பகுதி இரண்டு : கானல்வெள்ளி
[ 3 ]
அம்பிகை அரண்மனை வாசலிலேயே நின்றிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்கு முன்னரே செய்தி சென்றிருந்தது. மகனைக் கண்டதும் ஓடி அருகே வந்தாள். அருகே வந்தபின் முகம் இறுக மகனைத் தொடாமல் விலகி நின்றாள். அவள் கண்கள் விதுரனை நோக்கின. “விதுரா, நீ என்னிடம் என்ன சொன்னாய்?” என்றாள்.
“அரசி, பீஷ்மர் அரசரை இத்தனை எளிதாக வெல்வாரென நான் நினைக்கவில்லை. நம் அரசரின் தோள்வல்லமை…” எனத் தொடங்கியதும் அம்பிகை சீறும்குரலில் “நிறுத்து” என்றாள். “நீ செய்ததெல்லாம் எனக்கு நன்றாகவே தெரிகிறது” என்றாள். அவளுக்கு அகக்கொந்தளிப்பில் மூச்சிரைத்தது. “நீ உன் தமையனை இறப்பின் தருணம் வரை கொண்டு சென்றிருக்கிறாய்.”
விதுரன் “அரசி, உங்கள் மைந்தர்மேல் உங்களுக்கு அவநம்பிக்கை இருக்கலாம். எனக்கு எப்போதும் அவர்தான் பாரதவர்ஷத்தின் மாபெரும் வீரர். அந்நம்பிக்கையை இப்போதுகூட நான் இழக்கவில்லை” என்றான். விதுரன் எளிதாக தன்னைக் கடந்துசென்றுவிட்டதை உணர்ந்த அம்பிகை கண்களைத் திருப்பி “ஆதுரசாலைக்கு தகவல் சொல்லிவிட்டேன்… வா” என்று மகன் கையைப்பிடித்து உள்ளே அழைத்துச்சென்றாள். விதுரன் பின்னால் சென்றபோது திரும்பாமலேயே “நீ வரவேண்டியதில்லை” என்றாள்.
விதுரன் கர்மசாலைக்குச் சென்று அங்கேயே உணவுண்டுவிட்டு கடிதங்களை எழுதச்சொல்லிக்கொண்டிருக்கும்போது அம்பாலிகையின் சேடியான சாரிகை வந்து வணங்கினாள். அவளை அனுப்பிவிட்டு வேலைகளை முடித்துவிட்டு விதுரன் சித்ரகோஷ்டம் என்று அழைக்கப்பட்ட இடப்பக்க நீட்சியை நோக்கிச் சென்றான். அரண்மனை முகப்பிலேயே சாரிகை அவனுக்காக காத்து நின்றிருந்தாள். “அரசி தங்களைச் சந்திப்பதைப்பற்றி மூன்றுமுறை கேட்டுவிட்டார்கள்” என்றாள். விதுரன் தலையசைத்தான்.
சித்ரகோஷ்டத்தில் சுவர்கள் முழுக்க வண்ண ஓவியங்கள் இடைவெளியில்லாமல் நிறைந்திருந்தன. மேலே உட்கூரையிலும் சித்திரங்கள். தூண்களிலும் சாளரங்களிலும் ஓவியத் திரைச்சீலைகள் தொங்கின. உள்ளே ஒளிவராமலிருக்கும்பொருட்டு சாளரங்கள் அனைத்தும் வெளியே திரையிடப்பட்டு மறைக்கப்பட்டிருந்தன. அவையும் வண்ண ஓவியங்களாலானதாக இருந்தன. வெளியே இருந்து வந்த காற்றில் திரைகள் நெளிய ஒரு பெரிய பூந்தோட்ட்டம் நடுவே செல்வதுபோன்ற உணர்வெழுந்தது. ஒவ்வொருமுறையும் அந்த அறைக்குள் நுழையும்போது சிலகணங்கள் மிதமிஞ்சிய வண்ணங்களின் அசைவால் கண்கள் நிலையழியும் அனுபவம் விதுரனுக்கு உருவாவதுண்டு.
