அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தல்களில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவெங்கும் ஒருவகையான நம்பிக்கை அலை உருவாகியிருக்கிறது. கேரளத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு புதியதாக ஒரு கிளை உருவாக்கப்பட்டது. அந்த தொண்டர்கள் அனைவரும் உற்சாகமான படித்த இளைஞர்கள். ஆம் ஆத்மி கட்சியின் பிரத்யேகபாணி குல்லாய்களை அணிந்துகொண்டு மக்களிடம் அவர்கள் ஆதரவு திரட்டுவதை தொலைக்காட்சியில் கண்டேன்.
ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெற்ற வெற்றி அனைவருக்குமே ஆச்சரியம்தான். அது பெரும்பாலும் படித்த நடுத்தரவர்க்க இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. அதற்கு மதம்,சாதி, இனம்,வட்டாரம் சார்ந்த அரசியல் ஏதும் இல்லை. அத்தகைய குறுகியஅரசியல்கள் இல்லாத எந்தக் கட்சியும் இந்தியாவில் சமீபகாலங்களில் இந்தியாவில் மக்களாதரவைப் பெற்றதில்லை. அதோடு ஆம் ஆத்மி கட்சிக்கு திட்டவட்டமான அரசியல் கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லை. அரசியல் சார்ந்த, சமூகம் சார்ந்த நீண்டகாலச் செயல்திட்டங்களும் அவர்களுக்கில்லை. அவர்கள் உடனடியாக நிர்வாகமுறையில் சில மாறுதல்கள் தேவை என்று கோரும் இளைஞர்கள் மட்டுமே. அதாவது அவர்கள் உயர்நிர்வாக அமைப்பில் ஊழல் இருக்கக்கூடாதென நினைக்கும் ஒரு குழு, அவ்வளவுதான்.
ஏன் அது இத்தனை பரபரப்பை உருவாக்குகிறது? சென்ற கால்நூற்றாண்டாகவே இந்திய அரசியலில் படித்த,நவீன இளைஞர்களுக்கு இடமே இல்லை என்ற நிலை உள்ளது. அரசியலுக்குள் நுழைவதற்கான வழிகளாக இங்குள்ளவை இரண்டுதான். ஒன்று வாரிசுகளாக. இன்னொன்று ஏற்கனவே அரசியலில் இருக்கும் ஒருபிரமுகரின் அடிப்பொடிகளாக. இரண்டாவதுதான் சாமானியனுக்குத் திறந்திருக்கும் ஒரே வழி. அது குறைந்தபட்சத் சுயமரியாதை கொண்ட ஓர் இளைஞருக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை. ஆகவே பெரும்பாலும் இங்கே அரசியலில் நுழைபவர்கள் கிராமப்பின்புலம் கொண்ட, அதிகம் படிக்காத இளைஞர்கள். சிறியதொழில்கள் செய்பவர்கள் அல்லது வழக்கறிஞர்கள். அவர்களின் தொழிலுக்கே கொஞ்சம் அரசியல் இருந்தால் நல்லது. அதற்காக எந்தச் சமரசத்தையும் செய்யக்கூடியவர்களாக அவர்கள் இருப்பார்கள்.
அதாவது இங்கே அரசியல் செயல்படுவது நிழல் உலக குற்றக்குழுக்களின் பாணியில்தான். பெரும்பாலும் நேரடியாகவே குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். அவர்கள்தான் அங்கே மிகவெற்றிகரமாகச் செயல்பட முடிகிறது, மேலே செல்லமுடிகிறது. ஆகவே இந்தியாவில் இன்றைய கட்சி அரசியல் என்பது குற்றப்பின்னணிகொண்டவர்களுக்கு மட்டுமே உரியதாக மெல்லமெல்ல ஆகிவிட்டிருக்கிறது. கொஞ்சமேனும் விதிவிலக்காக இருப்பவை வலதுசாரி இடதுசாரி அமைப்புகளான பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்டுகளும். ஆனால் அவற்றில்கூட எங்கெல்லாம் அரசதிகாரம் கையில் இருக்கிறதோ அங்கெல்லாம் குற்றப்பின்னணிகொண்டவர்கள் அதிகமாக ஊடுருவிவிட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அரசியலை மாற்ற படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்ற கோஷம் அடிக்கடி எழுகிறது. ‘அரசியல் என்ற சாக்கடையைச் சுத்தம் செய்ய’ இளைஞர்கள் இறங்கவேண்டும் என அவ்வப்போது ‘சான்றோர்கள்’ மேடையில் சொல்லிவிட்டு இறங்கிச்செல்வார்கள். அதை நம்பி அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுண்டு. அவையெல்லாமே மக்களால் கேலிக்குரியவகையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒரு நேர்மையான படித்த நல்ல நோக்கமுள்ள இளைஞர் தனியாகவோ அல்லது ஒரு தங்களுக்கான கட்சி சார்பிலோ தேர்தலில் போட்டியிடுகிறார் என்று கொள்வோம். அவருக்கு எதிராக ஒரு குற்றப்பின்னணிகொண்ட, ஊழலை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, படிக்காத ஒருவர் சாதி,மத, இன,மொழி, வட்டாரவாத அரசியல் கட்சி ஒன்றின் பிரதிநிதியாகப் போட்டியிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இந்திய வாக்காளர் இரண்டாவது நபருக்குத்தான் வாக்களிப்பார். இன்றுவரை அதுதான் இங்கே நிகழ்ந்து வருகிறது.
