‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50

பகுதி பத்து : வாழிருள்

[ 2 ]

வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து படமெடுத்தது. ஆயிரம் படங்களின் விசையால் அவன் உடல் முறுகி நெளிந்தது.

அவனருகே சென்று நின்ற தட்சகியான பிரசூதி ‘நானும்’ என்றாள். அவளுடைய உடலிலும் ஆயிரம் தலைகள் படமெடுத்தெழுந்தன. அவனுடன் அவள் இருளும் இருளும் முயங்குவதுபோல இணைந்துகொண்டாள். இருத்தல் என்னும் தட்சனும் பிறப்பு என்னும் பிரசூதியும் இணைந்தபோது இருட்டு கருக்கொண்டது. திசையழிந்து பரந்த கருமையின் வல்லமைகள் முழுக்க அவர்களிடம் வந்து குவிந்தன. அடியின்மையின் மேலின்மையின் வலமின்மையின் இடமின்மையின் முன்பின்மையின் பின்பின்மையின் இன்மையின் மையத்தில் ஒன்பது யோகங்களாக அவர்கள் ஒன்றாயினர்.

முதல் யோகம் திருஷ்டம் எனப்பட்டது. தட்சனின் ஈராயிரம் விழிகள் தட்சகியின் ஈராயிரம் விழிகளை இமைக்காமல் நோக்கின. கண்மணிகளில் கண்மணிகள் பிரதிபலித்த ஈராயிரம் முடிவின்மைகளில் அவர்கள் பிறந்து இறந்து பிறந்து தங்களை கண்டறிந்துகொண்டே இருந்தனர். ஒருவர் இன்னொருவருக்கு மறைத்துவைத்தவற்றை பேருவகையுடன் முதலில் கண்டுகொண்டனர். தாங்கள் தங்களிடமே மறைத்துக்கொண்டதை பின்னர் கண்டுகொண்டனர். கண்டுகொள்வதற்கேதுமில்லை என்று அறிந்தபின் காண்பவர்கள் இல்லாமல், காணப்படுபவரும் இல்லாமல், கண்களும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தனர்.

இரண்டாம் யோகம் சுவாசம். தட்சனின் மூச்சுக்காற்று சீறி அவள் மேல் பட்டது. அதில் அவன் உயிரின் வெம்மையும் வாசனையும் இருந்தது. உடலுக்குள் அடைபட்ட உயிரின் தனிமையும் வேட்கையும் நிறைந்திருந்தது. அவளுடைய மூச்சு அந்த மூச்சுக்காற்றை சந்தித்தது. மூச்சுகள் இணைந்த இருவரும் விம்மி படம் அசைத்து எழுந்தனர். மூச்சிலிருந்து மூச்சுக்கு அவர்களின் உயிர்கள் தங்களை பரிமாறிக்கொண்டன.

மூன்றாம் யோகம் சும்பனம். தட்சன் முதலில் தன் பிளவுண்ட நாக்கின் நுனியால் தட்சகியின் நாக்கின் நுனியைத் தீண்டினான். பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் நீண்ட பெரும் சிலிர்ப்பு ஒன்று அவளுடைய உடலில் ஓடியது. இருளுக்குள் அவள் நீளுடல் இருளுடன் இறுகி நெகிழ்ந்து வளைந்து சுழித்து அலைகளாகியது. பின்பு ஆயிரம் நாவுகள் ஆயிரம் நாவுகளைத் தீண்டின. ஈராயிரம் நாவுகள் ஒன்றை ஒன்று தழுவித்தழுவி இறுக்கி கரைத்தழிக்க முயன்றன. இரண்டு பெருநாகங்கள் ஈராயிரம் சிறுசெந்நாக்குகளாக மட்டும் இருந்தன.

நான்காம் யோகம் தம்ஸம். தட்சன் தன் விஷப்பல்லால் மெல்ல தட்சகியின் உடலைக் கவ்வினான். விஷமேறிய அவள் உடல் வெறிகொண்டு எழுந்து உடனே தளர்ந்து வளைவுகளை இழந்து இருளில் துவண்டது. அவள் உடலின் முடிவில்லாத வளைவுகளில் அவன் பற்கள் பதிந்துசென்றன. பின்பு அவள் திரும்பி வளைந்து அவனுடலில் தன் பற்களைப் பதித்தாள். உண்பதும் உண்ணப்படுவதுமாக இரு பேருடல்களும் ஒன்றை ஒன்று அறிந்தன.

