லாயிட் ருடால்ப் மற்றும் சூசன் ஹோபர் ருடால்ப் எழுதிய ‘பின் நவீனத்துவ காந்தி மற்றும் கட்டுரைகள்’ [Postmodern Gandhi and Other Essays Lloyd I. Rudolph, Susanne Hoeber Rudolph ] நூலில் ஒரு குறிப்பிடத்தக்க கட்டுரை இருக்கிறது. ‘கோழைத்தனம் மீதான அச்சம்’ என்ற அக்கட்டுரை இந்திய சாதிகளின் மன அமைப்பில் தீரமும் கோழைத்தனமும் எவ்வாறெல்லாம் பாரம்பரியமாக உருவாகியிருந்தது என்று அக்கால பிரிட்டிஷ் குறிப்புகளின் அடிப்படையில் ஆராய்ந்து அந்த மனநிலைகள் மேல் காந்தியின் பங்களிப்பு என்ன என்பதை விரிவாகப்பேசுகிறது.
இந்தியாவை ஆளவந்த பிரிட்டிஷார் தங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்காக குறிப்புகளை எழுதி வைத்துச்சென்றார்கள். அவை பின்னர் முக்கியமான வரலாற்று ஆவணங்களாக ஆயின. உதாரணமாக மதுரா கன்டிரி மானுவல் எழுதிய ஜெ.எச்.நெல்சன் தமிழக மக்களை அவரது ஆதிக்கநோக்கில் சாதியடிப்படையில் குண இயல்புகளைக் கற்பித்துச் செல்வதைக் காணலாம்.
”போலிப்பாவனை கொண்ட பிராமணன் [Pharisaical] சட்டங்களே இல்லாத மறவன், கஞ்சத்தனமான செட்டி, சுயநலவாதியான வெள்ளாளன், மந்தமான நாயக்கன், தந்திரமாய் பதுங்கும் கள்ளன் [skulking] நிலைகொள்ளாத குறவன், கூறுகெட்ட பறையன் [licentious] ஆகியவையே கூரிய அவதானிப்பின் மூலம் தெளிவாக பிரித்தறியத்தக்க இச்சாதிகளின் உள்ளார்ந்த இயல்புகள்’‘ [பாகம் I ,பக்கம் 16. The Madura Country -A manual J..H..Nelson] என்று ஜே.எச்.நெல்சன் சொல்கிறார். இதில் இந்தியர்களைப் பற்றி அவர் கொன்டிருந்த இளக்காரமான பார்வை இருந்தாலும் இது அக்கால பிரிட்டிஷ் ஆய்வுமுறையையும் காட்டுகிறது
இந்த பதிவுகளின் நோக்கம் என்னவானாலும் இந்திய சமூகத்தின் சில இயல்புகள் அதில் காணக்கிடைக்கின்றன. சாதியமைப்பின் மூலம் இன்னாருக்கு இன்ன தொழில் என்பது நூற்றாண்டுகளாக உறுதிப்பட்டிருந்தமையால் இந்திய சாதிகளின் குணங்கள் அதற்கேற்ப அமைந்திருந்தன. இந்திய சமூகத்தில் போர்புரிவதற்கான சாதிகள் தனியாக இருந்தன. போர்க்குணம் என்பது பெரும்பாலும் அவர்களுக்குரியதாகவே இருந்தது. இதைத்தவிர பழங்குடிக்குணம் கொண்ட சில சாதிகள் பூசலிடும்தன்மை கொண்டிருந்தன.
ஆயினும் பொதுவாக இந்தியாவின் மிகப்பெரும்பாலான மக்கள் வன்முறையற்றவர்களாக சமரச நோக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதற்குக் காரணம் இந்திய குணத்தை நிர்ணயித்தது சமணம் என்பதே. நம்முடைய கலை, இலக்கிய, பண்பாடு அனைத்துமே அந்த சமரசச்சூழலில் நடந்த நீண்ட கருத்துப் பரிமாற்றம் மூலம் உருவாகி வந்ததுதான்.
இத்தகைய சமூகம் மீது பதினொன்றாம் நூற்றாண்டுமுதல் அலையலையாக வந்து மோதிய அன்னியபப்டையெடுப்புகள், சூறையாடல்கள் இங்கிருந்த போருக்கான அமைப்புகளை நெடுங்கால தாக்குதல்கள் வழியாக முற்றாகவே அழித்துவிட்டிருந்தன. இதன் தன்னம்பிக்கையையும் வீரத்தையும் இல்லாமலாக்கிவிட்டிருந்தன. எஞ்சிய சராசரி இந்தியனின் மனநிலை என்பது பணிந்து போவதும் பதுங்கி வாழ்வதுமாகவே இருந்தது என அக்கால பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கருதினார்கள்.
