காந்தி கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

வழக்கம் போல் உங்களுடைய ஆணித்தரமான வாதங்களும், ஆழமான வாசிப்பும் இந்தக் கட்டுரையிலும் புலப்பட்டது. இருப்பினும், சில நேரங்களில் ஒரு இலக்கியவாதி என்ற நிலையை மீறி ஒரு வழக்கறிஞரின் வாதங்களாகவும் தோன்றியதைத் தவிர்க்க முடியவில்லை. குறிப்பாக சில இடங்கள்:

1. காந்தியின் உண்ணாவிரதம் அவர் உயிருக்குப் பாதகமாக முடிந்தாலும் நேருவின் தலைமையிலான காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியுள்ளீர்கள். காந்தியைத் தவிர காங்கிரஸில் வேறு எவருமே ஒரு பெரும் மக்கள் சக்தியல்ல என்று நீங்களே கூறியுள்ள கருத்துக்கு இது பொருந்தவில்லை. காந்தியின் மரணத்தால் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டால், அதைத் தடுக்கும் வல்லமை நேருவுக்கு உண்டு எனக் கருதுகிறீர்களா? மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்குத் தூபம் போட்டு வளர்க்கவே செய்யும்.

2. அம்பேத்கர் ஒரு பெரும் மக்கள் சக்தியல்ல என்பதற்கு, அம்பேத்கரின் சிலைகள் எப்போது நிறுவப்பட்டன் என்று பார்க்கச் சொல்கிறீர்கள். வாழும் போதே சிலை வைப்பதற்கு அவர் ஒத்துக்கொண்டிருப்பாரா?

இது குறை சொல்லும் நோக்கமல்ல. ஆனால், ஒரு நல்ல நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரை இது போன்ற சிற்சில காரணங்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடாது என்பதே காரணம்.

நாலு பேர் கொண்ட ஒரு Team-ஐ சமாளிப்பதற்கே தாவு தீர்ந்து விடுகிறது. நாப்பது கோடி பேர் கொண்ட ஒரு நாட்டை அவ்வளவு திறமையாக காந்தி கையாண்டது ஒரு அமானுஷ்யமான காரியம் தான். இந்தியாவின் ஆன்மீகத் தளம் வலுவிழக்காத வரை காந்தி போன்ற தலைவர்கள் நம்முள் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள். அது கடவுள் இந்தியாவிற்கு அளித்த கொடை.

நன்றி
ரத்தன்

 

அன்புள்ள ரத்தன்

உங்கள் கடிதம் நின்று பேசும் தளம் என்பது அவநம்பிக்கைக்கும் நம்பிக்கைக்கும் நடுவே ஒரு பலவீனமான பாலம்

1. அம்பேதகார் சிலை வைக்கச்சொல்லவேண்டுமென நான் சொல்லவில்லை. அம்பேத்கார் அவரது வாழ்நாளுக்குப் பின்னர், இட ஒதுக்கீடு முதலிய சலுகைகள் மூலம் முதல்தலைமுறை படித்த தலித்துக்கள் உருவான பிறகே இந்திய அளவில் தலைவராக கருதப்பட்டார். அவரது சிலைகள் எல்லாம் ஒரே கால அளவில் வைக்கப்பட்டவை என்பதே அதற்குச் சான்று. வரிகளுக்கு அடியில் வாசிப்பதை கவனித்திருக்கிறேன். இது தாளுக்கு அடியில் உள்ள வாசிப்பு அல்லவா?

2. நேரு வன்முறையை கட்டுப்படுத்திய்ருப்பாரா? ஒன்று காந்தி இருந்தவரை அவர்தான் தலைவர், வேறு எவரும் அல்ல. ஆனால் கந்திக்குப் பின் நேருவுக்கு வந்த அபாரமான தலைமை அங்கீகாரம் வரலாறு அறிந்தது

