பகுதி மூன்று : எரியிதழ்
[ 5 ]
இருகரையும் கண்ணுக்குத்தெரியாதபடி விலகும் ஒரு நதியை நதிக்கரையில் பிறந்துவளர்ந்த அவள் அப்போதுதான் பார்க்கிறாள் என்பதை அம்பை அறிந்தாள். பிரபஞ்சத்தில் கைவிடப்பட்டு திசைவெளியில் அலையும் அடையாளம்காணப்படாத கோளத்தைப்போல தன்னை உணர்ந்தாள். அவளைச்சுற்றி நதி அசைவில்லாமல் தேங்கியதுபோலக் கிடந்தது. அதன்மேல் இலைகளும் கிளைகளுமாக மரங்கள் மெல்ல மிதந்துசென்றன. வங்கத்துக்குச் செல்லும் வணிகப்படகுகள் சிக்கிக்கொண்ட பறவைகள் போல வண்ணக்கொடிகள் காற்றில் படபடக்க, வெண்பாய்கள் மாபெரும் சங்குகள் போலப் புடைத்து நிற்க, தென்திசை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.
படகோட்டி “அன்னையே, தாங்கள் சௌபதேசம் வரை தன்னந்தனியாகவா செல்லப்போகிறீர்கள்?” என்றான். அம்பை “என்னுடன் எப்போதும் சால்வமன்னர் இருந்துகொண்டிருக்கிறார்” என்றாள். “வழியில் சௌபநகரின் வணிகபுரியான மத்ரவதி இருக்கிறது. முற்காலத்தில் அதுதான் சௌபநாட்டின் தலைநகரமாக இருந்தது. நீங்கள் அங்கே தங்கி இரவைக் கழித்தபின் நாளை செல்லலாம்” என்றான்.
அம்பை “உன்னால் அவ்வளவுதூரம் படகைச் செலுத்தமுடியாதா என்ன?” என்றாள். “அன்னையே, இந்தத் துடுப்பு எனக்கு மீனுக்குச் சிறகுபோல. நான் இதனுடன்பிறந்தவன்” என்றான். “என் பெயர் நிருதன். நான் தொன்மையான படகுக்காரர் குலத்தில் பிறந்தவன். முன்னொருகாலத்தில் அரசு துறந்து வந்த அயோத்தியின் அரசனான ராமன் என் குலமூதாதை குகனின் படகில்தான் வந்து ஏறினார். அவருடைய தோள்களைத் தழுவி நீ என் பெற்றோரின் மைந்தன் என்று சொன்னான். அந்தத் தொடுகையை இன்றும் நாங்கள் எங்கள் குலத்தின் ஆபரணமாக அணிந்திருக்கிறோம்” என்று தன் தோளைக் காட்டினான். பழுக்கக்காய்ச்சிய உலோகத்தால் போடப்பட்ட சூட்டுத்தழும்பு அதில் இருந்தது. மூன்று சிறிய கோடுகள். “அவை ராமனின் கைவிரல்கள் அன்னையே….இன்றும் நாங்கள் தசரதனுக்கும் ராமனுக்கும் நீர்க்கடன் செலுத்துகிறோம்.”
“என்னால் எங்கும் நிற்கமுடியாது நிருதா. என் மனம் விரைந்துகொண்டிருக்கையில் உடல் அமரமுடியாது. என்னை முடிந்தவரை வேகத்தில் சௌபநாட்டுக்குக் கொண்டுசெல்” என்றாள் அம்பை. “அன்னையே, படகிலிருக்கும் காற்றுபுடைத்த பாய்போலிருக்கிறீர்கள். நீங்களே இப்படகை கொண்டுசென்று சேர்த்துவிடுவீர்கள்…அஞ்சவேண்டியதில்லை” என்றான் நிருதன் சிரித்தபடி.