சாரிகை உள்ளே சென்று அவன் வருகையை அறிவித்தாள். அம்பாலிகையே வெளியே வந்தாள். “வணங்குகிறேன் அரசி” என்றான் விதுரன். அவள் அவனைப்பார்த்து ஆர்வமாக “திருதராஷ்டிரனுக்கு பெரிய காயம் என்றார்களே உண்மையா?” என்றாள். விதுரன் புன்னகைத்தான். அவள் நெற்றியின் ஓரம் முடியிழை நரைத்திருந்தாலும், முகத்தில் சிறு சுருக்கங்கள் விழத்தொடங்கியிருந்தாலும் அரசிக்குரிய எந்த இங்கிதங்களையும் சொற்கட்டுப்பாடுகளையும் அவள் கற்றுக்கொள்ளவேயில்லை. அம்பாலிகை பரபரப்புடன் “எல்லாவற்றையும் என் சேடி ரம்யை வந்து சொன்னாள். நான் உடனே சாரிகையை அனுப்பி உன்னை வரவழைத்தேன்…” என்றாள்.
அம்பாலிகை அமர்ந்துகொண்டு அவனுக்கு பீடத்தைக் காட்டினாள். விதுரன் “பெரிய காயம் இல்லை அரசி. நாளையே எழுந்துவிடுவார். அவரது உடலுக்கு காயங்களேதும் பெரிதல்ல” என்றான். அம்பாலிகை முகம் வாடி “அவனால் எழவே முடியாது என்றார்களே” என்றாள். விதுரன் புன்னகை செய்தான். “சரி, நான் உன்னிடம் ஒரு விளக்கம் கேட்கிறேன். ஒருவன் அவனுடைய குடிமக்களாலேயே தோற்கடிக்கப்பட்டானென்றால் அவன் மன்னனாக முடியுமா?”
விதுரன் மிகக் கவனமாக சொற்களைத் தேர்வுசெய்து “முடியாது அரசி. அவனைத் தோற்கடித்தவனே மன்னனாக முடியும்” என்றான். அம்பாலிகை அதைப்புரிந்துகொள்ளவில்லை. “ஆம்…அதைத்தான் ரம்யையும் சாரிகையும்கூடச் சொன்னார்கள். அவன் அரசனாக முடியாது. அப்படியென்றால் பாண்டு அரசனாகலாமே…” என்றாள்.
விதுரன் அதே புன்னகையுடன் “நிச்சயமாக ஆகமுடியும் அரசி. ஆனால் அதன்பின் திருதராஷ்டிரர் அவரை போருக்கு அழைத்தால் அவர் அதைச் சந்திக்கவும் வேண்டுமே” என்றான். அம்பாலிகை புரியாமல் விரிந்த விழிகளுடன் பார்த்தாள். “மன்னனை வெல்பவன் அரசனாக முடியும் அரசி. அப்படி அரசனானவன் எப்போதும் எவருடனும் போருக்கு சித்தமாகவும் இருந்தாகவேண்டும்.”
“அப்படி ரம்யை சொல்லவில்லையே” என்றாள் அம்பாலிகை. தலையைச் சரித்து சிந்தனைசெய்து, சற்றுநேரம் கழித்து ஒன்றும் பிடிகிடைக்காமல் திரும்பி “சரி, நீயே சொல். பாண்டு அரசனாவதற்கு என்ன வழி?” என்றாள். “அவர் அரசராக விரும்புகிறாரா என்ன?” என்றான் விதுரன். “அவனுக்கு ஒன்றும் தெரியாது. விளையாட்டுப்பிள்ளை. எனக்கு அவன் மன்னனாகவேண்டுமென்ற ஆசை இருக்கிறது. ரம்யை சொல்கிறாள் நாட்டுமக்கள் அனைவரும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று…” அம்பாலிகை அவன் கைகளைத் தொட்டு “பாண்டு அரசனாவதற்கான வழியை நீதான் சொல்லவேண்டும் விதுரா” என்றாள்.
