மூத்த பனியா என்ன சொல்கிறார் என்பது ஒரு இளம் வணிகனுக்கு எப்போதும் முக்கியம்தான். காந்தி என்ற பனியா வணிகம் செய்யவில்லை, சமணத்துறவியும் ஆகவில்லை. மாறாக வக்கீல்தொழில் வழியாக அரசியலுக்கு வந்தார். ஆனாலும் அவரது செயல்களில் இரண்டாயிரம் வருடங்களாக இந்திய பனியாக்கள் சேர்த்த அனுபவ ஞானம் நுண்ணுணர்வுகளாகக் குடியிருந்தது. அதை அவரது எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் நாம் காணலாம்.
இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு நிறுவனம். ஒரு நிறுவனத்தை நடத்துவதென்பது இந்தியாவின் வேறெந்த சாதியைவிடவும் வெற்றிகரமாக பனியாவால்தான் சாத்தியம் என்பது அனுபவ உண்மை. காந்தி எப்படி இந்திய தேசிய காங்கிரஸை வழிநடத்தினார் என்பதில் எந்த ஒரு நிர்வாகியும் கற்றுக்கொள்ள வேண்டிய நூற்றுக்கணக்கான பாடங்கள் உள்ளன. அனைத்தையும் விவாதிப்பதென்பது நிர்வாகவியல் நிபுணர்களால் மட்டுமே இயலும். காந்தியவழியிலான நிர்வாகவியலை இன்று உலகின் பல பகுதிகளில் நிர்வாகவியல் கல்லூரிகள் பயில்கின்றன என்று கேள்விப்படுகிறேன்.
இது சார்ந்த பல நூல்களின் பெயர்களை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ராம் பிரதாப் எழுதிய ‘காந்திய நிர்வாகவியல்’ [Gandhian Management Ram Pratap ] என்ற நூலை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன். அதன் நிர்வாகவியல் கலைச்சொற்களின் தடைகளைத் தாண்டி ஓரளவு புரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் காந்தியப்போராட்டத்தைக் கூர்ந்து கவனித்தாலே சில விதிகளை உணர முடியும்.
மூத்த பனியா இளம் வணிகனுக்கு என்ன சொல்லியிருப்பார்? சில ஆதார விதிகளை நான் ஊகிக்கிறேன்.
- முறித்துக்கொள்ளாதீர்கள்
காந்திய வழிமுறையின் ஆதாரமான முதல்கோட்பாடே இதுவாகத்தான் இருக்கமுடியும். ஒருபோதும் எந்தவகையான உச்சகட்ட மோதலுக்குப் பின்னும் காந்தி உறவுகளை முறித்துக்கொள்வதேயில்லை. அதை காங்கிரஸ்காரர்களே மிகுந்த கசப்புடன் பல தருணங்களில் எதிர்கொண்டிருக்கிறார்கள். காந்தியின் நம்பிக்கைகளை வைத்துப் பார்த்தால் முகமது அலி ஜின்னாவுடனான உறவை அவர் முறித்துக்கொண்டிருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்துகொண்டே இருந்தன.
குறிப்பாக முஸ்லீம்லீக் நேரடிநடவடிக்கை என்ற பேரில் இந்து முஸ்லீம் ஒற்றுமையை உடைத்து மனக்கசப்பை உருவாக்கி பாகிஸ்தான் கோரிக்கைக்கு வலுச்சேர்க்கவென்றே உருவாக்கிய வன்முறை வெறியாட்டத்துக்குப் பின்னர் அவர் அப்படிச்செய்திருந்தால் அதில் பிழை ஏதும் இல்லை. ஆனால் காந்தி அதைச் செய்யவில்லை. எப்போதுமே பேச்சுவார்த்தைக்கான இடத்தை விட்டு வைத்திருந்தார்.
இந்திய தேசியகாங்கிரஸின் வரலாற்றிலேயே விசித்திரமான பல சந்தர்ப்பங்களை நாம் காண்கிறோம். 1923 ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி சிறைசென்றிருந்தபோது மோதிலால் நேருவும் சித்தரஞ்சந்தாஸும் காங்கிரஸைக் கைப்பற்றி வெற்றிகரமாக உடைத்து சுயராஜ்யக் கடசி என்ற தனிப்பிரிவை உருவாக்கினார்கள். காந்தி 1924ல் வெளியேவந்தபோது அவர் உருவாக்கிய கட்சியின் சிதைவைக் கண்டார். அதற்கு எதிரான அவர் சமரசப்போராட்டத்தை நடத்தினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களைப் புறக்கணித்து காந்தியின் தலைமைக்கு வந்தபோது அவர் அந்த மூத்த தலைவர்களை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவந்தார். அவர்களை வெளியே அனுப்பியிருந்தாலும் காங்கிரஸுக்கு எதுவும் ஆகியிருந்திருக்காது. ஆனால் காந்தி முற்றாக முறித்துக்கொள்ள ஒருபோதும் அவரே முன்வர மாட்டார்
2. கள ஆய்வுசெய்யுங்கள்
காந்தி அவரது எந்த முடிவையும் அவரது உள்ளுணர்வைச் சார்ந்தோ அல்லது ஊகத்தைச் சார்ந்தோ எடுக்கவில்லை. சில போராட்டங்களுக்கான தருணங்களும் படிமங்களும் மட்டுமே அவருக்கு அவரது உள்ளுணர்வு சார்ந்து கிடைத்தன. மற்றபடி அனைத்து விஷயங்களையும் அவரே நேரடியாக இறங்கி கள ஆய்வுசெய்துதான் அறிந்திருக்கிறார். தென்னாப்ரிக்காவில் அவர் சம உரிமைக்காகப் போராட ஆரம்பித்தபோது முதலில் தென்னாப்ரிக்காவின் இந்தியசமூகத்தை முழுக்க விரிவான பயணங்கள் மூலம் நேரடியாகப்போய்ச் சந்தித்தார். அதன் பின்னரே அவர் தன் போராட்ட உத்திகளை வகுத்துக்கொண்டார்.
