அன்புள்ள ஜெமோ,
வரலாற்றின் பல பக்கங்களைத் திறிந்து நான் இது வரை
காண மறுத்த காந்தி என்ற அற்புதத்தை ஓர் நல்ல ஆசானைப்போல்
அழகாக விவரித்திருக்கிறீர்கள்.
மிகச்சிறுவனாக இருந்தபோதுதேவி திரையரங்கில் காந்தி திரைப்படம் முடியும் போது நெஞ்சை அழுத்தும் துயரத்துடனும் கண்ணீருடனும் வெளி வந்த
ஓர் அனுபவம் உங்கள் அற்புதமான கட்டுரைத்தொடர் மூலம் மீண்டும்
எனக்கு வாய்த்தது. அதற்கு நன்றி ஓராயிரம்.கல்லூரிப்பருவத்தில் எல்லரையும் போல காந்தியின் அமைதிப்போர் முறை புரியவில்லை.
வன்கொடுமை நிகழும் எல்லா இடத்திலும் பலத்துஒலிக்க வேண்டிய உண்மையின் குரலே காந்தியின் அறம் சார்ந்த குரல். மிக உறுதியான செயல்பாட்டின்
அந்தக்குரலை செயலின்மையின் கொந்தளிப்புடன் ஒப்பிட்டுஇகழ்ச்சி செய்யும் சராசரிப்பிழையை நானும் இதுகாறும் செய்து வந்திருக்கின்றேன்.
பல தளங்களில் விரியும் காந்தியின் தரிசனம்மேலும் வேண்டும். தங்களின் பொறுமையான எழுத்தும், அதன்நேர்மையும் நடையும் இந்த காந்தி தரிசனத்தை முழுமையடையச்செய்தது என்றால் அதில் கடுகளவும் மிகையில்லை.காந்தியின் அறம் மீண்டும் தேசமெங்கும் தழைக்கட்டும்.
நன்றியுடன்
ஜெய்கணேஷ்
அன்புள்ள ஜெய்கணேஷ்
காந்தியைப்பற்றிய நம்முடைய பெரும்பாலான கருத்துக்கள் நம்முடைய முதிரா இளமையில் நம்மை எபப்டி காட்டிக்கொள்ளவேண்டும் என்பதை ஒட்டியே உருவாகின்றன. நம்மை கலகக்காரன் என்றோ புரட்சிக்காரன் என்றோ கற்பனைசெய்துகொள்கிறோம். ‘வன்முறைதாங்க ஒரே தீர்வு’ என்றும் ‘காந்திதாங்க கெடுத்தாரு’ என்றும் சொல்லிக்கொள்ளும்போது ஒரு பிம்பம் கிடைக்கிறது
ஆனால் நம் இளமைத்துடிப்புள்ள ‘ மரபு எதிர்ப்பு ‘ சிங்கங்கள் எவருமே தங்கள் சாதி, மதம் சார்ந்து ஊதிப்பெருக்கி முன்வைக்கப்பட்டிருக்கும் தலைமை ஆளுமைகளைப் பற்றி எதுவும் சொல்லமாட்டார்கள். நரம்பில் அடி கிடைக்குமல்லவா? ஆக காதி ஒரு மென் இலக்கு, அவ்வளவுதான்
இந்த இளமைப்பருவத்திற்கு பிறகு முதிர்ந்த நடுவயதே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. அப்படியே முதுமை. இளமைபப்ருவத்திற்குப் பிறகு படிப்பு விவாதம் அரசியல் ஈடுபாடு எதுவுமே கிடையாது. குடும்பநலன் மட்டுமே. இப்படித்தான் சில அபத்தமான விஷயங்கள் நாட்டில் வேரூன்றுகின்றன
ஜெ
அன்புள்ள ராஜ சுந்தர ராஜன்
மனிதர்களைப் பற்றி எது சொன்னாலும் உண்மை என்று நம்பும் ஒரு பிராயம் உண்டு. எது சொன்னாலும் பொய் என்று நம்பும் ஒரு பிராயமும் உண்டு.
