வரலாற்றை மீள எழுதுதல்
வரலாற்றுப் புனைக்கதை என்றால் என்ன என்பதை நான் இவ்வாறு வரையறை செய்து கொள்கிறேன். வரலாறு என்பது ஒரு மாபெரும் மொழிபு (Narration) அந்த மொழிபு தொடர்ச்சியாக பல்வேறு மனிதர்களால் பல்வேறு காலகட்டமாய் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது. அத்தனை மனிதர்களையும் அவர்களுக்குப் பொதுவானதாக இருக்கக்கூடிய ஒரு தர்க்க அமைப்பு உள்ளது. அந்தத் தர்க்க அமைப்பின் விதிகளின்படியே வரலாற்று உண்மைகள் நிரூபிக்கப்படுகின்றன. வரலாற்று உண்மைகள் பொய்ப்பிக்கவும் படுகின்றன.
அந்த விதிகளைப் பற்றிய விவாதமே ‘வரலாற்றெழுத்தியல்’ என்ற அறிவுத் துறையாக உள்ளது. (historiography ) வரலாற்றுப் புனைகதை என்பது இந்த வரலாற்றெழுத்தியலின் விதிகளுக்குள் அடங்காத ஒரு வரலாற்று மொழிபு. வரலாற்று எழுத்தின் தர்க்க அமைப்பை உதறிவிட்டு கற்பனை மூலம் வரலாற்றை எழுதிப்பார்த்தல்தான் வரலாற்றுப் புனைகதையின் வழிமுறை.
அதேசமயம் வரலாற்றுத் தகவல்களை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக அப்புனைவு செயல்படுமென்றால் அது வெறும் புனைவே ஒழிய வரலாற்றுப் புனைகதை அல்ல. வரலாற்று எழுத்து போலவே வரலாற்றுப் புனைகதைகளுக்கும் வரலாற்றுத் தகவல்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றைச் சார்ந்தே அது இயங்க முடியும். தகவல்களின் எல்லைகளை ஒருபோதும் அது மீறிவிட முடியாது. எந்த தகவல்களை வைத்து வரலாற்றெழுத்து தர்க்கப்பூர்வமாக வரலாற்று மொழியை உருவாக்குகிறதோ அதே வரலாற்றுத் தகவல்களை வைத்து புனைவின் மூலம் ஒரு மாற்று வரலாற்று மொழிபை உருவாக்குவதே வரலாற்றுப் புனைகதை எனலாம்.
ஆகவே வரலாற்றுப் புனைகதை எப்போதும் பிற வரலாற்று மொழிபுகளுக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த மொழிபுகளின் விடுபடல்களை தன் கற்பனையால் நிரப்புகிறது. அந்த மொழிபுகள் தர்க்கபூர்வமாக அடைந்த முடிவுகளின் மீது புதிய சாத்தியக் கூறுகளை அது திறக்கிறது. அந்த மொழிபுகளை குலைக்கிறது, வேறு வகையாக அடுக்குகிறது.
அத்தனைக்கும் மேலாக தர்க்கபூர்வமான அணுகுமுறையின்படி வரலாற்றெழுத்து உருவாக்கும் இயந்திரத்தனமான வரலாற்று மொழிபுக்குள் அது மானுட உணர்ச்சிகளைப் பெய்கிறது. விழுமியங்களை ஏற்றுகிறது. அதன்மூலம் வெற்றுத் தகவல்களின் வரிசையை அது வாழ்க்கைச் சித்திரமாக மாற்றிக் கொள்கிறது. இதுவே வரலாற்று நாவலின் பணியாகும். அதை எந்த அளவு நிறைவேற்றியது என்பதைக் கொண்டே நாம் ஒரு வரலாற்று நாவலை வாசித்து மதிப்பிடவேண்டும்.
வரலாறு பேசுபொருளாக அமைந்த புனை கதைகளை நாம் மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். இப்பிரிவினையை முழுமுற்றானதாகவோ மாற்ற முடியாததாகவோ கூறவில்லை. புரிதலுக்கும் வகைப்படுத்தி மதிப்பிடுதலுக்கும் உரிய வழிமுறையாகவே கூறுகிறேன். முதல்வகை நமக்குப் பெரிதும் அறிமுகமான வரலாற்று மிகுகற்பனை (Historical Romance) நாவல் என்று இவற்றை ஒரு வசதிக்காகவே கூறுகிறோம். நாவலுக்குரிய இயல்புகள் இவற்றுக்கும் பெரும்பாலும் இருப்பதில்லை. இவை பெரும்பாலும் நீளமான கதைகளே. ஆங்கிலத்தில் சர் வால்டர் ஸ்காட், பிரெஞ்சில் அலக்ஸாண்டர் டூமா போன்றவர்கள் இவ்வகை எழுத்தின் முன்னோடிகள்..
இவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழில் எழுதிய கல்கி, சாண்டில்யன் போன்றவர்கள் தமிழில் இவ்வடிவத்தின் முன்னோடிகள். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் இவ்வகைப் புனைக்கதை நம் வெகுஜனரசனையைப் பெரிதும் கவர்ந்ததாக இருந்திருக்கிறது. அதற்கான சமூக, உளவியல் காரணங்களே வேறு. இன்றும் நாம் சாதாரணப் பேச்சுக்களில் வரலாற்று நாவல் என்ற சொல் மூலம் இத்தகைய ஆக்கங்களை சுட்டுகிறோம். இவற்றை வரலாற்று மிகுபுனைவுகள் என்று வேறுபடுத்திப் புரிந்து கொள்வது சரியான வரலாற்று நாவலின் வடிவத்தை அறிமுகம் செய்யுவம் ரசிக்கவும் நமக்குப் பெரிதும் உதவக்கூடியது.
வரலாற்றை புனைவுக்கு எடுத்தாளும் இன்னொரு வகை எழுத்து மிகைபுனைவு (Fantasy). இவ்வகை எழுத்தில் வரலாற்றின் தகவல் சார்ந்த தர்க்கம் எவ்வகையிலம் பேணப்படுவதில்லை. வரலாற்றின் அடுக்குமுறைகூட பேணப்படுவதில்லை. வரலாறு எப்படி எழுதப்படுகிறதோ அதேபோல ஒரு கற்பனையான வரலாற்றை எழுத முற்படுகிறது இது. சில சமயம் வரலாற்று நகர்வின் ஒரு வரைபடத்தை இது மேலோட்டமாக எடுத்தாண்டிருக்கும். நம்பகத்தன்மையை உருவாக்க தகவல்களை பயன்படுத்தியிருக்கும்.
ஆனால் இவ்வகை எழுத்து பேசுவது வரலாற்றை அல்ல. வரலாற்றுத் தகவல்கள் இதற்கு படிமங்களாகவே பயன்படுகின்றன. ஒரு வரலாற்றுத் தகவலை எந்த அளவுக்கு உண்மையுடன் நெருக்கமாகக் கொண்டு செல்லலாம் என்று இது முனைவதில்லை. மாறாக அதை ஒரு படிமமாக ஆக்கி அதன்மூலம் எந்த அளவுக்கு கற்பனையால் முன்வைக்க முடியும் என்றே முயல்கிறத. அனைவரும் அறிந்த உதாரணம் கப்ரியேல் கர்ஸியா மார்க்யூஸின் ‘நூறாண்டுத்தனிமை’ தமிழில் தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ ஜெயமோகனின்’விஷ்ணுபுரம்’ எஸ்.ராமகிருஷ்ணனின் ‘நெடுங்குருதி’ போன்றவை. இந்திய மொழிகளில் இருந்து நமக்குக் கிடைக்கும் நாவல்களில் அக்னிநதி இவ்வகையான எழுத்துக்கு சிறந்த உதாரணம்.
இந்தவகையான மிகுபுனைவுகளின் மூலம் இருப்பது தொன்மங்களில்தான். உண்மையில் இவை வரலாற்றை தொன்மமாக மாற்ற முயல்கின்றன. ராஜராஜ சோழன் பெரிய கோயிலை கட்டினான் என்பது வரலாறு. சிற்பிக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்தான் என்பது தொன்மம். தொன்மத்தில் ஒரு படிமத்தன்மை உள்ளது. மேலும் மேலும் கற்பனையால் முன்னர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு விழுமியம் உள்ளடங்கியுள்ளது. நாம் நெடுங்காலமாக வரலாற்றை விடவும் தொன்மங்களையே முக்கியமாக கருதி வந்த பண்பாடு உடையவர்கள். நம் பழமரபு நமக்கு வரலாறாக கிடைக்கவில்லை, தொன்மங்களாகவே கிடைக்கிறது. தொன்மங்கள் வாய்மொழி மரபுக்கு மிக நெருக்கமானவை.
