பகுதி நான்கு : அணையாச்சிதை
[ 4 ]
‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’
இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே? விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே?
கங்காதேவியிடம் அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. கருமுதிர்ந்து குடவாயிலை தலையால் முட்டத் தொடங்கியதும் கங்காதேவி குடில்விட்டிறங்கி விலகிச் சென்றாள். பின்பு பதினெட்டுநாள் விலக்கு முடிந்து குளித்து புத்தம்புதியவளாக திரும்பி வந்தாள். ஒரு சொல் கூட குழந்தைகளைப்பற்றி சொல்லவில்லை. குழந்தைகள் எங்கோ உள்ளன என்று சந்தனு எண்ணிக்கொண்டார். அவளுக்களித்த வாக்கினால் அதைப்பற்றி ஏதும் கேட்கவில்லை.
கையால் தீண்டாத அக்குழந்தைகளை சந்தனு கற்பனையால் அணைத்துக்கொண்டார். அவற்றுக்குப் பெயர் சூட்டினார். நெஞ்சிலும் தோளிலும் தலையிலும் வைத்து வளர்த்தார். புரூரவஸும் ஆயுஷும் நகுஷனும் ஹஸ்தியும் குருவும் பிரதீபரும் அவனுள் முகம் கொண்டு, கண்மலர்ந்து, சிரிப்பு ஒளிர்ந்து வாழ்ந்தனர். அவருடைய பல்லாயிரம் முத்தங்களை அவர்கள் விண்ணுலகின் ஒளிமிக்க விதானத்தில் இருந்துகொண்டு குட்டிக்கைகளாலும் கால்களாலும் பட்டுக்கன்னங்களாலும் செல்லச்சிறுபண்டியாலும் இன்னும் இன்னும் என பெற்றுக்கொண்டனர்.
ஏழாவது குழந்தையை அவள் கருவுற்றிருந்தபோது ஒருநாள் கனவில் உசகனாக தன்னை உணர்ந்து எழுந்தபோது ஆறு குழந்தைகளும் என்ன ஆயின என்ற எண்ணம் வந்தது. அதை நூறுநூறாயிரம் முறை உள்ளூர கேட்டுக்கொண்டிருந்தவர் ஒருமுறையேனும் வாய்ச்சொல்லாக மாற்றிக்கொள்ளவில்லை. ஏழாவது குழந்தையுடன் அவள் செல்வதைக் கண்டதும் இருளில் அவள் பாதையை பின்தொடர்ந்து சென்றார். கங்காதேவி கங்கர்களின் ஊரை அடைந்ததும் அங்கே கூடியிருந்த அவள் குல மகளிர் குலவையொலியுடன் அவளை கூட்டிசென்றனர். குல மூதாதையருக்கும் பேற்றில் இறந்த பெண்களுக்கும் பலியிட்டு பூசை வைத்தபின்னர் கங்கைக்கரைக்குக் கொண்டுசென்று நீரில் இறக்கி விட்டனர்.
கங்கையின் குளிர்ந்த நீரில் இறங்கி மெல்ல நீந்திய கங்காதேவியைப் பார்த்தபடி கரையில் நின்ற பெண்கள் குலப்பாடல்களைப் பாடினர். அவள் ஈற்று நோவு வந்து நீரில் திளைத்தபோது பாடல் உரக்க ஒலித்தது. குழந்தை நீருக்குள்ளேயே பிறந்ததும் அதன் தொப்புள் கொடியை வெட்டிவிட்டு நீந்திக் கரைசேர்ந்தாள் கங்காதேவி. பெண்கள் நீரை நோக்கி கை நீட்டி நீந்தி வரும்படி குழந்தையை அழைத்தனர். தொலைவில் நின்ற சந்தனு மன்னர் ஓசையில்லாமல் கூவித் தவித்து நெஞ்சில் கரம் வைத்து விம்மினார். குழந்தை கங்கைநீரில் மூன்று சிறு கொப்புளங்களாக மாறி மறைந்தது.
