புல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்

கலாப்ரியாவின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்று உண்டு, பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான் என. ஆஸ்திரேலியப்பயணமும் முடிவை நோக்கி நெருங்கியது. ஊர்திரும்ப சில நாட்களே இருந்தன. ஏப்ரல் இருபத்தேழு அன்று தாய் ஏர்வேஸில் ஊருக்கு செல்வதாக இருந்தோம்.

அதற்குள் ஆஸ்திரேலியா ஒருமாதிரி சொந்தநிலம்போன்ற ஒரு சாயலைக் கொண்டு முகம் கொடுத்துப் பேச ஆரம்பித்தது. நானும் அருண்மொழியும் டாக்டருடன் காலையில் அருகே உள்ள பூங்காவுக்கு நடக்கச்செல்லும்போது முதல்முறையாக இயற்கையில் நாம் அடையும் முக்கியமான சந்தோஷம் ஒன்றை அடைந்தோம்– நேற்று பார்த்தவை இன்றும் அப்படியே இருப்பதை உணரும் சந்தோஷம். பின்னர் அவை கொஞ்சம் மாரியிருக்கின்றன என்பதைக் காணும் மேலதிக சந்தோஷம்

டாக்டரின் மனைவியுடன் மெல்பர்ந் நகரின் குட்டிக்குட்டி வேடிக்கைகளைப் பார்க்கச் சென்றோம். பெரியதோர் ஞாயிற்றுகிழமைச் சந்தை. மைதானத்துக்குக் கூரையிட்டதுபோன்ற ஒரு இடத்தில் பலநூறு கடைகள். சின்னச்சின்ன கைவினைப்பொருட்கள். அலங்காரப்பொருட்கள். வீட்டு உபயோகப்பொருட்கள். பெரும்பாலும் சீனர்கள்தான் கடை வைத்திருந்தார்கள்

எதையும் வாங்க வேண்டாமென்ற எங்கள் முன்னுறுதியைக் கலைக்கும் சக்தி அந்தக் கடைகளுக்கு இருக்கவில்லை.கடைகள் தோறும் சென்று எங்களுக்கு எவையெல்லாம் தேவையில்லாமலிருக்கின்றன என்பதைக் கண்டு குதூகலம் அடைந்தோம். கடைக்கு அருகே குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பூங்கா இருந்தது. அன்று மழையும் குளிருமாக இருந்தமையால் யாரும் இருக்கவில்லை. விளையாட்டு ரயில்கள் ஒய்ந்து கிடந்தன. பசுமை கலந்து ஒளிவிட்ட குளத்து நீரில் வெண்ணிறமான அன்னங்கள் மிதந்தன.

இருபத்தைந்தாம் தேதி நானும் அருணாவும் டாக்டர் மனைவியுடன் மெல்பர்ன் நகரத்தின் இந்து ஆலயத்துக்குச் சென்றோம். பெரும்பாலான புலம்பெயர்ந்த கோயில்களுக்கு பொதுப்பெயர் சிவ விஷ்ணு ஆலயம். சைவமதமும் வைணவ மதமும் ஒன்றாக ஆனாலொழிய அன்னிய மண்ணில் நிதி திரட்டிச் செயல்படமுடியாத நிலை. எப்படி முற்காலங்களில் சாக்தமும் சௌரமும் காணபத்தியமும் சைவ வைணவங்களுடன் இணைந்தன என்பதைக் காட்டும் சமகால உதாரணம் இது.

பல தெய்வங்களை உள்ளடக்க வேண்டியிருப்பதனால் ஆகம நெறிகள் மெல்ல மீறப்பட்டு தெய்வங்கள் வரிசையாக அமர்ந்தருளச் செய்யபப்டுகின்றன. இந்து ஆலயங்கள் அனைத்திலும் உள்ள அமைப்பான பலகடவுள்தொகை என்ற வடிவம் உருவாகி வந்த விதம் இதுவே. பின்னர் அதற்கு Pantheonism என்று இந்தியவியலாளர் பெயரிட்டார்கள். இந்து மதம் மற்ற வழிபாடுகளை விழுங்கிவிடும் பூதம் என்று முற்போக்காளர் கதை சொல்ல ஆரம்பித்தார்கள். புலபெயர்ந்த இந்துமதத்தின் ‘வழிபாட்டு வன்முறை’ பற்றிய கதைகளும் மெல்ல இனிமேல் வரக்கூடும்.

