பகுதி ஆறு : தீச்சாரல்
[ 1 ]
அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் காலடியில் மாணவனான ஹரிசேனன் அமர்ந்திருந்தான். நெருப்பருகே சூதரும் விறலியும் அமர்ந்திருந்தனர். உறுதியான கரிய தோளில் சடைக்கற்றைகள் சரிந்திருக்க சிவந்த அகன்ற கண்கள் கொண்ட சூதர் பெரிய விரல்களால் கிணையை மீட்டினார்.
ஒவ்வொருநாளும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வரும் நாடோடிகளான சூதர்கள் அஸ்தினபுரியின் அரண்மனைமுற்றத்தில் குழுமுவதுண்டு. அவர்கள் தங்குவதற்கு அரண்மனைக்கு அப்பால் ஸஃபலம் என்ற பெரிய தடாகத்தின் மூன்றுகரைகளிலுமாக குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் காலையில் நீராடி வாத்தியங்களுடன் அரண்மனைக்கு வந்து அரசகுலத்தவரைக் கண்டு பரிசில்பெற்றுச் செல்வார்கள். அரசியர் தங்கள் கைகளாலேயே அவர்களுக்கு கொடையளிக்கவேண்டும் என்று நெறியிருந்தது.
ஆனால் சூதர்கள் பெரும்பாலும் பீஷ்மரை சந்திக்கவிரும்புவார்கள். பீஷ்மரை சந்தித்தால் மட்டுமே அடுத்த ஊரில் அவர்கள் அவரைப்பற்றி சொல்லமுடியும். அன்று மாலை வந்திருந்த சூதர்களில் ஒருவர் அவர் சௌபநகரில் இருந்து வருவதாகச் சொன்னார். பீஷ்மரின் கண்கள் அதைக்கேட்டதும் மிகச்சிறிதாக சுருங்கி மீண்டதை ஹரிசேனன் கண்டான். அவரைத் திருப்பி அனுப்பலாமென அவன் எண்ணியதுமே பீஷ்மர் “சூதரே வருக” என்று அழைத்தார். அருகே அமரச்செய்து “பாடுக” என்று ஆணையிட்டார்.
தசகர்ணன் என்னும் சூதர் சௌபநகரம் பற்றி சொன்னார். அந்நகரில் இருந்து ஒவ்வொருநாளும் கூட்டம்கூட்டமாக மக்கள் வெளியேறி பாஞ்சாலத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள் என்றார். பெண்சாபம் விழுந்த மண் என்று சௌபத்து நிமித்திகர் சொன்னார்கள். நகர்நீங்கி காடுசென்று கொற்றவையாகி வந்து ஷத்ரியர்புரிகளுக்கெல்லாம் சென்ற அம்பாதேவி அந்நகருக்கு மட்டும் வரவில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று எண்ணி அனைத்துக் கோட்டைவாயில்களையும் மூடிவிட்டு சால்வன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவள் பாஞ்சாலத்துக் கோட்டைவாயிலில் ஒரு காந்தள் மலர் மாலையைச் சூட்டிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள் என அறிந்ததும் நிறைவடைந்தவனாக கோட்டைவாயில்களைத் திறக்க ஆணையிட்டான். அதுவரை கோட்டைக்குள்ளும் புறமும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கோட்டைவாயில் திறந்த அன்று குலதெய்வமான சண்டிதேவிக்கு ஒரு பூசனை செய்து சூதர்களுக்கெல்லாம் பரிசுகள் வழங்க சால்வன் ஒருங்குசெய்தான். வாரக்கணக்கில் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்த சூதர்கள் ஊர்மன்றுக்கு வந்தனர். நகரமெங்கும் முரசறைந்து அனைவரும் வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தமையால் நால்வருணத்து மக்களும் மன்றில் வந்து கூடியிருந்தார்கள். செங்கோலேந்திய காரியகன் முன்னால் வர வெண்குடை ஏந்திய தளபதி பின்னால் வர உடைவாளும் மணிமுடியுமாக வந்து மேடையில் இடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த சால்வன் அங்கே வாழ்த்தொலிகளே எழவில்லை என்பதை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டான். அவன் பரிசில்களை கொண்டுவரும்படி சொன்னான்.
