காந்தி,அம்பேத்கார், கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

தங்களை ஹ்யூஸ்டனில் சந்தித்து உரையாடியது மிக்க மகிழ்ச்சியூட்டியது.

தங்களின் “காந்தியும் தலித் அரசியலும்” கட்டுரைகளை படித்து வருகிறேன். காந்தியை சிந்தனாவாதியாக, சாணக்கியராக, இந்தியாவின் ஆத்மாவாக முன்னிருத்தி இப்படி அவரின் பல பரிமாணங்கள் அன்றைய சமூக, மத, ஏகாதிபத்திய, விடுதலைப்பூர்வ உணர்ச்சிகரமான சூழலில் எப்படி வெளிப்பட்டது பற்றி எழுதியது வெகு சிறப்பு. இது புத்தகமாக வெளி வந்து பலரும் படித்து பயன் பெற வேண்டும்.

இந்த கட்டுரைகளில் எனக்கு தெரிந்த குறை என்பது இது தான் – காந்தி மற்றும் அம்பேத்கார் அவர்களின் செயல்பாடுகள், செயல்பாடுகளை உருவாக்கிய சிந்தனைகள், அந்த சிந்தனைகளை ஈட்டிய அவர்களிருவருக்குமிடையே இருந்த முரண்பாடுகள் ஆகியவற்றை நன்றாக விளக்கினீர்கள் – ஆனால் அதை நம்பும்படி நிலைநிறுத்த அவர்களின் எழுத்துக்கள், பேச்சுக்கள், பேட்டிகள், அன்றைய காலத்து செய்திகள், மற்ற ஆய்வாளார்களின் எழுத்துக்கள், ஆங்கிலேயரின் ஆவணங்கள் எதையும் தெளிவாக மேற்கோள் காட்டவில்லை என்பது எனக்கு குறையாக படுகிறது. நான் “நம்பும்படி” என கூறியது தங்களை குறை கூற அல்ல. காந்தீய எதிர்பாளர்கள் நீங்கள் என்ன தான் எழுதினாலும் மாறப் போவதில்லை. தங்களை காந்தி பக்தனாக எண்ணிக்கொண்டிருக்கும் பலர் தங்கள் எழுத்தை இது ஒரு காந்தியவாதிகளின் இன்னொரு சூழ்சி என்று ஒதுக்கி தள்ள வாய்ப்பிருக்கிறது. காந்தியின் அம்பேத்காரின் பேச்சையும் எழுத்தையும் மேற்கோள் காட்டினால் தங்கள் புத்தகம் மிகச்சிறந்த ஒன்றாக திகழும். அந்த இரு மாமனிதர்களின் சொந்த சிந்தனைகளை எடுத்துக் காட்டினால் அதை பலரும் படித்து பலவித புது புரிதல்களை அடைவார்கள் என்பது உறுதி. வாழ்துக்கள்.

நன்றி

சிவா

 

அன்புள்ள சிவா,

 

இந்த நீண்ட கட்டுரையில் நான் செய்வது நிகழ்ச்சிகள அவை நடந்த வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப்பார்ப்பதை மட்டுமே. ஆகவே ஒவ்வொரு விஷயத்தையும் விரிவான பின்புலத்தில் பொருத்தவே முயன்றிருக்கிறேன் . அந்தப்பின்புலம் என்பது தெளிவாகவே எழுதப்பட்ட வரலாறுதான். யாருக்கும் தெரியாத புதிய தகவல்கள் இக்கட்டுரையில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

 

இத்தகைய ஒரு கட்டுரைக்குத் தேவையான அளவுக்கு மேற்கோள்களும் தகவல்களும் இக்கட்டுரையில் இருக்கின்றன என்றே நினைக்கிறேன். இதற்கு மேல் மேற்கோள்கள் அமைத்தால் கட்டுரையாக இருக்காது, நூலாக ஆகிவிடும். மேற்கோள்கள் கட்டுரைக்குள் கலந்து வந்துகொண்டே தான் உள்ளன.

 

மேலும் வாசிப்பவர்களுக்கான தொடர்புகள் ஏராளமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. நூல்கள் ஆவணங்கள்.