இரவு நதி மீது தாமதமாகவே வந்தது. இருகரைகளும் இருண்டபின் அங்கிருந்த விளக்குகள் செம்மணியாரம்போலத் தெரிந்தன. வணிகப்படகுகளின் ஒளிகள் விண்மீன்கள் போல அசைவே தெரியாமல் இடம் மாறின. பின்னர் கரைகளில் இருந்து மெல்லிய ஓசைகள் கேட்க ஆரம்பித்தன. கோயில்மணியோசை, நாய்க்குரைப்பு, ஒரு பசுவின் குரல். காற்று குளிர்கொள்ளத் தொடங்கியதும் நிருதன் ஒரு கம்பளிச்சால்வையைக் கொடுத்தான். அவள் அதை போர்த்திக்கொண்டு உடல்குறுக்கி அமர்ந்திருந்தாள். நதிமீது நிறைந்திருந்த பறவைகள் அனைத்தும் கூடணைந்தபின் வேறுவகைப் பறவைகள் நதிமேல் பறந்து சுழல்வதை சிறகொலிகளாகக் கேட்டாள். வான்புள்ளிகளாக அவை சுழல்வதைக் கண்டாள். அவள் அண்ணாந்து பார்ப்பதைக்கண்டு “அவை பூச்சிகளைப்பிடிப்பவை….வானத்தின் புலிகள் அவை” என்றான் நிருதன்.
“அன்னையே, தாங்கள் வேண்டுமென்றால் துயிலலாம். இப்படகு நாளைதான் சௌபநகரைச் சென்றடையும்” என்றான் நிருதன். “என் கண்கள் இமைக்கவே மறுக்கின்றன” என்றாள் அம்பை. துடுப்பின் ஒலிமட்டும் கேட்டுக்கொண்டிருக்க மெல்ல அதனுடன் இணைந்து நிருதன் பாட ஆரம்பித்தான். அந்தப்பாடலைக் கேட்டுக்கொண்டு அவள் மெல்லமெல்ல கண்ணயர்ந்தாள். அவளுடைய அரைப்பிரக்ஞையில் படகுக்கு முன்னால் கன்னங்கரிய பளபளப்புடன் அலையலையாக விரிந்துகிடந்த நதி சட்டென்று ஒற்றைப் பேரலையென மேலேறியது. வெண்நுரைகள் நாக்குகளாகத்தெறிக்க பிரம்மாண்டமானதோர் நாகமாக மாறியது. அதன் கரிய வழவழப்பான உடலில் முடிவில்லாமல் வழுக்கிச்சென்றுகொண்டே இருந்தது படகு.
அவள் கண்விழித்ததும் கண்டது அதன் செவ்விழிகளில் ஒன்றைத்தான். அவளருகே வந்த நிருதன் “அன்னையே, இன்னும் சற்றுநேரத்தில் சௌபநாடு வந்துவிடும்…” என்றான். அம்பை எழுந்து கங்கையிலேயே முகம்கழுவி நீரிலேயே முகம்பார்த்து முடிதிருத்திக்கொண்டாள். படகு கரையிலிருந்து வரும் அலைகளில் ஆடத்தொடங்கியது. கரையோரமாக நின்ற பெரிய படகுகள் படித்துறையை மொய்த்த மீன்கள் போல முட்டிக்கொண்டு அசைந்தன.
படகு கரையை நெருங்க நெருங்க அந்தத் துறைமுகத்தின் பேருருவத்தோற்றம் அவளை வியப்பும் பரவசமும் அடையச்செய்தது. அவளுடைய படகு யானை விலாவை நெருங்கும் சிட்டு போல பெரும் நாவாயொன்றை நெருங்கிச்சென்றது. பின்பு நாவாயின் உடல் மரத்தாலான கோட்டைபோல மாறி கண்களை மறைத்தது. கங்கைக்குள் நடப்பட்ட தோதகத்தி மரத்தடிகள் கரிய அட்டையின் ஆயிரம் கால்கள்போலத் தோன்றின. நெருங்க நெருங்க காடுபோல மாறி பின்பு கோபுரத்தூண்களாக ஆயின. உள்ளே இருளில் கங்கையின் அலைகள் நுரையுடன் கொப்பளித்தன.
