காந்தி, கடிதங்கள்

 

அன்புள்ள ஜெ,

 

தொடர்ச்சியாக  ‘காந்தியும் தலித் அரசியலும்’ மற்றும் ‘காந்தி என்ற பனியா’  தொடர்களையும் படித்து முடித்தேன்.

 

காந்தி பற்றிய முற்றிலும் வேறொரு புரிதல் கிடைத்தது.இந்திய சுதந்திரப் போராட்டதையும் மீள் பார்க்க ஒரு வாய்ப்பு.

 

கல்வியும், அறிவும், செல்வமும் மறுக்கப்பட்ட பல்வேறு இனக்குழுக்களாகப் பிரிந்து சிதறிக் கிடந்த ஒரு தேசத்தின் மனசாட்சியைத் தூண்டி எழுப்பி ஒற்றை இனமாக ஒன்று திரட்டி , உலகின் வல்லமை வாய்ந்த பேரரசினை மண்டியிட வைக்க அந்த மாமனிதனுக்கு எத்தனை ஆன்ம பலம் இருந்திருக்க வேண்டும்.அந்த பலத்தின் கூறுகள் என்ன என்பதை மிக விரிவான ஆராய்ச்சி , தகவல்கள் மற்றும் தர்க்கங்கள் மூலம் முன்வைத்திருந்தீர்கள். அசுரத் தனமான தங்கள் உழைப்பு பிரமிப்பூட்டுவதாக இருந்தது. தமிழில் இதுபோலெல்லாம் ஒரு எழுத்தாளர் எழுதுவது கனவா, நனவா என்ற வியப்பைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கிறது.

 

காந்தி பற்றிய இந்த தொடர்கட்டுரைக்களுக்காக உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

 

அன்புடன்,

மதி

 

 

 

 

அன்புள்ள மதி

 

நன்றி

 

நான் காந்தியைப்பற்றி எழுதுவதற்காக இப்போது சிறப்பாக எதையும் வாசிக்கவோ ஆராய்ச்சி செய்யவோ இல்லை. எனக்கும் காந்தி பிற அனைவரையும் போல எதிர்மரையாகவே அறிமுகம் ஆனார். நானும் பிற எல்லாரையும்போல வன்முறையின் மீதுதான் நம்பிக்கை கொண்டிருந்தேன். பின்னர் மெல்லமெல்ல அந்த எண்ணத்தில் இருந்து வெளிவர எனக்கு என் ஆசிரியர்களாக வந்தவர்கள் உதவினார்கள். எம்.கோவிதன்,பி.கெ.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி, நித்ய சைதன்ய யதி…  நானே தேடி வாசித்து புரிந்து தெளிந்தவற்றையே எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஜெ

 

 

 

மதிப்பிற்குரிய திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

காந்தி தொடர்பான தங்களின் அங்கத கட்டுரையை படித்தேன்.  காந்தி தொடர் கட்டுரைகளுக்கு நடுவே அதனை படிக்கும்போது அங்கதம் புதுச்சுவையை தந்தது.

காந்தி இங்கிலாந்து மன்னரை சந்திக்க செல்லும் போது ஒரு பத்திரிக்கையாளர் அவரின் அரையாடையைப் பற்றி கிண்டலாக எழுப்பிய வினாவிற்கு உங்க ராசா எனக்கும் சேர்த்து ஆடையணிந்திருக்கிறார் என சொன்னதாக படித்திருக்கிறேன்.

ஆக, இந்த கட்டுரையை அவரும் இரசித்திருப்பார்.

அன்புடன்
josh

 

 

காந்தியின் அத்தனை புகைபப்டங்களிலும் தெரியும் ஒன்று உண்டு, அவர் எந்நிலையிலும் வாய்விட்டுச்சிரிக்ககூடியவர் என்பதுதான் அது. நித்ய சைதன்ய யதிக்கு காந்தியையும் ரமணரையும் நேரில் தெரியும். அவர் ஒரு பேட்டியில் சொன்னார் காதியும் ரமணரும் எல்லாம் மிக வேடிக்கையாக பேசக்கூடிய நகைச்சுவை நிறைந்த மனிதர்கள், நாம் நம்முடைய பக்தியால் அவர்களை அழுவாச்சிக்காரர்களாக ஆக்கிக்கொள்கிறோம் என