இந்திய சுதந்திரப்போராட்டம் குறித்த கனவுடன் அவர் இந்தியாவுக்கு வந்தபோது ஏற்கனவே அவரிடம் பொருளியல் திட்டங்கள் இருந்தன. ஹிந்த் ஸ்வராஜ் என்ற ஆதார நூலை அவர் எழுதிவிட்டார். அரசியல் போராட்ட வடிவம் ஒன்றை வெற்றிகரமாகச் செய்துபார்த்தும் இருந்தார். இருந்தாலும் அவர் இந்தியா முழுக்க மூன்றாம் வகுப்புப் பயணியாக ரயிலில் பயணம்செய்து மக்களை நேரடியாகச் சந்தித்து ஆராய்ந்தார். அதன் வழியாக இந்தியா பற்றிய ஒரு நேரடி மனப்பதிவை அடைந்தார்.
தன் பயணங்களில் காந்தி இந்தியாவின் ஆன்மீகத்தலைவர்கள் பலரை நேரடியாகச் சென்று சந்தித்திருக்கிறார். சகோதரி நிவேதிதை முதல் நாராயணகுரு வரை. பல்வேறு அறிவியக்கவாதிகளை சந்தித்து உரையாடியிருக்கிறார். வேறு எந்த இந்தியத்தலைவரும் அத்தகைய ஒரு விரிவான நேரடி கள அனுபவத்தை திரட்டிக்கொண்டதில்லை. உதாரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிய அம்பேத்கர் ஒருமுறைகூட நாராயணகுருவை வந்து சந்திக்கவேண்டும் என எண்ணியதில்லை என்பதனுடன் நாம் காந்தியின் கள ஆய்வை ஒப்பிடவேண்டும். ஒரு ‘மகாத்மா’ ஆக அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் அத்தகைய பயணங்களை பலமுறை அவர் முகமறியாது தனியாகச் செய்து பார்த்திருக்கிறார்.
சம்பாரன் போராட்டத்துக்காக அவரை விவசாயிகள் அழைத்தபோது காந்தி அங்கேயே சென்று தங்கி அப்பகுதி மக்களுடன் நேரடியாக பழகி அந்தப்போராட்டத்தை நடத்தினார். ஒருவருடம் அங்கே அவர் இருந்தார். அதேபோல இந்திய சுதந்திரப்போராட்டத்துக்கு மேலைநாட்டு பொதுமக்கள் எவ்வகையில் எதிர்வினையாற்றுகிறார்கள் என்று அறிய அவர் 1932ல் ஐரோப்பாவில் அவரே சுற்றுப்பயணம் செய்தார்
3 செய்துபாருங்கள்
காந்தி ஒருபோதும் ஒரு விஷயத்தை வெறும் கோட்பாட்டளவில் விவாதித்தவரல்ல. அவர் அதுவரை உலகசிந்தனையில் இல்லாமல் இருந்த ஒன்றை அறிமுகம் செய்தார், அகிம்சைப்போராட்டம். ஆனால் அதை அவர் கோட்பாட்டுவடிவில் முதலில் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதைப்பற்றி அவர் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை. விவாதிக்கவில்லை. பிழையில்லாத ஒரு கோட்பாட்டுச்சித்திரத்தை முடித்துக் கொண்டு செயலாற்ற இறங்கலாமென அவர் நினைக்கவில்லை. மாறாக எடுத்த எடுப்பிலேயே செய்து பார்த்தார்!
காந்தி அவரது சத்யாக்ரக போராட்ட முறை அவர் மனதில் உதித்த சில மாதங்களில், தென்னாப்ரிக்காவில் 1906-ல் டிரான்ஸ்வால் நகரில், தன் முப்பத்தேழாவது வயதிலேயே சத்யாக்ரகப் போராட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்த்துவிட்டார். அந்தப்போராட்டம் பற்றி அவர் அறிந்தவை எல்லாமே நடைமுறைச்செயல்பாடுகள் வழியாகவே. அதன் விதிகளையும் நடைமுறைகளையும் அதற்குக் கொள்ளவேண்டிய எச்சரிக்கைகளையும் எல்லாம் அந்த செயல்பாடுகள் வழியாகவே ஆராய்ந்து உருவாக்கினார். நடைமுறைக்குச் சம்பந்தமில்லாமல் சிந்தனைத்தளத்தில் அதை வரையறைசெய்ய முயன்றதேயில்லை
- சிறிய அளவில் தொடங்குங்கள்
காந்தி எதையுமே தடாலடியாக பெரிய அளவில் ஆரம்பித்ததில்லை. எல்லா போராட்டங்களையும் சிறிய அலகுக்குள் செய்துபார்த்து அதன் குறைகளை கவனித்து சரிசெய்த பின்னர்தான் விரிவாக அதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். ஒத்துழையாமைப்போராட்டம் உப்புசத்யாக்கிரகம் எல்லாமே அவ்வாறுதான் அறிவிக்கப்பட்டன.
5 பிழைகளை திருத்துங்கள்.
காந்தி அவரது மொத்த அரசியல் வாழ்க்கையிலும் பிழைகளைத் திருத்திக்கொள்ள தயங்கியதே இல்லை. தன்னுடைய அகங்காரம் காரணமாகவோ அல்லது தன் பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவோ அல்லது மிகையான தன்னம்பிக்கை காரணமாகவோ தான் நம்பிவந்த ஒன்றை மறுபரிசீலனை செய்வதற்கு அல்லது செய்து வந்த ஒன்றை நிறுத்திக்கொள்வதற்கு அவர் தயக்கம் காட்டியதில்லை.
இரு உதாரணங்களைச் சொல்லலாம். ஒன்று காந்தி ஒரு மேலைநாட்டு ஆய்வாளனின் கோணத்தில் இந்திய சமூகத்தை ஆராய்ந்து சாதியமைப்புக்கு ஒரு சமூக, பொருளியல் பங்களிப்பு உண்டு என்று நம்பினார். ஆனால் இந்திய யதார்த்தங்களை காங்கிரஸ் செயல்பாடுகள் வழியாக அவர் அறிந்து, அவற்றை வலுவாக முன்வைத்த நாராயணகுரு, அம்பேத்கார் போன்றவர்களிடம் விவாதித்து தெளிவடைந்தபின் தன் கருத்துநிலையை முற்றாகவே மாற்றிக்கொண்டார். சாதியமைப்பின் சமூக இடம் என்னவாக இருந்தாலும் அதில் இருந்து ஏற்றதாழ்வை நீக்கமுடியாது என்றும் ஆகவே அது அகிம்சைக்கு எதிரானது என்றும் உணர்ந்தார். அந்த புதிய கருத்துநிலைக்கு ஏற்ப தன் செயல்பாடுகள் சொந்த வாழ்க்கை அனைத்தையும் முற்றாக மாற்றிக்கொண்டார்.