பாலம் கடந்தமைக்கு வாழ்த்துக்கள்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் சார்
இப்போது ஒரு வாசகருக்கு நீங்கள் எழுதியபதிலில் காந்தி கட்டுரைகள் ஒரே தொகுதியாக தமிழினி வெளியீடாக நூலாக வெளிவரும் என்று சொன்னீர்கள் . மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் வரவேண்டும்
தினேஷ் நல்லசிவம்
அன்புள்ள தினேஷ்
புத்தக வேலையும் ஒரே சமயம் சென்றுகொண்டிருக்கிறது. முதல் மூன்று கட்டுரைகள் தமிழினி இதழில் வெளிவரும்
ஜெ
மதிப்பிற்குரிய ஜெ.,
ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தலைவராக அவரைப்போன்ற ஒரு பேரறிஞர் உருவானது இந்தியாவின் நல்லூழ். அவர் தன் போராட்டங்களுக்கு காந்திய வழிமுறைகளையே தேர்வு செய்தார். அதன் மூலம் இச்சமூகம் காழ்ப்பாலும் வன்முறையாலும் அழியாமல் காத்தார்
நல்லூழ்,காழ்ப்பாலும் வன்முறையாலும்– இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள உங்கள் கருத்தை அறிய ஆவல்.
நான் “பெரியாரியன்” என்ற “அழுக்கு” படிந்திருப்பதால் நீங்கள் இதைப் பொருட்படுத்தாமல் போகலாம்.இருந்தாலும் ஊதுகின்ற சங்கை ஊதிவைக்கிறேன்.
அம்பேத்கர் இஸ்லாமுக்கு மாற நினைத்தாரா? இந்த விஷயத்தில் பெரியார் சில “சொற்களை” (கவனிக்க: ஆலோசனை என்ற வார்த்தையை நீங்கள் பெரியாரோடு இணைத்து கற்பனைகூட செய்ய மாட்டீர்கள்தானே?!) சொன்னதாக சொல்கிறார்கள். தங்கள் கருத்து என்ன?
ஒருவேளை இஸ்லாமுக்கு மாறியிருந்தால் இந்தியாவில் ஒரு பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கும் என்பது உண்மை.
புத்தத்துக்கு மாறியதை அவரின் ஞானத்துக்கு இயல்பானதாகவும் இந்திய சமூகத்துக்கு ஏற்றதாகவும் கருதலாம்.
அவர் கிறிஸ்தவத்துக்கு ஏன் மாற நினைக்கவில்லை? அது அவருக்கு இருந்த செல்வாக்கை கூட்டி தன் மக்களுக்கு பல சலுகைகளை பெறச் செய்திருக்குமே? (எனக்கு கிறிஸ்தவத்தின் மீதும் கிறிஸ்தவர்களின் மீதும் “மென்சார்பு” உண்டு. நீங்கள் முன்பு சொன்ன கிறிஸ்தவர்களின் வீட்டு நேர்த்தி போன்றவை எனக்கும் பிடிக்கும். இந்த மென்சார்பு ஈழப்போருக்கு பின் சற்று கூடியிருக்கிறது.
புரிகிறதா???
வெங்கடேஷ்
அன்புள்ள வெங்கடேஷ்,
புரிந்துகொள்ள முயர்சிக்கிறேன்.
அம்பேத்கர் வன்முறையின் பாதையை தேர்வுசெய்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்ற கோணத்தில் எழுதபப்ட்டவரிகள் அவை
எந்தச் சிந்தனையும் வெறுப்பாகவும் தேங்கிய கடைசிமுடிவாகவும் இருந்தால் அழுக்குதான், உயிரோட்டமுள்ள சிந்தனை எதுவாக இருந்தாலும் அது நம் உடல்.
அம்பேத்கார் குறித்த ஒரு விரிவான விவாதத்துக்கு இப்போது நான் தயாராக இல்லை. அவர் இஸ்லாம்,கிறித்தவம், சீக்கிய மதங்களுக்கு மாறுவதைப் பற்றி ஆலோசனை செய்தார். தனக்கு எந்த மதம்பிடிக்கும் என்ற கோணத்தில் அல்ல, எந்த மதம் தன் மக்களுக்கு ஏற்றதுறென்ற கோணத்தில் மஹார்களில் ஒருசாரார் ஏற்கனவே கிறித்தவர்கள். அவர்கள் சாதிய இழிவிலிருந்து இம்மிகூட மேலேறவில்லை என்று அவர்கண்டார். இஸ்லாம் பிறப்படிபப்டையிலான பேதங்களால் உலகமெங்கும் ரத்தம் சிந்தும் ஒரு மதம் என எண்ணிய அவர் அந்த பேதங்களைப் பற்றிபேசும் உரிமைகூட அதில் மறுக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணினார். சீக்கிய மதத்திலும் தாழ்த்தப்பட்டோர் ஒடுக்கபடுவதை உறுதிசெய்தார். அதன் பின்னரே அவர் புத்த மதத்துக்கு மாற முடிவுசெய்தார். இதையெல்லாம் அவரே எழுதியிருக்கிறார்
ஜெ
ஜெ..