தங்கள் கட்டுரையில் லாயிட் ருடால்ப் மற்றும் சூசன் ஹோபர் ருடால்ப் அக்கால இந்திய நீதியாளர்களான ஜேம்ஸ் ·பிஸ்ஜிமஸ் ஸ்டீபன் [James Fitzjames Stephen] ஆட்சியாளர்களான கர்ஸன் பிரபு முதலியவர்கள் இந்திய சமூகத்தை ஆண்தன்மை கொண்ட சமூகங்கள் பெண்தன்மை கொண்ட சமூகங்கள் என இரண்டாகப் பிரித்துச் சொல்வதைக் குறிப்பிடுகிறார்கள். பெண்தன்மை கொண்ட சமூகங்களே இந்தியாவில் அதிகம். அவர்கள் வணிகமும் சேவகமும் செய்யக்கூடியவர்கள்.
ஆண்தன்மை கொண்ட சமூகங்கள் என அவர்கள் கருதிய சமூகங்களான இஸ்லாமியர், சீக்கியர் போன்றவர்களை அரவணைத்து தங்களுடன் சேர்த்துக்கொண்டார்கள். தமிழ்நாட்டில் தேவர்கள் முதலிய ஏராளமான ஆண்தன்மைகொண்ட சாதிகளை குற்றபரம்பரைச் சட்டம் [Criminal Tribes Act (CTA) 1871] மூலம் ஒடுக்கினார்கள். இவ்வாறு இந்திய நிலப்பரப்பை முற்றாகவே தங்கள் பிடிக்குள் கொண்டுவந்தார்கள்.
இங்கே இன்னொரு ஆர்வமூட்டும் விஷயம் உண்டு. பிரிட்டிஷார் ஐரோப்பிய சமூகங்களை ஒட்டுமொத்தமாக ஆண்தன்மை கொண்ட சமூகங்கள் என்றும் கீழை சமூகங்களை பெண்தன்மை கொண்டவை என்றும் வகுத்தார்கள். கீழைச்சமூகம் தேக்கமுற்று நின்றுவிட்ட ஒன்று, செயலூக்கம் இல்லாதது என்று எண்ணினார்கள்.
இந்திய சுதந்திரப்போராட்டம் தொடங்கும்போது இங்கே ஷத்ரிய சக்தி என்று சொல்லப்பட்ட அமைப்பு முற்றாகவே சிதறிச் செயலிழந்து கிடந்தது. பிரிட்டிஷார் இந்தியாவில் நுழைந்தது முதல் நூற்றுக்கணக்கான போர்க்களங்களில் அதை எளிதில் வென்றார்கள். அதன் கடைசி அடி என்பது 1857ல் நடந்த இந்தியா சுதந்திர எழுச்சிதான். அது அதன் உள்முரண்பாடுகளால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது.
இந்திய மறுமலர்ச்சியின் தொடக்க காலம்முதலே இந்தியாவின் ஷத்ரிய வீரியத்தை மீண்டும் எழச்செய்யவேண்டுமென்ற கனவு முன்வைக்கபப்ட்டது ருடாலப் தம்பதிகள் தன் நூலில் விவேகானந்தர் எப்படி ‘முறுகிய தசைகளும் இரும்பாலான நரம்புகளும் கொண்ட’ இளைஞர்களுக்காக அறைகூவினார் என்பதை சுட்டிக்காட்டுகிறார். அந்த அறைகூவலையே திலகர் முன்னெடுத்தார். ஷத்ரிய ஆற்றலை மீண்டும் ஒன்றுதிரட்டவும் அதைக்கொண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு போரை நடத்தவும்தான் திலகர் முயன்றார்.
அந்த முயற்சி வெறும் வார்த்தை இலட்சியவாதமாக இருந்ததே ஒழிய எங்குமே எந்த பெரிய பாதிப்பையும் உருவாக்கவில்லை. உதிரி பயங்கரவாதம் என்ற எல்லைக்கு அப்பால் அது செல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அது ஒரு வங்க நிகழ்வு என்பதற்கு மேல் வளரவில்லை. அந்த வழியை எவ்வகையிலும் இந்தியாவில் பயன்படுத்தியிருக்க இயலாது. முயன்ற இடங்களில் விளைவுகள் பரிதாபகரமாக இருந்தன.