“அரசி, விவாதசந்திரத்தின் விதிப்படி இன்று இவ்வரசுக்கு பீஷ்மரே உண்மையான மன்னர். அவர் முடிவெடுத்தால் இவ்வரசை சிறிய அரசருக்கு அளிக்கலாம்” என்றான். “ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கொள்ளமாட்டாரே. அவருக்கு அப்போதிலிருந்தே அம்பிகையைத்தானே பிடிக்கும்” என்றாள் அம்பாலிகை. விதுரன் அதற்கும் புன்னகைசெய்தான்.
“என் மகன் எப்படியாவது அரசனாகவேண்டும்… நான் அவளை என் அன்னையைப்போல நினைத்தேன். அவள் என்னை அவளுடைய சேடியைப்போல நடத்தினாள். என் மகனை அவனுடைய மைந்தனுக்கு சேவகன் என்று நினைக்கிறாள். அதை நான் ஒருநாளும் ஏற்கமுடியாது…” என்றாள் அம்பாலிகை.
“அரசனாவதற்கான காரணமாக அது இருக்கமுடியுமா அரசி?” என்றான் விதுரன். “ஏன்?” என்று சீற்றத்துடன் அம்பாலிகை கேட்டாள். “குடும்பப்பூசலா அரசியலைத் தீர்மானிப்பது?” அதை அம்பாலிகை புரிந்துகொள்ளாமல் “அவள் என்னை அவமரியாதை செய்தாள்… உனக்குத்தெரியாது. அவளுடைய குழந்தைதான் முதலில் பிறந்தது. அதற்கு விழியில்லை என்று தெரிந்ததுமே அவளுடைய விஷம் முழுக்க என் மீது திரும்பிவிட்டது. அவள் என் குழந்தை அரசனாகிவிடும் என்று நினைத்து என்னை அவமதித்தாள்.”
அவள் குரல் தாழ்ந்தது. அவனிடம் “நாகசூதர்களைக் கொண்டு எனக்கு அவள் சொல்லேவல் செய்தாள். என்னிடம் அதை சேடியர் சொன்னார்கள். அதனால்தான் பாண்டுவின் குருதியெல்லாம் வெளுத்துவிட்டது. இப்போதுகூட அவள் என் மகனைக் கொல்ல எதைவேண்டுமென்றாலும் செய்வாள். அவனுக்கு அச்சமூட்டும் கனவுகள் வருகின்றன. ஆகவேதான் நான் அவனை அரண்மனைக்கு வெளியே விடுவதேயில்லை.”
விதுரன் பொறுமையிழந்து மெல்ல அசைந்தான். அம்பாலிகை “அவன் மன்னனாக வேண்டும். நான் பேரரசியாக ஆகவேண்டும். அதன்பிறகு நான் அவளிடம் சென்று சொல்வேன். நீ என் மூத்தவள். நீ இருக்க நான் அரசியாக மாட்டேன். என் மைந்தனின் அன்னையாக நீயே இரு. நீயே தேவயானி அணிந்த மணிமுடியை வைத்துக்கொள். ஆனால் அதை நான் கொடுத்தேன் என்பதை சூதர்கள் பாடவேண்டும் என்பேன். அப்போது அவள் முகம் எப்படி மாறும் என்பதை நான் பார்க்கவேண்டும்” என்றாள்.
விதுரன் சலிப்பை வெளிப்படையாகவே காட்டி “சிறிய இளவரசர் எங்கிருக்கிறார் அரசி?” என்றான். “துயில்கொள்கிறான். நேற்று அவனும் நான்கு சேடிகளுமாக ரம்யவனம் சென்று விளையாடினார்கள். வானம் வெளுத்தபின்னர்தான் அவன் வந்தான்” என்றாள் அம்பாலிகை. “விதுரா, அவன் உடல்நிலை தேறுவதற்கு காமரூபத்தில் ஏதோ வேர் இருக்கிறதாமே? ஒரு மருத்துவர் அதற்கு ஆயிரம் பொன் கேட்கிறார்.”
