பகுதி ஒன்பது : ஆடியின் ஆழம்
[ 3 ]
ஸென்யாத்ரி, போம்போனம், துங்கானம் என்னும் மூன்று வறண்ட பாறைச்சிகரங்களுக்குள் இருந்த சின்னஞ்சிறு சிபிநாடு தகிக்கும் வெயிலுக்காகவே அறியப்பட்டிருந்தது. ஆகவே அங்கே அனைத்து வணிகர்களும் செல்வதில்லை. சிபிநாட்டுக்கும் அதற்கு அப்பாலிருந்த காந்தாரத்தின் பாலைநிலத்துக்கும் செல்பவர்கள் பாலைவணிகர்கள் மட்டுமே. அவர்கள் பிற வணிகர்களுடன் இணைவதில்லை. அவர்களின் மொழியும் உடையும் உணவும் அனைத்தும் வேறுபட்டவை. வெயிலில் வெந்து சுட்டசட்டிபோன்ற செந்நிறமாக ஆகிவிட்ட முகமும் அடர்ந்த கரிய தாடியும் கொண்ட அவர்கள் கனத்த தாழ்குரலில் பேசினர். அனைவருமே இடுப்பில் வைத்திருந்த கூரிய வாள்களை எப்போதும் எடுக்க சித்தமானவர்களாக இருந்தனர்.
ஹம்சபுரியில் இருந்து கிளம்பிய ஒரு வணிகக்குழுவுடன் சிகண்டி இணைந்துகொண்டான். அவனுடைய வில்திறனுக்காக நாள் ஒன்றுக்கு பத்துவெள்ளி கூலிக்கு அவர்கள் அமர்த்திக்கொண்டனர். நூறு அத்திரிகளில் தானியங்கள், துணிகள், ஆயுதங்கள், வெண்கலப் பாத்திரங்கள், உலர்ந்த மீன் போன்ற பொருட்கள் பெரிய எருமைத் தோல்மூட்டைகளில் கட்டி ஏற்றப்பட்டிருந்தன. அவர்கள் மாலையில்தான் ஹம்ஸபுரியைவிட்டு கிளம்பினர். கிளம்புவதற்கு முன் இருபது எருமைத்தோல் பைகளில் நீர் நிறைத்து அவற்றை கழுதைகள் மேல் ஏற்றிக்கொண்டனர். உலர்ந்த பழங்களும் மரப்பலகைபோன்றிருந்த அப்பங்களும் தூளாக்கப்பட்ட கோதுமைமாவும் நான்கு கழுதைகள்மேல் ஏற்றப்பட்டன. பொதிகள் ஏற்றிய மிருகங்கள் நடுவே செல்ல அவற்றைச் சூழ்ந்து வில்களும் வாள்களுமாக அவர்கள் சென்றனர்.
மொத்தம் நூறுபேர் இருந்தனர். ஐம்பது அத்திரிகள் அவர்கள் பயணம் செய்வதற்கானவை. ஐம்பதுபேர் நடக்கவேண்டும். களைத்தபின் நடப்பவர்கள் அத்திரிகளுக்கு மாறிக்கொள்ளலாம். இருளில் விளக்குகள் ஏதுமில்லாமல் அவர்கள் நடந்தபோது எருமைத்தோல்களாலான அவர்களின் காலணிகள் தரையில் பரவியிருந்த சரளைக்கற்கள் மேல் பட்டு ஒலியெழுப்பின. பின்னிரவுக்குள் அவர்கள் ஹம்சபுரியின் நீர் நிறைந்த வயல்வெளிகளை தாண்டிவிட்டிருந்தனர். மண்ணில் நீர் குறைந்ததை காதுமடல்களில் மோதிய காற்று காட்டியது. சற்றுநேரத்தில் மூக்குத்துளைகள் வறண்டு எரியத்தொடங்கின. காதுமடல்களும் உதடுகளும் உலர்ந்து காந்தலெடுத்தன. விரிந்த மண்ணில் ஓடும் காற்றின் ஓசை கயிற்றை காற்றில் சுழற்றுவதுபோலக் கேட்டது.