அதனால் அவரைப் பின்தொடர்ந்தவர்களில் ஒரு சாரார் குழப்பம் அடைந்தார்கள். அவர் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவரது அரசியல் வாழ்க்கையிலேயே கடுமையான சோதனைகளை காந்தி சந்தித்தார். ஆனால் பிழையான ஒன்று நெடுங்காலத்தில் உருவாக்கும் அழிவை விட அந்த திருத்தம் மூலம் உருவாகும் அழிவு மிகக் குறைவானதே என அவர் எண்ணினார்.
அதேபோல அவர் வழிநடத்திய ஒத்துழையாமைப் போராட்டம் வன்முறை நோக்கி திரும்பி சௌரிசௌராவில் காவல்நிலையம் தாக்கப்பட்டதுமே அவர் அப்போராட்டத்தை அதன் உச்சநிலையிலேயே விலக்கிக் கொண்டார். அகிம்சை போராட்டத்துக்கு இந்திய சிவில் சமூகம் தயாராகவில்லை என்று அவர் நினைத்தார். இந்தியாவின் பொதுமக்களை நேரடியாக போராட்டத்துக்கு கொண்டு செல்லலாகாது என கண்டுகொண்டார்
அவ்வாறு ஒத்துழையாமை போராட்டத்தை சட்டென்று விலக்கிக்கொள்வார் என நாட்டி எவருமே எதிர்பார்க்கவில்லை. சுதந்திரம் கிடத்துவிடும் என்ற உத்வேகத்தில் இருந்தவர்கள் பெரும் மனச்சோர்வுக்கு ஆளானார்கள். அதன்பொருட்டு நேரு உட்பட காங்கிரஸ்காரர்கள் பெரும்பாலானவர்கள் காந்தி மேல் கசப்பு கொண்டார்கள். இன்றும் மக்கள் போராட்டங்களை முழுமையடைய விடாமல் பின்வாங்கச்செய்தவர் என காந்தியை குறைகூறுபவர்கள் உண்டு.
ஆனால் காந்தியைப் பொறுத்தவரை அடிப்படையில் பிழை இருக்கும்போது முன்னகர்வதென்பது தற்கொலைத்தனமானது. வீராப்புக்காக முன்னே செல்ல அவரால் இயலாது. காங்கிரஸில் லட்சக்கணக்கில் தொண்டர்களைச் சேர்த்து அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து அவர்களை நிர்வகிக்கும் அமைப்புகளையும் உருவாக்கியபின் அவர்களைக்கொண்டே காந்தி அடுத்த கட்ட அகிம்சைப்போராட்டங்களை முன்னெடுத்தார்
6 தொடர்பு வைத்திருங்கள்
காந்தி பலலட்சம் உறுப்பினர்கள் ஒருபிரம்மாண்டமான அமைப்பை வழிநடத்தியவர். விரிந்த ஓர் உபகண்டம் முழுக்க பரவியிருந்தது அவ்வியக்கம். அக்காலத்தில் ஒரு எல்லையில் இருந்து இன்னொரு எல்லைக்குப் பயணம்செய்ய பதினைந்து நாள் ஆகும். கடிதம் சென்று வர ஒருமாதம் வரைக்கூட ஆகும். அத்தகைய ஒரு அமைப்பை சீராக நிர்வாகம் செய்ய அதற்கு ஒரு நிர்வாகப்படிநிலையை அவர் உருவாக்கினார். கிராமக்கமிட்டிகள், மாவட்டக் கமிட்டிகள், மாநிலக் கமிட்டிகள், மத்தியக்கமிட்டி என ஏறிச்சென்ற ஒரு பிரமிட் அமைப்பு அது.
அதன் தலைமையில் இருந்த காந்தி அதன் சாதாரண உறுப்பினர்கள் வரை நேரடியான தொடர்பு வைத்திருந்தார். அவர் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தபின்னரும்கூட அவர் எழுதிய கடிதங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியையும் அவர் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே விசாரித்து அறிந்துகொண்டே இருந்திருக்கிறார். அவர் எவரிடம் எல்லாம் தொடர்பு வைத்திருக்கிறார் என்பது எவருக்குமே தெரியாது.
வட இந்தியாவில் இருந்த காந்தி தென்கோடியில் நாகர்கோயிலில் டாக்டர் எம்.வி.நாயுடுவுக்கு தொடர்ச்சியாக கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். அவரது தொடர்பு வலை அத்தகையது
7 நிபுணர்களை கலந்தாலோசியுங்கள்
காந்தி ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்ததில்லை. ஒரு சிறுவிஷயத்துக்குக் கூட அவர் அந்தத்தளத்தைச் சார்ந்த நிபுணர்களை சந்தித்து விவாதித்துக்கொண்டிருந்தார். உதாரணமாக சம்பாரன் சத்யாக்ரகத்தின்போது காந்தி அகமதாபாத் சென்று ஒருவாரம் தங்கி பல்வேறு சட்ட நிபுணர்களுடன் அந்தப்போராட்டத்தின் சட்டச்சிக்கல்களை விவாதித்தார். அந்தப்போராட்டத்தின் அரசியல் சாத்தியங்களை கேட்டறிந்தார். தன் மாபெரும் மக்கள் போராட்டங்களில் காந்தி மேலைநாட்டு அரசியல் நிருபர்களின் கருத்துக்களை எப்போதுமே கேட்டறிந்தார்.
8 பிரச்சாரம் செய்யுங்கள்
இருபதாம் நூற்றாண்டு வணிகத்தின் முக்கியமான அம்சத்தை மூத்தபனியா மிக நன்றாக அவதானித்திருந்தார். காந்தியை ஒரு மாபெரும் விளம்பர நிபுணர் என்று சொல்பவர்கள் உண்டு. கோடானுகோடி மக்களை அவர் திரட்டவேண்டியிருந்தது. அவரது போராட்டமே பிரச்சாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டதுதான். அந்தப்பிரச்சாரத்தை காந்தி அளவுக்கு வெற்றிகரமாகச் செய்த இன்னொரு அரசியல்தலைவர் இல்லை.