உடனடி உதாரணம், கான்பூரிலும் மும்பையிலும் ஐஐடி மாணவர்களால உருவாக்கப்பட்ட அரசியலமைப்பான லோக் பரித்ரன். அது தேர்தலில் நின்று படுதோல்வியடைந்தது. அத்தகைய ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். இந்தச்சோர்வுச்சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி ஒரு நம்பிக்கையை படித்த இளைஞர்களுக்குக் கொடுக்கிறது. தங்களுக்கென ஓர் அரசியல் சாத்தியமென்ற எண்ணம் உருவாகிறது. இன்று உருவாகியிருக்கும் உற்சாகத்திற்கான காரணம் இதுவே. ஆனால் இந்த உற்சாகத்திற்கான நடைமுறைவாத அடிப்படை என ஏதேனும் உண்டா? இன்று ஆம் ஆத்மி கட்சிமேல் வைக்கப்படும் நம்பிக்கை காப்பாற்றப்படுமா? அது ஏதேனும் வெற்றிகளை அடையுமா?
அதற்கு முன் நாம் கேட்டுக்கொள்ளவேண்டியது ஒன்றுண்டு. இந்திய வாக்காளர் தன்னுடைய வாக்கை ஏன் ஒரு குற்றப்பின்னணிகொண்டவருக்கு, ஊழல்வாதிக்கு போடத் தயாராக இருக்கிறார்? ஏனென்றால் அந்த நபருக்கு அவர் வாக்களிக்கவில்லை. அந்நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சி மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. அந்த கட்சி தன்னுடைய, தன் சாதியின், தன் குழுவின் நலத்தைப்பாதுகாக்கக்கூடியது; அதற்காகப் போராடக்கூடியது என அவர் நினைக்கிறார். சராசரி இந்திய வாக்காளர் இன்று எந்த இலட்சியத்துக்காகவும், எந்தக் கொள்கைக்காகவும் வாக்களிக்கவில்லை. முழுக்கமுழுக்க தன் சுயநலத்துக்காகவே வாக்களிக்கிறார். பல்வேறு அடையாளங்கள் சார்ந்து மக்களின் சுயநலங்களைத் திரட்டிக்கொள்ளும் அமைப்புகளே இன்று வெற்றிகரமான கட்சிகளாக ஆகின்றன.
இந்தியாவின் சுதந்திரப்போராட்ட காலத்தில் இந்திய சமூகத்தில் இருந்த இலட்சியவாதம் சுதந்திரம் நெருங்கியபோதே அழிய ஆரம்பித்தது. மாகாணத்தேர்தல்களில் போட்டியிட்டு அரசமைக்க காங்கிரஸுக்கும் பிற கட்சிகளுக்கும் வாய்ப்புகிடைத்தபோதே சுயநல அரசியல் ஆரம்பித்துவிட்டது. ஆங்கில அரசு சாதி மதம் சார்ந்து இடஒதுக்கீட்டுச் சலுகைகள் அளிக்க ஆரம்பித்ததுமே இந்திய சமூகத்தில் குழுசார்ந்த அரசியல் பிறந்துவிட்டது. சுதந்திரத்துக்குப்பின் இந்திய மக்கள் மொத்தமாகவே பல்வேறு அதிகாரஅலகுகளாக தங்களப் பிரித்துக்கொண்டனர். முதல்பிரிவினை மொழிவழி மாநிலங்களுக்கான கோரிக்கையை ஒட்டி இந்தியாவெங்கும் உருவான வட்டாரவாதம் மற்றும் மொழிவாதம். அதன்பின்னர் இட ஒதுக்கீட்டுக்காக உருவான சாதியவாதம். இவ்வாறு பல்வேறு பிரிவினைகள்.