அரண்மனை சேவகர்களால் பொன், வெள்ளி நாணயங்களும் சிறு நகைகளும் அடங்கிய ஆமையோட்டுப்பெட்டி கொண்டுவந்து மன்றுமுன் வைக்கப்பட்டது. முறைப்படி முதுசூதர் வந்து மன்னனை வாழ்த்தி முதல்பரிசு பெறவேண்டும். தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார். முறைப்படி அவர் தன் வாத்தியத்துடன் வரவேண்டும். வெறுமே மன்றேறிய அவர் இருகைகளையும் விரித்து மக்களைநோக்கித் திரும்பி “சௌபநாட்டின் குடிகளை அழிவில்லாத சூதர்குலம் வணங்குகிறது. இங்கே நாங்கள் பெற்ற ஒவ்வொரு தானியத்துக்கும் எங்கள் சொற்களால் நன்றி சொல்கிறோம்” என்றார். அவரது குலம் ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.
சூதர் “இந்தமண் மீது பெண்சாபம் விழுந்துவிட்டது. இங்குவாழும் கற்பரசிகளினாலும் சான்றோர்களாலும்தான் இங்கு வானம் வெளியால் இன்னமும் தாங்கப்படுகிறது” என்றார். சால்வன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சூதர் உரக்க “இனி இந்த நாட்டை சூதர் பாடாதொழிவோம் என இங்கு சூதர்களின் தெய்வமான ஆயிரம்நாகொண்ட ஆதிசேடன் மேல் ஆணையாகச் சொல்கிறோம். இந்நாட்டின் ஒரு துளி நீரோ ஒருமணி உணவோ சூதர்களால் ஏற்கப்படாது. இந்த மண்ணின் புழுதியை கால்களில் இருந்து கழுவிவிட்டு திரும்பிப்பாராமல் இதோ நீங்குகிறோம். இனி இங்கு சூதர்களின் நிழலும் விழாது. பன்னிரு தலைமுறைக்காலம் இச்சொல் இங்கே நீடிப்பதாக!” முதுசூதர் வணங்கி நிமிர்ந்த தலையுடன் இறங்கிச்சென்றார்.
சால்வன் கை அவனையறியாமலேயே உடைவாள் நோக்கிச் சென்றது. அமைச்சர் குணநாதர் கண்களால் அவனைத் தடுத்தார். சால்வன் கண்களில் நீர் கோர்க்க உடம்பு துடிக்க செயலிழந்து நின்றான். அவனையும் இறந்த அவனது மூதாதையரையும் பிறக்காத தலைமுறைகளையும் நெஞ்சுதுளைத்துக் கொன்று குருதிவழிய மண்ணில் பரப்பிப்போட்டுவிட்டு அந்த முதுசூதன் செல்வதுபோலப்பட்டது அவனுக்கு. மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன்.
மண்ணில் கால்விழும் ஓசை மட்டுமேயாக சூதர்கள் திரும்பிச்செல்வதை சால்வன் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அவர்களின் புழுதிபடிந்த கால்களில் விழுந்து மன்றாடுவதைப்பற்றி எண்ணினான். ஆனால் அவர்கள் சொல்மீறுபவர்களல்ல. அவன் உடல்மேல் அவர்கள் நடந்துசெல்வார்கள். சென்று மறையும் சூதர்களை திகைத்து விரிந்த விழிகளுடன் நகரமக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாத்தியங்களுக்குள் தங்கள் மூதாதையர் உறைவதுபோல. அவர்களும் இறுதியாக பிரிந்து செல்வதுபோல. இறுதி சூதனும் மன்றில் இருந்து வெளியேறியபோது சால்வன் பெருமூச்சுடன் தன் செங்கோலையும் உடைவாளையும் வீரர்களிடம் கொடுத்துவிட்டு தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து மேடையில் இருந்து இறங்கினான்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் கல் போல அவன் மேல் வந்து விழுந்தது. கரிய உடலும் புல்நார் ஆடையும் அணிந்த முதிய உழத்தி ஒருத்தி எழுந்து வெண்பற்கள் வெறுப்புடன் விரிந்து திறந்திருக்க, இடுங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவிழ்ந்து தோளில் தொங்கிய தலைமயிர் காற்றிலாட, கைநீட்டி கூச்சலிட்டாள். “எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே… உன்குலம் அழியட்டும்! உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும்! நீ வேருடனும் கிளையுடனும் அழிக! உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும்!”
