நாம் வரலாற்றை எப்படி எழுதிக்கொள்கிறோம்?
நான் எழுதிய ‘ஈராறு கால்கொண்டெழும் புரவி’ குறுநாவலில் ஒரு காட்சி வரும். ஓரு சித்தர் ஞானமுத்தன் என்ற விவசாயியை ஒரு ஒரு மலைவிளிம்பில் நிறுத்தி அவனிடம் கீழே பார்க்கச் சொல்வார் ‘மண் மீதுள்ள வாழ்க்கை என்பது நீரின் ஒரு தோற்றம் மட்டும்தான்’ என்பார். ஞானமுத்தன் குழம்புவான். சட்டென்று அவன் கால்நழுவ அவன் அள்ளி எதையோ பிடித்துக்கொண்டு தப்புவான். அந்த அதிர்ச்சிக்கணத்தில் அவன் ஒருகணத்தில் எல்லாவற்றையும் உணர்ந்துகொள்வான்
அவன் கீழே பார்ப்பான். விரிந்துகிடக்கும் மண் முழுக்க நீரினால் வரையப்பட்ட ஒரு கோலமாக தெரியும். நிலத்தடி நீரின் ஓட்டம் மேலே முளைத்திருக்கும் மரங்களின் பசுமையாலேலேயே ஒரு பெரும்நதிபோல பல்வேறுகிளைகளுடன் தெரியும். அந்த பிரமையில் அவன் நடக்கும்போது பறவைகளின் ஒலியை கேட்பான். அதில் நீரின் வரைபடம் இருப்பதைக் காண்பான். அதன்பின் அவன் பூமிமீதான வாழ்க்கையையே நீரின் விளையாட்டாகக் காண ஆரம்பிப்பான்.
இரண்டுநாட்களுக்கு முன்னர் ஒரு தலித்திய ஆய்வாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணியாற்றிவரும் அதே ஆய்வுநிறுவனத்தைச் சேர்ந்த இன்னொரு ஆய்வாளர் எழுதிய கட்டுரை ஒன்றைப்பற்றி அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் உள்ள கொங்குவட்டாரம் எனப்படும் கோவை ஈரோடு நாமக்கல் கரூர் பகுதிகள் இன்று தமிழகத்திலேயே அதிகமான தொழில்வளம் கொண்டவை. அவ்வாறு தொழில்கள் சிறக்க என்ன காரணம் என்று அந்த ஆய்வாளர் ’’ஆராய்ந்து’’ எழுதிய கட்டுரையைப்பற்றி இவர் சொன்னார். ’கொங்குபகுதியில் உள்ள கொங்குக் கவுண்டர்கள் கடுமையான உழைப்பாளிகள், சிக்கனமானவர்கள், வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்ற துடிப்பு கொண்டவர்கள், ஆகவேதான் அங்கே தொழில்வளம் ஓங்கியிருக்கிறது’ என்பது அந்த ஆய்வாளரின் முடிவாம்.
‘என்ன அபத்தம் இது, இப்படிக்கூடவா ஆய்வுகள் வருகின்றன!” என்றேன். ‘ஆமாம், ஆனால் இந்த ஆய்வு இந்தியாவின் முக்கியமான ஆய்விதழில் வெளியாகியிருக்கிறது’ என்றார் நண்பர். தமிழில் பெரும் நிதியுதவிகளுடன் நடத்தப்படும் கல்வித்துறை ஆய்வுகளில் மிகப்பெரும்பாலானவை ஒரு தரமான வாசகனால் புரட்டிப்பார்க்கும் தகுதிகூட அற்றவை என நான் அறிவேன். ஆனாலும் இந்த ஆய்வு கொஞ்சம் மனம்குன்ற வைத்தது
இந்த வரலாற்றாய்வின் பிரச்சினை என்ன? இது வெறும் சாதியநோக்கு என்பது ஒருபக்கம். வரலாற்றாய்வின் முறைமை என்று பார்த்தால்கூட இது மிகப்பெரிய குறைபாடுகள் கொண்டது. நூற்றுக்கணக்கான அடிக்குறிப்புகளுடன், வரலாற்றாய்வுக்கட்டுரைகளுக்குரிய வழக்காறுகளும் கலைச்சொற்களும் மலிந்த நடையுடன், நாலைந்து கல்வித்துறைப்பட்டங்கள் கொண்ட ஒருவரால் முக்கியமான ஆய்விதழ் ஒன்றில் எழுதப்பட்டிருந்தால் மட்டும் ஒரு எழுத்து ஆய்வுக்கட்டுரையாக ஆகிவிடாது. டீக்கடைப்பெரிசுகளின் பேச்சுக்களைப்போன்ற பாமரத்தனமான ஒரு பார்வைதான் இது.