ஜெ

 

 

காந்தி கட்டுரைகளை அதிகமாக வாசித்து எதிர்வினையாற்றியவர்கள் கொங்குமண்டலத்தில்தான் அதிகம். இதற்கான பண்பாட்டுப்பின்புலம் என்ன என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்

 

காரணத்தை தேடித் தனியாக அலைய வேண்டியதில்லை. ஏதாவது ஊரில்  பிடிபடும்
கொலை காரர்களையோ , கூலிப் படையினரையோ , கொள்ளைக்காரர்களையோ எந்த ஊர் என்று விசாரித்துப பார்த்தால் அவர்கள் கொங்கு மண்டலத்துக்காரர்களாக இருக்க மாட்டார்கள்.( சாகித்ய அக்கடெமி விருதுகளை  வாங்கிக் குவித்த ஊர்க்காரர்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்) . உள்ளத்தில் இருக்கும் அன்பு வழி நடத்துவதால் வன்முறை குறைவான வாழ்வு சாத்தியமாகியிருக்கிறது.

 

சமணம்  கர்நாடகம் வழி பரவி நிலை பெற்ற இடம் கொங்கு மண்டலம். சமணத் தாக்கமும் வெற்றிகரமான வணிகத்துக்கும் அறவழிக்கும் காரணமாக இருக்கலாம்.

 

பூபதி
சார்ஜா

 

 

அன்புள்ள பூபதி

 

இருக்கலாம். ஆனால் பொதுவாக கல்விக்கும் குற்றச்செயல்களுக்கும் நேரடித்தொடர்பு ஏதும் இல்லை. கல்வி கற்றவன் கொன்சம் சிறப்பான கவனம் எடுத்து குற்றம்செய்வான்

 

கொங்குமண்டலத்தின் சமணமும் வணிகமும்தான் காரணமெ ந்று நீங்கள் சொன்னது நல்ல ஊகம்

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

காந்திஅடிகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலார் சொன்னது போல் நமக்குமட்டுமல்லாது வரும் சந்ததிக்கும் யோசிக்க வாய்ப்பளிக்கும் !! நன்றி !!!!

நீங்கள் சொல்லும்  நல்ல இலக்கியத்தைப் போல, காந்தியும், அவரைப்பற்றிய செய்திகளும்,  ஒவ்வொருமுறையும் புதிய பரிமாணத்தை காட்டுகின்றன என்றே தோன்றுகிறது !!

உங்களின் “காந்தி அல்லது வெற்றிகரமாக சுடப்படுவது எப்படி ?” என்ற நகைச்சுவை கட்டுரை காந்தி தொடருக்கு நல்லதொரு பின் தொடர்வாக இருந்தது !! (நகைச்சுவை-என்று நீங்கள் எழுதாத காரணத்தால் கட்டுரையை 5-ம் வகுப்பு வரலாறு பாடதிட்டத்தில் சேர்க்கும் அபாயம் உள்ளது !!)

சமீப காலத்தில் காந்தி அவர் பிறந்த, இறந்த நாட்களில் மட்டுமன்றி் நோபல் அமைதி பரிசு அறிவிக்கும் நாட்களிளும் நினைவுகூறபடுகிறார் என்பதை கவனிதிருப்பீர்கள் என நினைக்கிறேன் !!.

அன்புடன்

வெ கண்ணன்
பெங்களூர்

 

அன்புள்ள கண்ணன்,

 

சென்ற நூற்றாண்டைச்சேர்ந்த உலக சிந்தனையாளர்களில் இன்று மிகமிக விவாதிக்கபப்டும் இருவர் மார்க்ஸும் காந்தியுமே. மார்க்ஸியம் ஓர் அக்காடமிக் விளையாட்டாகச் சுருங்கிப்போய்க்கொன்டிருக்கிறது. ஆனால் காந்தி மேலும் உயிர்த்துடிப்புடன் மேலெழுந்துவந்துகொண்டே இருக்கிறார். அவர் சிந்தனையாளார் அல்ல, சிந்தனைகளை உருவாக்கும் தரிசனத்தை உருவாகியவர்