தான் சொல்ல விரும்பியதை ஐயத்துக்கிடமில்லாமல் கோடிக்கணக்கான மக்களுக்கு சொல்லிக்கொண்டே இருந்தார் காந்தி. அவரது நடை மிக மிக எளியது. இந்தியாவின் இதழியலாளர்களில் அவரே மிகத்திறன் வாய்ந்த முன்னோடி என்று என்னிடம் ஒருமுறை எம்.கோவிந்தன் சொன்னார். இன்றைய இந்திய இதழியலின் நடை உட்பட பல விஷயங்களை காந்தி தான் உருவாக்கினார். வாழ்நாள் முழுக்க சலிக்காமல் எழுதிக்கொண்டே இருந்தார் காந்தி. இன்று காந்தியின் மொத்த படைப்புகளை பார்க்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. அன்றாட அரசியல் செயல்பாடுகளின் மலைமலையான வேலைகளுக்கு நடுவே இத்தனையையும் எழுதிக்குவித்திருக்கிறார்! அவர் இந்தியாவிடம் ஓயாமல் உரையாடிக்கொண்டிருந்தார்!
9 குறியீடுகளை பேசவிடுங்கள்
தன்போராட்டத்துக்கு காந்தி எப்போதுமே திறன் வாய்ந்த குறியீடுகளை உருவாக்கிக் கொண்டார். சொற்களைவிட ஆழமாக அவை பொது மக்களிடையே சென்று சேரும் என அவர் அறிந்திருந்தார். சர்க்கா அவரது சக்தி வாய்ந்த குறியீடு. அவரது அரைவேட்டி, அவருக்குப்பின்னால் சென்றுகொண்டிருந்த கழிப்பறை, உப்பு என அவரது குறியீடுகள் ஏராளமானவை.
காந்தி 1915ல் முதன்முதலாக காங்கிரஸ் மாநாட்டில் காந்தி கலந்துகொண்டபோது அவர் ஒரு குஜராத்தி விவசாயியின் தோற்றத்தில் முண்டாசும் இந்தியச் சட்டையுமாக வந்து பேசியது ஓர் உதாரணம். மேலைநாட்டு உடைகள் அணிந்த காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தில் அவர் சட்டென்று தனியாகத்தெரிந்தார். சலித்துப்போன கூட்டம் சட்டென்று அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்தது
அவரது போராட்டங்களை அறிவித்த முறையிலேயே அந்த நாடகத்தன்மை எப்போதும் இருப்பதைக் காணலாம். அன்னியத்துணிகளை புறக்கணிப்பதும் சரி உப்பு சத்தியாக்கிரகமும் சரி. ஏன் லண்டனுக்கு ஆட்டுடன் சென்று இறங்கி அரையாடையுடன் சென்று பிரிட்டனின் மகாராணியைப் பார்த்தது வரை எல்லா நிகழ்வுகளிலும் திட்டவட்டமான பிரச்சார நோக்கம் உண்டு. அவர் சொல்ல எண்ணிய விஷயத்தை அந்தச்செயல்களே திட்டவட்டமாக அனைவருக்கும் தெரிவித்துவிடும்.
10 தவிர்க்கமுடியாதபோது மட்டுமே எதிர்த்து நில்லுங்கள்
காந்தியின் போராட்டத்தின் முக்கியமான கூறு இது. இதை அவரது சகாக்கள் பெரும்பாலும் புரிந்துகொள்ளவில்லை. எதிர் தரப்பு என்பது ஆட்டத்தின் மறுகட்சி மட்டுமே என்ற நிதானத்துடன் மட்டுமே அவர் எப்போதும் செயல்பட்டிருக்கிறார். அவர்களை எதிரிகளாக அவர் எண்ணியதில்லை. ஆகவே அவர்களின் நல்லியல்புகளை அவர் புரிந்துகொண்டார். அவர்களுடன் எங்கெல்லாம் ஒத்துப்போக முடியுமோ அங்கெல்லாம் ஒத்துப்போனார். எங்கே உறுதியாக எதிர்த்துப்போரிடவேண்டுமோ அங்கே மட்டுமே அதைச்செய்தார்
பிரிட்டிஷாரின் சட்ட அமைப்பில் காந்திக்கு நம்பிக்கை இருந்தது. அவர்களின் இதழியலிலும் அவர்களின் நாட்டில் இருந்த ஜனநாயகப் பண்புகளிலும் காந்தி ஆழமான மதிப்பு கொண்டிருந்தார். அவற்றை தன் நட்பு சக்திகளாக மட்டுமே அவர் அணுகினார். எங்கெல்லாம் பிரிட்டிஷ் அமைப்பு சாதகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் அதனுடன் ஒத்துழைத்தார். மூர்க்கமான ஒற்றைப்படையான எதிர்ப்பை அவர் முன்வைக்கவில்லை
ஒரு விஷயத்தில் பிரிட்டிஷ் சட்டம் என்னென்ன உரிமைகளை அளிக்கிறதோ அதையெல்லாம் அடைவதற்கே காந்தி எப்போதும் முயல்கிறார். அதன் பின் அச்சட்டத்துக்கு அப்பால் என்னென்ன சாத்தியங்கள் உள்ளன என்று பார்க்கிறார். தேவைப்பட்டால் அதற்காக போராட்டத்தை முன்னெடுக்கிறார். போராட்ட சக்தியை ஒருபோதும் வீம்புக்காக வீணடிப்பதில்லை அவர்.
11.சமரசத்துக்கு எப்போதுமே இடமிருக்கும் என நினைவில் வைத்திருங்கள்.
காந்தி போராட்டத்தை சமரசத்தை நோக்கிச் செல்லவேண்டிய ஒரு பயணமாகவே கண்டார். ‘கடைசிவெற்றி’ வரை செல்லக்கூடிய ஒரு போராட்டம் என்று ஒன்று இல்லை. எதிரிகளை அல்லது எதிர்தரப்பை முழுமையாக அழித்தொழித்துவிட்டு ஒரு வெற்றி என்பது அனேகமாகச் சாத்தியமில்லை. நம் எதிர்தரப்புக்கும் அதற்கான இருப்பும் நியாயங்களும் உண்டு. அவர்களுக்கும் ஆசைகளும் திட்டங்களும் இருக்கும். அவற்றுக்கும் இடம்கொடுக்கும் ஒரு முடிவே தீர்வாக இருக்க முடியும்.
