மார்க்ஸ்,ஹெகல்,முஜீப்

 

தக்கலையில் என்னுடைய அலுவலகம் இருக்கும் தெருவில் மிக அருகில் நண்பர் முஜீப் குடியிருக்கிறார்..ஜி.ரசூலின் நண்பர். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் உறுப்பிபர். ஆங்கில இலக்கியம் முதுகலை பயின்றபின் இப்போது வளைகுடா நாடுகளில் வேலைசெய்கிறார்

முஜீப் ‘முஜீப் ரஹ்மான்’ என்றபேரிலும் ‘நட்சத்திரவாசி’ என்றபேரிலும் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதிவருகிறார். முஜீப் எனக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அன்புள்ள ஜெயமோகன் அறிய;
நலம்.நலம் அறிய ஆவல்.தற்போது துபையில் இருக்கிறேன்.நான் தொடர்ந்து எழுதி வருவது உங்களுக்கு தெரிந்த விசயம் தானே.எனது சிறு கதை தொகுப்பான தேவதைகளின் சொந்த குழந்தையும்,எனது நாவலான தேவதூதர்களின் கவிதைகள் என்ற  நாவலும் புதுப்புனல் வெளியிட்டிருந்தது.ரொம்ப காலமாக கிடப்பில் போட்டு வைத்திருந்த எனது வலைப் பூக்களை தற்போது புதுபித்துள்ளேன்.தாங்களுக்கு சமயம் இருந்தால் கொஞ்சம் பார்வையிடவும்.எனது அடுத்த நாவல் ரெடியாகி உள்ளது.மேலும் கவிதை தொகுப்பும் ரெடியாகி வருகிறது.உங்களைப் போல ஜந்து கட்டுரை தொகுப்புகளையும் கொண்டு வருவதற்க்கான முயற்சியிலுள்ளேன்.

அன்புடன்
முஜீப் ரஹ்மான்

www.mujeebu.blogspot.com
www.aathirah.blogspot.com
www.natchathravasi.wordpress.com

 

மார்க்ஸ்

முஜீபை  சந்திக்கும்போது சாலையில் நின்றபடி இலக்கியக் கோட்பாடுகளை விவாதிப்பது வழக்கம். பொதுவாக கோட்பாடுகள் மேல் ஆர்வமும் அது சார்ந்த வாசிப்பும் கொண்டவர்.  எப்போதுமே கோட்பாடுகளைச் சர்ந்த வாசிப்பில் எனக்கு ஒருபடி முன்னால் சென்று கொண்டிருப்பவராகவே அவரை நான் காண்கிறேன். ஆகவே அவருடன் விவாதிப்பது எனக்கு உதவிகரமானதாகவே இருந்து வந்துள்ளது

முஜீபின் இணையதளத்தில் மார்க்சிசத்திற்கு பின்னர் மார்க்ஸ்: கார்ல் மார்க்சின் தத்துவம்http://mujeebu.blogspot.com/2009/09/blog-post_29.html ] என்றகட்டுரையை ஆர்வத்துடன் வாசித்தேன். பொதுவாக நம்முடைய இலக்கியச் சூழலில் மார்க்ஸியக் கோட்பாட்டு விவாதங்கள் அருகி வருகின்றன. தொண்ணூறுகள் வரை சிற்றிதழ்களில் மிக அதிகமான இடத்தைப் பிடித்திருந்தவை அவை.

இன்று பழைய மார்க்ஸியர்கள் தமிழியம் பின்நவீனத்துவம் சாதியவாதம் என்றெல்லாம் பிற கோட்பாட்டுகளுக்குச் சென்றுவிட்டிருக்கிறார்கள். [பி.கெ.பாலகிருஷ்ணன் ஒருமுறை சொன்னார் மார்க்ஸியத்துக்கும் ஃபாஸிஸத்துக்கும் மிக நெருக்கமான உறவுண்டு, இரண்டும் அண்ணந்தம்பி போல என்று. மார்க்ஸியத்தில் மனிதாபிமானத்தை எடுத்துவிட்டு கொஞ்சம் தேசியவெறியைக் கலந்தால் ஃபாஸிஸம் வந்துவிடும் என. இன்று முன்னாள் மார்க்ஸியர்கள் சௌகரியமாக ஃபாஸிஸ்டுகளாக இருப்பதைப் பார்க்கையில் உண்மைதானா என்ற எண்ணம் ஏற்படுகிறது]

மார்க்ஸிய விவாதங்களில் எப்போதுமே ஆர்வம் கொண்டிருந்தவன் நான். எண்பதுகளில் கேரளச் சிற்றிதழ்களை வாசித்துவந்தவர்களுக்கு வேறு வழி இல்லை. இன்றைய மார்க்ஸியம்  கல்வித்துறை சார்ந்த அதீதக் கோட்பாட்டுவாதமாக மாறிவிட்டிருக்கிறது. அதில் ஒன்றுக்கு பதில் சொல்கிறார் முஜீப்.