இன்றைய இந்திய அரசியலென்பது இத்தகைய ஒவ்வொரு குழுவும் தன்னை வாக்குவங்கிகளாக ஆக்கிக்கொண்டு தேர்தலரசியலில் செல்வாக்கு செலுத்தி, அரசதிகாரத்தில் பங்கு பெற்று, தங்களுக்கு முடிந்தவரை அதிக லாபங்களைப் பெற்றுக்கொள்வதுதான். இந்த லாபங்களின் பங்குக்காகவே சாதாரண மக்கள் முண்டியடிக்கிறார்கள். எவரும் எந்த இலட்சியத்தையும் பெரியதாக நினைப்பதில்லை. ஆகவே ஊழல் எவருக்கும் ஒரு பிரச்சினையே அல்ல. ஊழல் மூலம் தன் குழு லாபம் தேடியிருந்தால், அந்த லாபம் ஓரளவேனும் தனக்கும் அளிக்கப்பட்டிருந்தால் சராசரி இந்தியக்குடிமகனுக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.
பொது உரையாடல்களில் அடிக்கடி மக்கள் ஊழலுக்கு எதிராக மனம் கசந்து பேசுவதைக் கேட்கலாம். சினிமாக்களில் அரசியல்வாதிகளை வில்லன்களாக காட்டுவதை, கதாநாயகர்கள் அவர்களை அடித்துத் துவைப்பதை மக்கள் ரசிப்பதைக் காணலாம். ஆனால் அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள், காரணம் அவர்கள்தான் அரசியலில் தங்களுக்காக போராடுவார்கள், தங்கள் சுயநல நோக்கங்களுக்கு உதவுவார்கள் என மக்கள் நினைக்கிறார்கள். தேர்தல்காலங்களில் மக்களின் மனநிலை வியப்பூட்டும்படி மாறுவதைக் காணலாம். அதுவரைப் பேசிவந்த நேர்மை, கொள்கை சார்ந்த அனைத்தையும் மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். தங்கள் அதிகாரக்குழுவுக்குள் யார் மிகச்ச்செல்வாக்காக இருக்கிறார்களோ அவர்களுக்கே வாக்களிப்பார்கள். அவர்தான் ஜெயிக்க வாய்ப்புள்ளவர், அவருக்கு வாக்களித்தால் மட்டுமே வாக்கு வீணாகாது என அதற்கு அவர்கள் ஒரு நியாயத்தையும் சொல்வார்கள்.
இந்தியாவின் அரசியல்வாதிகளின் நேர்மையின்மை இந்தியமக்களின் நேர்மையின்மையின் சரியான பிரதிலிப்பு மட்டுமே. அரசியல்வாதிகளின் ஊழல் இந்தியமக்களின் ஊழலேதான். இந்தியாவின் சீரழிந்த தன்மை இந்தியமக்களின் சீரழிவுமட்டுமே. இந்தியா மிகச்சரியாகவே அதன் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்கிறது. அரசியல்வாதிகளை இந்தியமக்கள் வசைபாடுவது தங்கள் சொந்த அயோக்கியத்தனங்களை மறைத்துக்கொள்ளும்பொருட்டே. தங்களுக்கு திருடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் அடுத்தக்கணமெ ‘இங்க யார் சார் யோக்கியன்?’ என நியாயப்படுத்த ஆரம்பித்துவிடுவார்கள்.
