ரப்பர் என்னும் பயோமெட்டல்

வாழைக்கும் ரப்பருக்கும் உள்ள நிலப்போரட்டமே இந்நாவல். வேண்டுமானால் ஆக்ரமிக்கும், பிற செடி இனங்களை வளரத்தடுக்கும், உயிரினங்களுக்கு இடம்தராத அசுரத்தனத்தை ரப்பர் தன்மை எனவும், கன்றீனும் பெண்மையும் தாய்மையுமானதை வாழைத் தன்மை எனவும் சொல்லலாம். அநீதிக்கு அஞ்சாத,எல்லா நீரையும் ஒளியையும் தானே உண்டு நிலத்தை அமிலமாக்கி உறுதி பட நிற்கும் ரபரின் பாலின் கவர்ச்சியில் அன்றோ நாம் வீழ்ந்து ரப்பராகிறோம். ஆனால் நமக்குள் இன்னொன்றும் உண்டு , பசுங்கன்றை ஒத்தது அது, அது வாழை, அது தாய்மை. இப்பாலில் நாம் வாழ்வோம் .

இங்கு இரண்டு மரணப் படுக்கைகள் உள்ளது , பெரிய பெருவட்டார் மற்றும் அவரை வளர்வித்த நாயர் வம்ச கிழவர். கிழவர் சற்று வாழைத் தன்மை கொண்ட ரப்பர் வம்சம் என்றால் , பெரிய பெருவட்டார் முழுக்க ரப்பரே தான் . ரப்பர் காலத்தில் அந்நிலத்தில் மிஞ்சியிருக்கும் வாழை கண்டன்காணி.

மறு படியில் பிரான்சிஸ் மற்றும் குளம்கோரி. இருவரிடமும் ஒரு வாழையின் கன்று உள்ளது , நிலம் முழுக்க ரப்பர் தான். பிரான்சிஸ் நதிக்கரையில் அந்த தரிசனம் வழி தனது நிலத்தை முழுவதும் வாழையாக்குகிறான், குளங்கோரி தனது நிலத்தை முழுவதும் அமிலமாகவே சூழ விட்டவன்.

இதில் உள்ள போஷாக்கான பகுதி என்றல் அது த்ரேஸ் -எபின் பதின் வயதுக் காதல் தான் , அப்போது அது கன்னி நிலங்கள். என்றாலும் படிக்கும் ஒவ்வொருவரையும் அவர்களின் பதின் வயதில் கொண்டு விட்டுவிடும், முதற் காதலை ஞாபகப் படுத்தும். நமது பதின் வயது நினைவு மீட்டலுக்கு முன், அந்த ஒளி உலகிற்கு திரும்பச் செல்லும் ஒரு அனுமதிச் சீட்டுக்கு முன் தத்துவமும் , நீதியும், தரிசனமும்,எல்லாம் எம்மாத்திரம். த்ரேஸ் ரப்பராகி தனது நிலத்தில் லிவியை ஈன்றாள் , எபின் தன் நிலத்தின் கல் வாழை.

இந்நாவலின் முதலிலேயே துவங்கும் நுண் சித்தரிப்பு , கண் முன் ஒருபசுமையான உலகை படைத்துக் காட்டுகிறது. பெருவெட்டர், குழந்தையைக் கொல்வதும் ,காடு திருத்துவதும் கூர் விவரிப்பு. எப்பின்-த்ரேஸ் மன உலகம் அசலானது.

பள்ளிப் பருவத்தில் முதன் முதலில் ஒரு ரப்பர் துண்டு அறிமுகமான போது ஒரு குதூகலம் , ஒரு வினோதம் . அது ஒரு உயிர் தன்மை உடையது போல நெகிழ்கிறது ஆனால் உயிரில்லை , அதே சமயம் உலோகத்தன்மையுடையது போல உணர்வற்றும், மாமிசத் துண்டம் போலவும் இருக்கிறது. உயிர் குடிகொள்ள சாத்தியமான இது ஒரு Bio-metal.

கிருஷ்ணன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 18
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19