அதாவது வரலாறு எழுத்து வடிவில் பதிவு செய்யப்படாமலிருக்கும்போது அது வாய்மொழிக்கதைகளாகவே கை மாறுகிறது. அப்போது சொல்பவனின் உணர்ச்சிகளும் அச்சமூகத்தின் விழுமியங்களும் ஏற்றப்பட்டு அது தொன்மமாக ஆகிவிடுகிறது. உதாரணமாக இப்போதுகூட நம் முக்கியமான அரசியல், மதத்தலைவர்களைப் பற்றி எழுத்து சார்ந்த ஒரு வரலாறும் வாய்மொழி சார்ந்த வேறு ஒரு வரலாறும் இருப்பதைக் காணலாம். வாய்மொழி வரலாறு கிட்டத்தட்ட தொன்மம் போலவே இருக்கிறது. அதில் எப்படியோ ஒரு மாயம் கலந்துவிடுகிறது. எம்ஜியார் சமாதியில் அவருடன் புதையுண்ட அவரது கடிகாரத்தின் துடிப்பைக் கேட்க இன்றும் பலநூறுபேர் தினமும் காதைவைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
வரலாறு என்பது எப்போதுமே புறவயமான ஒன்று. புறவயமானதாக அத இருக்கவேண்டுமென்றால அது ஆவணப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எழுதப்பட்ட வரலாறே புறவயமானதும் ஆவணப்படுத்தப்பட்டதுமான வரலாறு. அது தரவுகளையே பெரிதும் சார்ந்திருக்கிறது. தரவுகளில் இருந்து அது விலகிச் செல்ல முடியாது. தரவுகளை தர்க்கப்படுத்துவதில் மட்டுமே வரலாற்று எழுத்தாளனின் கற்பனைக்கோ மதி நுட்பத்திற்கோ இடம் இருக்க முடியும். இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்ட புறவயமான வரலாற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் புனைகதையே வரலாற்றுப் புனைகதை எனலாம். வரலாற்றுப் புனைகதை என்பது பெரும்பாலும் வரலாற்று நாவலாகவே உள்ளது.
வரலாற்று நாவல்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாகக் கூறத்தக்க இரு ஆக்கங்கள் ஒன்று லேவ் தல்ஸ்தோய் எழுதிய ‘போரும் அமைதியும்’ இன்னொன்று இவோ ஆண்டிரிக் எழுதிய ‘டிரினா நதியின் பாலம்’[ Ivo Andric The Bridge on the Drina ] தல்ஸ்தோலின் நாவல் வரலாற்றின் புறவயமான சித்திரத்தின் மீதுதான் நகர்கிறது. எழுதப்பட்ட வரலாற்றுக்குச் சமாந்தரமாகச் சென்று, அதன் இடைவெளிகளை கற்பனை மூலம் நிரப்பிக் கொண்டு, இன்னொரு வரலாற்று மொழியை அது உருவாக்குகிறது. ஆனால் அதேசமயம் பலபகுதிகளில் அது ஏராளமான புதிய பகுதிகளை எழுதிச் சேர்க்கிறது. அதாவது அதில் வரலாறு ஒரு சரடு என்றால் அந்த வரலாற்றுடன் பின்னிச் செல்லும் வரலாற்றில் இடமில்லாத பல்லாயிரம் அன்றாட நிகழ்வுகளும் சாதாரண மனிதர்களும் இன்னொரு சரடு. இது உலகமெங்கும் வெற்றிகரமான ஒரு முன்னுதாரணம்.
ஆனால் டிரினா நதிப்பாலம் அத்தகையதல்ல. அது பெரும்பாலும் வரலாற்று நிகழ்வுகளை ஒட்டியே நகர்கிறது. வரலாற்றின் சுருள்விரியை அது டிரினா ஆற்றின் மீது கட்டப்பட்ட ஒரு பாலத்தைச் சுற்றியே அமைத்திருப்பதில் மட்டும்தான் புனைவின் திறன் வெளிப்படுகிறது. பெரும்பாலான நிகழ்வுகள் எப்படி வரலாற்றில் நிகழ்ந்துள்ளனவோ அப்படித்தான் இந்நாவலிலம் நிகழ்கின்றன. பல வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றில் தரவுகளாக இருக்கும் அவை இதில் நிகழ்வுகளாக விரித்து சித்தரிக்கப்பட்டுள்ளன. வரலாறு நமக்கு தெரிவிக்கப்படுவதில்லை, காட்டப்படுகிறது.