மிகச்சிறந்த உதாரணம் நெல்லை எழுச்சிதான். வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்ரமணிய சிவா, நீலகண்டபிரம்மசாரி ஆகியோரின் முயற்சியால் நெல்லையில் உருவான ஆயுதப்புரட்சிக்கான ஏற்பாடுகளை இப்போது வாசிக்கும்போது அவர்களுக்கு ஆயுதப்போராட்டம் என்றால் என்னவென்றே புரிந்திருக்கவில்லை என்ற எண்ணமே உருவாகிறது. ஆயுதப்பயிற்சிபெறுவது அணிதிரள்வது அனைத்தையும் முற்றிலும் முதிரா இலட்சியவாதத்துடன்தான் அவர்கள் செய்தார்கள். அதிகபட்சம் அவர்களால் முடிந்தது ஆஷ் துரையின் கொலை மட்டுமே.
அந்த ஆயுதப்புரட்சி என்பது பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்துப் பிராமணர்களால் கற்பனைசெய்யப்பட்டது. அவர்கள் தங்களை ஷத்த்ரியர்களாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்தனர். திருநெல்வேலிப்பகுதியில் இருந்த ஷத்ரிய மறவர்கள் தங்கள் அறைகூவலைக் கேட்டு பொங்கி வருவார்கள் என நினைத்தனர். ஒன்றும் நடக்கவில்லை. கொசுவை அடிப்பதுபோல நெல்லைக்கலகத்தை பிரிட்டிஷ் அரசு மிகமிகக் குறைவான ராணுவ பலத்தால் அழித்தது. பின்பு சுதந்திரம் கிடைக்கும் காலம்வரை நெல்லையில் எந்தவகையான சுதந்திரப்போராட்டமும் நிகழவில்லை
என்ன தவறு நடந்தது? இந்திய ஷத்ரிய வீரம் காலாவதியாகி ஒரு நூற்றாண்டு தாண்டிவிட்டதென அந்த பிராமணர்கள் அறியவில்லை. ஷத்ரிய வீரம் என்பது நவீன அரசியல் போராட்டங்களுக்குரிய வழிமுறை அல்ல என்றும் இந்தியாவில் அரசியலுடன் தொடர்பே இல்லாமல் நூற்றாண்டுகளாக வாழும் கோடானுகோடி எளிய மக்கள் அரசியல்படுத்தப்பட்டு உரிமைப்போராட்டத்துக்கு வரும்போது மட்டுமே மாற்றங்கள் நிகழும் என்றும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் அர்ஜுனனும், சிவாஜியும், குருகோவிந்த சிம்மனும் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தார்கள்.
இத்தகைய உதிரிக்கலகங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் நிகழ்ந்தன. தேசம் என்ற கருதுகோளை அன்றைய மக்களுக்கு பரவலாக எடுத்துச்செல்ல அவை பயன்பட்டன. கலகங்களின் பிராச்சார மதிப்பு மிக அதிகம். ஆனால் அவை உடனடியாக அடக்கப்படாமல் பெரிதாக நீடித்திருந்தால் பேரழிவையே உருவாக்கியிருக்கும். மிகச்சிறந்த உதாரணம் 1921ல் கேரளத்தில் நடந்த மாப்பிளா கலகம்.
காரணங்கள் இரண்டு. ஒன்று, பிரிட்டிஷார் அன்று உலகின் மிகச்சிறந்த ராணுவத்தை வைத்திருந்தார்கள். தொழிற்புரட்சி நடந்த ஒரு பேரரசின் தொழில்நுட்பத்தில் சிறந்த ராணுவம் அது. உலகம் முழுக்க இருந்து எல்லையில்லா வளங்களை தன் கையில் வைத்திருந்தது.
அந்த ராணுவத்தை இன்னொரு தொழில்நுட்ப பேரரசின் ராணுவம் மட்டுமே எதிர்கொள்ள முடியும். அப்படி இருந்தும்கூட பிரிட்டிஷாரை எவருமே தோற்கடிக்க இயலவில்லை என்பதே வரலாறு. காரணம் சக தொழில்நுட்பதேசங்களுடன் ராணுவ ஒப்பந்தங்கள் செய்துகொண்டு அச்சவாலை அது சந்தித்தது.
