்டுமாலையுடன்’ பாய்வதைப்பற்றி யோசிக்கிறான், வெடிகுண்டுமாலை என்பது ராஜீவ்காந்தி கொலையை ஒட்டி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைப்படை உத்தி அது அக்காலத்தில் ஏது என்பது. என்ன சொல்ல?
துப்பாக்கி பயன்பாட்டுக்கு வந்தகாலத்திலேயே கையெறிக்குண்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதை தோளில் குறுக்காகப்போடப்பட்ட தோல்பட்டையில் சிறிய கொக்கிகளில் மாட்டிக்கொள்வார்கள். பிரிட்டிஷ் ராணுவத்தில் garland என்றே சொல்லே அதைத்தான் குறிக்கும். ஆங்கிலநாவல்களில் வாசிக்காவிட்டாலும் நம்மூர் கர்ணன் இயக்கிய சினிமாக்களிலாவது கண்டிருக்கலாம். குண்டுமாலையுடன் தற்கொலைத்தாக்குதல் என்பது பிரிட்டிஷார் அராபியமண்ணில் எதிர்கொண்ட முக்கியமான சவாலாக இருந்தது. இவையெல்லாம் அக்கால பிரிட்டிஷ் ஆவணங்கள் மற்றும் போர்க்குறிப்புகளை ஒட்டியே நாவலில் அளிக்கப்பட்டுள்ளன.
இப்படி மொத்தம் பதினெட்டு பிழைகள். பதினெட்டும் வேடிக்கையானவை. ஒருநாவலின் மிகநுட்பமான பகுதி எதுவோ அதையே பிழை என்று புரிந்துகொள்கிறர்கள் என்னும்போது உருவாகும் மனச்சோர்வு சாதாரணமல்ல
பிழைகள் இருக்குமா? கண்டிப்பாக. அறிந்த நேரடி வாழ்க்கையை எழுதும்போதே பிழைகள் இருக்கும். அவற்றைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் உதவியானவை. நாவலை மேம்படுத்த அவை உதவும். இன்றையகாந்தி போன்ற நூல்களிலும் வெண்முரசு போன்ற நாவல்களிலும் நண்பர்களால் நிறைய பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு திருத்தப்பட்டுள்ளன. எழுதுபவன் அனைத்தையும் அறிந்தவன் அல்ல, கற்றுக்கொண்டிருப்பவனே.ஆனால் கண்டிப்பாக கற்றுக்கொண்டிருப்பவன், தொடர்ந்து வாசிப்பவன், உங்களில் எவரையும்விட. எழுத்தறிவுக்கு அப்பால் தகுதியற்றவர்கள், சோட்டா எழுத்தாளர்கள் எல்லாம் திருத்தம் சொல்லும் அளவுக்கு என் நூல்கள் இருப்பதில்லை என்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
பிழைகள் என தோன்றுபவை உண்மையில் பிழைகளாக இருக்குமா என இன்னொரு முறை உறுதிசெய்துகொள்ளுங்கள் என்று நண்பர்களை கோருகிறேன். நூல்களில் ஆவணங்களில் சரிபாருங்கள். நீங்கள் அனைத்து எழுத்தாளர்களை விடவும் மேலான பிறவிமேதையாக, எதையும் வாசிக்காமலேயே அனைத்தையும் அறிந்து உலகையே திருத்திச்சொல்லும் தகுதிகொண்ட மெய்ஞானியாக இருப்பதற்கான வாய்ப்புண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதை பொருட்படுத்தும்படி எழுதிக்காட்டுங்கள் .
நண்பர்களுக்கு, இப்படி தகவல்பிழைகள் அல்லது முரண்பாடுகள் சுட்டிக்காட்டப்படும்போது அவற்றைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை என்றால் அவற்றை நான் முழுமையான அசட்டுத்தனங்கள் என புறக்கணித்துவிட்டேன் என்றே பொருள். இணையத்தில் வெளிப்படும் அனைத்து உளறல்களுக்கும் என்னிடம் பதிலை எதிர்பார்த்து கடிதமெழுதாதீர்கள்