ஒரு சம்பவம், அல்லது தருணத்திற்கும் முழு ரூபம் கிடையாது. – இதுவே என் புரிதல் ஜெயமோகன் எழுதியுள்ள கொற்றவை மீது.ஒவ்வொரு வர்ணனையும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு விவரமும், முதற்பார்வைக்கு எவ்வளவு அனாவசியமாகத் தோன்றினாலும், வித்தியாசமுள்ள பல விபரங்கள் ஒரு மையத்தை நோக்கிபோவதை ஆழ்ந்து படித்தால் தான் உணர முடியும்.
ஒரு கதையை எழுதி முடித்த பின் ஆரம்பத்தையும், முடிவையும் அடித்துவிட வேண்டும், அதுபோலவே ஒரு கதையைப் படிக்கும் முன்பாகவும் ஆரம்பத்தையும், முடிவையும் அடித்துவிட்டு படிக்க வேண்டும் எனச் சொன்ன ஆன்டன் செகாவ், எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். கதை படிப்பது பற்றிய அவரின் யோசனையை நான் பொதுவாகச் செயல்படுத்திப் பார்ப்பேன்.
ஆரம்பம் மற்றும் முடிவு என்பது கொற்றவையில் உள்ளபடி.
பகுதி – ஒன்று நீர் எனத் துவங்கும் அத்தியாயத்தின் முதல் வரி –
“அறியமுடியாமையின் நிறம் நீலம் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ”
உரை வகுத்தது என முடியும் கடைசி அத்யாயத்தில் கடைசி வரி –
“ஆம், நீலம் ஒரு புன்னகை.”
இந்தச் செய்தியை நீக்கிவிட்டுப் படித்தாலும் கொற்றவை, ஒரு ஜோதிகாவின் (ஆரெம்கேவி) முகூர்த்தப் பட்டுப்புடவை போல பல வண்ணங்களை உள்ளடக்கியது. பஞ்ச பூதங்களையும், ஐவகைப்பெரு நிலங்களையும் கொற்றவையில் ஒரு பட்டுப்புடவையில் நெய்த வண்ணங்கள் போல அமைத்திருப்பது அருமை. மேலும், புத்தர், முருகன், கார்க்கி எனப் பலரும் இதில் திடீரென நடுவில் வருகின்றனர்.
மேலும், எந்தப் புத்தகத்திலும் முதலில் கடைசி அத்யாயத்தைப் படித்துவிடும் பழக்கமுடைய எனக்கு கொற்றவை ஒரு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. கடைசி அத்தியாயம் ‘தன்மை’ நடையில் சாதாரணத் தமிழில் மிக அழகாக கன்னியாகுமரி அனுபவத்தை ஜெயமோகன் சொல்வதுபோல இருந்தது. ஆனால் முதல் அதியாயத்தின் தமிழும், அதன் சொற்களின் அணிவகுப்பும் முற்றிலும் வேறு வகையில் பிரமிக்க வைத்தது. என் தமிழ் அறிவில் நான் முதன் முதலில் தமிழ் அகராதியின் துணையுடன் படித்த முதல் புத்தகம் இதுவே.
பொதுவாகப் புத்தகங்களை ஒல்லி, குண்டு என அடையாளம் காணும் என் மனைவியின் பார்வையில் குண்டு புத்தகமான இது நான் வாங்கியபோது ஏக வசவுடன் (விலை அதிகம்) என் வீட்டு நூலகத்துக்கு நுழைந்தது.
நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சற்று சிரமப்பட்டேன் என்பது உண்மை. சராசரியாக ஒரு வரி என்பது இந்த புத்தகத்தில் ஆறு வரிகள், கமா போட்டு அல்லது போடாமல் எனத் தொடர்ச்சியாகவும் மற்றும் புழக்கத்தில் இல்லாத தமிழ் சொற்களுடன்.
