பகுதி மூன்று : எரியிதழ்
[ 4 ]
அஸ்தினபுரியின் அக்கினிதிசையில் மருத்துவத் தாவரங்கள் நிறைந்த சோலை நடுவே மூங்கில் பட்டைகளால் பின்னப்பட்ட குளிர்ந்த தட்டிகளினாலும் கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட புனிதமான சேற்றைக் கொண்டும் கட்டப்பட்ட அரண்மனை ஆதுரசாலையில் நூற்றியொரு மருத்துவர்களின் பராமரிப்பில் விசித்திரவீரியன் வாழ்ந்து வந்தான். பன்னிரண்டு ஆண்டுகளாக அவனுக்கு அங்கே எவருமறியாமல் மருத்துவம் பார்க்கப்பட்டதென்றாலும் அதை அனைவருமே அறிந்திருந்தனர். பாரதவர்ஷத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் வாஜிகல்ப நிபுணர்களான மருத்துவர்கள் அங்கே வந்துகொண்டே இருந்தார்கள்.
விசித்திரவீரியன் சுண்ணாம்புபோல வெளுத்த உடலும், மெலிந்து நடுங்கும் உதடுகளும், மஞ்சள்படர்ந்த கண்களும் கொண்டிருந்தான். அவன் உடலெங்கும் நரம்புகள் நீலநிற சர்ப்பக்குழவிகள் போல சுற்றிப்படர்ந்து இதயத்துடிப்புக்கு ஏற்ப அதிர்ந்துகொண்டிருந்தன. மெலிந்த கைகால்களில் மூட்டுகள் மட்டும் பெரிதாக வீங்கியிருக்க தசைகள் வற்றி எலும்புகளில் ஒட்டியிருந்தன. இளவயதில் வந்து வந்து சென்றுகொண்டிருந்த மூட்டு வீக்கத்தால் அவன் வெளியே நடமாடி அறியாதவனாக இருந்தான். ஒவ்வொருநாளும் பிரம்மமுகூர்த்தத்திலேயே அவன் மருத்துவர்களால் எழுப்பப்பட்டு பலவகையான மருத்துவமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டான். இளமைமுதல் அவனறிந்ததெல்லாம் மருத்துவம் மட்டுமே.
முந்தைய வாரம் வேசரநாட்டிலிருந்து ஒரு முதியமருத்துவர் வந்திருந்தார். நாகவீரியத்தைக்கொண்டு செய்யப்பட்ட மருந்து ஒன்றை அவர் விசித்திரவீரியனின் நரம்புக்குள் செலுத்தினார். ராஜநாகத்தின் விஷத்தை எலியின் உடலில் துளித்துளியாகச் செலுத்தி அதை மயக்கத்திலேயே வைத்திருந்து, அதன் உடலெங்கும் விஷயமயமானபின் அந்த எலியை அப்படியே கொண்டுவந்து, அதன் குருதியை காரைமுள்ளால் தீண்டி எடுத்து, அவன் நரம்புகளில் மெல்லக்குத்திச் செலுத்தினார். தேன்மெழுகை அந்தக் காயம் மீது வைத்து மூடினார். ஆறுநாட்களாக நாகபுட மருத்துவம் நடந்துகொண்டிருந்தது. முதல்நாள் விசித்திரவீரியன் அந்த விஷத்தாக்குதலால் வாயில் நுரைதள்ளி உடல் வளைந்து வில்லாக இழுக்க தரையில்கிடந்து நெளிந்தபின் மயக்கத்திலேயே இரவைக் கழித்தான்.
