அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். கடந்த மார்ச் மாதத்தில் இருந்துதான் உங்களை அறிந்து உங்கள் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உங்கள் அறிமுகம் எனக்கு யூட்யூப் மூலமாகவே நிகழ்ந்த்து. சங்க இலக்கியம் பற்றி தேடும் போது உங்களின் ஒரு பேட்டியை காண நேர்ந்த்து. ஐந்து நிமிடம் பார்த்ததுமே அதில் உள்ள செறிவான விஷயங்கள் என்னை திரும்ப திரும்ப அந்த பேட்டியை பார்க்க வைத்தது. சுமார் பத்து முறையாவது பார்த்திருப்பேன். ஏனெனில் அது நான் அறிந்த வரலாற்றில் இருந்து மாறுபட்டு ஒரு புதிய கோணத்தில் வரலாற்றை காட்டியது. ஒவ்வொரு முறை பார்க்கயிலும் பல தகவல்களை தெரிந்து கொண்டேன். அதை தொடர்ந்து உங்களின் பல விடியோக்களை பார்த்து அதன் பின் உங்கள் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். தமிழில் நான் முதல் முதலாக படித்த இணையதளம் உங்களுடையதே.
அன்மையில் நடந்த விஷ்ணுபுரம் விழா வீடியோ ஏதும் இருக்கிறதா? இதுவரை நடந்த எந்த விஷ்ணுபுரம் விழா வீடியோவும் யூட்யூபில் என் தேடலுக்கு சிக்கவில்லை ஒரு சிறு பதிவை தவிர. பல அரிய இலக்கியவாதிகளை அடையாளம் காட்டி, பல இலக்கியவாதிகள் சேர்ந்து விவாதிக்கும் பதிவுகள் முக்கியம் என்றே நினைக்கிறேன். குறைந்தபட்சம் மேடைப்பேச்சாவது காணக் கிடைத்தால் நன்றாக இருக்கும். அது விழாவில் கலந்துகொள்ள இயலாதவர்களுக்கு அதை பார்த்து நிறைவடைய ஒரு வாய்ப்பாக அமையும். இலக்கியத்தை புதிதாக வாசிக்க தொடங்கும் என்னை போன்றவர்களுக்கு அது பல விஷயங்களை அறிந்துக்கொள்ள உதவும். உதாரணமாக உங்களது இலக்கிய கூட்டங்களின் பதிவு துணுக்குகளிள் இருந்தே எனக்கு பல புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இனி நடக்கும் விழாக்கள், கூட்டங்கள் பதியப்பட்டு பகிரப்பட்டால் மகிழ்ச்சி.
http://www.youtube.com/watch?v=MoGLJI8Geng
http://www.youtube.com/watch?v=qwknV3HyVWg
http://www.youtube.com/watch?v=5mNxkKxJNQc
நன்றி,
ஹரீஷ்
அன்புள்ள ஹரீஷ்,
ஒலிப்பதிவுகள் அல்லது ஒளிப்பதிவுகள் செய்வதில் நிறையச் சிக்கல்கள் உள்ளன. ஒன்று, இன்றைய இணையச்சூழல் வன்முறைக்களம். தங்கள் படங்கள் வெளிவருவதை கணிசமான வாசகர்கள், குறிப்பாக வாசகிகள் விரும்புவதில்லை
சரியான ஒளி அமைத்து முறையாக பதிவுசெய்தால் நிகழ்ச்சியின் அந்தரங்கத்தன்மை இல்லாமலாகி அது ஒருவகை நடிப்பாக மாறிவிடக்கூடும். தன்னிச்சையாக, கட்டின்றி நிகழும் உரையாடலில் சுயதணிக்கை இருப்பதில்லை. பதிவுசெய்யும்போது சுயதணிக்கை பெரியபிரச்சினையாக ஆகிவிடுகிறது
ஆகவே கூடுமானவரை பதிவுகள் தேவையில்லை என்பதே என் எண்ணம்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
விஷ்ணுபுரம் விருது விழாவில் முதன்முறையாக கலந்து கொண்டேன். இப்படியான இலக்கிய விழாவும் , வாசகர் வட்டமும் மிகுந்த மகிழ்ச்சி தந்த விஷயங்கள். விழாவிலும் ,விவாதங்களிலும் கலந்து கொண்டவர்களின் இலக்கிய பேச்சுகளில் மறக்கப்பட்ட சமுதாய சங்கடங்களை பாடல் மூலமும், பேச்சு மூலமும் வெளி கொண்டு வந்தது நம் மனதை நம் கண்ணால் பார்த்தது போலிருந்தது. நண்பர்கள் அனைவரின் தன்னகங்காரமில்லா உழைப்பும், இந்திய அரசியலிலும்,நிர்வாகவியலிலும் இன்று காணக்கிடைக்காத ஒன்று என்றே நினைக்கிறேன். திங்கட்கிழமை நடந்த கலந்துரையாடல்களில் நானும் கலந்து கொண்டேன். எங்களது விருந்தினர் மாளிகையை விட்டு நீங்கள் அனைவரும் கிளம்பிய போது ஒரு நெருங்கிய குடும்ப விழாவில் கலந்து கொண்டு பிரியும் போது ஏற்படும் மன எழுச்சி உங்களை வழி அனுப்பிவைக்கும் போது ஏற்பட்டது.
மீண்டும் சந்திக்கும் ஆர்வத்துடன்
பாலமுரளி
திருச்சி
பெருமதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கமும் நல்வாழ்த்துக்களும்.
எனது மரியாதைக்கும் அன்புக்குமுரிய உயர்திரு தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு, விஷ்ணுபுரம் விருது வழங்கப்படவிருப்பதை காலம் தாழ்த்தியே அறிந்து கொண்டேன்.
எங்கள் தேசத்திலிருந்து நீங்கள் விருதுக்குத் தெரிந்த மனிதர் ரொம்பப் பொருத்தமானவர். மிகச் சிறந்த தெரிவு. மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் கவலைப்படத் தேவையில்லை.
ஓர் எழுத்தாளனுக்கு உரிய நேரத்தில் உரியவர்களால் விருதுகள் வழங்கப்படும் பொழுது, அந்த விருதுக்கும் பெருமை, அதை வழங்கியவர்களுக்கு மகத்தான பெருமை. மூன்றாமிடம் விருதைப் பெறுபவருக்குத்தான். அந்த வகையில், உங்களை மனசாரப் பாராட்டுகிறேன்.
விருதுக்கான கலைஞனைத் தேடிக் கண்டுபிடிக்கும் குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
அன்புடன்
எஸ்.எல்.எம். ஹனீபா