பகுதி மூன்று : எரியிதழ்
[ 2 ]
காசி அரண்மனையில் கங்கையின் நீர்விரிவு நோக்கித்திறக்கும் சாளரங்களின் அருகே அரசி புராவதி அமர்ந்து நிற்கின்றனவா நகர்கின்றனவா என்று தெரியாமல் சென்றுகொண்டிருந்த பாய்புடைத்த படகுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய ஒற்றுச்சேடியான நந்தகி மெல்ல வந்து தன் வருகையை குறிப்புணர்த்திவிட்டு சுவர் ஓரமாக நின்றாள். கவலைமிக்க முகத்துடனிருந்த புராவதி திரும்பி ‘என்ன?’ என்பதுபோலப் பார்த்தாள். நந்தகி வணங்கி சுயம்வரப்பந்தலில் நிகழ்ந்தவற்றை விவரித்தாள். பெருமூச்சுடன் அவள் போகலாமென கையசைத்தாள் புராவதி. மூன்றுமாதம் முன்னரே அவள் நிமித்திகர்கள் வழியாக அந்த சுயம்வரம் நடக்கப்போவதில்லை என்பதை அறிந்திருந்தாள்.
அணுக்கச்சேடி பிரதமை வந்து பிரம்மமுகூர்த்தம் நெருங்கிவிட்டது என்று சொன்னபோது எழுந்து உள்ளறைக்குச் சென்று நீராடி ஆலயவழிபாட்டுக்குரிய மஞ்சள்பட்டாடையும் சங்குவளையல்களும் பொற்தாலியும் மட்டும் அணிந்துகொண்டு வெளியே வந்தாள். மூன்று இளவரசிகளும் ஆலயவழிபாட்டுக்குரிய ஆடையணிகளுடன், கைகளில் மலர்த்தட்டங்கள் கொண்ட சேடியர் சூழ நின்றிருந்தார்கள். புராவதி தன் புதல்வியரைப் பார்த்துக்கொண்டு சிலகணங்கள் ஏங்கி நின்றிருந்தாள். பின்பு நெடுமூச்சுடன் ‘கிளம்பலாம்’ என்று சேடியருக்கு ஆணையிட்டாள். தலைச்சேடி சைகை காட்ட வெளியே அவர்களின் புறப்பாட்டை அறிவிக்கும் சங்கு மும்முறை ஒலித்தது.
அரண்மனை முற்றத்தில் செவ்வண்ணத்திரை பறக்கும் இரு பல்லக்குகள் நின்றன. அதைச்சூழ்ந்து ஆயுதமேந்திய காவலரும் கொடியேந்திய குதிரைவீரனும் நின்றிருந்தார்கள். அரசியும் அணுக்கச்சேடியும் முதல் பல்லக்கில் ஏறிக்கொண்டனர். பல்லக்கு மேலெழுந்தபோது திரையை மெல்ல விலக்கி மூன்று பெண்களும் அடுத்தபல்லக்கில் ஏறுவதை புராவதி கவனித்தாள். மூவரும் உள்ளே நெருப்பிட்ட கலங்கள் போல சிவந்து கனிந்திருப்பதாகத் தோன்றியது. செம்பு, இரும்பு, வெள்ளிக் கலங்கள். உள்ளே மலரிதழ் விரித்து எரியும் அந்த சுவாலையை அவளும் ஒருகாலத்தில் அறிந்திருந்தாள். ஒவ்வொரு கணமும் இனிக்கும் அந்தத் தருணம் பிறகெப்போதும் வாழ்வில் திரும்பியதேயில்லை.
மூவர் முகங்களிலும் அப்சரஸ்களின் ஓவியங்களின் கனவுச்சாயை இருந்தது. அம்பிகையும் அம்பாலிகையும் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிக்கொண்டு மெல்லிய குரலில் காதுகளின் குழைகள் ஆட, மார்பக நகைகள் நெளிய, தலையை ஆட்டி பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் அம்பையின் உடலில் காற்று அசைக்கும் செம்பட்டுத் திரை போல நாணம் நெளிந்துசென்றது. கண்களில் சிரிப்பு மின்னிமின்னி அணைந்துகொண்டிருந்தது. அவர்கள் பேசிக்கொள்ளும் அத்தனை சொற்களுக்கும் ஒரே பொருள்தான் என புராவதி அறிவாள். பிறந்த கன்று துள்ளிக்குதிப்பதன் பொருள்.
அம்பை மட்டும் அங்கிருந்தாலும் எங்கோ மிதந்துகொண்டிருந்தாள். நீண்டு சரிந்த விழிகளுடன் கைவிரல்களால் ஆடையைச் சுருட்டியபடி நீரோட்டத்தில் குவிந்து ஓடும் மலர்வரிசைபோலச்சென்று பல்லக்கில் ஏறிக்கொண்டாள். திரையை மூடிவிட்டு மான்தோல் இருக்கைமீது சாய்ந்துகொண்ட அரசியின் முகத்தைப்பார்த்து அணுக்கத்தோழி புன்னகைத்து “மூன்றுநாட்களாக அவர்கள் தூங்கவேயில்லை. ஆனால் இன்று பிறந்து வந்தவர்கள் போலிருக்கிறார்கள்” என்றாள். “ஆம், அது அப்படித்தான்” என்றாள் புராவதி.
