கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் – அரவிந்தன் நீலகண்டன்

பேராசிரியர் அ.கா.பெருமாளின் ‘தெய்வங்கள் முளைக்கும் நிலம் ‘ நூலின் முகப்பில் ‘நகர் நடுவே நடுக்காடு ‘ எனும் கட்டுரையை எழுத்தாளர் திரு.ஜெயமோகன் எழுதியுள்ளார். இது திண்ணையிலும் வெளிவந்தது. இக்கட்டுரையில் ஜெயமோகன் பேராசிரியர்.கோசாம்பியின் ‘மக்களிடையே புழங்கும் ஐதீகங்களைத் திரட்டி அவற்றுக்கு குறியீட்டு ரீதியான விளக்கம் அளித்து வரலாற்றை அறிதல் ‘ மற்றும் ‘மானுடவியல் ரீதியிலான பார்வை ‘ எனும் முறைகளை சிலாகிக்கிறார்.(பக். 11) பின்னர் நாட்டாரியல் தகவல்களை மிக அதிகமாகப் பயன்படுத்திய முன்னோடி ஆசிரியர் என மிகச்சரியாகவே டி.டி.கோசாம்பியை பாராட்டும் அவர் கோசாம்பியின் பிரபலமான ‘ஐதீகமும் உண்மையும் ‘ எனும் நூலிலிருந்து ஒரு உதாரணத்தையும் அளிக்கிறார். ‘நிலையான வாழ்க்கை கொண்ட வேளாண் குடிகள் தாய் தெய்வங்களை வழிபட்டன. நிலையற்ற அலைச்சல் கொண்ட இடையர் குடிகள் எருமை (மகிஷம்) போன்ற தெய்வங்களை வழிபட்டன.நாட்டார் தெய்வ மரபில் ஒரு இடத்தில் மகிஷன் தேவியின் கணவனாக சித்தரிக்கப்பட்டிருப்பதைக் கோசாம்பி கண்டடைகிறார். இரு குலங்களும் நட்புறவு கொண்டதை அது காட்டுகிறது என்கிறார். பிறகு வேளாண்குலம் இடைக்குலத்தை வென்றதை மகிஷாசுரமர்த்தினி மகிஷனைக் கொல்லும் ஐதீகம் காட்டுகிறது என்கிறார். ‘ (பக். 12) நாட்டாரியல் தரவுகள் நம் வரலாற்றாசிரியர்களால் வேண்டிய அளவு அல்ல மிகக்குறைந்த அளவில் கூட சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான்.ஆனால் மார்க்சிய வரலாற்றாசிரியரான கோசாம்பி போன்றவர்களால் அது எவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட முடியும் என்பதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டினை துரதிர்ஷ்டவசமாக ஜெயமோகன் ஒரு ஆதர்ச எடுத்துக்காட்டாக முன்வைக்கிறார். பிரச்சனை என்ன ? அடிப்படை பார்வையே பிரச்சனைதான். ஜெயமோகனின் வார்த்தைகளில், ‘மக்கள் வாழ்ந்த முறை தெரிய வேண்டும். அவர்களுடைய பொருளியல் உற்பத்தி விநியோக முறைகள் மிக முக்கியமானவை. அவை குறித்த நேரடி தரவுகள் இல்லாத நிலையில் வரலாற்றை அறிய டி.டி.கோசாம்பி மக்களிடையே புழங்கும் ஐதீகங்களைத் திரட்டி அவற்றுக்கு குறியீட்டு ரீதியான ‘ விளக்கம் அளிக்கிறார். ஆக, ஐதீகங்களின் குறியீட்டு ரீதியான விளக்கம் என்பது உடனடியாகவே மிக முக்கியமான பொருளியல் உற்பத்தி விநியோக முறைகளை குறித்த தரவுகள் இல்லாத வெற்றிடத்தை நிரப்ப பயன்படுகின்றன. அதுவும் எத்தகைய பொருளியல் உற்பத்தி விநியோக முறைகள் ? ஆக கோசாம்பியின் பார்வையில் அவை மார்க்சிய சித்தாந்த பார்வை