பகுதி மூன்று : எரியிதழ்
[ 7 ]
ஒரு தெய்வம் இறங்கிச்சென்று பிறிதொரு தெய்வம் வந்து படகிலேறியதுபோல நிருதன் உணர்ந்தான். திரும்பிவந்த அம்பை மெல்லிய நடையும், உடல்பூத்த சலனங்களும், செவ்வாழைமெருகும் கொண்டவளாக இருந்தாள். படகிலேறி அமர்ந்து இசைகலந்த குரலில் ‘அஸ்தினபுரிக்குச் செல்’ என்று அவள் சொன்னபோது துடுப்பை விட்டுவிட்டு கைகூப்பியபின் படகை எடுத்தான். அலைகளில் ஏறியும் படகு ஆடவில்லை, காற்று ஊசலாடியும் பாய்மரம் திரும்பவில்லை. வடதிசையிலிருந்து வானில் பறந்துசெல்லும் வெண்நாரை பொன்னிற அலகால் இழுபட்டுச்செல்வதுபோல அவள் சென்றுகொண்டிருந்தாளென நினைத்தான். அவளருகே ஒரு வீணையை வைத்தால் அது இசைக்குமென்றும் அவள் விரல்பட்டால் கங்கைநீர் அதிரும் என்றும் எண்ணிக்கொண்டான்.
நெய்விழும் தீ போல அவ்வப்போது சிவந்தும், மெல்ல தணிந்தாடியும், சுவாலையென எழுந்தும் படகுமூலையில் அவள் அமர்ந்திருக்கையில் படகு ஒரு நீளமான அகல்விளக்காக ஆகிவிட்டது என்று நிருதன் எண்ணிக்கொண்டான். இரவு அணைந்தபோது வானில் எழுந்த பலகோடி விண்மீன்களுடன் அவள் விழியொளியும் கலந்திருந்தது. இரவெல்லாம் அவளுடைய கைவளை குலுங்கும் ஒலியும் மூச்செழுந்தடங்கும் ஒலியும் கேட்டுக்கொண்டிருந்தன.பகலொளி விரிந்தபோது சூரியனுடன் சேர்ந்து படகின் கிழக்குமுனையில் உதித்தெழுந்தாள்.
அஸ்தினபுரியை நோக்கிச்செல்லும் பாதை தொடங்குமிடத்தில் இருந்த அமுதகலசம் கொண்ட தூண்முகப்பைக் கண்டதும் அன்னையைக் கண்ட குழந்தைபோல எழுந்து நின்றுவிட்டாள். படகு நிற்பதற்குள்ளேயே பாய்ந்து கரையிறங்கி ஓடி, அங்கே நின்ற அஸ்தினபுரியின் ஸ்தானிகரிடம் இலச்சினை மோதிரத்தைக் காட்டி அவரது ரதத்தில் ஏறிக்கொண்டு கடிவாளத்தைச் சுண்டி குதிரைகளை உயிர்பெறச்செய்து, வில்லை உதறிய அம்புபோல நதியை விட்டு விலகி விரைந்து சென்றாள். செம்மண்பாதையின் புழுதி எழுந்து அவளை மறைத்தபோது அஸ்தமனம் ஆனதுபோல நிருதனின் உலகம் அணைந்து இருண்டது.
அம்பை அரசபாதையில் அஸ்தினபுரியை அடைந்தாள். கோட்டைவாசலிலேயே பீஷ்மரைப்பற்றி விசாரித்தறிந்து, வலதுபக்கம் திரும்பி உபவனத்துக்குள் இருந்த பீஷ்மரின் ஆயுதசாலையை அடைந்து, ரதத்தை நிறுத்தி கடிவாளத்தை உதறிவிட்டு பாய்ந்திறங்கி, ஆயுதசாலையின் முகப்பை அடைந்தாள். அதுவரை கொண்டுவந்து சேர்த்த அத்தனை வேகமும் பின்னகர, கால்கள் தளர்ந்து படிகளின் கீழே நின்றிருந்தாள். அவளுக்குப் பின்னால் குதிரையில் விரைந்துவந்த காவலன் இறங்கி உள்ளே ஓடிச்சென்று சொன்னதும் பீஷ்மரின் முதல்மாணவனாகிய ஹரிசேனன் வெளியே ஓடிவந்து “காசிநாட்டு இளவரசியை வணங்குகிறேன்” என்றான்.