நேருவின் மிக மிகக் கடுமையான எதிரிகள் கூட அங்கீகரித்த ஒரு விஷயம் உண்டு. அவர் உறுதியான முழுமுற்றான ஜனநாயகவாதி. அகிம்சைவாதி. இந்தியப்பிரிவினைக்குப் பின், காந்தி கொலைக்குப்பின் உருவான மத இன கொந்தளிப்புகளை அவர் தன் ஜனநாயக நிலையை வழுவவிடாமல்தான் எதிர்கொண்டார். பாகிஸ்தான் அளித்த கசப்பூட்டல்களும் தூண்டுதல்களும் சாதாரணமானவை அல்ல. பாகீஸ்தானின் இந்துக்கள் கூட்டக்கொலை செய்யப்படுவதை சுட்டிக்காட்டி இங்கே உள்ள இந்து தேசியவாதிகள் உருவாக்கிஅய் எதிர்ப்பை மீறி இந்த நாட்டை அவர் ஒரு மதச்சர்பற்ற நாடாக நிலைநாட்டினார். இங்கே வன்முறை நிகழாமல் தடுத்து நிறுத்தவும் செய்தார். மீண்டும் மீண்டும் அவர் வரலாற்றை எதிர்கொண்ட விதத்தில் உள்ள நேர்மை, மதசார்பற்ற நோக்கு, ஜனநாயகம் ஆகியவை அவரது மறுதரப்பாலேயே பிரமிப்புடன் பதிவுசெய்யபப்ட்டுள்ளன
ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

காந்தியும் தலித் அரசியலும் கட்டுரைகளை புத்தகமாக வெளியிடுங்கள்! இவை
மீண்டும் மீண்டும் படிக்க வேண்டியவை. காந்தி என்ற மகத்தான தலைவரை பற்றி
என்னும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கிறது. ”தீண்டப்படாதார் என்ற தனி வகுப்பாக பிரிப்பதை நான் விரும்பவில்லை. சீக்கியர் சீக்கியராக நிரந்தரமாக இருக்கலாம். அப்படி முஸ்லீம்களும்கிறித்தவர்களும் இருக்கலாம். தீண்டப்படாதோரும் அப்படியே தீண்டபப்டாதாராக க்காலமும் நீடித்திருக்க வேண்டுமா என்ன? தீண்டாமை அப்படி நிரந்தரமாகஇருக்கும் என்றால் இந்துமரபே அழியட்டும் என்றே நான் சொல்வேன்” என்று
வட்டமேஜை மாநாட்டுக்கான உபகுழுவில் காந்தி பேசினார்.”

ரத்தத்தில் ஊறி இருக்கும் ஹிந்து மரபே அழியட்டும் என்று சொன்னாரா! இவரல்லவோ மனிதர்! மகாத்மா என்று அழைக்க எல்லா தகுதியும் உள்ளவர்
இவர்தான்!

அன்புடன்
ஆர்வி

 

 

அன்புள்ள ஆர்வி,

காந்தி குறித்த கட்டுரைகள் தமிழினி வெளியீடாக நூல் வடிவில் வெளிவரவுள்ளன. உலகில் எங்கும் குற்றவாளியிடம் ஒரு வார்த்தை கேட்பார்கள், அவனுக்கு என்ன சொல்ல இருக்கிறது என்று. காந்தியை கழுவிலேற்ற வருபவர்கள் அவரிடம் அதை மட்டும் கேட்பதில்லை

ஜெ

 

 

ஐயா,
தங்களின் “காந்தியும் தலித் அரசியலும்” கட்டுரையை படித்து கொண்டு வருகிறேன்.
மிகவும் அற்புதமான தொகுப்பாக இந்த கட்டுரை அமைந்து கொண்டு வருகிறது. எந்தவொரு ஆழமும்,புரிதலும் இல்லாமல் வோட்டுக்காக செய்யப்படும் பிரசாரத்தை மிக சரியாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள். காந்தியை எதிரியாக சித்தரிக்கும் மன போக்கினால் இந்தியாவின் அற உணர்வு குறைந்து கொண்டு வருகிறது என்று என்ன தோன்றுகிறது.
தங்களின் பணிக்கு எனது வாழ்த்துகள்.

அன்புடன்
ராமகிருஷ்ணன்

 

அன்புள்ள ராமகிருஷ்ணன்

உண்மை. காந்தியின் மீதான மதிப்பு குறைவதற்குக் காரணம் நமக்கு உள்ளூர நன்மையின் வெற்றியில் நம்பிக்கை இலலமல் போவதே. காந்தியின் மீதான நம்பிக்கை குறைவதனால் நன்மையின் வெற்றியில்நம்பிக்கை அளிக்கும் முன்னோடிகளும் இல்லாமல் போகிறார்கள்

ஜெ

 

 

