ஞானம்

பொதுவாக என்னுடைய குறைந்த அவதானிப்பிலேயே சிங்கள நாடகம், சிங்கள இலக்கியம் போன்றவை தமிழுடன் ஒப்பிட மிக மேலான தரத்தில் இருப்பதைக் கவனித்திருக்கிறேன். சிங்கள அரசியல்கட்டுரைகளில் கூட ஈழத்தமிழ் கட்டுரைகளில் அனேகமாக காணவே கிடைக்காத தரம் இருப்பதையும் அவதானித்திருக்கிறேன்.

 

சமீபத்தில் கொழும்பில் இருந்து வெளிவரும் ‘ஞானம்’ என்ற இலக்கிய  இதழின் தலையங்கத்தை வாசித்தபோது அது சார்ந்த ஒரு திறப்பு ஏற்பட்டது. கொழும்பு பண்டார நாயகா ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் 2009 ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி செப்டெம்பர் 19 முதல் 27 வரை நடந்ததைப்பற்றி இந்த தலையங்கம் பேசுகிறது. பத்துரூபாய் கட்டணம் கட்டி நுழைவுச்சீட்டைப்பெற்று நீண்ட வரிசையில் நின்றே உள்ளே போகமுடியுமளவுக்குக் கூட்டம் முண்டியடித்தது என்கிறார் ஆசிரியர்.

 

ஆனால் மிகமிகக் குறைவாகவே தமிழர்கள் அங்கே வந்தார்கள் என்கிறார். கொழும்பின் தமிழ்பேசும் மக்கள்தொகை கிட்டத்தட்ட நாற்பதுசதவீவீதம். ஆனால் புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்களில் இரண்டு சதவீதம்கூட தமிழர்கள் அல்ல. தமிழ் புத்தக விற்பனை நிலையங்களான பூபாலசிங்கம் புத்தகசாலை, ஜெயாபுத்தக நிலையம், குமரன் புத்தக இல்லம், சேமமடு பொத்தக சாலை ஆகியவற்றில் மிகமிகக் குறைவான வாசகர்களே வந்தார்கள். அவர்களும் வழக்கமாக தெரிந்த முகங்கள்தான். தமிழ்பேசும் இளைஞர்கள் அனேகமாக புத்தகநிலையங்களுக்குவரவேயில்லை எனலாம் என்கிறார்

 

‘சிங்கள விற்பனை நிலையங்களில் எள்போட்டால் எள் விழாதகூட்டம். அதுவும் சிறுவர்கள், இளைஞர்கள். அவர்கள் நூல்களை ஆவலோடு வாங்கிச்சென்றபடியே இருந்தார்கள். சிங்கள மொழியின் பதிப்புத்துறையும் மிகச்சிறப்பாக உள்ளது’ என்கிறார். சீன, தென்னமேரிக்கரஷ்ய இலக்கியங்கலும் புகழ்பெற்ற உலகப்படைப்புகளும் உடனுக்குடன் சிங்கள மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு கிடைக்கின்றன. பத்துபதினைந்து பதிப்பகங்கல் இதற்காகவே இயங்குகின்றன. 2009 ல் தொடக்க ஆறுமாதத்தில் மட்டும் 120 உலக இலக்கிய நூல்களின் மொழியாக்கங்கள் சிங்கள மொழியக்கத்தில் வெளியாயின. அவையெல்லாம் சராசரி 200 ரூபாய் விலையில் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன. அவை பெருமளவில் விற்பனையாகின்றன என்கிறார் ஆசிரியர்.

 

தமிழில் வாங்கும்படியான விலையில் நூல்கள் இல்லை என்பதை ஒரு குறையாகச் சொல்கிறார் ஆசிரியர். தமிழ்நாட்டு நூல்கள் இலங்கை விலையில் 500 ரூபாய்க்குக் குறைவாகக் கிடைப்பதில்லை. இலங்கைத்தமிழர்கள் வெளியிடும் நூல்கள் பெரும்பாலும் சொந்தச்செலவில் வெளியிடுபவை .ஆகவே நல்ல நூல்கள் சாமானியர்களுக்கான விலையில் கிடைப்பதில்லை என்கிறார் உலகப்புகழ்பெற்ற நூல்கள் தமிழில் கிடைக்க காத்திருக்கவேண்டியிருக்கிறது.

 

”வெகுவிரைவில் சிங்கள மொழியில் உலகத்தரத்துக்கு ஏற்ப இலக்கியங்கள் வரப்போகின்றன. அதற்குரிய சூழலும் கட்டமைப்பும் அவர்களிடம் உருவாகி வருகின்றன” என்று சொல்கிறது தலையங்கம்

.

 

நூல்கள் கிடைப்பதோ விலையோ மட்டுமல்ல காரணம் என்று நான் நினைக்கிறேன்.  ஒரு பண்பாட்டுச்சூழலில் நூல்களுக்கான தேவை இருந்தால்தான் நூல்கள் வெளிவரும். தமிழில் வெளிவரும் நூல்கள் வருடத்திற்கு ஐந்தாயிரம் பிரதிகள் விற்குமென்றால் விதவிதமான தலைப்பில் மகத்தான நூல்கள் வரும்.