அடுத்தடுத்த நாட்களில் விஷம் அவனை மெல்லத் துடிக்கச்செய்து பின் அணைத்து ஆழ்ந்த துயிலை அளித்தது. ஏழாம் நாள் காலையில் அவன் அந்த விஷத்துக்காக ஏங்க ஆரம்பித்தான். காலையெழுந்ததுமே வேசரநாட்டு வைத்தியரை அழைக்கும்படி சொல்லிக்கொண்டிருந்தான். அவன் நாடியைப்பிடித்துப் பார்த்த அஸ்தினபுரியின் மருத்துவர்கள் அதில் உயிர்வேகம் அதிகரித்திருப்பதைக் கண்டு அந்தச்செய்தியை சத்யவதிக்குத் தெரிவித்தனர். அவள் வேசரநாட்டு மருத்துவருக்கு பொன்னும் பட்டும் பாராட்டுத்திருமுகமும் கொடுத்தனுப்பினாள்.
சித்திரமெத்தையில் சாய்ந்து நரம்புகளில் விஷம் ஓடும் குளம்படியைக் கேட்டபடி அரைக்கண்மூடிக் கிடந்த விசித்திரவீரியனின் முன்னால் அமர்ந்து சூதர் தன்னுடைய கிணைப்பறையைக் கொட்டி அப்சரஸ்கள் நிலவில் மானுடப் பொன்னுடலுடன் நீராடிக்களிக்கும் காட்சியை பாடிக்கொண்டிருந்தார். சிறுவயதிலிருந்தே அவன் கேட்டுப்பழகிய கதைகள். விசித்திரவீரியன் உலர்ந்த உதடுகளை நக்கிக்கொண்டு பெருமூச்சுடன் திரும்பிப்படுத்தான்.
வேசரநாட்டு வைத்தியர் அஸ்தினபுரியின் அமைச்சர் ஸ்தானகரிடம் மெல்ல தன் நாட்டிலிருந்து அழைத்து வந்திருந்த நாகசூதனை பாட அனுமதிக்கும்படி கோரினார். “அந்தப்பாடலும் இந்த மருத்துவத்தில் சேர்ந்தது. நாகபடம்போல கேட்பவரின் இச்சாசக்தி பெருகும். இச்சாசக்தியே நோய்க்கு முதல்மருந்து. பிற அனைத்தும் அந்த நெருப்புக்கான அவிகளே” என்றார்.
ஸ்தானகர் புன்னகையுடன் “அவர் எந்தக்கதைக்கும் காதுள்ளவராகவே இதுநாள் வரை இருந்திருக்கிறார்” என்றார். விசித்திரவீரியன் “காது மட்டும்தான் உழைப்பில்லாமல் பணியாற்றும் உறுப்பு ஸ்தானகரே” என்றான். ஸ்தானகர் “அதனால்தான் இச்சாசக்தியான நாகங்களுக்கு காதுகள் இல்லை போலும்” என்றார். விசித்திரவீரியன் உரக்கச் சிரித்தான்.
நாகசூதன் கன்னங்கரிய கண்களும் நுரைபோலச் சுருண்டு அடர்ந்த முடியும் பெரிய உதடுகளும் வெண்பற்களும் கொண்டவனாக இருந்தான்.அவனுடைய வாத்தியம் சுரைக்காய் குடத்தில் இருந்து மூங்கில் தண்டுகளில் இழுத்துக்கட்டப்பட்ட தோல்நரம்புகளால் ஆனது. அதன்பெயர் நந்துனி என்றான். மெல்லிய பிரம்புக் குச்சிகளால் தோல்தந்திகளை நீவத்தொடங்கியபோது காட்டுக்கொடிகளில் காற்று ஊடுருவும் விம்மலோசை எழத்தொடங்கியது.
அவனுடைய கனத்த குரல் ஒலிக்கத் தொடங்கியதுமே விசித்திரவீரியன் நாகங்களின் நெளிவைக் காண ஆரம்பித்தான். தலையை கைப்பிடியாகக் கொண்டு சுழலும் சாட்டைகள். மலையிடுக்கின் மண் பொழிவுகள். இருள்படிந்த காட்டுவழிகள். தொங்கி காற்றிலாடும் அருவிகள். கைநீட்டும் கொடிநுனிகள். சுருண்டுபற்றும் வானர வால்கள். நெளியும் மயில்கழுத்துகள். தயங்கி வழியும் ஓடைகள். நெளியும் கருங்கூந்தல்கள். விழியை வளைத்த புருவங்கள். அகம் மட்டுமறியும் ஆப்தவாக்கியத்தின் தன்னந்தனியான இருண்ட பயணம்.