சால்வன் கால்கள் நடுங்கி நிற்கமுடியாமல் தளபதியை பற்றிக்கொண்டான். அத்தளபதியின் கையிலிருந்த வெண்குடை சமநிலைகெட்டுச் சரிய அதை அமைச்சர் பிடித்துக்கொண்டார். அனைவருமே நடுங்குவதுபோலத் தோன்றியது. கிழவி குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளி தூற்றிவிட்டு ஆங்காரமாக “ஒழிக உன் நாடு…! எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும்!” என்று கூவியபடி நடந்து நகருக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றாள். அவள்பின்னால் அவள் குலமே சென்றது.
அன்று முதல் சௌபநாட்டிலிருந்து குடிமக்கள் வெளியேறத் தொடங்கினர். குடிமக்களனைவருக்கும் களஞ்சியத்தில் இருந்து பொன்னும் மணியுமாக அள்ளிக்கொடுத்தான் சால்வன். ஊர்மன்றுகள் தோறும் விருந்தும் களியாட்டமும் ஒருங்குசெய்தான். ஒவ்வொரு குலமாக அமைச்சர்களை அனுப்பி மன்றாடினான். ஆயினும் மக்கள் சென்றுகொண்டே இருந்தனர். பதினெட்டாம் நாள் கங்கையிலிருந்து சுமையிறக்கும் யானைகள் இரண்டு மிரண்டு கூவியபடி நகருக்குள் புகுந்து துதிக்கை சுழற்றி தெருக்களில் ஓடின. அவற்றை அடக்கமுயல்கையில் ஒரு யானை வேல்பட்டு மண்ணதிர விழுந்து துடித்து இறந்தது. அதன்பின் மக்கள் விலகிச்செல்லும் வேகம் மேலும் அதிகரித்தது.
இன்று சௌபநகரில் இருப்பவர்கள் போகிகளும் குடிகாரர்களும் விடர்களும்தான் என்றார் சூதர். மக்கள் நீங்கிய இடங்களிலெல்லாம் வேளாண்நிலத்தில் எருக்கு முளைப்பது போல வீணர் குடியேறினர். மனம் தளர்ந்த மன்னனை மதுவருந்தவைத்து போகியாக்கிய அமைச்சர் குணநாதர் ஆட்சியை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சௌபநகரின் துறைகளில் இருந்து வணிகர்களின் சுங்கம் வந்துகொண்டிருந்ததனால் மன்னன் போகிகளுக்கு அள்ளிவழங்கினான். சௌபத்தின் தெருக்களில் எங்கும் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பரத்தையர் நிறைந்தனர்.
“சௌபநாட்டுக் கோட்டை வாயிலை காலையில் திறந்த காவலர்கள் அழுதகண்ணீருடன் ஒரு பெண் நகர்விட்டு நீங்கிச்செல்வதைக் கண்டனர். அவளிடம் அவள் யார் என்று கேட்டனர். அவள் அவர்களைப் பார்க்கவில்லை. அவர்கள் நின்றதையே அறியவும் இல்லை. அவள் பாதைநுனியை அடைந்தபோது எழுந்த முதற்பொன்னொளியில் அவள் உடல் புதிய பொன்னென சுடர்விட்டதைக் கண்டதும் முதியகாவலன் கைகூப்பி “அன்னையே!” என்று கண்ணீருடன் கூவினான். சௌபமகள் சாவித்ரி என அவளை அவன் அறிந்தான்.
“சௌபத்தின் செல்வத்தின் அரசியான சாவித்ரி அந்நகரை உதறிச்சென்றபின் அந்நகரம் மீட்டப்படாத வீணைபோல புழுதிபடிந்தது” என்றார் சூதர். நகரின் கைவிடப்பட்ட வீடுகளிலும் கலப்பைவிழாத நிலங்களிலும் நாகங்கள் குடியேறின. கதவுகளைத் திறந்தால் நிழல்கள் நெளிந்தோடுவதுபோல அவை விலகின. இருட்டுக்குள் இருந்து மின்னும் கண்களும் சீறும் மூச்சும் மட்டும் வந்தன.
