வாசித்துக்காட்டும் செயலி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் சில நாட்களாக தமிழ் text to speech மென்பொருளை படிப்பதற்கு பயன்படுத்தி வருகிறேன். வேலையிலும் கணினியை பல மணி நேரம் உபயோகித்துவிட்டு, வாசிக்கும் போதும் கணினி திரையை பார்த்து படிப்பது கண்களை வருத்துகிறது. இந்த மென்பொருள் வாசிப்பதை எளிதாக்குகிறது, இதில் பதிவும் செய்து கொள்ளலாம். கிட்டதட்ட கட்டுரைகளை ரேடியோவில் கேட்பது போல் கேட்டு வருகிறேன். எழுத்துக்களை ஒலியாய் மாற்றிய பின் அதை கேட்கும் சாத்தியங்களும், தருணங்களும் வாசிப்பதை காட்டிலும் அதிகம். இசையை கேட்பது போல் இந்த பதிவுகளையும் கேட்கலாம்.

eSpeak [ http://espeak.sourceforge.net/ ] எனப்படும் மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. இது தமிழை பேசும். இது வார்த்தைகளை வாசிக்கும் வேகத்தை தேவைக்கேற்ப மாற்றி அமைக்கலாம். இந்த மென்பொருளையும், மேலும் சில வசதிகளுடன் எனது மென்பொருளையும் சேர்த்து உபயோகித்து வருகிறேன்.இந்த மென்பொருள் கர கரவென்று எந்திரம் போல் பேசுவதை முதலில் கேட்கும் எவருமே புரியவில்லை என்கிறார்கள். எந்த மொழி என்று கூட புரியவில்லை என்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் கடினமில்லை. என் காதுகள் சிறிது காலத்திலேயே இந்த பேச்சுக்கு பழகிவிட்டது. கிட்டத்தட்ட இன்னொரு மனிதர் பேசுவதை போல இதை என்னால் கேட்க முடிகிறது.

ஆனால் இதை நீங்கள் சொல்வது போல் வாசகன் கற்பனையால் நிரப்பிக் கொள்ள வேண்டிய படைப்புகளை வாசிக்க பயன்படுத்துவதில்லை. அப்படி கதைகளை நிதானமாக படிப்பதற்கு இதை பயன்படுத்துவதில் பல சிக்கல்களும் உள்ளது. கட்டுரைகளையும் செய்திகளையும் வாசிக்கவே பயன்ப்படுத்தி வருகிறேன். இப்படி வாசிப்பதைப்பற்றி நீங்கள் என்ன நிணைக்கிறீர்கள்? இது வாசிப்பில் என்ன பாதிப்பை உண்டு செய்யும்?

இதன் மாதிரியை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=JaC1QZjhiGc

நன்றி,
ஹரீஷ்

பேரா. கோ. கண்ணன் தருமபுரி

அன்புள்ள ஹரீஷ்

ஏற்கனவே என் நெடுநாள் நண்பரும் விழியற்றவருமான கோ.கண்ணன் [ அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் தருமபுரி] ஒரு பென்பொருளைப் பயன்படுத்தி தமிழை ஒலியாக வாசிக்கிறார். என்னுடைய தளத்தை அவர் தினமும் வாசிக்கிறார். நான் தருமபுரியில் இருந்தபோது அவர் முனைவர் பட்ட ஆய்வுமாணவர். அன்று அவருக்கு வாசித்துக்காட்ட ஆள் தேவைப்பட்டது. பெரிய வாசகர் என்பதனால் எவ்வளவு வாசித்தாலும் தீராது அவருக்கு. நான் அவருக்காக நாவல்கள் வாசித்துப் பதிவுசெய்துகொடுத்திருக்கிறேன். நாவலாசிரியர் பா.வெங்கடேசன் அவருக்காக வாசித்திருக்கிறார். இப்போது அவரே கேட்கமுடிகிறது. உங்கள் மென்பொருள் அவ்வகையில் மிக உதவியானது.

எனக்கு இந்த மென்பொருளின் உச்சரிப்பு வெள்ளைக்காரர் பேசுவதுபோல ஒலித்தது. ஆனால் இதையெல்லாம் மிக விரைவிலேயே சரிசெய்துகொள்ளமுடியும். மானசீகமாகக்கூட. என்ன சிக்கல் என்றால் மனிதர்கள் இருவகை. காதுசார் நுண்ணுணர்வு கொண்டவர்கள், கண்சார் நுண்ணுணர்வுகொண்டவர்கள். காதுசார்ந்தவர்களே ஒலிவடிவில் நூல்களை எளிதில் வாசிக்கிறார்கள். எனக்குத்தான் காதில் கவனமில்லை என தெரியுமே. என் நண்பர்கள் ஷாஜி, சுகா, ராமச்சந்திர ஷர்மா கெ.பி.வினோத் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கலாம். அவர்கள் பெரிய இசை ரசிகர்களும்கூட

ஜெ


கண்ணன் – பிரெயிலி முறையின் எதிர்காலம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 36
அடுத்த கட்டுரைவலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்