அன்பு ஜெயமோகன்,
வென்டியின் நூலை ஏற்கெனவே தேவைப்பட்ட வேளைகளில் எல்லாம் நான் புரட்டிப் பார்த்ததுண்டு. ஏறத்தாழ 700 பக்கங்கள் கொண்ட அந்த நூலை இன்னும் நான் முழுமையாக வாசித்து முடிக்கவில்லை. இதற்கிடையே John D. Smith மொழிபெயர்த்து, Penguin வெளியிட்ட, அண்ணளவாக 800 பக்கங்கள் கொண்ட The Mahabharata நூலை நான் முழுமையாக வாசிக்க நேர்ந்தது. அது வென்டியின் நூலை மறுபடியும் வாசித்துப் பார்க்க என்னைத் தூண்டியது. அருகிலுள்ள கனடிய நூலகத்தில் இரவல்பெற்ற இவ்விரு நூல்களும் என் கைவசம் உள்ள நிலையில் அவற்றுள் ஒன்றை Penguin மீட்டுக்கொண்ட சேதியும், அது பற்றிய சர்ச்சையும் எழுந்தது என்னை உறுத்திக்கொண்டிருக்கிறது.
“மாற்று வரலாறு” என்று வென்டியே தனது நூலின் முகப்பில் பொறித்துள்ளார். “மாற்று வரலாறு” எதுவும் சர்ச்சையைக் கிளப்புதல் திண்ணம். எனினும் இந்துக்களைப் புண்படுத்தும் வண்ணம் இதில் எதையும் இதுவரை நான் கண்டுகொண்டதில்லை. இனிமேல் காணக்கூடும். அதேவேளை புண்படுவது, புண்படாதது எல்லாம் அவரவர் பொருள்கொள்வதைப் பொறுத்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நூலின் இறுதியில் இடம்பெறும் ஒரு கூற்றில் புலப்படும் வென்டியின் அங்கலாய்ப்பு கவனிக்கத்தக்கது:
“இந்துமரபு போன்ற செழுமைவாய்ந்த, கூரிய நெகிழ்ச்சிமிகுந்த மரபுசான்ற அறிவினை நாம் பயன்படுத்தாதிருப்பது எத்துணை வீணடிப்பு! பல்வண்மை மிகுந்த வரலாற்று உய்வுகளும், உருமாற்றங்களும் இம்மாபெரும் நாகரிகத்தின் எல்லையில்லாப் படைப்புத்திறனுக்குப் புகழாரம் சூட்டுகின்றன. சிற்சில கூற்றுக்கள் ஏற்கத்தகாதவை என்று விதிக்கும் பாப்பரசர் எவரையும் என்றுமே கொண்டிராத நாகரிகம் அது. கிறித்தவ வைதீக எண்ணத்தை இந்துசமயத்துள் புகுத்தி இந்தியாவில் அத்தகைய பாப்பரசு ஒன்றைத் தற்பொழுது சிலர் அமைக்க விரும்புவது பெரிதும் இரங்கத்தக்க செயலாகும். அப்படி நிகழ்வதைத் தடுக்கும்பொருட்டு ஏற்கெனவே பலரும் குரல் எழுப்பியிருப்பது பெரிதும் நம்பிக்கை ஊட்டுகிறது” (Wendy Doniger, The Hindus – An Alternative History, p. 689).
மணி வேலுப்பிள்ளை