இந்த இருவகை வரலாற்று நாவலுக்கும் உலக இலக்கியத்தில் ஏராளமான உதாரணங்கள் காட்டலாம். இந்திய மொழிகளில் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’ ‘சென்னபசவ நாயக்கன்’ ஆகிய இருநாவல்களையும் தல்ஸ்தோய் வகையான நாவலுக்கான ஆகச்சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். மலையாளத்தில் சமகால வரலாற்றுநாவல்களான தகழி சிவசங்கரப்பிள்ளையும் ‘ஏணிபப்டிகள்’ ‘கயிறு’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
தமிழில் தல்ஸ்தோய் வகையிலான வரலாற்று நாவலாக சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ என்ற நாவலைச் சொல்லலாம். மிக நீளமான இந்த நாவல் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் விரிவான சித்திரத்தை அளிக்கிறது. பெரும்பாலும் வரலாற்று மொழிபை யே இதுவும் பின்பற்றுகிறது. ஆனால் ஏராளமான சாதாரண கதாபாத்திரங்களும் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளும் இணையான, எழுதப்படாத வரலாறாக ஓடுகின்றன. ஓர் இலக்கியப் படைப்பாக நல்ல வாசிப்பனுபவத்தை அளிக்கக்கூடிய ஒன்றாக இந்த நாவல் இல்லை. இதன் நீளமான வடிவம் – தல்ஸ்தோயை முன்னுதாரணமாக கொண்டது இது என எளிதில் ஊகிக்கலாம் – சிறந்த புனைவாக உருவம் பெ றாமல் சலிப்பூட்டும் விவரணையாக மாறிவிட்டிருக்கிறது.
இரண்டாம் வகையான வரலாற்று நாவலுக்குச் சிறந்த உதாரணம் பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்’. பாண்டிச்சேரி வரலாற்றைப் பற்றி ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரி குறிப்பிடும் வரலாற்றை தொண்ணூறு சதவீதம் ஒட்டியே விரியக்கூடிய நாவல் இது. தரவுகளை இது நிகழ்வுகளாக ‘புளோ அப்’ செய்கிறது. எழுதப்பட்ட வரலாற்றை மீண்டும் விரிவான நாடகமாக நடித்துக் காட்டுகிறது. ‘தமிழுக்கு வரலாற்று நாவல் இல்லை என்ற வசை என்னால் கழிந்தது’ என்று அதன் முன்னுரையில் பிரபஞ்சன் கூறுகிறார். அது கிட்டத்தட்ட உண்மையே. தமிழில் வரலாற்று நாவல் என்ற கலை வடிவத்தை அடைந்த முதல் இலக்கிய ஆக்கம் ‘மானுடம் வெல்லும்’ தான். வரலாற்று நாவலில் சவால் என்பது வரலாற்றின் தரவுகளைக் கொண்டே வரலாற்று மொழிபை மாற்றி எழுதுவது என்பதை காட்டிய முக்கியமான முன்னோடி ஆக்கம் இது.
வெங்கடேசனின் நாவல் ‘காவல் கோட்டம்’ இந்த இருவகை நாவல்களின் சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொள்கிறது. ஒருதளத்தில் மிகப்பெரும்பாலும் ஆவணப்படுத்தப் பட்ட வரலாற்றை நுட்பமாக பின்தொடர்கிறது இந்நாவல். கற்பனைத் தகவல்கள் மூலம் எந்த தரவுகளையும் தாண்டிச் செல்வதில்லை. வரலாற்று மொழிபின் இணை நகர்வாகவே விரியும் புனைவு மெல்ல மெல்ல வரலாற்று மொழிபுக்கு மாற்றாக தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. அதே சமயம் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒரு தனிவரலாற்றை அந்த மையச்சரசாடன வரலாற்றின் இடைவெளிகளில் நிறுத்திக்கொண்டே செல்கிறது.
மைய ஓட்டத்தை ஊடுருவும் எழுதப்படாத வரலாறே இந்நாவலின் வலிமை. மிகநுட்பமாகவும் மிக விரிவாகவும் இது உருவாக்கும் அந்த மாற்று மொழிபினாலேயே இது ஒரு பெரும்படைப்பாக ஆகிறது. ஒரு இளம் படைப்பாளியிடமிருந்து இத்தகையதோர் குறிப்பிடத்தக்க ஆக்கம் உருவாகி வந்திருப்பது தமிழிலக்கியமும் தமிழ் நாவலும் முதிர்ச்சி அடைந்துவிட்டிருப்பதையே காட்டுகிறது என்று நினைக்கிறேன்.