விதுரன் “நான் பேரரசியை சந்திக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது அரசி” என்றான். “ஆம், அரசப்பணி அல்லவா? என் மகன் மன்னனாக ஆனபின்னரும் நீதான் நாடாளவேண்டும்…” என்றாள் அம்பாலிகை. “அது என் கடமை” என்று விதுரன் சொன்னான். அவன் எழுந்தபோது கூடவே எழுந்தபடி “நீ பீஷ்மரிடம் பேசு… பாண்டுவை அரசனாக்குவதே முறையானது என்று சொல். இன்றுவரை பாரதவர்ஷத்தில் எங்கும் விழியிழந்தவன் அரசனாக ஆனதில்லை என்று ரம்யையும் சாரிகையும் சொல்கிறார்கள்” என்றாள் அம்பாலிகை.
வெளியே வந்தபின் விதுரன் திடீரென்று நின்று சிரித்துவிட்டான். மீண்டும் அவன் கர்மசாலைக்குச் சென்றபோது அமைச்சர்கள் லிகிதரும் தீர்க்கவியோமரும் அவனுக்காகக் காத்திருந்தனர். களஞ்சியக் காப்பாளரான லிகிதர் களஞ்சியத்திற்கு வந்திருக்கும் நிதியின் அளவையும் வரித்தொகுப்பாளரான சோமர் வரிகள் கொள்ளப்படும் அளவையும் அவனிடம் குறிப்புகளாக அளித்தனர்.
நீளமான தாளியோலைகளில் எழுதப்பட்டிருந்த குறிப்புகளை முழுமையாக அவன் வாசித்தான். சிறிய தகவல்களைக்கூட இருமுறை வாசித்து நினைவில் நிறுத்திக்கொண்டபின் சுவடிகளை கட்டி பீடத்தில் வைத்தான். பெருமூச்சுடன் அவர்களே பேச்சைத் தொடங்கட்டும் என்று காத்திருந்தான்.
“மேலும் குறைந்துவருகிறது” என்று சோமர் சொன்னார். “இதை பேரரசியிடம் முன்னரே குறிப்புணர்த்தியிருந்தேன்.” விதுரன் “சோமரே, சுங்கம் தொடர்ச்சியாகக் குறைவதை புரிந்துகொள்ளமுடிகிறது. கங்கைக் கரைமுழுக்க வேறு வலுவான அரசுகள் உருவாகியுள்ளன. அங்கு பெரிய படகுத்துறைகளும் சந்தைகளும் பிறந்துவிட்டன. அஸ்தினபுரிக்கு வரும் வணிகர்கள் குறைகிறார்கள். நம் வரிச்செல்வம் பங்கிடப்படுகிறது… ஆனால் வேளாண்வரிகள் எப்படி குறையமுடியும்? ஆயர்களின் வரிகளும் தொடர்ந்து வீழ்கின்றன.”
“புதியஜனபதங்களை தொடர்ச்சியாக உருவாக்காத எந்த அரசிலும் வரிச்செல்வத்தில் வீழ்ச்சி இருக்கும் என்று பொருள்நூல்கள் சொல்கின்றன” என்று சோமர் சொன்னார். “அரசுகள் உருவாகும்போது வரி காட்டில் துளிகள் திரண்டு நதியாகி ஏரியை அடைவதுபோலக் களஞ்சியத்தை வந்தடைகிறது. அந்த வரிச்செல்வத்தைக்கொண்டு அரசுகள் மேலும் தங்களை வலுவாக்கிக் கொள்கின்றன. அரசு வலுவடையும்போது மக்கள் மேலும் மேலும் அந்நாட்டில் குடியேறுகிறார்கள். ஜனபதங்கள் பெருகுகின்றன. வரிச்செல்வம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும்.”