ஐந்தாம் யோகம் ஸ்பர்சம். அடியின்மையின் கடைசி நுனியில் தட்சனின் நுனிவால் துடிதுடித்து வளைந்தது. பல்லாயிரம் கோடி யோஜனைதூரம் அது நெளிந்து வளைந்து இருள்வானில் ஊசலாடியது. பின்பு அதன் நுனியின்நுனி தட்சகியின் வாலின் நுனியின் நுனியை மெல்லத் தொட்டது. அந்தத்தொடுகையில் அது தன்னை அறிந்தது. இரு நுனிகளும் முத்தமிட்டு முத்தமிட்டு விளையாடின. தழுவிக்கொண்டன விலகிக்கொண்டன. விலகும்போது தழுவலையும் தழுவும்போது விலகலையும் அறிந்தன.

ஆறாம் யோகம் ஆலிங்கனம். இரு பேருடல்களும் புயலைப் புயல் சந்தித்ததுபோல ஒன்றோடொன்று மோதின. இரு பாதாள இருள்நதிகள் முயங்கியது போலத் தழுவின. சுற்றிவளைத்து இறுகியபோது இருவர் உடலுக்குள்ளும் எலும்புகள் இறுகி நொறுங்கின. தசைகள் சுருங்கி அதிர்ந்தன. இறுக்கத்தின் உச்சியில் வெறியுடன் விலகி இரு உடல்களும் பேரொலியுடன் அடித்துக்கொண்டன. தலைகள் கவ்வியிருக்க இரு உடல்களும் இரு திசைகளில் நகர்ந்து கோடானுகோடி இடிகள் சேர்ந்தொலித்ததுபோல அறைந்துகொண்டன. அந்த அதிர்வில் மேலே மண்ணுலகில் பூமி பிளந்து சுவாலை எழுந்தது. மலையுச்சியின் பெரும்பாறைகள் சரிந்திறங்கின.

ஏழாம் யோகம் மந்திரணம். தழுவலின் உச்சியில் இருவரும் அசைவிழந்தபோது தட்சன் அவள் காதில் மெல்லிய காதல்சொற்களை சொல்லத்தொடங்கினான். அக்கணத்தில் பிறந்துவந்த மொழியாலான சொற்கள் அவை. அவன் சொல்லி அவள் கேட்டதுமே அம்மொழி இறந்து காற்றில் மறைந்தது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு மொழி அவ்வாறு உருவாகி மறைந்துகொண்டிருந்தது. தன் அனைத்துச் சொற்களையும் சொல்லிமுடித்தபின்பு சொல்லில்லாமல் நின்ற தட்சன் சொல்லாக மாறாத தன் அகத்தை முடிவிலியென உணர்ந்து பெருமூச்சுவிட்டான். அவளோ அவனுடைய இறுதிச் சொற்களையும் கேட்டவளாக அப்பெருமூச்சை எதிரொலித்தாள்.

எட்டாம் யோகம் போகம். பாதாளத்தின் இருளில் இரு பெருநாகங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தன. தட்சன் தட்சகிக்குள்ளும் தட்சகி தட்சனுக்குள்ளும் புகுந்துகொண்டனர். அக்கணத்தில் பதினான்குலகங்களிலும் இணைந்த ஆண்களும் பெண்களுமான அனைத்துயிர்களிலும் அவர்களின் ஆசி வந்து நிறைந்தது. தட்சகிக்குள் வாழ்ந்த கோடானுகோடி நாகக்குழந்தைகள் மகிழ்ந்தெழுந்து அவள் உடலெங்கும் புளகமாக நிறைந்து குதூகலித்தன.

ஒன்பதாம் யோகம் லயம். இருவரும் தங்கள் முழுமைக்குத் திரும்பியபோது முழுமையான அசைவின்மை உருவாகியது. பாதாள இருளில் அவர்கள் இருப்பதை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். இருவரின் வால்நுனிகளும் மெல்லத்தொட்டுக்கொண்டிருக்க தட்சனின் தலைகள் கிழக்கிலும் தட்சகியின் தலைகள் மேற்கிலும் கிடந்தன. அவர்கள் இரு முழுமைகளாக இருந்தனர். முழுமைக்குள் முழுமை நிறைந்திருந்தது.

