பகுதி நான்கு : பீலித்தாலம்
[ 1 ]
அமைச்சர் சத்யவிரதரின் ஆணைப்படி ஏழு சூதர்கள் மங்கலவாத்தியங்களுடன் நள்ளிரவில் கிளம்பி காந்தாரநகரியின் தென்கிழக்கே இருந்த ஸ்வேதசிலை என்ற கிராமத்தை விடிகாலையில் சென்றடைந்தனர். முன்னரே புறா வழியாக செய்தி அனுப்பப்பட்டிருந்தமையால் அந்த ஊரின் முகப்பிலேயே சூதர்கள் கையில் குழந்தைகளை ஏந்திய ஏழுஅன்னையர்களால் எதிர்கொண்டு அழைக்கப்பட்டு சிறுகிணைகளும் கொம்புகளும் முழங்க ஊருக்குள் கொண்டுசெல்லப்பட்டனர். ஊர்மக்கள் கூடி அவர்களை வாழ்த்தி ஊர்மன்றுக்குக் கொண்டுசென்றனர்.
ஸ்வேதசிலை என்பது எட்டு சுண்ணாம்புப்பாறைகள் கொண்ட நிலம். அப்பாறைகளுக்குள் இயற்கையாக உருவானவையும் பின்னர் வீடுகளாகச் செப்பனிடப்பட்டவையுமான குகைகளில் நூற்றியிருபது குடும்பங்கள் வாழ்ந்தன. லாஷ்கரர்களின் தொன்மையான பூசகர்குலம் அங்கே வாழ்ந்தது. அதன் தலைமையில் இருந்த ஏழுகுலமூத்தாரும் காலையிலேயே எழுந்து தங்கள் மரபுமுறைப்படி செம்பருந்தின் இறகுபொருத்திய தலையணியும் ஓநாய்த்தோலால் ஆன மேலாடையும் அணிந்து கைகளில் அவர்களின் குலச்சின்னமான ஓநாய்முகம் பொறிக்கப்பட்ட தடிகளுடன் கல்பீடங்களில் அமர்ந்திருந்தனர். சூதர்கள் அவர்களைக் கண்டதும் தங்கள் கைத்தாளங்களையும் சங்குகளையும் முழக்கி வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் முறைப்படி இடக்கையைத் தூக்கி வாழ்த்தினர்.
அரசர் கொடுத்தனுப்பிய பரிசுகளை சூதர்கள் குலமூத்தார் முன் வைத்தனர். நெல், கோதுமை, கொள், தினை, கம்பு, கேழ்வரகு, துவரை, மொச்சை, இறுங்கு என்னும் ஒன்பதுவகை தானியங்களும் அத்தி, திராட்சை, ஈச்சை என்னும் மூன்றுவகை உலர்கனிகளும் பட்டு, சந்தனம், தந்தம் ஆகிய மூவகை அழகுப்பொருட்களும் செம்பு, பொன், வெள்ளி நாணயங்களும் அடங்கிய பரிசுக்குவையை அவர்களுக்குப் படைத்து வணங்கி காந்தார இளவரசி வசுமதிக்கும் அஸ்தினபுரியின் இளவரசர் திருதராஷ்டிரனுக்கும் மணமுடிவு செய்யப்பட்டுள்ள செய்தியை அறிவித்தனர்.
அச்செய்தியை அவர்கள் சொன்னதுமே ஏழு குலமூத்தாரும் தென்மேற்குமூலையை நோக்கினர். முதல்மூத்தார் அங்கே மிக உச்சியில் பறந்துகொண்டிருந்த செம்பருந்தைக் கண்டு முகம் மலர்ந்து ‘சக்ரவர்த்தியைப் பெறுவாள்’ என நற்குறி சொன்னார். சூதர்கள் முகம் மலர்ந்தனர். மாமங்கலநாளுக்கான சடங்குகளை குலமூத்தார் நடத்தியளிக்கவேண்டுமென்ற மன்னனின் கோரிக்கையை சூதர்கள் அவர்களுக்குச் சொன்னார்கள். குலமூத்தார் எழுந்து பரிசுப்பொருட்களைத் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டபோது அக்குலப்பெண்டிர் குலவையிட்டனர்.