மிகவிடியற்காலையிலேயே நிலத்தின்மேல் வானின் வெளிச்சம் பரவத்தொடங்கியது. புழுதியாலானதுபோன்ற வானில் சாம்பலால் மூடப்பட்ட கனல் போல சூரியன் தெரியத்தொடங்கியதும் மண் செம்பொன்னிறமாக திறந்துகொண்டது. ஏற்ற இறக்கமே இல்லாமல் வானம்வரை சென்று தொடுவான்கோட்டில் முடிந்த சமநிலத்தில் பச்சைநிறமான கோழிகள் சமமான இடைவெளிகளில் தூவல் குறுக்கி அடைகாத்து அமர்ந்திருப்பதுபோல நீரற்ற சிறிய இலைகள் கொண்ட முட்புதர்ச்செடிகள் நின்றன. சூரியன் வலிமைபெற்று மேகங்களை எரிக்கத் தொடங்கியபோது பாலைநிலம் மேலும் பொன்னிறம் கொண்டது. அப்பால் மேற்கே செந்நிறவிதானமாக கீழிறங்கிய வானின் நுனியில் நான்கு அடுக்குகளாக மலைச்சிகரங்கள் தெரிந்தன.
வணிகர்களில் ஒருவன் “ஸென்” என்று அதைச் சுட்டிக்காட்டிச் சொன்னான். “அந்த மூன்று சிகரங்களுக்கு நடுவே உள்ளது சிபிநாடு.” சிகண்டி நிமிர்ந்து அந்த மலைகளைப் பார்த்தான். அவை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வெவ்வேறு வண்ண அழுத்தங்களில் பளிங்குப்புட்டிக்கு அப்பால் பளிங்குப்புட்டியை வைத்ததுபோலத் தெரிந்தன. மேலும் செல்லச்செல்ல அவற்றின் வடிவம் தெளிவடைந்தபடியே வந்தது. மரங்கள் அற்ற மொட்டைப்பாறைகளை அள்ளிக்குவித்தது போன்ற மலைகள். அவற்றின் மடம்புகளும் வளைவுகளும் காற்றில் கரைந்து எஞ்சியவை போலிருந்தன.
விடியற்காலையில் புதர்ச்செடிகள் மேல் பனியின் ஈரம் துளித்து நின்றிருந்தது. முட்களில் ஒளிரும் நீர்மணிகள் தெரிந்தன. தூரத்தில் நான்கு பிங்கலநிற பாலைவனக்கழுதைகள் குஞ்சிவால்களைச் சுழற்றியபடி அந்த முட்செடிகளை மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றுக்கருகே பறவைக்கூட்டம் ஒன்று சிறுகாற்றில் சுழன்று படியும் சருகுக்குவியல் போல பறந்தது. புதர்ச்செடிகளை நெருங்கும்போதெல்லாம் அவற்றுக்குள் இருந்து சிறிய பறவைகள் சிறகடித்தெழுந்தன.
முதல்பார்வையில் உயிரற்று விரிந்துகிடந்த பாலைநிலம் கூர்ந்துபார்க்கும்தோறும் உயிர்களைக் காட்டியது. தரையின் பொன்னிறமான புழுதியில் சிறிய குழிகளுக்குள் இருந்து பலவகையான பூச்சிகள் எட்டிப்பார்த்து காலடிகேட்டு உள்ளே தலையை இழுத்துக்கொண்டன. புழுதியில் சிறிய வட்டக்குவியங்களை அமைத்திருந்த பூச்சிகளும் பாறையிடுக்குகளில் மென்புழுதியைத் திரட்டிவைத்திருந்த பூச்சிகளும் அங்கே ஒரு பெரிய வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருப்பதைக் காட்டின. பெரிய கற்களின் அடியில் சிறிய எலிகளின் மணிக்கண்கள் தெரிந்து மறைந்தன. ஒரு பாம்பு புழுதியை அளைந்தபடி வால் சுழற்றி கல்லிடுக்கில் சென்ற பின்பும் கண்களில் நெளிவை எஞ்சச்செய்தது.
பாறை இடுக்கு ஒன்றில் உடும்பு ஒன்றை ஒருவன் சுட்டிக்காட்டினான். கல்லால் ஆன உடல்கொண்டதுபோலிருந்த அது அவன் அருகே நெருங்கியதும் செதில்களை விரித்து தீ எரிவதுபோல ஒலியெழுப்பி நடுங்கியது. சிறிய கண்களை கீழிருந்து மேலாக மூடித்திறந்தபடி கால்களை விரைத்துத் தூக்கி வாலை வளைத்து அவனைநோக்கி ஓடிவந்தது. அதன் நாக்கு வெளிவந்து பறந்தது. அவன் தன் கையில் இருந்த கவைக்கோலால் அதைப் பிடித்து தரையுடன் அழுத்திக்கொண்டு வாளால் அதன் தலையை வெட்டிவீழ்த்தினான். பின்பு அதை எடுத்து அப்படியே வாயில் வைத்து குருதியை குடிக்கத்தொடங்கினான்.