அச்சொல் தன் மேல் வந்து விழுந்தது போல அம்பை திடுக்கிட்டு “அஸ்தினபுரிக்கு அதிபரான பீஷ்மரை பார்க்கவந்தேன்….” என்றாள். “பிதாமகர் உள்ளே ஆயுதப்பயிற்சி எடுக்கிறார். வாருங்கள்” என்றான் ஹரிசேனன். அவள் அவனைத்தாண்டி மரப்பலகைத் தரையில் பாதங்கள் ஒலிக்க உள்ளே சென்றாள். அவன் பெருமூச்சுடன் நின்று கதவை மெல்ல மூடினான். முன்னதாக காசிநாட்டிலிருந்து ஒற்றன் செய்தி அனுப்பியிருந்தான்.
பீஷ்மர் முன்பு சென்றபோது அம்பை தன் உடலையே தாளாதவள் போல இடைதுவண்டு அங்கிருந்த ஆயுதபீடத்தைப் பற்றியபடி நின்றாள். தன் உடலில் இருந்து சிலம்பின் ஒலி நின்றபின்னும் கேட்டுக்கொண்டிருப்பதுபோல உணர்ந்தாள்.
அவள் வருவதை முன்னரே உணர்ந்திருந்த பீஷ்மர் தன் கையில் ஒரு குறுவாளை எடுத்து அதன் ஒளிரும் கருக்கை கைகளால் வருடியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார்.
அம்பை பேசுவதற்கான மூச்சு எஞ்சியிராதவளாக, உடலெங்கும் சொற்கள் விம்மி நிறைந்தவளாக நின்றாள். உள்ளெழுந்த எண்ணங்களின் விசையால் அவள் உடல் காற்றிலாடும் கொடிபோல ஆடியபோது நகைகள் ஓசையிட்டன. அமர்ந்திருக்கும்போதும் அவளுடைய உயரமிருந்த அம்மனிதனை முதல்முறையாக பார்ப்பவள் போல இருகண்களையும் விரித்து, மனதை விரித்து, தாகத்தை விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
பீஷ்மர் சிலகணங்களுக்குப்பின் தலைதூக்கி அவளைப்பார்த்தார். அப்பார்வை பட்டதுமே அவளுடலில் பரவிய மெல்லிய அசைவை, அவளில் இருந்து எழுந்த நுண்ணிய வாசனையை அவர் உணர்ந்ததும் அவரது உள்ளுக்குள் இருந்த ஆமை கால்களையும் தலையையும் இழுத்துக்கொண்டு கல்லாகியது.மரியாதைமுகமாக எழுவது போன்று எழுந்து, பார்வையை விலக்கி “காசிநாட்டு இளவரசியாருக்கு வணக்கம்….நான் தங்களுக்கு என்ன சேவையை செய்யமுடியுமென்று சொல்லலாம்” என்று தணிந்த குரலில் சொன்னார்.
அவரது குரலின் கார்வை அவளை மேலும் நெகிழச்செய்தது. வெண்ணையாலான சிற்பம் என தான் உருகி வழிந்துகொண்டிருப்பதாக நினைத்தாள். என் சொற்கள் எங்கே, என் எண்ணங்கள் எங்கே, நான் எங்கே என நின்று தவித்தாள். இங்கிருப்பவள் எவள் என திகைத்தாள். இதுவல்லவா நான், இது மட்டுமல்லவா நான் என கண்டடைந்தாள். பீஷ்மர் அவளை நோக்கி “காசியிலிருந்து தாங்கள் கிளம்பி வரும் தகவலை ஒற்றர்கள் சொன்னார்கள்” என்றார்.