இரண்டாவதாக, இந்தியாவில் பிரிட்டிஷார் இங்கிருந்த கோடானுகோடி மக்களால் ஆன குடிமைச்சமூகத்தின் அங்கீகாரத்தின் அடிப்படையிலேயே ஆட்சி செய்தார்கள். பிரிட்டிஷார் இங்கே வரும்போது இங்கிருந்த அரசுகள் நிலப்பிரபுத்துவ அரசுகள். அவற்றுக்கு மாறாக முதலாளித்துவ அரசு ஒன்றை பிரிட்டிஷார் முன்வைத்தார்கள். நிலப்பிரபுத்துவத்தைவிட முன்னேறிய நீதிமுறையும் நிர்வாக முறையும் முதலாளித்துவத்துக்கு உண்டு. மேலும் பிரிட்டிஷார் இந்தியாவுக்கு வந்த காலத்தில் இங்கே பேரரசுகள் சிதைந்து ஒருவரோடொருவர் போரிட்டுக்கொண்டிருந்த பலநூறு சின்னஞ்சிறு ஆட்சியாளர்கள் முற்றிலும் அராஜகநிலை ஒன்றை உருவாக்கியிருந்தார்கள்!
ஆகவே இங்குள்ள மக்கள் பிரிட்டிஷாரை ஆதரித்தார்கள். அந்த ஆதரவின்பேரிலேயே அவர்கள் இந்நாட்டை ஆண்டார்கள். மாபெரும் பிரிட்டிஷ் ராணுவம் விசுவாசம் மிக்க இந்தியவீரர்களால் ஆனதாக இருந்தது. ஜாலியன்வாலாபாக்கில் ஜெனரல் டயர் தலைமையில் இந்தியப்பொதுமக்களைச் சுட்டு வீழ்த்தியது இந்தியாவின் மகத்தான ஷத்ரிய வல்லமைகளில் ஒன்றான கூர்க்காக்களின் படைதான். பிரிட்டிஷ் ஆட்சியின் பிரம்மாணடமான நிர்வாக அமைப்பு இந்தியர்களால் ஆனதாகவே இருந்தது.
மேலும் ஒருபேச்சுக்காக திலகரின் கனவுப்படி இந்தியாவின் ஷத்ரிய சக்தி எழுச்சிபெற்று பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தியிருந்தாலும் அது எத்தகைய ஆட்சியை உருவாக்கியிருக்கும்? ஒரு சிறுபான்மையினர் மொத்த சமூகத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருப்பார்கள். மிண்டும் நிலப்பிரபுத்துவ ஆட்சியே உருவாகியிருக்கும். அனைவருக்கும் அதிகாரமுள்ள ஜனநாயகத்துக்கு நாம் வந்துசேர மீண்டும் ஒரு மக்கள் எழுச்சியும் போராட்டமும் தேவைப்பட்டிருக்கும்.
அந்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தில்தான் காந்தி அரசியலுக்குள் நுழைகிறார். அவர் வந்த காலகட்டத்தில் காங்கிரஸ் ஏன் சோனியான ஓர் அமைப்பாக இருந்தது என்பதை மேலே சொன்ன பின்னணியில்தான் பார்க்க வேண்டும். அப்போது அரசியலுக்குள் இருந்தவர்கள் இரண்டே தரப்பினர்தான். ஐரோப்பிய பாராளுமன்றமுறையை நம்பிய உயர்மட்டத்தினர். இந்தியாவின் பிராமண-ஷத்ரிய பாரம்பரியத்தை மீட்டெடுக்க விரும்பிய மரபுவாதிகள். இருவருமே மிகச்சிறுபான்மையினர். மீதிப்பெரும்பகுதி மக்கள் அரசியலுணர்வில்லாமல் தங்களுக்கே உரிய தயக்கத்துடன் வெளியே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
‘அகிம்சைப்போராட்டத்தின் தோற்றுவாய்கள், தல்ஸ்தோயும் காந்தியும் அவர்களின் வரலாற்றுப்பின்னணியில்’ என்ற நூலில் ஆய்வாளரான மார்ட்டின் கிரீன் [The Origins of Nonviolence: Tolstoy and Gandhi in Their Historical Settings: Martin Burgess Green] காந்தியின் அகிம்சைநோக்குக்கு இந்தியாவின் தொன்மையான சமணப்பாரம்பரியத்தில் உள்ள வேர்களை விரிவாக ஆராய்கிறார். வரலாறு முழுக்கவே இந்தியாவின் எளிய விவசாய மக்களிடையே அகிம்சைப்போராட்டம், அரசுக்கு சாத்வீகமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தல் இருந்துவந்திருக்கிறது என்று கிரீன் கூறுகிறார். அந்த போராட்டம் ஒற்றுமை மூலமும் ஆன்ம வல்லமை மூலமும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்வதாகவே இருந்து வந்துள்ளது என்கிறார். காந்தியின் தொடக்கம் அங்கிருந்துதான்.