வாயில் குருதியைத் துடைத்தபடி கையில் தொங்கிய உடும்புடன் அருகே வந்த அவன் “இந்தப்பாலையில் வயிற்றில் புண் ஏற்பட்டுவிடுகிறது. உடும்பின் சாறு புண்ணை ஆற்றும்” என்றான். சிகண்டி ஒன்றும் சொல்லாமல் பார்வையை திருப்பிக்கொண்டான். “இங்கே லாஷ்கரர்களும் லிந்தர்களும் வெறும் பாறைகளில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு பெரும்பாலும் இந்த உடும்புதான் உணவு… உடும்புநீர் குடித்தால் இரண்டுநாட்கள் வரை உணவில்லாமல் வாழ்ந்துவிடமுடியும்.” அவன் அதை உரித்து வாளால் சிறு துண்டுகளாக வெட்டினான். அனைவருக்கும் ஒருதுண்டு வீதம் அளித்தான். அவர்கள் அந்தத் துண்டுகளை வாயிலிட்டு மெல்லத் தொடங்கினர்.
மிகவிரைவிலேயே வெயில் வெளுத்து பாலைநிலம் கண்கூசும்படி மின்னத்தொடங்கியது. புழுதியை அள்ளிவந்த காற்று அவர்கள் கண்கள் மேலும் உதடுமேலும் அதை வீசியபடி கடந்து சென்றது. செம்புழுதி தூண் போல எழுந்து மெல்லச்சுழன்றபடி சாய்ந்து சென்றது. தொலைதூரத்தில் புழுதிக்காற்று புகைபோல எழுந்து செல்ல அந்த மண் கொதிக்கும் நீர்ப்பரப்பு என்று தோன்றியது.
பசிய குறுமரங்கள் அடர்ந்த ஒரு குறுங்காடு தெரிந்ததும் அவர்கள் தங்கள் மலைதெய்வத்தை துதித்து குரலெழுப்பினர். தொலைவிலிருந்து பார்க்கையில் யாரோ விட்டுச்சென்ற கம்பளி ஆடை போலத்தெரிந்த காடு நெருங்கியதும் குட்டை மரங்களான ஸாமியும் பிலுவும் கரிரும் அடர்ந்த சிறிய சோலையாக ஆகியது. அந்த மரங்களின் இலைகளுக்கு நிகராகவே பறவைகளும் இருப்பதுபோல ஒலி எழுந்தது. உள்ளே நுழைந்தபோது தலைக்குமேல் ஒரு நகரமே ஒலியெழுப்புவதுபோல பறவைகள் எழுந்து கலைந்தன.
மரங்கள் நடுவே ஒரு ஆழமான சிறிய குட்டையில் கலங்கிய நீர் இருந்தது. பெரிய யானம் போலிருந்த வட்டமான குட்டையில் நீரைச்சுற்றி சந்தனக்களிம்பு போல சேறு படிந்திருக்க நீரும் சந்தனநிறமாகவே இருந்தது. சேற்றில் பலவகையான மிருகங்களும் பறவைகளும் நீர் அருந்தியதன் காலடித்தடங்கள் படிந்திருந்தன. அத்திரிகளும் கழுதைகளும் சுமைகளை இறக்கிக் கொண்டதும் முட்டிமோதி குட்டையில் இறங்கி நீர் குடிக்கத்தொடங்கின. வைத்த வாயை எடுக்காமல் உறிஞ்சிவிட்டு பெருமூச்சுடன் நிமிர்ந்து மீசைமுடிகளில் இருந்து நீர் சொட்ட காதுகளை அடித்துக்கொண்டன. கழுத்தைத் திருப்பி நீரை வாயிலிருந்து முதுகிலும் விலாவிலும் தெளித்துக்கொண்டன.
ஒவ்வொருவருக்கும் உணவும் தோல்பையில் நீரும் வழங்கப்பட்டது. சிகண்டி அப்பத்தை நீரில் நனைத்து உண்டுவிட்டு தோல்பையை வாயில்வைத்து நீரை துளித்துளியாகக் குடித்தான். தோல்பையுடன் சென்று சோலையின் விளிம்பில் அடர்ந்து நின்ற ஸாமிமரத்தின் அடியில் மென்மணலில் படுத்துக்கொண்டான். அண்ணாந்து நோக்கியபோது மேலே மரக்கிளைகள் முழுக்க பாக்குக்குலைகள் போல சிறிய சாம்பல்நிறச் சிட்டுகள் கிளைதாழச் செறிந்திருக்கக் கண்டான். அவை ஓயாது இடம்மாறியபடி ஒலியெழுப்பி சிறகடித்துக்கொண்டே இருந்தன. அப்பால் பாலைநிலம் வெயிலில் நனைந்து வெந்து ஆவியெழுப்பிக்கொண்டிருந்தது. மேலே மேகத்துளிகூட இல்லாத வானம் ஒளிப்பரப்பாக இருந்தது.
