ஜெ,
ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்ட சாகித்ய அக்காதமி விருதை விமர்சித்து ஞாநி எழுதியிருப்பதை வாசித்தீர்களா? அவரை ஓர் இந்துத்துவர் என்று சொல்கிறார் ஞாநி.
டிவிட்டரில் ஒருவர் இப்படி எழுதியிருந்ததை வாசித்தேன்.
ஜேடி குரூஸ்ன்னு பேர பாத்துட்டு அமேரிக்க காரரா இருப்பாரோன்னு நெனச்சேன்.போட்டோ பாத்ததும் தான் ஆப்பிரிக்கர்ன்றது தெரியுது ;)
இதெல்லாம் என்ன மனநிலை என்றே எனக்குப்புரியவில்லை
எம்.சந்திரசேகர்
*
அன்புள்ள ஜெ
இந்த வருடம் ஜோ டி குரூஸுக்கு அளிக்கப்பட்டுள்ள விருதைப்பற்றி உங்கள் எண்ணம் என்ன? கல்யாண்ஜி பூமணி போன்றவர்களுக்கு வழங்கப்படாமல் ஜோவுக்கு வழங்கப்பட்டது சரியல்ல என நான் நினைக்கிறேன்
சுகுமார்
அன்புள்ள நண்பர்களுக்கு,
அன்புள்ள சந்திரசேகரன்,
விருதுகளைப்பற்றிய என்னுடைய நிலைப்பாடுகளை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், மீண்டும்.
விருதுகள் கறாரான அளவுகோலின்படி , வரிசைப்படி கொடுக்கப்படுவது சாத்தியம் அல்ல. விருதுகளில் பல்வேறு சாத்தியக்கூறுகள்தான் செயல்படுகின்றன. விருதுக்கு வரும் படைப்புகள் எப்படி எவரால் வடிகட்டப்பட்டுகின்றன என்றெல்லாம் எளிதில் தீர்மானிக்கமுடியாது.
ஆகவே ஒரு விருது அளிக்கப்படுகையில் அந்த விருது தகுதியான படைப்பாளிக்கு வழங்கப்படுகிறதா என்பது மட்டுமே அளவுகோலாக இருக்கமுடியும். அவ்வகையில் ஜோ டி குரூஸ் மிகமிக தகுதியானவர்.
சாகித்ய அக்காதமியின் விருதுக்கான அறிவிப்பைப் பார்த்தால் அது இலக்கிய நயத்தை அல்ல முதன்மை அளவுகோலாகக் கொண்டிருக்கிறது என்று தெரியும். இலக்கியத்தின் மூலம் மக்களுக்காகப் பணியாற்றுதல் என்ற அளவுகோல் அதற்குண்டு. ஜோ டி குரூஸின் எழுத்துக்கள் அத்தகையவை.
தமிழிலக்கியத்தின் ஈராயிரம் வருட மரபில் கடல்புற மக்களில் ஒருவர் தன் குரலை இலக்கியத்தில் அழுத்தமாக பதியச்செய்த முதல் நிகழ்வு என்பது ஜோ டி குரூஸ்தான். ஒரு ஜனநாயகதேசம் அதை முக்கியமான ஒரு நிகழ்வாகவே கருதும். அங்கீகரிக்கும்
அது முக்கியமான ஒரு முன்னுதாரணத்தை உருவாக்குகிறது. அம்மக்கள் தங்கள் குரல் அங்கீகரிக்கப்பட்டதை உணரக்கூடும். அவர்களிடமிருந்து மேலும் படைப்புகள் வரக்கூடும். அவ்வகையில் முற்றிலும் ஜனநாயகபூர்வமான விருது இது
ஜோ டி குரூஸை கடலோர வாழ்க்கையை எழுதியவர் என்று சொல்வது ஒரு முதற்கட்ட வகைப்பாடுதான். அவரது நாவல்கள் தமிழகவரலாற்றின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தை அளிப்பவை. கூடவே மனித வாழ்க்கையின் அடிப்படை விசைகளான இச்சைகளை கூர்ந்து ஆராய்பவை.
ஆகவே குறைந்தபட்ச இலக்கியநோக்கும் சமூகப்பார்வையும் உடைய எவரும் கொண்டாடவேண்டிய விருது இது. ஞாநி ஒரு சிக்கலான மனநிலைக்காலகட்டத்தைத் தாண்டிச்செல்கிறார் என நினைக்கிறேன். அவர் நோயுற்றிருக்கிறார். நோயுற்றிருக்கும் மனிதரின் மனம் எளிதாகச் சோர்வுச்சிந்தனைகளை, எதிர்மறை உணர்ச்சிகளை நோக்கிச் செல்லக்கூடியது. அவரது சமீபகாலக் கருத்துக்களை அப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது.
மற்றபடி நம்மூர் ஃபேஸ்புக், டிவிட்டர் கூத்துக்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். தமிழ்நாகரீகத்துக்கு அப்பால் ஓர் உலகில் அவை நிகழ்ந்துகொண்டிருக்கின்றன
ஜெ
***