ஆகவேதான் இந்தியாவில் அப்பட்டமாக ஊழல்குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்கள் அனைவருமே மக்களால் மீண்டும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த ஏ.ஆர்.அந்துலே நிலமோசடியை ஊக்குவித்து ஊழல்செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்டு பதவியிழந்தார். தேசமே அவரைப்பற்றி பேசியது, வெட்கப்பட்டது. சில வருடங்களுக்குள் அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலுவான அரசியல்வாதியாக மீண்டு வந்தார். 2002ல் இந்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்த சுக்ராம் கோடிக்கணக்கான ஊழல் பணத்தை கட்டுகட்டாக வீட்டிலேயே வைத்திருந்து மாட்டிக்கொண்டார். ஆனால் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசியலுக்குத் திரும்பி வந்தார். தமிழகத்திலும் ஊழலுக்காக குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகள் அனைவருமே மக்களால் திரும்பவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தியா என்ற பிரம்மாண்டமான ஜனநாயகம் இன்று செயல்படும் விதம் இதுதான். நூற்றுக்கணக்கான ஆதிக்கவிசைகள் ஒன்றுடன் ஒன்று மோதி சமன்செய்துகொண்டு ஒரு சமரப்புள்ளியைக் கண்டடைவதைத்தான் இங்கே ஜனநாயகம் என்கிறோம். மதம், சாதி,இனம்,மொழி,வட்டாரம் சார்ந்த குழுக்களுக்கு அப்பால் நூற்றுக்கணக்கான தொழில்வட்டங்கள் உள்ளன. மும்பையின் சர்க்கரைஉற்பத்தியாளர் வட்டம் போல. குஜராத்திய பருத்தி உற்பத்தியாளர் வட்டம்போல. இதற்குமேல் இந்தியாவின் பிரம்மாண்டமான நிர்வாகஇயந்திரமான அதிகாரிகளின்கூட்டு ஒரு பெரிய அதிகாரவிசை. தொழிற்சங்கங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்னொரு விசை.இந்த அதிகாரவிசைகள் எவற்றுக்கும் எந்தக் கொள்கையும் கிடையாது, சுயநலம் தவிர.
இந்த விசைகள் நடுவே தொடர்ச்சியாக சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பதுதான் இந்தியாவில் உள்ள அத்தனை அரசுகளும் செய்துவரும் பணி என்றால் அது மிகையல்ல.உண்மையில் ஜனநாயகத்தில் ஓர் அரசின் வேலை என்பதே அதிலுள்ள அதிகாரவிசைகள் நடுவே சுமுகமான அதிகாரப்பங்கீடு நிகழும்படிப் பார்த்துக்கொள்வதுதான்.அந்த அதிகாரப்பங்கீட்டில் வன்முறை நுழைக்கப்படும்போதே அரசு வன்முறையை கையிலெடுக்கிறது. இந்தப் பங்கீட்டுவேலையை ஆற்றும் அரசியல்வாதிகள் அதற்கான வெகுமானமாக ஊழல்பணத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். குறைவான கல்வியறிவுள்ள இந்தியமக்களிடையே தேர்தலில் தங்களைப் பிரச்சாரம் மூலம் கொண்டுசென்று சேர்க்க இங்கே அரசியல்வாதிகளுக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. ஆகவே மேலும் ஊழல் பெருகுகிறது. விளைவாக ஊழல் இங்கே அரசநிர்வாகத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாக உள்ளது.
அரசு என்பது ஊழலில்லாமல் நிகழ முடியுமா என்றே ஐயமாக இருக்கிறது. மன்னராட்சியில் ஊழல் செய்வது மன்னர்கள் மற்றும் அவரது குடுமப்த்தினரின் உரிமை. அது ஊழலாக மக்களால் கருதப்படுவதில்லை. சவூதி அரேபிய மன்னர்குடும்பமோ புரூனேயின் சுல்தானோ அரசுப்பணத்தை தனக்காகச் செலவிடுவது ஊழல் என்று சொல்லப்படுவதில்லை. அரசும் மன்னரும் வேறுவேறல்ல.சர்வாதிகார அரசுகளில் ஊழல் மக்களின் பார்வைக்கே வருவதில்லை. வந்தாலும் செய்தியாக ஆவதில்லை. ஜனநாயகத்தில்தான் ஊழல் மக்களால் கண்காணிக்கப்படுகிறது. செய்திகளில் இடம்பெறுகிறது, விவாதிக்கப்படுகிறது. சரியான ஜனநாயகம் உள்ள இட்ங்களில் மக்களின் பிரதிநிதிகளின் அமைப்புகளால் ஊழல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் இன்றையசூழலில் ஊழல் மிகப்பெரிய பிரச்சினை என்பதை மறுப்பதற்கில்லை. மேல்மட்டம் முதல் அடிமட்டம் வரை பரவியிருக்கும் ஊழல் தேசத்தை கிட்டத்தட்ட சேற்றில் சிக்கிய யானைபோல அசைவற்றதாக ஆக்கிவிட்டிருக்கிறது. அடிமட்ட ஊழலால் இங்கே அடிப்படைக்கட்டுமானங்கள் அனைத்தும் சீரழிந்துவிட்டன. குப்பையே அள்ளப்படாமல் சாக்கடைக்குழி போன்று ஆகிவிட்டன இந்தியக்கிராமங்கள். பாசனமுறை அழிந்துவிட்டது. சாலைகள் இடிபாடுகளாகக் கிடக்கின்றன. உயர்மட்ட ஊழலால் தேசத்தின் செல்வம் அன்னியசக்திகள் கைக்கு அளிக்கப்படுகிறது. கோடானுகோடி பணம் அன்னியவங்கிகளுக்குச் சென்று முடங்குகிறது. இந்நிலைக்கு எதிரான கோபம் இளைஞர்கள் நடுவே எழுந்திருப்பது மிக இயல்பானது, அது ஓர் ஆக்கபூர்வ சக்தி என்பதில் ஐயமே இல்லை.