பகல் முழுக்க அங்கே தங்கி மாலையில் வெயில்தாழ்ந்தபின் அவர்கள் கிளம்பினர். காற்றில் மண்ணின் வாசனை காய்ச்சப்பட்ட உலோகத்தின் மணம்போல எழுந்துவந்து வறுத்த உணவுகளின் நினைவை எழுப்பியது. சூரியன் மேகமே இல்லாத புழுதிவண்ண வானில் மூழ்கி மறைந்த பின்னரும் மண்ணில் நல்ல ஒளி மிச்சமிருந்தது. அத்திரிகள் கால்களில் பாதையை வைத்திருந்தன. அவை வரிசையாகச் சென்றுகொண்டிருந்தன. ஓடையில் நீர் ஓடுவதுபோல அவற்றை மீறியே அவை செல்வதாகத் தோன்றியது.
செங்குத்தாக மண்ணாலான மலைவிளிம்பு ஒன்று வந்தது. கையால் வழித்து விட்டதுபோன்ற அதன் மடிப்புகளில் செந்நிறமான மண்பாளங்கள் பிளந்து விழப்போகின்றவை போல நின்றன. மாமிசத்தாலான மலை. கீழே முன்பு எப்போதோ விழுந்தவை செவ்வோட்டுத் தகடுகளாக உடைந்து கிடந்தன. மலைவிளிம்பை நெருங்கியபோதுதான் அந்தத் தகடுகள் ஒவ்வொன்றும் இடுப்புயரம் கனமானவை என்று தெரிந்தது.
செம்மண்மலை விளிம்பில் இருந்த சிறிய வடுபோன்ற பாதையில் ஏறி மேலே செல்லும்போதுதான் அங்கு ஏன் வண்டிகளில் எவரும் வருவதில்லை என சிகண்டி புரிந்துகொண்டான். மேலே ஏறியதும் திரும்பிப்பார்த்தபோது கண்ணுக்கெட்டும் தொலைவுவரை பாலைநிலம் மிதமான வெளிச்சத்தில் பச்சைநிறத்தில் நூல்வேலைப்பாடுகள் செய்த பொன்னிறப் பட்டுபோல விரிந்து கிடப்பதைக் காணமுடிந்தது. ஸென்யாத்ரியும் போம்போனமும் துங்கானமும் தெளிவாக மேற்கை முழுமையாக வளைத்து நின்றன. அவற்றின் மடம்புகளில் மணல் பொழிந்து உருவான கூம்புகளைக் காணமுடிந்தது.
இரவு எழுந்தபோது வானம் பல்லாயிரம்கோடி விண்மீன்களுடன் கரும்பட்டுக்கூரையாக மிக அருகே வந்து விரிந்துகிடந்தது. கையை வீசி விண்மீன்களை அள்ளிவிடலாமென்று தோன்றியது. விண்மீன்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் சிறிய கனல் உருளைகளாக இருளில் மிதந்து நின்றன. அவர்களின் காலடி ஓசைகள் இருட்டுக்குள் நின்ற பாறைகளில் எங்கெங்கோ எதிரொலித்து அவர்களிடமே திரும்பி வந்தன. அருகே சோலைகள் சற்று அதிகரித்திருப்பது ஓசைகளில் தெரிந்தது. பல இடங்களில் ஓநாய்களின் ஊளைகள் கேட்டன.
நான்காம் நாள் அதிகாலையில் அவர்களின் குழு சைப்யபுரியைச் சென்றடைந்தது. அகன்ற நிலத்தின் நடுவே நாரி ஆறு வெளிறிய மணல்படுகையாகக் கிடந்தது. சிறியஓடை போல நீர் ஓடியது. ஆற்றின் இருபக்கங்களிலும் மேய்ச்சல் நிலங்கள் வந்தன. கொம்புகளற்ற வெண்ணிறமான பசுக்களை மேய்ப்பவர்களும் குள்ளமான கொம்புசுருண்ட ஆடுகளை மேய்ப்பவர்களும் களிமண்ணை அள்ளிப்போர்த்தியதுபோல தோளைச்சுற்றிய மரவுரியாடையும் தலையில் முண்டாசுச்சுற்றுமாக செம்புழுதி படிந்து திரித்திரியாக தொங்கிய தாடியுடன் சுருங்கிய கண்களால் நோக்கி நின்றனர்.