கூறும் வரலாற்று ரீதியிலான பொருளியல் உற்பத்தி விநியோக முறைகளன்றி வேறென்ன ? எனவே என்னாகிறதென்றால் சித்தாந்த ரீதியில் அகவயப்பட்ட ஒரு கருதுகோளுக்கு ஏற்றவாறு தரவுகள் சிதைக்கப்பட்டு முன்வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. மகிஷனும் தேவியும் இரு இனக்குழுக்களின் குறியீடுகளாகவும், மகிஷாசுரமர்த்தினி ஐதீகம் இனக்குழுக்களின் கலப்பினைக் காட்டுவதாகவும் அவர் முன்வைக்கும் பார்வைக்கு எந்த அளவு மகிஷாசுரமர்த்தினி குறித்த புராணம் குறுக்கப்பட்டு அதன் அனைத்து பரிமாணங்களிலிருந்தும் சிறியதாக்கப்பட வேண்டியுள்ளது. பாரத இடையர் குடிகள் குறித்த தரவுகள் எனில் ரிக் வேதத்திலிருந்தே தொடங்கலாம். அவை எவற்றிலும் மகிஷ தெய்வத்திற்கு சிறிய அளவில் கூட ஆதாரமில்லை. அவ்வாறே தமிழ்நாட்டு இலக்கியங்களிலும். ஒரு வேளை கிருஷ்ணன், தேவியின் சகோதரனாகியதைக் கூட இரு இனக்குழுக்களின் இணைப்பென்பதற்கு சான்றாக கூறலாம் ஆனால் மகிஷாசுரமர்த்தினி குறித்த புராணக்கதை ? பன்மை அதிகமாகக்கொண்ட பாரத தேசத்தில் பல கதைகள் உள்ளன. இதில் ஒரு கதையில் ஒருகுறிப்பிட்ட உறவுமுறை கூறப்படுவதை கொண்டு பல்லாயிரம் வருட பரிணாமம் கொண்ட ஐதீகங்கள் குறித்த வரலாற்று சித்திரத்தை கோசாம்பி தன் சித்தாந்த பார்வையில் உருவாக்க முயல்வது எத்தனை சரியானது ? ஒரு ஐதீகம் ஏறக்குறைய ஒரு உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி போல உருபெற்று இன்று நம் பொது பிரக்ஞையில் இடம் பெறுகிறது. உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியை உயிரியலாளர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் ? ஒரு ஒற்றை தொல்-உறை உயிரின தரவு கொண்டு , அதன் தளத்தையும் அத்தளத்தின் காலத்தையும் மற்றும் அவ்வுயிரினத்துடன் தொடர்புடைய பிற தரவுகள் அனைத்தையும் கணக்கில் எடுக்காமல், ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாற்றை ஒரு உயிரியலாளன் கூற முற்பட்டால் என்னவாகும் ? மகிடத்தை வெல்லும் பெண் உருவ வடிவங்கள் சிந்து சமவெளி நாகரிகத்திலேயே நமக்கு கிடைக்கின்றன. ‘வெற்றி வெல்போர்க்கொற்றவை ‘ குறித்து திருமுருகாற்றுப்படை கூறுகிறது. இந்த வெற்றி வெல் போர் மகிடனை வதைத்ததே என்பர். அக நானூறு அவள் காட்டுமறவர்களால் வழிபடு தெய்வம் என்பதை கூறுகிறது. (ஓங்கு புகழ் கான் அமர் செல்வி – அக:345:3-4) ‘பெருங்காட்டு கொற்றி ‘ என அவளை கலித்தொகை (89:8) கூறும். பின்னாளில் உருவாகி இன்று ஏறத்தாழ பாரதம் முழுவதும் மிகப்பிரபலாமாகியுள்ள மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரப் பாடல் வரிகள் வெளிப்படையாகவே பழம் தமிழ் இலக்கியங்களின் கொற்றவையின் சித்திகரிப்பின் சம்ஸ்கிருத