வரலாறை எழுதும் அறிவுச்செயல்பாட்டை இரண்டு பெரும் பிரிவுகளாகப்பிரிக்கலாம். தரவுகளைச் சேகரித்து தொகுத்துப் பதிவுசெய்தல் முதல் கட்டம். அந்தத் தளத்தில்தான் வரலாற்றாய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் பணியாற்றுகிறார்கள். களஆய்வுகள், தொல்லியல்ஆய்வுகள், மொழிச்சான்றுகளை ஆராய்தல், சான்றுப்பொருட்களை அறிவியல்முறைப்படி ஆராய்ந்து தகவல்களைப் பதிவுசெய்தல், தரவுகளை ஒப்பிட்டுப் பதிவுசெய்தல் போன்ற பெரும்பணிகள் அந்தத் தளத்தில் உள்ளன. அவை இல்லாமல் வரலாற்றாய்வு இல்லை.இப்பணிகளைச் செய்பவர்களை வரலாற்றாய்வாளர்கள் எனலாம்.
இரண்டாம் கட்டம் என்பது தரவுகளில் இருந்து வரலாற்றை எழுதுவது. வரலாற்றெழுத்து [historiography] என்று இதைச் சொல்கிறார்கள். இதைச்செய்பவர்களை வரலாற்றாசிரியர்கள் என்று சொல்லலாம். வரலாற்றை தரவுகளில் இருந்து தொகுத்தும் இடைவெளிகளை ஊகித்தும் எழுதுபவர்கள் இவர்கள். இவர்கள் ஒருவரோடொருவர் முரண்பட்டு விவாதித்தும் ஒருவரை ஒருவர் முழுமைசெய்துகொண்டும் உருவாக்குவதே வரலாறு என்னும் பொதுவான கடந்தகாலச் சித்தரிப்பு.
வரலாற்றெழுத்து என்பது வரலாறு என்று வரையறுக்கப்பட்டுள்ள அறிவுத்துறைக்குள் மட்டும் நின்றுவிடக்கூடிய ஒரு செயல்பாடாக இருக்கமுடியாது. முதன்மையான வரலாற்றாசிரியர்கள் அனைவருமே பல்வேறு அறிவுத்துறைகளை இணைத்துக்கொண்டு மனிதவாழ்க்கை என்னும் பெரும் சித்திரத்தை உருவாக்க முயல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்பதைக் காணலாம். அவர்களின் நோக்கம் வெறுமே புறவயமான தரவுகளை அடுக்கி வைப்பது அல்ல. அவற்றைக் கொண்டு மானுட வாழ்க்கைப்பரிணாமத்தைப் புரிந்துகொள்வதும்கூடத்தான்.
அவ்வாறு வரலாற்றை எழுதும்போது அன்று சாத்தியமான எல்லா கோணங்களையும் அதற்காகப் பரிசீலிக்கும் வரலாற்றாசிரியர்களே தகுதியான வரலாற்றாய்வை எழுதுகிறார்கள். வரலாற்றெழுத்தின் தொடக்க காலகட்டத்தில் இலக்கியம், மதம் சார்ந்த தகவல்களை தொல்லியல்சான்றுகளுடன் இணைத்து ஆராயும் வழக்கமிருந்தது. இந்த கோணம்தான் இன்று செவ்வியல் வரலாற்றெழுத்து எனப்படுகிறது.
