இந்தியப் பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேறியிருக்கிறது. நிறைவேறச்செய்யப்பட்டிருக்கிறது என்பதே சரியான வார்த்தை. அண்ணா ஹசாரே காந்தியவழியில் மேற்கொண்ட தொடர்ந்த பிரச்சாரப்போராட்டம் மூலம் கிடைத்த வெற்றி இது. அண்ணா ஹசாரேவுக்கு ஓர் இந்தியக்குடிமகனாக என் வணக்கம்.
இந்த லோக்பால் மசோதாவை ஒரு வெற்றி என கொண்டாடும் ஒவ்வொருவரும் அண்ணா ஹசாரேவை இதிலிருந்து கவனமாக விலக்கிவிட்டுப் பேசுவதைக் காணமுடிகிறது. ஒருசாரார் இதை இந்தியாவின் அரசியல் கட்சிகள் ‘மனமுவந்து’ ஏற்றுக்கொண்டது என சித்தரிக்கிறார்கள். இன்னொருசாரார் காங்கிரஸின் உத்தி என்கிறார்கள். இது ஓர் ஜனநாயக வெற்றி என்பவர்கள் இதை கேஜ்ரிவாலின் தேர்தல்வெற்றியின் விளைவு என காட்டமுயல்கிறார்கள்.
இது ஒன்றும் புதியவிஷயமல்ல. காந்தியப்போராட்டங்கள் அனைத்தும் இப்படித்தான் நிகழ்ந்து முடிகின்றன. இதற்குமுன் இறால்பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்தை அருகிருந்து நான் கூர்ந்து கவனித்திருக்கிறேன்.
காந்தியப்போராட்டம் ஒரு குறிப்பிட்ட சமூகநிலைமைக்கு எதிராக காந்தியவாதிகளால் ஆரம்பிக்கப்படுகிறது. ஊழல், சுரண்டல், இயற்கைவளம் அழிக்கப்படுதல் என அது பலவகைப்படலாம். காந்தியவழிமுறை என்பது அந்த எதிர்க்கப்படவேண்டிய விஷயத்தை அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு எடுத்துச் சொல்வதாகவே ஆரம்பிக்கும். அதற்காக அந்த எதிர்க்கப்படவேண்டிய விஷயத்தைச் சுட்டிக்காட்டும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை அது கையில் எடுத்துக்கொள்ளும். அது ஒரு போராட்டமாக இருக்கையிலேயே குறியீட்டுச்செயல்பாடும்கூட
உதாரணமாக காந்தியின் அன்னியத்துணி மறுப்புப் போராட்டம். இந்தியா வணிகம் என்றபேரில் அநீதியாகச் சுரண்டப்படுவதை எதிர்ப்பதே காந்தியின் நோக்கம். அவ்வாறு தாங்கள் சுரண்டப்படுவதை இந்தியமக்களே உணரும்படிச் செய்வதே அந்தப்போராட்டத்தின் இலக்கு.அதன்பொருட்டு அவர் கண்டடைந்த வழிமுறை அன்னியத்துணி மறுப்பு. அன்னியத்துணி என்பது கண்ணாலும் கரங்களாலும் உணரக்கூடிய சுரண்டலின் அடையாளம், அவ்வளவுதான்.
அண்ணா ஹசாரே கால்நூற்றாண்டுக்கும் மேலாக ஊழலுக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் தலைவர். அந்தப்போராட்டம் ராலேகான் சித்தியில் ஆரம்பித்து மகாராஷ்டிர அரசு வழியாக மத்திய அரசு வரை வந்திருக்கிறது. தேசம் தழுவியதாக ஆகியிருக்கிறது. தகவலறியும் உரிமைக்காகவோ, லோக்பாலுக்ககாவோ அவர் போராடவில்லை. அவரது போராட்டம் ஊழலுக்கு எதிராகத்தான். தகவலறியும் உரிமைச்சட்டமும், லோக்பாலும் எல்லாம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் அடையாளங்கள் மட்டுமே.
இவ்வாறு ஒரு முனையைத் தேர்ந்தெடுத்தபின் முடிந்தவரை பிரச்சார ஊடகங்களை முழுக்க கைப்பற்றிப் பிரச்சாரம் செய்து , முடிந்தவரை மக்களைத் திரட்டி, வன்முறையற்ற போராட்டங்களை நிகழ்த்துவதுதான் காந்தியவழி. காந்தியப்போராட்டம் என்பது தன் தரப்பை, கோரிக்கையை முன்வைத்து எதிர்த்தரப்புக்கு முடிந்தவரை அழுத்ததை அளிப்பது. அதற்காக தங்கள் தரப்பை வலுவாகத் திரட்டி தங்கள் அறவலிமையையும் எண்ணிக்கைவலிமையையும் முன்வைப்பது.
