இந்துமதம் அழிகிறது என்ற கூச்சலுக்கு இனிமேல் இடமே இல்லை. நவீன அறிவியல் இந்துமதத்தின் அர்த்தங்களை உலகுக்கு புட்டுப்புட்டு வைக்க ஆரம்பித்துவிட்டிருக்கிறது. சமீபத்தில் நண்பர் அனுப்பிய இந்த அறிவிப்பு எனக்கு அளித்த கொஞ்சம் திகைப்பூண்டு வாசனை கலந்த புளகாங்கிதம், புல்லரிப்பு ஆகியவை சாதாரணமானவை அல்ல. சனீஸ்வர யந்திரத்தை நாசா புகைபப்டம் எடுத்திருப்பது வரலாற்றின் ஒரு திருப்புமுனை என்பதில் ஐயமில்லை. சுதர்சன சக்கரத்தையும் எடுத்திருப்பதாகவும் வைகுண்ட ஏகாதசிக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்!
உடனடியாக நாசா செய்யவேண்டியது என்னவென்றால் விண்வெளியில் மாபெரும் தொலைநோக்கிகளை அமைப்பதுதான். மேற்படி சனீஸ்வரர் மற்ற கோள்களை எப்போது பார்க்கிறார் என்பதை உடனடியாக விண்வெளியிலேயே கண்டுபிடித்து அதனை நாம் விரும்பியபடி மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக சனியின் பார்வை புதனை சென்று படாமலிருக்க நடுவே ஒரு சுவர் கட்டமுடியுமா என்பதை நாஸா யோசிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு திரை. அல்லது ஒரு சக்திவாய்ந்த லென்ஸ் மூலம் பார்வையை கோணலாக்கி வேறெங்காவது பார்க்கச்செய்யலாம்.
நாசா அடுத்த வருடம் ராகு கேது இரண்டையும் உரிய முறையில் புகைப்படம் எடுத்து காட்டவேண்டும் என்று விசுவஇந்துக்கள் சார்பாக இந்துவிசுவர்கள் கோரிக்கை விடுக்க வேண்டும். இப்போது நாம் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குவதனால் செயற்கைக்கோள் ஒன்றை மேலே பறக்கவிட்டு அதிலிருந்து ராகுவுக்கும் கேதுவுக்கும் பால் அபிஷேகம் செய்யலாம். விண்வெளியில் பால் திரிவதில்லை என்று வராகமிகிரர் சனகரிடம் கிமு நாலாயிரத்து அறுநூறாம் நூற்றாண்டிலேயே சொல்லியிருப்பதை இங்கே நினைவூட்டுகிறோம்.