அதன்பின்னர் சமூகவியல் தரவுகளையும் கருத்தில்கொண்டு ஆராயும்போக்கு உருவாகி வந்தது. அதன்பின்னர் அரசியல், பொருளியல் கோணங்களும் வரலாற்றெழுத்துக்கு முக்கியமானவை என்ற எண்ணம் உருவாகியது. இந்தக்கோணத்தை இந்திய வரலாற்றெழுத்தில் அழுத்தமாக நிறுவிய முன்னோடி டி.டி.கோசாம்பி. இன்று நிலவியல் சார்ந்த பார்வைகள் வரலாற்றாய்வில் பெரும்பங்கு வகிக்கின்றன.
மேலே சொன்ன கொங்கு வட்டார ’ஆய்வின்’ சிக்கல் இதுதான். அது இத்தகைய பிறதுறைகள் சார்ந்த எந்தப் பார்வையும் இல்லாமல் மிகமிகக்குறுகிய பார்வையுடன் முன்முடிவுகளுடன் அவ்விஷயத்தை அணுகுகிறது. ஓரளவு வரலாறு தெரிந்தவர்களுக்கே கொங்குமண்டலத்தின் வளர்ச்சியின் கதை தெரியும்.
நிலவியல் நோக்கில் பார்த்தால் கொங்குவட்டாரம் பெரும்பாலும் வரண்ட வளமற்ற மண் கொண்ட மேட்டுநிலமாகவே இருந்துள்ளது. அங்கு ஓடும் முக்கியமான ஆறு என்றால் பவானி மட்டுமே. ஆற்றங்கரைகளில் மட்டுமே நிலையான குடியிருப்புகள் உள்ளன. மீதி நிலம் முழுக்க நூறாண்டுகளுக்கு முன்பு வரைக்கும்கூட மேய்ச்சல்நிலமாகவே இருந்திருக்கிறது. கொங்குப்பகுதியின் பண்பாடே மேய்ச்சல்சார்ந்ததுதான்.
சமூகவியல் நோக்கில் பார்த்தால் கொங்குவட்டாரத்தில் தொடர்ச்சியாக வேறுநிலங்களில் இருந்து மக்கள் குடியேறிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம். அங்குள்ள அத்தனை சாதியினரும் அங்கே குடியேறியவர்கள் என்றுதான் குலவரலாறு சொல்வார்கள். கொங்குக்கவுண்டர்கள் காவேரிப்பூம்பட்டினத்தில் இருந்து வந்தவர்கள் என்பார்கள். நாயக்கர்களும் அருந்ததியரும் ஆந்திராவிலிருந்து குடியேறியவர்கள். அப்பகுதியின் பூர்வகுடிகள் வேட்டுவர்கள்தான். பல ஊர்கள் வேட்டுவர்களுக்குரியவை என்பதையும் சிறிய வேட்டுவ அரசுகள் பதினைந்தாம் நூற்றாண்டுவரை அங்கிருந்தன என்பதையும் காணலாம்.
குடியேறிய மக்கள் அங்கே நிலத்தைப் பண்படுத்தி மழைவந்தால் மட்டும் ஒருபோகம் புஞ்சைத்தானியங்களை விளைவித்துக்கொண்டிருந்தனர். கணிசமான நிலம் மேய்ச்சல்நிலமாகவே எஞ்சியிருந்தது. 1770 லும் 1880லும் வந்த மாபெரும் பஞ்சங்களில் மிக அதிகமாக இறந்த தமிழக நிலப்பகுதி கொங்குமண்டலம் என்பதை வெள்ளைய ஆவணங்கள் காட்டுகின்றன. அரைப்பாலைவனவாழ்க்கையே அங்கே இருந்தது.
நூறாண்டுகளுக்கு முந்தைய சுயசரிதைகளில்கூட அப்பகுதியில் மிகமிக எளிய உணவுமுறை இருந்ததை நாம் காணலாம். ராஜாஜியின் அரசியல்மாணவரான தி.சே.சௌ.ராஜன் அவரது சுயசரிதையில் ஊறவைத்த புளியங்கொட்டை எப்படி முதன்மை உணவாக இருந்தது என்பதைப் பதிவுசெகிறார். ஆர்.ஷண்முகசுந்தரம்போன்ற கொங்குப்பகுதி எழுத்தாளர்களின் படைப்புகளையெல்லாம் வாசித்து ஆராய வேண்டிய தளம் இது.