பதினெட்டாம் நாள் புத்தாடையும் புதுமெருகுமாக அவள் வந்தபோது நாக்கின் கடைசி எல்லைவரை வந்த சொல்லை விழுங்கி சந்தனு திரும்பிக்கொண்டார். பின்னர் மீண்டும் அவளது காமத்தின் பொன்னிற இதழ்களுக்குள் விழுந்து எரியத்தொடங்கினார். எட்டாம் குழந்தை கருவுக்கு வந்தபோதுதான் மீண்டும் அவ்வெண்ணங்களை அடைந்தார். ஒவ்வொருநாளும் அவள் வயிற்றை நோக்கியபடி அக்கேள்வியை மனதுக்குள் நிகழ்த்திக்கொண்டார். பத்தாவது மாதம் நிறைவயிற்றுடன் அவள் இருக்கையில் அவள் வயிற்றில் இருந்து விலகாத பிரக்ஞையுடன் அங்கிருந்தார். ஒருகைமேல் தலைவைத்து கங்கையைப் பார்த்திருந்த அவள் உடலில் இருந்து வெம்மைமிக்க குருதிவாசனை எழக்கண்டதும் கைகள் நடுங்க அவளருகே சென்று நின்றார்.
கங்காதேவி எழுந்து தளர்நடையில் படகை நோக்கிச் சென்றதும் சந்தனு அவளைத் தடுத்து “தேவி, நீ எங்கே செல்கிறாய்? என்குழந்தையை என்ன செய்யப்போகிறாய்?” என்றார். அவள் அவரை விழித்துப் பார்த்தபின் ஒரு சொல்லும் சொல்லாமல் சிறுபடகில் ஏறிக்கொண்டாள். “தேவி என் குழந்தையைக் கொல்லாதே…. அது என் மூதாதையரின் கொடை” என்று சந்தனு கூவினார்.
துடுப்பால் படகை உந்தி நீர்ப்பரப்பில் சென்ற கங்காதேவி “மன்னரே, எனக்களித்த வாக்கை மீறிவிட்டீர்கள். என்னிடம் கேள்வி கேட்டுவிட்டீர்கள். இதோ நம் உறவு முறிந்தது. இனி என்னைத் தேடவேண்டியதில்லை” என்று சொன்னாள். ‘தேவி!’ என அலறியபடி அவர் படகுத்துறை வரை வந்தார். சந்தனுவின் அலறலைத் தாண்டி அவள் படகை துழாவிச் சென்றாள். அவளைத் தொடரமுடியாமல் சந்தனு கூவி அழுதார்.
பதினெட்டு நாட்கள் அவள் திரும்பிவருவாள் என நம்பி அங்கே கண்ணீருடன் காத்திருந்தபின் சந்தனு மன்னர் அஸ்தினபுரிக்குத் திரும்பி வந்தார். வீரியமெல்லாம் மறைந்தது போல வெளுத்து மெலிந்து எப்போதும் நடுங்கிக்கொண்டிருப்பவராக ஆனார். அஸ்தினபுரியில் அவருக்கு ஒருநாளும் இயற்கையாக துயில் வரவேயில்லை. இரவெல்லாம் படுக்கையில் பாம்புபோல நெளிந்துகொண்டிருந்த அவருக்கு மதுவகைகளையும் தூமவகைகளையும் அளித்து சோதித்த மருத்துவர்கள் தோல்வியடைந்தனர். கங்கைக்கரைக்குச் சென்று குடில் அமைத்து தங்கும்போது மட்டுமே அவர் தூங்கமுடிந்தது.
இருத்தலென்பதே இறைஞ்சுதலாக ஆனவனின் குரலை எங்கோ எவரோ கேட்கிறார்கள் இளவரசே! ஏழாண்டுகள் கழித்து ஒருநாள் கங்கைக்கரை வழியாக அவர் காலையில் நடந்துசெல்லும்போது நினைத்துக்கொண்டார். இந்த கங்கை என் பிறவிப்பெரும் துயரத்தின் பெருக்கு. சொல்லற்று விழிக்கும் பலகோடிக் கண்களின் வெளி. என் மூதாதையர் கரைந்திருக்கும் நிலைக்காத நினைவு. என் உலகைச் சூழ்ந்திருக்கும் கருங்கடலின் கரம்.