“நான் உங்களைத்தேடி வந்தேன்” என்றாள் அம்பை. அந்த எளிய சொற்களிலேயே அனைத்தையும் சொல்லிவிட்டவள்போல உணர்ந்தாள். “நான் என்ன செய்யமுடியும் தேவி? தாங்கள் சால்வனை வரித்துக்கொண்டவர்” என்றார் பீஷ்மர். அம்பை தன்மேல் அருவருப்பான ஏதோ வீசப்பட்டதுபோல கூசி “அவனை நான் அறியேன்” என்றாள். “அவன் அஞ்சியிருப்பான்….அவனிடம் நான் பேசுகிறேன்…” என்றார் பீஷ்மர். “அவனை நான் அறிந்திருக்கவுமில்லை” என்றாள் அம்பை. அக்கணம் அவர்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன. அவரிடம் தான் எதுவும் சொல்லவேண்டியதில்லை என்று அவளறிந்தாள்.
பீஷ்மர் “இளவரசி, நான் தங்களை முறைப்படி சால்வனிடம் அனுப்பியது இந்த நாட்டுக்கே தெரியும்…. அம்பிகையை பட்டத்தரசியாக்கும் காப்பு நேற்று கட்டப்பட்டுவிட்டது…இனி இங்கே ஏதும் செய்வதற்கில்லை” என்றார். அம்பை சீறியெழும் நாகம்போல தலைதூக்கி “நான் அஸ்தினபுரிக்கு அரசியாக இங்கே வரவில்லை. நான் வந்தது உங்களைத்தேடி” என்றாள்.
வேட்டைநாய் முன் சிக்கிக்கொண்ட முயல்போல பீஷ்மர் அச்சத்தில் சிலிர்த்து அசைவிழந்து நின்றார். பின்பு கைகளைத் தூக்கி ஏதோ சொல்லமுனைந்தார். “இது தங்கள் ஆன்மாவும் என் ஆன்மாவும் அறிந்ததுதான்…” என்றாள் அம்பை. பீஷ்மர் கால்கள் தளர்ந்து தன் இருக்கையில் அமர்ந்துகொண்டார். “நான் இருக்கவேண்டிய இடம் இது என்று சால்வனைக் கண்டபின்புதான் அறிந்தேன்…ஆகவே இங்கே வந்தேன்” என்று அம்பை சொல்லி மெல்ல முன்னகர்ந்தாள்.
அவளை அஞ்சியவர் போல கால்களைப் பின்னால் இழுத்துக்கொண்ட பீஷ்மர் “இளவரசி, நான் காமத்தை ஒறுக்கும் நோன்பு கொண்டவன். என் தந்தைக்குக் கொடுத்த வாக்கு அது. அதை நான் மீறமுடியாது” என்றார். கூரிய விழிகளால் பார்த்தபடி “இல்லை, அதை நீங்கள் உங்களை நோக்கி சொல்லிக்கொள்ளமுடியாது” என்றபடி அம்பை மேலும் அருகே வந்தாள். “நான் உங்களை ஏன் ஏற்றுக்கொண்டேன் என்று சற்றுமுன்னர்தான் எனக்குப்புரிந்தது, நம் கண்கள் சந்தித்தபோது…நீங்கள் முன்பு என்னைப்பார்த்த முதல்பார்வையே பெண்ணைப்பார்க்கும் ஆணின் பார்வைதான்.”
