ஏய்டன் பைர்ன், பத்தொன்பதாம் நூறாண்டு இறுதியில், விக்டோரியா மஹாராணியின் சார்பில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் பாதுகாக்க மதராஸப்பட்டினத்தில் (சென்னை) பணிபுரிந்த ராணுவ அதிகாரி, அயர்லாந்தைச் சேர்ந்தவன். இவன்தான், ஜெயமோகன் அண்மையில் எழுதியுள்ள ‘வெள்ளையானை’ என்ற நாவலின் கதைப் புருஷன். அந்நியனை கதாநாயகனாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் இதுவாகத்தான் இருக்குமென்று தோன்றுகிறது.
ஏய்டன், அவன் தந்தையிடம், தான் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்திருப்பதாகச் சொன்னதும், அவர் கூறும் பதில்தான் அவன் அடிமனத்தில் பதிந்து, வாழ்க்கை முழுவதும் அவன் குண நலன்களை நிர்ணயிக்கப் போகிற, மந்திரச் சொல்லாக அமைகிறது..
அவன் தந்தை கூறுகிறார்: ‘பைர்ன் என்ற சொல் ..ஓ பிராய்ன் வம்சம் என்ற பொருள். நாம் லெயின்ஸ்டெரின் மன்னர் ப்ரான் மக் மேக்ஸ்மோர்டாவின் வாரிசுகள். நம்முடைய நாடு இதுதான், அயர்லாந்து. ஆனால் நீ பிரிட்டனுக்காகப் போர் செய்யப் போகிறாய்.’
பிரிட்டனால் ஒடுக்கப்பட்ட ஐரிஷ் இனத்தைச் சேர்ந்த நீ, நம்மைப் போல் வேறு இனங்களை ஒடுக்கி, ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும், பிரிட்டானிய ஏகாதிபத்யத்துக்காக பணி புரியப் போகிறாய், அப்படித்தானே’’ என்ற அவன் தந்தையின் கேள்வியினால்தான் இந்நாவல் முழுவதும் ஏய்டன் நமக்கு ஒரு schizophrenic கதாபாத்திரமாகத் தெரிகிறான்.. உள்மனத்திலிருந்து நீதியும் நேர்மையும் கூச்சலிடுகின்றன; அதே சமயத்தில், அவனால் விக்டோரியா மஹாராணியை மறக்க முடியவில்லை.
கதை முழுவதும் அவன் விருப்பத்துக்குரிய கவிஞன் ஷெல்லியின் கவிதை வரிகளால் அவன் அலைக்கழிக்கப்படுகிறான். ஷெல்லி மாபெரும் புரட்சிக் கவிஞன். பதினெட்டு வயதிலேயே, ‘நாஸ்திகத்தின் அவசியம்’ என்ற நூல் எழுதி, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டவன். அவனைப் பற்றி, மாத்யூ ஆர்னால்ட் என்ற இலக்கிய விமர்சகர் கூறுகிறார்; ‘ he was a beautiful, ineffectual angel, beating in the void, his luminous wings, in vain’.
ஏய்டனின் பாத்திரப் படைப்பைப் பார்க்கும்போது, அவன் ஷெல்லியை தன் ஆதர்ச புருஷனாகக் கொண்டிருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை என்று தோன்றுகிறது. தன் எல்லைக்குள், நீதிக்கும் நேர்மைக்கும் போராடுகின்றவன், இறுதியில், இயலாமையின் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயல்கின்றான். ஷெல்லி நீரில் மூழ்கி இறந்தது, இயல்பான மரணமா, தற்கொலையா என்ற இலக்கிய சர்ச்சை இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது.
ஏய்டன் கதாபாத்திரம் தமிழுக்கு ஒரு புது வரவு. தலித் ஆய்வாளரான அன்பு பொன்னோவியம் சொன்ன ஒரு தகவலைக் கொண்டு இந்நாவலை எழுதியிருப்பதாக ஜெயமோகன் கூறுகிறார். அது ஒரு மிகவும் முக்கியமான தகவல். இந்தியாவில் முதன் முதலில் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தியவர்கள் சென்னை ஐஸ்ஹவுஸ் தொழிலாளிகள், அனைவரும் தலித்துகள். இது நடந்தது 1878-இல். இது இடைநிலைச் சாதி கங்காணிகளாலும்,பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும், உயர்சாதி குத்தகைக்காரர்களாலும் நசுக்கப்பட்டது என்பதும் அன்பு பொன்னோவியத்தின் செய்தி.
இந்தச் சிறு தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்நாவலைப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். இந்நாவலின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் தாது வருஷப் பஞ்சம். சுநாமி, புயல், எரிமலை போன்று, பஞ்சம் எப்பொழுதுமே இயற்கையின் சீற்றமன்று. தனி மனிதர்களின் பேராசைதான் காரணம். இந்தியாவில் சமூகத்தின் அடித்தட்டிலிருந்த தலித் மக்களைத்தான் இப்பஞ்சங்கள் அபரிமிதமான அளவில் பாதித்தன. ‘ஒரு காலத்தில் இந்நாட்டில் பெரும்பான்மையோராக இருந்த இவ்வினம் இன்று சிறுபான்மையினமாக ஆகியதற்குக் காரணம், அவர்கள் வரலாற்றில் ஒடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், இப்பஞ்சங்களும் ஒரு காரணம்’ என்கிறார் ஜெயமோகன்.
ஜெயமோகன் காட்டும் பஞ்சக் காட்சிகள், யதார்த்தம்தான் கற்பனையைக் காட்டிலும் அதிசயமானது என்பதை நிலை நிறுத்துகின்றன. அன்றும், இன்றும், சொல்லப்போனால், என்றும், வளமையும் வறுமையும்தான் ’இப்பாரதப் புண்ணிய பூமியில்’ அண்டை வீட்டுக்கார்கள். நாம் இதைப் பற்றி என்றுமே கவலைப்பட்டதில்லை. காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் பிணங்கள் சூழ்ந்த சுடுகாடாக காட்சி அளிக்கும்போது, மதராஸப்பட்டினம், சாரட்டு வண்டியும், சரவிளக்குமாக செல்வத்தில் கொழிக்கிறது. கோட்டோவியங்களாக இக்காட்சிகளை அற்புதமாக எழுத்தில் வரைந்திருக்கிறார் ஜெயமோகன்.
நான் அண்மையில் படித்த நாவல்களில் இது மிகவும் முக்கியமானதாக எனக்குப் படுகிறது.
இபா தளம் http://indiraparthasarathy.
,