“அழியாத வீரியம் கொண்ட நாகங்களின் வம்சத்தைப்பாடும் பாடகன் நான்…நாகங்களின் நாடு இது. நாகங்களின் வனம் இது. நாகங்களே எண்ணங்களாகும் வானம் இது. அவை வாழ்க!” நாகசூதன் பாடினான். மண்ணுக்கு அடியில் பல்லாயிரம் யோசனை தொலைவில் இருக்கிறது நாகலோகம். நான்குபக்கமும் பொன்னாலும் வெள்ளியாலும் செம்பாலும் இரும்பாலுமான கோட்டைகள் உள்ளன. அந்தக்கோட்டைவாசல்களில் ஒன்றில் வைரங்களும் இன்னொன்றில் வைடூரியங்களும் இன்னொன்றில் கோமேதகங்களும் இன்னொன்றில் மரகதங்களும் பதிக்கப்பட்டுள்ளன.
நாகலோகத்துக்குள் நுழைய பாதைகள் இல்லை. இருள் ஒரு பெருநதியாக மாறி அதன் முன்பக்க கோட்டைவாசல்கள் வழியாக பீறிட்டு உள்ளே செல்கிறது. அந்த இருளில் ஏறி கணநேரத்தில் கோடி யோசனைதூரம் செல்லும் வேகத்தில் உள்ளே செல்லமுடியும். அவ்வாறுதான் வெளியேறவும் முடியும். அதற்குள் பன்னிரண்டாயிரம்கோடி நாகங்கள் தங்கள் துணைவியருடன் வாழ்கின்றன. செவ்வைரம் மின்னும் கண்களும் கருமை கனத்த உடல்களும் கொண்ட அவை மரணமற்றவை.
நாகலோகம் நாகர்களின் மூதன்னை கத்ரு இட்ட சின்னஞ்சிறிய முட்டையில் இருந்து வந்தது. அவள் இட்ட பன்னிரண்டாயிரம்கோடி முட்டைகளில் ஒன்று அது. அவளிட்ட முட்டைகள் இன்னும் விரிந்து முடியவில்லை. காலத்தின் மறுமுனையில் கரியசுருளாக தன்னை முடிச்சிட்டுக்கொண்டிருக்கும் கத்ரு கணமொன்றுக்கு கோடிமுட்டைகளை இட்டுக்கொண்டே இருக்கிறாள்.ஆதியும் அனாதியுமானவள். அழியாதவள். அனைத்துமானவள். கன்னியும் அன்னையுமானவள். மகாமங்கலையானவள். மாமாயையானவள். அவள் வாழ்க!
மூதன்னை கத்ருவுக்கு அம்பை, தீர்க்கசியாமை, சாரதை, காளி, சித்தேஸ்வரி, யோகீஸ்வரி, சாந்தை, கனகி, முக்தை, மூலத்வனி என ஆயிரம் அழகிய பெயர்கள் உண்டு. சர்ப்பராஜனாகிய வாசுகி அவள் மைந்தன் என்றறிக. அவனுக்கு காளன், சியாமன், ருத்ரன், சலன் என்று ஆயிரம் பெயர்கள் உண்டு. அவனே பாதாளத்தின் அதிபன். மகாமேருக்களை உடல்செதில்களாகக் கொண்ட விராடரூபன்.
கோடானுகோடி யுகங்களாக தீண்டப்படாமையால் உறைந்து ஒளிபெற்று நீலமணியாகி குளிர்ந்து கனத்த கடும் விஷத்தைக் கொண்டவன் வாசுகி. அந்த விஷத்தின் எடை கனத்து கனத்து அவன் அசைவற்றவனானான். அவன் தலையை அசைக்க முயன்று நெளிந்துகொண்டிருந்த உடல் மெல்லமெல்ல களைத்து அசைவிழந்தபோது அசைவால் மட்டுமே அறியப்படும் காரிருள் வடிவம்கொண்ட அவன் முழுமையாகவே மறைந்துபோனான். அவனிலிருந்து பிறந்த கோடானுகோடி நாகங்கள் அவனை தேடித்தேடி சலித்தன. பின் அவை சிவனை எண்ணித் துதித்தன.