தூண்கள் மீது நடப்பட்ட பெரிய நிகர்பாரத்தில் பொருத்தப்பட்ட தடிகளை யானைகள் பிடித்துச் சுழற்றி நீருள் நிற்கும் நாவாய்களின் மேற்தட்டுப்பரப்பை அடைந்து இறக்கின. அங்கே அடுக்கப்பட்டிருந்த பெரிய பொதிகளை அவற்றின் வடங்களில் மாட்டியதும் யானைகள் இழுக்க தடி மேலே எழுந்து பொதிகளைத் தூக்கியபடி வானில் சுழன்று மரத்தாலான துறைமேடைமேல் கொண்டு சென்றிறக்கியது. அங்கே அவற்றை கொண்டுசெல்லும் மாட்டுவண்டிகளும் சுமைதூக்கிகளும் ஏவலர்களும் கூடியிருந்தனர். எங்கும் வினைநடத்துனர்களின் அதட்டல்களும் வினைவலர்களின் வேலைக்கூச்சல்களும் அச்சுகள் சுழலும் கிரீச்சிடல்களும் வண்டிகளின் சகட ஒலிகளும் நிறைந்திருந்தன. மாடுகளும் குதிரைகளும் போட்ட சாணிகள் மிதிபட்டு வெயிலில் உலரும் வாசனை மூச்சடைக்கச் செய்தது.
படகிறங்கியதும் அந்தக் காட்சியைப்பார்த்து பேச்சிழந்து வியந்து நின்றாள் அம்பை. “அன்னையே, நான் கிளம்புகிறேன். இங்கிருந்து ஏதேனும் பொருட்களை வாங்கிக்கொண்டுசென்று விற்கமுயல்கிறேன்” என்றான் நிருதன். அம்பை வியப்புடன் “நிருதா, இத்தனை செல்வங்களும் என் தலைவருக்குரியவையா? இந்த மாபெரும் நாட்டின் அதிபரா அவர்?” என்றாள். நிருதன் புன்னகை செய்தான். “என் நெஞ்சு நிறையும் இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டாய் நிருதா…இதோ இந்த மோதிரத்தை என் பரிசாக வைத்துக்கொள்” என்று சொன்னபிறகு அம்பை கரையில் இறங்கினாள்.
“அன்னையே, அதோ தெரியும் சிவந்த கட்டிடத்தொகைதான் அரண்மனை…அங்கே என்னைப்போன்றவர்கள் வரமுடியாது” என்றான் நிருதன். அம்பை அவனிடம் விடைபெற்று, காற்றில்பறக்கும் ஆடையை இடையில் சுற்றிச் செல்லும் இறகு போல சென்றுகொண்டிருந்தாள். அந்த மரத்தாலான கோட்டை வாசலில் அவளைத் தடுத்த காவலனிடம் இலச்சினையைக் காட்டி உள்ளே சென்றாள். சேவகனிடம் அவளை சால்வமன்னனிடம் அழைத்துச்செல்ல ஆணையிட்டாள். சேவகன் சால்வன் லதாமண்டபத்தில் இருப்பதாகச் சொல்லி அங்கே அவளை இட்டுச்சென்றான்.
லதாமண்டபத்தில் சால்வன் தன் அமைச்சர் குணநாதருடன் பேசிக்கொண்டிருந்தான். அம்பை உள்ளே நுழைந்ததும் அவன் தோளிலும் தொடையிலும் இருந்த பெரிய கட்டுகளைத்தான் கண்டாள். அவனருகே ஓடிச்சென்று அவனைத் தொடத்தயங்கி நின்று “நலமாக இருக்கிறீர்களல்லவா?” என்றாள். “ஆம், நலமே” என்றான் சால்வன். “பீஷ்மரிடம் மோதி உயிருடன் மீண்ட முதல் வீரன் நானே என்று சூதர்கள் பாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விழுப்புண்கள் நாளை கவிதைகளாக மாறப்போகின்றவை.” குணநாதர் புன்னகைக்க சால்வன் அவரைநோக்கி புன்னகைசெய்துவிட்டு “இளவரசியார் இங்கே வந்ததன் நோக்கமென்ன?” என்றான்.