இந்த நாவலுக்கு டிரினா நதிப்பாலம் நாவலுடன் உள்ள ஒப்புமையும் மிகவும் ஆச்சரியத்திற்குரியது. ஒருவகையில் இந்நாவல் மதுரை நகரையும் குறிப்பாக அதன் கோட்டை முகப்பையும் மட்டுமே மையப்புள்ளியாக கொண்டு அதைச் சுற்றியே தன்னுடைய புனைவை சுருள் சுருளாகச் சுற்றுகிறது. ஏறத்தாழ அறுநூறு வருடக்காலம் இந்த ஒரே புள்ளி வழியாக வரலாறு எப்படி பொங்கிச் சுழித்து பாய்ந்து கடந்து சென்றது என்ற பிரம்மாண்டமான வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கிறது இந்த பெரும் படைப்பு. அந்த புள்ளி வழியாக அது காட்டுவது ஒட்டுமொத்த வரலாற்றையும் அல்ல. அதில் நாவலுக்கென ஒரு தேர்வு உள்ளது.
வெங்கடேசனின் நாவலுக்கு உள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் அது வரலாற்றின் இடைவெளிகளை புனைவால் எந்த அளவுக்கு நிரப்புகிறதோ அதேயளவுக்கு வரலாற்றினாலும் நிரப்புகிறது என்பதே. மதுரையின் வரலாற்றை இன்னும் நாம் நம்முடைய வரலாற்று நூல்கள் வழியாக முழுமையாக உருவாக்கிக் கொள்ளமுடியாது என்பதே வரலாறு அறிந்த எவரும் அறியும் உண்மையாகும். மதுரையை மையமாக்கி வரலாற்றை ஒரு பொதுவான கட்டுமானத்திற்குள் கொண்டு வந்து தொகுக்க முயன்ற முதல் வரலாற்றாசிரியர் என்று ஜெ.ஹெச்.நெல்சனையே கூறவேண்டும். 1882ல் வெளிவந்த அவருடைய மகத்தான ஆக்கமாகிய ‘மதுரா கன்ட்ரி மானுவல்’ மதுரையின் வரலாற்றை சங்ககாலம் முதல் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் வரையிலான இரண்டாயிரம் வருட அளவில் தொகுக்க முயல்கிறது.
பின்னர் பாண்டியர் வரலாறுகள் தனித்தனியாக எழுதப்பட்டன. அவை கல்வெட்டு ஆதாரங்களையும் இலக்கிய ஆதாரங்களையும் தொகுத்துக் கொண்டு மதுரையை ஆண்ட பாண்டியர்களின் ஒரு வம்சாவளியை உருவாக்கும் முயற்சிகள். இந்த வரலாறு இன்றும்கூட முழுமையானது அல்ல. முதல் பாண்டிய வம்சத்தின் வரலாறு என்பது முழுக்க முழுக்க சங்க இலக்கியப் பாடல்களில் வரும் குறிப்புகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. காலவரிசை என்பதே அனேகமாக சாத்தியமில்லாத தளம் அது. அதன்பிறகு களப்பிரர் மதுரையை ஆண்டிருக்கிறார்கள். களப்பிரர் குறித்து சொல்லும்படியான எந்த வரலாற்று ஆதாரமும் நமக்குக் கிடைப்பதில்லை. ஒரே ஒரு கல்வெட்டும் அதில் உள்ள ஒரே ஒரு மன்னனின் பெயரும் தவிர. அதன்பிறகு பாண்டியன் கடுங்கோன் மாற வர்மன் களப்பிரரை வென்று மதுரையைக் கைப்பற்றி இரண்டாவது பாண்டிய வம்சாவலியை அமைத்தான்.
இரண்டாம் சோழ வம்சாவலி என்பது பெரும்பாலும் தெளிவான தகவல்களுடன் நமக்குக் கிடைக்கிறது. அதற்குக் காரணம் அவர்கள் தொடர்ந்து வெற்றி கொண்டு தென்னகத்தின் பெரும் சாம்ராஜ்யம் ஒன்றை அமைத்தார்கள் என்பதுதான். அவர்கள் கட்டிய கோவில்களும் நாடெங்கும் அவர்கள் பொறித்த கல்வெட்டுகளும் அவர்களின் வரலாற்றை ஒருவாறு நமக்கு காட்டுகின்றன. கடும் உழைப்பினூடாக அவ்வரலாறு எழுதப்பட்டுவிட்டது. ஆனால் பாண்டியர், சேரர் வரலாறு அவ்வாறல்ல. மதுரையை கடுங்கோன் மாற வர்மன் மீட்ட குறுகிய காலத்திலேயே அது சோழர்களின் பிடியில் விழுந்தது. ஏறத்தாழ இருநூறு வருடம் அது சோழர்களுக்கு கீழே இருந்தது. பிறகு ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சுதந்திரம் பெற்று வலுவான அரசாகியது. மீண்டும் அவன் வாரிசுகளின் காலத்தில் வீழ்ச்சி அடைந்தது.