அணுக்கத்தோழி பிரதமை குரலைத்தழைத்து “நேற்றுமாலை சால்வமன்னர் தன் படகு வரிசையுடன் வந்து சியமந்தவனத்தில் குடியேறினார்” என்றாள். அரசியின் முகக்குறியை கவனித்துவிட்டு “மங்கலப்பொருட்களை அளிக்கும் பாவனையில் நானே அவரது குடிலைத்தேடிச்சென்றேன். அங்கிருந்தே வண்ணமிடப்பட்ட மரப்பட்டைகளையும் சிற்பிகளையும் கொண்டுவந்து கங்கைக்கரையில் ஓர் அரண்மனையையே அமைத்திருக்கிறார். அதைச்சுற்றி குடில்களாலான ஒரு சிற்றூரே உருவானது போலிருக்கிறது. அவருடன் சூதர்களும் கணிகையரும் சமையற்காரர்களும் படைவீரர்களுமாக ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். நான் செல்லும்போது மல்லர்களின் போர் ஒருபுறம் நடந்துகொண்டிருந்தது. இனிய சமையற்புகை மரக்கிளைமேல் தங்கியிருந்தது. சிற்பிகள் நீர்மேல் கட்டியெழுப்பிய ஊஞ்சல்மண்டபத்தில் சால்வர் அமர்ந்து யாழிசை கேட்டுக்கொண்டிருந்தார்” என்றாள்.
“பார்ப்பதற்கு இனியவர்” என்று பிரதமை தொடர்ந்தாள். “சால்வர் ஆளும் சௌபநகரம் கங்கைக்கரையில் இன்றிருக்கும் நாடுகளில் வலிமையானது. பத்தாயிரம் தூண்களை கங்கைமேல் நாட்டி அதன் மேல் கட்டப்பட்ட மாபெரும் துறைமுகம் அங்குள்ளது என்கிறார்கள். அதை உருவாக்கிய விருஷபர்வ மன்னர் போரில் இறந்தபின் அவரது தம்பியாகிய இவர் பட்டத்துக்கு வந்திருக்கிறார். பிற ஷத்ரியமன்னர்களிடமெல்லாம் நல்லுறவு கொண்டவர். சேதிநாட்டரசர் தமகோஷன் அவரது நெருங்கியநண்பர் என்கிறார்கள். அங்கம், வங்கம், கலிங்கம், மாளவம், மாகதம், கேகயம், கோசலம், கொங்கணம், சோழம், பாண்டியம் என்னும் பத்து நாட்டுமன்னர்களும் அவருடன் கைகோர்த்திருக்கிறார்கள். காசியுடன் உறவை உருவாக்கிக் கொண்டபின்பு அஸ்தினபுரியை கைப்பற்றவேண்டுமென்று எண்ணியிருக்கிறார்கள்.”
“அவர்களுக்கு எப்போதும் அந்தக்கணக்குகள்தான்” என்றாள் புராவதி. “அவர்களுக்கு காசியின் உதவியின்றி அஸ்தினபுரிமேல் படைகொண்டு செல்லமுடியாது. நம்மிடமிருக்கும் படகுகள் பாரதவர்ஷத்தில் எவரிடமும் இல்லை” பிரதமை “ஆம் அரசியே, முற்றிலும் உண்மை” என்றபின் “சால்வர் சுயம்வரத்துக்கு முன்னரே இந்த இலக்கை நோக்கி நகரத்தொடங்கிவிட்டார். சால்வநாட்டிலிருந்து பொன்னும்பொருளும் பெற்ற விறலியர் நம் அரண்மனைக்கு வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். அவர்கள் சால்வரின் பெருமையை பாடிப்பாடி மூத்த இளவரசியின் மனதுக்குள் ஏற்றிவிட்டிருக்கிறார்கள். பட்டுத்திரைச்சீலையில் வரையப்பட்ட ஓர் ஒவியம்கூட நம் இளவரசியிடம் அளிக்கப்பட்டிருக்கிறது” என்றாள்.
“ஆம், நந்தகி அதை என்னிடம் சொன்னாள்” என்றாள் புராவதி. “அவள் சொல்லும்போது அனைத்தும் என் கைகளை விட்டுச்சென்றுவிட்டது. கன்னியின் மனம் எரியக்காத்திருக்கும் காடுபோன்றது. ஒரு மூங்கில் உரசினாலே போதும் என்று என் அன்னை சொல்வதுண்டு”
பிரதமை “நேற்று இங்கே வந்திறங்கியதும் சால்வர் ஒரு தாழைமடலை விறலியிடம் கொடுத்தனுப்பியிருக்கிறார்” என்றாள். புராவதி “என்ன எழுதப்பட்டிருந்தது?” என்றாள். தோழி “ஏதும் எழுதப்படவில்லை. வெறும் தாழைமடல். அதைத்தான் இளவரசி அம்பாதேவி தன் ஆடைக்குள் இப்போது வைத்திருக்கிறாள். அதை அவ்வப்போது எடுத்து முகர்ந்துகொள்கிறாள். மற்ற இளவரசியர் அதைத்தான் சொல்லி சிரித்துக்கொள்கிறார்கள்” என்றாள்.