மொழி பெயர்ப்பேயாகும். ‘விந்திய மலையின் உச்சியில் வாழ்பவள் ‘, (சைலஸுதே – மலைமகள்), ‘வெற்றி அருள் மகிஷாசுரமர்த்தினி சிவனின் துணைவியே மலைமகள் ‘ ‘துணிவான வேடுவர் பெண்டிரின் தெய்வம் ‘, ‘மலைமீதுள்ள வீடுகளில் வேடுவரோடு கூடி மலைமீது நடப்பவள் ‘, ‘வேடுவ பெண்டிருக்கு மன ஆனந்தம் அளிக்கும்படி விளையாடுபவள் ‘ என்றெல்லாம் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் கூறும். ‘கடவுள் வாகைத் துய்வீ ‘ எனும் பதிற்றுப்பத்து வரிக்கு ‘வெற்றி மடந்தையாகிய கடவுள் ‘ என்பார் பழைய உரைக்காரர். ‘வெற்றிக்கொற்றவை ‘ என்று கூறும் திருமுருகாற்றுப்படை(259). அதனை நச்சினார்க்கினியார் ‘வெற்றியை உலகிற்கு கொடுக்கும் வனதுர்க்கை ‘ என்பார். எருமை ஒரு தெய்வத்தின் பெயராக பழம் தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறதென்றால் அது யமன். கலித்தொகை இவனை எருமை என்றே கூறுகிறது (கலி. 101:25, 103:43) இந்திரனைக் காட்டிலும் யமனே சங்கப்பாடல்களில் அதிக அளவில் கூறப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் யமனோ எவ்விதத்திலும் இடையர் குல சிறப்புக்கடவுளாக கொள்ள தரவுகள் இல்லை. என்னகூற வந்தேன் என்றால், கொற்றவையில் தன் வேர்களைக் கொண்ட மகிஷாசுரமர்த்தினியை ஐரோப்பிய கருத்துருவாக்கமான ‘Fertility Goddess ‘ ஆக்குகிறார் கோசாம்பி. எனவே அவள் வேளாண் இனக்குழு தெய்வமாகிறாள். அனைத்து பெண் தெய்வங்களும் அடிப்படையில் தாய் தெய்வங்களாக உருவானவைதான் என நாம் நிறுவப்படாத பழைய மேற்கத்திய கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் கூட பிரச்சனை என்ன ? வேளாண் இனக்குழு தெய்வமாக அவள் இடையர் குலத்துடனான கலத்தலையும் வெற்றியையும் ஈட்டுகிறாளா அல்லது வேடுவ இனக்குழு தெய்வமாக அவள் இடையர் குலத்துடனான கலத்தலையும் வெற்றியையும் ஈட்டுகிறாளா ? ஒரு வேளை வேடுவ இனக்குழுவும் வேளாண் இனக்குழுவும் ஒன்றுதான் என நாம் கருத வேண்டுமா ? பொதுவாக வேடுவ நிலையிலிருந்து வேளாண் நிலைக்கு முந்நகராத வேடுவக்குழு முன்னகர்ந்த சமுதாயத்தின் அன்னை தெய்வத்தை தன்னுடன் எடுத்துக்கொண்டதா ? அல்லது வேளாண் சமுதாயம் தன் படையாக வேட்டுவ சமுதாயத்தினை பயன்படுத்தி இடையர் இனக்குழுவை வெற்றிக்கொண்டதை மகிஷாசுரமர்த்தினியின் புராணக்கதைகள் குறிப்பிடுகின்றனவா ? இவையெல்லாம் எத்தனை இழுக்கப்பட்ட செயற்கையாக உருவாக்கப்பட்ட வரலாற்று ஊகங்கள் என்பதை சொல்லவேண்டியதில்லை. இதற்கெல்லாம் எவ்வித வரலாற்று சான்றுகளும் இல்லை. பாரதத்தின் பல இனக்குழுக்கள் அவற்றின் தெய்வங்கள் அவற்றின் புராணங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த