பீஷ்மர் பெருமூச்சுடன் “ஆம், வேதாளம் சேரும், வெள்ளெருக்கு பூக்கும். பாதாளமூலி படரும், சேடன் குடிபுகும்… அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது” என்றார். ஹரிசேனன் அவன் மனதில் எழுந்த எண்ணத்தை உடையில் பற்றும் தீயை அணைக்கும் வேகத்துடன் அடித்து அவித்தான். ஆனால் அதையே பீஷ்மர் கேட்டார். “அஸ்தினபுரியின் பரிசில்களைப்பெற சூதர்கள் வந்திருக்கிறீர்களே?”
“பிதாமகரே, மன்னன் முதற்றே அரசு. அஸ்தினபுரியின் செங்கோலை இன்று ஏந்தியிருப்பவன் சந்திரவம்சத்தின் மாமன்னர்களில் ஒருவன். அஸ்தினபுரியின் முதன்மை வீரன். அவன் மேல் அம்பைதேவி தீச்சொல்லிடவில்லை. அவனை வாழ்த்தியே அவள் வனம்புகுந்தாள். அறத்தில் அமைந்த கோல்கொண்டவன். ஆயிரம் முலைகளால் உணவூட்டும் அன்னைப்பெரும்பன்றி போன்ற கருணைகொண்டவன். அவனை சூதர்குலம் வணங்குகிறது. இந்தமண்ணும் இங்கு சொல்லும் உள்ளவரை சூதர்மொழி அவனை வாழ்த்தி நிற்கும். அவன் வாழ்க! அவன் செங்கோல் காத்துநிற்கும் இந்த மண் வாழ்க! விசித்திரவீரிய மாமன்னன் பாதங்களில் பணியும் எங்கள் வாத்தியங்களில் வெண்கலைநாயகி வந்தமர்ந்து அருள்புரிக!”
“ஆம்” என்றார் பீஷ்மர் தலையை அசைத்து. “மானுடரில் அவன் கண்களில் மட்டுமே நான் முழுமையான அச்சமின்மையை கண்டிருக்கிறேன்.” பெருமூச்சுடன் “போரும் படைக்கலமும் அறியாத மாவீரன் அவன்” என்றார். ஹரிசேனன் அவர் மேல் ஒரு கசப்பை உணர்ந்தான். அந்தச் சொற்கள் அரசமரபுச் சொற்கள் போல அவனுக்குத் தெரிந்தன. அந்த வெறுப்பை அவனே அஞ்சியதுபோல சூதரை நோக்கி பார்வையை திருப்பிக்கொண்டான்.
சூதரின் கண்கள் செருகின. அவரது வாயின் ஓரம் இழுபட்டு அதிர்ந்தது. ஓங்கியகுரலில், “என் சொற்களில் வந்தமரும் கன்னங்கரிய சிறுகுருவி எது? இதோ என் கிணைத்தோலில் ஒலிக்கும் நெடுந்தாளம் எது? அவன் பேரைச்சொல்லும்போது என் நெஞ்சில் மிதித்தோடும் பிங்கலநிறப்புரவி எது?” முன்னும் பின்னும் ஆடி தன்னுள் ஆழ்ந்து விழித்த கண்களுடன் அவர் முனகிக்கொண்டார்.
பின்பு ஏதோ ஒரு கணத்தில் அவர் கைவிரல்கள் கிணைத்தோலில் வெறிநடனமிட்டன. பெருங்குரலில் “இதோ விண்ணகத்தில் அவன் யானைமேல் சென்றிறங்குகிறான். அவனை வெண்ணிற ஐராவதமேறி வந்து இந்திரன் வரவேற்கிறான். மாமுனிவர்களும் தேவர்களும் கூடி அவனை வாழ்த்தி குரல்கொடுக்கிறார்கள். இந்திரவில் ஏழொளியுடன் கீழ்வானில் எழுந்திருக்கிறது. மண்ணில் இந்திர வீரியம் வானகத்தின் பொற்தூரிகைபோலப் படர்ந்து அவன் புகழை எழுதிச்செல்கிறது” என்றார்.