அந்த பூங்காவின் முன்பகுதியில் முதல் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட பெரிய கவசவண்டிகள் இரண்டு நின்றிருந்தன. சங்கிலிச்சக்கரங்களும் பிரம்மாண்டமான துப்பாக்கிக் குழாய்களும் கொண்ட இரும்புராட்சதர்கள். ஒன்றின் மீது ஏறி அமர முயன்றேன். மழையின் ஈரத்தில் நன்றாகவே வழுக்கியது. விடாமுயற்சியுடன் ஏறி அமர்ந்தேன். சிறுவயதில் முதல்முறையாக யானைமேல் ஏறிய அதே மனக்கிளர்ச்சியை அடைந்தேன். யானைமேல் இருக்கும்போது யானை நம்மைப்பற்றி என்ன நினைக்கிறது என்ற எண்ணம் எழுந்துகொண்டே இருக்கும். நாம் நம்மைப்பற்றிய ஓர் நினைப்பு மீது ஏறி அமர்ந்திருக்கிறோம் என்ற ஒரு பயம் இருக்கும். ஆனால் இது இரும்பு. இரும்புக்கு சுயம் கிடையாது.

ஸ்டாலின்காலத்து தொழிற்புரட்சியை ‘இரும்புவெள்ளம்’ என்று அக்கால எழுத்தாளர் ஒருவர் எழுதினார். தொழிற்புரட்சி என்பதே இரும்பின் ஆதிக்கம்தான். இரும்புக் கப்பல்கள் இரும்பு யந்திரங்கள் இரும்பு பீரங்கிகள்…. இரும்பு இல்லாத சமூகங்களை அவை ஒழித்துக்கட்டின. அப்படி அடையாளமில்லாமல் ஆக்கப்பட்ட ஒரு மானுடம்தான் ஆஸ்திரேலியப் பழங்குடிச்சமூகம். இந்த மண்ணில் இரும்பு அதை வென்ற ஆதிக்கத்தின் சின்னம் போல வந்து கனத்து குளிர்ந்து இறுகி அமர்ந்திருக்கிறது.

அன்றுமுழுக்க எனக்கு மின்னஞ்சல்களைப் பார்க்கும் வேலை. ஏராளமான மின்னஞ்சல்கள் குவிந்துகிடந்தன. பெரும்பகுதி மின்னஞ்சல்கள் ஈழ விஷயம் சார்ந்தவை. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு எடுத்துவந்த ராணுவநடவடிக்கைகள் உச்சமடைந்திருந்தன. புலிகள் கிட்டத்தட்ட சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள். அவர்கள் கிட்டத்தட்ட லட்சம் தமிழ் மக்களை பிணைக்கைதிகள் போல பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள் வந்தன

ஆஸ்திரேலியாவிலும், ஐரோப்பாவிலும் ஈழத்தமிழர்கள் விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்து தெருமுனைப்போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். இலங்கை அரசு விடுதலைப்புலிகளை தாக்குவதாக எண்ணி குத்துமதிப்பாக தாக்கி தமிழர்களக் கொன்று கொண்டிருந்தது. தமிழர்கள் மட்டுமே தங்களுக்கு காப்பு என்று எண்ணிய புலிகள் சர்வதேச சமூகம் தலையிட்டு ஒரு ஒப்பந்தம் ஏற்படும் என நம்பி அம்மக்களை மிரட்டல்மூலம் தங்கள் கூடவே தக்க வைத்துக்கொண்டிருந்தார்கள்.

எனக்கு வந்த மின்னஞ்சல்கள் இருவகை. ஒன்று தமிழர்கள் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்தச்சொல்லும் போராட்டங்களில் பிற தமிழ் எழுத்தாளர்களைப்போல நானும் ஏன் உணர்ச்சிகரமாகக் குரல் கொடுக்கவில்லை என்று கோரும் மின்னஞ்சல்கள். பல தமிழ் எழுத்தாளர்கள் மிகையுணர்ச்சியுடன் எழுதி தள்ளியிருந்தார்கள். மிகையுணர்ச்சியை வெளிப்படுத்துவதில் தமிழில் நமக்கு ஈராயிரம் வருடத்து மரபே இருக்கிறது. எந்தப்பயனும் இல்லாத வெறும் சொற்கள் அவை. ஆனால் அவற்றை சொல்லாதவர்கள் தமிழ் விரோதிகளாக ஆகிவிடும் கெடுபிடி நிலை உருவாக்கப்பட்டிருந்தது.