மார்க்ஸியத்தின் நடைமுறைத்தோல்வியை அது எங்கெல்லாம் அமலாக்கபப்ட்டதோ அங்கெல்லாம் காண்கிறோம். அவையெல்லாம் மார்க்ஸியமல்ல, திரிபுவாதங்கள் என்பது ஓர் அடிப்படைவாதியால் மட்டுமே சொல்லத்தக்கது. மார்ஸியத்தின் உள்ளுறையாக உள்ள ஓர் அம்சம்தான் ஸ்டாலினாகவும் போல்பாட்டாகவும் கிம் இல் சுங்காகவும் மாவோவாகவும் முளைத்துக்கொண்டிருந்தது.

அந்த அம்சத்தை மார்ஸியத்தில் இருந்து விலக்கி அதை மீட்க முடியுமா என்று பார்க்கிறார்கள் கோட்பாட்டாளர்கள். ஆகவே அவர்கள் கடைசியாக விளைந்த மார்க்ஸியத்தில் இருந்து பின்னால் நகர்க்கிறார்கள். மாவோவுக்கும் ஸ்டாலினுக்கும் முந்தைய மார்க்ஸியத்தை நோக்கிச் செல்கிறார்கள். பின்னர் லெனின் அளித்த அரசியல் விளக்கத்துக்கு முன்னால் உள்ள மார்க்ஸியத்தை நோக்கிச் செல்கிறார்கள். அதன்பின்னர் மார்க்ஸின் மரணத்துக்குப் பின்னர் எங்கல்ஸ் அளித்த விளக்கத்துக்கு முந்தைய மார்க்ஸியத்தை நோக்கிச் செல்கிறார்கள். அதன்பின்னர் ஹெகலிடமிருந்து பிரிவதற்கு முந்தைய மார்க்ஸை நோக்கிச் செல்கிறார்கள். இதையே ரொம் ரொக்மோர் செய்ய முயல்கிறார் என்று எளிமையாகச் சொல்லலாம்.

அதை வழக்கமாக மார்க்ஸியர்கள் செய்யும் அதே பாணியில் எதிர்க்கிறார் முஜீப். பின்னால் வளர்ந்து வந்த மார்க்ஸை மேற்கோள்காட்டி மார்ஸியம் என்பது அதுவல்ல என்று விளக்குகிறார். அந்தப்போக்கை அப்படியே நீட்டி ஸ்டாலின் போல்பாட் வரை வந்துவிடவும் முடியும். உண்மையான பிரச்சினை இருபத்தொன்றாம் நூற்றாண்டுக்கு மார்க்ஸின் கொடை என்னவாக இருக்க முடியும் என்பதே.

மார்க்ஸிய அரசியல்-பொருளியல் திட்டங்கள் இரண்டுமே அழிவுகளை உருவாக்கும் என நிரூபிக்கப்பட்டுவ்ட்டன. அவை மார்க்ஸிய திட்டங்களே அல்ல என்று சொல்லித்தான் இன்று மார்க்சியர் அவற்றை நிராகரிக்கிறார்கள். மார்ஸியத்தில் இன்றும் செல்லுபடியாகக்கூடியது இரண்டு, ஒன்று அதன் வரலாற்று விளக்கம். அதுவே அதன் தத்துவ அடிபப்டை.  உற்பத்தி வினியோகம் சார்ந்த பொருண்மைச்சக்திகளின் முரணியக்கமாக வரலாற்றை, வரலாற்றின் கருத்தியலை, விளக்கும் கோணம் இன்றும் வரலாற்றை அறிய அதன்மூலம் சமகால நிகழ்வுகளை புரிந்துகொள்ள மிகவும் உதவிகரமானது