 

ஆனால் ஓர் அரசியல் நிலைபாட்டை எடுத்திருப்பவருக்கு இதனால் பயனில்லை. வேறு ஒரு நோக்கத்துக்காக நிலைபாடு எடுத்திருப்பவரை எந்த வாதங்களும் மாற்றிவிடாது. காந்தியைப்போன்ற ஒரு மாபெரும் பிரச்சாரகர் அவரே எல்லாவற்றையும் எழுதி வைத்திருக்கிறார். அவை ஒருவருக்கு ஆதாரமாக ஆகவில்லை என்றால் இக்கட்டுரை மட்டும் என்ன செய்துவிடும்? ஆகவே அவரை ‘மாற்ற’ நான் முயலவில்லை. அது வீண்வேலை.

 

வெறுப்பும் அகங்காரமும் தங்கிய மனங்கள் அந்த வெறுப்பில் இருந்து அவையே அடையும் ஏதேனும் ஆழமான அனுபவங்கள் மூலமே வெளிவரமுடியும். பிறர் சொல்லி ஏதும் நடக்காது

 

நான் எழுதிய இக்கட்டுரைகள் இன்றைய வாசகர்களில் ஒரு சாரார் மேலோட்டமாக சிலவற்றைக் கேட்டு ஒரு குத்துமதிப்பான புரிதல்களை அடைந்திருப்பார்களே அவர்களுக்காக. உண்மையை அந்த பின்னணியில் வைத்துச் சொல்கிறேன். அந்தப் `பின்னணியை கொஞ்சம் ஊகிக்க முடிந்தால் எளிதாக அதை புரிந்துகொள்ளலாம். மேலதிகமாக வாசிக்கவும் செய்யலாம்

 

ஜெ

 

 

 

 

அன்புள்ள ஜெ

 

காந்தி அம்பேத்கார் கட்டுரைகளை நண்பர்களுடன் அமர்ந்து ஒருவாரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறோம். மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லியிருக்கும் தகவல்கள் எல்லாமே புதியவை. அவற்றை சொல்லாமல்தான் இந்த விஷயங்களை இங்கே இதுவரை பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால் அபப்டி என்ன புதிய தகவல்களைச் சொல்லியிருக்கிறீர்கள் என்று பார்த்தால் அதுவும் பெரிய விசயமில்லை. கொஞ்சம் வயசான பெரிசுகளிடம் கேட்டே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களைத்தான் சொல்லியிருக்கிறீர்கள். உதாரணமாக வெள்ளைக்காரன் அம்பேத்கருக்கு கொடுத்த தேர்தல் சலுகைகள் அனைவருக்குமான ஓட்டு உரிமைக்கு பதிலாகக் கொடுத்தது என்ற விஷயத்தை நான் இப்போதுதான் தெரிந்துகொண்டேன். வெள்ளைக்காரன் காலத்தில் அனைவருக்குமான ஓட்டு உரிமை இல்லை அதை காங்கிரஸ்தான் கொண்டுவந்தது என்பது எனக்கு புதிய தகவல். அதேபோல சுதந்திரம் கிடைத்தபோது சீக்கியர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இருந்த சலுகைகளை அம்பேத்கரே தடைசெய்தார் என்பதும் புதிய செய்தி. சமஸ்தானங்களில் அச்சலுகைகள் வேலைக்காகாது என்பதும் புதியசெய்தி. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது நடந்தவை எல்லாமே புதிய வெளிச்சத்திலே தெரிகின்றன.நன்றி

 

அருண்குமார்

 

அன்புள்ள அருண்குமார்,

 

நான் ஏற்கனவே இளம் வாசகர்களிடம் பேசும்போது கவனித்திருந்த விஷயங்கள்தான் இவை. எளிமையான வரலாற்றுத்தகவல்கள்கூட பேசபப்டாமல் காழ்ப்புகள் மட்டுமே அவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. உதாரணமாக இன்றும் படித்த தலித்துக்களில் அனேகமாக அனைவருமே இட ஒதுக்கீட்டை அம்பேத்கர்தான் கொடுத்தார் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். அம்பேத்காரை வெள்ளைக்காரன் தான் இந்திய அரசியல் சட்டத்தை ‘எழுதும்படி’ சொன்னான் என்று மேடையில் ஒருவர் பேசியதைக்கூட கேட்டிருக்கிறேன். இபப்டியெல்லாம் அறியாமையில் வளார்த்தால்தான் காழ்ப்பு வளரும்