இச்சூழலில்தான் கொங்குவட்டாரத்தில் பருத்திமில்கள் வர ஆரம்பித்தன. 1896 ல் கோவையின் முதல் பஞ்சாலையான ஸ்டேன்ஸ் மில் ஆரம்பிக்கப்பட்டது. அவை அங்கே வருவதற்கான காரணங்கள் மூன்று. அப்பகுதி வரண்ட நிலம். வரண்டநிலமே பருத்திவேளாண்மைக்கு ஏற்றது. ஆகவே சுற்றுவட்டாரத்தில் பருத்திவேளாண்மை ஊக்குவிக்கப்பட்டது. இரண்டு, ஈரப்பதம்கொண்ட காற்று இருந்ததனால் பருத்திநூல்களை அது பாதிப்பதில்லை. மூன்றாவதும் முக்கியமானதுமான காரணம், பஞ்சத்துக்குப்பின் மலிவுக்கூலியில் ஏராளமான வேலையாட்கள் கிடைத்தார்கள்
இந்தியா சுதந்திரம் பெற்றபின் கொங்குவட்டாரத்தைச்சேர்ந்த சி.சுப்ரமணியம் காங்கிரஸ் அரசில் முக்கியமான பதவிகள் வகித்தார். அவரது முதன்மை முயற்சியில் கொங்குவட்டாரத்தைச் சுற்றி முக்கியமான அணைகள் சில வந்தன. பரம்பிக்குளம்-ஆழியார் அணைக்கட்டுகள் கேரளத்தில் உள்ள பரம்பிக்குளம் ஆற்றிலிருந்து நீரை ஓர் ஒப்பந்தம் மூலம் பெற்று கொங்குவட்டாரத்துக்குக் கொண்டுவந்தன. பத்துக்கும் மேற்பட்ட அணைகள் கொண்ட ஒரு மாபெரும் திட்டம் இது. அமராவதி அணை,பவானிசாகர் அணை, குந்தா அணை போன்ற பெரிய அணைகளும் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் இப்பகுதியில் நீரைக் கொண்டு வந்தன.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மிக அதிகமாக பாசனவசதியை அடைந்தது கொங்குமண்டலமே. இந்த அணைகளின் நீர்தான் கொங்குப்பகுதியை மிகப்பெரிய வேளாண்மண்டலமாக ஐம்பது அறுபதுகளில் மாற்றியது. கொங்குப்பகுதியின் வளர்ச்சி அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. தமிழக அரசியல்வரலாற்றுடன் இணைத்துப்பார்க்கவேண்டிய விஷயம் இது
அந்த வளர்ச்சியின் தோற்றத்தை ஆராய நமக்கு மார்க்ஸியநோக்குள்ள பொருளியல் ,அரசியல் அணுகுமுறை சற்றேனும் தேவை. பொதுவாக பாரம்பரியமாகவே நீர்வசதியுள்ள நிலப்பகுதிகளில் மக்கள் நெருக்கமாக வாழ்வார்கள். அங்கே ஒவ்வொருவரிடமும் நிலம்குறைவாகவே இருக்கும். அந்நிலப்பகுதிகளில் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் ஒவ்வொரு குடும்பமும் ஈட்டும் வருமானத்தில் நுகர்வுபோக உபரி அதிகம் இருப்பதில்லை.
வரண்ட நிலங்களில் மண்ணுக்கு மதிப்பில்லை என்பதனால் ஒவ்வொருவரும் ஏராளமான நிலத்தைக் கைவசம் வைத்திருப்பார்கள். அங்கே நீர்வசதி உருவாகி அவை விளைநிலமாகும்போது அவர்கள் அதிகமான விளைநிலம்கொண்ட பெருவிவசாயிகளாக ஆகிவிடுகிறார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் அதிகநிலம் இருப்பதனால் உபரிவருமானம் அதிகம். அது சேமிப்பாகிறது. பின்பு முதலீடாக ஆகிறது. ஒருகட்டத்தில் அந்த முதலீடு தொழில்துறைக்கு திரும்புகிறது.