கல்லாலான அடித்தளம் மீது மரத்தால் எழுப்பப்பட்ட ஏழடுக்கு கோபுரம் கொண்ட விஸ்வநாதனின் பேராலயத்தின் வாசலில் அவர்களுக்காக வாத்தியக்குழு நின்றிருந்தது. அவர்களின் வரவை கட்டியங்காரன் அறிவித்து வெண்சங்கை ஊதியபோது மங்கல இசை எழுந்தது. வைதிகர்கள் மஞ்சளரிசி தூவியும் துறவியர் மலர்தூவியும் அவர்களை வாழ்த்தினர். ஆலயவளைவு முழுக்க தளிர்களாலும் மலர்களாலும் ஆன தோரணங்களால் அணிசெய்யப்பட்டிருந்தது. சித்திரத்தூண்களிலெல்லாம் அணித்திரைகள் தொங்கி அசைந்தன. தூபப்புகைமீது மணியோசை படர்ந்து அதிர்ந்தது.
அவர்கள் உள்ளே சென்றதும் ஆலயத்திலிருந்த ஆண்களெல்லாம் வெளியே அனுப்பப்பட்டனர். விஸ்வநாதனை வணங்கியபின் அரசியும் இளவரசியரும் விசாலாட்சியின் சன்னிதியில் இருந்த அணிமண்டபத்தில் அமர்ந்ததும் பூசகர்களும் வெளியேறினர். முதிய பூசகிகள் மூவர் ஆலயக்கருவறைக்குள் சென்று வழிபாடுகளைத் தொடர்ந்தனர். அகல்விழியன்னையின் ஆடைகள் அகற்றப்பட்டு புதிய செம்பட்டாடை அணிவிக்கப்பட்டு செவ்வரளி மாலைகள் சார்த்தப்பட்டன. அவர்கள் புதுமலர் அணிந்த அன்னையை வணங்கினர்.
மூன்று கன்னியரும் தங்கள் கன்னிமை நிறைவுப்பூசையைச் செய்யும் நாள் அது. கஜன் வணங்கிய மங்கல சண்டிகை கோயில் முன்னால் நின்று ஆடைகளையும் அணிகளையும் மலர்களையும் களைந்தனர். கைகளிலும் இடையிலும் கால்களிலும் கழுத்திலும் அணிந்திருந்த ஏழு கன்னித்தாலிகளையும் கழற்றி அன்னையின் பாதங்களில் வைத்தனர். பிறந்தகோலத்தில் நின்று அன்னையை வணங்கியபின் புத்தாடை அணிந்து அன்னையின் மலர்களை கூந்தலில் சூடி அவளுடைய குங்குமத்தை நெற்றியிலணிந்துகொண்டனர். முதுபூசகி அவர்களிடம் அன்னையின் வெண்சங்கு வளையல்களைக் கொடுக்க மூவரும் அவற்றை அணிந்துகொண்டார்கள்.
முதுபூசகி “கன்னியரே உங்களை இதுவரை காத்துவந்த தேவர்கள் அனைவரும் இங்கே தங்களுக்கான பலிகளை வாங்கிக்கொண்டு விடைபெறுகிறார்கள். இனிமேல் உங்கள் கற்பே உங்களுக்குக் காவலாக ஆகும். இன்றுவரை காசியின் பெருங்குலத்தின் உறுப்பினராக இருந்த நீங்கள் கனிகள் மரங்களிலிருந்து உதிர்வது போல விலகிச்செல்கிறீர்கள். உங்கள் உடலில் மலர்களை விரியவைத்த தேவதைகள் அனைவருக்கும் நன்றி சொல்லுங்கள். உங்கள் நெஞ்சில் கனவுகளை நிரப்பிய தேவதைகளை வணங்குங்கள். உங்கள் கண்களுக்கு அவர்கள் காட்டிய வசந்தம் நிறைந்த பூவுலகுக்காக அவர்களை வாழ்த்துங்கள். அன்னையின் ஆசியுடன் சென்றுவாருங்கள்” என்று வாழ்த்தி அவர்களின் நெற்றியில் மஞ்சள்பூசி ஆசியளித்தார்.
முகம் மலர்ந்து நின்றிருந்த மூன்று கன்னியரும் அந்தச்சொற்களைக் கேட்டதும் இருண்டு கண்ணீர் மல்கியதை புராவதி கண்டாள். இருபதாண்டுகளுக்கு முன்பு அவளும் அக்கணத்தில்தான் சென்றுமறைந்தது என்ன என்பதை அறிந்தாள். மீண்டுவராத ஒரு வசந்தம். ஆனால் அந்த வசந்தகாலத்தின் ஒவ்வொரு கணத்திலும் அதைத் தாண்டுவதைப்பற்றிய துடிப்பே நிறைந்திருந்தது. அந்த வேகமே அதை வசந்தமாக ஆக்கியது. அந்த எல்லையைத் தாண்டிய கணம்தான் அது எத்தனை அபூர்வமானது என்று புரிந்தது. அந்த ஏக்கம் வசந்தத்தை மகத்தானதாக ஆக்கியது. ஏக்கங்களுக்கு நிகராக இனியவை என மண்ணில் ஏதுமில்லை என பின்னர் அறிந்து முதிர்வதே வாழ்க்கை என்றாகியிருக்கிறது என அப்போது உணர்ந்துகொண்டாள்.