காந்தி செய்த போராட்டங்கள் அனைத்தும் அத்தகையவை. அண்ணா ஹசாரே போராட்டங்களின் வழிமுறையும் அதுவே. உலகமெங்கும் வெற்றிபெற்ற பெரும்பாலான காந்திய- ஜனநாயகப் போராட்டங்களின் வழி அதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அசட்டுத்தனமாக கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. தகவலறியும் சட்டம் வந்தால் ஊழல் ஒழியுமா, லோக்பால் வந்தால் ஊழல் அழியுமா என்று கேட்கிறார்கள். வெறுமே மக்களை கூட்டினால் என்ன நடக்கும் என்கிறார்கள். அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க தனிமனிதனுக்கு என்ன உரிமை என்று வெட்டிநியாயம் பேசுகிறார்கள். ஒருவர் உண்ணாவிரதம் இருப்பதே வன்முறை என்று பல லட்சம் பேரைக் கொன்றுகுவித்ததை நியாயப்படுத்தியவர்கள் வாதிடுகிறார்கள்
காந்தியப்போராட்டம் மெல்லமெல்ல சமூகப்பிரக்ஞையில் வேரூன்றி கருத்தியல் மாற்றத்தை உருவாக்கி அதன்மூலம் வெற்றியை நோக்கிச் செல்வது. காந்தியின் பல போராட்டங்கள் வருடக்கணக்காக நடந்திருக்கின்றன. மிகச்சிறந்த உதாரணம் வைக்கம்போராட்டம். காந்தியப்போராட்டம் மக்களின் மனமாற்றத்தை இலக்காக்கியது என்பதனாலேயே அது உடனடியாக வெற்றிபெறமுடியாது, திடீர் மாற்றங்களை உருவாக்கவும் முடியாது. காந்தியவாதிகளின் வழி என்பது மனம்தளராத தொடர்முயற்சிதான்
ஆகவே காந்தியப்போராட்டத்தில் பெரும் சோர்வுக்காலங்கள் உண்டு. ஒத்துழையாமை இயக்கம் முதல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை அனைத்திலும் அதைக்காணலாம். ஆரம்பகட்ட அதீத உற்சாகம் சீக்கிரமே வடியும். காந்தியப்போராட்டம் வன்முறை அற்றது என்பதனாலேயே ஆரம்பத்தில் போராட்டத்தை மேலோட்டமானது என்று எண்ணும் அதிகார சக்திகள் அது மக்கள் கருத்தியலை மாற்றுவதை உணர்ந்ததும் வலுவாக திருப்பியடிப்பார்கள். எதிர்ப்பிரச்சாரம் வலுவடையும். அனைத்துவகையான பிரிவினைகளும் கிளப்பப்படும். மனத்திரிபுகளும் பிளவுகளும் உருவாகும். விளைவாக பின்னடைவுகள் நிகழும். காந்தியப்போராட்டத்தில் இவை நிகழாத எந்தப்போராட்டமும் கிடையாது.
இச்சோர்வுக்காலகட்டத்தில் காந்தியப்போராட்டமே பயனற்றது என்று தீவிரநோக்குள்ளவர்கள் எண்ணுவார்கள். காந்தியப்போராட்டம் என்பதே கேலிக்குரியது என எதிர்சக்தியின் கைக்கூலிகளான ஊடகங்கள் சித்தரிக்கும். காந்தியே நடத்திய, உலகவரலாற்றின் மாபெரும் முன்னுதாரணமாக இன்று கருதப்படும் உப்புசத்தியாக்கிரகமே அப்படி கேலிக்குரியதாக அன்றைய ஏகாதிபத்திய ஊடகங்களாலும் ‘புரட்சி’த்தரப்புகளாலும் சித்தரிக்கப்பட்டது என்பதே வரலாறு.
கடைசியாக, காந்தியப்போராட்டம் என்பது எப்போதும் ஒரு சமரசத்திலேயே முடியும். அது ஆரம்பத்தில் முன்வைத்த கோரிக்கைகள் ஒருபோதும் முழுமையாக அடையப்படாது. எதிர்தரப்புக்கும் சில விஷயங்கள் விட்டுக்கொடுக்கப்படும்.அதுவரை போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் கடும் விமர்சனங்களையும் நக்கல்களையும் மட்டுமே முன்வைத்துக்கொண்டிருந்தவர்கள் அந்தச்சமரச முடிவை நிராகரிப்பார்கள், காந்தியவாதிகள் துரோகம்செய்துவிட்டார்கள் என எம்பிக்குதிப்பார்கள். இது வைக்கம் உட்பட காந்தி நடத்திய எல்லா போராட்டங்களிலும் காணக்கிடைப்பதுதான்.