காந்தி அந்த எளிய மக்களிடம் பேசினார். அவர் 1915ல் இந்திய தேசிய காங்கிரஸின் வருடாந்தரமாநாட்டில் பேசிய முதல்பேச்சே அதைப்பற்றித்தான். ‘எங்கே பொதுமக்கள்?’ என்று கேட்டார் காந்தி. அந்த கோடானுகோடி மக்களை அரசியலுக்குக் கொண்டுவர முயன்றார். அதற்கான ஆயுதம் அவரிடம்தான் இருந்தது. அது இந்தியாவின் சமணப்பாரம்பரியம். அதைத்தான் அவர் அகிம்சை என்றபேரில் முன்வைத்தார். அதுவே இந்தியாவில் மாபெரும் மக்கள் பங்கேற்புள்ள ஒரு ஜனநாயக சக்தியாக மாறியது.
காந்தியின் வருகை இந்திய மக்களுக்கு எதை அளித்தது என நேரு குறிப்பிடுவதை ரூடால்ப் தம்பதியினர் அவர்களின் நூலில் மேற்கோள் காட்டுகிறார்கள்.”அவர் [காந்தி] சொன்ன பெரும்பாலான விஷயங்கள் எங்களால் ஓரளவுக்கே ஒப்புக்கொள்ளப்பட்டன, அல்லது முற்றாக நிராகரிக்கப்பட்டன. ஆனால் இது இரண்டாம்பட்சமானதே. அவர் எங்களுக்குக் கற்பித்தவற்றின் சாரம் அச்சமின்மை, உண்மை, அவற்றுடன் தொடர்புள்ள செயலூக்கம் ஆகியவையே… திடீரென்று மக்களின் தோள்களின் மீதிருந்து அச்சத்தின் கரிய சுமை விலகியதுபோலத் தோன்றியது. கண்டிப்பாக முற்றிலுமாக அல்ல. ஆனால் பிரமிப்பூட்டும் அளவுக்கு! அது ஒரு உளவியல் மாற்றம். கிட்டத்தட்ட ஒரு உளவியல் நிபுணன் போல அவர் மக்களின் இறந்த காலத்துக்குள் ஊடுருவிச்சென்று அவனுடைய உளச்சிக்கல்களின் வேர்களைக் கண்டுபிடித்து அவற்றை அவனுக்கே காட்டிக்கொடுத்து அந்தச் சுமையில் இருந்து அவனை விடுவித்தார்”
இதுதான் இந்திய அரசியலில் காந்தியின் பங்களிப்பு. அவர் இந்தியாவின் கோழையான மக்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி அரசியலுக்குக் கொண்டுவந்தார். நூற்றாண்டுகளாக குரலற்றுப் பதுங்கிக் கிடந்த அந்த மக்கள் ஒரு பெரும் சக்தியாகத் திரண்டு உலகின் மாபெரும் சாம்ராஜ்யத்துக்கு எதிராக அறைகூவல் விடுத்தார்கள். இந்தியப்பண்பாட்டு பாரம்பரியத்தை வைத்துப்பார்த்தால் அதை ஒரு சமணமுனிவர்தான் இந்தியாவில் செய்திருக்க முடியும். அது காந்திதான்.
ஆகவேதான் இந்தியாவின் எளிய கோண்டு இன மக்கள் சமணமுனிவரைக் குறிப்பிட அவர்கள் கையாளும் மகாத்மா என்ற சொல்லை அவருக்கு அளித்தார்கள். அவர் இந்தியாவுக்கு வந்து தன் பணியை ஆரம்பித்ததுமே அந்தச் சொல் அவர் மீது படிந்துவிட்டது. பின்னர் அந்தச் சொல்தான் அவரை இந்தியா முழுக்க எளிய மக்களிடம் கொண்டுசென்றது. வாளேந்தி படைநடத்தும் ஷத்ரியனுக்குப் பதில் மயில்பீலித்தோகையுடன் ஒரு சமணமுனி தங்களை வழிநடத்த வந்துவிட்டார் என்ற எண்ணத்தை அது இந்தியப் பண்பாட்டின் ஆழ்மனத்துக்குச் சொன்னது.
