வெண்முரசு – நடை, அமைப்பு – ஒரு விளக்கம்

வெண்முரசு குறித்து நூற்றுக்கணக்கான கடிதங்கள். வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தவர்களுக்கும் ரசித்து எழுதியிருந்தவர்களுக்கும் நன்றி. கூடுமானவரை பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன்

ஒரு சில கடிதங்களில் ‘நடை கொஞ்சம் கடினம்’ ‘புரியவில்லை’ என்னும் குறைகளும், எளிமையாக எழுதமுடியாதா என்ற கோரிக்கையும் இருந்தன. அவர்களுக்காக சில வரிகள்.

நண்பர்களே உங்கள் சிரமத்தை புரிந்துகொள்கிறேன். என்னால் முடிந்தவரை செம்மையான மொழியில் சொல்லவும் முழுமையாகச் சொல்லவுமே முயன்றிருக்கிறேன் என உறுதி சொல்கிறேன்

*

முதலில் நடை பற்றி. தமிழில் நாம் சாதாரணமாக நம் வணிக இதழ்களால் முன்வைக்கப்படும் ஒரு நடைக்குப் பழகிவிட்டிருக்கிறோம். அந்த நடை நாம் அன்றாடம் அரட்டையில் பயன்படுத்தும் நடைக்கு மிக நெருக்கமாக அமையும்படி திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது. கல்கி தேவன் காலகட்டத்தில் பிராமண அரட்டைநடை. சுஜாதா காலகட்டத்தில் நகர்ப்புற இளைஞர்களின் அரட்டை நடை.

இந்த நடையானது நாம் ஏற்கனவே அறிந்ததாக இருப்பதனால் நமக்கு மிக எளிதாக உள்ளது. அதை நாம் வேகமாக வாசித்துச்செல்கிறோம். அதையே ‘ஒழுக்குள்ள’ நடை என நாம் நம்புகிறோம். அந்த நடையை எங்கும் எதிலும் எதிர்பார்க்க பழகிவிட்டிருக்கிறோம். அதற்கானஎழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள்.

அந்த அரட்டை நடையில் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், அன்றாட நக்கல்கிண்டல்கள் ஆகியவற்றைத்தான் எழுதமுடியும். எந்த ஆழமான விஷயத்தையும் எழுதமுடியாது. ஒவ்வொரு அறிவுத்துறைக்கும், ஒவ்வொரு படைப்புலகுக்கும் அதற்கே உரிய மொழி தேவை

நம்மைச்சுற்றி அன்றாட வாழ்க்கையிலேயேகூட் அவை உருவாகி வந்திருப்பதைக் காணலாம். சட்டத்துக்கான மொழி தனியானதுதான். அக்கப்போர் நடையை நாம் அங்கே எதிர்பார்ப்பதில்லை.கொஞ்சம் கவனம் எடுத்தே வாசிக்கிறோம்

ஆகவே அரட்டை நடையில் மட்டுமே வாசிப்போம் என்ற மனநிலையிலிருந்து வெளிவராமல் உண்மையிலேயே முக்கியமான எதையும் வாசிக்கமுடியாது.அதற்காக சற்று முயற்சி எடுத்துக்கொள்வதில் எந்தப் பிழையும் இல்லை

மகாபாரதம் போன்ற இலக்கியத்தை ஒருபோதும் அரட்டைநடையில் எழுதிவிட முடியாது. அந்த நடை படிமங்கள் கொண்டதாகவும், செறிவானதாகவும் மட்டுமே இருக்கமுடியும். மகாபாரதம் படிமச்செறிவும் பொருட்செறிவும் கொண்டது. அதை செறிவில்லாமல் நீட்டி எழுதினால் நீண்டு பரந்து பொருளிழந்து கிடக்கும்.