மறுபக்கம் புலிகள் வலுக்கட்டாயமாக தமிழர்களை பிடித்து வைத்திருப்பது, தப்ப முயலும் எளிய மக்களை கொலைசெய்வது குறித்த கடிதங்கள். இக்கடிதங்கள் இரண்டு வகை. ஒன்று சுல்தான், காருண்யன் என்ற பெயர்களில் உணர்ச்சிகரமான மொழியில் பொதுவாக எல்லா முக்கிய ஆளுமைகளுக்கும் மின்ஞ்சல் மூலம் அனுப்பப்பட்டவை. அவற்றில் பலசமயம் ஆதாரபூர்வமான தகவல்கள்தான் அதிகம் இருந்தன. அவற்றில் ஒன்றுக்கு விடுதலைச் சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ‘நீங்கள் ஐந்தாம் படை’ என்று குற்றம்சாட்டி அனுப்பியிருந்த கடுமையான கடிதமும் அதற்கு காருண்யன் என்பவர் உணர்ச்சிகரமாக அனுப்பியிருந்த பதிலும் இருந்தது.

இரண்டாவது வகை கடிதங்கள் எனக்கு நன்றாகத்தெரிந்த வாசகர்கள் அனுப்பியவை. அவைதான் என்னை ஆழமான சங்கடத்தில் ஆழ்த்தின. குறிப்பாக கிறித்தவ மதபோதகரும் எங்களூர்க்காரருமான வாசகர் எழுதியவை. அவர் கிளிநொச்சியில் சேவை அமைப்பு ஒன்றில் இருந்தார். [விசித்திரமான ஒரு விஷயம் அதிதீவிர ரோமன் கிறித்தவராக இருந்த அவர் சட்டென்று பெந்தேகொஸ்தே சபையில் சேர்ந்துவிட்டார். காரணம், போர்க்களத்தில் அவர் கண்ட சடலங்களின் ஆவிகள் அவரை பீடித்து தூங்க விடாமல் செய்தனவாம். இப்போது பெந்தேகொஸ்தே கடிதங்களாக எழுதி என்னை மதம் மாற்றம் செய்ய முயல்கிறார்]

அவர் எப்போதுமே புலி ஆதரவாளர். அதற்காகவே அவர் இலங்கைக்குச் சென்றார் .ஆனால் இப்போது புலிகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது குறித்து புலம்பி எழுதியிருந்தார். தப்பி ஓடும் மக்களை பின்னாலிருந்து ஒட்டுமொத்தமாகச் சுட்டுக் கொன்றுதள்ளுகிறார்கள் என்றார். அதையும் மீறி மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்க புலிகளைக் காக்கும் மக்கள் கவசம் கரைந்துகொண்டே இருக்கிறது என்றார். தப்பி ஓடுபவர்களின் எண்ணைக்கை புலிகளால் கட்டுப்படுத்த முடியாதபடி ஆகும்போது கதைமுடியும், அதைத் தடுக்கவே புலிகள் மூர்க்கம் கொள்கிறார்கள் என்றார்.

இலங்கை அரசின் நோக்கமே அதுதான். புலிகளிடம் இருந்தால் இலங்கை அரசு குண்டுவீசி கொல்லும். தப்பி ஓடினால் புலிகள் சுடுவார்கள், ஆனால் சிலரேனும் தப்ப முடியும். ஆகவே தப்பி ஓட மக்கள் முடிவெடுத்தார்கள். மேலும் பல நண்பர்கள்  யாழ்பபணத்தில் இருந்தும் கொழும்புவில் இருந்தும் கண்டியில் இருந்தும் எல்லாம் இச்செய்திகளை உறுதிப்படுத்தி கடிதங்கள் அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

மனநிம்மதி இழந்து நிலைகொள்ளாமல் இருந்தேன். இருபக்கமும் கடிதங்களாக வந்து கொண்டிருந்தன. ‘தமிழர்கள் கொல்லப்படும்போது தமிழ் எழுத்தாளனாக  நீ ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, வா தெருவுக்கு’ என அதட்டல்கள். மறுபக்கம், ‘மனிதாபிமானமும் காந்தியமும் பேசும் நீ எளிய மக்கள் அரசியல் சதுரங்கத்தில் கொக்குகுருவி போல சுட்டுத்தள்ளப்படும்போது ஏன் சும்மா இருக்கிறாய்?’ என்ற கேள்விகள்.