அன்றுமாலையே ஏழுகுலமூத்தாரும் கழுதைகளில் ஏறி காந்தாரபுரத்துக்குச் சென்றார்கள். அவர்களின் பெண்கள் கைகளில் சிறுவில்லும் அம்புகளும் தோளில் பையில் குடிநீரும் ஈசல்சேர்த்து வறுத்துப் பொடித்து உருட்டிய மாவுருண்டைகளுமாக பாலைநிலத்தின் எட்டுத்திசைநோக்கி பயணமானார்கள். பூத்த பீலிப்பனையின் ஓலையில் அரசகுமாரிக்கு தாலிசுருட்டவேண்டுமென்பது விதி. பாலைநிலத்தில் தாலிப்பனை மிக அரிதாகவே இருந்தது. கிளம்பிச்சென்ற இருபத்திரண்டு பெண்களில் எவரும் தாலிப்பனை தரையில் நிற்பதைக் கண்டதில்லை. மங்கலத்தாலி சுருட்டுவதற்கு கொண்டுவரப்படும் தாலிப்பனையோலைகளை மட்டுமே கண்டிருந்தனர். தாலிப்பனை வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பூக்குமென்பதையும், அந்த மலரே மலர்களில் மிகப்பெரியதென்பதையும் அவர்கள் வழிவழியாகக் கேட்டறிந்திருந்தனர்.
குலத்தின் மூத்தஅன்னை சூர்ணை தாலிப்பனையை எப்படித்தேடுவதென்று அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாள். தாலிப்பனை பாலைவனத்தின் இயல்பான மரம் அல்ல. அதற்கு நீர் தேவை என்பதனால் நீரோடைகளின் அருகேதான் அது நிற்கும். ஆனால் நீர்நிலைகளின் விளிம்புகளில் அது நிற்பதுமில்லை. குன்றுகளில் ஏறி நின்று நோக்கினால் பாலைமண்ணுக்கு அடியில் ஓடும் நீரோட்டங்களை மேலே பசுமைக்கோடுகளாக பார்க்கமுடியும். அந்தக்கோடுகள் இலைப்பனைகளும் புதர்ப்பனைகளும் ஈச்சைகளும் கொண்டவை. அவற்றில் இருந்து மிக விலகி தனியாக தன்னைச்சுற்றி ஒரு வெட்டவெளி வட்டத்தை உருவாக்கிக் கொண்டு நிற்பது தாலிப்பனையாக இருக்கும்.
லாஷ்கரப்பெண்கள் இருபத்திரண்டு வழிகளில் பதினெட்டு நாட்கள் பாலைநிலத்தில் தாலிப்பனையைத் தேடிச்சென்றார்கள். அதிகாலை முதல் வெயில் எரியும் பின்காலை வரையும் வெயில்தாழும் முன்மாலை முதல் செவ்வந்தி வரையும் அவர்கள் தேடினர். செல்லும்வழியில் வேட்டையாடி உண்டும் தோல்குடுவையில் ஊற்றுநீர் நிறைத்தும் பயணத்தை விரிவாக்கிக் கொண்டனர். சோலைகளின் மரங்களின் மேல் இரவும் மதியமும் உறங்கினர்.
ஏழாம்நாள் கிரணை என்ற பெண் முதல் தாலிப்பனையைக் கண்டடைந்தாள். பெருந்தவத்தில் விரிசடையையே ஆடையாகக் கொண்டு நிற்கும் மூதன்னை போல அது நின்றிருந்தது. அதன் தவத்தை அஞ்சியவைபோல அத்தனை மரங்களும் விலகி நின்றிருக்க அதைச்சுற்றிய வெறும்நில வட்டத்தில் சிறிய புதர்கள்கூட முளைத்திருக்கவில்லை. காற்று கடந்துசென்றபோது அது குட்டிபோட்டு குகைக்குள் படுத்திருக்கும் தாய்ப்பன்றி போல உறுமியது.