முக்கண் முதல்வன் அவர்களுக்கு முன் தோன்றி “காளசர்ப்பமாகிய வாசுகிக்குள் உறைவது ஊழிமுடிவில் உலகங்களை எரிக்கும் ஆலகாலம். அவனை அவன் அன்னை கத்ரு பெற்றபோது அவள் குருதி வழியாக அவன் உண்டது அது. அவனுக்குள் அது பெருகி வளர்ந்துகொண்டே இருக்கிறது. அவன் அதைக் கக்கும்போது ஊழி நிகழும்” என்றார். நாகங்கள் “அய்யனே, எங்கள் அரசன் அசையும்படி அவருக்கு அருள்செய்யுங்கள்” என்று முறையிட்டபோது புன்னகையுடன் “அது நிகழ்வதாக!” என வாழ்த்தி சிவன் மறைந்தார்.
ஆலகாலத்துக்கு நிகரான இன்னொன்றை உருவாக்க வேண்டுமென்று சிவன் எண்ணம்கொண்டார். ஊழிமுடிவிலும் அழியாததாகிய அதற்கு மரணமற்றது என்று பெயரிட்டார்.கால அகாலங்களை சிற்றலைகளாகக் கொண்டு விண்ணளந்தோன் துயிலும் பாற்கடலின் நெய்யே அந்த அமுதமாக இருக்கமுடியும் என்று உணர்ந்தார். அன்று மரணமின்மையின் குதூகலத்தில் பொறுப்பற்றிருந்தனர் தேவர். காலமின்மையின் காரணமாக ஊக்கமின்மையும் கொண்டிருந்தனர். அதை நீக்க மனம்கொண்ட மகாதேவன் தன்னை சித்தத்தில் ஏற்றிய துர்வாசரில் அதற்கான தருணத்தை உருவாகச் செய்தார்.
ஆயிரம் மொட்டுகள் கொண்ட மாலையை கையிலேந்தி தவம்செய்வது துர்வாசரின் வழக்கம். தவம் முதிர்கையில் மொட்டுகள் மலர்களாகும். அந்த மலர்மாலையுடன் அவர் வானவீதியில் வருகையில் எதிரே வெண்மேகமெனும் ஐராவதம் மீதேறி வந்த இந்திரனின் மின்னலொளி கொண்ட பேரழகைக் கண்டு மகிழ்ந்து அந்த மாலையை அவனுக்குப் பரிசளித்தார். இந்திரன் அதை ஐராவதத்தின் மத்தகத்தில் அணிவித்தான். நெளியும் ஒவ்வொன்றிலும் குடியேறும் வல்லமைகொண்ட விமலன் என்னும் பாதாள நாகம் அந்த மாலையில் தோன்றி மெல்ல நெளியவே அஞ்சி மெய்சிலிர்த்த ஐராவதம் அதை எடுத்து மண்ணில் வீசியது.
சினம்கொண்ட துர்வாசர் “மரணமின்மையின் பாரத்தால் நீ மலர்களின் கணநேரத்தன்மையின் மகத்துவத்தை அறியாமலானாய். நீயும் உன் நகரும் அழியக்கடவதாக” என தீச்சொல் இட்டார். அக்கணம் முதல் இந்திரன் முதலான தேவர்கள் முதுமை கொள்ளலானார்கள். தேவ வனங்கள் மூத்து முடிந்தன. அங்குள்ள மலர்கள் மாலையே வாடி உதிர்ந்தன. அச்சம் கொண்ட தேவர்கள் சிவனை அணுகி மீட்பளிக்கும்படி கோரினர். விஷ்ணு பள்ளிகொள்ளும் பாற்கடலைக் கடைந்து அமுதமெடுத்து உண்ணுவதே மூப்பை வெல்லும் வழி என்று சிவன் சொன்னதும் அவர்கள் விஷ்ணுவை சரண் அடைந்தனர். பாலாழியைக் கடைய மும்மூர்த்திகளும் ஒப்புக்கொண்டனர்.