ஒர் எழுத்தாளனின் தார்மீகம் என்பது உண்மையில் பொதுப்போக்கு மூலம் உருவாக்கப்படும் உணர்ச்சியலைகளில் பெரும்பாலானவர்களால் கவனிக்காமல் விடப்படும் மானுடப்பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டுவதே. எழுத்தாளன் தன் தரப்பின் பொதுஎதிரிக்கு எதிராக கொந்தளித்து எழுவதை விட தன் தரப்பின் அதார்மீகத்துக்கு எதிராகவே போராட வேண்டும். ஒவ்வொருமுறையும் காந்தி செய்தது அதையே. அதற்காகவே அவர் பழிசுமத்தப்பட்டு கொல்லவும்பட்டார்.

தமிழர்கள் கொல்லப்படுவது புதிதாக ஆரம்பித்த விஷயம்போல இங்கே எழுத்தாளர்களும் இதழாளர்களும் மிகையுணர்ச்சி கொண்டார்கள்.
ஆனால் அந்தக் கடைசிப்போரில் கொல்லப்பட்டவர்களை விட பல மடங்குபேர்கள் கடந்த வருடங்களில் கொல்லப்பட்டுக்கொண்டே இருந்தார்கள். ஒரு கட்டத்தில் அது பழகிப்போய் அன்றாட சம்பவமாக ஆகி , எல்லாரும் சொந்த வேலைகளைத்தான் கவனித்துக்கொண்டிருந்தார்கள். எவருக்கும் மனசாட்சி கொதிக்கவில்லை. ஆனால் புலிகளின் தலைமையைக் காப்பாற்றும் பொருட்டு ஊடகங்கள் வழியாக உருவாக்கப்பட்ட உணர்ச்சியலையை எல்லாரும் ஒன்றுக்குப் பத்தாக எதிரொலித்தார்கள். திகுதிகுவென எரிந்தார்கள்.

புலிகளால் கொல்லப்பட்ட மக்களைப்பற்றி ஒரு குரல், ஒரு சின்ன அக்கறை கூட எந்த ஒரு வாயில் இருந்தும் வரவில்லை. யாருடைய மனிதாபிமானமும் யாருடைய தமிழுணர்வும் அவர்களை நோக்கி திரும்பவில்லை. எந்த இனப்பாசமும் அவர்களுக்கு கவசமாகவில்லை. இந்நிலையில் ஒரு மனசாட்சியுள்ள, சிந்திக்கும் எழுத்தாளன் செய்திருக்கவேண்டியது அந்த மக்களுக்காக குரல்கொடுப்பதையே. அதன்பொருட்டு அவன் புறக்கணிக்கப்பட்டிருப்பான். ஏன் கொல்லவும் பட்டிருப்பான். ஆனால் அவன் செய்திருக்கவேண்டியது அதையே. தல்ஸ்தோய் அதைத்தான் செய்திருப்பார். நிகாஸ் கசந்த் ஸகீஸ் அதைத்தான் செய்திருப்பார். ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் அதைத்தான் செய்திருப்பார்.

ஆனால் நான் அதைச்செய்யவில்லை. இன்று அதற்காக வெட்கமும் தன்னிரக்கமும் கொள்கிறேன். நான் ஒன்றும் காந்தியோ காந்தியவாதியோ அல்ல, காந்தியின் வழியை தேர்ந்தெடுப்பதற்கான ஆழமான ஆன்ம கம்பீரம் இல்லாத, உணர்ச்சிவசப்பட்ட, எளிய எழுத்தாளன்; கற்பனாவாதி மட்டுமே நான் என அத்தருணத்திலேயே உணர்ந்தேன்.