ஆகவே போராட்டம் என்பது நமது தரப்பை முழுமையாக திரட்டிக்கொண்டு நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி நம்முடைய கோரிக்கைகளை முன்வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமே. நம் தரப்பை தவிர்க்கமுடியாது என்று நம் எதிர்தரப்பு உணர்ந்ததுமே சமரசத்துக்கான இடம் ஆரம்பமாகிறது. நம் இடத்தை எதிர்தரப்பு அங்கீகரிப்பதைப்போலவே எதிர்தரப்பை நாமும் அங்கீகரிப்பதே சமரசம். சமரசம் என்பது இருவரும் சிலவற்றை அடைந்து சிலவற்றை விட்டுக்கொடுத்து அடையும் ஒரு பொதுமுடிவு.
காந்தி அவர் உயிரென மதித்த சில விஷயங்களில் அபாரமான பிடிவாதம் கொண்டவர். ஆனால் எப்போதும் பேச்சுவார்த்தைக்கும் சமரசத்துக்கும் தயாராக இருந்தார். எப்போதும் விட்டுக்கொடுத்து இறங்கிவர சித்தமாக இருந்தார். உப்புசத்யாக்ரகத்தை ஒட்டி நடந்த பெரும் எழுச்சியின் உச்சியில் அவர் காந்தி-இர்வின் ஒப்பந்தப்படி சமரசம்செய்துகொண்டார். அதன் மூலம் தன் தரப்புக்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்துகொண்டு தன் வலிமைகளை தொகுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை மேஜைமுன் அமர்ந்தார். எல்லா போராட்டத்தின் உச்சியிலும் காந்தி சமரசத்துக்கே முயன்றிருக்கிறார்.
பிற்கால மார்க்ஸிய ஆய்வாளரான அண்டோனியோ கிராம்ஷி இவ்வகை போராட்டத்தை நிலையுத்தம் [Static war] என்று சொல்கிறார். போராட்டம் மூலம் சமரசத்துக்குச் சென்று கிடைத்த லாபங்களை தக்கவைத்துக்கொண்டு அந்த தளத்தில் தன்னை நிலைநாட்டிக்கொண்டு அடுத்த கட்ட போராட்டத்தை அடைதல். இந்நிலையில் போராட்டம் நடுவே சமரசம் மூலம் கிடைக்கும் லாபங்களே மேலும் போராடுவதற்கான ஆற்றலை அளிக்கின்றன
12.சின்னவிஷயங்களில் கவனம் கொள்ளுங்கள்
காந்தி ஒருமாபெரும் இயக்கத்தை நடத்தியவர். லட்சக்கணக்கில் பணம் அவர் வழியாகச் சென்று கொண்டிருந்தது இயல்பே. மிகப்பெரிய போராட்டங்களில் எப்போதும் அவர் ஈடுபட்டிருந்தார். ஆனால் எப்போதும் சின்ன விஷயங்களிலும் கூர்ந்த கவனம் கொண்டிருந்தார். பலலட்சம்பேர் சேர்ந்து செய்யும் செயலில் ஒருவர் செய்யும் சின்ன பிழை பலரால் செய்யப்பட ஆரம்பித்தால் பெரும் வீழ்ச்சியாக ஆகிவிடும் என அவர் பயந்தார்
உதாரணமாக காந்தி முதன்முதலாக 1915ல் இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கு சென்றபோது அவரது கண்ணில்பட்டது அங்கே இருந்த சுகாதாரக் கேடுகள்தான். சமையலறை ஒழுங்கில்லாமல் இருந்தது. கழிப்பறைகள் நாறிக்கொண்டிருந்தன. அவரது கவனம் அதில்தான் முதலில் பதிந்தது
காந்தி கடைசிவரை சில்லறைச் செலவுகளை எண்ணி எண்ணி கணக்கு வைத்திருந்தார். பிறரிடமும் அதேபோல பைசாக்கணக்கு கேட்டார். கடைசி காங்கிரஸ் தொண்டனும் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருக்கவேண்டும் என அவர் எதிர்பார்த்தார். அவரது கணக்கு கேட்கும் போக்கில் மனம் வெறுத்து ‘மகாத்மாக்களை வழிபடலாம் சேர்ந்து பணியாற்ற முடியாது’ என்று கணக்குபுத்தகங்களை அவர் முன் வீசிவிட்டு ராஜாஜி வெளியேறியிருக்கிறார். ஆனால் ஒரு பைசா என்பது பல லட்சம் ரூபாயின் முதல் அலகு என காந்தி எண்ணினார்.
பழைய காகிதங்களை திரும்ப பயன்படுத்துவது, உள்ளூர் பொருட்களைக் கொண்டே குடில்கள் அமைப்பது என சின்னச் சின்ன செலவுகளை காந்தி எப்போதும் பார்த்துப் பார்த்துச் செய்தார். ஒரு விஷயத்தைச் செய்ய மிகச் செலவுகுறைந்த வழி என்ன என்பதையே எப்போதும் அவர் கவனித்தார்
- ஆறப்போடுங்கள்
காந்திய வழிகளில் ஒன்று பிரச்சினைகளை ஆறப்போடுவதாகும். பல சமயம் பிரச்சினைகளை நாம் உணரும்போது அவை உச்சத்தை நோக்கி செல்ல ஆரம்பித்திருக்கும். அவற்றில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்புமே உச்சகட்ட கொந்தளிப்புடன் இருக்கும். அந்நிலையில் அதில் செய்யப்படும் எந்த முயற்சியும் அந்த உச்ச கட்ட மோதலில் ஒரு தரப்பாகவே ஆகிவிடும். நாமும் அந்தப்பிரச்சினையின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளுக்கு எதிர்வினையாற்றி நம்முடைய நிதானத்தை இழப்போம். நம்முடைய அலசி ஆராயும் திறன் இல்லாமலாகும்.
அது கொதித்துக்கொண்டிருக்கும் ஒருபொருளைக் கையாள்வது போன்றது. அல்லது நான்குதிசையிலும் நான்கு பேர் இழுக்கையில் ஒரு சரடின் மையமுடிச்சை அவிழ்க்க முற்படுவதற்குச் சமம்.