பீஷ்மர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். ஹரிசேனன் பதற்றத்துடன் சூதரைப்பார்த்தான். அவரைத்தடுத்து என்ன சொல்கிறார் என்று கேட்கவேண்டுமென எண்ணினான். ஆனால் அவர் எங்கிருந்தோ எங்கோ பறந்து செல்லும் யட்சன் போலிருந்தார். “அழியாப்புகழுடைய தன் மைந்தன் வந்ததைக் கண்டு சந்திரன் வெண்ணொளிக் கலையணிந்து வந்து கைநீட்டி அணைத்துக்கொண்டான். அதோ வெண்தாடி பறக்க கைவிரித்து கண்ணீருடன் வருபவன் ஆதிமூதாதை புரூரவஸ் அல்லவா? பேரன்புடன் சிரித்து எதிர்கொள்பவன் ஆயுஷ் அல்லவா? நகுஷன் அல்லவா அவனருகே நின்று புன்னகைக்கிறான்? மைந்தன் புருவை அணைத்து நின்றிருப்பவன் யயாதி அல்லவா?”
கிணை துடியாக மாறிவிட்டதுபோல தாளம் வெறிகொண்டது. “ஜனமேஜயன், பிராசீனவான், பிரவீரன், நமஸ்யு, வீதபயன், சுண்டு ஆகியோர் வந்தார்கள்! பஹுவிதன், ஸம்யாதி, ரஹோவாதி, ரௌத்ராஸ்வன், மதிநாரன், சந்துரோதன், துஷ்யந்தன் ஆகியோர் வந்தார்கள்! பரதன், சுஹோத்ரன், சுஹோதா, கலன், கர்த்தன், சுகேது, பிருஹத்ஷத்ரன் ஆகியோர் வந்தார்கள்! மூதாதையர் அனைவரும் வந்து நிற்கும் வான்வெளியில் இறங்கினான் அஸ்தினபுரியின் அறச்செல்வன்! வாழ்க அவன் புகழ்!
“அய்யோ, மாமன்னன் ஹஸ்தியல்லவா அவனைத் தழுவுகிறான். அந்த வலியபெருங்கரங்களில் இறுகிநெளிந்து யானைபுஜங்களில் முகம் சேர்க்கிறானே அவனல்லவா இந்நாட்டின் அழியா மணிமுத்து! வீரத்தால் வென்றவருண்டு, மதியுரத்தால் வென்றவருண்டு, நட்பால் வென்றவருண்டு, குலத்தால் வென்றவருண்டு. பெருங்கனிவால் வென்றவன் புகழ்பாடுக! சூதர்குலமே, இம்மாநகரம் அளித்த ஒவ்வொரு மணி தானியத்தையும் மாமன்னன் விசித்திரவீரியனின் புகழாக்குக!
“அஜமீடனை, ருக்ஷனை, சம்வரணனை, குருவை அமரர்களாக்கிய பேரன்புச்செல்வனை வணங்குக கையே! ஜஹ்னுவை, சுரதனை, விடூரதனை, சார்வபௌமனை, ஜயத்சேனனை ஒளிகொள்ள வைத்தவனைப் பாடுக நாவே! ரவ்யயனை, பாவுகனை, சக்ரோத்ததனை, தேவாதிதியை, ருக்ஷனை அமரருலகில் நிறுத்திய மாமன்னனைப் பணிக என் சிரமே! சூதர்களே மாகதர்களே, இன்று இதோ நம் சிறுசெந்நாவால் அவன் புகழ்பாடும் பேறு பெற்றோம். கைகூப்பி அவன் கைபற்றும் பிரதீபனை, கண்ணீரால் அவன் உடல்நனைக்கும் சந்தனுவைக் கண்டோம். அவனை சிறுகுழந்தையாக்கி மீண்டும் முலையூட்ட வந்து நின்ற மூதன்னையர் வரிசையைக் கண்டோம். சூதரே, இனிது நம் பிறவி! சூதரே இனிதினிது நம் சொற்கள்!