ஆகவே மதுரையைப் பொறுத்தவரை பாண்டியர்களின் பிற்கால வரலாறும்கூட மிகவும் புகைமூட்டமாக, உதிரித்தகவல்ளாகவே நமக்குக் கிடைக்கிறது. வம்சாவளிகூட முழுமையானதாக இல்லை. சேரர் வரலாறு இதைவிட புகைமூட்டத்திற்குள் உள்ளது. சோழர் ஆதிக்கத்திற்குப் பிறகு ஒரு நாநூறு வருடம் சேர நாட்டை யார் ஆண்டார்கள் என்றே சொல்ல முடிவதில்லை. செவிவழித் தொன்மங்களை நம்பி பெருமாள்கள் என்ற வம்சம் ஆண்டது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். அது இளங்குளம் குஞ்ஞன்பிள்ளை என்ற வரலாற்றாசிரியரால் கற்பனைசெய்யப்பட்டது மட்டுமே என்பவர்கள் உண்டு.
பாண்டியர் வரலாறு பிற்காலத்தில் மேலும் மேலும் தெளிவின்மை நோக்கிச் செல்வதையே நாம் காண்கிறோம். மாலிக் காபூர் மதுரையை தாக்கி வென்றபோது மதுரை யாரால் ஆளப்பட்டது என்று மாலிக் காபூருடன் வந்த வரலாற்றாசிரியர்கள் சொல்லியே நமக்குத் தெரிகிறது. வீரபாண்டியன் சுந்தரபாண்டியன் இருவரையும் பற்றி அவர்கள் தரப்புத்தகவல்கள் ஏதுமில்லை. பிறகு கொஞ்சநாள் சுல்தான்களின் பிரதிநிதிகளால் மதுரை ஆளப்பட்டது. பாண்டிய வம்சம் சிதறி அழிந்தது.
பாண்டிய வம்சத்தின் சிதறல்கள் கயத்தாறிலும் தென்காசியிலும் சிறிய ஆட்சியாளர்களாய் இருந்து மறைந்தார்கள். இவர்களைப் பற்றி மேலும் தெளிவில்லாத வரலாற்றுச் சித்திரமே உள்ளது. உதாரணமாக புனித சேவியரின் கடிதங்களில் வெட்டும்பெருமாள் என்ற பாண்டிய குலத்தோன் நல் கயத்தாறை ஆண்டதாக செய்தி உள்ளது. பிற்பாடு அரியநாத முதலியார் கயத்தாறு பகுதிகளை ஆண்ட பஞ்சவழுதிகள் என்ற ஐந்து பாண்டிய குலத்து ஆட்சியாளர்களை வென்றதாக சரித்திரக் குறிப்பு உள்ளது.
அதன்பின்னர் மதுரையில் நாயக்கர் ஆட்சி உருவாகிறது. மதுரையை நாயக்கர் வென்று இருநூற்றாண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். ஏரிகளையும் நகரங்களையும் சாலைகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். பெரும் கோவில்களை கட்டியிருக்கிறார்கள். கோயில்களை புதுப்பித்திருக்கிறார்கள். ஆயினும் தமிழில் மிகமிகக் குறைவாகவே அவர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் அன்னியர்கள் என்ற உணர்வு தமிழ் வரலாற்றை எழுதியவர்களுக்கு இருந்திருக்கலாம். வரலாற்றில் கடந்தகாலத் தேசிய பெருமிதங்களைத் தேடிய அந்தக் காலக்கட்டத்தில் அதை எழுதவதற்கான ஊக்கம் இருந்திருக்கலாம்.
தமிழக வரலாற்றை நாம் எழுத ஆரம்பித்த தொடக்க காலத்தில் 1923-ல் சத்தியநாதய்யர் அவர்கள் நாயக்கர் வரலாற்றை எழுதினார். அது ஒரு முன்னோடி நூல். தமிழக வரலாற்றில் ஒரு கிளாசிக் அது. முன்வரைவு என்று மட்டுமல்ல பெருமளவுக்கு அதிகாரப்பூர்வ நூல் என்றே அதைப்பற்றி கூறமுடியும். ஆனால் அதன்பிறகு அந்நூலின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டு புதிய நூல்கள் எழுதப்படவில்லை. புதிய ஆய்வுகள் செய்யப்படவும் இல்லை.