அதைச் சமாளிக்கச் சிறந்த வழி ஒத்திப்போடுவதுதான். அதன் வெப்பம் தணியும் வரை காத்திருப்பது. பெரும்பாலான விஷயங்கள் ஒத்திப்போடுவதனால் பேரிழப்புகள் எதையும் அளிக்காதவையாகவே இருக்கும். அந்நிலையில் அவை இயல்பாக அந்த உச்சநிலையை தாண்டி முறுக்கத்தை இழந்து முடிச்சு நெகிழ ஆரம்பிப்பது வரை காத்திருக்கலாம்.
ஆனால் காந்தி சொல்வது உதாசீனப்படுத்துவதை அல்ல. வேறு வேலைக்குச் சென்றுவிடுவதை அல்ல. அந்தப்பிரச்சினையை அதில் பங்குகொள்ளாமல், ஆகவே உணர்ச்சிகரமான ஈடுபாடு ஏதும் இல்லாமல், அதைக் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருத்தல். அது உருவாக்கும் விளைவுகளைப் பற்றி எச்சரிக்கையுடன் இருத்தல்.
இரு உதாரணங்கள். ஆங்கில அரசு காட்டிய பதவியாசை காரணமாக காங்கிரஸை பிளக்க மோதிலால் நேருவும் சித்தரஞ்சன் தாஸும் முடிவுசெய்தபோது சமரசங்கள் பயனிழந்தபோது காந்தி அந்தப் பிரச்சினையில் இருந்து விலகிக் கொண்டார். கிராம நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டார். 1923 முதல் 1928 வரை ஏறத்தாழ ஐந்து வருடம் பொறுமையாக காத்திருந்தார். ஆனால் உன்னிப்பாக நிலைமைகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். காங்கிரஸின் மீதான தன் கட்டுப்பாட்டை மட்டும் கையில் வைத்திருந்தார்.
நான்கே வருடங்களில் அந்த மோதல் கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாமலாகியது. சரித்திரத்தின் இயல்பான பரிணாமம் பதவியாசை கொண்ட மூத்தவர்களை ஓரம்கட்டியது. காந்தி கட்சியில் சேர்த்துக்கொண்டே இருந்த இளையவர்கள், மோதிலால் நேருவின் மகனாகிய ஜவகர்லால் நேரு உட்பட, அந்த மூத்த தலைமுறையை காலாவதியாகச் செய்தார்கள். 1928ல் காந்தி மீண்டும் காங்கிரஸை வழிநடத்த வந்தபோது அப்படி ஒரு எதிர்ப்பு காங்கிரஸில் இருந்ததையே சொல்லித்தான் தெரியவேண்டியிருந்தது.
இரண்டாவது உதாரணம், 1928ல் இந்தியா நேரடியான சுதந்திரப்போரை நடத்துவதற்கான காலம் கனிந்துவிட்டது என காங்கிரஸுக்குள் இருந்த தீவிரவாதிகள் எண்ணினார்கள். பகத்சிங் போன்றவர்களின் தீவிரவாத நடவடிக்கைகள் உச்சம் கொண்டன. கட்சிக்குள்ளேயே சுபாஷ் சந்திர போஸ் முதலியவர்கள் நேரடி நடவடிக்கைகளை விரும்பினார்கள். ஆனால் காந்தி இந்தியா தயாராகவில்லை என்றே எண்ணினார். மக்களை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆயுதவலிமைக்கு எதிராக கிளப்பிவிட அவர் எண்ணவில்லை
ஆகவே அந்த சந்தர்ப்பத்தை அவர் ஆறப்போட்டார். இரண்டுவருட கால அவகாசம் கேட்டார். தீவிரக்குழுக்கள் ஒருவருடம் கொடுக்க ஒப்புக்கொண்டார்கள். ஒருவருடத்திற்குள் தீவிரவாதிகள் வரவிருப்பதாக நம்பிய இந்திய எழுச்சி என்பது நகரங்களின் படித்த நடுத்தர வர்க்கத்தில் மட்டும் நிகழ்ந்த ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்பு மட்டுமே என்று தெள்ளத்தெளிவாக தெரிய ஆரம்பித்தது. காந்தி அவரது அடுத்தகட்ட போராட்டமாகிய உப்புசத்யாக்ரகத்தை நோக்கிச் சென்றார்.
14 தற்காலிகமான தோல்விகளை ஒத்துக்கொள்ளுங்கள்
காந்தியின் போராட்டம் பலமுறை கடுமையான பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறது. ஒரு செயலுக்கான விளைவு என்பது அந்தச் செயலுடன் ஒன்றுக்கு ஒன்று என்ற வகையில் நேரடியாகச் சம்பந்தப்பட்டது அல்ல. அதனைத் தீர்மானிக்கும் சக்திகள் ஏராளமானவை. எந்த ஒரு நிகழ்வும் வரலாறு என்ற பெரிய ஓட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. வரலாற்றின் விதிகள் அதில் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் இயங்குகின்றன. பலசமயம் அவ்வரலாறு நிகழும்போது அவை நம் கண்ணுக்குப் படுவதில்லை. இது எந்த ஒரு செயலுக்கும் பொருந்தும்
காந்தி பின்னடைவுகளை இயல்பானதாகவே எடுத்துக்கொண்டார். தன் வழிமுறைகளை மறுபரிசீலனை செய்யவும் புதிய சாத்தியங்களை பற்றி யோசிக்கவும் அவற்றை பயன்படுத்திக் கொண்டார். ஒரு சந்தர்ப்பத்திலும் ‘இது கட்டாயம் வெற்றி பெறும்’ என்று நம்பி அவர் செயலுக்கு இறங்கியதில்லை. வெற்றி தோல்விகள் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டவை என அவர் நினைத்தார். ஆனால் தன் செயல்மீதான நம்பிக்கையுடன் அர்ப்பணிப்புடன் செயலாற்ற ஆரம்பித்தார். விளைவுகள் எதிர்மறையாகச் சென்றால் அதுவும் அந்த செயலின் ஒரு சாத்தியம் மட்டுமே என எடுத்துக்கொண்டார்.
