‘ஆகவேதான் ஃபாசிசத்தின் கருவியாக, அடிப்படைவாதத்தின் ஆயுதமாக என்றுமிருப்பது சென்றகாலம் பற்றிய கனவு’ – என எழுதியிருக்கிறீர்கள். விஷ்ணுபுரமும் வெண்முரசும் அதைத்தான் செய்கிறது என்று ஒரு நண்பர் சொன்னார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
சப்தகிரி
அன்புள்ள சப்தகிரி,
ஏன் கொற்றவையையும் சேர்த்துக்கொள்ளலாமே? குமரிக்கண்டத்தில் தொடங்கி பழந்தமிழகம் பற்றிய அனைத்து பெருங்கனவுகளையும் தொகுத்துக்கொண்டு உருவாக்கப்பட்ட படைப்பு அல்லவா அது?
சென்றகாலத்தை மீட்டெடுப்பது வேறு, அதைப்பற்றிய பொற்கனவுகளை உருவாக்கிக்கொள்வது வேறு.
சிந்தனை என்பது எந்நிலையிலும் ஓர் அறுபடாத தொடர்ச்சிதான். சங்ககாலம் முதல் வரும் நம் வரலாற்றையும் இலக்கிய மரபையும் நாம் துண்டித்துக்கொண்டோமென்றால் நம்மால் நமக்குரிய சுயமான சிந்தனையை உருவாக்கிக்கொள்ள முடியாது. நாம் பிறர் சிந்தனையை நகலெடுப்போம்.
இலக்கியம் என்பது படிமங்களால் செயல்படுவது. படிமங்கள் ஆழ்படிமங்களால் உருவாக்கப்படுபவை. ஆழ்படிமங்கள் ஒரு பண்பாட்டால் மெல்லமெல்லத் திரட்டப்பட்டு சமூக ஆழ்மனதுக்குள் நிலைநாட்டப்படுபவை. ஒரு பண்பாடு தன் பழமையை விட்டுவிட்டதென்றால் அதன் இலக்கியம் தனக்குரிய படிமவெளியை இழந்துவிடும். அது கடன்வாங்கிய படிமங்களால் போலி இலக்கியத்தையே உருவாக்கும்.
ஆகவேதான் நான் எப்போதும் பழமையின் தொடர்ச்சியை முன்வைக்கிறேன். தொன்மையை மீண்டும் விரிவாக உருவாக்கி நிலைநிறுத்துகிறேன். தமிழ்நவீன இலக்கியவாதிகளில் நான் அதிகமாக பழமையை விரிவாக்கி எழுதியிருக்கிறேன். புனைவுகளும் புனைவிலி எழுத்துக்களும்.
மரபிலிருந்து அதன் மாபெரும் படிமவெளியை நவீன இலக்கியக்களத்துக்குக் கொண்டுவருவதே என் நோக்கம். கூடவே அந்த வாழ்க்கையின் இன்றைய தொடர்ச்சியை உருவகம்செய்துகொள்வதும்.
ஆனால் என்னுடைய மரபுசார்ந்த அணுகுமுறைகள் மிகக்கூர்மையான விமர்சனம் கொண்டவை. வழிபாட்டுத்தன்மையோ கனவுருவாக்கத்தன்மையோ அல்ல கறாரான ஆய்வுநோக்குதான் அவற்றில் வெளிப்படும். விஷ்ணுபுரமும் கொற்றவையும் மட்டுமல்ல வெண்முரசும்கூட. விடுபடும் கண்ணிகளை இணைத்துக்கொண்டு, பேசப்படாதவற்றை பேசி நிறைத்து, விமர்சனங்களை உள்ளடக்கி இன்றைய காலகட்டத்துக்கான மறுபுனைவையே நான் நிகழ்த்துகிறேன்.
அவை சென்றகாலப் பெருமிதங்களை பயிரிடுவதில்லை. இன்றையகாலகட்டத்தில் இறந்தகாலத் தொடர்ச்சியை உருவாக்க மட்டுமே முயல்கின்றன. உண்மையில் இன்றைய வாழ்க்கையை மட்டுமே பேசுகின்றன.
ஜெ