அதைச்செய்ய என்னை தடுத்தது எது? ஒன்று விடுதலை இயக்கம் என்ற வகையில் புலிகள் மீது இருந்த பற்றுதான். வன்முறையின் வழி குறித்த ஆழமான அவநம்பிக்கை எனக்கு இருந்தாலும் அவர்களின் ஆரம்பகால இலட்சியவாதம் அப்பழுக்கற்றது என்றே நம்புகிறேன். பின்னர் அவர்கள் அடைந்த சீர்கேடுகள் எல்லாமே  எந்த ஒரு வன்முறை அமைப்பும் வன்முறையை நடைமுறைப்படுத்தும்போது தவிர்க்கமுடியாமல் அடைவதே. அவ்வகையில் பார்த்தால் வன்முறையின் உச்சத்திலும் குறைந்தபட்ச அடிப்படை அறநெறியுடன் இருந்த ஒரே அமைப்பு புலிகளே.

இன்னொன்று, பிரபாகரன். தனிமனித ஆராதனையை நான் இன்று செய்வதில்லை. வன்முறையாளர்கள் நாயகர்கள் அல்ல என்றே எண்ணுகிறேன். ஆனால் என் இளமையில் நான் அவரை ஆராதித்திருக்கிறேன். அவர் என் இளமைநினைவுகளின் ஒரு பகுதி. அது என் சொந்த இளமை. ஆகவே நான் அதை வெட்டி உதற முடியவில்லை. அவர் தப்ப வாய்ப்பிருந்தால் தப்பவேண்டும் என்று நான் விரும்பினேன். ஏன் ,பிரார்த்தனைகூடச் செய்தேன்.

இந்த மனநிலை காரணமாக நான் புலிகள் மக்களைக் கொல்கிறார்கள் என வந்த ஆதாரபூர்வமான தகவல்களை நம்ப மறுத்தேன். மாற்றுத்தரப்புகளை உருவாக்கிக் கொண்டேன். அந்த தகவல்களை நடுநிலையாளர் என நான் நம்பும் முக்கியமான நான்கு இதழாளர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் நால்வருமே திட்டவட்டமாக, மேலதிக ஆதாரஙக்ளுடன், அதை உறுதிசெய்தார்கள், அவர்களில் மூவர் எப்போதும் புலிகளை ஆதரித்தவர்கள். இருந்தாலும் நான் அந்த தகவல்களை நம்புவதை ஒத்திப்போட்டேன்.

ஆகவே நான் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கருத்து தெரிவிக்காதது குறித்து நான் வசைபாடப்பட்டேன். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இப்படியெல்லாம் கூச்சலிடும் கும்பலை என்றைக்குமே நான் ஒரு பொருட்டாக எண்ணியவன் அல்ல. ஆனால் இன்று என் ஈழ நண்பர்கள், புலி அமைப்பில் இருந்தவர்கள்கூட, எளிய மக்களை புலிகள் கொல்லும்போது நீங்கள்கூட ஒன்றுமே சொல்லவில்லையே என்று எழுதுகிறார்கள். ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

‘துப்பாக்கிமுனையில் கொண்டுசென்று அமரச்செய்யப்பட்டேன், எட்டுநாள் பட்டினி கிடந்தேன், தப்பி ஓடும்போது புலிகள் என் இரு பிள்ளைகளையும் சுட்டார்கள்’ என்று ஒருகடிதம். விஷ்ணுபுரம் வழியாக அறிமுகமான நெருக்கமான வாசகர் எழுதியது. ‘அச்சம் காரணமாகத்தானே சும்மா இருந்தீர்கள், அல்லது புகழை இழக்க அஞ்சினீர்கள்’ என்கிறார் நண்பர். அவர்களின் கேள்விகள் முன் சுருங்கிப்போகிறேன். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன், கண்டிப்பாக அச்சம் இல்லை. கண்டிப்பாக புகழாசையும்  இல்லை. ஒன்றும் சொல்லாமல் இருந்ததற்காகவே ஏகப்பட்ட வசைகளைக் கேட்டுவிட்டேன். இழப்பதற்கு எனக்கு பெரும்புகழ் ஒன்றும் இல்லை.

அன்று ஆவேசத் தமிழ்வெறிக்கூச்சல் எழுப்பியவர்கள் எவரும் இக்கேள்விகளை எதிர்கொள்ள மாட்டார்கள். அவர்களிடம் வாசகர்கள் கேட்கவும் போவதில்லை. நான் மட்டும் இக்கேள்விகளை மேலும் மேலும் எதிர்கொள்ள வேண்டும்.வரும்காலங்களில் இந்நிகழ்ச்சி குறித்து மேலும் மேலும் அனுபவப்பதிவுகள் வெளிவந்து நம்மை சங்கடத்தில் ஆழ்த்தும் — வரலாற்றை நாம் எளிதாக மறந்துவிடுவோம் என்பதனால் பெரும்பாலானவர்கள் அவற்றைக் கவனிக்க மாட்டோம், அவ்வளவுதான்.