இபப்டிச்சொல்லலாம், 1915-ல் இந்தியச் சுதந்திரப்போர் அதன் திருப்புமுனைப்புள்ளியை அடைந்தது. மிதவாதிகளின் போக்கில் அதிருப்தி அடைந்த காங்கிரஸை திலகர் தரப்பு கைப்பற்றும் நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட இந்தியா திலகரின் வன்முறை சார்ந்த நேரடிப்போராட்ட அரசியலுக்குள் புகக்கூடிய தருணம் அது. அப்போதுதான் காந்தி உள்ளே வந்தார்
இந்திய சுதந்திரப்போராட்டத்தில் இந்தியப் பாரம்பரியம் அளிக்கும் இரு வழிகள் திறந்திருந்தன. ஒன்று பிராமண-ஷத்ரியர்களின் இந்து வழி. இன்னொன்று வைசியர்களின் சமண வழி. முதல்வழி ரஜோ குணம் மிக்கது. உதிரப்போராட்டத்தை நோக்கிச் செல்வது. இரண்டாவது வழி, சத்வ குணம் கொண்டது. சாத்வீகப்போராட்டத்தை நோக்கிச் செல்வது. முதல்வழியில் வீரர்களுக்கே இடம். இரண்டாம் வழியில் எளிய மக்களுக்கே இடம். சமணப் பண்பாட்டில் இருந்து முளைத்து பக்தி இயக்கமாக உருவான மரபு அது. காந்தி அதன் நீட்சி. சரியான தருணத்தில் காந்தி உள்ளே வந்ததனால் மட்டுமே இரண்டாவது வழி திறக்க நேர்ந்தது. இந்தியா பேரழிவுகளில் இருந்து தப்பவும் ஒரு ஜனநாயக அமைப்பாக இன்றுவரை நீளவும் அதுவே காரணம். அதற்காகவே நாம் காந்திக்கு கடன்பட்டிருக்கிறோம்.
காந்தியின் தன் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்ட எதிர்ப்புகள் பெரும்பாலும் எல்லாமே இந்த இரு வழிகளுக்கு இடையேயான முரண்பாடு மூலம் உருவானவையே என்பதைக் காணலாம். ஆரம்பத்திலேயே திலகர் தரப்பு அவருக்கு கடுமையான எதிர்ப்பை அளித்தது. பின்னர் இந்துமகாசபை அவரை இந்தியாவை கோழைத்தனத்தில் கட்டிப்போட்டவராகவே பார்த்தது. இந்துமகாசபையின் அக்கால பிரசுரங்களில் காந்தி இந்திய சமூகத்தில் ‘பெண்மையை’ வளர்த்தவர் என்றே [என் நோக்கில் சரியாக!] குற்றம்சாட்டப்படுகிறார். பின்னர் சுபாஷ் சந்திரபோஸுடனும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடனும் காந்திக்கு ஏற்பட்ட முரண்பாடுகள் அனைத்துக்குமே இந்த அம்சமே முக்கியமான அடிபப்டையாகும்.
இன்றுவரை காந்தி இந்தியாவின் ஷத்ரிய வீரியத்தை தடுத்துவிட்டார் என்று இந்துதீவிரவாதத் தரப்பு குற்றம் சாட்டுகிறது.பார்க்க‘இந்து தேசியத்தின் தற்காலிக மறைவு ,காந்தியும் அவரது சுதந்திரப்போராட்டமும்’. [Eclipse of the Hindu Nation: Gandhi and HIS Freedom Struggle , Radha Rajan] காந்தி பிரிட்டிஷாரின் கையாள் என்று சொல்லும் நூல் அது. அதைப்போல பல நூல்கள் உள்ளன.
காந்தி தென்னாப்ரிக்காவில் போயர் யுத்தத்தில் பிரிட்டிஷாருக்குச் சாதகமாக இருந்தமையாலும் அவரது போராட்ட முறை இந்தியாவில் வன்முறையை உருவாக்கி இந்திய பிரிட்டிஷ்குடிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்பதனாலும்தான் பிரிட்டிஷார் இந்தியாவில் சுதந்திரப்போராட்டம் உச்சம் கொண்ட ஒரு காலகட்டத்தில் காந்தியைக் கொண்டுவந்து காங்கிரஸுக்குள் நிறுவினார்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள். காந்தியை அவ்வாறு உள்ளே கொண்டுவந்தவர்கள் பிரிட்டிஷாருடன் ஒத்துழைத்த மிதவாதிகள்தான் என்கிறார்கள்.
காந்தியின் சாத்வீக வழியின் சாத்தியங்களைப் பற்றி விரிவாகவே பேசவேண்டும். அது கோடிக்கணக்கான மக்களுக்கு அவர்களுக்குச் சாத்தியமான போராட்ட முறையை அளித்தது. அவர்களை படிப்படியாக அரசியல்படுத்தியது. மூர்க்கமான போராட்டங்கள் வழியாக அவர்களை ஒடுக்குமுறை நோக்கித் தள்ளிவிடாமல் சிறிய பிராந்தியப் போராட்டங்கள் வழியாக ஆரம்ப வெற்றிகளை அளித்து உற்சாகமூட்டியது. ஒரு பெரும் மக்கள்திரளாக அவர்களை மாற்றி அதன் மூலம் தன்னம்பிக்கையை அளித்தது.
