கடிதங்கள்

வணக்கம் சார்,

வரும் ஜனவரியில் சென்னை புத்தக விழாவின் போது, உங்களின் புதிய
புத்தகங்கள் வரும் என எதிர்ப்பார்கிறேன். போன முறை போல் இல்லாமல் இம்முறை
புத்தகங்கள் அனைத்தும் முதல் நாளில்லிருந்தே கிடைக்க பெற்றால் செளகர்யமா
இருக்கும். அப்படியே புத்தகங்களின் பட்டியலையும் உங்கள் வலைமனையில்
அறிவிக்கவும்.

உங்களின் பெரும்பாலான கட்டுரைகளை படிக்கிறேன், என்னை கவர்ந்து உங்களின்
அனுபவ கட்டுரைகளும், நகைச்சுவையும்.

”வாழ்விலே ஒரு முறை.”  தொகுப்பில் ‘ கடைசி வரை’ என்ற கட்டுரை என்னை
முதன்முதலில் மிகவும் பாதித்த கட்டுரை, அதன் பிறகு நிறைய…

அன்புடன்
முகமத்

அன்புள்ள முகம்மத்

இவ்வருட புத்தகக் கண்காட்சிக்கு பல நூல்கள் வரும் என நினைக்கிறேன். ஆனால் அதெல்லாம் பதிப்பகத்தாரின் வசதியைச் சார்ந்தது. முக்கியமாக பணவசதி. கடைசி நிமிஷத்தில்தான் சொல்ல முடியும்.

புத்தகங்களை மெய்ப்பு நோக்கி சரிசெய்து கொடுப்பது இங்கே எழுத்தாளனின் பணியாகக் கருதப்படுகிறது. அது ஒரு பெரிய சள்ளைபிடித்த வேலை. அதைத்தான் பாதிநேரம்செய்துகொண்டிருக்கிறேன்
ஜெ

 

 

அன்புள்ள ஐயா வணக்கம்
களப்பிரர் பற்றிய தங்கள் பார்வை சரிதான்.
மயிலை.சீனி.வேங்கடசாமியின் களப்பிரர்கள் குறித்த நூல் மிகச்சிறந்த நூல்.
அதன் வருகைக்குப் பிறகே தமிழ் உலகில் புதிய பார்வை உண்டானது.
அன்புள்ள
மு.இளங்கோவன்

 

 

புதுச்சேரி

அன்புள்ள இளங்கோவன்

களப்பிரரைப்பற்றிய ஆய்வுகளை நாட்ட்டாரியல் மானுடவியல் துறைகளின் உதவியுடன் மேற்கொண்டுசெய்தால்தான் உண்டு. அவையும் இந்திய அளவில் நடந்தாகவேன்டும். இலக்கியத்தையே ஆராய்ந்துகொண்டிருப்பதனால் பயனில்லை. அது ஏதும் நடக்கிறமாதிரி தெரியவில்லை

ஜெ

 

 

நான் மிகவும் ரசித்த வரி..

“கடைகள் தோறும் சென்று எங்களுக்கு எவையெல்லாம் தேவையில்லாமலிருக்கின்றன என்பதைக் கண்டு குதூகலம் அடைந்தோம்.”

அருமை ஜெயமோகன்..!!

Print Out எடுத்து சுவற்றில் ஒட்டி வைத்துள்ளேன்.. ஒவ்வொரு முறை Shopping செல்லும்போதும் ஒருமுறை நோக்க

ராஜீவ்

அன்புள்ள ராஜீவ்,

அது குறள்தான்

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

ஜெ

 

 

அன்புள்ள ஜயமோகன்

நீங்கள் சொல்லும் “ஆனால் ஒரு உண்மைச்சம்பவம் போல திராவிடர் கழக பேச்சுகளில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” என்பது இன்னொரு அயராத, ஆதாரமற்ற தி.க. பிரசாரத்தை நினைவு படுத்துகிரது.