மேலும் எட்டு தாலிப்பனைகளை அவர்கள் கண்டடைந்தனர். எவையுமே பூத்திருக்கவில்லை. அன்றிரவு அவர்களின் ஊரிலிருந்து எழுந்த எரியம்பு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று வினவியது. திரும்புவதா வேண்டாமா என்று அவர்கள் தலைவியிடம் விசாரித்தனர். அன்னையர் ஊரில்கூடி சூர்ணையிடம் பெண்களைத் திரும்பிவரும்படிச் சொல்லலாமா என்று கேட்டனர். ‘பெண்களே, காந்தாரிக்கு மணம்முடியுமென ஆறு பாலையன்னைகளும் விதித்திருந்தால் எங்கோ அவளுக்கான தாலிப்பனை பூத்திருக்கும். பூக்கவேயில்லை என்றால் அவள் மணமுடிப்பதை அன்னையர் விரும்பவில்லை என்றுதான் பொருள்’
மேலும் தேடும்படி எரியம்பு ஆணையிட்டது. பெண்கள் விரியும் வலையென இருபத்திரண்டு கோணங்களில் மேலும் பரவிச்சென்றனர். பதினெட்டாவது நாள் அவகாரை என்ற பெண் ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன.
அவகாரை அதை நோக்கியபடி எந்த எண்ணமும் அற்ற சித்தத்துடன் நின்றிருந்தாள். நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது. அவள் நிலையழிந்தவளாக அதைச்சுற்றிச் சுற்றி நடந்தாள். ஆனால் அதை நெருங்க அவளால் முடியவில்லை. பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவளுடைய சரடுகள் அறுபட மண்ணில் விழுந்து விசும்பி அழத்தொடங்கினாள்.
இரவில் அவள் எய்த எரியம்பைக் கண்டு மறுநாள் காலையில் அங்கே இருபக்கங்களில் இருந்த பெண்களும் வந்து சேர்ந்தனர். அவர்கள் அந்த மரத்தில் ஏறி கிழக்கே விரிந்த தளிர் ஓலை ஒன்றையும் மூன்று பூமடல்களையும் வெட்டி எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் ஊரை அடைந்தபோது மற்றபெண்களும் திரும்பிவிட்டிருந்தனர். அவர்களை அன்னையர் ஊர்முகப்பில் குருதிசுழற்றி வரவேற்று உள்ளே கொண்டுசென்றனர். மூதன்னை சூர்ணையின் முன் அந்த ஓலையையும் மலரையும் வைத்தபோது சுருக்கங்கள் அடர்ந்த முகம் காற்றுபட்ட சிலந்தி வலைபோல விரிய புன்னகைசெய்து தன் வற்றிப்பழுத்த கரங்களை அவற்றின்மீது வைத்து அருளுரைத்தாள்.
ஓலையும் மலரும் லாஷ்கரப் பெண்களால் காந்தாரபுரிக்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டன. முன்னால் ஏழுபெண்கள் கொம்புகளையும் முழவுகளையும் முழக்கியபடிச் சென்றனர். பின்னால் ஏழுபெண்கள் தலைமேல் ஏற்றிய பனையோலைப்பெட்டிகளில் ஓநாயின்தோல், செம்பருந்தின் இறகு, உப்பிட்டு உலர்த்திய முயலிறைச்சி, கழுதையின் வால்மயிர் பின்னிச்செய்த காலுறைகள் போன்ற பரிசுப்பொருட்களைச் சுமந்துகொண்டு சென்றனர்.
அவர்கள் காந்தாரநகரியை அடைந்ததும் நகரிலிருந்து மங்கலைகளான நூற்றியெட்டு பெண்களும் நூற்றியெட்டு தாசிகளும் சூதர்கள் இசைமுழங்க வந்து எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். முன்னரே வந்திருந்த ஏழுகுலமூதாதையரும் அங்கே அரண்மனைக்கு கிழக்காக இருந்த பெரிய முற்றத்தில் மூங்கில்நட்டு அதில் மஞ்சள்நிறமான மங்கலக்கொடியை ஏற்றியிருந்தனர். அதன்கீழே நடப்பட்ட வெற்றிலைக்கொடி தளிர்விட்டெழுந்து மூங்கிலில் சுற்றிப்படர்ந்து ஏறத்தொடங்கியிருந்தது. பந்தலைச்சுற்றி ஈச்சையிலைகளை முடைந்துசெய்த தட்டிகளாலும் மூங்கில்களாலும் கட்டப்பட்ட மாபெரும் பந்தல் எழுந்துகொண்டிருந்தது.