அன்னையின் ஆலயத்தின் இடதுபுறம் சித்தயோகினியான நாகதேவியின் சிற்றாலயம் இருந்தது. சிவந்தகற்களாலான இடை உயர கட்டிடத்திற்கு முன் இளவரசியர் மூவரும் வந்ததும் உள்ளிருந்து ஓலையாலான நாகபட முடியணிந்தவளும் தொங்கியாடும் வறுமுலைகொண்டவளுமான முதுநாகினி வெளியே வந்து அரசியிடம் வெளியே செல்லும்படி சொன்னாள். மூன்று இளவரசியரைத்தவிர அங்கே எவருமிருக்கவில்லை. கனகலம் என்னும் கங்காத்வாரத்தில் இருக்கும் நாகச்சுனையில் இருந்து கொண்டுவந்த புனிதநீர் வைத்த குடத்திலிருந்து மூன்று முறை நீரள்ளிவிட்டு கன்னியரை அரசியராக அபிஷேகம் செய்யும் அச்சடங்குக்கு அவளும் ஆளானதுண்டு. பாரதவர்ஷத்தின் அத்தனை பெண்களும் நாகர்குலத்தவரே என்பது நூல்நெறிக்குள் எழுதப்படாத ஆசாரநம்பிக்கையாக இருந்தது. அவர்களனைவருக்கும் புனிதத் தலம் கங்காத்வாரத்தின் தாட்சாயணிகுண்டம்.
மூன்று கன்னியரும் அச்சத்தால் வெளுத்த முகமும் நடுங்கும் உதடுகளுமாக குளிர்ந்த கரங்களை மூடி தொழுதுகொண்டு வெளியே வருவதை அரசி கண்டாள். மூவரில் மூத்தவளின் கைகளில் மட்டும் ஒரு செவ்விதழ்த்தாமரை இருந்தது. அதை அரசி பார்ப்பதை அறிந்த சேடி கன்னியரை நெருங்கி இளையவளிடம் சில சொற்கள் பேசிவிட்டு வந்து நடந்ததைச் சொன்னாள். முதுநாகினி அம்பையை மட்டும் உள்ளே அழைத்து தன்னருகே அமரச்செய்து அவள் காதுகளில் எதையோ சொல்லி அந்த மலரை அளித்தாள் என்றாள்.
கண்ணீர் கனத்த முகத்துடன் மூன்று கன்னியரும் மீண்டும் பல்லக்குகளில் ஏறிக்கொண்டார்கள். ஒரு சொல்கூட அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தன்னுடைய பல்லக்கில் ஏறியதும் புராவதி “அஸ்தினபுரியிலிருந்து ஏதேனும் சேதி வந்ததா?” என்று பிரதமையிடம் கேட்டாள். “இப்போதுகூட விசாரித்தேன் அரசியே. அங்கே எந்த அசைவும் இல்லை. விசித்திரவீரியர் இப்போதும் மருத்துவர் குடிலில்தான் இருக்கிறார்” என்றாள். “மந்தையில் பின்னால் செல்லும் நோயுற்ற மிருகம் சிம்மங்களுக்கு உணவாகும். அதுவே அரச நெறியாகவும் உள்ளது” என்றாள் புராவதி.
அரண்மனை வாசலில் ஃபால்குனர் வந்து பரபரப்புடன் நின்றிருந்தார். “வணங்குகிறேன் அரசி. இன்னும் அதிகநேரமில்லை. அரைநாழிகையில் பெருமுரசு முழங்க ஆரம்பித்துவிடும்.அரசர்கள் சுயம்வரப்பந்தலுக்கு அணிவகுத்து வருவார்கள். இளவரசியரை விரைவாக அலங்கரித்து சபைக்கு அழைத்து வாருங்கள்” என்றார்.
“சற்றுத்தாமதமானாலும்தான் என்ன அமாத்யரே? இந்த நாளில் அவர்கள் அணிசெய்வதைப்போல இனி எப்போது நிகழப்போகிறது?” என்றாள் பிரதமை. “அணிசெய்வதை வேகமாகச் செய்யலாமே” என்றார் ஃபால்குனர். “எக்காலத்திலும் அதை ஆண்களுக்கு புரியவைக்க முடியாது” என்றாள் பிரதமை.