ஆனால் அதற்கு தேர்தலரசியலில் ஈடுபடுவது சரியானதாக இருக்குமா? இன்றைய இந்திய ஜனநாயகம் என்பது அதிகாரவிசைகளின் மோதலும் சமநிலையும்தான் என்னும்போது தேர்தலரசியல் வழியாக அடையப்படுவது என்ன? தேர்தலில் ஈடுபடும்போது முதலில் செய்யவேண்டியது அதிகாரவிசைகளில் வலுவானவற்றை தங்கள் தரப்பில் சேர்த்துக்கொள்வதுதான். ஆம் ஆத்மி அரசியலில் ஈடுபட்டதுமே செய்யநேர்ந்தது அதைத்தான். அது தன்னளவில் ஓர் அதிகாரவிசையை ஏற்கனவே சேகரித்துக்கோண்டிருந்தது. அதில் டெல்லியின் படித்த நடுத்தரவர்க்கம் ஒருங்கிணைந்தது. ஆகவே அந்தவர்க்கத்தின் நலன்களை ஆம் ஆத்மி பேணியாகவேண்டும். அவர்களுடைய அதிகாரப்பிரதிநிதியாகச் செயல்பட்டு அவர்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும். அவர்களுடைய அத்துமீறல்களை கண்டுகொள்ளக் கூடாது. அவர்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்தியாகவேண்டும்.
தேர்தலரசியலில் ஈடுபட்டிருப்பது வரை இதுதான் விதி. டெல்லியின் நடுத்தரவர்க்கம் நூற்றுக்கணக்கான விதிமீறல்கள் வழியாகவே வாழ்ந்துகொண்டிருப்பது. வாடகைக்கு ரசீது கொடுத்தாகவேண்டும் என்பதுபோல நடுத்தரவர்க்கத்தைப்பாதிக்கக்கூடிய ஒரு சாதாரண சட்டநடவடிக்கை வரட்டும், நடுத்தர வர்க்கம் பொங்கி எழும். ஆம் ஆத்மி அவர்களுக்காக மட்டுமே பேசமுடியும், நியாயத்துக்காக அல்ல. சிறந்த உதாரணம் இடதுசாரிகள். அவர்கள் எல்லா நியாயமும் பேசுவார்கள், ஆனால் தொழிற்சங்க அரசியலின் ஊழலை நியாயப்படுத்துவார்கள். ஊழியர்களின் தவறுகளை ஆதரிப்பார்கள், வேறுவழியில்லை அவர்களுக்கு.
தேர்தலில் வெல்வதற்கு மேலும் மேலும் அதிகாரவிசைகளை ஆம் ஆத்மி கூட்டுச்சேர்த்துக்கொள்ளவேண்டியிருக்கும். இந்தத் தேர்தலிலேயே ஆம் ஆத்மி அந்தச் சமரசங்களை ஆரம்பித்துவிட்டது. டெல்லியில் நாற்பது சதவீதம் இருக்கும் இஸ்லாமியர் மிக வலுவான வாக்குவங்கி. அவர்களின் வாக்கு எப்போதுமே காங்கிரஸுக்குத்தான் சென்றுகொண்டிருந்தது. இந்திய இஸ்லாமியர் ஒரு குறிப்பிட்ட மனநிலை கொண்டவர்கள். அவர்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளை அவர்கள் கிட்டத்தட்ட ’விடுவிக்கப்பட்ட’ பகுதிகளாக எண்ணுவார்கள். அங்கே காவலர்கள் வந்து சோதனைசெய்வதையே அநீதியாகவும் அத்துமீறலாகவும் எடுத்துக்கொள்வார்கள். டெல்லி தலைநகரம் என்பதனாலேயே பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசு சமரசம் செய்துகொள்ளமுடியாது. ஆகவே அவர்களுக்கும் காங்கிரஸ் அரசுக்குமிடையே எப்போதுமே பூசல் இருந்தது.