கங்கையில் வந்துசேர்ந்த பிரபாவதி என்ற சிற்றாறின் நெளிவைக் கண்டு கால் தளர்ந்து அப்படியென்றால் இது என் இப்பிறவியின் தவிப்பு என நினைத்துக்கொண்டார். அப்போது அதன் நீர் மெல்ல நின்று, ஆறு இனிய வெண்மணல் வெளியாக ஆனதைக் கண்டு திகைத்தார். பெருவலி நிற்கும்போது எழும் நிம்மதியை உணர்ந்தார்.
மேலும் முன்னால் சென்று பார்த்தபோது ஆற்றின் குறுக்காக முற்றிலும் கோரைப் புல்லைக்கொண்டு கட்டப்பட்ட அணை ஒன்றைக் கண்டார். அந்த அணைக்கு அருகே அவரைவிட உயரமான சிறுவன் ஒருவன் நின்று தன் நீண்டகரங்களால் கோரைத்தண்டுகளைப் பிடுங்கி வில்லில் தொடுத்து அம்புகளாக எய்து அந்த அணையை கட்டிக்கொண்டிருந்தான். சந்தனு அச்செயலின் பேருருவைக் கண்டு அவன் கந்தர்வனோ என்று எண்ணி பிரமித்தார். அச்சிறுவன் நாணல்களைக் கிள்ளி நீரில் வீசி மீன்பிடித்ததைக் கண்டதும்தான் அவன் மானுடனென்று தெளிந்தார். அவனருகே சென்றதுமே அவன் தோள்களில் இருந்த முத்திரைகளைக் கண்டு உடல்சிலிர்த்து கண்ணீருடன் நின்றுவிட்டார்.
“நீ என் மகன்” என அவர் சொன்னார். உயிர் எடுத்து வந்தபின்பு சொன்னவற்றிலேயே மகத்தான வார்த்தைகள் அவையே என உணர்ந்தார். “நான் உன் தந்தை” என்று அதன் அடுத்த வரியைச் சொன்னார். அதை அவனுக்குக் காட்ட அடையாளம் தேடி அவர் தவிக்கும்போது அவன் அவரது மெலிந்த நடுங்கிய கைகளை தன் வலிய பெருங்கைகளால் பற்றிக்கொண்டு கார்வைமிக்க குரலில் “உங்கள் கண்ணீரைவிட எனக்கு ஆதாரம் தேவையில்லை தந்தையே” என்றான்.
கங்கைக்குப் பிறந்தவனாதலால் காங்கேயன் என்று அழைக்கப்பட்ட அவன் கங்கர்குலத்தில் இருந்தாலும் காடுகளிலேயே வாழும் தனிமை கொண்டிருந்தான். கங்கர் முறைப்படி பிறந்ததுமே கங்கையில் நீந்திக்கரைசேர்ந்த அவனை கங்கர்குலத்திடம் அளித்துவிட்டு கங்கையில் இறங்கிச்சென்ற அவன் அன்னை திரும்பி வரவேயில்லை. காடும் நதியும் அவன் களங்களாக இருந்தன. காற்றிலிருந்து சுருதிகளையும் நீரிலிருந்து அஸ்திரங்களையும் நெருப்பிலிருந்து நெறிகளையும் கற்றிருந்தான். இளவரசே, தலைமுறைக்கு ஒருமுறையே ஒவ்வொரு காலடியையும் மண்மகள் கைவிரித்துத் தாங்கும் குழவியர் மண்ணில் பிறக்கின்றனர்.