தன் அணியறைக்குள் சென்று பிரதமையின் உதவியுடன் புராவதி அரச உடைகளை அணிந்துகொண்டாள். பொன்னூலும் வெள்ளிநூலும் கோர்த்துப்பின்னிய அணிவேலைகள் கொண்ட புடவையைச்சுற்றி, அதன்மீது மெல்லிய கலிங்கப்பட்டாலான மேலாடையை அணிந்து, நவமணிகள் மின்னும் நகைகளை ஒவ்வொன்றாக அணிந்துகொண்டிருக்கையில் அவள் ஆடியில் தன்னைப்பார்த்துக்கொண்டே இருந்தாள். இருபதாண்டுகளுக்கு முன்பு காசியின் அரசியாக முடியணிந்த நாளில் அவற்றை அணிந்துகொண்ட தருணத்தின் மனக்கிளர்ச்சியை எப்போதுமே பெருவியப்புடன்தான் அவள் எண்ணிக்கொள்வாள். இத்தனை வருடங்களுக்குப்பின் அந்த மின்னும் ஆடையணிகளுக்குள் நுழையும்போது குருதிநுனிகள் மின்னும் கூரிய ஆயுதக்குவியலொன்றுக்குள் விழுவதுபோலவே உணர்ந்தாள்.
அவள் அணிகளை அணிந்துமுடிக்கும் தறுவாயில் வெளியே சுயம்வரப்பந்தல் முகப்பில் பெருமுரசம் ஒலிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து கோட்டைமுகப்பிலும் முரசங்கள் ஒலித்தன. காசிநகரமே ஒரு பெரிய முரசுப்பரப்பு போல முழங்கி அதிரத்தொடங்கியது. மணிமுடி சூடியவளாக அவள் வெளியே வந்தாள். தலைச்சேடி சுதமை அங்கே அரசிக்கான மங்கலப்பொருட்களான மயிற்பீலியும் மச்சமுத்திரையும் சிறுசங்கும் தாரைநீரும் கொண்ட தாம்பாளத்துடன் நின்றிருந்தாள். தாம்பூலத்துடன் நின்றிருந்த அணுக்கச்சேடி பிரதமையிடம் “இளவரசிகளை அவைக்கு வரச்சொல்” என்று சொன்னபிறகு புராவதி சுயம்வரமண்டபம் நோக்கிச் சென்றாள்.
அமைச்சர் ஃபால்குனர் அவளை எதிர்கொண்டு வரவேற்று சுயம்வரமண்டபத்துக்குள் இட்டுச்சென்றார். பந்தலின் அணியறைக்குள் நின்றபடி அவள் வெளியே விரிந்த பெருமண்டபத்தைப் பார்த்தாள். அங்கே பொதுச்சபையில் மழைக்காலநீர் மடைகள் வழியாக ஏரியில் திரள்வதுபோல மக்கள் உள்ளே வந்து நிறைந்துகொண்டிருந்தனர். வெளியே பலவகையான பல்லக்குகளில் விருந்தினர் வந்து இறங்கிக்கொண்டே இருந்தனர். பட்டுத்துணியாலான தொங்கும் மஞ்சல்களில் வைதிகர்களும், வளைந்து மேலே எழுந்த அணிப்பல்லக்கில் அரசகுலத்தவரும், மூங்கில் பல்லக்கில் வணிகர்களும் வந்தனர். முனிவர்களும் வைதிகர்களும் அரச இலச்சினைகொண்ட தலைக்கோல் ஏந்திய அதிகாரிகளால் எதிர்கொண்டழைக்கப்பட்டு அவர்களுக்கான இருக்கைகளில் அமரச்செய்யப்பட்டனர். அப்பால் காசியின் அத்தனை ஊர்களிலும் இருந்து வந்த சான்றோர்களும் வீரர்களும் அணியணியாக அமர்ந்துகொண்டிருந்தனர். வலதுபக்கமாக வைதிகர் பூர்ணகும்பங்களுடன் காத்திருக்க இடப்பக்கம் மங்கல வாத்தியங்களுடன் சூதர்கள் காத்திருந்தனர்.
பந்தலுக்கு வெளியே முற்றத்தில் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் ஏந்திய படைமங்கல அணி நின்றிருந்தது. ஒவ்வொரு மன்னரும் உள்ளே வரும்போது அவர்களுக்குரிய இசை வாசிக்கப்பட்டது. முதலில் உள்ளே வரும் கோல்காரன் பொற்கோலை தலைக்குமேல் உயர்த்தி அதன் இலச்சினையை அவையோருக்குக் காட்டி அந்த அரசனின் பெயரை அறிவித்தான். சூதர்கள் மங்கல ஒலியெழுப்ப வேதியர் கங்கைநீர் தெளித்து வேதமோத அந்த மன்னன் உள்ளே வந்து அமைச்சர்களால் எதிர்கொண்டழைக்கப்பட்டு அவனுக்குரிய இருக்கைக்கு கொண்டுசென்று அமர்த்தப்பட்டான். ஒவ்வொருவருக்குப் பின்னும் வலப்பக்கம் அவர்களது அமைச்சர்களும் இடப்பக்கம் அணுக்கச்சேவகர்களும் நின்றனர். ஒவ்வொரு மன்னனாக வந்தபோது அவை அவர்களைப்பற்றி பேசிக்கொண்ட ஒலி பந்தலின் குவைவடிவ முகடில் எதிரொலி செய்தது.
