இரவின் பொருள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். இக்கடிதத்தை என்னை எழுத தூண்டியது உங்களின் ‘இரவு’ நாவல். நான் வாசிக்கும் உங்களுடைய முதல் நாவல். மிக வித்தியாசமான கதைக்களனை கொண்டது. இந்நாவலை படித்துமுடித்ததும் என்னுள் எழுந்த சில கேள்விகள்.

1. படித்து முடித்தபிறகு மனசஞ்சலமும், பயமும் ஏற்படுவது ஏன்?

2. நாயகன் ஒவ்வொரு முறை இரவு வாழ்க்கையை விட்டுவிட நினைக்கும்போது சந்தோசமும், திரும்பவும் அதிலேயே உழலும்போது வெறுப்பும் ஆட்கொள்வதேன்?

3. உண்மையிலேயே இரவு அத்தகைய வசீகரம் உடையதா?

(பரீட்சித்துப் பார்க்க ஆசைதான்.. ஆனால்….. நாயகன் போல்….)

4. அப்படியானால் நாம் இரவை வெறுப்பது ஏன்? ஏன் ஓடி ஒளிந்துகொள்கிறோம்?

எனக்கான விடை இரண்டாவது அல்லது மூன்றாவது முறை நாவலை படித்தாலே கிடைக்கலாம். ஆனால் நாயகனின் இறுதி முடிவு என்னை படுத்துகிறது. திரும்பவும் வாசிக்க நினைத்தால் இறுதிக்காட்சி நினைவுக்கு வந்து அச்சமூட்டுகிறது.

நன்றி.
திருவேங்கடம்.

அன்புள்ள திருவேங்கடம் அவர்களுக்கு,

இரவு ஒரு முழுமையான வாழ்க்கை நோக்கை முன்வைக்கும் நாவல் அல்ல. அது வாழ்க்கையின் ஒரு தளத்தை மட்டுமே ஊடுருவிச்செல்லக்கூடியது. காமகுரோதமோகங்களில் காமம் என்ற துளியை மட்டுமே அதுபேசுகிறது. அதில் நாம் அறிந்தும் அறியாமலும் நமக்குள் வாழும் பக்கங்களை. அதைத்தான் இரவின் இரவு என்று சொல்கிறது. அது நிம்மதியையோ நிறைவையோ அளிக்கக்கூடிய தரிசனம் அல்ல. நிலைகுலைவையே அளிக்கும்.

இரவு என்பது நம் ஆழம். நம் அறியப்படாத இருள். அதை அறியநேர்வது அதிர்ச்சியையும் சமன்குலைவையுமே அளிக்கிறது. அது நம்மை ஈர்க்கிறது. அதே சமயம் நம்மை அங்கே நிம்மதியாக இருக்கவிடுவதுமில்லை. தியானத்தின் ஆழமும் அதைப்போன்றதே. நம்மை நாமே அறிவது முதலில் அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது.

இரவின் வசீகரம் என்பது அது நம் பிரக்ஞை உறங்கி அகம் விழிக்கும் நேரமாக இருக்கும்போது மட்டும்தான். பசித்திரு தனித்திரு விழித்திரு என்று அந்த விழிப்பே சொல்லப்படுகிறது. ‘தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது’ என அதையே யோகம் சொல்கிறது.

நாவலில் இரவு என வருவது ஒரு மனநிலை. ஒரு குறியீடு. பகல் நம் விழிப்பு அதாவது ஜாக்ரத். இரவு நம் கனவு அதாவது ஸ்வப்னம். அப்படியென்றால் அடுத்த நிலை? அது இரவுக்குள் உள்ள இரவு. சுஷுப்தி நிலை என்பது நம் கனவுக்குள் உள்ள கனவு. அது வெளிப்படும் ஒரு உச்சமே நாவலில் இறுதியில் நிகழ்கிறது.

நாவலில் இரவுடன் கதைமாந்தருக்கு உள்ள ஊசலாட்டமான உறவை இந்தக்கோணத்தில் புரிந்துகொள்ளலாம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 8