காங்கிரஸ் அரசின் சோதனைகள் இஸ்லாமியரை அதிருப்தி கொள்ளச்செய்தன. 2008 செப்டம்பரில் பாட்லா ஹவுஸ் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்இஸ்ரேல் தூதரகத்தில் குண்டு வைக்கச் சதி செய்ததாக சையத் முகமது அகமது காஸ்மி என்ற இதழாளர் 2012 மார்ச்சில் கைது செய்யப்பட்டார். இந்நிகழ்ச்சிகளில் அதிருப்தி கொண்டிருந்த இஸ்லாமியரின் வாக்குகளைக் கவர ஆம் ஆத்மி கட்சி முயன்றது. பரேலியின் மௌலானா தக்பீர் ரஸா கான் என்ற மத அடிப்படைவாதியின் உதவியை ஆம் ஆத்மி நாடியது. எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரீனைக் கொல்வதற்காக ஃபத்வா விதித்தவர் இவர். அவருடைய ஆதரவுதான் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிக்குக் காரணம் என்றுகூடச் சொல்லலாம்
இன்னும்பாதிக்கிணறுதான் தாண்டப்பட்டிருக்கிறது. ஆட்சிக்குவருவதற்கு இன்னும் பல அதிகார விசைகளை சேகரித்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அவ்வாறு ஆட்சிக்கு வந்தபின் அந்த அதிகாரவிசைகளின் நலன்களைத்தான் ஆம் ஆத்மி கவனிக்கமுடியும். அதை முன்வைத்து மற்ற அதிகார விசைகளுடன் பேரம்பேசி சமரசத்தை எட்டுவதே அதன் வழியாக இருக்கும். அதில் என்ன ஊழல் ஒழிப்பைச் செய்யமுடியும்? ஊழலை அவர்கள் தனிப்பட்டமுறையில் செய்யாமல் இருக்கலாம். அதிகார இயந்திரம் ஊழலை நடைமுறையாக்கிக் கொண்டிருப்பதை தடுக்கமுடியாது. மிகச்சிறந்த உதாரணம் கேரளத்தில் ஏ.கே.அந்தோணி போன்றவர்களின் ஆட்சிதான். அந்தோணி ஊழலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவரது அரசு எப்போதுமே ஊழலரசாகவே இருந்துள்ளது. அச்சுதானந்தனின் இடதுசாரி அரசும் அப்படித்தான்.
அப்படியென்றால் ஊழலரசியலை கட்டுப்படுத்த என்ன செய்திருக்கலாம்? ஊழலுக்குக் காரணமாக அமைந்திருப்பது நம் மக்களின் அடிப்படை மனநிலைதான். ஊழல் தனக்கு தன்குழுவுக்குச் சாதகமானதென்றால் அதை ஏற்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த மனநிலையில் மாறுதலை உருவாக்குவதே முதற்பெரும் பணி. ஊழலின் விளைவாக ஒட்டுமொத்தமாக தேசத்துக்கும் அதனூடாக ஒவ்வொருவருக்கும் நிகழும் இழப்புகளை அவர்கள் உணரும்படிச் செய்யலாம். பெரும் பிரச்சார இயக்கங்களே அதற்கான வழிமுறைகள். போராட்டங்களைப்போல சிறந்த கருத்தியல்பிரச்சாரம் வேறில்லை. சென்றவருடம் அண்ணா ஹசாரே நிகழ்த்திய உண்ணாவிரதப்போராட்டம் அத்தகைய வலிமையான ஒரு பிரச்சார இயக்கம். இந்திய மக்களிடையே ஊழலுக்கெதிரான கசப்பை உருவாக்கியது அது. அதன் விளைவுகள் வட இந்திய அரசியலில் நேரடியாகவே பிரதிபலித்தன. பொது வாழ்க்கையில் நேர்மையை முன்வைக்கும் அரசியல்வாதிகள் அரசியல்தளத்தில் மேலதிக முக்கியத்துவம் பெறவும் ஊழலரசியல்வாதிகள் பின்னடைவுபெறவும் அது காரணமாகியது.