அதற்கான மத்தாக மந்தரமலை கண்டெடுக்கப்பட்டது. ஆமை உருவம் கொண்டு பாற்கடலுக்கடியில் தங்கிய விஷ்ணுவின் மீது மந்தரமாமலை அமைக்கப்பட்டது. அதைக் கடைவதற்கான சரடுக்காக தேவர்களும் அசுரர்களும் தேடியபோது சிவன் வாசுகியைக் கொண்டுவரும்படி சொன்னார். தேவர்களின் இச்சைப்படி கருடன் பாதாளத்திற்கு பறந்துசென்று வாசுகியை கால்களால் கவ்வி மேலே தூக்கினார். ஏழாம் பாதாளத்தில் இருந்து ஏழாம் விண்ணுலகம் வரை தூக்கியும் கூட வாசுகியின் தலையும் வாலும் அங்கேயே இருந்தன. அவ்வாறு ஆயிரத்தெட்டுமுறை மடியும்படி தூக்கிய பின்னரும் வாசுகி அங்குதானிருந்தான்.
தேவர்கள் சிவனிடம் மன்றாடினர். சிவன் குனிந்து வாசுகியைத் தொட்டு “அகால பீடத்தில் அமர்ந்த யோகீஸ்வரனுக்கு முன் நீ எதுவோ அதுவாக வருக” என்றார். வாசுகி ஒரு சிறு மோதிரமாக மாறி அவர் கையில் அணியானான். சிவன் வாசுகியை விண்ணுக்குத்தூக்கி பாலாழிக்கு மேல் இருந்த மந்தர மலையை கட்டினார். அதன் தலையை தேவர்களும் வாலை அசுரர்களும் பற்றிக்கொண்டனர். நூறாயிரம் யுகங்கள் அவர்கள் பாலாழியைக் கடைந்தனர். அசுரர்களின் மூக்கிலிருந்தும் வாயில் இருந்தும் நுரைகொட்டியது. தேவர்கள் மும்மூர்த்திகளையும் கூவி அழுதனர்.
வெண்ணுரை எழுந்த பாலாழியில் இருந்து அழிவின்மை ஐந்து முகங்களாக வெளிவந்தது. முதலில் பொன்னாலான கொம்புகள் கொண்ட வெண்ணிறப்பசுவாகிய காமதேனு தாய்மை வடிவாக வெளிப்பட்டது. குளிர்ந்த கண்களும் அலைகளெழும் ஆடைகளுமாக வாருணிதேவி காதலின் தோற்றமாக எழுந்துவந்தாள். பின்னர் இனியநறுமணத்துடன் பாரிஜாதம் பக்தியின் சின்னமாக தோன்றியது. நான்காவதாக கொடையின் சின்னமாக கல்பமரம் எழுந்தது. ஐந்தாவதாக யோகிகள் மட்டும் சகஸ்ரபீடத்தில் அறியும் குளிர்சந்திரன் தோன்றியது. கடைசியாக இருகைகளிலும் தாமரைமலர்களுடன் தோன்றிய மகாலட்சுமியின் ஐந்து அணிகளாக அவை மாறின. அவளுடைய கைகளில் அமுதகலசம் இருந்தது.