காந்தியின் போராட்டங்களில் ஆகப்பெரிய தோல்வி என்றால் அது கிலா·பத் போராட்டம்தான். முதல் இந்திய சுதந்திரப்போரான சிப்பாய் கலகத்துக்குப் பின் இஸ்லாமிய உயர்குடிகளை தன் அரவணைப்பில் வைத்திருந்தது பிரிட்டிஷ் ஆட்சி. இரட்டை வாக்குரிமை மூலம் அவர்களுக்கு சலுகை அளித்து மாகாண அரசுகளில் பதவிகளைக் கொடுத்துப் பேணியது. அவர்களுக்கு எதிராக எளிய முஸ்லீம்களை ஒருங்கிணைக்கவும் அவர்களை இந்துச் சாமானிய மக்களுடன் இணைக்கவும் கிலாப·த் உதவும் என காந்தி நினைத்தார்.
ஆனால் கிலா·பத் வரலாற்று நினைவுகள் பலவற்றை கிளறிவிட்டது. உலகமெங்கும் உருவாகி வந்த இஸ்லாமிய அடிப்படைவாத தேசிய உருவகங்களுடன் சென்று அது ஒட்டிக்கொண்டது. ஆனால் காந்தி அந்தத் தோல்வியால் தன் இலட்சியங்களை விட்டு வெளியேறவில்லை
15 கடைசிவரை விடாதீர்கள்
காந்திய வழிமுறைகளில் உச்சகட்டமானது ஒன்று உண்டு என்றால் அது கடைசிவரை தன் இலட்சியத்தை விட்டுக்கொடுக்காமலிருப்பதுதான். காந்தி உண்மையான இலக்கு என்ற ஒன்றைக் குறிவைத்தால் அதை நோக்கிச் சென்றுகொண்டே இருப்பார். எத்தனை தடைகள் வந்தாலும் எத்தனை பின்னடைவுகளைச் சந்தித்தாலும் எத்தனை காலமானாலும் அவர் அங்கே சென்று சேர்வார். ‘நேர்மையான இலக்கும் அகிம்சை வழியும் சேர்ந்தால் எத்தனை காலமானாலும் வெற்றி வந்தே தீரும்’ என்றார் காந்தி.
1915ல் இந்தியாவுக்குக் கிளம்பி வரும்போதே காந்தியின் மனதில் இந்தியாவின் முழுச்சுதந்திரம் ஒரு இலட்சியமாக இருந்திருக்கிறது. அதற்கான முன்வரைவை ஹிந்துசுயராஜ் என்ற நூலில் உருவாக்கிய பின்னரே அவர் வந்தார். காங்கிரஸ் மாநாட்டில் தன் முதல் உரையிலேயே காந்தி அதைத்தான் பேசினார். ஆனால் மெல்லமெல்ல அவர் தன் போராட்டமுறைகளை வடித்தெடுத்தார். அவற்றின் பிழைகளை சரிசெய்துகொண்டார்
காந்தி எதிர்பாராத பல தடைகள் வரலாற்றில் உருவாயின. ஒன்று, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் தந்திரம் அவர் எண்ணியதைவிட அதிக வெற்றி பெற்றது. முஸ்லீம்கள் தனிநாடுக் கோரிக்கை நோக்கிச் சென்றார்கள். ஏறத்தாழ இந்தியா முழுக்கவே பல்வேறு பிரிவினைபோக்குகள் உருவாகி வந்தன. ஆனால் அவர் நினைத்த இலக்குவரை அவர் சென்றுகொண்டே இருந்தார். அவர் உயிருடன் இருந்திருந்தால் கிராமசுயராஜ்யத்தை அடையாமல் விட்டிருக்கமாட்டார்.
- நேர்மைக்கு ஒரு வணிக மதிப்பு உண்டு என உணருங்கள்
வணிகம் என்றாலே தந்திரம்தான் என்ற நம்பிக்கை எப்போதும் நம்மில் உள்ளது. தந்திரமான ஒருவர் தந்திரமானவராகவே பிறர் கண்ணுக்குப் படுவார். அக்காரணத்தாலேயே அவரை பிறர் நம்ப மாட்டார்கள். அவருடன் அவர்களும் மிக மிக தந்திரமாகவும் எச்சரிக்கையாகவும் நடந்துகொள்வார்கள். ஆகவே அவர் மேலும் மேலும் தந்திரமாக நடந்துகொள்வதிலேயே தன் வாழ்நாளைச் செலவிடவேண்டியிருக்கும். மலையைக்கெல்லி எலிபிடிப்பவராகவே அவர் இருப்பார்.
நேர்மையான ஒருவர் அனைவரிலும் நம்பகத்தன்மையை உருவாக்குகிறார். அவரது எதிரிகள்கூட அவரை நம்ப ஆரம்பிக்கிறார்கள். அதன் மூலம் அவரது வழிகள் சட்டென்று எளிமையாக ஆகிவிடுகின்றன. காந்திக்கு இந்தச் சாதக அம்சம் கடைசிவரை இருந்தது. அவரது ஆரம்பகால வழக்கறிஞர் தொழிலிலேயே அவர் நேர்மையை வலிமையான ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார். எதிரித்தரப்புடன் நேரடியாகச் சென்று நேருக்கு நேராக தன் நேர்மையை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகளை அடைந்திருக்கிறார்
காந்தியின் அரசியல் எதிரிகளான வைஸ்ராய்கள் பெரும்பாலும் அத்தனைபேரும் அவரது நேர்மைமேல் அபாரமான மதிப்பு கொண்டிருந்ததை நாம் அவர்களின் குறிப்புகளில் இருந்து காணமுடிகிறது. குறிப்பாக ரீடிங் பிரபு, இர்வின் பிரபு போன்றவர்களுக்கு காந்திமீது ஆழமான வழிபாட்டுணர்வே இருந்திருக்கிறது. அந்த நம்பிக்கை ஒரு பெரிய ராஜபாதையை திறந்தது அவருக்கு.
