அன்புள்ள ஜெயமோகன்,
நீங்கள் பூப்பாறைக்கு சென்ற செய்தி அறிந்து மகிழ்ந்தேன். நான் அலைந்து திரிந்த இடம் அது. என்னுடைய இளைமைக்காலத்தின் மறக்க முடியாத நினைவுகளின் ஒருபகுதியாக பூப்பாறையையும், அதனைச் சுற்றியிருக்கும் சாந்தாம்பாறை, கஜனாப்பாறை போன்ற இடங்களைச் சொல்லலாம். இன்றும் ஏலத்தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் பணி செய்யும் என்னுடைய சொந்தக்காரர்கள் ஏராளமானவர்கள் அங்கு உண்டு. எனக்கே கூட இரண்டு ஏக்கரில் கொஞ்சம் ஏலத்தோட்டம் பத்தாண்டுகளுக்கு முன்புவரை கூட அங்கு இருந்தது. கவனிக்க இயலாததால் பெரும் நட்டத்திற்கு விற்று விட்டேன்.
நான் கண்டு வளர்ந்த பூப்பாறையில் நான்கே நான்கு கடைகள்தான் இருக்கும். இரண்டு டீக்கடைகள், இரண்டு பெட்டிக்கடைகள். அவ்வளவுதான். தோட்டவேலையிலிருந்து திரும்பியபின் ஆண்கள் கூடும் இடமாக மட்டுமே இருந்தது. நிறைய காடுகளும், யானைகளும் இருந்தன. எனது உறவினர்களில் குறைந்தது ஒன்றிரண்டு பேர்களாவது ஒவ்வொரு வருடமும் யானை மிதித்து இறந்து போவார்கள். இன்றைய பூப்பாறை எனக்கு அடையாளமே தெரியவில்லை. ஏகப்பட்ட கூட்டமும், நெரிசலுமாக மாறிவிட்டது.
காலத்திற்கேற்ப பூப்பாறையும் மாறிவிட்டது. ஏக்கமான நினைவுகள்தான் இன்றைக்கு மிச்சம். உலக இயல்பே அதுதானே?
அன்புடன்,
நரேந்திரன்.
***
அன்புள்ள நரேந்திரன்
பூப்பாறை பெரும்பாலும் மாறவில்லை. கொஞ்சம் சுற்றுலா தவிர. எஸ்டேட் தொழில் கிட்டத்தட்ட நசித்துவிட்டது. வேலைசெய்ய ஆளில்லை என்பதனால்
ஜெ
***
ஜெ,
பூப்பாறை என்ற பெயரை கண்டேன். அழகான பெயர். அந்தப்பெயரைப் போட்ட அந்த மூதாதையை வணங்குகிறேன்
லட்சுமணன்