சோமர் “ஆனால் சூதரே, அதன் உச்சம் என ஒரு புள்ளி உண்டு. அங்கே இருபக்கமும் துலாக்கோல் சமநிலையை அடைகிறது. ஜனபதங்கள் மேலும் விரிவடைய முடியாத முழுமையை அடைந்துவிடுகின்றன. ஆகவே வரிச்செல்வம் நிலையான அளவை அடைகிறது. மறுபக்கம் ஓர் அரசு நிலையானதாக அமைந்து, மன்னன் புகழ்பெற்றுவிட்டால் அவனைத்தேடி வைதிகர்களும் சூதர்களும் இரவலர்களும் வந்துகொண்டிருப்பார்கள். அவன் செய்யவேண்டிய அறப்பணிகள் அதிகமாகிக்கொண்டே செல்லும். ஒருகட்டத்தில் வரிச்செல்வமும் அரசச்செலவும் நிகராகிவிடும். புதிய ஜனபதங்களை உருவாக்க களஞ்சியத்தில் மிகைச்செல்வம் இருப்பதில்லை” என்றார்.
சோமர் தொடர்ந்தார் “நிலையான அரசு சீரான பொருள் வளர்ச்சியை உருவாக்குகிறது. வரிச்செல்வத்தை கொடுத்தபின்னரும் மக்களிடம் செல்வம் எஞ்சுகிறது. செல்வம் வழியாக கலைகளும் கல்வியும் வளர்கின்றன. குலங்கள் வளர்கின்றன. விழாக்களும் கொண்டாட்டங்களும் உருவாகின்றன. மக்கள் செலவிடும் செல்வம் அதிகரிக்கிறது. மேலும் மேலும் செல்வத்துக்கான தேவை அவர்களிடம் உருவாகிறது. அந்தத் தேவைக்கு ஏற்ப நிலங்களும் கன்றுகளும் பொருள் தராமலாகின்றன. மக்களிடமும் செலவு வளர வருகை நிலைக்கும் நிலை. ஏறக்குறைய பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரியநாடுகளிலும் இன்றிருக்கும் இக்கட்டு இதுதான்.”
“அதன் உச்சகட்ட இக்கட்டு அஸ்தினபுரிக்கு இருக்கிறது இல்லையா?” என்றான் விதுரன். “ஆம், ஏனென்றால் நாம் உச்சத்தில் இருக்கும் தேசம்…” என்றார் லிகிதர். விதுரன் “இதற்கு என்ன வழி சோமரே?” என்றான். “அமைச்சரே, குரங்குகள் காட்டில் கனியும்காயும் போதாமலானால் ஊனுண்ணத் தொடங்கிவிடும். அதை மர்க்கடகதி என்று பொருளின் வழியறிந்த ரிஷிகள் சொல்லியிருக்கிறார்கள்.”
விதுரன் அவரைப் பார்த்தான். “போர் மட்டுமே இந்த இக்கட்டில் இருந்து நாடுகளை மீட்கமுடியும்” என்றார் சோமர் உறுதியாக. “அதை நான் பலமுறை பேரரசியிடம் சொன்னேன். அவரும் அவ்வெண்ணம் கொண்டிருக்கிறார்.”
“அதாவது, நம்மைவிட வலுவற்ற நாடுகளை தாக்கி அழிப்பது. அவர்களின் செல்வங்களை கொள்ளையடிப்பது. அவர்களின் வரிச்செல்வத்தை கப்பம் என்ற பேரில் பிடுங்கிக்கொள்வது இல்லையா?” என்றான் விதுரன்.
சோமர் புன்னகைசெய்து “ஊனுண்ணும்போது நாம் செய்வது அதைத்தானே?” என்றார். “இன்னொரு உயிர் தனக்காகவும் தன் குட்டிகளுக்காகவும் தன் உடலை வளர்த்து வைத்திருக்கிறது. அதைப்பிடித்து கிழித்து உண்கிறோம் அல்லவா? அது ஷத்ரியர்களின் நெறியாகவே சொல்லப்பட்டிருக்கிறது.”