- உள்ளுணர்வுக்குச் செவிசாயுங்கள்
காந்தி அவரது ‘அந்தராத்மாவின்’ குரலை எப்போதும் கேட்டார். உப்புசத்யாக்ரகம், தனிநபர் சத்யாக்ரகம் போன்ற பல விஷயங்களை காந்தி அவரது உள்ளுணர்வின் மூலமே அடைந்தார். உள்ளுணர்வு என்று காந்தி சொல்வது தெய்வத்தின் அருள்வாக்கை அல்ல என்று அவரது எழுத்துக்களிலேயே அறியலாம். 1929ல் ஒரு பெரும்போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என காந்தி எண்ணுகிறார். என்ன செய்வது என பல கோணங்களில் ஆராய்கிறார். அரைத்தூக்க மயக்கத்தில் இருக்கும்போது அவர் அந்த முடிவை அந்தராத்மாவின் குரலாக வந்தடைகிறார்
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் காந்தி சம்பந்தமில்லாமல் ஒரு குரலைக் கேட்கவில்லை என்பதே. அவர் அந்தப்பிச்சினையின் அனைத்து பக்கங்களையும் ஆராய்ந்தார். அதன் மையத்தில் இருந்தார். அதிலேயே உழன்றார். அந்நிலையிலேயே அந்தராத்மாவின் குரலை அவர் கேட்டார். இதை அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடு என்று சொல்லலாம். மனதை ஒரு புள்ளியில் குவிக்கும்போது ஆழ்மனம் அதனைச் சாராம்சப்படுத்திக்கொள்கிறது
பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள், கலைப்படைப்புகள், தத்துவக் கோட்பாடுகள் கண்டடையப்பட்ட வழிமுறை இதுவே. உள்ளுணர்வு நம் தர்க்கத்தைவிட பல மடங்கு பிரம்மாண்டமானது. அது நம்மை நம் தர்க்க மனம் கொண்டுசெல்லும் தூரத்தைவிட அதிக தொலைவுக்குக் கொண்டுசெல்லும். பல அறிவியல் கண்டுபிடிப்புகள் நேரடியாகவே அக்கண்டுபிடிப்பாளரின் கனவில் நிகழ்ந்திருக்கின்றன. ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் நாம் அவரது ஆழ்மனம் சட்டென்று திறந்துகொண்டு கண்டுபிடிப்புகளை உருவாக்கியதை மீண்டும் மீண்டும் காண்கிறோம்.
ஒரு கண்டுபிடிப்பு அல்லது புதியஞானம் என்பது எல்லாகாலத்திலுமே சட்டென்று திறந்து தன்னைக் காட்டுவதாகவே இருந்திருக்கிறது. ஆனால் ஆராய்ச்சி செய்யாத ஒருவருக்கு ஒருபோதும் உண்மையான கண்டுபிடிப்புகள் கிடைப்பதில்லை. அவர் அந்த விஷயத்தின் உச்சிவரை தர்க்கம் மூலம் ஏறிச்சென்றால் மட்டுமே அதற்கு அப்பால் உள்ள ஆழ்மனத்தளத்தை அடைய முடியும்.
அதேபோல உள்ளுணர்வின் மூலம் அடையப்பெற்ற ஒன்றை தெய்வ வாக்கு என எண்ணி அப்படியே செயல்படுத்துவதும் தவறு. உப்பு சத்யாக்கிரகம் காந்திக்கு அந்தராத்மாவின் குரலாகக் கிடைத்தது. ஆனால் மிக ஜாக்கிரதையாக ஒரு சிறிய எல்லைக்குள் ‘சாம்பிளுக்கு’ செய்து பார்த்தபின்னரே தேசிய அளவில் அதை அறிவித்தார்.
தாமஸ் வெபர் [Thomas Weber] எழுதிய உலகப்புகழ்பெற்ற நூல் ‘உப்பு சத்யாக்கிரகம் காந்தியின் தண்டியாத்திரை குறித்த வரலாற்றுப்பதிவு ‘[The Salt March : The Historiography of Gandhi’s March to Dandi] காந்தி எப்படி அவரது மாபெரும் போராட்டத்தை நடத்தினார் என்பதை சித்தரிக்கிறது. காந்தி மிகச்சிறிய அளவில், ஒரு நதி ஊற்றாகக் கிளம்புவதுபோல அதை ஆரம்பித்தார். ”கையில் ஒரு மூங்கில் கம்பு மட்டுமே இருந்த மெலிந்த 61 வயது மகாத்மா உலகின் மிகப்பெரிய சக்திக்கு எதிராக தன் ஆசிரமத்தைவிட்டு கிளம்பினார்” என்று வெப்பர் சொல்கிறார்
காந்தி சபர்மதி ஆசிரமத்தை விட்டு நடக்க நடக்க மெல்லமெல்ல அவருக்குப்பின்னால் கூட்டம் சேர்ந்தது. பின் அது பிரம்மாண்டமாக ஆகியது. என்ன நடக்கும் என்று அவர் சோதனை செய்து பார்த்தார் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு கணத்திலும் என்ன நடக்கிறது என்று கவனித்து அதற்கேற்ப அவர் போராட்ட உத்திகளை உருவாக்கிக் கொண்டே இருந்தார். அதன் பின்னரே உப்புச்சத்யாகிரகம் அந்த விதிகளின்படி இந்தியாவெங்கும் அமைக்கப்பட்டது.
அரசியலில் காந்தியத்தின் முதல் எதிரிகளில் ஒருவராக விளங்கிய கம்யூனிஸ்டுப் பெருந்தலைவர் இ.எம்.எஸ் நம்பூதிரிபபடு காந்தியின் படத்தை மட்டுமே தன் வீட்டில் வைத்திருந்தார். ஏன் என்றால் காந்தி மட்டுமே அன்றாட தனிவாழ்க்கைக்கு மிகச்சிறந்த வழிகாட்டியாக இருக்க முடியும் என்று அவர் தன் வெற்றிகரமான நெடுநாள் வாழ்க்கைமூலம் கற்றிருந்தார்.
வியாபாரம் என்பதற்கு சம்ஸ்கிருதத்தில் பரவுதல் என்றே பொருள். வணிகம் என்பது பரவுதலே. நமது மொத்த உலகியல் வாழ்க்கையையும் அவ்வகையில் ஒரு வியாபரம் என்றே எடுத்துக்கொள்ளலாம். வியாபாரத்தின் விதிகள் அன்றாட வாழ்க்கையின் எல்லா தளங்களுக்கும் முற்றிலும் பொருந்துபவையே. ஆகவே மூத்த பனியா உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அன்றாடசெயலிலும் பெரும் வழிகாட்டியாக அமையமுடியும்.
[மேலும்]