மேலும் நாயக்கர் படையெடுப்புக்குப் பிறகான மதுரை வரலாறு என்பது ஆந்திர வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தது. விஜயநகர அரசின் ஒரு பகுதியாக இருந்து பிறகு சுதந்திரம் பெற்று தனியரசாக ஆனது மதுரை. நாயக்கர் ஆட்சி. விஜயநகர அரசாங்கத்தின் வரலாற்று, சமூகப் பின்னணியையும் அந்த அரசை கட்டுப்படுத்திய விரிவான பண்பாட்டு கூறுகளையும் பற்றிய விரிவான புரிதல் இல்லாமல் மதுரை, நாயக்கர் வரலாற்றுக்குள் நுழைய முடியாது. விஜயநகர ஆட்சி குறித்த ஏராளமான ஆவணங்கள் தெலுங்கில்தான் உள்ளன. மதுரையை அண்ட நாயக்க மன்னர்களின் ஆவணங்களும் அவர்களின் அவை இலக்கியங்களும் தெலுங்கில் உள்ளன. ஆகவே தெலுங்கில் விரிவான பயிற்சி இல்லாமல் நாயக்கர் வரலாற்றுக்குள் நுழைவது கடினம்.
தமிழக வரலாற்றாசிரியர்கல் தெலுங்கை அறிந்தவர்கள் அனேகமாக எவரும் இல்லை. இன்னும் குறிப்பாக எடுத்துச் சொல்லவேண்டிய ஒரு விஷயம் உண்டு. நாயக்கர்களின் சாதிய உட்பிரிவுகள், குலங்கள், அவற்றுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகள் உறவுமுறைகள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் எவரும் விஜயநகர ஆட்சியைப் பற்றியோ மதுரை – தஞ்சை – செஞ்சி நாயக்கர் அரசுகளைப் பற்றியோ விவாதிக்க முடியாது. அவற்றைப் பற்றி தமிழில் அனேகமாக எதுவுமே எழுதப்பட்டதில்லை. ஆங்கிலத்தில் மிகமிகக் குறைவாகவே தரவுகள் உள்ளன. மிகச் சமீபகாலமாகத்தான் ஓரளவு சமூகவியல் பதிவுகள் வர ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் நாயக்கர் ஆட்சிக்காலம் பற்றியும் அவர்கள் கீழே உருவாகியிருந்த பாளையப்பட்டுக்களின் வரலாற்றுகளைப் பற்றியும் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் உருவாகாமல் போனதில் வியப்பில்லை. சத்திய நாதய்யரின் வரலாற்று நூலேகூட பல இடங்களில் மேலோட்டமான செவிவழிச் செய்திகள் மற்றும் ஊகங்களை மட்டுமே முன்வைத்துச் செல்கிறது. பிறகு வந்த நூல்கள் இன்னும் மோசம். பெரிதாகப் பேசப்பட்ட ராஜையன் அவர்களின் தமிழகப் பாளையப்பட்டுக்களின் வரலாற்று நூலை [தமிழகப் பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், கெ.ராஜையன், Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974] பார்த்தால் போதும் இந்த நிதரிசனத்தை தெரிந்து கொள்ளலாம். அந்த ஆய்வு நூலில் ஒரு பொதுவான தெற்கத்தியானுக்கு செவிவழியாகக் கேட்டு தெரியவந்த தகவல்களுக்கு மேல் எதுவுமே இல்லை!
இந்நிலையில் வரலாற்றை எழுதுவதற்கு சிறந்தமுறை அந்தந்தச் சமூகங்களுக்குள் இருந்தே ஆய்வாளர்கள் கிளம்பி வருவதுதான். உதாரணமாக தமிழ்நாட்டு வரலாற்றில் – குறிப்பாக தென்தமிழ்நாட்டு வரலாற்றில் – கள்ளர் மற்றும் மறவர்களின் பங்களிப்பு மிகமிக முக்கியமானது. அவர்களுக்குள் உள்ள பல்வேறு உபசாதிகள், குலக்குழுக்கள், பல்வேறு நம்பிக்கைகள், ஆசாரங்கள், அவர்களுக்குள் உள்ள குலப்பூசல்கள் ஆகியவற்றை அறிந்தாலொழிய அவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை உணர முடியாது.