தனிமையை நோன்பாகக் கொண்ட அவனை தேவவிரதன் என்று பெயரிட்டு சந்தனு மன்னர் அஸ்தினபுரிக்கு அழைத்துவந்தார். யானைத்துதிக்கை போன்ற அவனுடைய கனத்த கைகளை விடவே அவரால் முடியவில்லை. ‘என் மகன்! என் மகன்! என் மகன்!’ என்ற ஆப்தவாக்கியமே சந்தனுவுக்கு இன்பத்தையும் ஞானத்தையும் முக்தியையும் அளித்தது. ஆப்தவாக்கியங்களின் இறைவிகளெல்லாம் அதைக்கண்டு புன்னகை புரிந்தனர்.
இளையவரே, அன்றுமுதல் அஸ்தினபுரியின் காவல்தெய்வமாக அவரே விளங்கிவருகிறார். அறங்கள் அனைத்தையும் அறிந்தவரும், அறத்தினால் வேலிகட்டப்பட்ட தனிமையில் வாழ்பவருமாகிய பீஷ்மரை வணங்குவோம்! தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் மாமனிதர்களால்தான் மானுடம் வெல்கிறது என்று அறிக! அவர்களின் குருதியை உண்டுதான் எளியமக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் தசைகள்மேல் வேரோடியே தலைமுறைகளின் விதைகள் முளைக்கின்றன.
தீர்க்கசியாமரின் சொல்கேட்டு கண்ணீர் மல்க கைகூப்பி அமர்ந்திருந்தான் விசித்திரவீரியன். இளவரசே, சந்தனு தன் அன்னையையும் தந்தையையும் ஆசிரியரையும் ஒருங்கே அடைந்தார். விரிந்த பெருந்தோள்களைக் கண்டு அச்சங்களை வென்றார். ஒளிமிக்க கண்களைக் கண்டு அவநம்பிக்கைகளைக் கடந்தார். முழங்கும் குரலைக்கேட்டு ஐயங்கள் தெளிந்தார். அச்சம் நிறைந்த வழக்கமான கனவொன்றில் உசகனாக அவர் நெளிந்து ரதசக்கரத்தால் நசுக்குண்டு திகைத்து எழுந்து நடுங்கி முனகியபோது அங்கே இருந்த தேவவிரதர் அவர் கன்னத்தில் கைவைத்து காதில் “அஞ்சாதீர் தந்தையே, நானிருக்கிறேன்” என்றார். அவர் கையைப்பிடித்து மார்போடு சேர்த்துக்கொண்டு கண்ணீர் விட்டுக்கொண்டே மீண்டும் உறங்கினார்.
தேவவிரதர் தந்தையின் அத்தனை சுமைகளையும் வாங்கிக்கொண்டார். தன் நிழலில் தந்தையை வைத்து காத்தார். காட்டில் வேட்டைக்குச் சென்றபோது மெல்ல தேவவிரதரின் தோளில் கைவைத்து அதன் உறுதியை உணர்ந்த சந்தனு அவர் திரும்பிப்பார்த்தபோது திகைத்து நோக்கை விலக்கிக் கொண்டார். அவர் உள்ளத்தை அறிந்தவர்போல தேவவிரதர் அவரை தன் பெரும் கரங்களில் மதலையெனத் தூக்கிகொண்டார்.
தந்தையை கைகளில் அள்ளிக்கொண்ட தனயனின் மார்புக்குள் நூறு முலைகள் முளைத்து பால்சுரந்தன. அன்னைபோல அணைத்தும், கடிந்தும் தந்தையைப் பேணினார் மைந்தர். தசைகள் இறுகிய படைக்குதிரையுடன் சேர்ந்து ஓடிக்களிக்கும் கன்று போல மகனுடன் விளையாடி சந்தனு மகிழ்ச்சி கொண்டவரானார்.