“ஆனால்” என விதுரன் தொடங்கியதும் சோமர் “அரசே போர் என்பது ஷத்ரியர்களின் குலஅறம். அரசுகளின் வாழ்நெறி. வெட்டுவதற்காகவே வாட்கள் செய்யப்படுகின்றன” என்றார். “இந்த இக்கட்டு அஸ்தினபுரிக்கு மூன்றுமுறை வந்துள்ளது. மாமன்னர் புரூரவஸ் கங்கையின் கரையில் இந்நகரை அமைத்தார். அன்று இது சந்திரபுரி என்று அழைக்கப்பட்டது. சந்திரபுரியின் ஆட்சியில் அன்று பதினெட்டு ஆயர் கிராமங்கள் மட்டுமே இருந்தன. ஆயர்களின் செல்வம் வந்துகொண்டிருந்தது. அதைக்கொண்டு நகரம் வளர்ந்தது. இங்கிருந்து கங்கை வழியாக நெய் வங்கம் வரை கொண்டுசெல்லப்பட்டது. அச்செல்வத்தைக்கொண்டு காடுகளை அழித்து வேளாண்நிலங்களை புரூரவஸின் மைந்தர் ஆயுஷ் உருவாக்கினார். அந்நிலத்தில் குடியேறிய மக்கள் வேளாண் தொழில்செய்து வரிச்செல்வத்தை உருவாக்கினர். கங்கைவழியாக நாம் தானியங்களையும் பழங்களையும் விற்கத்தொடங்கினோம். நகுஷ மன்னரின் காலகட்டம் ஓர் உச்சம்.”
“அதன்பின் மீண்டும் பொருள்சரிவு தொடங்கியது. புரு சக்ரவர்த்தியின் ஆட்சியில் அதை புதிய சந்தைகளை அமைத்து ஒருதலைமுறைக்காலம் எதிர்கொண்டனர். துஷ்யந்தரின் காலகட்டத்தில் அஸ்தினபுரம் வளர்ச்சியற்று தேங்கி நின்றது. அதை மீட்டவர் பாரதவர்ஷத்தின் முதல் சக்கரவர்த்தியான பரதர். சந்திரபுரியில் இருந்த முழுச்செல்வத்தையும் அவர் படைகளும் ஆயுதங்களுமாக ஆக்கினார். அவரதுபடைகள் உத்தர பாரதவர்ஷத்தில் அன்றிருந்த நூற்றிப்பதினெட்டு ஷத்ரிய அரசர்களையும் வென்று கப்பம் கொண்டன. ஐம்பத்தாறு ஷத்ரிய அரசுகளாக மன்னர்களை வகுத்தவரும் அவரே. அந்தக் கப்பம் மேலும் ஐந்து தலைமுறைக்காலம் இந்நகரைக் காத்தது.”
“அடுத்த இக்கட்டுநிலை பிருகத்ஷத்ரன் காலகட்டத்தில் உருவானது. அதிலிருந்து நம்மை மீட்டவர் மாமன்னர் ஹஸ்தி. அவர்தான் படைகொண்டு சென்று பதினெட்டு நாடுகளை வென்று கங்கைக்கரையில் இருந்த அனைத்துச் சந்தைகளையும் நம் ஆட்சிக்குள் கொண்டுவந்தார். வங்கம் வரை நாம் சுங்கம் கொள்ளத் தொடங்கினோம். குருவின் ஆட்சிக்காலம் வரை நம் கொடி பறந்துகொண்டுதான் இருந்தது. பின்னர் தொடர்ந்து சிறிய ஏற்றமும் இறக்கங்களும் இருந்தன. இப்போதுதான் தொடர்ச்சியான வீழ்ச்சி தெரிகிறது. இப்படியே சென்றால் இன்னொருதலைமுறைக்குள் அஸ்தினபுரி அடிமைப்பட்டுவிடும்.”