தொலைவிலேயே சைப்யர்களின் உயரமான கோட்டை தெரிந்தது. செங்குத்தாக எழுந்த ஒரு பெரிய மண்பாறை மீது அந்நகரம் எழுப்பப்பட்டிருந்தது. பாறையின் விளிம்பிலேயே எழுந்த அதே நிறமான உயரமற்ற கோட்டையின் மேல் காவலரண்களில் வீரர்கள் இருந்தனர். அவர்கள் நெருங்கியதும் கோட்டைமேல் எரியம்பு எழுந்தது. பாறைக்குக் கீழே இருந்த காவல்குகையில் இருந்து ஐந்து குதிரைவீரர்கள் அவர்களை நோக்கி செம்புழுதியைக் கிளப்பியபடி வந்தனர். அவர்கள் தங்கள் இலச்சினைகளைக் காட்டியதும் திரும்ப கோட்டையை நோக்கி எரியம்பு ஒன்றை அனுப்பினர்.
சிகண்டி அந்தக்கோட்டையை பார்த்துக்கொண்டே சென்றான். அருகே செல்லச்செல்லத்தான் அந்தக்கோட்டையின் அமைப்பு அவனுக்குப் புரிந்தது. முதலில் அதை ஒரு மாபெரும் மண்கோட்டை என்றுதான் அவன் புரிந்துகொண்டான். நெருங்கியபோதுதான் இரண்டுயானைகளின் உயரம்கொண்ட மண்பாறைமேடு மீது கோட்டை இருப்பதை உணர்ந்தான். அந்தப்பாறை கண்பார்வைக்கு களிமண்ணாகவும் கையால் தொட்டபோது பாறையாகவும் இருந்தது. அதைக் குடைந்து அதனுள் நுழைவதற்கான பாதையை அமைத்திருந்தனர். சரிந்து சென்ற குதிரைப்பாதையும் இருபக்கமும் படிகளும் பாறைக்குள்ளேயே நுழைந்து மேலே சென்று எழுந்தன. அப்பாதைகளின் இருபக்கமும் காவல்வீரர்கள் அமர்ந்திருக்கும் சதுரவடிவ அறைகள் செதுக்கப்பட்டிருந்தன.
மேலே ஏறியதுமே சிகண்டி அந்நகரின் அமைப்பைக் கண்டு வியந்து நின்றுவிட்டான். பெரிய மண்பானைகளைக் கவிழ்த்து வைத்ததுபோலவோ மண்குவியல்கள் போலவோ தெரிந்தன அந்நகரின் அனைத்துக் கட்டடங்களும். அவற்றின் உருளைக்கூம்பு முகடுகளின் மண்குழைவுச்சரிவில் காற்று பட்டு உருவான வடுக்கள் பரவியிருந்தன. அவை பல அடுக்குகள் கொண்டவை என்பது அவற்றின் கீழ்த்தளத்துப் பெருவாயில்களுக்கு மேல் அடுக்கடுக்காக எழுந்த சாளரங்களில் இருந்து தெரிந்தது. இருபத்தெட்டு பெரிய கட்டடங்கள் தவிர கவிழ்ந்தகோப்பைகள் போல நூற்றுக்கணக்கான சிறிய கட்டடங்கள் இருந்தன. கட்டடங்களுக்கு முன்னால் சில இடங்களில் காட்டுமரங்களால் தூண்கள் அமைத்து தோல்கூரைகளை இழுத்துக்கட்டி பந்தலிட்டிருந்தனர்.
மாலை வேளையில் நகரம் முழுக்க மனிதர்களின் அசைவுகள் நிறைந்திருந்தன. அனைத்துச்சாளரங்களிலும் மனிதர்கள் தெரிந்தனர். கீழே வீதிகளில் வணிகர்கள் பொருட்களைக் குவித்துப்போட்டு விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றிலும் இருக்கும் மலையடுக்குகளில் இருந்து வேட்டைப்பொருட்களுடன் வந்த வேடர்கள். தோள்களில் சிறிய விற்களும் அம்பறாத்தூணிகளும் அணிந்து தலையில் மரவுரித்தலைப்பாகை சுற்றி தங்கள் முன் பந்தல்கால்கள் போல நடப்பட்ட குச்சிகளில் கொன்ற கீரிகள், முயல்கள், உடும்புகள் போன்றவற்றை கட்டித் தொங்கவிட்டு அமர்ந்திருந்தனர். பொறிவைத்துப்பிடிக்கப்பட்ட மலைஎலி அணில் போன்ற சிறிய உயிரினங்கள் மூக்குவழியாக கோர்க்கப்பட்ட நார்களால் கட்டப்பட்டு உயிருடன் எம்பி எம்பி விழுந்துகொண்டிருந்தன.