பீஷ்மர் கடும் சினத்துடன், “என்ன சொல்கிறாய்? யாரிடம் பேசுகிறாய் என்று சிந்தித்துதான் பேசுகிறாயா?” என்றார். அந்த சினம் அவரது முதல் கோட்டை என அறிந்திராதவளாக அதை பட்டுத்திரைபோல விலக்கி முன்னால் வந்தாள். “ஆம், உங்களிடம்தான். இன்று இவ்வுலகத்திலேயே நான் நன்றாக அறிந்தவர் நீங்கள்தான். சுயம்வரப்பந்தலில் முதன்முதலில் என்னைப்பார்த்ததும் நீங்கள் அடைந்த சலனத்தை நானும் கவனித்திருக்கிறேன் என்று இப்போதுதான் நானே அறிந்தேன். நாண் விம்மி ஒலிக்கும் வில்லை ஏந்தியபடி என்னைத் தூக்குவதற்காக உங்களை அறியாமலே என்னை நோக்கி நான்கு எட்டு எடுத்து வைத்தீர்கள். அதுதான் உங்கள் அகம். உடனே திரும்பி சீடர்களை அழைத்தீர்களே அது உங்கள் புறம்…இங்கே நீங்கள் சொல்லும் அத்தனை காரணங்களும் உங்கள் புறம் மட்டுமே. நான் உங்கள் அகத்துக்குரியவள்…உங்கள் அகத்துடன் உரையாடிய முதல் பெண் நான்…”
“இளவரசி, என்னை அவமதிக்காதீர்கள். நான் நடுவயது தாண்டியவன்….ஒருகணக்கில் முதியவன். இத்தனைநாள் நான் காப்பாற்றி வந்த நெறிகளை எள்ளி நகையாடுகிறீர்கள்…எவ்வகையிலும் இது நியாயமல்ல…” என்று இடறிய குரலில் சொன்னார் பீஷ்மர். அம்பையின் முகம் கனிந்தது. பிழைசெய்துவிட்டு பிடிபட்ட குழந்தையிடம் அன்னை போல “காங்கேயரே, நான் மிக இளையவள். ஆனால் காதலில் மனம்கனிந்த பெண். உண்மையில் அன்னையும்கூட. உங்கள் தனிமையை நான் அறியமாட்டேன் என நினைக்கிறீர்களா? உங்கள் உள்ளுக்குள் நீங்கள் ஏங்குவதென்ன என்று நான் அறிவேன்….நீங்கள் விரும்புவது ஓர் அன்னையின் அணைப்பை மட்டும்தான்.”
“உளறல்” என்று பற்களைக் கடித்த பீஷ்மரிடம் “கட்டுண்டவேழம் போன்றவர் நீங்கள். மலைகளைக் கடக்கும் கால்களும் மரங்களை வேருடன் சாய்க்கும் துதிக்கையும் கொண்டிருந்தாலும் மூங்கில் இலைகளைத் தின்று கல்மண்டப நிழலில் வாழ விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்…அந்த சுயவெறுப்பிலிருந்து வந்தது உங்கள் தனிமை…அதை நான் மட்டுமே போக்க முடியும்” என்றாள் அம்பை.
பீஷ்மர் கைகள் நடுங்க அவளை வணங்கி “இங்கிருந்து சென்றுவிடுங்கள் இளவரசி…அந்த அருளை மட்டும் எனக்களியுங்கள்” என்றார். “காங்கேயரே, அரியணையில் அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுக்கவென்று காலடியிலிட்டு, அத்தனை போகங்களையும் அறிந்து மூத்தபின் பெற்றமக்களிடம் நாட்டை அளித்துவிட்டு காடுபுகுந்தாலன்றி உங்கள் அகம் அடங்காது…. அது ஷத்ரியனின் உயிராற்றல். இன்று உங்களிடமிருப்பது அடங்கிய அமைதி அல்ல, அடக்கப்பட்ட இறுக்கம்…” என்ற அம்பை கனிந்து மென்மையான குரலில் சொன்னாள் “எதற்காக இந்த பாவனைகள்? ஏன் இப்படி உங்களை வதைத்துக்கொள்கிறீர்கள்? சுயதர்மத்தைச் செய்யாமல் முக்தியில்லை என நீங்கள் கற்றதில்லையா என்ன?”