பல்லாயிர வருட பரிணாம வரலாற்றின் விளைவாக உருவானவை இன்றைய ஹிந்து புராணங்கள். அவை அனைத்து தள மக்களிடையேயும் இயங்கியவாறே உள்ளன. அனைத்து தள மக்களையும் பிணைத்து ஒன்றாக அதே நேரத்தில் முகமிழக்காமல் வேரறுந்து ஒற்றைப்பரிமாண மனக்கோளமொன்றில் அடைத்துவிடாமல் தனித்தன்மையுடன் முன்னகரும் உயிர்த்தன்மை கொண்டதாக அப்புராணங்கள் விளங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக ஜெயமோகனும் சரி கோசாம்பியும் சரி புராணங்களின் பன்மைச் செயல்பாடுகளை மறுதலித்து அவர்கள் மிக முக்கியமானதாக கருதும் பொருளியல் உற்பத்தி விநியோக முறைகளினை பிரதிபலிக்கும் தரவுகளாக பார்க்கின்றனர். இதில் திரு.ஜெயமோகனின் தரப்பு சிறிதே மாறுபடுகிறது. ஒரு தளத்தில் தனி மனித அகவயப்பாதையில் புராண மற்றும் தொன்ம படிமங்களின் வலியை நன்றாக உணர்ந்திருப்பவர் அவர். ஆனால் சமுதாய தளத்தில் மற்றெந்த முற்போக்கு அறிவுஜீவியையும் போல அவர் மார்க்சிய ‘அற ‘ உணர்வால் உந்தப்படுபவராக தன்னை தானே கருதிக்கொள்கிறார். ஆக, தான் புகுந்த வீடான மார்க்சியத்தில் தன் பிறந்த வீட்டு பாரம்பரியத்தை இணைக்க வேண்டிய உளவியல் தேவைக்காக அவர் மார்க்சியத்தையும் பாரதிய ஞான மரபையும் முடிச்சு போடும் நிலைபாடுகளை தேடுகிறார். ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும், கோவை ஞானியும், கோசாம்பியும் அவரது பிரச்சனையின் மிக அருகிய தீர்வாக அவருக்கு காட்சியளிக்கின்றனர். (ஆனால் ஹிந்துத்வ ‘பாசிஸ்டான ‘ எனக்கு தெரிவதென்னவோ அவர்களது ஸ்டாலினிஸ்டு சித்தாந்தங்களின் நிலைப்பாடுகள்தாம்.) துரதிர்ஷ்டவசமாக, அக்மார்க் இடதுசாரிகளோ இந்த அளவு பாரதியத்தையும் கூட ஏற்கத்தயாராயில்லை. ஏனெனில் ஜெயமோகன் இன்னமும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் முதல் குணங்குடி மஸ்தான் சாகிப் பாடல்கள் வரை உற்பத்தி உறவுமுறைகளில் ஆதிக்கசக்திகள் ஏற்படுத்திய அபினி அல்லது வரலாற்று முன்னேற்ற பாதைகளில் சீரழியும் தேக்கநிலை காண முயலும் கருவிகள் எனும் நிலைபாட்டிற்கு வரவில்லை என்பதே காரணமாம். ஆனால் அவர்கள் நம்பிக்கை தளர வேண்டியதில்லை- குறிப்பாக ‘இந்நகரம் மாற்றங்களை வெறுக்கிறது. எல்லா மாற்றங்களையும் அது ஐதீகமாக மாற்றி பழைமையில் இணைத்து விடும். ‘ என்று மார்க்ஸ் விஷ்ணுபுர வரிகளில் சேவை சாதிக்கும் போது.

கொற்றவை – ஒருகடிதம்

 

தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

கொற்றவை – ஒருகடிதம்

முந்தைய கட்டுரைஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள் – புதியமாதவி, மும்பை
அடுத்த கட்டுரைஇலக்கிய உரையாடல்கள் – நூல் அறிமுகம் பி.கெ.சிவகுமார்