ராஜாஜி 1954 வாக்கில் 6,000 பள்ளிக் கூடங்களை மூடிவிட்டார் என்பதை, கடந்த 15 வருடங்களாக திராவிட கழகத்தினை தம்பட்டம் அடித்துக் கொண்டு வருகின்றனர். 6,000 பள்ளீக் கூடங்களை மூடுவது என்பது பெரிய விஷயம், அப்படி நடந்திருந்தால் அதை ஏன் 40 ஆண்டுகள் கழித்துதான் அது திராவிட கழகத்தினருக்கு மட்டும்தான்  “தெரிய வந்தது” என்பது ஆச்சரியமாக உள்ளது. இணையத்திலும், விகிபீடியா போன்ற ஊடகங்களிலும் திருப்பி, திருப்பி இதே குற்றச்சாட்டை ராஜாஜி மீது வைக்கின்றனர்.(http://en.wikipedia.org/wiki/Kula_Kalvi_Thittam) . இந்த கட்டுரைகளின் “ஆதார” சுட்டிகளைப் பார்த்தால், அவை ஈவேரா துதி கட்டுரைகள். ஒரு அரசாங்கம் 6,000 பள்ளிக்கூடங்களை மூட உத்தரவு கொடுத்தால் அவை ஒரு அரசு ஆணை (ஜி.ஓ), மூலமாக இருக்கும், அக்கால பத்திரிகைகளில் அதைப் பற்றிய செய்திகள் வெளியி இருக்கும், இன்னும் பல அந்தக் கால ஆதாரங்கள் இருக்கும். இவை ஒன்று கூட இல்லை. ஆனால் எவ்வளவு கேட்டாலும் தி.க. பிரசாரகர்களிடமிருந்து ஈவேரா துதியைத் தவிர 6,000 பள்ளிக் கூடம் `மூடப்பட்டதற்கு` இது வரை ஒரு ஆதாரமும் பர்த்ததில்லை.

மதிப்புடன்

வன்பாக்கம் விஜயராகவன்

அன்புள்ள வன்பாக்கம் விஜயராகவன்

பொதுவாக இத்தகைய வரலாற்றுத்திரிபுகள் எங்கும் உள்ளதுதான். ஆனால் நவீன காலகட்டத்தில் கூடவே உண்மையான வரலாறும் கிடைத்துக்கொண்டிருக்கும். தமிழில் இந்த இரண்டாவது தரப்பு– உண்மை- தான் எப்போதும் பலவீனமாக இருக்கிறது

ஜெ

 

 

நீங்கள் நிறைய புத்தகங்களை சொல்கிறீர்கள். படிக்க வேண்டும் என்றுஆவல்தான். ஆனால் இதெல்லாம் எங்கே கிடைக்கிறது?நீங்கள் ஏதாவது பதிவுஎழுதினால்தான் ஆவல் உள்ள, ஆனால் எங்கே தேடுவது என்றே தெரியாத என்போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும். முன் எப்போதோ சொன்ன மாதிரி எனக்குஜே.சி. குமரப்பா பேர் மட்டுமே தெரியும். எ.கா. பெருமாள் பற்றி நீங்கள்சொன்னால்தான் தெரிகிறது.  வேதசகாயகுமார் புதுமைப்பித்தன் கதைகளை தேடிக்கண்டுபிடித்தார் என்று மட்டுமே தெரியும். அவர் எழுதி நான் வாசித்த முதல்எழுத்து நீங்கள் சுட்டிய கால்டுவெல் பற்றியதுதான்

நீங்கள் உங்கள் வரலாற்று புத்தகங்கள் பதிவு மாதிரி அவ்வப்போது எழுதினால்மிக நன்றாக இருக்கும். புத்தகங்கள் பற்றியும், எங்கே கிடைக்கும் என்பது பற்றியும், இணையத்தில் கிடைக்கும் சுட்டிகளை பற்றியும் விவரங்கள் தெரிய
வரும். உங்கள் மீது பாரத்தை சுமத்துகிறேன் என்று தெரிகிறது. வேறு யாரும்பாரத்தை சுமக்கும் தகுதி உள்ளவர்களாக தெரியவில்லையே!

அன்புடன்
ஆர்வி

 

அன்புள்ள ஆர்வி,

நான் கூடுமானவரை புத்தகத்தை பதிப்பகத்தாரின் பெயருடன் குறிப்பிடுகிறேன். கூடுமானவரை தமிழ் புத்தகங்களைக் குறிப்பிடுகிறேன். தமிழில் நூல்களை சொல்லி தேடித்தான் வாங்கவேண்டும். அதேசமயம்  கடந்த பத்தான்டுகளில் புத்த்கங்களை நெருங்குவது மிகமிக எளியதாகியிருக்கிறது. முன்பெல்லாம் நண்பர்களிடம் சொல்லி தேடி கண்டுபிடிக்கவேன்டும் –பலசமயம் நம் சொந்த நூல்களையே தேடவேண்டி வரும். நான் மண் புத்தகத்தை ஒருவருடம் தேடவேண்டியிருந்தது

சுந்தர ராமசாமி சொல்வார் ஒரு புத்தகத்தை நாம் வாசிக்க விரும்பினால் அது நம்மை தேடிவந்துவிடும் என
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

நான் நீலகண்ட பிரம்மசாரியை சந்தித்திருக்கிறேன். அவரிடம் எட்டுமணிநேரத்துக்குமேலாக  உரையாடியும் இருக்கிறேன். நாங்கள் சென்னையில் இருந்து பம்பாய்க்கு சேர்து பயணம்செய்தோம். அவர் புனேயில் இறங்கிக்கொண்டார் . அப்போது அவர் சுவாமி ஓம்கார் என்று அறியப்பட்டார்
நரசய்யா