தாலிப்பீலிகளை பந்தல்நடுவே இருந்த வட்டவடிவமான மண் மேடையில் வரையப்பட்ட மாக்கோலம் நடுவே இருந்த மண்கலத்தில் கொண்டுசென்று வைத்தனர். அதன் முன்னால் வரையப்பட்டிருந்த பன்னிரு களங்கள் கொண்ட சக்கரத்தின் நடுவே இருந்த சிறியபீடத்தில் தாலிப்பனையோலை வைக்கப்பட்டது. குலமங்கலைகளும் பொதுமங்கலைகளும் மஞ்சள்தானியங்களையும் மலரிதழ்களையும் அதன்மேல் போட்டு வணங்கினர்.
பந்தல் மங்கலம் முடிந்த செய்தியை நிமித்திகர் சென்று அரசருக்குச் சொன்னார்கள். மஞ்சள் ஆடையும் மங்கலஅணிகளும் அணிந்து செங்கழுகின் இறகு பொருத்திய மணிமுடியுடன் சுபலர் பந்தலுக்கு வந்தார். அவருக்கு வலப்பக்கம் அசலனும் பின்னால் சகுனிதேவனும் விருஷகனும் வந்தனர். இடப்பக்கம் சுகதர் வந்தார். பந்தலில் பணிகளை நடத்திக்கொண்டிருந்த சத்யவிரதர் ஓடிச்சென்று மன்னரை வணங்கி பந்தலுக்குள் அழைத்துச்சென்றார்.
பந்தலின் நடுவே அமைந்திருந்த மங்கலமேடைக்கு வலப்பக்கம் மணமேடையும் இடப்பக்கம் அரசர்களுக்கான பீடங்களும் இருந்தன. பந்தலுக்கு முன்னால் வேள்விக்கூடம் தனியாக இருந்தது. சுபல மன்னர் வந்து அமர்வதற்கு முன் பீடங்களை வைதிகர் நிறைக்கல நீர் தெளித்து தூய்மைசெய்தனர். அவர் அமர்ந்ததும் அவர்மேல் நீரையும் மலர்களையும் தூவி வாழ்த்திய பின்னர் அவர்கள் பந்தலைவிட்டு வெளியேறினர்.
குலமூத்தார் வந்து வணங்கி மன்னரிடம் மங்கலத்தாலி செய்வதற்கான அனுமதியைக் கோரினர். அரசர் அளித்த அனுமதியை நிமித்திகன் மும்முறை முறைச்சொற்களில் கூவ குலமூத்தார் தங்கள் தண்டுகளைத் தூக்கி அதை ஆமோதித்தனர். ஒருவர் அந்த இளையபனையில் இருந்து மெல்லிய பொன்னிறமான ஓலைத்துண்டு ஒன்றை வெட்டினார். அதில் எழுத்தாணியால் காந்தாரகுலத்தின் சின்னமான ஈச்சை இலையையும் அஸ்தினபுரியின் சின்னமான அமுதகலசத்தையும் வரைந்தார். அதன்மேல் மஞ்சள்கலந்த மெழுகு பூசப்பட்டது. அதை இறுக்கமான சுருளாகச் சுருட்டி மஞ்சள்நூலால் சுற்றிச்சுற்றி இறுக்கிக் கட்டினார். அதன் இரு முனைகளிலும் மெழுகைக்கொண்டு நன்றாக அடைத்தார். அதை மூன்றுபுரிகள் கொண்ட மஞ்சள் சரடில் கட்டினார்.