பொன்னிற நூல்வேலைப்பாடுள்ள தலைப்பாகையும் பொற்குண்டலங்களும் அணிந்து மச்சமுத்திரைக்குறியை நெற்றியிலிட்ட வயோதிகரான நிமித்திகர் பொன்னாலான தலைக்கோலுடன் சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்து பீடத்திலேறி நின்றார். அவரைக்கண்டதும் அவையில் மெல்ல அமைதிபரவியது. தலைக்கோலை அவர் மேலே தூக்கியதும் அவருடைய மூச்சொலிகூட கேட்பதாக அவை அமைந்தது. நிமித்திகர் உரத்த குரலில் மரபான பண்டைய மொழியில் கூவினார், “கங்கையின் கையில் இருக்கும் மணிமுத்து இந்த காசிநாடு. விஸ்வநாதனும் காலபைரவனும் ஆளும் புனிதமான நிலம் இது. காசிமகாநாட்டின் அதிபராகிய மாமன்னர் பீமதேவர் இதோ எழுந்தருளுகிறார்.”
வீரர்கள் “வாழ்க! வாழ்க!” என்று குரல் எழுப்பினர். பீமதேவனுடன் இணைந்து புராவதி சுயம்வரப்பந்தலுக்குள் நுழைந்தாள். அந்தச்சடங்கை எப்போதும் ஒரு நாடகம் என்றே அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனால் அதிகாரம் எப்போதுமே நாடகங்கள் அடையாளங்கள் வழியாகத்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்களை வாழ்த்தி புரோகிதர்கள் மலர்களும் மஞ்சளரிசியும் தூவ, சூதரின் மங்கல இசை முழங்கியது. பீமதேவன் வணங்கியபடியே சென்று தன் சிம்மாசனத்தில் அமந்தார். சேடியரால் அழைத்துச்செல்லப்பட்ட புராவதி அரியணையில் அணிக்கோலத்தில் அமர்ந்திருந்த காசிமன்னருக்கு இடப்பக்கம் வாமபீடத்தில் அமர்ந்தாள். பீமதேவனின் வலப்பக்கம் ஃபால்குனர் நிற்க இடப்பக்கம் அணுக்கச்சேவகன் பாவகன் நின்றான்.
முதல் கார்மிகர் ரிஷபர் தலைமையில் வைதிகர்கள் அவைமீது கங்கைநீரைத்தெளித்து ஆசியளித்தபின் பூரணகும்பத்துடன் வேதகோஷம் எழுப்பியபடி அரியணையை அணுகி மன்னன் மேல் கங்கை நீரை தெளித்தனர். காசிவிஸ்வநாதனின் விபூதியையும் மலரையும் கொடுத்து ஆசியளித்தனர். அதன்பின் காசிநாட்டின் பெருங்குடிகளின் தலைவரான பிருஹதத்தன் என்ற முதியவர் எழுந்து வந்து பொன்னாலான மீனையும் படகையும் மலர்களுடன் வைத்து மன்னனிடம் அளித்தார். அப்போது சபையில் நிறைந்திருந்த அத்தனை குடிமக்களும் மன்னனை வாழ்த்தி பெருங்குரலெழுப்பினர்.
நிமித்திகர் உரத்தகுரலில் ”விஷ்ணுவிலிருந்து பிரம்மன் பிறந்தான். பிரம்மனிலிருந்து அத்ரி முனிவர் பிறந்தார். அத்ரியிலிருந்து சந்திரனும் சந்திரனிலிருந்து புதனும் புதனிலிருந்து புரூரவஸும் பிறந்தனர். ஆயுஷ், ஆனேனஸ், பிரதிக்ஷத்ரன், சிருஞ்சயன், ஜயன், விஜயன், கிருதி, ஹரியஸ்வன், சகதேவன், நதீனன், ஜயசேனன், சம்கிருதி, ஷத்ரதர்மன், சுஹோத்ரன், சலன், ஆர்ஷ்டிசேனன் என்னும் பெருமைமிக்க அரசர் வரிசையில் பிறந்த மாமன்னன் காசனை வணங்குவோம். காசனின் மைந்தர்களின் நாடு என்ற பொருளிலேயே இந்தப் புனிதபூமி காசி என்றழைக்கப்படுகிறது. அது வாழ்க!”
வாழ்த்தொலிகளை ஏற்று தலைக்கோலை உயர்த்தியபின் நிமித்திகர் தொடர்ந்தார். “தீர்க்கதபஸ், தன்வந்திரி, கேதுமான், பீமரதன் என்னும் காசிமன்னர்களின் குலத்தில் உதித்த மாமன்னன் திவோதாசரை வணங்குவோம். அழியாப்புகழ்கொண்ட இந்த மண்ணுக்கு அவரே முதுதந்தையென்றறிக! அதிதிக்வான் என்று முனிவர் புகழும்படி விருந்தோம்பல் கொண்டிருந்தவர் அவர். கும்பகமுனிவரின் தீச்சொல்லால் காசிமண்ணில் பஞ்சம் வந்தபோது கடுந்தவம் செய்து விஸ்வநாதனை இங்கே குடியேற்றியவர் அவர். அவரது வம்சத்தில் வந்தவர் மாமன்னர் பீமதேவர். திவோதாசரிலிருந்து திவ்யாதிதி, திவ்யாதிதியில் இருந்து பிரதிசத்ரன் பிறந்தான். ஜயன், நதீனன், சலன், சுதேவன், பீமரதன், கேதுமான் எனத் தொடரும் அழியாப்பெருங்குலத்திற்கு இன்று அரசர் பீமதேவர் என்றறியட்டும் இந்த அவை!” அவை வாழ்த்தொலிகளால் நிறைந்தது. மஞ்சளரிசியும் மலரும் மன்னன் மீது பொழிந்தன.