சூரியனுக்குக் கீழே புதிதாக எதுவும் கிடையாது என்று ஒரு பைபிள் வசனம் உண்டு. ஆனால், ஜெயமோகன் ” மேற்கே அடர்ந்திருந்த பெருங்கானகம் முலை கனிந்து சுரந்த நீர் காட்டின் தாவர இருளுக்குள் நூற்றாண்டுகளாக ஓடிக் கொண்டிருந்தது. அதை வானம் பார்த்ததே இல்லை. வேர்நுனிகள் மட்டுமே அதன் தன்மையையும் சுவையும் அறிந்திருந்தன.”என எழுதியுள்ளது எனக்கு ஒரு அழகான புரிதல்.
இந்த புதுக்காப்பியத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல் முலை. அதுவும் பல கோணங்களில், பல பொருளில்.
காமம் சார்ந்த இடங்களையும் சூழ்நிலைகளையும் வெளிப்படையாக எழுதுவதில் ஜெயமோகன் சற்று தடுமாறுவதாக நான் எண்ணுவதுண்டு. இந்த புத்தகத்திலும் என் எண்ணம் மெய்ப்பட்டுள்ளது. ஆனால், தத்துவார்த்தமாக காமத்தை எழுதுவதில் இவர் வல்லவர் என்பதும் என் எண்ணம். அந்த வகையிலும் ஜெயமோகன் ஏமாற்றவில்லை.
(பக்கம் 105 முதல் 111 பக்கம் வரை).
குலக்கதையாக வந்த (பக்கம் 186), மருதி, விஞ்சயன் – எனக்கு இதுபோலவே வேறு ஒரு கதையை நினைவுபடுத்தியது.
கேரளத்தை பரசுராம க்ஷேத்திரம் என்றும் சொல்வர். பரசுராமர் என்பவர் விஷ்ணுவின் அவதாரம். இவரின் அம்மா, அப்பா ரேணுகா மற்றும் ஜமதக்னி முனிவர். இம்முனிவரிடம் காமதேனு இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ரேணுகா தம் கணவரின் பூஜைக்குத் தண்ணீர் மொண்டுவர ஆற்றின் ஓரத்தில் உள்ள மண்ணில் பானை செய்து அதில் தண்ணீர் கொண்டு வருவது தினப்படி வழக்கம். ஒரு நாள் அந்த அம்மையார் வானில் சென்ற தேவன் ஒருவனின் நிழலை ஆற்றில் கண்டு என்ன அழகு என ஒரு கணம் வியந்து பின் தெளிந்து தண்ணீர் மொள்ள மண்ணில் பானை செய்ய முற்படும்போது பானை செய்ய வரவில்லை. ஜமதக்னி முனிவர் ஞானதிருஷ்டியில் நடந்ததை அறிந்து பரசுராமரிடம் தம் மனைவி, பரசுராமரின் அம்மாவின் தலையை வெட்டும்படி உத்த்ரவிட பரசுராமரும், உடனே தன் தாயாரின் தலையை வெட்டிவிட்டாரம். முனிவர் தம் மகனின் உடனடி கீழ்ப்படிதலுக்கு மகிழ்ந்து என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, பரசுராமர் தம் தாயார் உயிருடன் மறுபடித் தனக்கு வேண்டும் எனக் கேட்க ரேணுகா மறுபடியும் உயிர் பிழைத்து வந்ததாக ஒரு கதை உண்டு.
இக்கதையில் உள்ள புவியியல் செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தும். ரேணுகாவின் கோயில் படவேடு என்னும் இடத்தில் இருக்கிறது. இது ஒரு கிராமம். வேலூரிலிருந்து ஆரணிக்குப் போகும் வழியில் சுமார் 40 கிலோமீட்டரில் உள்ளது. ரேணுகாவின் மகன் பரசுராமர் பெயர் பெற்றது கேரளத்தில். கொடுங்கோளூர் அம்மன் பற்றியும் கொற்றவையில் ஜெயமோகன் எழுதியுள்ளார். பரசுராமர் இவர் பார்வையில் படாமல் போனது எனக்கு வியப்பு.
கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களால், அவர் எழுதிய ஒரு கட்டுரை, ஆறாவது விரல் என்ற பெயரில் ஜூனியர் போஸ்ட் என்ற இதழில் (இப்போது இது வருவதில்லை, நின்றுவிட்டது) விகடன் பிரசுரம் – தொடராக வந்தபோது எழுதியது எனக்குக் கோவலன், கண்ணகிக் கதை பற்றிய ஒரு வித்தியாசமான புரிதல் தந்தது.
புனைவு (நடிப்பு), மற்றும் நாடகம் என்ற ஒரு அமைப்பு மற்றும் செயலுக்கு எதிராக யோசித்து எழுதப்பட்ட காப்பியம் இது என்று அதில் சொல்லப்பட்டிருக்கும். இந்தக் காப்பியத்தில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடனம் / நாடகத்தினை முன்னிறுத்திச் சொல்லப்பட்டிருக்கும். ஒன்று கோவலன் மாதவி சந்திப்பு ஒரு நடனம் / நாடகம் என்ற மனகிழ்ச்சி நிகழ்ச்சியின் வாயிலாக. அதுபோல இரண்டாவதாக பாண்டியன் தவறுதலாகக் கோவலனைக் கொல்லச் சொன்னதும் ஒரு நடனம் / நாடகம் என்ற மனமகிழ்ச்சி நிகழ்ச்சியின் வாயிலாக. எனவே தான் கண்ணகி மதுரையை எரித்த செய்தியைச் சொல்லும்போது கடைசியாக எரிந்தது நாடகக் கொட்டகை என்று முடிக்கப்பட்டிருக்குமாம்.
இந்தப்பொருளில் (இதே வார்த்தை அமைப்பில் அல்ல) வந்த அக்கட்டுரை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
பல சம்பவங்கள் கொற்றவையில் சுவாரசியமாக உண்டு. உதாரணமாக, (பக்கம் 189)
நீலி அவள் கரங்களைப் பற்றி, “நீ காணும் முதல் மருத மழை இது” என்றாள். “மருதத்தில் வானமும் ஒரு சேற்று வயலாகிறது என்று சொல்வதுண்டு. உனக்கு மழையைப் பார்க்கும் ஒரு விழியை அளிக்கிறேன். எந்த விழி தேவை என்று சொல்.”
“எத்தனை நாள் எப்படிக் கொட்டினாலும் மழையை ஒரு கணம் கூட வெறுக்காத ஓர் உயிரின் கண்” என்றாள் கண்ணகி.
“நீ கேட்பது தவளையின் பார்வை” என்று நீலி சிரித்தாள். கோரை படர்ந்த பாதி விளிம்பில் இருந்த பெரிய தவளை ஒன்றின் துறித்தக் கண்களைக் காட்டி “இனி உன் விழியில் அதன் நோக்கு” என்றாள்.
இந்தக் காப்பியத்தில் பல நிகழ்ச்சிகள் நடப்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு முன்னமே தெரியும் என்ற ஒரு பாவனையில் உள்ளது. பிறவிப்பறு வாவியின் கரையில் ஓவியப்பாவைக்கும், கோவலனுக்குமான உரையாடல் (பக்கம் – 262) மிகவும் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்.
மனித இன நூலருக்கும், மனித இன ஆராய்ச்சிக்கும் (anthropological) பல நுணுக்கமான விவரங்கள் இதில் அடிக்குறிப்பு, பின்னிணைப்பு இல்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.
சில ‘அது போல இது’ என வரும் உவமைகள் இக்காப்பியத்தில் கொட்டிக் கிடக்கின்றன.
காற்றில் சருகு எழுதிச் செல்லும் பாதையை யார் அறிவார் ? வானமே அறியும்.
அதுபோல ஜெயமோகனின் எழுத்து முதிர்ச்சி எதை நோக்கி என்பதை யார் அறிவார் ? வாசகராகிய நாமே அறிவோம்.
நன்றி
http://tamiltheni.blogspot.com/2006/03/blog-post_30.html
கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்