 

ஜெ

 

 

 

 

அன்புள்ள ஜெ,

 

காந்தியையும் அம்பேத்கரையும் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைகளை இன்னும் சரியாக வாசித்தோம் என்று சொல்ல முடியாது. நிறைய தகவல்கள் சொல்கிறீர்கள். பக்கம் பக்கமாக தகவல்களாக இருக்கின்றன. அதேபோல நிறைய புஸ்தகங்கள். இந்த புஸ்தகங்கள் எலலம் இப்போது கிடைக்கின்றனவா என்ன? அரசியல் சட்டத்தை உருவாக்க நேருவும் அம்பேத்கரும் சேர்ந்து முயற்சிசெய்தார்கள் என்பதே புதியசெய்தியாக இருக்கிறது. எல்லா தகவல்களையும் சேர்த்து யோசித்து இனிமேல்தான் முழுமையாக யோசிக்க ஆரம்பிக்கவேண்டும்

 

மேலும் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இருந்த முரண்பாட்டிலே நேரு என்ன பங்கை ஆற்றினார் என்ற தகலவல்கள் தேவை. நேருவுக்கும் அம்பேத்கருக்கும் இடையே என்னவகையான உறவு இருந்தது? அவர்கள் எதிரிகளாக இருந்தார்களா?

 

சண்முகம் மதுரை

 

 

அன்புள்ள சண்முகம்

 

தகவல்களை நான் தகவல்களாக தெரியாதபடி தர்க்கங்களாக மாற்றித்தான் சொல்லியிருக்கிறேன். எவருமே வெரும் தகவல் வரிசை என்று என் கட்டுரையை சொல்லிவிடமுடியாது என்றுதான் நினைக்கிறேன். புத்தகங்களை நீங்கள் இணையத்திலேயே தேடலாம்.

 

நேருவுக்கும் அம்பேத்காருக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்தது. அம்பேத்காரின் நவீனத்துவ மனம் நேருவை எளிதாக  ஏற்றுக்கொண்டது. இருவருக்கும் பொதுவான அம்சங்கள்தான் அதிகம். ஆனால் நேரு ஒரு பெரிய அமைப்பை நடத்தினார். அதை முரண்பாடுகள் வழியாக முன்னால் கொண்டுசெல்ல வேண்டியிருந்தது. ஆகவே எதிரிகளை அணைத்துப்போகவேண்டிய கட்டாயம் இருந்தது. சிக்காலான ஒரு பெரிய நாட்டை ஆண்டார். ஆகவே நினைத்ததை உடனே செய்ய முடியவில்லை

 

ஆனால் அம்பேத்கார் தனிமனிதராக இருந்தார். ஆகவே நினைத்ததைச் சொன்னார். பொறுமையில்லாமல் இருந்தார். ஆகவே நேரு சரியாக வேகமாகச் செயல்படவில்லை என்ற மனக்கஷ்டம் அவருக்கு இருந்தது. கடைசியில் அவர் தன்னைவிட்டுவிட்டு மதவாதிகளான இந்துமகாசபையுடன் ஒத்தியங்கியதை நேரு விரும்பவில்லை. அந்தச்சிறுகசப்புக்கு அப்பால் நேரு அம்பேத்காரை ஒரு மாமனிதராக, கிட்டத்தட்ட காந்திக்கு அடுத்த இடத்தில்தான் வைத்திருந்தார்

 

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

அம்பேத்கர் முஸ்லீம்களைப்பற்றி கடுமையான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார் என்று இப்போது இந்துத்துவ சக்திகள் எழுதிக்கொண்டிருக்கிறார்களே அது உண்மையா? அம்பேத்கரை மதச்சார்பற்றவர் என்றுதானே நாங்கள்ந் அம்பிக்கொண்டிருக்கிறோம்

 

சிவராமன்

 

அன்புள்ள சிவராமன்

 

 

அம்பேத்கார் மதச்சார்பற்றவர் என்பதற்கு எந்த விதமான மேலதிக ஆதாரமும் தேவை இல்லை. அரசியல்சட்டத்தின் நெறிமுறைகளிலேயே அவர் ஆணித்தரமாக அதை எழுதியிருக்கிறார்.