செம்மண்நிறமான கனத்த ஆடைகளை பல சுற்றுகளாக அணிந்து கூந்தலையும் மறைத்திருந்த சைப்யபுரியின் பெண்கள் குனிந்து அவற்றை பேரம்பேசி வாங்கினர். உலரவைக்கப்பட்ட காய்கறிகளும் பழங்களும், பலவகையான கொட்டைகளும், உலர்ந்த மீன்களும், புகையிடப்பட்டு கறுத்த மாமிசமும், வெல்லக்கட்டிகளும்தான் அதிகமாக விற்கப்பட்டன. அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் சந்தைநடுவிலேயே மனிதர்களை மண்டையால் முட்டி விலக்கி வழி உண்டுபண்ணிக்கொண்டு சென்றன.
ஒரு வணிகனுக்கு முன் பெரிய வெண்கற்களாக குவிக்கப்பட்டிருந்த உப்பை சிகண்டி கண்டான். காந்தாரத்தின் பாலையில் அவை தோண்டி எடுக்கப்படுகின்றன என்றான் வணிகன். சிலர் அவற்றை கோடரிகளால் வெட்டி சிறு துண்டுகளாக ஆக்கிக்கொண்டிருந்தனர். மண்பானைகளும் யானங்களும் மரத்தாலான கரண்டிகளும் விற்குமிடங்களில் எல்லாம் பெண்களே வாங்கிக்கொண்டிருந்தனர். ஆயுதங்கள் விற்கும் இடங்களில் மட்டும்தான் பெரிய மரவுரித் தலைப்பாகை அணிந்து பெரிய மீசைகளும் கனத்த தாடிகளும் கொண்ட ஆண்கள் தென்பட்டனர். கத்திகளை வீசிநோக்கியும் அம்புகளை கூர்நோக்கியும் வாங்கிக்கொண்டிருந்தனர். எண்ணியிராமல் இருவர் சிரித்துக்கொண்டு வாள்களை வீசி போர்செய்யத் தொடங்கினர்.
வணிகர்களிடம் விடைபெற்று சிகண்டி அரண்மனை நோக்கிச் சென்றான். அரண்மனை அருகே சென்றதும்தான் அது மண்ணால் கட்டப்பட்டதல்ல, மண்நிறமான மென்பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கட்டடம் என அவனுக்குப் புரிந்தது. வாயிற்காவலனிடம் அவன் தன் கச்சையில் இருந்து உத்தரபாஞ்சாலத்தின் அரச இலச்சினையை எடுத்துக் காட்டியதும் அவன் தலைவணங்கினான். பால்ஹிகரைப் பார்க்கவேண்டும் என்று சிகண்டி சொன்னான். காவலர்கள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டு “அவரையா?”’ என்றனர். ஒருவீரன் “அவரை எப்படி தங்களுக்குத்தெரியும்?” என்றான். “சூதர்கதைகளில் அவரைப்பற்றி கேட்டிருக்கிறேன்.” அவர்களில் ஒருவன் “அவரைச் சந்திக்க எவரும் செல்வதில்லை” என்றான்.
“நான் அவரைப் பார்ப்பதற்காகவே வந்தேன்” என்றான் சிகண்டி. காவல்வீரன் “மன்னிக்கவும் வீரரே, அவர் எவரையும் சந்திக்க விரும்புவதில்லை” என்றான். “நான் அவரைப்பார்க்க பாஞ்சாலத்தில் இருந்து வந்திருப்பதாகச் சொல்லுங்கள்!” என்றான் சிகண்டி . வீரன் தலைவணங்கிவிட்டு உள்ளே சென்றான். சற்றுநேரம் கழித்து திரும்பி வந்து “மன்னிக்கவும். அவர் உகந்த நிலையில் இல்லை. அவர் தங்களை சந்தித்தால்கூட ஏதும் பேசமுடியாது” என்றான்.
சிகண்டி “என்னை அவரிடம் இட்டுச்செல்லமுடியுமா? நான் அவரிடம் ஓரிரு சொற்கள் பேசுகிறேன். என்னைச் சந்திக்க அவர் விரும்பவில்லை என்றால் திரும்பிவிடுகிறேன்” என்றான். காவல்வீரன் தயங்கிவிட்டு தன் தலைவனிடம் சென்று சொன்னான். நூற்றுவர்த் தலைவன் எழுந்து சிகண்டியிடம் வந்து மீண்டும் அனைத்தையும் விசாரித்தபின்பு “வீரரே சைப்யபுரியின் பிதாமகர் பால்ஹிகர் எவரையும் சந்திப்பதில்லை. ஆனால் நீங்கள் நெடுந்தொலைவில் இருந்து வந்திருக்கிறீர்கள். ஆகவே அனுமதிக்கிறேன்” என்றான்.