VENMURASU_EPI_50
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

பின்பு அவர்கள் கண்விழித்தபோது தங்களைச் சுற்றி பாதாளம் மீண்டும் முளைத்திருப்பதைக் கண்டனர். வாசுகியின் குலத்தில் பிறந்த கோடிசன், மானசன், பூர்ணன், சலன், பாலன், ஹலீமகன், பிச்சலன், கௌணபன், சக்ரன், காலவேகன், பிரகாலனன், ஹிரண்யபாஹு, சரணன், சக்‌ஷகன், காலதந்தகன் ஆகிய பெருநாகங்கள் பிறந்து வானுக்கு அப்பால் நின்ற பேராலமரத்தின் விழுதுகள் போல ஆடின. தட்சனின் குலத்தைச் சேர்ந்த புச்சாண்டகன், மண்டலகன், பிண்டசேக்தா, ரபேணகன், உச்சிகன், சரபன், பங்கன், பில்லதேஜஸ், விரோஹணன், சிலி, சலகரன், மூகன், சுகுமாரன், பிரவேபனன், முத்கரன், சிசுரோமான், சுரோமன், மஹாகனு போன்ற மாநாகங்கள் காட்டுக்கு அடியில் நிறைந்த வேர்பரப்பு போல செறிந்தாடின.

ஐராவத குலத்தில் உதித்த பாராவதன், பாரியாத்ரன், பாண்டாரன், ஹரிணன், கிருசன், விஹங்கன், சரபன், மோதன், பிரமோதன், ஸம்ஹதாபனன் போன்ற பொன்னிறநாகங்கள் விராடவடிவம்கொண்ட சிவனின் சடைக்கற்றைகள் என நெளிந்தாடின. கௌரவ்ய குலத்தில் அவதரித்த ஏரகன், குண்டலன், வேணி, வேணீஸ்கந்தன், குமாரகன், காகுகன், ஸ்ருங்கபேரன், துர்த்தகன், பிராதன், ராதகன் போன்ற நாகங்கள் விண்வெளி நீர்வெளிமேல் ஏவிய கோடிஅம்புகள் போல எழுந்தன.

திருதராஷ்டிர குலத்தில் பிறந்த சங்குகர்ணன், பிடாரகன், குடாரமுகன், சேசகன், பூர்ணாங்கதன், பூர்ணமுகன், பிரஹாசன், சகுனி, தரி, அமாஹடன், காமடகன், சுசேஷணன், மானசன், அவ்யபன், அஷ்டாவக்ரன், கோமலகன், ஸ்வசனன், மௌனவேபகன், பைரவன், முண்டவேதாங்கன், பிசங்கன், உதபாரான், இஷபன், வேகவான், பிண்டாரகன், மகாரஹனு, ரக்தாங்கதன், சர்வசாரங்கன், சம்ருத்தன், படவாசகன், வராஹகன், வீரணகன், சுசித்ரன், சித்ரவேகிகன், பராசரன், தருணகன், மணி, ஸ்கந்தன், ஆருணி ஆகிய நாகங்கள் முடிவிலியைத் துழாவும் இருளின் விரல்கள் என வானில் நெளிந்தன.

பாதாளத்தில் இருந்து இருள் பெருநதிகளாகக் கிளம்பியது. விண்ணின் ஒளியுடன் கலந்து பின்னி பெருவெளியை நெய்தது. நிழல்களாக உயிர்களைத் தொடர்ந்தது. கனவுகளாக உயிரில் கனத்தது. இச்சையாக எண்ணங்களில் நிறைந்தது. செயல்களாக உடலில் ததும்பியது. சிருஷ்டியாக எங்கும் பரவியது. ஒளியை சிறுமகவாக தன் மடியில் அள்ளிவைத்து கூந்தல் சரியக் குனிந்து முத்தமிட்டுப் புன்னகைசெய்தது.

[ முதற்கனல் நாவல் நிறைவு ]

முந்தைய கட்டுரைநான் தேர்ந்தெடுத்த முகம்
அடுத்த கட்டுரைகடலோர மரம்- கடிதங்கள்