இந்த நாவலுக்கான என் மொழிநடையில் சொற்றொடர்கள் எளிமையானவையாக, நேரடியானவையாக உள்ளன என்பதை சற்று கவனித்தால் உணரலாம். நடையின் ஒழுக்கு என்பது அதன் உள்ளார்ந்த இசைத்தன்மை கொண்டதுதான். அந்த இசையொழுங்கு குலையாத நடையை இதில் காணலாம்.

பலருக்கும் வரும் சிக்கல் என்னவென்றால், அவர்கள் வாசிக்கும் அரட்டை நடை என்பது சரசரவென வாசிக்கத்தக்கது, ஒரு பத்தியில்தான் ஒரு கருத்து உருவாகி வந்திருக்கும். இது ஒவ்வொரு சொற்றொடரிலும் ஒரு கருத்து உருவாகி வரக்கூடியதாக இருக்கிறது என்பதுதான்.

ஆகவே ஒவ்வொரு சொற்றொடரையும் கவனித்து வாசியுங்கள். அதன்பொருட்டே ஒவ்வொருநாளும் வாசிக்கும்படிச் சொல்கிறேன். ஒருநாளுக்கு அதிகபட்சம் பத்து பக்கம் மட்டுமே வரும். புரியாதபோது இன்னொரு முறை வாசிக்கலாம். அது ஒருபோதும் அர்த்தமற்ற வேலையாக இருக்காது.

உதாரணமாக தழுவித்தழுவி இறுகியபின் மேலும் தழுவும்பொருட்டு அவர்களின் தழுவல் சற்றே தளர்ந்தபோது இருவருக்கும் நடுவே காலம் புகுந்து கொண்டது. என்ற வரி. இந்தவரியின் அமைப்பில் எந்தச்சிக்கலும் இல்லை. ஆனால் வேகமாக வாசித்தால் பொருள் கைதவறிச்செல்லும்

கொஞ்சம் யோசியுங்கள். அனைவரும் அறிந்த ஒரு வாழ்க்கைச்சித்திரம்தான் இது. உறவுகள், குறிப்பாக ஆண்பெண் உறவுகள் மேலும் மேலும் நெருங்குவதற்கான வேகம் கொண்டவை. இன்னும் நெருங்குவதற்காக கொஞ்சம் விலகுகிறோம். சமயங்களில் அந்த விலக்கமே பிரிவாக ஆகிவிடுகிறது இல்லையா? இதை வாசிக்கும் அனைவருமே அதை உணர்ந்திருப்போம். அவ்வாறுதான் மனிதர்கள் தங்களுக்குள் காலத்தை உணர்கிறார்கள் இல்லையா?


அன்னை அவனுக்களித்தவை எல்லாம் வெறும் சொற்களாக இருந்தன. நதிகள், மலைகள், நகரங்கள், ஜனபதங்கள். ஒவ்வொன்றும் அவன் முன் சொல்லில் இருந்து இறங்கி விரிந்து பருவடிவம் கொண்டன.

இந்த வரியிலும் எந்தச்சிக்கலும் இல்லை. நாம் நம் அன்னையிடமிருந்து பெறுபவை மொழிச்சித்திரங்கள். வாழ்நாள் முழுக்க அவற்றை பொருட்களாக மாற்றிக்கொண்டிருக்கிறோம் இல்லையா?

எல்லா வரிகளிலும் அதைப்போல ஏதேனும் அறிதல் உள்ளது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். அந்த வரிக்கு அவ்வாறு கொஞ்சம் கவனம் அளியுங்கள். போதும்.

மகாபாரதத்தை இத்தகைய செறிவான மொழியில் எழுதினால்தான் அதை உண்மையிலேயே சொல்ல முடியும். இல்லையேல் கதைச்சுருக்கமே எஞ்சும்.

புதியபெயர்கள், புதிய இடங்கள் வந்தபடியே இருக்கும். இது ஒரு புதிய உலகம் என்பதனால் சற்றே திகைப்பை அளிக்கலாம். ஆனால் அதிகபட்சம் சில அத்தியாயங்களில் பழகி உள்ளே நுழைந்துவிடுவீர்கள்.