 

அன்புள்ள நரசய்யா அவர்களுக்கு

நீலகண்ட பிரம்மசாரி சுவாமி ஓம்கார் என்றபேரில் துறவறம் பூண்டு கர்நாடகத்தில் மைசூர் அருகே நெடுங்காலம் வாழ்ந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். கடைசியில் அவர் தாந்த்ரீகராக இருந்தார் என்கிறார்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

எஸ்.ராமகிருஷ்ணன் எழுந்திய இந்த பத்தியை கொஞ்சநாள்முன்னால் படித்தேன். ஆஷ் துரை செங்கோட்டை அக்ரகாரத்துக்குள் எல்லாரும் போய்வரலாம் என்று சொன்னமைகககக் கொல்லப்பட்டான் என்று அவரும் எழுதியிருக்கிறாரே

http://www.tamiloviam.com/atcharam/printpage.asp?ID=20&fldrID=1

சிவராமன்

அன்புள்ள சிவராமன்,

அதற்கு தெளிவான ஆதாரங்கள் அளிக்கப்படும் வரை அது ஒரு பிரச்சாரம் மட்டுமே

ஏனென்றால் இந்தியாவின் எல்லா அக்ரகாரங்களும் சாதிவிலக்குகளுடன் தான் இருந்தன — காந்தியின் கரிஜன இயக்கம் வரும் வரை. இந்திய சமூக ஆசாரங்களில் தலையிடக்கூடாது  என்பதே வெள்ளையர்களின் அதிகாரபூர்வமான கொள்கையாக இருந்தது

அக்ரகாரங்கள் மட்டுமல்ல கிறித்தவதேவாலயங்களிலும் தீட்டும் தீண்டாமையும் நிலவியது– பார்க்க ஆ.சிவசுப்ரமனியத்தின் ‘கிறித்தவமும் சாதியும்’

ஆக ஆஷ் துரை செங்கோட்டையில் மட்டும் சீர்திருத்தம்செய்தார் என்பதற்கு காரணம் ஏதும் இல்லை — வாஞ்சி தன்னை கொல்லவேன்டும் என்பதற்காகவே செய்தார் என்று வேண்டுமானால் வாதிடலாம்

திருநெல்வேலிக்கிளர்ச்சி என்ற பேரில் ஒரு ‘மாபெரும்’ ஆயுதப்போராட்டம் நெல்லையில் திட்டமிடப்பட்டது. அது அழிக்கப்பட்டது. அதற்கு அளிக்கப்பட்ட பலவீனமான பதிலே ஆஷ் துறை கொலை.

எஸ்.ராமகிருஷ்ணன் இக்கட்டுரையை எழுதும்போதே இப்பிரச்சாரத்துக்கு மறுப்பாகவும் விளக்கமாகவும் இடதுசாரி வரலாற்றாசிரியரான ஆ.சிவசுப்ரமணியன் எழுதிய ஆதாரபூர்வமான நூல் வெளிவந்துவிட்டது. அதைப்பற்றிய தகவல் இல்லாமல் செவிவழிச்செய்தியை வைத்து எழுதியிருக்கிறார். இது தமிழ் எழுத்தாளர்கள் பொதுவாகச் செய்வதுதான்.

அவரது அக்கட்டுரையிலேயே நீலகண்டபிரம்மசாரி ஆசாரங்களுக்கு எதிரானவர் என்கிறார். அவர்தான் ஆஷ் துரையின் கொலையில் முக்கிய பின்னனிச்சக்தி

ஆஷ் துரைக்கொலையையும் அதன் பின்னால் உள்ள பயங்கரவாத இயக்கத்தையும் சார்ந்தவர்கள் சாதி மதப்பற்று கொண்டவர்கள். ஆனால் ஆசாரவாதிகள்  அல்ல. அவர்களுடன் பலசாதியைச்சேர்ந்தவர்கள் இருந்தார்கள்.

இந்திய அரசியலில் இந்து மதப்பற்றும் இந்திய தேசபக்தியும் இணைந்தே இருந்தன– காந்தி வரும் வரை. அதுவே நம் தேசிய உருவகத்தின் முதல் வடிவம். பாரதமாதா பற்று. பாரதமாதா என்ற தெய்வத்தை வணங்காதவராக இருந்தவர் காந்தியே. அவர் நவீனமானவர்

ஜெ

 

மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்

கிறித்துவம், இந்து மரபு

கிறித்தவ தசரா;கடிதங்கள்

வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி

கிறித்தவ விஜயதசமி

காந்தி [அல்லது வெற்றிகரமாகச் சுடப்படுவது எப்படி?]

களப்பிரர்

முந்தைய கட்டுரைகதையின் காணப்படாத பக்கங்கள்,லோகிததாஸ்
அடுத்த கட்டுரைகாந்தி, கடிதங்கள்