நம்மாழ்வார், அஞ்சலி

1998ல் கோவையில் ஒரு விழாவில் நான் இயற்கைவேளாண் அறிஞர் நம்மாழ்வாரைச் சந்தித்தேன். எஸ்.என்.நாகராஜனும் ஞானியும் பங்கெடுத்த நிகழ்ச்சி அது. இயற்கைவேளாண்மை பற்றிப் பேசிக்கொண்டிருந்த நம்மாழ்வார் என்னிடம் “உங்களூரில் வாழை விவசாயம் இன்று ரசாயனமயமாகிவருகிறது. நீரை அதிகமாகத் தேக்கும் தாவரங்கள் ரசாயனத்தையும் அதிகளவில் உறிஞ்சி நமக்கு அளிக்கின்றன. ரசாயனநெல்லைவிடவும் அபாயகரமானது ரசாயன வாழை’ என்றார்

நான் ‘ஆமாம், வாழைக்கு பூச்சிமருந்து அடிக்கவேண்டும் என்பதையெல்லாம் வாழைகள் நடுவே பிறந்து வளர்ந்த நான் கேள்விப்பட்டதேயில்லை’ என்றேன்.

நம்மாழ்வார் என்னை நோக்கிச் சிரித்து ‘ஐயா, என்ன சொன்னீங்க? பூச்சி மருந்தா? மருந்துன்னா அது வாழ வைக்கணும் இல்லீங்களா? உயிரை வளக்கிறதுதானுங்களே மருந்து? அழிக்கிறது எப்டிய்யா மருந்தாகும்? எப்பவாச்சும் நாம விஷத்த மருந்துன்னு சொல்லியிருக்கோமா? இப்ப நம்ம மொழியிலே அப்டிச் சொல்லவச்சிருக்காங்க பாத்தீங்களா? நாம இப்ப போராடீட்டிருக்கிறது மண்ணோட இல்லீங்க, நம்ம வாயிலே இருக்கிற நம மொழியோடதானுங்க’ என்றார். பின்பு யோசித்துப்பார்த்தபோது அவரது வாழ்க்கையின் செய்தியையே அவர் சொல்லிவிட்டதாக உணர்ந்தேன்.

நம்மாழ்வாரை அதன்பிறகும் சிலமுறை சந்தித்திருக்கிறேன். அவரது வானகம் என்ற காட்டுருவாக்க அமைப்பு கடுமையான மின்வெட்டால் பாதிக்கப்பட்டபோது அங்கே சூரியமின்கலங்கள் அமைக்கத் தேவையான நிதியில் ஒருபகுதியை சொல்புதிது விவாதக்குழும நண்பர்கள் சேகரித்து அனுப்பினார்கள். என்றும் எங்களுக்குள் ஒர் ஆசிரியனின் பீடத்தில் அவர் இருந்தார்

மீண்டும் சொல்லிக்கொள்ளவேண்டிய தருணம் இது, ஆசிரியர்கள் இறப்பதில்லை.

முந்தைய கட்டுரைபுதிய பரணி
அடுத்த கட்டுரைபொன்னிறப்பாதை- வண்ணதாசன் கடிதம்