வாசிப்பது என்பது நீங்கள் ஏற்கனவே அறிந்ததை மீண்டும் வாசிப்பதாக இருக்கவேண்டுமென்பதில்லை. புதிய ஓர் அனுபவத்தை அடையவேண்டுமென்றால் நம் தரப்பிலும் ஒரு முயற்சி தேவை.

உறுதியாகச் சொல்கிறேன், புரியாதபோது இன்னொருமுறை வாசிக்கும் பொறுமை உடைய எவருக்கும் இதன் நடை அன்னியமாக அமையாது

*

உள்ளடக்கம் பற்றி. திடீரென்று ஆரம்பிக்கையில் பல விஷயங்கள் புரியாமல் இருக்கும். ஏனென்றால் பெரும்பாலானவர்களுக்கு அறிமுகமே இல்லாத உலகம் இது

ஆனால் அதற்காக நான் அறிமுகப்பாடம் வழியாக ஆரம்பிக்கமுடியாது இல்லையா? ஏனென்றால் இது நாவல், மகாபாரத வகுப்பு அல்ல. நாவலுக்கான வடிவ முழுமையைத்தான் நான் இலக்காகக் கொள்ளமுடியும்.

வெண்முரசின் முதல் அத்தியாயம் கணிசமானவர்களுக்கு புரியாது என நான் அறிவேன். ஆனால் அதுதான் தொடக்கம். வேண்டுமென்றால் ஓர் எளிய விளக்கம் அளிக்கிறேன். அதில் உள்ளது பிரபஞ்சம் உருவானதைப்பற்றிய ஒரு குறியீட்டுச்சித்திரம்

வெளி அதாவது ஸ்பேஸ் மட்டுமே இருக்கிறது. அதிலிருந்து பருப்பொருள் உருவாகிறது. அது அசையும்போது காலம். அதன்வழியாக மொத்தப் பிரபஞ்சமும் உருவாகிறது.

மகாபாரதத்தில் இரு தரிசனங்கள் உள்ளன. வேத தரிச்னம் , நாக தரிசனம். இரண்டும் ஒன்றோடொன்று கலந்தவை. நாக தரிசனம் வழியாக இந்நாவல் ஆரம்பமாகிறது. மகாபாரதத்தை அணுகுவதன் இன்னொரு கோணம் இது.வேத தரிசனம் பின்னால் வரும்.

நாகர்களின் இந்த பிரபஞ்ச தரிசனம் சாங்கிய கொள்கைக்கு மூலமாக அமையக்கூடியது. அதாவது ஆதியில் வெளி மட்டுமே இருந்தது. அதுவே பிரபஞ்சமாகியது என்ற பார்வை. அதில் பிரம்மம் அல்லது கடவுள் இல்லை என்பதைக் கவனியுங்கள்.

ஆரம்பத்தில் இதெல்லாம் முழுக்கப்புரியாமல் இருக்கலாம். நாவலை வாசிக்க வாசிக்க அதெல்லாம் தெளிவாகிவிடும். கொஞ்சம் விவாதித்தால் மட்டுமே போதும்.

மூன்றாவது அத்தியாயத்துடன் கதை வேகம் பிடிக்கிறது. ஒற்றைப்படையான கதை. நெருக்கடிகள் வழியாக மட்டுமே வளரக்கூடிய கதை. மகாபாரதமே ஒரு ‘திரில்லர்’ வகை கதைதான். ஆகவே அதுவே இழுத்துக்கொண்டு செல்லும்

அதுவரைக்கும் கொஞ்சம் கவனமும் பொறுமையும் மட்டும் தேவை.நண்பர்களே, இவ்வளவு பெரிய உழைப்பைச் செலுத்தும் நான் இந்தச் சிறிய கவனத்தையாவது உங்களிடம் எதிர்பார்க்கக் கூடாதா என்ன?

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 2
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3