 

ஆனால் அவர் நேருவைப்போல கனவுஜீவி அல்ல. காந்தியைப்போல சமரசத்துக்காக பல விஷயங்களை விட்டுவிடக்கூடியவரும் அல்ல. அப்பட்டமானவர், வெளிப்படையானவர். ஆகவே எரியும் நிலக்கரி போன்றவர், அவரை கையில் வைத்திருப்பது யாருக்குமே கஷ்டம்

 

பாகிஸ்தான் பிரிவினை கோஷம் என்பது எந்தவிதமான அற அடிப்படையும் இல்லாமல் வெறும் அதிகார ஆசையின்பொருட்டு உருவாக்கப்பட்ட ஒன்று என்று அம்பேத்கார் உறுதியாமக எண்ணி அதை சொன்னார். குறிப்பாக முஸ்லீம்லீக் உருவாக்கிய நேரடி நடவடிக்கை என்ற வன்முறை வெறியாட்டத்துக்குப் பின் அவர் தன் கருத்தை மேலும் அழுத்தமாகச் சொன்னார்.

 

இஸ்லாமிய குடிமைச்சட்டம் [சரி அத்] பழைமைவாதம் கொண்ட காலாவதியான ஒரு சட்டம் என்று அம்பேத்கர் எண்ணினார். ஏராளமான அனாசாரங்களை அது சட்டமாக்குகிறது என்றார். இஸ்லாம் சமத்துவத்தின் மதம் என்பதை அவர் ஏற்கவில்லை. இஸ்லாமுக்குள் இந்தியாவிலும் உலகம் முழுக்கவும் பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் ஏராளமாக இருக்கின்றன என்று அவர் சொன்னார். அவற்றை சீர்திருத்த முடியாதபடி அந்த மத அமைப்பு தடுக்கிறது என்றார்

 

ஒரு மதச்சார்பற்ற அரசியல் அமைப்புக்குள் இஸ்லாமியர் இயல்பாக இருக்க மாட்டார்கள், அவர்கள் உள்ளே முரண்பட்டுக்கொண்டேதான் இருப்பார்கள் என்று அவர் சொல்லி மதச்சார்பற்ற அரசு இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் சொன்னார்

 

அவரது எழுத்துக்களில் இந்தக்கருத்துக்களை அவர் தெளிவாகவே எழுதி வைத்திருக்கிறார். கடிதங்களில் மேலும் திட்டவட்டமாக எழுதியிருக்கிறார். அம்பேத்காரின் இந்திய பாகிஸ்தான் பிரிவினை   [‘Pakistan or Partition of India’  Dr. Ambedkar in 1940 ]என்ற நூலை ஒட்டி இவ்விஷயத்தைப் பற்றி தீவிரமான விவாதங்கள் நடந்திருக்கின்றன. அம்பேத்காரை அவரவர் கைபப்ற்றும் நோக்கில் எழுதியிருக்கிறார்கள்.

 

ஆனால் இஸ்லாமிய மதவாதத்துக்கு அம்பேத்கார் எத்தனை எதிரானவரோ அதே அளவுக்கு இந்து மதவாதத்துக்கும் எதிரானவராகவே இருந்திருக்கிறார். இந்து தேசியத்தையும் இஸ்லாமிய தேசியத்தையும் சமமாகவே அவர் நிராகரிக்கிறார். அவர் மதக்காழ்ப்புடன்  இஸ்லாம் குறித்து கருத்து சொல்லவில்லை. பெரும்பாலும் ஆய்வாளனின் கறார் தன்மையுடன் மட்டுமே கருத்து சொல்லியிருக்கிறார்

 

 

ஜெ

முந்தைய கட்டுரைஅ.மார்க்ஸ்,காந்தி
அடுத்த கட்டுரைபுல்வெளிதேசம் 19,மெல்போர்ன்