“பாரதமே பாடுக! இன்று வைகானச சுக்லபட்சம் இரண்டாம்நாள். இனியிந்தக் காற்றில் எத்தனை காலங்கள் அலையடிக்கும்! இனியிந்த மண்ணில் எத்தனை தலைமுறைகள் முளைத்தெழும்! இனியிந்த மொழியில் எத்தனை கதைகள் சிறகடிக்கும்! இன்று இதோ நடுகின்றோம் அஸ்தினபுரியின் மாமன்னன் புகழை. அது வளர்க! இன்றிதோ கொளுத்துகிறோம் சந்தனுவின் மைந்தனின் பெயரை. அது எரிக! இன்றிதோ ஏற்றுகிறோம் சந்திரவம்சத்து விசித்திரவீரியனின் பெரும்புகழ்க்கொடியை. அது எழுக! ஓம் ஓம் ஒம்!”
விண்ணில் ஓடும் வானூர்தியிலிருந்து தூக்கிவீசபட்ட யட்சன் போல சூதர் மண்ணில் குப்புற விழுந்தார். தன் கிணைப்பறை மேலேயே விழுந்து மெல்லத் துடித்து கைகால்கள் வலித்துக்கொண்டு வாயில் நுரைக்கோழை வழிய கழுத்துத்தசைகள் அதிர கண்ணீர் வடிய ஏதோ முனகினார். சூதர்கள் தங்களுக்குள் பேசும் ஆதிமொழியில் அவரிடமிருந்து பொருளறியாச் சொற்கள் வந்தபடி இருந்தன. விறலி அவரை மெல்லத்தூக்கி அமரச்செய்து நீர்புகட்டினாள்.
பீஷ்மர் எழுந்து விரைந்து நடந்து தன் குடில்நோக்கிச் சென்றார். ஹரிசேனன் பின்னால் ஓடினான் “என்ன சொல்கிறார் சூதர்?” என்றான். பீஷ்மர் “அவர் சொல்வது உண்மை. அவரில் வாக்தேவி வந்து சொன்னவை அவை. அவர் சொன்ன அக்கணத்தில் விசித்திரவீரிய மாமன்னன் மண்நீங்கியிருக்கிறார்.” “அப்படியென்றால் ஏன் காஞ்சனம் ஒலிக்கவில்லை? பெருமுரசம் முழங்கவில்லை?”
“தெரியவில்லை… காஞ்சனத்தின் நாவும் பெருமுரசின் கோலும் பேரரசியின் ஆணைக்குக் கட்டுப்பட்டவை அல்லவா?” என்றார் பீஷ்மர். “ஹரிசேனா, நீ அந்த தோதகத்தி மரத்தின்மேல் ஏறிப்பார். அவர் சொன்னதுபோல அஸ்தினபுரிக்குமேல் மென்மழையும் விண்வில்லும் இருக்கின்றனவா என்று கண்டு சொல்!”
ஹரிசேனன் “இப்போது இரவு…” என்றபின் அவர் பார்வையை கவனித்து மரத்தில் பரபரவென்று தொற்றி மேலேறினான். பீஷ்மர் கீழே நின்றார். ஹரிசேனன் மேலிருந்து ‘ஆ!’ என்று வியப்பொலி எழுப்பினான். “என்ன?” என்றார் பீஷ்மர்.
“அங்கே அரண்மனை முகடுகளுக்குமேல் வானத்தில் மெல்லிய வெண்ணிற ஒளி நிறைந்திருக்கிறது. அதனருகே இந்திரவில் வண்ணம் கலைந்துகொண்டிருக்கிறது.” ஹரிசேனன் கண்ணீருடன் உடைந்து. “மென்மழைபெய்கிறது பிதாமகரே… மாளிகைமுகடுகள் பளபளக்கின்றன” என்றான். கீழே விழுந்துவிடுவான் என்று தோன்றியது. கைகளால் மரத்தை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கும் உடலுடன் மேலேயே இருந்தான்.
பின்பு கீழே பார்த்தபோது பீஷ்மர் நடந்து செல்வதைக் கண்டான். இறங்கி வந்து அவர் பின்னால் சென்றான் ஹரிசேனன். தாராவாஹினிக்கரையில் பீஷ்மர் சென்று நின்றார். இருபக்கமும் அகன்ற மணல்வெளி கொண்ட ஆற்றின் மீது அசைவில்லாததுபோலக் கிடந்த கரிய நீரில் விண்மீன்கள் பிரதிபலித்திருந்தன. கைகளைக் கட்டியபடி அவற்றைப் பார்ப்பவர் போலவோ பார்வையற்றவர் போலவோ பீஷ்மர் நின்றிருந்தார்.