காந்தியின் போராட்டம் ஒரேசமயம் போராட்டமாகவும் சுய சீர்திருத்தமாகவும் இருந்தது. காந்தியப்போராட்டங்கள் கோடானுகோடி மக்களை ஒரு பொது இடத்துக்குக் கொண்டுவந்தன. அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாட வழிவகுத்தன. சாதி, மொழி, இன, மதப் பாகுபாடுகள் கொண்ட இந்தியமக்கள் நடுவே நூற்றாண்டுக்காலமாகச் சாத்தியமில்லாமல் இருந்த பரஸ்பர உரையாடல் காந்தியின் பெரும் போராட்டங்கள் வழியாகவே நடந்தது என்பதை அக்காலகட்ட தன்வரலாறுகளை வாசித்தாலே புரிந்துகொள்ள முடியும்.
காந்தியின் போராட்டம் இந்திய மக்களுக்கு ஜனநாயகத்தை அறிமுகம் செய்தது. நிலப்பிரபுத்துவ முறையில் மன்னராட்சியில் வளர்ந்த மக்களுக்கு ஜனநாயகத்தின் அடிப்படைப் பாடங்கள் காங்கிரஸ் உருவாக்கிய ஹரிஜன இயக்கம், கதர் இயக்கம், கிராமசபை இயக்கம், மாஸ்ரீ சங்க இயக்கம் போன்ற நூற்றுக்கணக்கான அமைப்புகள் மூலமே பயிற்றுவிக்கப்பட்டன. தி.செ.சௌ.ராஜன், கோவை.அய்யாமுத்து, க.சந்தானம் போன்றவர்களின் தன்வரலாறுகள் ஜனநாயக மதிப்பீடுகளை அறியாத மக்கள்நடுவே சென்று அந்த அடிப்படைகளை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து அமைப்புகளைக் கட்டுவதில் உள்ள தீராத சவால்களைப் பற்றியே பேசுகின்றன
உலகின் மிகச்சிறந்த ராணுவம் பிரிட்டிஷாருக்கு ஒருபோதும் பயன்படாத நிலையை காந்தியின் போராட்டங்கள் உருவாக்கின. அவரைப்பின்பற்றிச் சென்ற கோடானுகோடி சாமானியர்களை அவர் நன்கறிந்திருந்தார். நூற்றாண்டுகளாக போர்களில் அராஜகங்களில் கொன்று குவிக்கப்பட்டவர்கள். அடிமையாக்கப்பட்டவர்கள். அழிவை மட்டுமே வரலாறாகக் கொண்டு தப்பிப்பிழைத்தவர்கள். அந்த மக்களை ஓர் அரசியலதிகார மாற்றத்துக்காக மீண்டும் பலியாடுகளாக்க அவர் விரும்பவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடித்தளமாக இருந்த குடிமைச்சமூக ஆதரவை மட்டும் மெல்லமெல்ல கரைத்தழித்தார். அதன் மூலம் அவர் இந்த தேசத்தை விடுதலை நோக்கிக் கொண்டுசென்றார். எதிரியை அழிப்பதன்மூலம் அல்ல நம்மை தகுதிப்படுத்திக்கொள்வதன்மூலமே நாம் விடுதலை அடைய முடியும் என அவர் கற்பித்தார்.
இந்தியாவில் எந்த ஒரு அரசியலியக்கத்திலும் காந்தியின் போராட்டங்கள் அளவுக்கு பெண்களின் பங்களிப்பு இருந்ததில்லை. காந்தியின் காலகட்டத்தில் இந்தியப்பெண்களில் கல்விகற்றவர்கள் ஆயிரத்தில் ஒருவர்கூட இல்லை. பெண்களுக்கு தங்கள் வாழ்க்கையை தாங்களே தெரிவுசெய்யும் சுதந்திரமே இருந்ததில்லை. ஆனாலும் அவர் குரலைக்கேட்டு பெண்கள் வந்தார்கள். அவருக்குப்பின் இன்றுவரை இந்தியாவில் நடந்த எந்தஒரு அரசியலியக்கத்திலும் பெண்களின் பங்களிப்பு சொல்லும்படியாக இருக்கவில்லை. காரணம், அவரது இயக்கம் ஒரு ‘பெண்மை’த்தன்மை கொண்டிருந்ததுதான்.
