அன்புள்ள கிறிஸ்,
நான் எழுதிய கட்டுரைகளிலேயே நீங்கள் கேட்ட இக்கேள்விகளுக்குப் பதில் உள்ளது. இருந்தாலும் இக்கேள்விக்கு ஒரு பதிலை அளிப்பதற்குக் காரணம் ஓர் வாசகர் என்ற முறையில் உங்கள் மீதுள்ள மரியாதை. அதற்குமேல் எனக்கு வரும் கடிதங்கள் பலவற்றில் இருக்கும் கேள்வி இது என்பது
என்னுடைய கட்டுரைகளில் அன்றைய அரசியல்சூழல், நம் தேசியத்தின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைப்பற்றிய விரிவான பின்புலத்தை அளித்தபின்னரே எதையும் சொல்ல முனைகிறேன். ஒரு கேள்வியை அந்தப்பின்புலத்தில் ஒருவர் பொருத்துவாரென்றாலே போதும் எளிதில் விடைகிடைத்துவிடும்.
உங்கள் கேள்வியைப் பார்ப்போம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தலித்துக்களைப்போல தனித்தொகுதி முறை அளிக்க காந்தி சம்மதித்திருப்பார் என்று வைத்துக்கொள்வோம். எத்தனை தொகுதிகள்? நண்பரே, இந்தியாவின் 75 சதவீத தொகுதிகள் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பெரும்பான்மையினராக இருப்பவை. அவர்கள் மட்டுமே வெல்லக்கூடியவை.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி இன்று பிற்படுத்தப்பட்ட சாதியினராலேயே தீர்மானிக்கப்படுகிறது.இன்று இந்தியாவின் முக்கியமான பல தொழில்கள், பல பொருளியல் மண்டலங்கள் பிற்படுத்தப்பட்டோருக்குரியவை. சுதந்திரத்துக்குப் பின்னர் சீராக பொருளாதாரமும் அரசியல் பலமும் பிற்படுத்தப்பட்டோர் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கிறது . பிற்படுத்தப்பட்டோர் அதிகாரத்துக்கு எதிராக பிராமணர்களும் தலித்துக்களும் கூட்டணி அமைக்கிறார்கள் உத்தரப்பிரதேசத்திலே.
இப்போதாவது புரிகிறதா? இல்லையேல் எப்படி இந்த பிற்படுத்தப்பட்டோர் அதிகாரம் சாத்தியமானது என்று மட்டும் யோசியுங்கள். அப்படிச் சாத்தியமானது வயதுவந்தோர் வாக்குரிமையால். அது வந்ததுமே எண்ணிக்கைபலம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அரசியல் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அடித்தளம் அமைந்துவிட்டது. அதை பிரிட்டிஷார் அளிக்கவில்லை. மிஷனரிகளும் அளிக்கவில்லை. காங்கிரஸ் காந்தியின் தலைமையில் போராடிப்பெற்றுத் தந்தது. அதுவே காந்தி பிற்படுத்தப்பட்டோருக்குச் செய்த உதவி.
அதற்குமேல் அவர் என்ன செய்திருக்க வேண்டும்? நாட்டில் உள்ள அத்தனை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் மாதம் நாற்பதுகிலோ அரிசியும், மளிகையும், காய்கறியும், மண்ணெண்ணையும், செல்போன் ரீச்சார்ஜ் கூப்பனும் தவறாமல் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என்கிறீர்கள் என்றால் என்னிடம் பதில் இல்லை.
குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரியவைப்பதற்கு நான் காந்தி அல்ல. அவர்களில் முக்கால்வாசிபெர் லீலாவதிக்கு அல்லது அவரது கட்சிக்கு ஓட்டுபோடாமல் அட்டாக் பாண்டிக்கு ஓட்டுபோடுபவர்கள். ஐநூறுரூபாய்க்காக அல்லது சாதியபிமானத்துக்காக. நான் கொஞ்சம் படித்தவர்கள், கொஞ்சம் மனசாட்சியை எண்ணுபவர்களிடம் மட்டுமே பேசமுடியும்
ஜனநாயகம் வாய்ப்புகளையே வழங்கும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளும் இந்திய சுதந்திரத்தால், காங்கிரஸால் கிடைத்தவை. காமராஜ் முதல்வராக இருந்தபோதுதான் தமிழகமெங்கும் ஒரே வீச்சில் பல்லாயிரம் கிராமங்களில் கல்விச்சாலைகளை உருவாக்கினார். அங்கே கல்விகற்பவர்களுக்கு இலவ்சச உணவளித்தார். கிராமம் கிராமமாக சாலை போட்டார்
இன்று பிற்படுத்தப்பட்டோரில் கல்விகற்ற முதல் தலைமுறை காமராஜின் கல்விச்சாலைகளில் கற்றுவந்தவர்களே. காமராஜ் தமிழ் காந்தி. காங்கிரஸ் காலகட்டத்தில்தான் இந்தியா முழுக்க பிற்படுத்தப்பட்டோருக்கான நூற்றுக்கணக்கான தொழில்முனையங்கள் உருவாயின. தமிழ்நாட்டில் திருப்பூரும் கோவையும் ஈரோடும் சிவகாசியும் விருதுநகரும் நாமக்கலும் எல்லாம் அவ்வாறு உருவானவையே.
பிற்படுத்தப்பட்டோரில் பெரும்பாலானவர்களுக்கு வேளாண்மையே தொழில். இந்தியாவின் நில அமைப்பில் நில உடைமையாளர்கள் பிராமணர் உள்ளிட்ட உயர்சாதியினர் அல்லது கோயில் அல்லது அரசர். நிலக்குத்தகைதாரர்கள் அல்லது குடியானவர்கள் பிற்படுத்தப்பட்டோர். நிலத்தில் வேலைசெய்யும் கூலிகள் அல்லது அடிமைகள் தலித்துக்கள். காங்கிரஸ் பதவிக்கு வந்ததும் தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுக்க உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. விளைவாக நிலங்களில் பெரும்பகுதி பிற்படுத்தப்பட்டோர் கைகளுக்குச் சென்றது. இன்று இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் கையில் வைத்திருக்கும் நிலங்கள் அவ்வாறு கிடைத்தவையே
வயதுவந்தோர் வாக்குரிமை மூலம் பிற்படுத்தப்பட்டோர் 1950-60 களிலேயே அரசியல் சக்தியாக ஆகிவிட்டமையால்தான் இது சாத்தியமானது. இதில்தான் சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரிய அநீதி நடந்தது. குத்தகை நிலங்கள் முழுக்க பிற்படுத்தப்பட்டோரிடம் சென்றன, அவர்கள் அவற்றை கைவசம் வைத்திருக்கிறார்கள் என்பதனால். நூற்றாண்டுகளாக அம்மண்ணில் உழைத்துவந்த தலித்துக்களுக்கு எங்குமே நில உரிமை சாத்தியமாகவில்லை. அவர்கள் முற்றாகவே கைவிடப்பட்டார்கள். இன்றுவரை தலித்துக்கள் மீது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இருக்கும் மேலதிகாரம் இவ்வாறு உருவானதே.
இந்த நிலச்சீர்திருத்தங்கள் நல்ல நோக்கிலேயே செய்யப்பட்டன. அதனால் பயனும் விளைந்தது. இந்திய வலதுசாரி பொருளியலாளர்களில் ஒருசாரார் வேளாண்மையை நன்கறிந்த பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு நிலம் சென்று சேர்ந்ததனால்தான் இந்தியாவில் பசுமைப்புரட்சி சாத்தியமாயிற்று என்றும் நிலம் வைத்து வேளாண்மை செய்ய அறியாத தலித்துக்களுக்கு நிலம் அளிக்கப்பட்டிருந்தால் அவர்கள் அதை சரியாகப் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்றும் வாதிடுவதை வாசித்திருக்கிறேன்.
ஆனால் நான் அதை ஏற்கவில்லை. காந்தி இருந்திருந்தால் நிலச்சீர்திருத்தங்களை இவ்வாறு மேலிடத்தில் இருந்து செய்ய ஒத்துக்கொண்டிருக்கமாட்டார் என்றும் கீழிருந்துதான் ஆரம்பித்திருப்பார் என்றும் அதனால் அடித்தள யதார்த்தம் கணக்கில் கொள்ளப்பட்டு தலித்துக்கள் பயனடைந்திருப்பார்கள் என்றும் நினைக்கிறேன்.நிலச்சீர்திருத்தங்கல் செய்யப்பட்ட காலகட்டத்தில் தலித்துக்கள் ஒருங்கிணைப்பில்லாமல் இருந்ததே அவர்களின் தேக்கநிலைக்குக் காரணமாகியது.