“என்ன கேட்கிறீர்கள்?” என்று அம்பை திகைத்தாள். “நான் உங்களுக்குரியவளல்லவா? உங்களை நாடிவந்தேன்…நான் இருக்கவேண்டிய இடமல்லவா இது?” சால்வன் குணநாதரைப் பார்க்க அவர் “இளவரசி, மன்னர்களின் வாழ்க்கை அரசநெறிக்கு கட்டுப்பட்டது. ஆறு கரைகளுக்குக் கட்டுப்படுவது போல. மன்னிக்கவேண்டும், நீங்கள் பீஷ்மரை போரில் கொன்றுவிட்டு இங்கே வரவில்லை என்றால் நீங்கள் வந்திருக்கவே கூடாது” என்றார்.
“நீங்களுமா இதைச் சொல்கிறீர்கள் சால்வரே?” என்று அம்பை சீறியபடி அவனைநோக்கித் திரும்பினாள். “நான் பீஷ்மரிடம் சொன்னேன் நான் உங்களை மனதால் வரித்துவிட்டவள் என்று. அவரால் என்னைத்தடுக்க முடியவில்லை.”
சால்வன் சினத்துடன் “அப்படியென்றால் உன்னை எனக்கு பீஷ்மர் தானமாக அளித்திருக்கிறார் இல்லையா? உன்னை ஏற்றுக்கொண்டு நான் அவரது இரவலனாக அறியப்படவேண்டும் இல்லையா? இன்று பீஷ்மரிடம் மோதியவன் என என்னை பாரதவர்ஷமே வியக்கிறது. அந்தப்புகழை அழிக்கவே உன்னை என்னிடம் அனுப்பியிருக்கிறார். ரதத்தில் செல்லும் வணிகன் இரவலனின் திருவோட்டில் இட்ட பிச்சையா நீ?” என்றான்.
அம்பை திகைத்து நிற்க குணநாதர் “இளவரசி, ஒருவேளை இது பீஷ்மரின் சோதனையாகக் கூட இருக்கலாம். சால்வர் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர் கடும்சினம்கொண்டு அஸ்தினபுரியின் படைகளுடன் சௌபநாட்டின்மேல் பாயலாம்…அரசவிளையாட்டுகளின் அர்த்தங்கள் சிக்கலானவை இளவரசி. அனைத்தையும் சிந்திக்காமல் அரசன் முடிவெடுக்கமுடியாது” என்றார். சால்வன் “நீ திரும்பிச்செல்….நான் பீஷ்மரிடம் மோதி தலையுடன் மீண்டது என் பெற்றோரின் தவப்பயன். மீண்டும் அதைச் சோதித்துப்பார்க்க என்னால் முடியாது” என்றான்.
ஏமாற்றத்தால் பதறிய உடலுடன் அம்பை இரு கைகளையும் யாசிப்பதுபோல நீட்டி “இறைவா, நீங்கள் இப்படிச் சொல்லலாமா? இரண்டுவருடங்களாக நான் இரவும் பகலும் உங்கள் மீதான காதலினால் அல்லவா வாழ்ந்தேன்? என்னுடைய கனவும் நனவும் நீங்களாகத்தானே இருந்தீர்கள்…எப்படி நீங்கள் என்னைத் துறக்கமுடியும்? என் மேல் உங்களுக்கு காதலே இல்லையா?” என்றாள். சால்வன் “அக்காதலை இவர் உருவாக்கினார். இவர்தான் உன்னைக் கண்டுபிடித்துச் சொன்னார்” என்றான். பிரமித்து நின்ற அம்பையை நோக்கி குணநாதர் “இளவரசியே, அரசர்களுக்கு அரசியலில் மட்டுமே காதல் இருக்கமுடியும்….” என்றார்.