அந்நேரம் முழுக்க மங்கலவாத்தியங்களும் குரவைஒலிகளும் எழுந்துகொண்டிருந்தன. கட்டிமுடித்த தாலிக்காப்பை ஒரு சிறிய தட்டில் பரப்பிய மஞ்சள்அரிசி மீது வைத்து பொன்னும் மலரும் துணைசேர்த்து இருவகை மங்கலைகளிடம் கொடுத்தனுப்பினர். அவர்கள் தொட்டு வாழ்த்தியபின் வந்த தாலி அரசரின் முன் நீட்டப்பட்டது. சுபலரும் மைந்தர்களும் அதைத் தொட்டு வணங்கியதும் அது கொண்டுசெல்லப்பட்டு முன்னால் நின்ற மங்கலக் கொடித்தூணில் கட்டப்பட்டது.
அவ்வாறு மேலும் பத்து தாலிகள் செய்யப்பட்டன. அவை கொடித்தூணில் கட்டப்பட்டதும் இருவகை மங்கலைகள் குடத்தில் இருந்த நீரை பொற்கரண்டியால் தொட்டு வெற்றிலைச்செடிக்கு விட்டனர். குலமூத்தார் கைகாட்ட கொம்புகளும் பெருமுழவுகளும் எழுந்ததும் சடங்கு முடிந்தது. அரசர் முதலில் வெளியேறினார். தொடர்ந்து குலமூத்தார் ஒவ்வொருவராக வெளியேறினர். பந்தல் ஒழிந்ததும் சூதர்கள் மேடைமுன் ஈச்சைப்பாயில் வந்தமர்ந்து கிணைகளையும் ஒற்றைநாண் யாழ்களையும் மீட்டி அங்கே வந்திருந்த தேவர்கள் ஒவ்வொருவருக்காக நன்றி சொல்லி அவர்கள் திரும்பச்செல்லும்படிக் கோரி பாடத்தொடங்கினர்.
அருகே இருந்த அரண்மனையின் உப்பரிகையில் மான்கண் சாளரம் வழியாக அதை காந்தாரியான வசுமதி பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் அருகே அவளுடைய தங்கைகளும் வெவ்வேறு சாளரத்துளைகள் வழியாக நோக்கிக்கொண்டிருந்தனர். சத்யவிரதை, சத்யசேனை, சுதேஷ்ணை, சம்ஹிதை, தேஸ்ரவை, சுஸ்ரவை, நிகுதி, சுபை, சம்படை, தசார்ணை ஆகிய பத்து தங்கைகளும் சுபலரின் நான்கு மனைவிகளுக்குப் பிறந்தவர்கள். கடைசித்தங்கையான தசார்ணைக்கு பதிநான்கு வயதாகியிருந்தது. அவள் மட்டும் சாளரம் வழியாக வெளியே பார்க்காமல் அந்தப்புரத்தின் ஒவ்வொரு தூணாகத் தொட்டு எண்ணிக்கொண்டு ஓர் எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்கு ஒற்றைக்காலில் ஓடிக்கொண்டிருந்தாள். அவளுடைய எண்ணிக்கை ஓட்டத்தில் தவறிக்கொண்டிருந்தது.
அவள் நின்று குழம்பி மீண்டும் முதல் தூணைத் தொட்டதைக்கண்டு அவளுடைய மூத்தவளான சம்படை சிரித்துக்கொண்டு பீடத்தில் அமர்ந்தபடி தன் காலை ஆட்டினாள். அவள் அணிந்திருந்த பெரிய பட்டு மலராடையின் கீழ்ப்பகுதி அலையடித்தது. தசார்ணை அக்காவிடம் ‘போ’ என தலையை அசைத்துவிட்டு தன் மலராடையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு மீண்டும் ஒற்றைக்காலில் குதித்து ஓடினாள். ஒரு தூணைத் தொடப்போகும்போது அவளுடைய கால் நிலத்தில் ஊன்றிவிட்டது. அவள் திரும்பி சம்படையைப்பார்க்க சம்படை வாய்பொத்திச் சிரித்தாள்.
‘அக்கா’ என்றபடி தசார்ணை ஓடிவந்து வசுமதியின் சேலைநுனியைப் பிடித்தாள். “என்னடி?” என்று வசுமதி சினத்துடன் கேட்டாள். அந்த முகச்சுளிப்பைக் கண்டு தயங்கி ஒன்றுமில்லை என்று தசார்ணை தலையாட்டினாள். மூத்தவளான சத்யவிரதை “என்னடி விளையாட்டு? போ, பீடத்தில் போய் அமர்ந்திரு” என்று அதட்டினாள். சிறிய செவ்விதழ்களை பிதுக்கியபடி நீலக்கண்களில் கண்ணீர் ததும்ப தசார்ணை பின்னால் காலெடுத்துவைத்தாள்.