பின்பு தன் செங்கோலைக் கையிலெடுத்துக்கொண்டு பீமதேவன் எழுந்தார். அவர் சொற்களைச் செவிகூர்ந்த அவையிடம் சொல்லலானார். “காசியின் தெய்வமான விசும்புக்கதிபனையும் அகல்விழியன்னையையும் வணங்குகிறேன். காவல்தெய்வமான கரியநாய் வடிவம்கொண்ட தேவனை வணங்குகிறேன். இங்கு எழுந்தருளியிருக்கும் தேவர்களையும் மூதாதையரையும் வணங்குகிறேன். என்னுடைய அழைப்பை ஏற்று இந்த காசிநகரத்துக்கு வந்துள்ள அனைத்து மன்னர்களையும் வணங்கி வரவேற்கிறேன்…” அவை அவ்வாழ்த்தை தானும் எதிரொலித்தது.
“இந்தக் காசிநகரம் இருபத்தேழு தலைமுறைகளாக என்னுடைய முன்னோர்களால் ஆளப்பட்டுவருகிறது. திவோதாச மன்னரின் அரியாசனத்தில் அமர்ந்து நான் பதினேழு வருடங்களாக இந்த நாட்டை ஆண்டுவருகிறேன்… மன்னர்களே, என்னுடைய மூன்று மகள்களும் மணவயதடைந்ததை ஒட்டி இங்கே வைகாசி பௌர்ணமி நாளில் இந்த சுயம்வர விழாவை ஏற்பாடு செய்திருக்கிறேன்… இந்த சுயம்வரம் பாரதவர்ஷத்தின் ஷத்ரியவம்சத்தின் பெருமையை மேலும் வளர்ப்பதாக அமையட்டும்.” “ஓம் அவ்வாறே ஆகுக!” என அவை ஆமோதித்தது.
பீமதேவன் கைகாட்டியதும் சுயம்வரம் தொடங்குவதற்கான மங்கல முரசுகளும் மணிகளும் முழங்கத் தொடங்கின. நிமித்திகர் எழுந்து சென்று கையில் ஒரு வெள்ளிக்கோலுடன் ஒரு வாசலருகே நின்றார். அங்கே மூன்று பட்டுத் திரைகள் தொங்கின. நிமித்திகர் அவற்றைச் சுட்டிக்காட்டி “பாரதவர்ஷத்தின் மாமன்னர்களே! இதோ காசிநகரின் இளவரசிகளை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். காசியை ஆளும் விஸ்வநாதனின் துணைவியும் சக்திரூபிணியுமான பார்வதியின் பெயர்களை தன் மகள்களுக்கு வைத்திருக்கிறார் நம் மாமன்னர். இளவரசிகளை இந்த அரசசபை முன்னால் குன்றா ஒளிகொண்ட அணிகளாக முன்வைக்கிறேன்.”
நிமித்திகர் சொன்னார் “முதல் இளவரசியின் பெயர் அம்பை. அனலைக் கழலாக அணிந்த கொற்றவையின் பெயர்கொண்டவர். முக்கண் முதல்வியின் ரஜோகுணம் மிக்கவர். செந்நிற ஆடைகளையும் செந்தழல் மணிகளையும் விரும்பி அணிபவர். பரணி நட்சத்திரத்தில் அம்பாதேவி பிறந்தார். வரும் ஃபால்குனமாதம் இளவரசிக்கு இருபது வயது நிறைவடைகிறது. ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர். கலைஞானமும் காவியஞானமும் கொண்டவர். சொல்லுக்கு நிகராக வில்லையும் வாளையும் கையாளப்பயின்றவர். யானைகளையும் குதிரைகளையும் ஆளத்தெரிந்தவர். பாரதவர்ஷத்தின் பெரும் சக்ரவர்த்தினியான அஸ்தினபுரியின் தேவயானிக்கு நிகரானவர். இளவரசிக்கு வணக்கம்.”
திரையை ஒரு சேடி விலக்க உள்ளே அம்பை செந்நிறமான ஆடையுடன் செந்நிறக் கற்கள் பொறிக்கப்பட்ட மணிமுடியும் ஆபரணங்களும் அணிந்து நெய்யுண்ட வேள்விச்சுடர் போல கைகூப்பி நின்றாள். அவளை முதல்முறையாக நேரில் பார்க்கும் சால்வன் மெல்லிய அச்சத்துடன் தன்னருகே அமர்ந்திருந்த தமகோஷனின் கைகளை பற்றிக்கொண்டான். தமகோஷன் “பாய்கலை ஏறிய பாவை போலிருக்கிறார்….’’ என்றான்.