ஜெ

 

அன்புள்ள ஜெ.,

எதைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம் என்ற உரிமை நம்க்கு அளிக்கப்பட்டிருப்பதால், இதைப் பற்றியும் சொல்லி விடுகிறேன:

1. கொங்கு மண்டலம் இன்னும் தேசியக்கட்சிகளின் ஆதிக்கத்தில் உள்ளது
2. அங்கே பணம் அதிகம்; படித்தவர்கள் அதிகம்; இணையத்தைப் படிப்பவர்கள் அதிகம்
3. இயல்பாகவே அழகான ஊர் அது; இத்தோடு மரியாதை தெரிந்த ஊர்; ஆகவே மக்கள் தங்கள் ஊரை அதிகம் நேசிக்கின்றனர். தன் ஊரை அதிகம் நேசிப்பவன் தன் நாட்டையும் அதிகம் நேசிக்கு வாய்ப்புகள் அதிகம்.
4. நாட்டை அதிகம் நேசிப்பவன் காந்தியை விரும்ப முடியும் இல்லையேல் வெறுக்க முடியும்; புறக்கணிக்க முடியாது.
5. இந்து முஸ்லீம் பிரச்னை ஒப்பு நோக்க அங்கு அதிகம்; மதத்தை நேசிப்பவனுகும் மேலே சொன்ன வரி பொருந்தும் என்று நினைக்கிறேன்.

நன்றி
ரத்தன்

 

அன்புள்ள ரத்தன்,

 

பொதுவாக எல்லா ஊகங்களும் பொருத்தமானவையே. அவற்றில் ஏதேனும் ஒன்றிரண்டு சரியாக இருக்கும். சுதந்திரப்போராட்ட காலத்திலேயே காந்தி அதிகம் வந்தது கொங்குமண்டலத்துக்கே. நாமக்கல் கவிஞர் முதல் சித்பவானந்தர் வரை பல காந்தியவாதிகள்…திருச்செங்கோடு ஆசிரமம்…

ஜெ

 

 

ஜெயமோகன் அவர்களுக்கு, உங்கள் புனைவுகளில் அறிவின் அதிகாரம் பற்றி , கருத்தியலின் மறுபக்கம் பற்றி எழுதியிருக்கிறீர்கள்.ரப்பர் நாவல் , படுகை சிறுகதை போன்றவைகளில் சுற்றுச்சுழல் பற்றி எழுதுகிறீர்கள். கட்டுரைகள் காந்தி , காந்திய சிந்தனைகள் குறித்து , சுற்றுச்சுழல் குறித்து இருக்கின்றன.உங்கள் எழுத்துக்கு அப்துல் கலாமிடம் விருது பெறுகிறீர்கள்.நீங்கள் காந்தி பற்றி ஏதேனும் சொல்கிறீர்களென்றால் அதன் எதிர் திசையில் அப்துல் கலாம் இருக்கிறார். நன்றி,

 

சர்வோத்தமன்.

 

அன்புள்ள சர்வோத்தமன்

 

காந்தி சொன்னவற்றுக்கு நேர் எதிர்திசையில் கொஞ்சதூரமேனும் செல்லாத எஅருமே நம்மிடையே இல்லை. மற்றபடி கலாம் காந்தி சொன்னவற்றுக்கு நேர் எதிரானவர் என்பதை நீங்கள் சொல்லி தெரிந்துகொண்டேன், யாராவது மேலே சொல்வதற்காக காத்திருக்கிறேன்

ஜெ

 

வணக்கம் குரு.,

 

ஏன் தங்களை சீரியஸாகவே அனுகுகிறார்கள் என தெரியவில்லை.! காந்தி பற்றிய அங்கத கட்டுரையை நான் மிகவும் ரசித்தேன்., நீங்கள் இவ்வாறு செய்யாவிடில் தான் ஆச்சர்யம்.,

காந்தி பற்றிய கட்டுரை.,அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் தீவிர வெளிப்பாடு என்பதை உங்கள் அங்கத கட்டுரையை வைத்தே மதிப்பிட முடியும் அல்லவா?

 

எதைக்கண்டு சிரிக்க முடியவில்லையோ அதனுடன் நமக்கு உறவும் இல்லை அல்லவா?