லிகிதர் “பெரும்படையெடுப்புகள் சில நடந்தாகவேண்டும் அமைச்சரே… அதைத்தவிர பிறிதொரு வழி தெரியவில்லை” என்றார். விதுரன் புன்னகையுடன் “லிகிதரே, இதிலுள்ள இக்கட்டு என்னவென்றால் போர் என்பது யானைச்சண்டை போல. ஒரு யானை தோற்றோடும். ஆனால் வென்றயானைக்கும் அதேயளவுக்கு புண்ணிருக்கும். வென்றயானை மறுநாளே உயிர்துறக்கவும் கூடும். ஒரு போரை நிகழ்த்த அஸ்தினபுரியும் தன் செல்வத்தை அழிக்கவேண்டியிருக்கும். ஏராளமான வீரர்களை இழக்கவேண்டியிருக்கும்” என்றான்.
“ஆம், அதுவும் நலம்செய்யும். அமைச்சரே, போரிடும் நாடுகள் மட்டுமே உயிர்த்துடிப்புடன் உள்ளன என்பதை கவனியுங்கள். போர் வழியாக நம் படைகளில் ஒரு பகுதியை நாம் இழக்கிறோம். உடனடியாக நோக்கினால் அது இழப்பே. ஒருநாட்டில் உழைப்பவர்களைவிட வீரர்கள் மிகுந்துவிடக்கூடாது. முதியவீரர்கள் எந்த ஒரு தேசத்துக்கும் சுமை. காட்டில் இளம் மிருகங்கள் மட்டுமே இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் காடுதான் வாழும் பசுமை.”
விதுரன் புன்னகை செய்தான். சோமர் “போருக்காக நம் கொல்லர்களும் தச்சர்களும் உழைப்பார்கள். நம் வயல்களில் புத்தெழுச்சி நிகழும். போரில் நாம் இழக்கும் செல்வத்தை மிகச்சில நாட்களிலேயே திரும்ப ஈட்டிவிடலாம். ஒருபோர் மேலும் இருபதாண்டுகாலம் வரிச்செல்வத்தை தொடர்ச்சியாக வளரச்செய்யும். சூதரே, தேசங்கள் மரங்களைப்போல. வளர்ச்சி நின்ற கணம் அவை இறக்கத்தொடங்குகின்றன.”
“நாம் உடனடியாக வாளெடுக்கவேண்டும் என்கிறீர்கள்” என்று விதுரன் சிரித்தான். “நாம் மட்டுமல்ல இன்றுள்ள அனைத்து ஷத்ரியர்களும் அந்நிலையில் இருக்கிறார்கள். நாம் போரிடவில்லை என்றால் அவர்கள் நம்மிடம் போரிடுவார்கள்” என்றார் லிகிதர். “ஏன் வணிகம் மூலம் வரிச்செல்வத்தை அதிகரிக்கமுடியாதா என்ன?” என்றான் விதுரன். “சூதரே, போரில்லாமல் வணிகம் நிகழும் காலம் என்றாவது இருந்திருக்கிறதா? நாம் இன்றுசெய்யும் வணிகம் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் செய்த போர்களினால் உருவானது. நாம் சிந்துவையோ கங்கையையோ முழுமையாகக் கைப்பற்றாமல் எதிர்காலத்தில் வணிகமே செய்யமுடியாது” என்றார் லிகிதர்.