அம்பையின் கண்கள் தன்னைத்தேடுவதை சால்வன் கண்டுகொண்டான். அவள் கண்களைச் சந்திக்க அஞ்சி அவன் தலையை திருப்பிக்கொள்வதை புராவதி கவனித்தாள். அவனைக் கண்டுவிட்ட அம்பை புன்னகையுடன் தலைகுனிவதையும் கண்டாள்.
நிமித்திகர் “இரண்டாவது இளவரசியின் பெயர் அம்பிகை. சித்திரை மாதத்தின் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தார். பதினெட்டு வயதாகிறது. தமோகுணவாஹினியான கங்கையின் அம்சம் கொண்ட இளவரசி ஓர் இசையரசி. எழுபத்திரண்டு ராகங்களிலும் அவற்றின் இணைராகங்களிலும் துணைராகங்களிலும் தேர்ச்சி பெற்றவர். வீணையை அவர் விரல்கள் தொட்டாலே இசைபெருகும்… இளவரசிக்கு வணக்கம்” என்றார்.
திரையை ஒரு சேடி விலக்க உள்ளே அம்பிகை நீலநிறமான ஆடையுடன் மணிமுடியும் ஆபரணங்களும் அணிந்து கைகூப்பி நின்றாள். அரங்கு முழுக்க ஆவலும் ஆர்வமும் கொண்ட ஒரு பேச்சொலி பரவுவதை புராவதி கேட்டாள்.
நிமித்திகர் “மூன்றாவது இளவரசியின் பெயர் அம்பாலிகை. ஐப்பசி மாதத்து மகநட்சத்திரத்தில் பிறந்தார். வயது பதினாறாகிறது. சத்வகுணவதியான இளவரசி ஓவியத்திலே திறமை கொண்டவர். பட்டிலும் பலகையிலும் கனவுகளை உருவாக்கிக் காட்டக்கூடியவர். இளவரசிக்கு வணக்கம்” என்றார். மூன்றாம் திரை விலகி அம்பாலிகை தோன்றினாள்.
நிமித்திகர் அவை நோக்கி “மாமன்னர்களே! இம்மூன்று இளவரசிகளும் சேர்ந்து நிற்கும்போது முப்பெரும் கலைகளும் கண்முன் வந்து நிற்பது போலிருக்கிறது. கலைமகளே மூன்று வடிவம் கொண்டு வந்து அருள்புரிகிறாள் என்று தோன்றுகிறது! மூன்று தேவியரையும் வணங்குகிறேன்” என்றார். “இங்கே இந்த சுயம்வரம் நெறிநூல்கள் சொல்லும் பிரம்மம், ஆர்ஷம், பிரஜாபத்யம், தெய்வம், காந்தர்வம், ஆசுரம், ராட்சசம், பைசாசம் என்னும் எண்வகை திருமணங்களில் ஷத்ரியர்களுக்கு உகந்த பிரஜாபத்யம் என்னும் முறையில் நிகழ்கிறது. இளவரசியர் அரங்கிலே வலம்வந்து அவர்கள் கண்ணுக்கும் கருத்துக்கும் இயைந்த மன்னர்களின் கழுத்தில் மணமாலையை அணிவிப்பார்கள். ஆன்றநெறிப்படி இளவரசியரின் முடிவே அரசமுடிவாகும்” என்றபின் வலம்புரிச்சங்கை எடுத்து மும்முறை ஊதினார்.
இளவரசியரை வாழ்த்தி அவை குரலெழுப்பியது. சேடியர் அறுவர் இளவரசிகளை நோக்கிச் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த புராவதி ஒவ்வொரு கணமும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். கங்கைக்கரையின் பெரும்படிக்கட்டுகளில் உருண்டு உருண்டு முடிவேயில்லாமல் விழுந்துகொண்டே இருப்பவள் போல உணர்ந்தாள். கங்கை மிகமிக ஆழத்தில் ஒரு நீர்க்கோடு போலத்தெரிந்தது. அவள் புலன்களெல்லாம் மங்கலடைந்து சொற்களும் காட்சிகளும் அவளை அடையாமலாயின. உயிரற்ற பாம்பு போல காலம் அவள் முன்னால் அசையாமல் கிடந்தது.
அவை திரள் கலையும் ஒலியைக் கேட்டபோது அதைத்தான் அவள் எதிர்பார்த்திருந்தாள் என்று அறிந்தாள். மெல்லிய நரைகலந்த நீண்ட தாடியும் காட்டுக்கொடியால் கட்டி முதுகுக்குப்பின்னால் போடப்பட்ட தலைமுடியும் தோளில் அம்பறாத்தூணியும் வில்லுமாக பயணத்தின் புழுதி படிந்த வெள்ளுடையுடன் பீஷ்மர் உள்ளே வருவதைக் கண்டபோது அவரைத்தான் அவள் எதிர்பார்த்திருந்தாள் என்றும் அறிந்தாள். அவளுக்கு அப்போது ஏற்பட்டது அம்புவிடுபட்ட வில்லின் நிம்மதிதான்.