நான் சொல்லவிருப்பது ஒன்றே. இது மனசாட்சியின் பதிலாக இல்லாமல் இருக்கலாம், தர்க்கபூர்வமான பதில் மட்டுமாக இருக்கலாம், ஆனாலும் இதுவே விளக்கம். எந்த ஒரு வன்முறை அமைப்பும் அதன் அழிவின் விளிம்பில் நிதானத்தையும் மையக்கட்டுப்பாட்டையும் இழக்கும். உலக வரலாற்றில் இது மீண்டும் மீண்டும் நடந்திருக்கிறது. கடைசிப்போரில் போர் வெற்றி, அல்லது தாக்குப்பிடித்தல் மட்டுமே முக்கியமாக ஆகிறது.அப்போது மரங்கள் கட்டிடங்கள் போலத்தான் எளிய மக்களும். எப்படியாவது அந்தக் கடைசித்தருணத்தை தாண்டிவிடும் முயற்சி அது.

ஆகவே புலிகளின் கடைசிக்கால அத்துமீறல்களை அவர்களின் கொள்கையுடனும் தலைமையுடனும் இணைக்க வேண்டாமென்றே நினைக்கிறேன். அது வன்முறையின் விலை. ஏதேனும் ஒரு கட்டத்தில் வன்முறையை நம்பியதற்கு, எதிர்தரப்பின் எளிய மக்கள் கொல்லப்பட்டபோது மகிழ்ச்சியடைந்ததற்கு, மிகையுணர்ச்சிப் பிரச்சாரங்களை நம்பியதற்கு, அநீதிகளை இன,மொழி உணர்வின் பேரால் ஏற்றுக்கொண்டதற்கு நாம் அளிக்கும் கப்பம். குரூரமான பாடம்தான். வன்முறையை நம்பிய எந்த சமூகமும் இந்த விலையைக் கொடுத்திருக்கிறது. சோவியத் சமூகம், ஜெர்மனிய சமூகம்,சீன சமூகம்…

 

 

முருகபூபதி

டாக்டர் நடேசன்

 

 

எப்ரல் 26 அன்று ஆஸ்திரேலியாவில் உதயம் இதழும், விக்டோரியா பல்தேசியக் கலாச்சார ஆணையமும் [VMC] மெல்போர்ன் தமிச்சங்கமும் இணைந்து எனக்கு ஒரு வரவேற்புக்கூட்டத்தை ஏற்பாடு செய்தன. புலிஆதரவுக்கூட்டங்கள் நடந்துகொண்டிருந்தமையால் மிகக்குறைவானவர்களே வந்திருந்தார்கள். நான் குத்துவிளக்கு ஏற்றி கூட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தேன்.

எழுத்தாளர் முருகபூபதி என்னை அறிமுகம்செய்து பேசினார். மு.தளையசிங்கத்தின் மாற்றுமார்க்ஸியக் கோட்பாடான மெய்முதல்வாதம் குறித்து நான் எழுதிய நீண்ட கட்டுரையை முருகபூபதி நினைவுகூர்ந்தார். ஈழத்தில் நாம் அன்றாட அரசியலையே அதிகமாக இலக்கியத்தில் பேசியமையால் தளையசிங்கம் போன்றவர்களை கவனிக்க மறந்துவிட்டோம் என்றார். என்னுடைய இலக்கிய இயக்கத்தில் உள்ள கறாரான அழகியல்தன்மையைச் சுட்டிக்காட்டினார். உதயம் இதழாசிரியரான டாக்டர் நோயல் நடேசன் என்னுடைய காடு நாவலைப்பற்றி விரிவாகப் பேசினார். காட்டை நுண்ணிய தகவல்கள் வழியாக ஒரு காட்சி சித்தரிப்பாக , உண்மை அனுபவம் போல அந்நாவல் அளிக்கிறது என்றார்.

