பிப்ரவரி 2014 ஒன்றாம்தேதி மாலையில் ஜோ.டி குரூஸுக்கு பாராட்டுவிழா சிறில் அலெக்ஸ் மற்றும் நண்பர்களால் சென்னை லயோலா கல்லூரியில் ஒருங்கிணைக்கப்பட்டது. விழாவுக்கு முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் தலைமை ஏற்று நடத்திவைத்தார். அரங்குநிறைய நண்பர்களும் வாசகர்களும் கலந்துகொண்டனர்.
விழாவின் மிகச்சிறப்பான உரையாக அமைந்தது வறீதையா கன்ஸ்டண்டீன் ஆற்றியது. பெரும்பாலும் மீனவச் சமுதாயத்தை நோக்கியதாக அமைந்த உரை. அம்மக்கள் பேதங்களை மறந்து ஒன்றுபடுவதற்கான அழைப்பு. தங்கள் பண்பாட்டை அடையாளம் காணவும் அதை எழுத்தில் ஆவணப்படுத்தவும் விடப்பட்ட அறைகூவல்.
இந்திரா பார்த்தசாரதி கொற்கையைப்பற்றிய ஓரு சிறந்த உரையை ஆற்றினார். அதன் அமைப்பும் மனிதர்கள் நிறைந்துவழியும் பெரும் வாழ்க்கைப்பரப்பும் போரும் அமைதியும் நாவலை நினைவூட்டுகிறது என்றார். போரும் அமைதியும் நாவலைப்பற்றி தல்ஸ்தோய் அது ஒரு நாவல் அல்ல, கதை அல்ல, ஆவணப்படுத்தப்பட்ட வாழ்க்கைத்தரிசனம் என்றார், அதையே கொற்கைக்கும் சொல்வேன் என்றார் இ.பா.
நான் தமிழ் வாழ்க்கை என்பது எவ்வாறு எழுத்தால் திரட்டி உருவாக்கப்படுகிறது என்று விவரித்தேன். அந்த எழுத்துருவ தமிழ் வாழ்க்கையில் ஒவ்வொரு அத்தியாயமாக எழுதிச்சேர்ப்பதே எழுத்தாளர்கள் செய்வது. ஜோ தன் மக்களின் வாழ்க்கையை எழுதியதனூடாக தமிழ் வாழ்க்கையை, வரலாற்றை முழுமையாக்க பங்களிப்பாற்றியிருக்கிறார் என்றேன்.
ஜோ விருதுபெற்ற செய்தி டிசம்பர் 22 அன்று, விஷ்ணுபுரம் விருதளிக்கும் கூட்டம் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது வந்தது. உடனடியாக முதல் பாராட்டுக்கூட்டத்தை நாங்கள் நடத்த திட்டமிட்டோம். ஜோவிடம் பேசி அனுமதி பெற்று அரங்கும் பதிவுசெய்தோம். பேச்சாளர்களையும் அழைத்தோம். ஆனால் ஜோ பின்பு நண்பர்களிடம் விழாவை நடத்தவேண்டாம் என்று கோரினார். நான் அழைத்தமையால் மறுக்கமுடியாமல் ஒப்புக்கொண்டதாகவும் தற்போது தயக்கமாக இருப்பதாகவும் சொன்னார்.
’பெரும்படைப்பாளிகள் இருக்க இவ்விருது எனக்குக் கிடைத்துள்ளது. அதை நான் கொண்டாடுவது அடக்கமின்மையாகவே ஆகும். என் சமுதாயத்துக்குக் கிடைத்த அங்கீகாரம் இது என்பதனால் நான் இதை ஏற்கும்போதே இதை தனிப்பட்ட வெற்றியாக எண்ணவோ கொண்டாடவோ விரும்பவில்லை’ என்றார் ஜோ. அந்த அடக்கம் தமிழில் மிக அபூர்வமான ஒன்று என்று எனக்கும் பட்டது. தன் சமூகத்தால் எடுக்கப்பட்ட விழாவிலும் ஜோ அதையே சொன்னார்.
நிறைவூட்டும் ஒரு விழா. விருதுகள் பெரும்பாலும் ஓர் அங்கீகாரம் என்பதற்குமேல் பொருள்பெறுவதில்லை. அபூர்வமாகவே அவற்றுக்கு இவ்வளவு சமூகம் சார்ந்த அழுத்தம் உருவாகிறது.