ஆனால் இந்த எதிர்ப்பாளர்கள் விமர்சனத்துடன் நின்றுவிடுகையில் காந்தியத்தரப்பு அடைந்தவற்றை உறுதிப்படுத்திக்கொண்டு உடனடியாக அடுத்தகட்டத்துக்குச் செல்லும். அடைந்தவற்றை மேம்படுத்திக்கொள்ளும். தாங்கள் உத்தேசித்ததை அடையும்வரை காந்தியப்போராட்டம் நிற்காது. வைக்கம் போராட்டம் சமரசத்தில் முடிந்த சிலமாதங்களுக்குள் கேரளம் முழுக்க ஆலநுழைவுப்போராட்டத்தை காந்தி ஆரம்பித்தார். அதை இந்தியா முழுக்க முன்னெடுத்தார். ஒத்துழையாமை இயக்கம் சமரசத்தில் முடிந்த சில வருடங்களுக்குள் மேலும் ஆற்றலைத் திரட்டிக்கொண்டு அடுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது
லோக்பாலுக்கான போராட்டத்திலும் இதையே நாம் காண்கிறோம். அண்ணா ஹசாரேயின் போராட்டம் மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அந்த மக்களெழுச்சியைக் கண்ட ஊடகங்கள் அதை ஒரு வணிகநிகழ்வாக ஆக்கி லாபம் சம்பாதித்தன. அண்ணா ஹசாரே அத்தனை ஊடகங்களையும் பயன்படுத்திக்கொண்டார்.அவற்றின் வழியாக ஊழலுக்கு எதிரான கருத்தை நாடெங்கும் கொண்டுசென்றார். ஆனால் அந்த இயக்கம் உருவாக்கிய அதிர்வை கவனித்தபின் ஊடகங்களின் பின்னுள்ள அதிகார அமைப்புகள் எதிர்நிலை எடுத்தன.
விளைவாக மெல்லமெல்ல அண்ணா கேலிக்குரியவராக ஆக்கப்பட்டார். வாடகை அறிவுஜீவிகளும் போலித்தீவிரத்தைக் கக்கும் வாய்ச்சொல் வீரர்களும் திரட்டப்பட்டனர். நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி விவாதங்கள், நாளிதழ்க்கட்டுரைகள் வழியாக அண்ணா மீது அவதூறுகள் குவிக்கப்பட்டன. அவர் ஊழல்வாதி, ஏழைகளைச் சுரண்டிக்கொழுக்கும் பண்ணையார், வன்முறையை கையாளும் கிராமத்துக்குற்றவாளி என்றெல்லாம் அறிவுஜீவிகள் மேடைமேடையாக பேசித்தள்ளுவதை நாம் கண்டோம்.
விளைவாக ஆரம்பகட்ட ஆர்வம் அணைந்தது. அண்ணா ஹசாரேவின் இயக்கம் பிளவுபட்டது. கேஜ்ரிவாலின் கட்சி பிரிந்து சென்று அரசியலில் இறங்கியது.அந்த பணி முடிவுற்றதும் நம் கூலிஅறிவுஜீவிகள் அண்ணாவை விட்டுவிட்டார்கள். அவர்மீது அவர்கள் பொழிந்த சாக்கடைப்புழுதிக்கு அவர்கள் எந்த விளக்கமும் சொல்லவேண்டிய அவசியமில்லை. நாம் அவர்களிடம் அதைக்கேட்பதுமில்லை.
அந்தச் சோர்வுக்காலகட்டத்திலும் விடாப்பிடியாக போராட்டத்தை முன்னெடுத்தார் அண்ணா ஹசாரே. லோக்பாலை எவரும் மறந்துவிட அவர் விடவில்லை. அவர் கேலிக்குரியவராக்கப்பட்டபோது அவதூறுகளால் மூழ்கடிக்கப்பட்டபோது மனம் தளரவுமில்லை. அவரது கர்மயோகத்தில் அவர் இருந்தார். இன்று அதற்கான வெற்றி கிடைத்துள்ளது.