சோமர் “பேரரசி காந்தாரத்தின் மணவுறவை நாடுவதும் இதனாலேயே…” என்று சொன்னார். “கங்கைக்கரையின் அனைத்து அரசுகளையும் நமக்குக் கப்பம் கட்டக்கூடியவையாக ஆக்கி வங்கம் வரை கங்கையை நாமே ஆட்சிசெய்யலாமென நினைக்கிறார்கள். அது நிகழ்ந்தால் நாம் கடல்வணிகத்தில் நுழையமுடியும். கடல்வணிகத்தின் செல்வம் வரத்தொடங்கினால் நாம் இமயமலை அடிவாரத்திலும் விதர்ப்பத்திலும் உள்ள அனைத்துக் காடுகளையும் ஜனபதங்களாக ஆக்கமுடியும். அடுத்த பத்தாண்டுகாலத்தில் ஆரியவர்த்தம் முழுவதையும் ஆட்சி செய்வோம். சீனத்தில் இருக்கும் பெருநிலம் கொண்ட பேரரசுகளைப்போல நாமும் ஆவோம்.”
விதுரன் “நான் சூதன் சோமரே, உங்களைப்போல ஷத்ரியர் அல்ல. லிகிதரைப்போல வைசியரும் அல்ல. நான் போரை ஏட்டில் நிகழ்த்துவதை கற்றிருக்கிறேன். வாளும் குருதியும் சந்திக்கும் போர் என்பது என்னை அச்சுறுத்துகிறது. போரல்லாத வழிகளை முழுமையாகப் பரிசீலிக்கவேண்டுமென்றே என் நெஞ்சு எண்ணுகிறது” என்றான்.
“சூதரே, இந்நகரை நீங்கள் பாருங்கள். இது பொன்னகரம், கலைநிலையம், காவியவேதி, வேதபுரி, அறபூமி என்றெல்லாம் புகழப்படுகிறது. ஆனால் ஒரு வீரனின் கண்ணில் இது என்ன? இது ஒரு மாபெரும் ஆயுதக்குவியல். இரண்டாயிரம் யானைகளாலும் இருபதாயிரம் வீரர்களாலும் அவர்களின் ஆயுதங்களாலும் காக்கப்படும் ஒரு பெரும் கோட்டை, அவ்வளவுதான். ஆயுதங்கள் அமைதியைக் கொண்டுவருமென்பது ஒரு பெரும்பொய். ஒரு வாள் வார்க்கப்பட்டால் அது உயிரை எடுத்தே தீரும். பாரதவர்ஷத்தில் இன்றிருக்கும் ஆயுதங்களெல்லாம் பலகாலமாகக் காத்திருக்கின்றன. அவை உறைவிட்டு வெளியே வந்தேயாகவேண்டும்.”
விதுரன் சிரித்து “எதற்கு?” என்றான். லிகிதர் சிரித்து “புதிய ஆயுதங்களை உருவாக்க. புதியகொல்லர்களும் புதிய தச்சர்களும் உருவாகவேண்டாமா என்ன?” என்றார். சோமர் சிரித்துக்கொண்டு “மனிதர்களுக்கு இறப்புண்டு. இல்லையேல் பூமியே முதுமையால் நிறைந்துவிடும். நாடுகளும் இறந்தாகவேண்டும். ஆகவே போர் வேண்டும்” என்றார்.
விதுரன் “அமைச்சரே, போரில்லாமல் அரசுகளில்லை என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால் அஸ்தினபுரி உறுதியாக வெல்லும் எனத் தெரியாத ஒரு போரை ஒருபோதும் நான் அனுமதிக்கப்போவதில்லை” என்றான்.
“அப்படியென்றால் காந்தாரத்தை நம்முடன் நிறுத்துவோம். இன்றிருக்கும் களஞ்சியத்துடன் தொடர்ந்த படையெடுப்புகளை நிகழ்த்த நம்மால் முடியாது. காந்தாரத்தின் நிதி நம் கைகளுக்கு வருமென்றால் நம்மால் கங்கையை வெல்லமுடியும்” என்றார் சோமர். “அஸ்தினபுரி போர் குறித்துவிட்டது சூதரே. அதை எப்படி வெற்றிகரமாக நடத்தி நம் களஞ்சியத்தை நிறைப்பது என்று மட்டுமே இனி நீர் எண்ணவேண்டும்” லிகிதர் சொன்னார். விதுரன் சிந்தனையுடன் தலையை அசைத்தான்.