“அறிவாளி எப்போது தோற்கிறான்? முட்டாள்களிடம் விவாதிக்கும் போது”..!! எவ்வளாவு மிகச்சரியான மேற்கோள்..!

 

பணிவன்புடன்.

மகிழவன்

 

 

அன்புள்ள மகிழவன்

 

தமிழகத்தில் பெரும்பாலானவ்ர்கள் கிண்டலை ஒஉவகை விமரிசனமாகவே கையாள்கிறார்கள். ஆகவே கிண்டல்செய்வதென்பது எப்போது எதிர்ம்றையாகவே காணப்படுகிறது. அதைத்தாண்டிய மனநிலை என்பது பழக்கம் மூலம் உருவாவதே

ஜெ

 

 

அன்புள்ள ஜெமோ,
க்விட் இண்டியா (வெள்ளையனே வெளியேறு) இயக்கம் இறுதியில்
வன்முறையால் பீடிக்கப்பட்டதும் அது தொடர்பாக காந்தியின் உணர்வுகளையும்
பற்றி சிறிது எழுதினால் நன்றாக இருக்கும். அண்மையில் நான் பார்த்த
லெஜெண்ட் ஆஃப் சுபாஷ் சந்திர போஸ் படத்தில் பார்த்த மாலுமிகள் கலகம்
குறித்தும் சில விரிவான விஷயங்கள் ஏதேனும் எழுத முடியுமா? இவை
குறித்து நான் வரலாற்று பாட நூல்களில் அதிகமாக படித்ததில்லை.
தாங்கள் எழுதிய பகடி மிக இரசனை பொருந்தியதாகவும் தங்களின் ஏழு
பகுதிக்கட்டுரைகளின் எளிய வெளிப்பாடாகவும் மிகவும் குறிப்பாக
சிரிப்பை உண்டாகுவதாகவும் இருந்தது.
வாழ்த்துக்கள்!!
தீர்த்தங்காரர்கள் குறித்தும் நாம் இன்று மறந்து விட்ட ‘சீவக சிந்தாமணி’ போன்ற
சமணம் அளித்த கொடைகள் பற்றியும் எழுதவும்.

நன்றி,
ஜெய்கணேஷ்.

 

 

அன்புள்ள ஜெய்கணேஷ்

நான் வரலாற்றாசிரியன் அல்ல. என் முதற்கவனம் வரலாற்றிலும் அல்ல. நான் வரலாற்றை வாசிப்பது விழுமியங்களுக்காகவே. காந்திய விழுமியங்களாஇப்பேசுவதற்காகவே காந்திய வரலாற்றையும் பேசுகிறேன்

நாம் பள்ளியில் வாசிக்கும் வரலாற்றில் இல்லாத ஒன்று விழுமியம். ஆகவேதான் அது தேவையாகிறது

ஜெ

 

 

 

 

  • காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]
  • காந்தி,அம்பேத்கார், கடிதங்கள்
  • அ.மார்க்ஸ்,காந்தி
  • காந்தி கடிதங்கள்
  • எழுத்
  • காந்தியும் தலித் அரசியலும் 7
  • காந்தி கடிதங்கள்
  • காந்தியும் தலித் அரசியலும் 6
  • காந்தியும் தலித் அரசியலும் 3
  • காந்தியும் தலித் அரசியலும் 2
  • காந்தி கடிதங்கள்
  • காந்தியும் தலித் அரசியலும் 5 காந்தியும் தலித் அரசியலும் 4
  • காந்தியும் தலித் அரசியலும் 1
  • காந்தி புதிய கடிதங்கள்
  • காந்தி புதிய கடிதங்கள்
  • மோகன் தாஸும் மகாத்மாவும்
  • காந்திய மருத்துவம்

  • காந்தி இன்னும் கடிதங்கள்
  • காந்தி மேலும் கடிதங்கள்
  • காந்தியும் தொழில்நுட்பமும்
  • காந்தியும் சாதியும்
  • காந்தியும் இந்தியும்
  • லாரி பேக்கர்
  •  

  • முந்தைய கட்டுரைகடிதங்கள்
    அடுத்த கட்டுரைஞானம்