அவன் பின்னால் சிகண்டி நடந்தான். அந்தக் கட்டடம் படிகள் வழியாக மேலே எந்த அளவுக்குச் செல்கிறதோ அதேயளவுக்கு அடியிலும் இறங்குவதை அவன் வியப்புடன் கவனித்தான். களிமண்பாறையில் குடைந்த படிக்கட்டுகள் மடிந்து மடிந்து இறங்கிச் சென்றன. சுவரில் வெட்டப்பட்ட பிறைகளில் நெய்விளக்குகள் சுடரசையாமல் எரிந்துகொண்டிருந்தன. அவர்களின் காலடிஓசை கீழே எங்கோ எதிரொலித்து வேறு எவரோ இறங்கிச்செல்வதுபோலக் கேட்டது.
முதல் அடுக்கில் நிறைய அறைகள் ஒன்றில் இருந்து இன்னொன்றாகப் பிரிந்து சென்றன. அவற்றில் எல்லாம் வெளிச்சமும் மனிதர்களின் குரலும் இருந்தன. இரண்டாவது அடுக்கிலும் அதன் கீழே மூன்றாவது அடுக்கிலும் வெளிக்காற்று உள்ளே வரும் சாளரங்கள் இருப்பதை உணரமுடிந்தது. நான்காவது அடுக்கில் காற்று மூன்றாவது அடுக்கிலிருந்து இறங்கித்தான் வரவேண்டியிருந்தது. மெல்லிய தூசியின் வாசனை காற்றில் இருந்தது. அசையாத காற்றில் மட்டுமே படியும் மென்புழுதி சுவர்களின் ஓரங்களில் படிந்திருந்ததை சிகண்டி கண்டான்.
முதல் மூன்று அடுக்கிலும் இருந்த செய்நேர்த்தி இல்லாமல் வளைபோல வட்டமாகவே அந்த இடைநாழி குடையப்பட்டிருந்தது. அறைகளின் வாயில்களும் வட்டமாக இருந்தன. அங்கே பாறையாலான சுவர்கள் கரடுமுரடாக கையில் தட்டுப்பட்டன. குறுகலான, ஒழுங்கற்ற படிகளில் சரியாக கால்வைக்கவில்லை என்றால் தவறிவிடும் என்று தோன்றியது. இடைநாழியில் ஓர் இடத்தில் மேலிருந்து கரும்பாறை நீட்டிக்கொண்டிருந்தது.
சிகண்டி மண்ணுக்குள் புதைந்துவிட்ட உணர்வை அடைந்தான். ஒருநகரமே தலைக்குமேல் இருப்பது எப்போதும் நினைவில் இருந்துகொண்டிருந்தது. நான்காம் அடுக்கில் அதிக அறைகள் இருக்கவில்லை. இடைநாழியில் இருந்து பிரிந்த உள்ளறை ஒன்றில் மட்டுமே விளக்கொளி தெரிந்தது. வீரன் சற்றுப் பின்னடைந்து “உள்ளே இருக்கிறார்” என்றான். “இங்கா?” என்றான் சிகண்டி. “ஆம், பிதாமகர் சென்ற இருபதாண்டுகாலமாக இந்த அறைக்குள்தான் வாழ்கிறார்” என்றான் தலைவன். “அவர் வெளியே செல்வதேயில்லை…”
“ஏன்?” என்றான் சிகண்டி. “அவருக்கு சூரிய ஒளி உகக்கவில்லை…” சிகண்டியின் கண்களைப் பார்த்துவிட்டு “அவர் உடல்நிலையில் சிக்கலேதும் இல்லை. அவருக்கு சூரிய ஒளி பிடிப்பதில்லை. இங்கே இருக்கும்போது மட்டுமே அமைதியை உணர்கிறார்” என்றான். “உள்ளே சென்று பேசுங்கள். அவரிடம் அதிகமாக எவரும் பேசுவதில்லை. அவர் எவரிடமும் பேசவிரும்புவதுமில்லை.”
சிகண்டி அந்த அறைக்குள் எட்டிப்பார்த்தான். சாளரங்களே இல்லாத அறை. நான்கு மூலைகளும் மழுங்கி வட்டமாக ஆன நீள்சதுர வடிவில் மண்நிறத்தில் இருந்த அவ்வறை தன் வெம்மையால் ஓர் இரைப்பைக்குள் இருப்பதுபோல உணரச்செய்தது. சுவருடன் சேர்த்து செதுக்கப்பட்டிருந்த கல்லால் ஆன மஞ்சத்தில் இரு கைமுட்டுகளையும் முழங்கால்மேல் வைத்து தலைகுனிந்து அமர்ந்திருந்த முதியவர் பேருடலுடன் பூதம்போலிருந்தார். அக்கணமே எழப்போகிறவர் போல இருந்தாலும் அவர் நெடுநேரமாக அமர்ந்திருப்பதுபோலவும் தோன்றியது.
