ஜெ
தங்கள் மகாபாரதம் தொடர் பெரும் வரவேற்பு பெற்றது.இலக்கியம் அறியா என் நண்பர்கள் பலர் தொடர்ந்து உங்களை உடனுக்குடன் வாசிப்பவர்கள்.அறம் போல எளிமையானவற்றை வாசித்து உடனே புரிந்து கொண்டவர்கள்.தங்கள் மொழியறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும் அப்போது தான் தங்கள் எழுத்துகள் எளிதாகுமென நினைக்கிறார்கள்.விஷ்ணுபுரத்தோடு மன்றாடுகிறார்கள்.அனைத்தும் மகிழ்வானவை. உங்கள் தொடரின் அறியா சொற்பொருளை அறிய ஒர் அகராதி இணைப்பையும் தங்கள் பக்கத்தில் கொடுக்கலாம் .சிலர் இணையத்தில் அகராதி பயன்பாடு இருப்பது அறியாதிருக்கின்றனர்.
மகிழ்வோடு
ச.விசயலட்சுமி
அன்புள்ள விஜயலட்சுமி,
நீங்கள் சொல்வது உண்மை. பொதுவாக நம் மொழிப்பயிற்சி இப்போது குறைவாக இருப்பதனால் வெண்முரசு போன்றநூல்களை வாசிக்க ஒரு தடை உள்ளது. ஆனால் அது பெரும்பாலும் வாசகர்தரப்பிலேயே தீர்த்துக்கொள்ளவேண்டியது.
ஏனென்றால் சொற்கள் என்பவை வெறுமே மொழிசார்ந்தவை அல்ல. அவை அறிவின் துளிகளும்கூட. ஒரு சொல்லை அறியாமலிருப்பதென்பது அச்சொல் சுட்டும் விஷயத்தையும் அறியாமலிருப்பதே. மொழியை சரிவர அறியாமலிருப்பது பண்பாட்டை சரிவர அறியாமலிருப்பதே. இன்றையசூழலில் அது ஓர் இயல்பானநிலையாகவே உள்ளது.
அதேசமயம் வெறுமனே சொற்களைப் போய் ‘கற்றுக்கொள்வது’ எவருக்கும் சாத்தியமல்ல. மகாபாரதம் போன்று நம் பண்பாட்டின் ஆதாரவிசையாக உள்ள ஒரு நூலை வைத்துக்கொண்டுதான் சொற்களையும் அச்சொற்கள் ஏந்தி நிற்கும் அறிவையும் நாம் கற்றுக்கொள்ளமுடியும். ஆகவே வெண்முரசு வாசிப்பு என்பது வெறுமே வாசிப்பு மட்டும் அல்ல, அது ஒரு கல்வி.
அதற்கான முயற்சியை வாசகர் எடுக்கலாம். தெரியாத எச்சொல்லையும் உடனே கூகிளில் வெட்டி ஒட்டி தேடினால் பெரும்பாலும் பொருள் வந்துவிடுகிறது. இணையத்தில் தமிழ்ச்சொற்களை ஏற்றும் பணி அக்காலத்தில் ஏட்டுச்சுவடிகளை அச்சிட்டமைக்கு நிகரானது. அதைச்செய்த முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்.
முக்கியமான கலைச்சொற்களுக்கு பக்கங்களிலேயே பதில் தெரியும். ஆனால் அனைத்துச்சொற்களுக்கும் இப்பக்கத்திலேயே பொருளும் விளக்கமும் கொடுக்கத் தொடங்கினால் பக்கமே மிக நீண்டுவிடும். வாசிப்பின் ஒருமையும் இல்லாமலாகிவிடும்.
ஜெ