அந்தச் சொற்களெல்லாம் தன் காதுகளில் விழுகின்றன என்பதையே அவளால் நம்பமுடியவில்லை. அது ஒரு கனவு என நிறுவிக்கொள்ள அவள் சித்தம் பதைபதைப்புடன் அலைபாய்ந்தது. ஆனால் அந்த லதாமண்டபம், அந்த மாதவிக்கொடிகள், உதிர்ந்த வெண்மலர்கள் அனைத்தும் இரக்கமற்ற பருப்பொருட்களாக அவளைச்சூழ்ந்திருந்தன. திடீரென்று மனமுடைந்த அவள் கைகளைக் கூப்பியபடி “சால்வரே, உங்கள் சொற்களை நம்பி வந்துவிட்டேன். உங்கள் காலடியில் என் வாழ்க்கையை வைத்திருக்கிறேன். என்னைக் கைவிடாதீகள்….” என்று கதறிவிட்டாள். அந்த ஒலியை அவளே கேட்டபோது எழுந்த பெரும் பரிதாபம் தாளாமல் அவள் கால்கள் தளர அப்படியே லதாமண்டபப்படிகளில் அமர்ந்தாள்.
சால்வன் குணநாதரை மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு “இளவரசி, முதலில் தங்களுக்குச் சற்று அதிர்ச்சியிருக்கும்…அரண்மனைக்குச் செல்லுங்கள். குளித்து ஆடைமாற்றி சற்றுநேரம் துயிலுங்கள்….நாளை தங்கள் சித்தம் சற்று அலைஅடங்கும்போது நான் சொல்வதெல்லாம் புரியும்…அப்போது நானே தங்களை உரியமுறையில் அஸ்தினபுரிக்கு அனுப்புகிறேன்” என்றான். குணநாதர் “ஆம் இளவரசி, தாங்கள் இருந்தாகவேண்டிய இடம் அதுதான். எப்போது ராட்சச முறைப்படி பீஷ்மர் உங்களை கையகப்படுத்தினாரோ அப்போதே அவருக்கு நீங்கள் சொந்தமாகிவிட்டீர்கள். ராட்சச முறைப்படி பெண்ணைக்கவர்பவனை ஷத்ரியர்கள் கொல்லவேண்டும். கொல்லமுடியவில்லை என்றால் அது அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்றே பொருள்” என்றார்.
“நான் எவருக்கும் உடைமை அல்ல” என்று மூண்டு எழுந்த சினத்துடன் கூவினாள் அம்பை. அந்தச்சினத்தாலேயே தன் அனைத்தையும் மீட்டுக்கொண்டவளாக மிடுக்குடன் எழுந்து “நான் தொண்டுமகள் அல்ல.. இளவரசி” என்றாள்.
“அத்தனைபெண்களும் தொண்டுமகளிர்தான். அதுவே ஷத்ரிய குலநெறியாகும்….எங்கே எவரிடமென்பதை முடிவுசெய்பவை தருணங்கள்” என்றார் குணநாதர். “அப்படியென்றால் நான் பெண்ணே அல்ல. பேயாகிறேன்….அடிமையென வாழ்வதை ஒருபோதும் என் ஆத்மா ஒப்பாது” என்று அம்பை எரியும் விழிகளும், அலைபடகென உடலை அசைக்கும் மூச்சுமாகச் சொன்னாள்.
“நமது பேச்சு முடிந்துவிட்டது இளவரசி….சௌபநாட்டின் நோக்கில் நீங்கள் அஸ்தினபுரியின் அரசி…அரசமுறைப்படி என்ன செய்வதோ அதைச்செய்வோம்…” என்றான் சால்வன். குணநாதர் “ஆம், இளவரசி. இனிமேல் பேசுவதற்கு ஏதுமில்லை” என்றார்.
விழிநீர்சிதர்கள் ஒளிவிட்டு நின்ற இமைமயிர்களுடன் சிலகணங்கள் அவனைப்பார்த்துநின்ற அம்பையின் உதடுகள் வளைந்தன. முகத்தில்விரிந்த ஏளனச்சிரிப்புடன் “அரசுசூழ்ச்சியாலும் அமைச்சர் பலத்தாலும் நீங்கள் அடைந்தது இந்த கட்டுகள்தான் இல்லையா?” என்றாள். “சூதர்களின் பாடல்களில் ஓடும் சிரிப்பைக்கூட புரிந்துகொள்ளமுடியாத உன்னால் என் ஆன்மாவை எப்படிப் புரிந்துகொள்ளமுடியும்?”