அஸ்தினபுரியின் அரசே! அந்த மகிழ்வான நாட்களில்தான் உங்கள் தந்தை சந்தனு யமுனையில் படகோட்டிக்கொண்டிருந்த மச்சர்குலத்து இளவரசியைக் கண்டார். கங்கையின் தங்கையல்லவா யமுனை? சென்றவள் வந்தாள் என்றே சந்தனு நினைத்தார். அவள் பாதங்களில் அனைத்தையும் மறந்து தன்னை வைத்தார். அவரது தசைகளில் குருதியும் நரம்புகளில் அக்கினியும் குடியேறின. கண்களில் ஒளியும் உதடுகளில் புன்னகையும் மீண்டு வந்தன. கன்றுகள் குதிக்கும் குதூகலத்துடன் நடந்த தந்தையைக் கண்டு மைந்தர் மனம் மகிழ்ந்தார்.
சந்தனு சத்யவதியின் தந்தை தசராஜனிடம் சென்று மகள்கொடை வேண்டினார். “அஸ்தினபுரிக்கு அரசியென உம் மகளை தருக” என்றார். அவரது பெருங்காதலை உணர்ந்த மச்சகுலத்தலைவன் சத்யவான் ஒரு விதியைச் சொன்னார். “அவளை மணம் புரிவதென்றால் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகளுக்கே அரசுரிமை என்று வாக்களிக்கவேண்டும். உங்களுக்கு கங்கர்குலத்து மைந்தன் இருக்கிறான். அவனே மன்னனாக முடியும். என் குலத்துக்குழந்தைகள் எங்களைவிடக் கீழான மலை கங்கர்களுக்கு சேவகர்களாக வாழமாட்டார்கள்” என்றார்.
“அவன் என் மைந்தன். பெருந்திறல் வீரன். அஸ்தினபுரிக்கு அவன் ஆற்றல் இனிவரும் நான்கு தலைமுறைக்கும் காவல் என்றனர் நிமித்திகர்” என்றார் சந்தனு. “ஆம், அவனுடைய நிகரற்ற வீரத்தையே நான் அஞ்சுகிறேன். அவன் காலடியில் பாரதவர்ஷம் விழும். என்குலங்களும் அங்கே சென்று சரிவதை நான் விரும்பவில்லை” என்றார் சத்யவான்.
“தேவி, என் காதலை நீ அறியமாட்டாயா? சொல்” என்று சத்யவதியிடம் கையேந்தினார் சந்தனு. “அரசே, எந்தையின் சொல் எனக்கு ஆணை” என்று சொல்லி அவள் குடிலுக்குள் புகுந்துகொண்டாள். கண் கலங்க கையேந்தி மச்சர்குடில் முன் அஸ்தினபுரியின் அரசர் நின்றார். “இழப்புகளை ஏராளமாக அறிந்தவன் நான். இனியுமொரு காதலை இழப்பதை என் நெஞ்சும் உடலும் தாங்காது பெண்ணே” என முறையிட்டார். “உங்கள் மைந்தனைத் துறந்து வாருங்கள் அரசே. இனிமேல் பேச்சு இல்லை” என மகற்கொடை மறுத்து மச்சர் வாயிலை மூடினார்.
நெஞ்சில் கைவைத்து “அவன் என் மைந்தன் அல்ல, என் தாதன்” என்று கூவினார் சந்தனு. ரதமுருண்ட வழியெல்லாம் கண்ணீர் உதிர அஸ்தினபுரிக்குத் திரும்பிவந்தார். இனி யமுனைக்குத் திரும்புவதில்லை என்று எண்ணிக்கொண்டார். நதிகளெல்லாம் நிற்காதொழுகும் தன்மை கொண்டவை. கரைகளால் நதி கட்டுப்படுத்தப்படுவதில்லை, கரைகளை நதிகளே உருவாக்கிக் கொள்கின்றன. இனி நதிகள் இல்லை. பாலையில் அலைகிறேன். தாகத்தில் இறக்கிறேன். இனி என் வாழ்வில் நதிகள் இல்லை என்று தன்னுள் பல்லாயிரம் முறை கூவிக்கொண்டார்.