நான் சுவையறிதல் என்ற தலைப்பில் பேசினேன். உரையை முழுக்கவே எழுதிவிட்டு அதை ஒருமுறை மனப்பாடமும் செய்துவிட்டு ‘ஸ்பாண்டேனியஸ்’ ஆக பேசுவது என் வழக்கம். ஆகவே உரை செறிவாகவும் நன்றாகவும் வந்திருந்தது. அருண்மொழி புத்தகத்தை எடிட் செய்வதைப்பற்றிப் பேசினார். இருவகை செம்மையாக்கம் உள்ளது. ஒரு சராசரி பொதுவடிவத்தை முன்வைத்து படைப்புகளை செம்மைசெய்வது. அதை மேலைநாடுகளில் வணிக எழுத்துக்களுக்குச் செய்கிறார்கள். இன்னொன்று ஓர் எழுத்தாளனின் நடை, இயல்பு,நோக்கம் எல்லாவற்றையும் நுட்பமாக அறிந்து அவரது படைப்புகளை மட்டுமே செம்மைசெய்வது. தான் செய்வது இரண்டாவதையே என்றாள்

அதன் பின்னர் கேள்வி பதில்கள். வழக்கம்போல புலி எதிர்ப்பு ,ஆதரவு என்ற இரு தரப்புக் கருத்துக்களும் கொஞ்சம் மறைமுகமாகப் பேசப்பட்டன. நான் ஒரு கேள்விக்குப் பதிலாக ஒரு கதை சொன்னேன். திருநெல்வேலி அப்பாவி ஆசாமி ஒருவர் பணகுடிக்குப்போனார். முழு நிலவிலே பொட்டல் பாதையில் நடந்து போனபோது இரு சண்டியர்கள் எதிரே வந்தார்கள். போதையில் இருவருக்கும் சண்டை. ‘டேய் மேலே பாருடா, நிலா இருக்கு. அப்டீன்னா இன்னைக்கு அம்மாசை’ என்றார் ஒருவர் ‘டேய் கேனபப்யலே நிலா இருந்தா அன்னைக்கு பௌர்ணமிடா… சூரியன் இருந்தாத்தான் அம்மாசை’ என்றார் அடுத்தவர். பெரிய வாக்குவாதம், பூசல்.

”சரி, இந்தா அய்யா வாறாரே, அவர்ட்டேயே கேப்போமே” என்றார் ஒருவர் ”சாமி படிச்சவரு மாதிரி இருக்கீங்க நல்லா பாத்து சொல்லுங்க. இன்னைக்கு அம்மாசையா பௌர்ணமியா”. இருவர் கையிலும் திருப்பாச்சி அருவாள். அப்பாவி கொஞ்சம் தயங்கி பவ்யமாகச் சொன்னார் ”தெரியலீங்க…நான் வெளியூரு” நானும் வெளியூர் , அரசியல் பேசக்கூடாது என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.

இருபத்தேழாம் தேதி காலைமுதலே பெட்டிகளை கட்ட ஆரம்பித்துவிட்டோம். எவ்வளவு அடுக்கினாலும் கடைசியில் போட்டு திணித்து இறுக்கித்தான் வைக்கவேண்டியிருக்கிறது, ஆகவே ஆரம்பத்திலேயே திணிப்போமே என்றேன். அருண்மொழி என்னை முறைத்து ‘போய் உன் வேலையைப்பார்’ என்றாள். கடைசியில் காலால் மிதித்தே இறுக்கிகொண்டிருந்தாள். எல்லாம் அழுக்குத்துணி.

இருபத்தேழாம்தேதி மாலை தாய் ஏர்வேஸ் விமானத்தில் பாங்காக் கிளம்பினோம். விமானத்தில் பாதி காலியாக இருந்தது. தாய்லாந்தில் புதிய அதிபருக்கு எதிராக பழைய அதிபர் கிளப்பிய அரசியல் கலவரம் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குறைந்துவிட்டனர். தாய்லாந்திற்கு மாதம் தோறும் போகும் ஆஸ்திரேலியர் உண்டு. குடி சூது மாது ….இப்போது அலுவல் நிமித்தம் போகும் சீன வம்சத்தவர் மட்டுமே கண்ணில்பட்டனர்.