“இளவரசி, நான் என் தந்தைக்குக் கொடுத்த ஆணை…” என்று பீஷ்மர் தொடங்கியதும் கோபமாக அம்பை உட்புகுந்தாள். “அதைப்பற்றி என்னிடம் சொல்லவேண்டாம்…அது உங்கள் தந்தை சந்தனு செய்த ஒரு அரசியல் உத்தி. தொலைதூரத்து காங்கேயர் குலம் இந்த மண்ணை ஆள்வதை இங்குள்ள மக்கள் விரும்பமாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்…”.என்றாள்.
பீஷ்மர் உரத்த சிரிப்புடன் “இந்த மண்ணை எடுத்துக்கொள்ள என்னால் முடியாதென நினைக்கிறீர்களா?” என்றார். “எனது இந்த ஒரு வில் போதும் பாரதவர்ஷத்தை நான் ஷத்ரிய முறைப்படி வென்றெடுக்க” என்றார்.
அம்பை “பார்த்தீர்களா, நான் உங்கள் வீரத்தை குறைத்து எண்ணிவிடக்கூடாதென நினைக்கிறீர்கள். நான் சொல்வதற்கெல்லாம் இதுவே ஆதாரம். எந்த ஆணும் காதலியிடம் பேசும் பேச்சுதான் இது” என்றாள். சிரித்தபடி “மதவேழத்தின் அத்தனை வலிமையையும் மெல்லிய சேறு கட்டிவிடும். ஆனால் தன் வலிமையை நம்பி வேழம் அதுவே சென்று சேற்றில் இறங்கும்…நீங்கள் உங்கள் தன்முனைப்பால் இதில் இறங்கிவிட்டீர்கள். சூதர்களின் புராணமாக ஆவதற்காக உங்களை பலிகொடுக்கிறீர்கள்” என்றாள்.
“போதும் விளையாட்டு” என பீஷ்மர் சீறினார். தன் வாசலற்ற கருங்கல் கோட்டைகள் அனைத்தும் புகையாலானவை எனக் கண்டார். அவரது சிந்தனைகளை காதில் கேட்டவள் போல “அரசே, அன்புகொண்டவர்கள் வரமுடியாத ஆழம் என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை” என்றாள் அம்பை.
“என்னை சோதிக்காதீர்கள் இளவரசி…என் உணர்வுகளைச் சீண்டி விளையாடாதீர்கள். தயவுசெய்து…” என உடைந்த குரலில் சொன்ன பீஷ்மரிடம் “அரசே, விளையாடுவது நீங்கள். குழந்தை நெருப்புடன் விளையாடுவதுபோல நாற்பதாண்டுகளாக காமத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள்… நெருப்பு விளையாட்டுகளை அனுமதிப்பதே இல்லை அரசே. என்னை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்கள் ஆன்மாவின் தோழி…”அம்பையின் குரல் நெகிழ்ந்திருந்தது.
கண்களை விலக்கியபடி “என் நெறிகளை நான் விடவே முடியாது” என்றார் பீஷ்மர். “ஏன்? அரசே, உங்கள் தந்தை தனயன் என்னும் பாசத்தால் உங்களைப் பிணைத்தார். இந்த மக்கள் தேவவிரதன் என்ற பெயரைக் கொண்டு உங்களை சிறையிட்டிருக்கிறார்கள். இந்த நாட்டின் நலனை இரவும் பகலும் நீங்கள் என்ணுகிறீர்கள். உங்கள் நலனை எண்ணுவதற்கு எவரும் இல்லை இங்கே. நீங்கள் அதை அறிவீர்கள். இவர்களா உங்கள் சுற்றம்? இவர்களா உங்கள் கேளிர்? ஆணுக்கு பெண் மட்டுமே துணை….அது பிரம்மன் வகுத்த விதி.”