சிகண்டி தொண்டையைக் கனைத்து ஒலி எழுப்பினான். அவர் அதைக் கேட்கவில்லை போலத் தெரிந்தது. மீண்டும் ஒலி எழுப்பியபின்பு “பிதாமகருக்கு வணக்கம்” என்றான். அவர் திரும்பி அவனைப்பார்த்தார். மனிதனைப் பார்க்கும் பாவனையே இல்லாத கண்கள். பின்பு எழுந்து கைகளை விரித்து தொங்கவிட்டுக்கொண்டு நின்றார். சிகண்டியின் தலைக்குமேல் அவரது தோள்கள் இருந்தன. இடையில் அணிந்திருந்த பழைய தோலாடை தவிர உடைகள் இல்லாத உடல். தலையிலும் முகத்திலும் எங்கும் முடியே இருக்கவில்லை. சுடாத களிமண்ணால் செய்யப்பட்ட வாயிற்பூதம் போலிருந்தார். செம்மண்நிறச் சருமம் முழுக்க உலர்ந்த களிமண்ணின் விரிசல்கள் போல தோல் சுருங்கிப்படர்ந்திருந்தது. கன்றுக்குட்டிபோல கழுத்தின் தசைகள் சுருங்கி தொங்கின.
அவனை குனிந்துபார்த்து “யார் நீ?” என்றார். அவன் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவனை தன் பெரிய விரல்களால் சுட்டி “உன்னை நான் முன்னரே பார்த்திருக்கிறேன்” என்றார். அவரது மிகப்பெரிய கைகள்தான் அவரது அனைத்து அசைவுகளையும் விசித்திரமானவையாக ஆக்கி அவரை மனிதரல்ல என நினைக்கச்செய்தன என்று சிகண்டி உணர்ந்தான். அக்கைகளை என்ன செய்வதென்றறியாதவர் போலிருந்தார். யானையின் துதிக்கை போல அவை துழாவிக்கொண்டே இருந்தன. ஒன்றுடன் ஒன்று பின்னிக்கொண்டன. புஜங்களில் ஓடிய பெரிய நரம்பு காட்டுமரத்தில் சுற்றிப்படிந்து கனத்த கொடிபோலத் தெரிந்தது.
சிகண்டி வணங்கி “பிதாமகரே, என் பெயர் சிகண்டி. நீங்கள் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. நான் இந்நகருக்கு இப்போதுதான் வருகிறேன்” என்றான். “இல்லை, நான் உன்னை பார்த்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார். அவரது குரல் யானையின் உறுமல்போல முழக்கம் கொண்டதாக இருந்தது. “எங்கே என்று சொல்லத் தெரியவில்லை… ஆனால் நான் உன்னைப் பார்த்திருக்கிறேன்.” சிகண்டி “நான் உத்தரபாஞ்சாலத்தில் இருந்து வருகிறேன்” என்றான்.
சிந்தனை முள்முனையில் தவிப்பதன் வலியை அவரது கண்களில் காணமுடிந்தது. “இல்லை… நீ… உன்னை எனக்குத்தெரியும்” என்றார். அவரது இமைகள் விரிந்தன. இமைகளிலும் முடியே இல்லை என்பதை சிகண்டி கவனித்தான். “ஆம், நான் உன்னை நேரில் பார்த்ததில்லை. ஆனால் வேறு எங்கோ பார்த்தேன். நீ…” பெரிய சுட்டுவிரலைக் காட்டி “உன் பெயர் என்ன சொன்னாய்?” என்றார். “சிகண்டி.” அவர் தலையை அசைத்து “கேள்விப்படாத பெயர்” என்றார். திரும்பி தன் மஞ்சத்துக்குச் செல்ல இரண்டடி வைத்தவர் நிலையற்றவராக திரும்பிவந்தார்.
கனத்த பெரிய கையால் வெற்றுத் தலையை நீவியபடி “ஆம்… நான் உன்னைப் பார்த்தேன்… ஒரு மாயக்காட்சியில் பார்த்தேன். நீ பீஷ்மனை கொல்லப்போகிறாய்” என்றார். மனக்கிளர்ச்சியுடன் கைகளை விரித்தபின் திரும்பிச் சென்று அந்த மஞ்சத்தில் போடப்பட்ட புலித்தோலில் அமர்ந்தபடி “ஆம்…நீதான்…என்னால் தெளிவாகவே உன்னை நினைவுகூரமுடிகிறது. இருபதாண்டுகளுக்கு முன் நான் உன்னைப்பார்த்தேன்” என்றார். “நீ பீஷ்மனின் கொலைகாரன்.”
=================
அத்திரி : கோவேறுகழுதை