பிற்படுத்தப்பட்டோரின் கல்வியதிகாரம் அவர்களுக்கான இட ஒதுக்கீடுகளால் சாத்தியமானது. பலர் அந்தக்கோரிக்கைகளை முன்வைத்த திராவிட இயக்கத்துக்கு அதற்கான உரிமையை அளிப்பதுண்டு. பிற்படுத்தப்பட்டோர் அரசியலியக்கமான திராவிட இயக்கத்திற்கு அதில் உள்ள பங்கை எவரும் மறுக்க இயலாதுதான். ஆனால் இந்தியாவின் பிறபகுதிகளில் எல்லாமே காங்கிரஸாலேயே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடும் அதிகாரமும் சாத்தியமாகியது என்பதே வரலாறு. அதற்குக் காரணம் வயதுவந்தோர் வாக்குரிமையும் பிற்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கைபலமும்தான்.
கடைசியாக, மிஷனரிகள் குறித்து. இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோரில் ஒரு சதவீதம்கூட கிறித்தவர்கள் அல்ல. முன்ன்நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்டோரில் எவருமே கிறித்தவ சாதியினர் அல்ல. கல்வியளிப்பதில் தமிழ்நாடு போன்ற ஒருசில மாநிலங்களில் மிஷனரிகள் ஒரு தொடக்கத்தை உருவாக்கினார்கள் என்பது மட்டும்தான் உண்மை. பிற்படுத்தப்பட்டோரின் எழுச்சிக்கும் மிஷனரிகளுக்கும் இந்திய அளவில் எந்த தொடர்பும் இல்லை
ஆனால் இன்று முன்னேறும் பிற்படுத்தப்பட்டோரில் கிறித்தவப் பரதவர் முதலிய சாதிகள் இல்லை. அதற்குக் காரணமாக வலுவான கிறித்தவ திருச்சபையே இருக்கிறது. ஆம், திருச்சபை பிற்படுத்தப்பட்டோரில் ஒரு சுமையாக இருக்கிறதென்பதே உண்மை. தங்கள் சொந்த கோரிக்கைக்காக சுயநலத்துடன் இணைந்து வாக்குரிமையைப் பயன்படுத்த அவர்களை அது விடுவதில்லை. அவர்களை மதம் சார்ந்த ஒரு கருவியாகவே பயன்படுத்துகிறது.
ஆக, காந்தி பிற்படுத்தப்பட்டோருக்கு எதை அளித்தார்? வாக்குரிமையை, ஜனநாயகத்தை. அதன்மூலம் அரசியல் அதிகாரத்தை. அதை சரிவர பயன்படுத்திய பிற்படுத்தப்பட்ட சாதிகள் இன்று இந்தியாவையே தங்கள் கைகளுக்குக் கொண்டுவந்துகொண்டிருக்கின்றன. பயன்படுத்தாமல் மதநம்பிக்கையையோ சாதிவெறியையோ காலில் இரும்புக்குண்டுகளைப்போல் கட்டிக்கொண்டிருக்கும் சாதிகள் தங்கள் பலவீனங்களைக் காண மறுத்து காந்தி எங்களூரில் வந்து என்ன கொடுத்தார் என்கின்றன.
1952 ல் லக்னோவில் ஆற்றிய ஓர் உரையில் நேரு இந்த விஷயத்தைச் சொல்கிறார். இந்தியா சுதந்திரம்பெற்றது அதிகமும் உயர்சாதியினரின் பங்களிப்பால். ஏனென்றால் அவர்களே கல்விகற்ற நடுத்தர வற்கம். ஆனால் சுதந்திரத்தின் கனிகள் கீழே உள்ள சாதிகளுக்கே செல்லும். ஏனென்றால் அவர்களே எண்ணிக்கையில் அதிகம். ஜனநாயகத்தில் எண்ணிக்கையே வலிமையாக ஆகும் என்றார் நேரு.
அதை அறிந்திருந்தார்கள் காந்தியும் நேருவும். அவர்கள் வழங்கியதற்குமேல் எந்த ஒரு பெரும் வாய்ப்பையும் எந்த தேசத்து வரலாறும் துயர்படும் மக்களுக்கு வழங்கப்போவதில்லை.