முற்றிலும் திறந்தவராக அவள் முன் நின்ற பீஷ்மரின் பழகிய அகந்தை சுண்டப்பட்டு கீழே விழும் நாணயம் இறுதிக்கணத்தில் திரும்புவதுபோல நிலைமாறியது. அதை தன் தோல்வி என்றே எடுத்துக்கொண்டார். தன்னை தோல்வியுறச்செய்து மேலே எழுந்து நிற்கும் பெண்ணை திடமாக ஊன்றி நோக்கி அவளை எது வீழ்த்தும் என சிந்தனை செய்தார். குழந்தையின் உள்ளும் புறமும் அறிந்த அன்னையாக அவள் நின்றுகொண்டிருந்தாள். அந்நிலையை எதிர்கொள்ள அவர் தன்னை ராஜதந்திரியாக ஆக்கிக்கொண்டார். “இளவரசி, இப்போது நீங்கள் செய்வதென்ன தெரியுமா? அன்புக்காக வாதிடுகிறீர்கள். அபத்தத்தின் உச்சமென்றால் இதுதான்” என்றார்.
அம்பை, பெண் ஒருபோதும் அறிந்திராத அந்த இரும்புச்சுவரை உணர்ந்ததுமே சோர்ந்து, “நான் வாதிடவில்லை….நான் உங்களை விடுவிக்க முயல்கிறேன். பாவனைகள் மூலம் வாழமுடியாது என்று உங்கள் அகங்காரத்திடம் சொல்ல விரும்புகிறேன்” என கவசங்களில்லாமல் வந்து நின்றாள். அதைக்கேட்டு மேலும் நுணுக்கமாக தன் ராஜதந்திர தர்க்கத்தை நீட்டித்தார் பீஷ்மர். “இளவரசி, விவாதிக்கும்தோறும் என்னிடமிருந்து இன்னமும் விலகிச்செல்கிறீர்கள்…”
ஆனால் அக்கணமே அம்பை அனைத்தையும் விட்டு வெறும் பெண்ணாக மாறினாள். தழுதழுத்த குரலில், “நான் விவாதிக்க வரவில்லை அரசே…என்னுடைய நெஞ்சத்தையும் ஆன்மாவையும் உங்கள் பாதங்களில் படைக்க வந்திருக்கிறேன். இக்கணம் நீங்களல்லாமல் எதுவும் எனக்கு முக்கியமல்ல. விண்ணும் மண்ணும் மூன்று அறங்களும் மும்மூர்த்திகளும் எனக்கு அற்பமானவை…என்னை துறக்காதீர்கள்” என்றாள்.
ஒரு கணம் தோற்றுவிட்டதாக நினைத்து தளர்ந்த பீஷ்மர் உடனே அதற்கு எதிரான ஆயுதத்தை கண்டுகொண்டார். வெறும் ஆணாக, தோளாக, மார்பாக, கரங்களாக தருக்கி நிமிர்ந்து “நீங்கள் எத்தனை சொன்னாலும் என் உறுதியை நான் விடமுடியாது இளவரசி” என்றார்.
அம்பை அம்புபட்ட கிருஷ்ணமிருகம் போன்ற கண்களால் அவரை நோக்கி “நான் உங்களிடம் கெஞ்சவேண்டுமென எதிர்பார்க்கிறீர்களா?” என்றாள். பீஷ்மரின் அகத்துள் மெல்லிய ரகசிய ஊற்றாக உவகை எழுந்தது. என் வாழ்நாளில் நான் சந்திக்கக் கூடுவதிலேயே பெரிய எதிரி இதோ என் முன் தோற்று நிற்கிறாள். புன்னகையை உதட்டுக்கு முன்னரே அணைகட்டி “இளவரசி, உங்களால் அது முடியாதென எனக்கும் தெரியும்” என்றார்.
“ஏன்?” என்று கண்களை சுருக்கியபடி அம்பை கேட்டாள். “ஏனென்றால் நீங்கள் ஒரு பெண்ணல்ல. இப்படி காதலுக்காக வந்து கேட்டு நிற்பதே பெண்ணின் இயல்பல்ல. பெண்ணுக்குரிய எக்குணமும் உங்களிடமில்லை” என்றார் பீஷ்மர். அம்பை உதடுகளை இறுக்கியபடி “என்னை அவமதிக்க நினைக்கிறீர்களா?” என்றாள்.