ஆனால் அவர்களைப் பற்றி எழுதப்பட்ட வரலாறு குறைவு – அனேகமாக இல்லை என்னும் அளவுக்கு. நான் வாசித்தவரை பொதுவாகக் குறிப்பிடப்படும் மறவர், கள்ளர் சாதியைப்பற்றிய மேல்நாட்டுப்பல்கலைக்கழக ஆய்வுகள் அனைத்துமே மேலோட்டமான ஒருசில வாய்மொழிப்பதிவுகள் மட்டுமே. தமிழகத்தில் வாழும் ஒருவனுக்கு அவற்றில் தெரியாத தகவல் எதுவுமே இருப்பதில்லை. ஆகவே தேவர்களுள் ஒருவர் வந்து தன் பாரம்பரிய அறிவின் அடிப்படையில் அவ்வரலாற்றை எதுவதே ஒரே சாத்தியமான வழியாக உள்ளது – அது இன்னமும் நிகழவில்லை.
இதேபோல தமிழக நாயக்கர் காலத்தையும் அதன் பின் வரலாற்றையும் அந்த வரலாற்றின் சமூகவியல் நுட்பங்களுக்குள் எளிதில் செல்லக்கூடிய வாய்ப்புள்ள அவர்களில் ஒருவர் எழுதும்போதுதான் அது நுட்பமானதாக அமையமுடியும். சமீபகாலமாக நாட்டாரியல் துறைசார்ந்து சில ஆய்வுகள் வெளிவந்துள்ளன. உதாரணமாக மு.நடராஜன் பெரியார் பல்கலைக்காகச் செய்த ‘தொட்டிய நாயக்கர் குலதெய்வ அவ்ழிபாடு’ குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வுகள் ஒருபக்கமிருக்க நேரடியான தொடர்புகள் மூலம் மிக எளிதாகக் கிடைக்கும் வாய்மொழித்தரவுகளை தொகுத்து ஒட்டுமொத்த படைப்பின் கட்டமைப்பையும் கூறுமுறையையும் மட்டும் புனைவாக அமைத்துக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு உண்மையான வரலாற்றுச்சித்திரத்தை இலக்கியத்துக்குள் உருவாக்குவது சிறந்த ஒரு வழிமுறையாக இருக்க முடியும். நல்ல புனைவு என்பது நல்ல வரலாற்றுக்கும் வழிகாட்டியாக அமைய முடியும். கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ அத்தகைய முயற்சிகள் அனைத்துக்கும் உத்வேகமான ஓரு முன்வரைவாக நம்மிடம் உள்ளது
வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ அத்தகையதோர் ஆக்கம். இந்த நாவல் உருவாக்கும் வரலாற்று மொழிபு புதிது. அதைவிட அதற்கு இது திரட்டிக் கொண்டிருக்கும் ஏராளமான தரவுகளும் தமிழ் வரலாற்றுக்குப் புதிது. ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை ஒட்டி முற்றிலும் கற்பனை மூலம் புனைவை அமைக்கவில்லை வெங்கடேசன். அனேகமாக இதுவரை அச்சில் பதிவு செய்யப்படாத பல்லாயிரம் புதிய தகவல்களினால் இந்த வரலாற்று மொழிபை உருவாக்கியிருக்கிறார். மதுரை வரலாறு குறித்த ஒரு முன்வரைவு மட்டுமே நம் கையில் உள்ளது. அந்த முன் வரைவுக்குள் வெங்கடேசன் ஏராளமான நுண்தகவல்களைப் பெய்து நிரப்புகிறார். இவ்வாறு அந்த வரலாற்றை முழுமை செய்தபின் அதை புனைவு மூலம் விரிவாக்கி தன்னுடைய விரிவான வரலாற்று மொழிபை உருவாக்குகிறார்.
தமிழில் இன்றுவரை எழுதப்பட்டவற்றில் ஆகச்சிறந்த வரலாற்று நாவல் இதுவே என்பதில் ஓர் இலக்கியத்திறனாய்வாளனாக எனக்கு எந்தவிதமான ஐயமும் இல்லை. ஓர் வரலாற்று நாவலின் அனைத்து சாத்தியக் கூறுகளையும் தொட்டு விரிகிறது இந்த பெரும்படைப்பு. இந்நாவலில் பலவகையான குறைபாடுகளை நான் சுட்ட முடியும். சில குறைகள் வெங்கடேசனின் எல்லைகள். பல குறைகள் நமது வரலாற்று எழுத்தின் போதமைகள். அனைத்தையும் மீறி வரலாற்றுப் பெருவெள்ளம் பொங்கிச் சுழித்து செல்லும் தரிசனத்தை வாசகனுக்கு அளிக்கிறது காவல்கோட்டம்.
[மேலும்]
மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’
குர்அதுல் ஜன் ஹைதரின் ‘அக்னி நதி ‘
சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன்
சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)