வெற்றிக்கு காங்கிரஸ் அடைந்த தோல்வி முக்கியமான காரணம். அந்தத் தோல்விக்கு அண்ணா ஹசாரே இயக்கத்தின் பாதிப்புதான் காரணம் என காங்கிரஸ் சரியாகவே நினைக்கிறது. ஊழல் ஆட்சி என மக்கள் மனதில் காங்கிரஸைப்பற்றிய முத்திரை பதிய அண்ணாவின் இயக்கம் வழிவகுத்தது. அதிலிருந்து தப்ப காங்கிரஸ் லோக்பால் மசோதாவைக் கொண்டுவந்தது. அதை எதிர்க்கும் இடத்தில் இன்று எந்த முக்கியமான அரசியல் கட்சியும் இல்லை. அவர்கள் எவரும் அதை மனமார ஏற்கமாட்டார்கள் என நாம் அறிவோம், ஆனால் வேறு வழியில்லை. அதற்குக்காரணம் அண்ணா ஹசாரே இயக்கம் மக்களிடையே உருவாக்கிய அழுத்தமான மனப்பதிவு. ஊழலுக்கு எதிரான கசப்பு. லோக்பாலை எதிர்ப்பது ஊழலை ஆதரிக்கும் கட்சி என்ற முத்திரையை மட்டுமே உருவாக்கும் என அரசியல்கட்சியினர் அறிந்திருக்கின்றனர். இந்தக் கட்டாயத்தை உருவாக்கவே அண்ணா ஹசாரே போராடினார். அதை உருவாக்கியதன்மூலமே அவர் வென்றிருக்கிறார்
ஆனால் இந்தவெற்றி அரசுடனும் அரசியல்கட்சிகளுடனும் அண்ணா ஹசாரே கொண்ட சமரசமும்தான்.அதுதான் காந்திய வழி. ஆகவே இது முழுமையற்ற வெற்றி. கிடைத்தவெற்றியைத் தக்கவைத்துக்கொண்டு முழுமையான வெற்றியை நோக்கிச் செல்வதே காந்தியவழி என்பதனால் இது போராட்டத்தின் முடிவல்ல, முதற்கட்டவெற்றி மட்டுமே. லோக்பால் அமைப்பை உருவாக்குவதும் மாநிலங்களெங்கும் அதன் துணையமைப்புகளை அமைப்பதும் அடுத்தகட்டப்பணிகள். லோக்பாலின் அதிகாரத்தை மேலும் மேலும் அதிகரிப்பது அதற்கடுத்தகட்டம்.
இந்தவெற்றி கைவந்ததும் அதற்காகப் போராடிய அண்ணா ஹசாரே பின் தள்ளப்பட்டிருக்கிறார். அவரை எள்ளி நகையாடியவர்களெல்லாம் லோக்பால் அமைப்பு ஏதோ தன்னிச்சையாக வந்தது என்று நினைத்து அதை மேம்படுத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.அண்ணா ஹசாரேவை மனசாட்சியே இல்லாமல் அவதூறு செய்தவர்கள் எல்லாம் ஊடகங்களில் வந்தமர்ந்து விவாதிக்கிறார்கள். காந்தியவாதி இவர்களை பொருட்படுத்தப்போவதில்லை. அவன் தன் பணியை ஒரு யோகமாக முன்னெடுப்பான். அவன் இடம் வரலாற்றில் மட்டும்தான், தொலைக்காட்சி விவாத அரங்குகளில் அல்ல.
இதுதான் முன்பும் நடந்தது. இன்று தகவலறியும் உரிமைச்சட்டம் ஊழலுக்கெதிரான முக்கியமான ஆயுதம் என்பதை எவரும் மறுக்கமுடியாது. ஆனால் அதற்கான போராட்டங்களின்போது அதை நம்மூர் கூலிப்படை அறிவுஜீவிகள் எள்ளி நகையாடினர். அதற்காகப்போராடிய அண்ணா ஹசாரே போன்றவர்களை சிறுமைப்படுத்தினர். அது வென்றெடுக்கப்பட்டதும் அதற்காகப்போராடியவர்களை முழுமையாகவே விட்டுவிட்டு அதன் சாத்தியங்களைப்பற்றி பேச ஆரம்பித்தனர். லோக்பால் விஷயத்திலும் அதுவே நிகழும். வரும்காலத்தில் இந்தியாவில் ஊழலுக்கெதிரான போரில் லோக்பால் முக்கியமான பங்கை வகிக்கும். ஆனால் அப்போது அதைப்பற்றிப்பேசுபவர்கள் அதைவென்றெடுத்த காந்தியவழிப்போராட்டத்தை கவனமாக விட்டுவிடுவார்கள்.
அந்த அநீதியை மனசாட்சியுள்ளவர்கள் செய்யக்கூடாது. அதன்மூலம் நாம் நம்மையே சிறுமைசெய்துகொள்கிறோம். போராட்டங்களை நேர்மையுடன் அணுகவில்லை என்றால் நாம் நம் முன் உள்ள உண்மையான போராட்டவாய்ப்புகளை எல்லாம் இழந்தவர்களாவோம். வெறும் வாய்ச்சொல்வீரர்களாக இழிவடைவோம். தர்க்கத்தின் மூலம் நம் சொந்த சிறுமைகளை, சமரசங்களை மூடிவைக்கும் சில்லறை அறிவுஜீவிகளாக ஆவோம்
ஆகவே இத்தருணத்தில் சொல்லிக்கொள்வோம், வணக்கம் அண்ணா!