அப்போது மந்தரத்தைச் சுற்றி கடையப்பட்ட சலிப்பில் வாசுகியின் முடிவில்லாத பேருடல் அதிர்ந்தது. ஊழிமுடிவில் அண்டங்களெல்லாம் வெடிப்பதுபோல பெரும்புகையும் நெருப்புமாக ஆலகாலம் கன்னங்கரிய குழம்பாக பீறிட்டு அவனில் இருந்து வெளிவந்தது. பிரம்மனும் தேவர்களும் நடுங்கிச்சரிய சிவன் தன் இருகைகளாலும் அந்தக் காளகூடத்தை ஏந்தி அள்ளி தன் வாயிலிட்டு விழுங்கினார். முற்றியநாகத்தின் வாயில் விளங்கும் நாகமணிபோல நீல ஒளியுடன் அது அவரது கழுத்தில் தங்கியது. “இன்னும் பன்னிரண்டாயிரம் கோடி யுகங்கள் நீ வாழ்வாயாக! உன்னுடைய கண்டத்தில் ஆலகாலம் மீண்டும் ஊறி நிறையட்டும்!” என்று வாசுகியை வாழ்த்தி சிவன் மீண்டும் பாதாளத்துக்கு அனுப்பினார்.
வாசுகி மீண்டுவந்ததும் பாதாள நாகங்கள் கொண்டாடின. பன்னிரண்டாயிரம்கோடி நாகங்கள் பிணைந்து நெளிந்தாடி நடனமிட அந்த அசைவில் பாதாளமே குலுங்கியது. பாதாளம் மீது அமர்ந்த பூமி அசைந்தது. நாகங்களின் மதநீரின் மணம் எழுந்தபோது மண்ணின் மீது நூறாயிரம் காடுகளின் அத்தனை மரங்களும் செடிகளும் பூத்துக்குலுங்கின. அவற்றில் காய்களும் கனிகளும் பொலிந்தன. வயல்வெளிகளில் பொற்துளிகள் விளைந்தன. மரங்களுக்குள் அரக்காகவும், மலர்களுக்குள் தேனாகவும், கனிகளுக்குள் சாறாகவும் நாகங்களின் மதநீரே ஆனது.
நாகமதத்தின் வாசனையை உணர்ந்து மண்மீதிருந்த அத்தனை ஆண்களும் காமம் கொண்டனர். அத்தனை பெண்களும் நாணம் கொண்டனர். யானைகள் துதிக்கை பிணைத்தன. மான்கள் கொம்புகள் பூட்டின. நாரைகள் கழுத்துக்கள் பின்னின. தேனீக்கள் சிறகுகளால் இணைந்தன. புழுக்கள் ஒன்றை ஒன்று உண்டன. பிங்கலநிறம் கொண்ட கூந்தலும் கரிய உடலும் கொண்ட மிருத்யு தேவி தன் புதல்விகளான வியாதி,சோகம்,ஜரா,திருஷ்ணை,குரோதம் ஆகியவர்களை அழைத்துக்கொண்டு விலகி ஓடி ஏழுகடல்களுக்குள் புகுந்துகொண்டாள். பூமிதேவி தன்னை புதுப்பித்துக்கொண்டு புன்னகைபுரிந்தாள்.
நாகசூதன் தன் நந்துனியை மீட்டி பாடி நிறுத்தினான் “முதலில் எழும் அனல்விஷத்தை வாழ்த்துங்கள். ஆலகாலத்தின் சோதரியான அமுதத்தை வாழ்த்துங்கள். பெருநஞ்சு ஊறும் அடியில்லாத இருள்வடிவமான வாசுகியை வாழ்த்துங்கள். அவன் குடிகொள்ளும் நாகலோகங்களை வாழ்த்துங்கள். அங்கே வாழும் கோடிகோடி நாகங்களை வாழ்த்துங்கள். காலடிகளெல்லாம் நாகங்களின் மீதென்றறிந்தவன் முக்திபெறுகிறான். ஆம், அவ்வாறே ஆகுக!”
அந்தக் கதையை கேட்டுக்கொண்டிருந்த விசித்திரவீரியன் தன் வாழ்நாளில் முதல்முறையாக நரம்புகளில் இறுக்கமும் மனதில் வேகமும் ஓடுவதை உணர்ந்தான். மூடிய கண்களுக்குள் நெளியும் நாகங்களின் கருமைத்திரள் ஒரு மாயக்கனவின் கணத்தில் அலகிலா ஒளிப்பிரபஞ்சமெனும் பெண்ணின் பிறப்புறுப்பு என்று தோன்ற உடல் விதிர்த்து எழுந்து அமர்ந்தான். அவன் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.