அன்புள்ள ஜெ,

இதற்குப்பிறகு யாரும் வாயைத்திறந்து பேசக்கூடாது என்று ஒரு போர்டு போட்டுவிடலாம் போல இருக்கிறதே? குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்கக் கொளல் என்று சொல்லியிருக்கிறார்கள் தானே? காந்தி நல்லவர்தான் போல இருக்கிறது.
ஜெ-வின் எழுத்துக்களில் நுண்ணரசியல் மறைந்து இருக்கிறது என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். இனிமேல் ஒரு பயல் அப்படி சொல்லமுடியாது. இதைவிட நேரிடையாகவும், அப்பட்டமாகவும் அரசியல் குறித்து நீங்கள் கருத்துக்கூறி நான் பார்த்ததில்லை.
காந்தி குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகளை கவனமாக படித்துவருகிறேன். மிக நேர்த்தியாகவும், நேர்மையாகவும், நேரடியாகவும் எழுதப்பட்டுள்ளது. காந்தி குறித்து நான் உருவாக்கி வைத்திருந்த பல கருத்துக்களை முற்றிலும் மாற்றிக்கொள்ள நேர்ந்தது. நல்லதுதானே? உண்மைகளை ஒப்புக்கொள்ளவும் ஒரு தைரியம் தேவை, அவர்களது கற்பிக்கப்பட்ட, உருவக கருத்தை எத்தனை பேர் மாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

ஒருவிஷயம், முன்பே கேட்டதுதான். எனக்கு காந்தி என்றவுடனே அது ஒரு சுய துன்புறுத்தல் வடிவம் தோன்றுகிறது. அவரது கலாசாரம் என்று நீங்கள் சொன்னது ஒரு வைணவ-சமண மரபு என்று சொன்னது மிகச்சரியாகவே தோன்றுகிறது. ஏனெனில் சமண மரபில் சில பழக்கங்கள் ஒரு சராசரி இந்துவின் பார்வையில் சுயதுன்புறுத்தலாகவே தோன்றுகிறது. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இந்து மரபிலும் அப்படிப்பட்ட பல விஷயங்கள் இருக்கும்போதும். மேலும் காந்தியின் அஹிம்சையின் பின்னால், அவருக்கு ஏதும் நேர்ந்தால் (சுதந்திரத்துக்கு முன்), வெடிக்கக் காத்திருந்த பெரும் வன்முறையே, அவரது அஹிம்சை போராட்டத்தின் வெற்றி என்று நினைக்கிறேன். எனக்கே இது தவறு என்று தெரிகிறது ஆனால் எப்படி என்று புரியவில்லை. விளக்கினால் நன்றி.

சில நாட்களுக்கு முன் யாரோ எழுதியிருந்தார்கள் உங்களுக்கு குஜராத்திலிருந்து எம்.பி. பதவி கிடைக்கப்போகிறது என்று. நிச்சயம், ஒரு குஜராத்தி கூட காந்தியை குறித்து இவ்வளவு ஆழமாகவும் பொறுமையாகவும், விவேகமாகவும், ஆர்வத்துடன், சரித்திரப்பின்னனியுடன், நடுநிலையோடு, நன்மை நாடும் மனநிலையில் விளக்க முடியாது. இதற்கே நீங்கள் குஜராத்திலிருந்து எம்.பி ஆகிவிடலாம். அவர் பெரிய தீர்க தரிசிதான் போலும். எல்லாம் கடவுளின் மகிமை.

-ராம்

அன்புள்ள ராம்,

இந்த சுய துன்புறுத்துதல் போன்ற சொற்களுக்கெல்லாம் பெரிய பொருள் இல்லை. நண்பர் ஒருவர் சொன்னால் காந்தியை விட ஸ்டாலின் தான் அதிகமான சுய துன்புறுத்துதலைச் செய்தவர் என்று. சொந்த மனைவியையும் நண்பர்களையும் எல்லாம் கொன்ற அவர் எவ்வளவு மனக்கஷ்டத்தை அனுபவித்திருபபர்?

விரதம் என்பது சுய துன்புறுத்துதல் அல்ல. அதன் மூலம் ஒருவனின் அந்தரங்கம் தூய்மைபப்டுவதனால் அந்த துயரம் என்பது ஒருவகையில் இன்பமே. கதார்ஸிஸ் என்று கலை குறித்த விவாதத்தில் அரிஸ்டாடில் சொல்கிறார். சோதனைகள் மூலம் பண்படுதல் என்பது சமணம் முன் வைத்ததே. அது பின் பௌத்த மதம் மூலம் பக்தி இயக்கம் வரை வந்தது

சி எஃப் ஆன்ட்ரூஸுக்கு எழுதிய கடிதத்தில் என நினைக்கிறேன் காந்தி சொல்கிறார் ‘உண்மையான கிறித்தவன் துன்பம் மூலமே பிரார்த்தனை செய்ய முடியும்’ என
ஜெ

முந்தைய கட்டுரைஆஸ்துமா, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தியும் தலித் அரசியலும் – 7