வசுமதி சிரித்தபடி “வாடி இங்கே, என் கண்ணல்லவா நீ” என்றபடி எட்டி தசார்ணையின் மெல்லிய கைகளைப்பிடித்து அருகே இழுத்து அணைத்துக்கொண்டாள். “என்னடி? அக்காவிடம் சொல்…” என்றாள். தசார்ணை சம்படையைச் சுட்டிக்காட்டி “அவள் என்னைப்பார்த்துச் சிரிக்கிறாள்” என்றாள். “ஏய் என்னடி சிரிப்பு? அடி வாங்கப்போகிறாய்” என்று சம்படையை நோக்கிச் சொல்லி கண்களாலேயே சிரித்தாள் வசுமதி. சம்படை மீண்டும் வாய்பொத்திச் சிரித்தபடி வளைந்தாள். “சொல்லிவிட்டேன், இனிமேல் சிரிக்கமாட்டாள்” என்று வசுமதி சொன்னாள்.
“நான் ஒற்றைக்காலைத் தூக்கிக்கொண்டு நூறுமுறை அந்தப்புரத்துத் தூண்களை எண்ணுகிறேன் என்று சொன்னேன். அதற்கும் அவள் சிரித்தாள்” என்றாள் தசார்ணை. “சரி நீ நூறுமுறை எண்ணவேண்டாம். ஐம்பதுமுறை எண்ணினால்போதும்” என்றாள் வசுமதி. சரி என்று தலையாட்டியபின் காதுகளைத் தாண்டி வந்து விழுந்த குழல்கற்றையை அள்ளிச்செருகியபடி தசார்ணை மீண்டும் தன் மலராடையை இடுப்பில் செருகிக்கொண்டாள்.
சத்யவிரதை காந்தாரியின் அருகே வந்து அமர்ந்துகொண்டு “அஸ்தினபுரி காந்தாரபுரியைவிட பெரிய நகரம் என்றார்களே அக்கா, உண்மையா?” என்றாள். சத்யசேனை “பெரியதாக இருந்தால் என்ன? நீ என்ன நகரத்திலா உலவப்போகிறாய்? நீயும் நானும் அந்தப்புரத்தில்தானே இருக்கப்போகிறோம்” என்றாள். காந்தாரி “நீ எவ்வளவு நகை வைத்திருக்கிறாய்?” என்று சத்யசேனையிடம் கேட்டாள். “என் அம்மா தந்த நகைகள்தான்… உள்ளே என் கருவூலப்பெட்டியில் இருக்கின்றன” என்றாள் சத்யசேனை. காந்தாரி சிரித்தபடி “நீ போடமுடியக்கூடிய அளவுக்குமேல் உனக்கு நகைகள் எதற்கு?” என்றாள்.
சத்யசேனை “அவை என் நகைகள்…” என்று சொல்லவந்ததுமே காந்தாரி என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொண்டாள். சத்யவிரதை புன்னகைசெய்து “நாம் எவற்றைப் பயன்படுத்துகிறோமோ அவையல்ல, எவற்றை வைத்திருக்கிறோமோ அவையே நம் செல்வம்” என்றாள். காந்தாரி சிரித்தபடி “இல்லை சத்யை, நாம் எவற்றையெல்லாம் துறக்கும் உரிமைகொண்டிருக்கிறோமோ அவையே நம் செல்வம். மற்றவை நம்முடையவையே அல்ல” என்றாள்.