“இல்லை, நான் சொல்லவருகிறேன்…” பீஷ்மர் தன் சமநிலையை தானே வியந்தார். அம்பையின் முகத்தில் நீலநரம்புகள் புடைக்கத் தொடங்கியதைக் கண்டதும் அவர் உள்ளம் துள்ள ஆரம்பித்தது. இதோ இதோ இன்னும் ஓரடி. இன்னும் ஒரு விசை. இன்னுமொரு மூச்சு. இந்தக்கோபுரம் இக்கணமே சரியும். சதுரங்கத்தில் நான் வெல்லும் மிகப்பெரிய குதிரை. “…இளவரசி நீங்கள் கேட்டகேள்விக்கு இந்த பதிலே போதுமென நினைக்கிறேன். ஆணை வெற்றிகொள்பவள் பெண், பெண்மை மட்டுமே கொண்ட பெண்.”
அவர் நினைத்த இடத்தில் அம்பு சென்று தைத்தபோதிலும் அம்பை “நீங்கள் இச்சொற்களை உங்கள் வன்மத்திலிருந்து உருவாக்கிக் கொண்டீர்கள் என எனக்குத்தெரியும்….உலகம் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்” என்றாள். தன் கடைசி ஆயுதத்தையும் அவள் விலக்கி விட்டதை உணர்ந்தவர் போல பீஷ்மர் சினம் கொண்டார். நீர் விழுந்த கொதிநெய் என அவரது அகம் பொங்கியபோது அவர் சொல்லவேண்டிய கடைசி வாக்கியம் நாக்கில் வந்து நின்றது. அழுக்கு மீது குடியேறும் மூதேவி என.
“…ஆம், நான் உங்களுக்கான அன்பை உள்ளுக்குள் வைத்திருந்தேன். இப்போது அதை வீசிவிட்டேன். என்னை கிழித்துப்பார்க்கும் ஒரு பெண்ணருகே என்னால் வாழமுடியாது. எனக்குத் தேவையானவள் ஒரு பேதை. நான் கண்ணயர விழைவது ஒரு பஞ்சுமெத்தையில், கூரிய அம்புகளின் நுனியில் அல்ல” சொல்லிமுடித்ததும் அவரது உடல் நடுங்கத் தொடங்கியது. எய்யப்பட்ட அம்புக்குப்பின் அதிரும் நாண் போல.
அவரே எதிர்பாராதபடி அம்பை கைகூப்பி கால் மடங்கி முழங்காலிட்டு கண்ணீர் நனைந்த குரலில் சொன்னாள் “காங்கேயரே, நான் உங்கள் அடைக்கலம். என்னை துறக்காதீர்கள். நீங்களில்லாமல் என்னால் உயிர்வாழமுடியாது” தொழுத கையை விரித்து முகம் பொத்தி “நான் சொன்ன அத்தனை சொற்களையும் மறந்து விடுங்கள். என் தாபத்தால் உளறி விட்டேன் …நான் உங்கள் தாசி. உங்கள் அடிமை” என்றாள்.
குனிந்து அந்த நடுவகிடிட்ட தலையை, காதோர மயிர்ச்சுருள்களை, கன்னக்கதுப்பை, கைமீறி வழியும் கண்ணீரை, மார்பில் சொட்டிய துளிகளைக் கண்டபோது அப்படியே விழுந்து அவளை அணைத்து தன் உடலுக்குள் செலுத்திவிடவேண்டுமென்ற வேகம் அவருள் எழுந்தது. ஆனால் பீஷ்மர் ஆயிரம் மத்தகங்களால் அந்த உடையும் மதகை அழுந்தப்பற்றிக்கொண்டார். மேலும் மேலும் வேழப்படைகளால் முட்டி முட்டி அதை நிறுத்தியபடி “இனி நாம் பேசவேண்டியதில்லை இளவரசி” என்றார்.