தீண்டாமை தலித்துக்களுக்கு மட்டுமே இருந்தது. கேரளத்தில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தீண்டாமை இருந்தது. காந்தி அந்த தீண்டாமையைக் கடைப்பிடித்த உயர்சாதியினருக்கு எதிராகவே அதிகமும் போராடினார். பிற்படுத்தப்பட்ட மக்களை அவர் சுரண்டப்படும் , அதிகாரமில்லாத மக்களாகவே கண்டார். உயர்சாதியினர் மனதில் கணிசமான மாற்றங்கள் இந்தியாவில் உருவாயின. ஆனால் சுதந்திரத்துக்கு பின்னர் அதிகாரம் பெற்ற பிற்படுத்தப்பட்டோர் எந்தவிதமான மனமாற்றத்தையும் பெறவில்லை.
நீங்கள் அறிந்திருப்பீர்கள். 1930களிலேயே தமிழகத்தின் உயர்சாதிக்கோயில்களில் தலித்துக்கள் ஆலயப்பிரவேசம்செய்ய காந்தியின் போராட்டங்கள் வழிவகுத்தன. முக்கால்நூற்றாண்டு கழித்து இப்போதுதான் பிற்படுத்தப்பட்டோர் கோயில்களில் நுழைய தலித்துக்கள் கம்யூனிஸ்டு இயக்கங்களின் தலைமையில் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
காந்தி நடத்திய கணிசமான போராட்டங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் அரசியல் பொருளியல் சமூக உரிமைகளுக்காகவே. உதாரணமாக அவரது முதல் போராட்டமான சம்பாரன் போராட்டமேகூட பிற்படுத்தப்பட்டோருக்காகவே. ஆனால் தாசில்தார் சான்றிதழை கையில் வைத்துக்கொண்டு போராடுவதற்கு அவர் ஒன்றும் சாதித்தலைவர் அல்ல. அவர் அநீதிக்கும் சுரண்டலுக்கும் எதிராக போராடினார். பாதிக்கப்பட்டோர் இந்தியர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே போராடினார்.
நீங்கள் ஏன் என் கட்டுரைகளை கவனித்து வாசிக்காமல் பேசுகிறீர்கள் என்று சொல்கிறேன் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். 1932ல் பூனா ஒப்பந்தத்தின்போது காந்தி பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தரப்பாக நின்று பேசினார் என்று அம்பேத்கார் குற்றம்சாட்டுவதை அதில் சுட்டிக்காட்டியிருந்தேன். அந்தக்கட்டுரையில் காந்தி தலித்துக்களின் இரட்டை வாக்குரிமைக்கு எதிராகப் பேசியதே அன்று எந்த வாக்குரிமையும் இல்லாத பிற்படுத்தப்பட்ட சாதிகள் தலித்துக்களின் அதே வாழ்நிலையில் இருந்தார்கள் என்பதனால்தான் என்று பல பக்கங்கள் பேசியிருந்தேன்.
காந்தி விரும்பியதும், போராடியதும், பெற்றுத்தந்ததும் ஒட்டுமொத்த அரசியல் ஜனநாயக உரிமையை. அதில் தலித்துக்கள் தங்களுக்கு எண்ணிக்கை பலம் இல்லாத காரணத்தால் ஒடுக்கப்படக்கூடும் என்பதற்காகவே அவர் தனித்தொகுதி ஒதுக்கீட்டை முன்வைத்தார்.
காந்தி தலித்துக்களுக்காக மட்டும் போராடவில்லை என்றுதான் தலித்துக்கள் குறைசொல்கிறார்கள். அவர் தலித்துக்களுக்காக மட்டுமே போராடினார் என்று நீங்கள் சொல்கிறீர்கள். கடைசியில், காந்தி யாருக்காகத்தான் போராடினார்?
காந்தி உங்களுக்கு மகான் அல்ல என்றால் வேண்டாம். அதனால் காந்திக்கு என்ன? நமக்கு உரிமைப்போராட்டத்தைக் கற்பித்தவர்கள், நமக்கு உரிமைகளைப் பெற்றுத்தந்தவர்கள், நமக்கு மகான்கள் அல்ல என்றால்; நமது மகான்கள் நம் சாதியையும் மதத்தையும் சார்ந்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்றால்; நம்மைப்போன்றவர்கள் காந்தியை மகான் என்று சொல்லாமலிருப்பதே அவருக்கு மரியாதை
ஜெ