வெண்முரசு -கதையின் கோலங்கள்

ஜெ,

இன்றைய வெண்முரசு 8 எனக்கு வாசிப்பில் குழப்பத்தை உருவாக்கியது. இந்தக்கதை எதற்கு என்று தெரியவில்லை. புரியாமல் உள்ளது. நிறைய வார்த்தைக்ள் புரியாமல் உள்ளன. இதெல்லாம் வாசிப்பதற்கு க்‌ஷ்டத்தைக்கொடுக்கிறது. திடீரென்று கதை மாயாசாலகமாக உள்ளது. சில இடங்களில் யதார்த்தமாகவும் காணப்படுகிறது. இந்தக்குழப்பங்கள் இலலமல் எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். இக்கதையை ஏன் எளிமையாக எழுதக்கூடாது? எளிமையாக எழுதினால் இலக்கியம் இல்லை என்று நினைக்கிறீகளா?

முருகன் சிற்றம்பலம்

அன்புள்ள முருகன்,

நம் மரபின் மிகச்சிறந்த நூல் என்றும், நம் மரபின் அனைத்து தத்துவங்களும் அடங்கியது என்றும் சொல்லப்படும் ஒரு நூலை இன்னொரு வடிவத்தில் வாசிக்க்கிறீர்கள். அந்த நூலை நீங்கள் எந்த முயற்சியும் எடுக்காமல் வாசித்து முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பதில் உள்ள தவறு உங்களுக்குப் புரியவில்லையா என்ன?

நணப்ரே, மகாபாரதம் எந்த அளவுக்குச் சிக்கலானதோ அந்த அளவுக்கு வெண்முரசு சிக்கலானது அல்ல. எந்த அளவுக்கு மகாபாரதத்தை வாசிக்க நீங்கள் முயற்சி எடுக்கவேண்டுமோ அந்த அளவுக்கு இதை வாசிக்க முயற்சி எடுக்கவேண்டியது இல்லை. ஏனென்றால் இது சமகால நடையில் உள்ளது

மிகமிக எளிமையான் நடையில் நேரடியானச் சொற்களில்தான் இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது. இன்று தமிழில் இதைவிட எளிமையாக எழுதபப்ட்ட எந்த ஒரு நாவலும், கட்டுரைநூலும் வாசிக்கக் கிடைப்பதில்லை.

நிறைய தூயதமிழ் வார்த்தைகள் உள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் பொருள் கூடவே வரும். அச்சொற்கள் மேல் சுட்டியை வைத்தால்போதும். அவவ்ளவு சிறந்த தமிழ்ச்சொற்கள் இருப்பதை வேறு எபபடித்தான் தெரிந்துகொள்வீர்கள்?

கதையோட்டத்தை வாசித்தால் உங்களுக்கே புரியும். இது பலவகையான கதைகள் கொண்ட நாவல். மகாபாரதமே அப்படித்தான். இதை ஆங்கிலத்தில் multiple narrative என்பார்கள். எந்த ஒரு விஷயமும் அப்படித்தானே உங்களுக்குக் கிடைக்கிறது. ஒரே விஷயத்துக்கு பல வரலாறுகள் உள்ளன இல்லையா?

நாவலில் நேரடியாக வரும் பகுதிகளின் ஒரு கதையோட்டம் உண்டு. அங்கே நிகழ்வனவற்றுக்கு ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கும். நாவலுக்குள் சூதர்கள் போன்றவர்கள் பாடும் கதைகள் வருகின்றன. அவை புராணங்கள் போல உள்ளர்த்தங்கள் கொண்டவையாகவும் கற்பனையால் மிகைப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கும். கனவுகள் வருகின்றன. அவை கனவுபோலவே இருக்கும்.

இதைத்தவிர நாகர்கள் சொல்லும் கதைகள் வருகின்றன. அவை வேறுபட்டிருக்கின்றன.ஒருகதை யாரால் சொல்லப்படுகின்றன என்று பாருங்கள். ஒரே கதையாக வாசிக்காமல் ஒரே கதை வேறு வேறு கோணங்களில் சொல்லப்படுகின்றது என்று பாருங்கள். அந்தக்கோணங்களை ஒப்பிட்டு கதையை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

பீஷ்மர் வியாசரை பார்க்கபோகும் இடம் நேரடியாகச் சொல்லபப்டுகிறது. உடனே கதை வேறு கோணத்துக்குப் போய் சித்ரகர்ணியின் கதையாக ஆகிறது. அதைச் சொல்லக்கூடியவன் ஒரு சூதன். அவன் கடைசியில் வருகிறான்.

ஏன் இந்தக்கதை வருகிறது என்று மிகமிக எளிமைப்படுத்திச் சொல்கிறேனே. பீஷ்மரின் மூதாதையான சிபி ஒரு சிறு புறாவுககக உயிரைக்கொடுத்தான். அவன் செய்ததையும் பீஷ்மர் செய்யப்போவதையும் இந்தக்கதை ஒப்பிட்டுக்காட்டுகிறது. பீஷ்மர் சித்ரகர்ணி மாதிரி ஆகிறாரா என்று கேட்கிறது.

மேலே உங்களால் சிந்திக்கமுடிந்தால் இந்தக்கதையில் ஒரு மனிதன் செய்யும் கடமைக்கும் அதன் விளைவான தவறுகளுக்கும் இடையே உள்ள உறவு என்ன என்று பேசப்படுகிறது என்று தெரியும்.இப்போது முழுமையாக புரியாவிட்டாலும் பிறகு புரியலாம்.

மகாபாரதம் நம் வாழ்க்கையுடன் சம்பந்தமுள்ள உண்மைகளைப்பற்றி பேசுகிறது என்று மட்டும் மனதில்கொண்டு வாசியுங்கள். வாழ்க்கையில் இன்னும் நமக்கு புரியாத சில விஷயங்கள் இருக்கலாம். அவை கதையிலும் புரியாமல் போகலாம்.

புரியாதவற்றை விவாதியுங்கள். குறிப்பாக பெண்களிடம். மனைவியிடமோ அன்னையிடமோ. மிகப்பெரிய தெளிவுகள் கிடைக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைதியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது
அடுத்த கட்டுரைராணி திலக்