ஆனால் இழந்தவற்றை மறக்க எவராலும் இயல்வதில்லை. பேரிழப்புகள் நிகரெனப் பிறிதிலாதவை. அரசே, கொடிய சூலை நோயென சத்யவதி மீதுகொண்ட காதல் சந்தனு மன்னருக்குள் வாழ்ந்தது. குருதியை இழந்த அவர் உடல் வாழைபோலக் குளிர்ந்து வெளுத்தது. அவர் விலக்கி வைத்திருந்த அனைத்து நோய்களும் ஆழத்தில் இருந்து முளைத்தெழுந்து தழைத்தன.
மாம்பழத்தில் வண்டு போல அரசருள் உறையும் அறியாத ஏதோ ஏக்கமே அவரைக் கொல்கிறது என்று அரசமருத்துவர்கள் தேவவிரதரிடம் சொன்னார்கள். அந்த எண்ணமல்ல அவ்வெண்ணத்தை உதறும் முயற்சியிலேயே மன்னர் நோயுறுகிறார் என விளக்கினர். ஒற்றர்களிடமும் அமைச்சர்களிடமும் விசாரித்து அந்த எண்ணத்தை அறிந்தார் தேவவிரதர். ரதம்பூட்டி தன்னந்தனியே யமுனை நோக்கிச் சென்றார்.
கோடைகால இரவொன்றில் வெண்குளிர்ச் சேக்கையில் துயிலிழந்து புரண்டுகொண்டிருந்த தந்தையின் படுக்கையருகே அமர்ந்து அவரது மெலிந்த கரங்களை தன் பெருங்கரங்களுக்குள் வைத்து, குனிந்து அவரது குழிந்த கண்களுக்குள் பார்த்து, முழங்கிய குரலில் தேவவிரதர் சொன்னார். “எந்தையே, இக்கணம் விண்ணுலகில் என் அன்னை வந்து நிற்கட்டும். இக்கணம் இனி என் வாழ்க்கையை முடிவுசெய்யட்டும். இதோ நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நான் எந்நிலையிலும் மணிமுடிசூடமாட்டேன். வாழ்நாளெல்லாம் இல்லறத்தை தவிர்ப்பேன். அதற்கென காமத்தை முற்றிலும் விலக்குவேன். உங்கள் பாதங்கள்மீது ஆணை!”
நடுங்கி எழுந்து அவர் தோள்களைத் தழுவி சந்தனு கூவினார், “மகனே, வேண்டாம். நான் உதிரும் இலை. எனக்காக நீ உன் வாழ்க்கையை துறக்கலாகாது.” புன்னகையுடன் எழுந்து, “நான் ஆணை செய்துவிட்டேன் தந்தையே. இனி அது என்னை வாழ்நாளெல்லாம் கட்டுப்படுத்தும்” என்றார் தேவவிரதர்.
“இல்லை, இதை நான் ஏற்கமாட்டேன். இது என் ஆணை அல்ல… நான் அதை சொல்லவில்லை” என்று சந்தனு கூவினார். மகனின் சிம்மபாதம்போன்ற கைகளைப்பிடித்தபடி சந்தனு “மகனே, என் தந்தையே, என் தெய்வமே, இந்தத் துயரத்தை எனக்கு அளிக்காதே” என்றார்.
உறுதியான குரலில் “நேற்றே நான் மச்சர்குலத்து சத்யவானைக்கண்டு பேசிவிட்டேன். நானோ என் தோன்றல்களோ அவரது மகளின் மகவுகளின் அரியணையுரிமைக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றேன். என் வாக்கை அவருக்கு அளித்து பழுதற்ற ஆயிரம் வைரங்களை கன்யாசுல்கமாக அளித்து மணநாளையும் முடிவுசெய்து வந்தேன்” என்றார் தேவவிரதர்.