கோவைப்பகுதிகளில் ஏற்கனவே மில்தொழில் இருந்தமையால் சுதந்திரத்துக்குப்பின் உருவான விவசாய உபரி முதலீடாக மாறி பருத்திசார்ந்த தொழில்களுக்குச் சென்றது. அங்கிருந்து மேலும் உபரியை உருவாக்கி முதலீடாக்கிக்கொண்டு கடைசல் முதலிய தொழில்களுக்குச் சென்றது.
தெலுங்குகங்கா திட்டம் வந்தபின் சென்ற இருபதாண்டுகளில் ஆந்திரத்தில் ராயலசீமாவின் வரண்ட நிலங்கள் முழுக்க விளைநிலங்களாக மாறின. அவை புதிய நிலப்பிரபுக்களை உருவாக்கின. அவர்கள் ஈட்டிய உபரி தொழில்துறைகளுக்குப் பாய்ந்து புதிய தொழில்கள் உருவாகின. அதற்கு முன்பு நாகார்ஜுனசாகர், பக்ரா நங்கல் அணைக்கட்டுகளாலும் இத்தகைய மாற்றம் உருவானது. விரிந்த பொருளியல் தரவுகளுடன் ஆராயவேண்டியது இது
கண்டிப்பாக ஒரு வட்டார மக்களின் ஊக்கமும் உழைப்பும் அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் பொதுவாக வரண்ட சூழலில் வாழ்ந்த பாரம்பரியமுள்ள மக்கள் கடுமையான சூழல்களில் போராடி வாழ்ந்த காரணத்தால் கடுமையான உழைப்பாளிகளாகவும் போராடிவாழக்கூடியவர்களாகவும் புதியனவற்றை செய்துபார்க்கக்கூடியவர்களாகவும் இருப்பதைக் காணலாம். குஜராத்தி பட்டேல்கள் ராஜஸ்தானிய மார்வாரிகள் ஆகியோர் உதாரணம். அப்பண்புகளை கொங்குவட்டார மக்களிடமும் நாம் காணலாம். சமூகவியல் கோணத்தில் ஆராயவேண்டிய ஒரு தளம் இது.
இவ்வாறு அனைத்துகோணங்களிலும் செய்யப்படும் ஒரு சமநிலைகொண்ட ஆய்வே பயனுள்ள பார்வையை முன்வைக்கமுடியும். அதுவன்றி சாதி சார்ந்த, மதம்சார்ந்த, இனம் சார்ந்த கோணங்களில் செய்யப்படும் ஆய்வுகளுக்கு எந்த மதிப்பும் இல்லை. வெறும் ஊகங்களை முன்வைப்பதும் ஏதேனும் ஒரு விஷயத்தைத் தூக்கிப்பிடிப்பதும் வரலாற்றெழுத்தை உண்மையை திரிக்கும் செயல்பாடுகளாகவே மாற்றிவிடும். மேலே நான் சொன்ன ஆய்வு அத்தகைய ஒன்றுதான்.
நமக்கு ஆய்வுக்கு இன்று தேவையாக உள்ளது முழுமையான பார்வை. இங்கே மிகமிகக்குறைவாக இருப்பதும் அதுவே. வரலாற்றாய்வை நம்முடைய குறுகிய பற்றுகள் விளையாடும் ஓர் உணர்ச்சிகரமான களமாக, நம் அரசியல்களுக்குத் தேவையான முன்முடிவுகளை அளிக்கும் ஒரு பின்புலமாக மட்டுமே நாம் இன்று கையாள்கிறோம். எந்த ஒரு வரலாற்றெழுத்தையும் சமகாலத்தைய பிற சமூகஅறிவியல் துறைகளின் கோணங்கள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு ஆராய்ந்து எழுதுவோமென்றால் மட்டுமே நாம் இந்தச் சிக்கலைத் தாண்டமுடியும்
வரலாற்றெழுத்து என்பது வரலாற்றுத்தரவுகளின் வழியாக மானுடத்தை இயக்கும் அடிப்படை விதிகளைக் கண்டடையும் வரலாற்றுத்தரிசனம்தான். ஞானமுத்தன் மண்ணில் நீரின் ஆடலை கண்டறிந்ததுபோன்ற ஒன்று அது.
[ மேலும்]