பல்வேறு காரணிகளால், ஒவ்வொருவரும் தனக்கென ஒரு தரப்பை உருவாக்கிக் கொண்டு அந்த கலைடாஸ்கோப்பின் வழியாக உலகைக் காண்கிறோம். காந்தியைப் பற்றிய உங்கள் கட்டுரைகளின் சாரமே என் மனதின் தரப்பாக அமைந்தது எனது நல்லூழ். சுய சரிதையின் காந்தி, லூயி ஃபிஷரின் காந்தி, மார்ட்டின் லூதர் கிங்கின் காந்தி, நேருவின் காந்தி, மண்டேலாவின் காந்தி, அட்டன்பரோவின் காந்தி, கமலஹாசனின் காந்தி என அனைத்துமே இறைவனின் மனித வடிவென்றே மனம் சொல்லும்.
இன்று ஜெயமோகனின் காந்தியும்.
என்னுடையது பக்தி மார்க்கம். காந்தியைப் பற்றிப் படித்து, கேட்டு, பார்த்து, கண்ணீர் மல்கி வழிபடுதலின்றி வேறொன்றறியேன் பராபரமே !
பாலா
அன்புள்ள பாலா,
உண்மைதான், நாம் நம் தரப்பை விட்டுவிடக்கூடாது என்ற முன்முடிவில் இருந்தே எப்போதும் பேச ஆரம்பிக்கிறோம். ஆகவே பெரும்பாலானவர்களுக்கு விவாதங்களால் பயனில்லை. ஆனால் யாருக்குப் பயனிருக்கிறதோ அவர்களுக்கு அபாரமான பயன் இருக்கிறது.
என்னைப்பொறுத்தவரை ஒரு தெளிவின் விளைவாக நான் கொண்டிருந்த நெடுங்கால நம்பிக்கை ஒன்றைக் கைவிடும்போது அபாரமான ஓர் விடுதலை உணர்ச்சி ஏற்படுகிறது. ஓர் எடையின்மையும் உற்சாகமும் உருவாகிறது. அது முக்கியமான ஒரு தடயம் என்றே நினைக்கிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ
காந்தியும் தலித்தியமும் என்ற தொடர்கட்டுரைதான் நீங்கள் எழுதிய கட்டுரைகளிலேயே டாப். அற்புதமான நடை, நேரடியான வாதகதிகள், நிறைய தகவல்கள். ஒரு வரலாற்று தரிசனத்தையே அளித்துவிட்டீர்கள். என்னுடைய நண்பர்களுக்கு நான் பிரிண்ட் அவுட் எடுத்து கொடுத்தேன். நண்பர்கள் கூடி அமர்ந்து நிறைய பேசினோம். பல விஷயங்கள் எங்களுக்குப் புதியது. சரித்திரத்தில் ஒரு வழிதான் சரி மிச்சமெல்லாம் தப்பு என்ற எண்ணம் எவ்வளவு அபத்தமானது என்று தெரிய வைத்த கட்டுரை இது என்பதை எல்லாருமே ஒப்புக்கொண்டோம்
சிவகுமார்
அன்புள்ள சிவகுமார்
நன்றி. உண்மையில் ஆச்சரியமான ஒரு விஷயம் உள்ளது, இந்த காந்தி கட்டுரைகள் தான் என் இணைய தளத்தில் மிக அதிகமானவர்களால் வாசிக்கபப்ட்டவை. கீதை கட்டுரைகள் இதற்குப் பின்னர்தான். காந்தி கட்டுரைகளை அதிகமாக வாசித்து எதிர்வினையாற்றியவர்கள் கொங்குமண்டலத்தில்தான் அதிகம். இதற்கான பண்பாட்டுப்பின்புலம் என்ன என்பதைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறேன்
ஜெ