“அதைத் தவிர்க்க ஒரேவழிதான்… நான் இறந்துவிடலாம். நான் இறந்துவிடுகிறேன் மகனே” என சந்தனு அழுகையுடன் சொல்லி முடிப்பதற்குள் அன்னையின் கனிவுடன் வாயில் பட்டென்று அடித்து “என்ன அவச்சொல் இது? போதும்” என அதட்டினார் தேவவிரதர். “நான் முடிவை கூறிவிட்டேன். இனிமேல் இதைப்பற்றி பேசவேண்டியதில்லை” என்றார்.
அவரை எதிர்த்துப் பேசியறியாத சந்தனு “ஆம்” என்றார். புன்னகையில் கனிந்து தந்தையின் கண்களில் கசிந்திருந்த கண்ணீரை தன் கனத்தவிரல்களால் மெல்லத் துடைத்தபின் அவரை படுக்கையில் இருந்து இரு கைகளாலும் கைக்குழந்தை போல தூக்கி உப்பரிகைக்குக் கொண்டுசென்றார் தேவவிரதர். “இன்று நிறைநிலவு நாள். பாருங்கள். முதிய வேங்கைமரம் மலர்விட்டிருக்கிறது” என்று காட்டினார். சந்தனு மைந்தனின் தோள்களை அணைத்தபடி குளிர்க்கிரணங்களுடன் மேகவீட்டிலிருந்து தயங்கி எழுந்த சந்திரனைப் பார்த்தார். விண்ணகத்தின் நுண்ணுலகுகளில் எங்கோ காலத்தில் நெளிந்துகொண்டிருந்த உசகன் அருவியில் தலைதூக்கி நிற்கும் நீர்ப்பாம்பு போல அசைவிழந்து மெய்மறந்து நிறைவுகொண்டான்.
“மானுடர்க்கரசே, உமது புகழ் வாழ்க! தந்தையை கருவுற்றுப்பெற்ற தனயனை வாழ்த்துவீராக! இறந்தபின்னரும் ஒருகணமேனும் தந்தையை மார்பிலிருந்து இறக்காத தாயுமானவனை வணங்குவீராக!” என்றார் தீர்க்கசியாமர். விசித்திரவீரியன் கண்களிலிருந்து கண்ணீர் உதிர்ந்தது.
“இளவரசே, எட்டு குட்டிகளை ஈன்ற பன்றியைவிட கொடூரமான மிருகம் வனத்தில் இல்லை. தன் நெஞ்சில் ஒவ்வொரு கணமும் குடிகளின் நலனை எண்ணும் அரசன் குரூரத்தின் உச்சிமுனையில் சென்று நிற்பான். அதன் பழியை தான் ஏற்று தன் குடிகளுக்கு நலனைமட்டுமே அளிப்பான். அவன் உதிர்ந்து மண்ணை அடைகையில் மன்னுயிரனைத்தையும் தாங்கும் மண்மகள் அவனை அள்ளி அணைத்து தன் மடியில் அமர்த்துவாள். மண்ணாளும் மன்னன் அவளுக்கு மட்டுமே பதில்சொல்லக் கடமைப்பட்டவன் என்றறிக!”
“வல்லமைகொண்ட நெஞ்சுடையவரே, பெரிய பாறைகளே பெரிய பாறைகளை அசைக்கமுடியும் என்றறிவீராக. மாபெரும் அறத்திலிருந்தே மாபெரும் தீமை பிறக்கமுடியும். எல்லையற்ற கனிவே எல்லையற்ற குரூரத்தின் காரணமாகக்கூடும். பெரும்புண்ணியங்கள் பெரும் பழிகளைக் கொண்டு வரலாகும். விதியால் அல்ல, செய்கைகளாலும் அல்ல, எண்ணங்களினாலேயே மாமனிதர்கள் உருவாகிறார்கள். வேழங்கள் மரங்களை விலக்கி, பாறைகளைப் புரட்டி, காடுகளைத் தாண்டிச்சென்று வேழங்களையே போரிடத் தேர்ந்தெடுக்கின்றன.”
கைகளைக் கூப்பியபின் தீர்க்கசியாமர் ‘ஓம் ஓம் ஓம்’ என முழங்கி அமைதியானார்.