சமண மரபில் இருந்து இந்திய விடுதலைப் போருக்கு காந்தி கொண்டுவந்த இன்னொரு அம்சம் அதன் ‘மிஷனரி’ அம்சம். இந்தியாவெங்கும் சமயப்பரப்புநர்களை வறுமையையும் நேர்மையையும் கொள்கையையும் மட்டுமே ஆயுதமாகக் கொண்டு அனுப்பிய சமண வழக்கத்தை காந்தி காங்கிரஸுக்குள் கொண்டுவந்தார். குடும்பத்தைத் துறந்து, அனைத்து வசதிகளையும் உதறி, பட்டினி கிடந்து கிராமம் கிராமமாகச் சென்ற மாபெரும் தொண்டர்படை ஒன்றை அவர் உருவாக்கினார்.
காந்தியின் அந்த தொண்டர்படைதான் பதினைந்தாம் நூற்றாண்டில் கபீருடன் நிறைவடைந்த பக்தி இயக்கத்துக்குப் பின்பு இந்திய சாமானிய மக்களை நோக்கிச்சென்ற அடுத்த பேரியக்கம். சொல்லப்போனால் அது பத்து பக்தி இயக்கத்துக்குச் சமம். 1921ல் காங்கிரஸ் உலக வரலாற்றிலேயே ஓர் அரசியலியக்கம் சேர்த்த மிக அதிகமான உறுப்பினர்களைச் சேர்த்தது. அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை நிர்வகிக்கும் அதிகார அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ முப்பதுலட்சம் தொண்டர்கள் இந்திய சமூகத்தை நோக்கி இறங்கிச்சென்றார்கள்!
இன்றுவரை இந்திய வரலாற்ற்றில் இந்த மாபெரும் மக்கள் தொடர்பியக்கம் உருவாக்கிய பாதிப்புகளைப் பற்றி எவரும் விரிவாக ஆராய்ந்ததில்லை. அக்கால இந்திய கிராமிய சமூகம் எப்படி இருந்திருக்கும். அன்று எவ்விதமான பிரபலச் செய்தி ஊடகங்களும் இல்லை. இந்திய மக்களில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மிகச்சிலரே. தங்கள் தொழில், கிராம வட்டாரங்களுக்கு அப்பால் எதாவது அறிமுகம் உள்ளவர்களே சிலர்தான். அந்த மக்களை நோக்கி வந்த முதல் வெளியுலகத் தொடர்பே காந்தியின் இயக்கம்தான்.
அந்த மக்களுக்கு ஜனநாயகத்தின் சாத்தியங்களை காந்திய இயக்கம் கற்றுக்கொடுத்தது. உரிமைகளுக்காகச் சேர்ந்து போராடமுடியும் என்று காட்டியது அது. கல்வி கைத்தொழில் சுகாதாரம் ஆகியவற்றின் ஆரம்பப் பாடங்களைக் கற்பித்தது. சாதி மதங்களுக்கு அப்பால் சமூகம் என்றும் தேசம் என்றும் சில உள்ளன என்று சொல்லியது. இந்திய மக்களை அரசியல்படுத்தியது. அதன்பின் வந்த எல்லா இயக்கங்களும் அந்த அரசியலாக்கத்தின் மீது எழுந்தவையே — காந்தியை நிராகரித்த இயக்கங்கள்கூட!.
இவையனைத்தும் சாத்தியமானது அவர் முன்வைத்த சமண வழிமுறைகளினால். அது அவரது பனியாப் பின்னணி அவருக்கு அளித்தது. பனியாப்பண்பாட்டின் மிகச்சிறந்த உச்சநிலையை அவர் வழியாக கண்டது இந்தியா. ஆம், எந்த மரபு போரிடும் பழங்குடிக் கும்பலாக இருந்த இந்தியசமூகத்தை சமரசம் மூலமும் கல்வி மூலமும் ஒருங்கிணைத்து ஒரு உயர்நாகரீக சமூகமாக ஆக்கியதோ அந்த மரபில் இருந்து நவீன காலகட்டத்துக்கு முளைத்தெழுந்து வந்தவர் காந்தி. இந்தியாவுக்கு தீர்த்தங்காரர்களின் பெருங்கருணை அளித்த கொடை அவர்.
ஆகவே காந்தி ஒரு பனியா என்பதை ஒர் எதிர்மறைக்கூறாக கருத வேண்டியதில்லை. காந்தி என்ற பனியா இந்த தேசத்தை தலைமை தாங்க வந்தது நமது நல்லூழ்.
[மேலும்]