சரிந்த குழலை அள்ளிப்பின்னால் செருகி மேலாடையை தோளிலேற்றி திடமான காலடிகளை தூக்கி வைத்து அவள் திரும்பி நடந்தபோது சால்வன் பின்னால் வந்தான். “அம்பை, நீ பிரிந்துசெல்வது என் உயிரே விலகுவதுபோல துன்புறுத்துகிறது….என்னுடைய அரசியல் நிலையை நீ புரிந்துகொள்ளவேண்டும்… பீஷ்மரை எதிர்க்கும் ஆற்றல் சௌபநாட்டுக்கு இன்று இல்லை” என்றான். அவள் பின்னால் ஓடிவந்து “அஸ்தினபுரிக்கு அரசியான நீ எனக்கு மனைவியாக முடியாது என்பதே விதி….ஆனால் ஒரு வழி இருக்கிறது” என்றான். அம்பை கண்களில் ஐயத்துடன் திரும்பினாள்.
“நீ விரும்பினால் என் அந்தப்புரத்தில் வாழமுடியும்…உனக்கு மணிமுடியும் செங்கோலும் மட்டும்தான் இருக்காது” என்றான் சால்வன். மிதிபட்ட ராஜநாகம்போல திரும்பி “சீ! கீழ்மகனே, விலகிச்செல். இல்லாவிட்டால் என் கை நகங்களால் உன் குரல்வளையை கிழித்துவிடுவேன்” என்று அம்பை சீறினாள். அவளுடைய மூச்சிரைப்பு நாகத்தின் பத்திவிரியும் அசைவுபோலவே தோன்றியது. நாகம்போல சீறும் மூச்சுடன் “நான் உன்னையா இத்தனைநாள் விரும்பியிருந்தேன்? பல்லக்கில் பிணம் இருப்பது போல என் நெஞ்சில் நீயா இருந்தாய்?” என்றாள்.
சால்வன் அஞ்சி பின்னகர்ந்தான். ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் அம்பை “பேசாதே…உன்னுடைய இன்னொரு சொல்லை நான் கேட்டால் இங்கேயே உன் குருதியை அள்ளிக்குடித்துவிட்டுத்தான் செல்வேன்….போ” என்றாள். அந்த பெருங்குரல் கேட்டு சால்வன் பின்னால் ஓடி லதாமண்டபத்தில் ஏறிக்கொண்டான். அம்பை வெளியே இறங்கிச்செல்வது பொன்னிற நாகமொன்று சொடுக்கிச்சுழன்று செல்வதுபோலிருந்தது என்று நினைத்தான்.
அம்பை சென்ற வழியில் நின்ற சேவகர்கள் எல்லாம் ஓடி ஒளிந்துகொண்டனர். வாசல்காவலன் கதவுக்குள் பதுங்கிக்கொண்டான். அனல்பட்ட காட்டுக்குதிரைபோல அவள் படிகளில் இறங்கி சாலையில் ஓடி கங்கையை அடைந்தாள். அங்கே படகை கட்டிவிட்டு கரையேறி நின்றிருந்த நிருதன் அவளைக்கண்டு ஓடிவந்தான். “அன்னையே….” என்று கைகளை விரித்துக்கொண்டு அவள் காலடியில் கால்மடங்கி விழுந்து பணிந்து “என்ன ஆயிற்று? தேவி, உங்களை அவமதித்தவர் யார்? எளியவன் வேடன் என்றாலும் இக்கணமே அவன் வாயிலில் என் சங்கறுத்துக்கொண்டு சபித்துவிழுகிறேன் தாயே” என்று கூவினான்.
“படகை எடு” என்று அம்பை சொன்னாள். நிருதன் கும்பிட்டு “ஆணை! ஆணை! என் தாயே” என்று கூவியபடி தன் படகை நோக்கி ஓடி அதன் கயிற்றை ஒரே வெட்டாக வெட்டி துடுப்பைத் துழாவி வளைத்தான். அதற்குள் ஏறி அமர்ந்த அம்பை “கிளம்பு” என்றாள். ஒருகணம்கூட அவள் திரும்பி அந்நகரைப்பார்க்கவில்லை.