தாய்லாந்து விமானநிலையத்தில் காலை ஆறுமணிக்கு வந்து சேர்ந்தோம். இரவு ஒன்பது மணிக்குத்தான் எங்களுக்கு சென்னை விமானம். மொத்த பகலும் விமானநிலையத்தில்தான். நான் ஜான் கிரிஷாம் எழுதிய ஜட்ஜ்மெண்ட்  என்ற நாவலை வாசித்தேன். நான் அவரது எந்த ஒரு நாவலையும் வாசித்ததில்லை. எல்லா புகழ்பெற்ற வணிக எழுத்தாளர்களிலும் ஒரு நாவலை வாசித்துப் பார்த்துவிடுவது என்ற கொள்கை எனக்கு உண்டு. வழக்கமான அமெரிக்க திரில்லர் நாவல். அமெரிக்கச் சட்டச்சிக்கல்களைக் கொஞ்சம் கலந்திருக்கிறார் என்று சொல்லலாம். அருண்மொழி தூங்கினாள்.

விமானநிலையத்தில் ஒருவர் அறிமுகமானார். சுப்ரமணியம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இந்தோனேஷியாவில் நிலவியலாளராக இருக்கிறார். அங்கே நிறைய நிலத்தடி எண்ணை இருப்பதாகச் சொன்னார். அதை அகழ்வதற்கான நிறுவனங்களில் ஏராளமான தமிழர்கள் வேலைபார்க்கிறார்களாம். அரிசி கிடைக்கும், நல்ல ருசியான சிவப்பு அரிசி. மீன் கொள்ளை மலிவு. ஊரில் இருந்து மளிகை கொண்டுபோய் சமைப்பார்கள். பிள்ளைகளை எல்லாம் ஊரில் விட்டு படிக்க வைக்கிறார், அங்கே நல்ல கல்வி இல்லை.

எப்போதும் பூகம்பத்திற்கான வாய்ப்பு உள்ள மண். ‘முதல் அதிர்ச்சி கிடைச்சிட்டாபோரும்சார் எப்பவுமே நம்ம கால் பூகம்பத்துக்கு தயாரா இருக்கும்…பூகம்பம் வர்ர அனுபவம் இருக்கே ,அதை சொன்னா தெரியாது. என்ன நடக்குதுன்னே தெரியாது. மனசு படபடன்னு அடிக்கும். காலிலே விறு விறுன்னு இருக்கும். தலை சுத்தும். கேட்டா பூகம்பம்னு சொல்லுவாங்க. சுவரிலே மாட்டியிருக்கிற படங்கள்லாம் ஆடும்..” அவர் பூகம்பத்தை ரசிக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது

பாங்காங் சுவர்ணபூமி விமானநிலையத்தில் இருந்த பெரிய தாய் பாணி ஓவியங்களை பார்த்தபடி சுற்றி வந்தோம். ஒரு வெண்கலத்தொட்டியில் வெண்தாமரைகள் மலர்ந்திருக்க அருகே ஓர் சீனமுக இளைஞன் அமர்ந்து மூங்கில் வாத்தியம் ஒன்றை அருமையாக இசைத்துக்கொண்டிருந்தான். பலவகையான மனிதர்கள். சீனமுகங்களுக்குள் இப்போது பலவகையான இனங்களை இடங்களை காண ப்பழகிவிட்டிருந்தேன்.

ஒருவழியாக இரவில் விமானம் வந்தது. ஏறி அமரும்போதே தூங்கும் நிலையில்தான் இருந்தேன். ஆஸ்திரேலியாவை விட்டு வருவது, ஊர் போய் சேர்ந்து பிள்ளைகளைப் பார்ப்பது போன்ற பெரிய விஷயங்கள் எல்லாம் விலகி விமானம் வந்துவிட்டது என்ற சின்ன மகிழ்ச்சியே என்னை அக்கணங்களில் நிறுத்தி வைத்திருந்தது. இருக்கையில் அமர்ந்ததுமே அருண்மொழியிடம் குட்நைட் சொன்னேன்

சென்னைவரை அருண்மொழி விழித்துக்கொண்டிருந்தாள். சென்னை கீழே தெரிந்ததும் என்னை உசுப்பினாள். ”பார் பார்” என்றாள். நான் கீழே பார்த்தேன். ஒளிக்குவியல்களாக சென்னை என்னை நோக்கி வந்தது

[முற்றும்]

 

சுவையறிதல்

முந்தைய கட்டுரைகிறித்தவ விஜயதசமி
அடுத்த கட்டுரைகாந்தி மேலும் கடிதங்கள்