“நீங்கள் எவற்றைத் துறக்கப்போகிறீர்கள் அக்கா?” என்றாள் சத்யவிரதை. “இந்த நகரத்தை, என் சுற்றத்தை, என் இளமைக்காலத்தை” என்று காந்தாரி சிரித்துக்கொண்டே சொன்னாள். ஆனால் மற்றபெண்களின் கண்கள் மாறுபட்டன. சத்யவிரதை “நீங்கள் காந்தாரத்துடன் அஸ்தினபுரியையும் அடையத்தானே போகிறீர்கள் அக்கா” என்றாள். “ஆம் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றாள் காந்தாரி. “ஆனால் சற்றுமுன் என் தாலி எழுதப்படுவதைக் கண்டபோது அது உண்மை அல்ல என்று தோன்றியது. நான் காய்த்து கனியான இந்த மரத்தில் இருந்து உதிர்கிறேன். அங்கே நான் முளைக்கலாம். ஆனால் இனி இது என் இடமல்ல. இவர் எவரும் என் உறவினரும் அல்லர்.”
அவர்கள் பேசாமல் நோக்கியிருந்தனர். தசார்ணையை சம்படை துரத்திப்பிடிக்க இருவரும் கூவிச்சிரித்தனர். தசார்ணை உதறிவிட்டு ஓட சம்படை சிரித்துக்கொண்டே துரத்தினாள். “இனி சில மாதங்கள் கழித்து நான் இங்கு வந்தாலும் இங்கு பிறத்தியாகவே எண்ணப்படுவேன்” என்று காந்தாரி சொன்னாள். “அது அந்த ஓலை எழுதப்படும் வரை எனக்குத் தோன்றவில்லை. அந்த எழுத்துக்களைப் பார்த்தபோது இன்னொருமுறை என் தலையில் எழுதப்படுவதாக உணர்ந்தேன்.”
சத்யவிரதை காந்தாரியின் கைகளைப்பற்றியபடி “ஆம் அக்கா, நானும் அவ்வாறே உணர்ந்தேன்” என்றாள். “என் மனம் படபடத்ததில் எதுவுமே கண்ணுக்குத் தெரியாததுபோல இருந்தது. அந்த ஓசைகள் மட்டும் என்னைச் சூழ்ந்திருந்தன” என்றாள். காந்தாரி அவள் கையைப்பற்றியபடி “அச்சம் தேவையில்லை. நாம் இங்கு வாழும் வாழ்க்கைதான் எங்கும். ஷத்ரியப்பெண்ணுக்கு ஷத்ரியர்களைப் பெறுவதைத்தவிர வேறு வாழ்க்கை இல்லை” என்றாள்.
சுதேஷ்ணை சிரித்தபடி “நேற்று என் சூதச்சேடியிடம் நம் பதினொருவரையும் அஸ்தினபுரியின் இளவரசர் மணக்கப்போவதைச் சொன்னேன். திகைத்துப்போய் பதினோரு பேரையுமா என்றாள். பாவம் மிகவும் இளையவள்” என்றாள். “அது எங்குமுள்ள வழக்கம்தானே? ஒருகுடும்பத்து அரசகுமாரிகளை ஒரே மன்னருக்குத்தான் அளிப்பார்கள். முடியுரிமைப்போர் நிகழலாகாது என்பதற்காக” என்று சத்யவிரதை சொன்னாள்.
“இல்லை, அவள் சொன்னாள்…” என்று சொல்லவந்த சுதேஷ்ணையை “போதும்” என்று சொல்லி சத்யவிரதை நிறுத்தினாள். காந்தாரி சிரிப்புடன் “சொல்லடி” என்றாள். சுதேஷ்ணை “இல்லை அக்கா” என்றாள். “தாழ்வில்லை, சொல். நாம் இன்னும் மங்கலநாண் அணியவில்லை” என்றாள் காந்தாரி. சுதேஷ்ணை கசப்பான சிரிப்புடன் “அவர்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டாம். கண்ணில்லாதவன் தோளில்தான் பத்து அம்பறாத்தூணி தொங்கும் என்று.”
சொல்லிமுடித்தபோதுதான் அப்பழமொழியின் இழிந்த உட்பொருளை சுதேஷ்ணை உணர்ந்தாள். நாக்கைக் கடித்தபடி காந்தாரியைப் பார்த்தாள். காந்தாரி புன்னகை மாறாமல் “அவளிடம் சொல், மலைக்கழுகுகள் மரங்களில் கூடணைவதில்லை, கரும்பாறைகளையே தேர்ந்தெடுக்கின்றன என்று” என்றாள்.