ஸ்தானகர் அவனருகே குனிந்து “பால் அருந்துகிறீர்களா இளவரசே?” என்றார். ஆமென்று அவன் சொன்னதும் தட்சிணநாட்டு மிளகு போட்ட பாலை கொண்டுவந்தனர். அதை அருந்தியபின் மெல்ல உடல்தளர்ந்தான். “என்ன கண்டீர்கள் இளவரசே?” என்றார் ஸ்தானகர். அதை அவன் சொன்னதும் “ஆம், சக்தியின் மூலாதாரம்” என்றார்.
அன்று முழுக்க அவன் மரநிழல்கள் மாநாகங்களாக நெளிந்தாடும் தடாகத்தின் கரையில் அமர்ந்திருந்தான். இளங்காற்றில் இருந்த ஈரப்பதத்திலிருந்து வந்தவை போல ஏதேதோ எண்ணங்கள் அவனூடாகச் சென்றுகொண்டிருந்தன. நீரில் நெளிந்த தன் பிம்பத்தைக் கண்டான். தன்னை விதவிதமாக சித்தரித்து விளையாடும் நீரை நோக்கி புன்னகை செய்தான். மாலையில் அரண்மனையிலிருந்து பாவகன் என்னும் அணுக்கச்சேவகன் அவன் எதிர்பார்த்திருந்த செய்தியுடன் வந்தான்.
பீஷ்மபிதாமகர் சுயம்வரத்துக்காக காசிக்குச் சென்றிருந்ததை அவன் அறிந்திருந்தான். வடக்கே கங்கையில் படகுகள் வந்தணைந்துவிட்டன, பீஷ்மர் இளவரசிகளுடன் வந்துகொண்டிருக்கிறார் என்று காலையில் செய்தி வந்திருந்தது. அவன் திரும்பிப்பார்த்ததும் பாவகன் “இளவரசே, பீஷ்மபிதாமகர் இளவரசிகளுடன் வந்திருக்கிறார்” என்றான்.
விசித்திரவீரியன் பதில்சொல்லாமல் பார்த்தான். பாவகன் “காலைமுதலே நகர்மக்கள் கோட்டைவாசலில் குவிந்து பார்த்துக்கொண்டிருந்தனர். இளவரசிகளுடன் ரதங்கள் உள்ளே வந்தபோது மக்கள் உப்பரிகைகளில் இருந்து மலர்தூவி வாழ்த்தினர். சூதர்கள் மங்கலவாத்தியங்கள் முழக்கினர். குலப்பெண்டிர் குலவையிட்டனர். அஸ்தினபுரியில் சந்தனுமன்னரின் மரணத்துக்குப்பின் இன்றுதான் பொலிவு மீண்டது” என்றான்.
விசித்திரவீரியன் முகத்திலும் மெல்லிய புன்னகை விரிந்தது. “நல்லது” என்று உலர்ந்த உதடுகளால் சொன்னான். பாவகன் “ஆனால் இரு இளவரசிகளும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்கள். பேரரசி சத்யவதிதேவி அரண்மனை முற்றத்துக்கு அவரே வந்து அவர்களின் நெற்றியில் மங்கலச்சின்னம் இட்டு உள்ளே அழைத்தபோது இறுகிய முகத்துடன் தலைகுனிந்து ஒருசொல்கூட சொல்லாமல் உள்ளே சென்றார்கள்” என்றபோது விசித்திரவீரியன் கண்கள் சுருங்க “இளவரசியர் இருவரா? மூவர் என்றார்களே” என்றான். பாவகன் திகைத்தான். “உடனே சென்று மூன்றாவது இளவரசி எங்கே என்று கேட்டுவா” என்றான் விசித்திரவீரியன்.