 

உலக இலக்கியங்களை தமிழில் மொழியாக்கம் செய்வதன் இன்றைய நிலை என்ன? அந்த மொழிபெயர்ப்பாளருக்கு அதற்கான ஊதியம் கொடுக்க இங்குள்ள பதிப்பாளர்களால் முடியாது. அதற்கு கிடைக்கும் உரிமைத்தொகை நூல்விற்று தீர்ந்தபின் ஒருவருடம் கழித்து[ அதற்கு பலசமயம் ஐந்து வருடங்கள் கூட ஆகும்] கிடைக்கும். 500 பக்க நூலை மொழியாக்கம் செய்ய தினமும் வேலைசெய்தால்கூட  ஆறுமாதம் ஆகும். ஆனால் ஐந்துவருடம் கழித்து அதற்கான பதிப்புரிமைத்தொகையாக 3000 ரூபாய் கிடைக்கும். அதுகூட பெரிய பதிப்பாளராக இருந்தால் மட்டுமே. மொழிபயர்ப்பாளர் குடித்த டீ , இழுத்த சிகரெட், மற்றும் தாள் பேனாவின் செலவே அதைவிட அதிகமாக இருக்கும்.

 

ஆகவே இங்கே தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் கிடையாது. சொந்த ஆர்வத்தில் எப்போதாவது ஒருவர் மொழிபெயர்ப்பு செய்தால் உண்டு. பொதுவாக அவர்கள் அதிக ஊக்கத்துடன் செய்வதில்லை. பெரும்பாலானவ்ர்கள் வாழ்நாளில் இரண்டு நூல்களை மொழியாக்கம்செய்திருப்பார்கள். ஐந்துவருடம் முன்புவரை அவரே சொந்தப்பணத்தை பதிப்பகத்துக்குக் கொடுத்துதான் மொழியாக்கம் செய்யவேண்டும். இப்போது அந்த நிலை இல்லை. என்ன காரணம் என்றால் ஒரு மொழிபெயர்ப்பு அதிகபட்சம் வருடத்துக்கு 200 பிரதிகள் கூட விற்பதில்லை என்பதே. இந்நிலையில் எப்படி உலக இலக்கியம் தமிழில் வெளிவரும்?

தமிழ்மேன்மை பேசி மேடைகளில் கொந்தளிப்பவர்களில் பத்து சதவீதம் பேர் தமிழில் வருடத்துக்கு ஒரு நூல் வாங்கினால்கூட தமிழ்பதிப்புத்துறை இப்படி இருக்காது. ஒரு திரைப்படம் பார்க்க 300 ரூபாய் செலவு செய்பவர்கள் 300 பக்க நாவலுக்கு 250 ரூபாய் விலை என்றால் அதிகம் என்கிறார்கள்.

 

ஆக பிரச்சினை நம் மனநிலையில்தான் உள்ளது. நமக்கு வாசிப்பு மீது ஆர்வம் இல்லை. இலக்கியம் மட்டுமல்ல எந்த துறையிலும் இங்கே நூல்கள் விற்பதில்லை.  தமிழின் எந்த ஒரு பிரபல எழுத்தாளரின் நூலும் வருடத்துக்கு இரண்டாயிரம் பிரதிகள் விற்பதில்லை என்பதே யதார்த்தம். தீவிர இலக்கிய எழுத்தாளர்கள் அதிகபட்சம் 100 பிரதி எதிர்பார்க்கலாம்.

நூல்களின் தேவை இல்லாதபோது நூல்கள் வெளிவருவதில்லை. ஆனால் நாம் நம்மை எல்லாரையும் விடமேலானவர்களாக கற்பனை செய்துகொண்டு ஒரு வெட்டிப் பெருமிதத்தில் திளைக்கிறோம். சிங்களக் காடையர் என்கிறோம். கன்னடக்கேனையர் என்கிறோம். அவர்களின் வாசிப்பும் பண்பாடும் நம்மைவிட பலமடங்கு முன்னால் நிற்பவை என்பதை நான் நினைப்பதில்லை.

 

கன்னித்தமிழ் என்ற ஒரு சொல்லாட்சி நம்மிடம் உள்ளது. தமிழை அப்படியே கன்னிகழியாமல் வைத்திருக்கும் ஆர்வமே நம்மிடம் உள்ளது. தமிழ்ச் சொற்களை திருத்துவதற்கும் தூய்மைப்படுத்துவதற்கும் துடிப்பவர்களில்  ஆயிரத்தில் ஒருவர்கூட தமிழில் எதையும் வாசிக்க முன்வருவதில்லை. ஆகவேதான் தமிழ் முதிர்கன்னியாகவே இருக்கிறாள் போலும்

 

ஞானம் இதழ் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது. இணை ஆசிரியர் ஞானம் ஞானசேகரன். தலைமை அலுவலகம் 19/7 பேராதனை வீதி கண்டி. தொடர்புகளுக்கு: தி.ஞானசேகரன், ஞானம் கிளை அலுவலகம்,. 3 B 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு 6

தொலைபேசி 011 2586013 0777 306506

 

மின்னஞ்சல் [email protected]

www.gnanan.info

முந்தைய கட்டுரைகாந்தி, கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)