ஹெகலில் இல்லாத ஓர் அம்சம் மார்க்ஸில் உள்ளது. அதை மிக எளிமையாக நீதியுணர்வு என்று சொல்லலாம். ஹெகல் வரலாற்றின் உள்ளார்ந்த இயக்குவிசையை மட்டுமே நம்பினார். ஆகவே அவரது அணுகுமுறை இயந்திரத்தனமான கருத்துமுதல்வாதம் என்று சொல்லலாம். மார்க்ஸ் அதில் சேர்த்தது கனல் போல சுடர்விடக்கூடிய , என்றும் அழியாத, நீதியுணர்ச்சியையே. அதுவே மார்க்ஸை ஒரு தரிசகர் ஆக்குகிறது. ஹெகல் வெறும் தத்துவ வாதிதான். மார்க்ஸிடம் இருக்கும் அந்த இலட்சியவாதமே மார்க்ஸியத்தின் மெய்யியல். அதுவே மார்க்ஸின் சொற்கள் உலகமெங்கும் செல்ல வழி வகுத்தது. தன் உடைமைகள் அனைத்தையும் உதறி இலட்சக்கணக்கானவர்கள் மார்ஸியத்துக்காக தங்களை அர்ப்பணித்தது மார்க்ஸ் அளித்த அரசியல் செயல்திட்டத்துக்காகவோ பொருளியல் திட்டத்துக்காகவோ அல்ல. மாறாக அந்த கனவுக்காகவே.

எல்லா மாபெரும் இலட்சியக்கனவுகளையும் போல மண்ணில் இருந்து ஒரு படி மேலாக மிதந்து நிற்கிறது மார்க்ஸிய இலட்சியக்கனவு. ஆனால் அதில் உள்ள நீதியுணர்ச்சி அதை இன்றும் செல்லுபடியாகக்கூடிய ஒன்றாக ஆக்குகிறது. அதிகாரத்தின் மூலம் மக்கள் ஒடுக்கிச்சுரண்டப்படும் வரை அந்த நீதியுணர்ச்சியின் குரல் மண்ணில் எழுந்தபடியே தான் இருக்கும். என்னுடைய பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜோணி என்ற கதாபாத்திரம் அதைப்பற்றி விரிவாகவே பேசுகிறது

துரதிருஷ்டவசமாக மார்க்ஸியத்தை ஒரு ‘அறிவியலாக’ மட்டுமே காண்பவர்கள் இந்த நீதியுணர்ச்சியை, இலட்சியவாத அம்சத்தை, தவறவிடுகிறார்கள். அதில் மார்க்ஸியத்தின் ஆதரவாளர்களும் உண்டு, எதிரிகளும் உண்டு. இருவருக்குமே கையில் கிடைப்பது மார்க்ஸியத்தின் சடலம் மட்டுமே. அதை அவர்கள் பகுப்பாய்வுசெய்கிறார்கள்

ஹெகல்

மேலைநாட்டு கல்லூரிகளில் இன்று வெளிவரும் மார்க்ஸிய ஆய்வுகளில் பெரும்பகுதி மார்க்ஸிய இலட்சியவாதம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது என்ற எண்ணத்தில் இருந்து எழுந்து மேற்கொண்டு மார்க்ஸில் எஞ்சுவதென்ன என்று ஆராய முற்படுவதே . ரோம் ரொக்மோரும் அதையே செய்வதாகத்தான் முஜீபின் கட்டுரை சொல்கிறது. மார்க்ஸிய இலட்சியவாதம் சார்ந்து பேசாமல் அதே தளத்தில் நின்றே முஜீபும் பதில் சொல்கிறார்.

மார்க்ஸியத்தை பின்னோக்கிச் சென்று ஹெகலின் இளம் மாணவராக இருக்கும் மார்க்ஸ் வரை கொண்டுசெல்வதென்பது அல்தூஸர் முதலே ஆரம்பித்த ஒரு மரபு. அதற்கும் பின்னால் சென்று மிக இளம் வயது மார்க்ஸின் நெஞ்சக்கனல் வரை சென்றால் இன்னும் தெளிவை அடையக்கூடும்

முஜீபின் கட்டுரை தீர்க்கமான வாதகதிகளுடன் விரிவாக அமைந்திருக்கிறது. மிகவிரிவான விவாதங்களுக்குரிய கட்டுரை அது. பொதுவாக நம் மொழி கோபாட்டு விவாதங்களுக்கு இன்னமும் வளையவில்லை. ஏனென்றால் கூட்டுச்சொற்றொடர்களை குழப்பம் இல்லாது அமைப்பது இன்னமும் கடினமானதாகவே இருக்கிறது. முஜீபின் மொழி இன்னமும் அந்தச்சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே இக்கட்டுரை இப்போது சற்று சிக்கலான மொழியிலேயே உள்ளது

ஆனாலும் மிகவிரிவான ஒரு தளத்தில் இன்று நடந்து வரும் மார்க்ஸிய, கோட்பாட்டு விவாதங்களை அறிமுகம் செய்யும் இந்த இணையதளங்கள் மிகவும் பயனுள்ளவை

முந்தைய கட்டுரைஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்
அடுத்த கட்டுரைகாவல்கோட்டம் 1