அதற்குள் பீஷ்மருடன் படகிலிருந்த சேவகனாகிய விப்ரதன் புரவியில் வந்து இறங்கினான். விசித்திரவீரியன் அருகே வந்து வணங்கி ”இளவரசே, நான் பீஷ்மபிதாமகரின் படகிலிருந்தவர்களில் ஒருவன்… உங்களிடம் சேதி தெரிவிப்பதற்காக வந்தேன்” என்றான். “இன்னொரு இளவரசி எங்கே?” என்றான் விசித்திரவீரியன். “இங்கே வந்திருப்பவர்கள் அம்பிகையும் அம்பாலிகையும்தான். அம்பையை பீஷ்ம பிதாமகர் வழியிலேயே இறக்கி விட்டுவிட்டார்” என்றான் விப்ரதன்.
விசித்திரவீரியன் திகைப்புடன் “திருப்பி அனுப்பிவிட்டாரா?” என்றான். “இல்லை, இளவரசி அம்பை சௌபநாட்டரசர் சால்வரை மனதால் வரித்துவிட்டதாகச் சொன்னார். ஆகவே சால்வரிடமே கொண்டுசென்று சேர்க்கச் சொல்லி பீஷ்மர் இளவரசியை விட்டுவிட்டார்.” விசித்திரவீரியன் வியப்புடன் “தனியாகவா இளவரசி சென்றாள்?” என்றான். “ஆம்….அவர் தனியாகச் செல்லவிரும்பினார்” என்றான் விப்ரதன். “நான் அவரிடம் தூரம் அதிகமல்லவா என்று கேட்டேன். அவர் மனம் முன்னரே சௌபநாட்டுக்குச் சென்றுவிட்டது என்று பிதாமகர் சொன்னார்.”
விசித்திரவீரியன் சொல்லிழந்தவனாக அப்படியே அமர்ந்திருந்தான். “இளவரசே! உங்களுக்கு பேரரசி ஒரு செய்தி சொல்லியனுப்பியிருக்கிறார். இரண்டு இளவரசிகளையும் நீங்கள் மணம்கொள்ளவேண்டும் என்றும் அதற்காக இங்கே மருத்துவர்கள் வேண்டியதைச செய்யவேண்டுமென்றும் ஆணையிட்டிருக்கிறார்” என்றான் பாவகன். “இன்றுகாலை உங்கள் உடல்நிலை மேம்பட்டிருக்கிறது என்ற செய்தியை நம் மருத்துவர்கள் அறிவித்திருக்கிறார்கள். பேரரசி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்” என்றான் விப்ரதன்.
“என் உடல்நிலைபற்றி நானே அறிவேன்” என்று சொன்ன விசித்திரவீரியன் “ஆனால் அஸ்தினபுரியில் சென்ற நாற்பதாண்டுகளில் என் அன்னையின் ஆணையை எவரும் மீறியதில்லை. என் தந்தை உட்பட….அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி எழுந்தான். இயல்பாக அவன் நெஞ்சில் அம்பையின் நினைவு மேலெழுந்தது. “விப்ரதா சொல்! அம்பை பார்ப்பதற்கு எப்படி இருந்தாள்?”
விப்ரதன் சொல்லின் வேகத்தில் சற்றே முன்னகர்ந்து “வேள்விக்கூடம் மேல் படர்ந்து ஏறும் நெருப்பு போலிருந்தார்” என்றான். “ஏழுமுறை தீட்டப்பட்ட வாள் போல. ஆவணிமாதம் ஆயில்யநட்சத்திரத்தில் அதிகாலையில் படமெடுக்கும் ராஜநாகம்போல…” அதன்பின் அவனே தான் சொன்னதை உணர்ந்து திகைத்து நின்றுவிட்டான். விசித்திரவீரியனின் உடல் அவனறியாமலே சற்று நடுங்கியது. பாலாழி அலைகளில் எழுந்த ஆலகாலம் பற்றிய எண்ணம் ஒன்று அவன் மனதுக்குள் ஓடிச்சென்றது.