ஊழலை மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்ற செய்தியை அரசியல்வாதிகளிடையே கொண்டுசென்றது அண்ணா ஹசாரேவின் இயக்கம். அத்தகைய இயக்கங்கள் தொடர்ந்து நாடெங்கும் நிகழுமென்றால் அது அரசியல்வாதிகளை அச்சுறுத்தும். ஊழலைக் கட்டுப்படுத்தும் புதிய அதிகார விசை ஒன்றை அரசியலில் உருவாக்கும். பங்கீட்டு அரசியல் உடனடியாக நின்றுவிடாது. உயர்மட்ட ஊழலும் இருக்கும். ஆனால் இன்றுபோல அனைத்து நலப்பணிகளிலும் ஊழல் இருக்காது. அனைத்து விதிகளையும் ஊழல் ரத்து செய்யாது. அதுவே பிரமிப்பூட்டும் மாற்றமாக அமையும்
ஐரோப்பிய , அமெரிக்க அரசுகளெல்லாமே பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை ஊழலில் மூழ்கித்தான் கிடந்தன. அங்கே மாற்றத்தைக் கொண்டுவந்தவை ஊழலுக்கெதிராக மக்களின் மனநிலையை கட்டமைத்த வலுவான கருத்தியல் இயக்கங்கள்தான். மிகச்சிறந்த உதாரணம் அமெரிக்காவில் உருவாகிவந்த முன்னகர்வு காலகட்டம் [Progressive Era] 1890 முதல் 1920 வரை கால்நூற்றாண்டுக்கும் மேல் நீடித்த இக்காலகட்டத்தில் பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிராக ஏராளமான இயக்கங்கள் உருவாகி வந்தன. ஊழல்வாதிகள் தொடர்ந்து மக்கள்முன் வெளிப்படுத்தப்பட்டார்கள். அதன் விளைவாகவே அமெரிக்காவில் ஊழலுக்கெதிரான மனநிலை மக்கள் நடுவே உருவானது. இன்றும் அமெரிக்காவில் அடிப்படைத்தளங்களில் ஊழல் இல்லாமலிருப்பது அவ்வியக்கத்தால்தான். அதற்கிணையான ஒன்றை இந்தியாவிலும் உண்டுபண்ணுவதே ஊழலுக்கெதிரான உண்மையான நடவடிக்கையாக இருக்கமுடியும்.
அதற்காக எல்லாவிதமான அமைப்புகளையும் பயன்படுத்திக்கொள்ளமுடியும். நீதிமன்றங்கள், இப்போது போராடிப்பெறப்பட்டிருக்கும் லோக்பால் போன்ற அமைப்புகள், தகவலறியும் உரிமைச்சட்டங்கள் எல்லாவற்றையும். உதாரணமாகச் சொல்கிறேன், இந்தியாவில் ஒரு சாலைபோடப்படுகிறதென்றால் அதன் 80 சதவீதம் ஊழலுக்குச் சென்றுவிடுகிறது. அந்த பணத்தை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றம் சென்று அச்சாலையை ஒரு பொதுவான பொறியாளர் பரிசோதனைசெய்யவேண்டும் என்று ஏன் கோரக்கூடாது? நாடெங்கும் அவ்வளவு திட்டங்களிலும் அவ்வாறு தரத்தை சோதனையிடும் ஒரு மக்களமைப்பை ஏன் உருவாக்கமுடியாது? அது ஊழலைக் கட்டுப்படுத்துமளவுக்கு எந்த அரசியல் கட்சி செயல்படமுடியும்?
மிகச்சிறந்த உதாரணம், அமெரிக்காவில் ரால்ஃப் நாடர் உருவாக்கிய நுகர்வோர் இயக்கம். அமெரிக்காவின் கழுத்தறுப்பு வணிகத்தைக் கட்டுப்படுத்தும் வலுவான அதிகாரவிசையாக அது உருவாகி வந்தது . அரசியலதிகாரம் மூலம் அல்ல. நீதிமன்றங்கள் போன்ற ஏற்கனவே இருக்கும் அமைப்புகளை கையில் எடுத்துக்கொள்வதன் வழியாகவே , மக்களியக்கம் வழியாகவே அது நிகழ்ந்தது. உலகமெங்குமுள்ள பசுமை இயக்கங்களின் பணியும் அத்தகையதே.