இரு கைகளையும் வேண்டுதல்போல விரித்து அம்பை அவரை அண்ணாந்து பார்த்தாள். புரியாதவள் போல, திகைத்தவள் போல. பின்பு மெல்ல எழுந்து நின்றாள். அவளுடைய கழுத்தில் நீலநரம்பு புடைத்து அசைந்தது. வலிப்பு நோயாளியைப்போல அவள் கைகள் முறுக்கிக்கொள்ள, உதடுகளை வெண்பற்கள் கடித்து இறுக்கி குருதி கசிய, கன்னம் வெட்டுண்ட தசைபோல துடிதுடித்தது. அதைக்கண்ட பீஷ்மர் அவருள் எக்களிப்பை உணர்ந்தார். இதோ நான் என் தாயை அவியாக்குகிறேன். அக்கினியே சுவாகா. இதோ நான் என் தந்தையை அவியாக்குகிறேன். அக்னியே சுவாகா. இதோ நான் என் குலத்தை, என் மூதாதையரை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா! இதோ என் நெறிநூல்களை, என் ஞானத்தை, என் முக்தியை அவியாக்குகிறேன். சுவாகா சுவாகா சுவாகா! நின்றெரிக! எரிந்தழிக! தன்னையே உண்டழிக! “உங்களுக்கு மங்கலங்கள் நிறையட்டும் இளவரசி!” என நிதானமான குரலில் சொன்னார் பீஷ்மர்.
கழுத்து வெட்டுண்ட சடலம்போல தள்ளாடியவவளாக அம்பை சிலகணங்கள் நின்றபின் மெல்ல திரும்பினாள். அங்கேயே விழுந்து விடுபவள் போல மெல்ல திரும்பி நடந்தாள். அவளுக்குப்பின்னால் சிதையில் இதயம் வேகும்போது எழுந்தமரும் பிணம்போல பீஷ்மர் மெல்ல அசைந்தார். அதன் ஒலியிலேயே அனைத்தையும் உணர்ந்தவளாக அம்பை திரும்பினாள். காதல் பெண்ணில் உருவாக்கும் அனைத்து அணிகளையும் அணிந்தவளாக, அவளுடைய கன்னியழகின் உச்சகணத்தில் அங்கே நின்றாள். கைகள் நெற்றிக்குழலை நீவ, கழுத்து ஒசிந்தசைய, இடை நெகிழ, மார்பகங்கள் விம்ம, இதோ நான் என.
அப்போது, எப்படி அது நிகழ்ந்தது என அவரே பல்லாயிரம் முறை பின்பு வியந்துகொண்ட ஒரு மெல்லிய ஏளனச்சுழிப்பு அவர் உதடுகளில் நிகழ்ந்தது. அதைக்கண்டதும் வெண்பனி நெருப்பானதுபோல, திருமகள் கொற்றவையானதுபோல அவள் உருமாறினாள்.
“சீ, நீயும் ஒரு மனிதனா?” என்று தழலெரியும் தாழ்ந்த ஒலியில் அம்பை சொன்னாள். “இம்மண்ணிலுள்ள மானிடர்களிலேயே கீழ்மையானவன் நீ. உன் முன் இரந்து நின்றதனால் இதுவரை பிறந்தவர்களிலேயே கீழ்மகள் நான். ஆயிரம் கோடி முறை ஊழித்தீ எரிந்தாலும் இக்கணம் இனி மறையாது.” இடிபட்டெரியும் பசுமரம்போல சுருங்கி நெரிந்து துடித்த அவளுடலில் இருந்து சன்னதம் கொண்டெழும் மயான சாமுண்டியின் பேரோலம் கிளம்பியது. ரத்தமும் நிணமும் சிதற எலும்பை உடைத்து இதயத்தைப் பிழிந்து வீசுபவள் போல மார்பை ஓங்கியறைந்து சினம் கொண்ட சிம்மக்கூட்டம்போல குரலெழுப்பியபடி அவள் வெளியே பாய்ந்தாள்.