கிறித்தவ விஜயதசமி

தசரா விழா! பக்தியுடன் எழுத்து கூதாஸா!

 

கோட்டயம்: சின்னக்கைவிரலைப் பற்றிக்கொண்டு அரிசிப்பொரியும் வெள்ளைப்பூண்டும் பரப்பப்பட்ட தட்டத்தில் புனித பிதா கல்வியின் ‘ஈஸோ மரியம்’ என்று எழுதியபோது பிள்ளைகள் சிலர் சிரித்தார்கள் சிலர் சிணுங்கினார்கள்

 

கோட்டயம் மறைமாவட்டம் ஏற்பாடு செய்திருந்த  எழுத்து வழிபாட்டில் நேற்று ஆயிரத்துக்கும் மேலான ஆட்டுக்குட்டிகள் முதல் எழுத்தின் அப்பத்தை ருசித்தார்கள்

 

கோட்டயம் செயிண்ட் பஸாலியோஸ் தேவாலயத்தில் காலை ஒன்பது மணிக்கு இந்த சடங்கு ஆரம்பித்தது

 

சிலுவைப்பாட்டை வளங்கி அறிவுக்கு அதிபராகிய புனித செபாஸ்டியனோஸையும் பொருள் லாபத்துக்காக புனித பவுலையும் வணங்கி அவர்களின் படங்களுக்கு முன்னால் மெழுகுவத்தி கொளுத்தி மேஜர் ஆர்ச் பிஷப் பஸாலியோஸ் மார் கிளீமீஸ் கத்தோலிக்கா எழுத்துகூதாஸா சடங்கை நிறைவேற்றினார்

 

கிறித்தவ மதத்தின் இந்த ஆசாரங்களை இன்று இந்தியாவெங்கும் விஜயதசமி என்ற பேரில் கொண்டாடுகிறார்கள் , அது வரவேற்புக்குரியது என்று லதீத் அர்ப்பணம் செய்த புனித தந்தை வர்கீஸ் கூமந்தலா அவர்கள் சொன்னார்கள். கிறிஸ்துவுக்கு யகோவா ஞானம் அளித்த நாள்தான் இந்த புனித தினம் என்று அவர் சொன்னார். மிஸிகாராத்திரி என்ற சொல் தேய்ந்துதான் மகாசிவராத்திரியாக ஆகியது என்றும் கிறிஸ்து இரவு முழுக்க உறங்காமல் தன் சீடர்களிடம் பேசிக்கொண்டிருந்த நாளைத்தான் தூக்கமில்லாமல் இவ்வாறு கொண்டாடுகிறார்கள் என்றும் அவர் சொன்னார்

 

மலையாள மனோரமா

 

 

இந்த கட்டுரையின் செய்திவெட்டு எனக்காக ஒரு வாசகரால் அனுப்பப் பட்டது. இதை எப்படி எடுத்துக்கொள்வது என்ற தொனியில் அவர் எழுதியிருந்தார்.

 

இதில் ஆச்சரியமாக ஒன்றும் இல்லை என்று நான் நினைக்கிறேன். தீபாவளிப் பண்டிகை சமணர்களாலும் இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது, வெவ்வேறு காரணங்களுக்காக. எது காலத்தால் முந்தையது எது சரியானது என்று இன்று சொல்ல முடிவதில்லை. ஒவ்வொரு மதமும் தனக்கென ஒரு நம்பிக்கையை உருவாக்கிக்கொள்வது வழக்கம்தான்.

 

எனக்கு கேரளத்தில் வேரூன்றியிருக்கும் ஒரு பண்பாட்டு அம்சம்,எழுத்தறிவித்தல், மத எல்லைகளை தாண்டி விரிவது ஒரு நல்ல விஷயமாகவே பட்டது. ஏற்கனவே ஓணம், கதகளி போன்றவற்றை அப்படி விரித்தெடுக்க முடிந்திருக்கிறது அங்கே. சிரியன் கிறிஸ்தவர்கள் பிற அனைவரை விடவும் இந்தியப் பண்பாட்டுக்கு நெருக்கமானவர்கள். இந்தியப்பண்பாட்டுக்கு பெரும் கொடைகளை வழங்கியவர்கள் என்ற வரலாறும் உண்டு

 

ஜெ

முந்தைய கட்டுரைபுல்வெளிதேசம் 19,மெல்போர்ன்
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 20,விழாவும் விடையும்