இந்தியாவில் இன்று தேவையாக இருப்பவை ஊழலுக்கெதிரான அத்தகைய ஏராளமான சட்டபூர்வ,ஜனநாயக, மக்கள் அமைப்புகள், அரசியலுக்கு அப்பாற்பட்டு கருத்தியல்தளத்தில் செயல்படும் அதிகாரவிசைகள். அத்தகைய செயல்பாடுகளைச் செய்யும் தனிமனிதர்கள் இன்று ஏராளமாக உருவாகியிருக்கிறார்கள். கேரளத்தில் நவாப் ராஜேந்திரன் தமிழகத்தில் டிராஃபிக் ராமசாமி போன்ற ‘எக்ஸெண்டிரிக்’ தன்மை கொண்ட தனிமனிதர்கள் வெறும் நீதிமன்ற நடவடிக்கைகள் வழியாகவே அரசமைப்புகளின் ஊழலை தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள். நாடெங்கும் அத்தகைய பலநூறு செயல்பாட்டாளர்களைச் சுட்டிக்காட்டமுடியும். தனிமனிதர்கள் என்பதனாலேயே அவர்கள் பாதுகாப்பற்றவர்கள், நிதிவல்லமையற்றவர்கள். அவர்களை இணைக்கும் பெரிய இயக்கங்கள் அவர்களின் விசையை பலமடங்கு பெருக்கமுடியும். தனிமனிதராக அண்ணா ஹசாரே இன்று லோக்பால் அமைப்பை வென்றெடுத்திருக்கிறார். அந்தவெற்றியை மேலும் மேலும் முன்னெடுக்கமுடியும்
அரசியல்கட்சியும் தேர்தல்வெற்றியும் அரசைக்கைப்பற்றுவதும் அல்ல ஊழலை எதிர்ப்பதற்கான வழி. ஊழலை தன் செயல்விசையாகக் கொண்டிருக்கும் அரசமைக்கு நேர்எதிரான அமைப்புகளை உருவாக்குவதுதான். சமூகத்தின்மேலும் அரசின்மேலும் அந்த விசையைச் செலுத்துவதுதான். சமூகத்தையும் அரசையும் அவ்வாறு ஊழல்மயமாக்கியிருக்கும் காரணிகள் என்ன என்ற எந்த அறிதலும் இல்லாமல் அவற்றின் ஒருபகுதியாக மாறுவது அல்ல. அப்படி மாறிய பல அரசுகள் இந்திய சமகாலவரலாற்றில் உள்ளன. மிகச்சிறந்த உதாரணம் அஸாமில் எண்பதுகளில் உருவான அஸாம் கணபரிஷத் இயக்கம். அதை வழிநடத்தியவர்கள் மாணவர்கள். அஸாமின் தன்னுரிமைக்காகவும் தனித்தன்மைக்காகவும் போராடிய ஒரு மக்களியக்கம் அது. அது அரசியல்கட்சியாக ஆகி ஆட்சியைப்பிடித்தது. பிரஃபுல்லகுமார் மகந்தா தலைமையில் அரசமைத்தது. அதிகாரப்பங்கீட்டுக்கான கருவியாக மாறி ஊழலில் மூழ்கி முகமிழந்து அழிந்தது. அதற்கெதிரான அடுத்த மக்களியக்கம் அங்கே தேவைப்பட்டது
இந்தியாவுக்குச் சொல்லபபடும் இந்த ஒவ்வொரு வார்த்தையும் ஏதேனும்வகையில் ஜனநாயகம் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொரு மூன்றாமுலக நாட்டுக்கும் பொருந்துவதாகும். இலங்கைக்கும். சாரைப்பாம்பைத் தின்னும் ஊரில் நடுக்கண்டம் எனக்கு என கேட்டுவாங்கிச் சாப்பிட்டால்தான் பிழைக்கமுடியும் என்பது ஒரு மலையாளப்பழமொழி. அதிகார அரசியலில் ஈடுபடுபவர்கள் உச்சகட்ட அதிகாரத்தை நோக்கி மட்டுமே செல்லமுடியும். நடுக்கண்டம் தின்பவர்கள் ஒருபோதும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. விலகிநிற்பவர்களே அதைச்செய்யமுடியும்
[இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழில் எழுதிவரும் தொடர். வீரகேசரி நாளிதழின் வெளியீடு ஜனவரி 15 அன்று வெளியான இதழில் பிரசுரமான கட்டுரை]